Search This Blog

Wednesday, December 9, 2009

அம்மாக்கா

கனகத்தார் வீட்டுப்படலையைத் திறக்கும் போதே "உவர் இப்ப என்னத்துக்கு வாறார்.." என்று அலுத்துக் கொண்டேன். ஆனாலும், மனுசன் பூராயம் புடுங்கத்தான் வருகுது என்று விளங்காமலும் இல்லை. நேற்றுத்தான் "உவ்வளவு நடந்தும் உவன் கனகன் இன்னும் திருந்தவில்லை" என்று பக்கத்து வீட்டுக்கு குடியிருக்க வந்த சரசு ஆச்சி அம்மாவுக்குச் சொல்லிக் கவலைப்பட்டா. மனிசி பாவம்... மூத்தது இரண்டும் எங்கேயென்று தெரியாமல் தவிக்க கனகத்தார் போய் நாட்டாமை கதைச்சிருக்கிறார்.

"பிள்ளை எப்படி இருக்கிறாய்" நான் எதிர்பார்த்தது போலவே அக்காவிடம் தான் அவர் கதையைத் தொடக்கினார்.

"இருக்கிறம்..." நீண்ட பெருமூச்சுடன் வெளிப்பட்ட அவள் பதிலில் வெறுமை தெரிந்தது. உண்மையாக எல்லாவற்றையும் தொலைத்து விட்டு இன்று 'உறவு இணைப்பாக' எங்களிடம் வந்திருக்கிறாள். இப்ப கொஞ்சம் முதல் தான் வெளிநாட்டிலுள்ள ஒருத்தனிடம் உதவி கேட்க கோல் எடுத்தவள் டெலிபோனையே அடிச்சு நொறுக்கும் கோபத்தோடு தூக்கி எறிந்து விட்டு இருக்கிறாள். பிறகென்ன... மே 17 என்ன நடந்தது... எப்படி வந்தனீங்கள்... அவர் எங்கே... இத்தனை கேள்விகளுக்கும் குறுக்கு விசாரணைகளுக்கும் பதில் சொல்லித்தான் யூரோக்கள் பெற வேண்டுமா..?

அந்த நேரம் பார்த்து கனகத்தார் இன்னொரு கேள்வி கேட்டார். "பிள்ளை... உவள் அம்மாக்கா உங்களுக்கு கிட்டவாகத்தானே இருந்தாள். இங்கால எங்கேனும் வந்தவளோ...?"

★ ★ ★

அம்மாக்காவை எனக்கும் தெரியும்... 15 வருசத்துக்கு முதல் - நான் சின்னவனாக இருக்கும் போதே தினமும் அவளைக் காணுவேன். காலையிலே நித்திரையாலே எழும்பி வேலியிலே வேப்பங்குச்சி முறிச்சு பல் தீட்டும் போது ஒரு உருவம் கடற்கரையாலே ஓட்டமும் நடையுமாக வரும். ஐயன் சம்மாட்டியின்ர கரைவலை குறுகிற நேரமும் அதுதான். தலையிலே மீன் சந்தைப்பெட்டியைக்காவிக்கொண்டு வாற அந்த உருவம் தான் அம்மாக்கா.

அவளுக்கு எப்படி அம்மாக்கா என்ற பெயர் வந்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால், எல்லோருக்கும் அவள் அம்மாக்கா தான்.

அப்போது, அவளுக்கு ஒரு மகள் படிச்சுக் கொண்டு இருந்தாள். அதைத்தவிர அவளுக்கு சொந்தமென்று ஊருக்குள் யாரும் இருந்தாதாக ஞாபகமில்லை. அவள் தலை சுமக்கின்ற அந்த சந்தைப்பெட்டிதான் அவளுக்கும் மகளுக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தது.

ஒரு நாள் அம்மாக்கா வீங்கிப்போன முகத்துடன் எங்கட வீட்டுக்கு வந்தாள்... அவள் கண்கள் சிவந்து போயிருந்தன. அம்மாவை தனியக் கூட்டிக் கொண்டு போய் விம்மி விம்மி அழுதாள்... பார்க்கப் பாவமாய் இருந்தது.

அம்மாக்காவுக்குத் துணையாய் இருந்த அவள் மகளும் போய் விட்டாளாம்... அவளைப் பார்க்கப் போறதுக்குத்தான் காசு மாற வந்தவள் என்று அவள் போனதுக்குப் பிறகு அம்மா சொல்லிக் கவலைப்பட்டா.

அம்மாக்காவின் மகள் மட்டுமல்ல... பல இளசுகள் போய்க் கொண்டிருந்த காலம் அது...

அதற்குப் பின்னும் அவள் சந்தைப் பெட்டி சுமந்தாள். அவள் மகளுக்காக...

★ ★ ★

நான் எதிர்பார்த்ததற்கு மாறாக கனகத்தார் கேட்டதுக்கு அக்கா பதில் சொல்லத் தொடங்கினாள். கனக்கின்ற மனதை எங்கேயாவது இறக்கி வைத்தால் சுகமென நினைத்திருப்பாள் போல...

"அம்மாக்காவின்ர மகள் அங்கேயே கலியாணமும் முடிச்சு அவளுக்கு மூன்று வயதில ஒரு பெடியனும் இருந்தது... அவன் பேர்த்தியைப் போல நல்ல வடிவும் நிறமும்... அம்மாக்காவுடன் தான் இருந்தவன்.


நாங்கள் வாறதுக்கு மூன்று நாளுக்கு முன்னமும் சந்திச்சம். அப்பத்தான் சொன்னவா... 'இப்பவெல்லாம் ஒவ்வொரு நாளும் மகளும் மருமகனும் வந்து பேரனைப் பார்த்து கொஞ்சிப்போட்டு போகினம். அதுகள் வராமல் எப்படிப் பிள்ளை இவனைக் கொண்டுவாறது...? ஏதோ நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் வேற வழி இல்லை... ஆனால், நான் கும்பிடுற மண்டலாய்ப்பிள்ளையார் கைவிடமாட்டார் பிள்ளை...'

மனிசியைப்பற்றித் தெரியும் தானே. மகளுக்காக உயிரையும் கொடுக்கும். பிறகு நாங்கள் வந்திட்டம். என்ன பாடோ தெரியவில்லை..."

கேட்டுக் கொண்டிருந்த எல்லோரும் 'உச்' கொட்டி, நீண்டதாய் பெருமூச்சு விட்டு கண்ணீர் கசிந்தார்கள். ஆனால், அக்காவோ பல கதைகளில் இதுவும் ஒன்று எனுமாற்போல் சொல்லி முடித்தாள்.

இப்போது கனகத்தாரின்ர முகத்தை அவதானித்தேன். என்னாலே நம்ப முடியவில்லை. சத்தியமாக அவர் முகத்திலும் கவலை ரேகைகள் வரைந்திருந்தன... ஆனால், "ஒப்பந்த காலத்திலே அம்மாக்கா கொஞ்சக்காசு வாங்கிக் கொண்டு போனவள்... அதுதான் கேட்டன்..." என்ற கனகத்தார் சடக்கென எழும்பி சறத்தை மடிச்சு தொடை தெரியக் கட்டிக் கொண்டு நடையைக் கட்டினார்.

அம்மாக்கா எப்போதும் போலவே இப்போதும் கெட்டிக்காரி... கடனாளிகளாக ஒருத்தரையும் விட்டு வைக்காமல் மகளையும் பேரனையும் கூட்டிக் கொண்டே போய் விட்டாள்...


4 comments:

  1. கதையும் நடையும் நல்லா இருந்தாலும் சோகம் கொப்புளிக்குது..

    ReplyDelete
  2. கதையில் இருக்கும் சோகம் என்னவோ செய்கிறது.

    ReplyDelete
  3. கதையில் இருக்கும் சோகம் என்னவோ செய்கிறது

    ReplyDelete
  4. உதிரும் கண்ணீரை ஏந்தவே நேரம் இருந்திருக்காது அம்மாக்கவுக்கு....
    கதை அருமை... ரசனையின் உச்சம், கண்ணீரின் அரும்பல்.

    ReplyDelete

You might also like