Search This Blog

Monday, December 20, 2010

2010 - 140 எழுத்துக்களில்


2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை!!!


2010 இன் முதலாவது ருவீட்டு...
@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


வழமையான ஒரு விடியல் ஆயினும் புதுவருடத்துக்கான எதிர்பார்ப்புக்கள் இல்லாமலும் இல்லை... எல்லோருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
ஜனவரி 01, 2010. புதியதொரு வருடத்தின் முதல் நாள். வழமையான விடியல்....



இருந்து பாருங்கள்... 2010 இன் கடைசியில் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமை கரம் மாறியிருக்கும். #ருவீட்டர் #கூகிள்
கூகிள் ரசிகனாக எனது அதீத நம்பிக்கை. ஆனால், 2010 இல் கூகிள் தன் அசையா இருப்பைத் தக்க வைக்க Facebook உடன் போராட வேண்டிய நிலை.



ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வந்த வேளையில் - நல்லூர்க்கந்தனின் காலடியில் காணிக்கைகள் செலுத்தப்பட்ட படங்கள் இணையத்தில் வந்திருந்தன...
எமக்கு உயிர்ப்பிச்சை தர மறுத்த சீருடை - எம்மிடம் வாக்குப் பிச்சைக்காய் வெண்ணிற வேட்டியுடன் #நாட்டு_நடப்பு
இன்று? நாட்டு நடப்பு எப்படித்தான் அவசர கதியில் மாறிப்போகின்றது.


பகிஸ்கரிப்பு என்பது நாங்கள் தேசிய அரசியல் நீரோட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதற்கான நியாயமாகிவிடக்கூடாது. #நாட்டு_நடப்பு
ஜனவரி 04, 2010. ஜனாதிபதித்தேர்தலை முன்னிறுத்தி...


மொழி நடையும், கருத்தும் பிடித்திருந்தது.
RT: @cowboymathu: @thinkynt கறுப்பு வளையல் கையுடன் ஒருத்தி குனிந்து வளைந்து பெருக்கிப் போனாள், வீடு சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு #கவிதை



ஜனவரி 26 நள்ளிரவு தாண்டி விழித்திருந்த வேளை... ஏதோ நம்பிக்கையில் காத்திருந்திருக்கிறேன்... ஜனாதிபதித் தேர்தல் 2010 முடிவுகள் சிலவற்றின் இறுதியில் இப்படி ருவீட்டி விட்டு நித்திரைக்குப் போயிருந்தேன்.
இனி நான் விழித்திருக்கத் தயாரில்லை. வளமான எதிர்கால நாளைய நாளில் சந்திப்போம். Good night

அகராதியில் இல்லாத "சிறுபான்மை" வாக்களித்தபின் இலங்கைப் படத்தில் இருக்கிறது.




மூன்று வருடத்துக்குப் பின்னர் யாழ். சென்று வந்தேன்... களைப்பு!!! மகிழ்ச்சி!!!


ஒரு நாள் போட்டியில் ஆகக்கூடிய ஓட்டங்களை சச்சின் பெற்ற மறுகணம்
Congratz Sachin......


நித்தியின் சீடர்களை விட, சாருவின் சீடர்களின் கருத்துக்களுக்காக ஏன் நான் காத்துக்கிடக்கின்றேன்...
ஏன் நான் காத்திருந்தேன்?


காதல் காதல் காதல்
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும் போது....

Monday, August 30, 2010

நிலாக்காதல் - 05

பதிவுலக நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.
பதிவர் வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதையின் முதல்பாகத்தை இங்கேயும்,
பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை இங்கேயும்,
பதிவர் சுபாங்கனினால் எழுதப்பட்ட மூன்றாம் பாகத்தை இங்கேயும்,
பதிவர் கன்கொனினால் எழுதப்பட்ட நான்காம் பாகத்தை இங்கேயும் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்....

ஒலித்த அலைபேசியை எடுத்துக் காதில் வைத்தான் ஹரிஷ்... மறுமுனையில் அவன் அம்மா!!!
"ஹலோ.... தம்பி ஹரிஷ்..."
அம்மாவின் குரலில் பதற்றம் தொற்றியிருந்தது தெரிந்தது. ஆனாலும், அந்த நேரம் பார்த்து தெரியாத இலக்கத்திலிருந்து கோலொன்று வந்து வெயிற் பண்ண, அது அவளாக இருக்க வேண்டுமென அவன் மனம் காரணமின்றி அங்கலாய்த்தது.

"அம்மா... கொஞ்சம் இரணை. இன்னொரு கோல்..." அவன் சொல்லி முடிப்பதற்கிடையில்,
"டேய்... சந்தோஷைக் கொண்டு போயிட்டாங்களடா...!!! நீ எங்க நிற்கி..."
"என்ன...????"
இவ்வளவு சம்பவங்களும் முப்பது நொடிகளுக்குள் நடந்தேற, ஹரிஷின் அலைபேசியும் அணைந்து கொண்டது புதிய இலக்கத்துடன் தொடர்புறாமலே...

"அடச்சீ... நான் எப்படி மாறிப்போனேன்? வெளியில் போவதென்றால் ஒன்றுக்குப் பத்து தடவை எல்லாம் சரி பார்த்து போகின்ற எனக்கு என்ன நடந்தது? எப்போதும் ஃபுல் சார்ஜ்ஜில் இருக்கின்ற என் அலைபேசி இன்று மட்டும் ஏன் வெறுமையாகி கிடக்கின்றது? எல்லாவற்றிற்க்கும் மேலாக ஏன் இங்கு வந்தேன்???"

"அம்மா சொன்ன செய்தி? சந்தோஷைக் கொண்டு போனாங்களா? அல்லது கொன்றிட்டாங்களா?? குழப்பமாக இருக்கு!!!"

"லாவண்யா, உன்னால் தான்... எல்லாமே உன்னால் தான்!!!"

நேற்று நடந்த அச்சம்பவம் ஹரிஷை வெகுவாகப் பாதித்திருந்தது; சந்தோஷையும் கூடத்தான்... இருபது வருட நட்பு இருபது நிமிடத்தில் உடைந்து சுக்குநூறாகியது. துரோகமா? அல்லது தோல்வியா? இல்லை குற்றவுணர்ச்சியா? எதுவென்று பிடிபடாத ஒன்று ஹரீஷின் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

நேற்று நடந்த அச்சம்பவம்...

★ ★ ★


சந்தோஷின் வீட்டில் ஊரே கூடி நின்றது. அனைவரினதும் வாழ்த்து மழையில் சந்தோஷ் நனைந்து கொண்டிருந்தான். இவன் துன்பங்களுக்கு எல்லாம் தோள் கொடுத்து தாங்கிய உற்ற நண்பன் ஹரிஷ்... இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் நிற்பான் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறந்த இளம் ஊடகவியலாளருக்கான தேசிய விருதிற்கான தங்கப்பதக்கம் சந்தோஷின் கழுத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

"ஹரிஷ், எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கடா... ஆனாலும், அன்றைக்கு அவங்கள் அந்த செய்தியைப் பார்த்திட்டு என்னைச் சுடத் திரிஞ்ச போதெல்லாம் காப்பாற்றினது நீ தானே..." கண்களில் நீர் கசிய நன்றிப்பெருக்குடன் ஹரிஷைத் தழுவினான் சந்தோஷ்.

சட்டென தன்னை விடுவித்து, "ம்ம்ம்..." என்று ஹரிஷ் உதித்த வெற்று வார்த்தை சந்தோஷின் சந்தோசத்தைப் பறிக்க போதுமாயிருந்தது.

"அடேய்... உனக்கு என்னடா நடந்தது? ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய்?  சொல்லடா..." சந்தோஷின் கெஞ்சலுக்கு,

"சந்தோஷ், என்னை விட்டிடு. மனசு சரியில்லை"

"அதுதான் ஏனென்று கேட்கிறேன்..."

"இப்ப சொல்ல ஏலாது..!"

ஹரிஷின் விடாப்பிடி சந்தோஷிற்கு தெரியும். அவன் பிடித்த முயலுக்கு எப்போதும் மூன்று கால்களும் நான்கு காதுகளும் தான். இப்ப ஏலாது என்று சொன்னால் என்ன விலை கொடுத்தாலும் முடியாது. இறுதியாக கேட்போம் என்று விட்டுவிட்டான்.




ஊர் கூடியிருந்த வீடு சகஜ நிலைக்கு திரும்பும் நேரம் ஹரிஷ் தானாகவே சந்தோஷைத் தேடி வந்தான்.

"சொல்லு மச்சான்..." - இது சந்தோஷ்.

பதில் பேரிடியாய் இறங்கியது "மச்சான்???? இந்த உறவெல்லாம் நேற்று வரைக்கும் தான்!!!"

"ஹரிஷ்ஷ்ஷ்ஷ்... என்னடா? என்ன நடந்தது உனக்கு?"

"என்ன நடக்கவில்லை? நம்பியிருக்க ஏன் இப்படிச் செய்தாய்??"

"....???" பேச வார்த்தையின்றி, அது எப்படி என கேட்டுவைத்தது சந்தோஷின் முக பாவனை.

"இன்றைக்கு அவள் உனக்கு மெசேஜ் அனுப்பினவள் தானே..." ஹரிஷின் கண்கள் சிவந்து கோபக்கனல் வீசியது.

"எவளடா..?" கேள்வியாய் வந்த சந்தோஷின் பதிலில் இப்போதும் அப்பாவித்தனம் தான் விஞ்சியிருந்தது.

"அவள்... லாவண்யாதான்!"

"ஓமடா... வாழ்த்தி அனுப்பியிருந்தாள். அதுக்கென்ன??"

"அதுக்கு ஒன்றும் அர்த்தமில்லையென்றால் என்னிடம் ஏன் மறைத்தாய்?"

"................."

"அடேய்... சந்தோஷ்ஷ்ஷ்!!! " உரக்க கத்தினான் கொலைவெறியோடு...

பின்னர் சாந்தமாகியவன் போல,

"சந்தோஷ்... எனக்கு எல்லாம் தெரியுமடா...!!! அன்றைக்கு லண்டனிலிருந்து உனக்கு அழைப்பெடுக்கிறாள்... இன்றைக்கு மெசேஜ் போடுகிறாள்... என்ன நடக்குது இங்கே???"

"ஹரிஷ், இது நீயாடா? ஏன் இப்படி ஆனாய்?? சந்தேகம்... அதுவும் என் மேலே...!!!"

"அதுதான்டா... உன் மேலே தான்!!! அவள் லண்டனுக்குப் படிக்கப் போயிட்டாள் என்று அவளின்ட அம்மா உன்னுடைய அம்மாவிடம் சொல்லி, உன்னுடைய அம்மா உனக்கு சொன்னா என்று நீ சுத்தி வளைச்சுப் புதிர் போட்ட போதே நான் அலேர்ட்டாகி இருக்க வேணும். இப்ப புரியுதடா..."

"ஹரிஷ்... போதும் இத்துடன் நிறுத்திக் கொள்...!!!"

இதன் தொடர்ச்சியாய், ஹரிஷின் கரம் சந்தோஷிற்கு எதிராக நீண்டதும், பதிலிற்கு சந்தோஷ் தடி தூக்கியதும்.... இருபது வருடமாய் ஒன்றாய் நடந்த இரு சோடிக் கால்கள் எதிரெதிராய் நடக்கத் தொடங்கின!!! அவர்கள் நிரந்தரமாகவே பிரிந்து போயினர்.

★ ★ ★

அசம்பாவிதம் ஒன்றில் தான் மாட்டியதாக இப்போது ஹரிஷ் உணர்ந்தான். எதுவும் செய்ய முடியவில்லை. தனது கோமாளித்தனத்தையும், விமான நிலையத்துக்கு தான் வர எடுத்த முட்டாள்தன முடிவையும் எண்ணி நொந்தபடி வெற்று வானத்தை வெறித்த படி நின்றான். ஒரே தெரிவு... என்ன நடந்தாலும், நடந்திருந்தாலும் வீட்டுக்குப் போவதுதான் என எண்ணியவன்... வீடு நோக்கி வாகனத்தை இயக்கினான். வானொலியில் அந்தச் செய்தி ஒலித்துக் கொண்டிருந்தது.


சற்று முன்னர் கிடைத்த செய்தியொன்று...
எமது செய்திப்பிரிவைச் சேர்ந்த சந்தோஷ் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டுள்ளார். அண்மையில் இவர் சிறந்த இளம் பத்திரிகையாளராக...." செய்தி தொடர்ந்தது.

இதைத் தொடர லோஷனை அரங்கத்துக்கு அழைக்கின்றேன்.

Saturday, June 19, 2010

செம்மொழி மாநாடும் சில அலட்டல்களும்

விடயத்துக்குள் நுழைய முன்னர்...

காலம் அவளுக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தது. இன்றோ, நாளையோ அல்லது இன்னும் ஒரு சில நாட்களிலோ அவள் எங்கள் வீட்டில் புகைப்படமாகவே பிரசன்னமாயிருப்பாள். எண்பது ஆண்டுகள் வாழ்ந்து முடித்திருந்த என் பாட்டியின் இறுதி ஆசைகளை ஒன்றும் விடாமல் கேட்டு நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்பா. அவளுக்குப் பிடித்தமான உணவுகள், உடைகள் முதற்கொண்டு அவள் விரும்பிய உறவுகள் வரை தருவிக்கப்பட்டாயிற்று. எல்லாவற்றையும் அவளே கேட்டுப் பெற்றாள்.

அதுவரை இவள் வன்மம் பாராட்டிய குலத்தாரின் மூத்தவளையும் கூப்பிட்டாள். சாவின் வரவினை எதிர்பார்த்தவாறு அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள். குலத்தாரின் மூத்தவளுடன் கதைப்பதன் மூலம் அதுவரை தான் அந்தக் குடும்பத்துடன் கொண்டிருந்த பகைக்கு விமோசனம் தேட முயல்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது போலவே... குலத்தாரின் மூத்தவளுக்கும் புரிந்திருக்கும்...!!!


இனி... இதோ விடயம்...!

தமிழக அரசின் ஏற்பாட்டில் செம்மொழி மாநாடு எனும் ஓர் நிகழ்வு நடந்தேற இருக்கின்றது. அதை முன் வைத்து பலர் பல விதமாக எழுதியாயிற்று. அந்நிகழ்வினை சார்ந்து தனது அரசியலை முன்னெடுக்கின்றது ஒரு கூட்டம்; எப்போது என்ன நடந்தாலும் தமிழக அரசுக்கு சாமரம் வீசும் இன்னொரு கூட்டம் செம்மொழி மாநாட்டின் அவசியம் குறித்து ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றது.



நான் பேசும் தமிழ் மொழிக்கு விழா எடுப்பதில் எனக்கும் பெருமை தான். ஆனால், இச்செம்மொழி மாநாட்டினை தமிழுக்கான விழாவாக கற்பிதம் செய்து பெருமைப்பட என்னால் முடியவில்லை.

ஒரு வரியில் சொல்லப்போனால், இந்நிகழ்வினை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தனக்குத்தானே எடுக்கும் ஒரு பாராட்டு விழாவாக என்னால் அடையாளப்படுத்த முடியும். அவரின் நோக்கில் அது தப்புமில்லை. கலைஞரின் காலம் அவரை நெருங்கும் வேளையில், தான் செய்த சாதனைகளில் தலையாய சாதனை ஒன்றைப் படைக்க விரும்புகின்றார். அதற்கு செம்மொழி மாநாடு என்று பெயர் சூட்டி அழகு பார்க்கின்றார்.

அதை விடுத்து, இந்நிகழ்வை ஈழ வரலாற்றில் பாரிய துரோக நிகழ்வாக அடையாளப்படுத்தி அதைப் புறக்கணிக்கச் சொல்வது என்னைப் பொறுத்தவரையில் அர்த்தமற்றது. புறக்கணிப்புக் கோசங்கள் எல்லாம் செம்மொழி மாநாடு நடந்தேறும் வரைக்கும்... அதற்குப் பின்னர், மாநாட்டில் நடந்தவைகளை அலசி ஆராய்ந்து விமர்சனம் வடிக்கும் யாவரும் புறக்கணிப்புக்கான முன்னைய காரணங்களை மறந்து போய்விடுவார்கள்.


ஆனாலும், கலைஞரின் அரசியல் சாணக்கியம் எப்போதும் வியந்து போற்றக் கூடியதாகவே உள்ளது. செத்துக் கொண்டிருந்த மக்களின் குருதி கொண்டு தனது வரலாற்றை எழுதியவர்... மூன்று மணி நேர உண்ணாவிரதம் மூலம் முப்பது வருடப் பிரச்சினைக்கு தீர்வு தந்தவராச்சே.!!! இந்த செம்மொழி மாநாட்டையும் அரசியல் படுத்தி ஒரு கல்லில் இரட்டை மாங்காய் விழுத்த முயல்கின்றார். அதன் விளைவு தான்... செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அறிஞர்களை வரவைக்க - வரவேற்க பாடாய்ப்படுகிறார்.

இலங்கையிலிருந்து தமிழ் அறிஞர்களை பங்குபற்ற வைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் மேல் தான் கொண்ட கரிசனையை புதிய வடிவில் மெய்ப்பிக்க முயல்கின்றார் கருணாநிதி. எத்தனை நாட்களுக்குத்தான் பேனாவும் கடதாசியும் கொண்டு கடிதம் எழுதி, டில்லிக்கு அனுப்பி அரசியல் புரிவது..!

இச்செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அழைக்கப்பட்டிருப்பவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். பாட்டியின் ஆவி பிரிய முன்னர் அழைக்கப்பட்ட குலத்தாரின் மூத்தவள் பாத்திரம் அவருக்கு... அந்த அழைப்பினை நிராகரித்து தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்க்க வேண்டுமென பலர் குரல்வளை கிழியக் கத்தி ஓய்ந்தும் விட்டார்கள். ஏனய்யா..? சிவத்தம்பி அவர்கள் புறக்கணித்தால் இன்னொரு கறுத்தத்தம்பி ஈழத்தமிழனிடத்தில் இல்லாமலா போய்விடுவான்? கடந்து வந்த பாதைகள் கற்றுத் தந்த பாடங்கள் இவை!!!


பேராசிரியர் சிவத்தம்பி மட்டுமல்ல... அழைப்புக் கிடைத்தால் எல்லோருமாகச் செல்வோம். எங்களைப் பற்றி நாங்களாக பேச இன்னொரு அரங்கம் இது. முத்துக்குமாரனுக்கு நன்றிகளையும், மூன்று மணி நேர உண்ணாவிரத்தத்துக்கு சன்மானமும் வழங்க ஒரு சந்தர்ப்பம். ஈழத்தமிழனாக சென்று... ஈழத்தமிழனை பிரதிநிதித்துவம் செய்து... ஈழத்தமிழனாகவே திரும்புவோம்...! மாலைகளுக்கும், பாராட்டு போதைகளுக்கும் மயங்காதவர்களாக...!!!

Wednesday, May 19, 2010

யாழ்தேவியும்... நான் கண்ட காதலும்...


நட்சத்திரங்களைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்கின்றன. திரட்டிகள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா? இதற்கு தமிழ்மணமும் தப்பவில்லை. இப்போது யாழ்தேவி நோக்கியும் கற்கள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாரத் தமிழ்மண நட்சத்திரம் தொடர்பாக எட்டிப்பார்த்த சர்ச்சை இது : http://www.luckylookonline.com/2010/05/blog-post_17.html


முதலாவது இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பின் போதே, யாழ்தேவி காத்திரமான விமர்சனங்களுக்கு - குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டது. அது இன்று வரை தொடர்கின்றது. இறுதியாக நண்பர் சந்ருவும் தன் ஆதங்கங்களை இங்கே யாழ்தேவி நோக்கி எழுப்பி விட்டுச் சென்றுள்ளார். நிர்வாகிகள் யாராவது பதில் சொல்லுங்கப்பா...!!!

மே 3, 2010 தொடக்கம் தொடர்ந்து வந்த ஏழு நாட்களுக்கு யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக நான் அறிவிக்கப்பட்டேன். சந்தோசம்..! ஒரு வாரம் கழித்து இன்னும் ஏழு நாட்களுக்கு என் நட்சத்திரவாரம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டிப்புச் சந்தோசம்..! ஆனால், அறிவிக்காமலே மூன்றாவது வாரமா? நிர்வாகிகளே..! யாத்ரா வேலைப்பளு என நீங்கள் காரணம் சொன்னாலும், கல்லெறிபவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல... எனது முதுகையும் குறிபார்க்கத் தவறமாட்டார்கள்!!! தாங்காது என்னுடல்... ஆவன செய்யுங்கள்!!!

யாழ்தேவி நட்சத்திர வார இறுதியில், தினக்குரல் பத்திரிகையில் வெளிவரும் பதிவரின் ஆக்கம் நட்சத்திர வாரத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்த என்னை என்ன செய்வது?

எண்ணிக்கை நூறைத்தாண்டிய என் பதிவுகளில் ஒரு வருடத்துக்கு முதல் எழுதிய நான் கண்ட காதல் எனும் பதிவை தெரிந்தெடுத்து பத்திரிகையில் பிரசுரித்த யாழ்தேவி நிர்வாக நண்பனுக்கு கோடி நன்றிகள்!!! அதை உறவினர்கள் பார்த்து மகிழ வேண்டுமென அக்கறை எடுத்து அவர்களுக்கு தொலைபேசிய உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்தாலும் தகாது. கண்ட காதலை, கொண்ட காதலாக கொண்டாடியவர்களை நினைத்து என் தலையில் அடித்துக் கொள்கின்றேன்.

அது மட்டுமா? அந்தப் பதிவைத்தான் யாத்ரா புத்தகத்திலும் இட்டுள்ளார்களாமே... ஆனாலும், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வல்லமை படைத்த நல்லுள்ளம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றது. மகிழ்ச்சி..!!! ஆனால், காதல் என்ற போது கசந்தும், பின்னர் உள்ளடக்கத்துக்குள் ஏதோ கண்டுபிடித்து (அது என்னவென்று கட்டாயம் அவரை கேட்கணும்) - தெளிவு பெற்று வாழ்த்தியும் அமர்ந்த அன்பருக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். "அமெரிக்கா என்றாலும்... ஆண்டிப்பட்டி என்றாலும்... காதலுக்கு குற்றம் சொல்ல ஊரே வரும்போது, நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?"

ஊடகப் பாதையில் மிக முக்கிய பாத்திரமாக பரிணமித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் யாழ்தேவிக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் என் பாராட்டுக்கள் உரித்தாகட்டும். கடந்த இரு வாரங்களாக என்னை நட்சத்திரமாக்கி அழகு பார்த்த யாழ்தேவிக்கு நன்றிகள்.

Tuesday, May 18, 2010

யாருக்கும் சொல்லாத கதை


நடு நிசி தாண்டிய பொழுதொன்றில்
நான் தேடும் வதனம் இதுதானென
கனவு வந்து பரிசளித்தது...!!!
கற்பனைகளும் காத்திருப்புக்களும்
களவெடுத்துக் கொண்டன என் இரவுத் தூக்கங்களை...
அல்பங்கள் புரட்டி அடையாளப்படுத்திக் கொண்டதை - ஓர் நாள்
அவசரமாய் முன்னால் நிறுத்தியது அதிர்ஸ்டம்.
அறியாது புரியாது இருந்த
அர்த்தங்களெல்லாம் அருகாமையாக்கி - இன்று
ஓடிக் கொண்டிருக்கின்றது நாழிகை...!!!

Saturday, May 15, 2010

எழுதச் சொல்கிறாய்...!!!


எழுதச் சொல்கிறாய் நண்பா...!
மன்னித்துக் கொள்...!!!
எதையுமே நான் எழுதப் போவதில்லை.
எழுதுவதாலும் தொழுவதாலும்
எதுவுமே ஆகாதென்ற போது
வேண்டாம் இன்னொரு சாகடிப்பு...!

தோழனே...!
நாம் செய்ததெல்லாம் என்ன..?
உன் புத்தகத்தைப் பறித்து,
கரங்களுக்குள் கனரகங்களைப் புகுத்தி,
எல்லையில் உன் கருவி கனல் கக்கியதை
கணனியில் கொண்டாடி
கனவினில் நாடு கண்டோம்...!!!

சமைத்துக் கொண்டிருந்த உன் அம்மா
சரிந்து விழுந்த நாளொன்றில் அவள்
குருதியைப் படமெடுத்து
விற்றுக் கொண்டிருந்தோம்
யாராவது திரும்பிப் பார்க்கமாட்டார்களா என...!
உன் துயரத்தை கூவி விற்று
எம் உரிமையைக் கேட்டோம்.
யாருமே தரவில்லை...!!!

ஓடிக் கொண்டிருந்த வீடியோவில்,
காலிழந்த நீ...
குருதி கொப்பளிக்கும் அம்மா...
பசியையே பல நாளாய்
புசித்த உன் அக்கா மகள்...
சதைத்துண்டங்கள்...
மனித வேட்டையாடிய நாய்கள்...
இவைகளைக் காட்டியாவது
உன்னைக் காப்பாற்றலாம் எனும்
நம்பிக்கை அற்றுப் போன
ஓர் நாளில்
நீ சிறை வைக்கப்பட்டாய்...!!!!

Friday, May 14, 2010

Thursday, May 13, 2010

யாத்ரா 2010 - இணையத்தமிழ் மாநாடு


இலங்கைப்பதிவர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், கல்விமான்கள் அனைவருடனும் இணைந்து யாழ்தேவி நடாத்தும் "யாத்ரா" - முதலாவது இணையத்தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 16ம் திகதி (May 16 - 2010)ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

ஊடகப் பாதையில் மிக முக்கிய பாத்திரமாக பரிணமித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் யாழ்தேவியின் இன்னொரு பயனுறு முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: யாத்ரா 2010

Wednesday, May 12, 2010

சாத்திரங்கள் பொய்ப்பதில்லை


சாத்திரங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லையென்று எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்யத் தயார். அதேபோல், எந்தவொரு காரியத்துக்கும் குறிப்புடன் சாத்திரம் பார்க்க முன் வருகின்ற பெற்றோரை மீறிவிடமாட்டேன் என்பதும் சத்தியம்...!!! இரண்டுமே முரண்பாடுகள் தான். கைரேகையிலும், கிளி வாய் ஓலையிலும் என் எதிர்காலம் எப்படி அடகு வைக்கப்பட்டிருக்கும்? எனக்குள் எழுகின்ற வினா இது.

இந்தச் சாத்திர சம்பிராதயம் என் பத்து வயதில் அறிமுகமானது; அல்லது, அந்த வயதில் தான் அறியத் தொடங்கினேன். எங்கள் குடும்பம் அப்போது செம்பியன்பற்றில் இருந்தது. மாதத்திற்கு ஒரு தடவை கதிர்காமக் கந்தன் புகழ் பாடியவாறு குடுமி வைத்த சாத்திரி ஒருத்தர் வருவார். எங்கள் பிஞ்சுக் கரம் நிறைய விபூதி, கதிர்காமத்தின் பெயரால் கோயில் நூல்... இவற்றுடன் கை ரேகை பார்க்காமலே தண்ணியிலே கண்டம், படிப்பிலே சுட்டி என்று எதாவது அப்பாவுக்கு கோள் மூட்டிப் போட்டு போய் விடுவார். அதற்குப் பிறகு கடற்கரைக்குப் போகவும் முடியாது; மாலை நேர விளையாட்டு நேரமும் சுருங்கிவிடும். சாத்திரியை மனதுக்குள்ளாவது சபித்துக் கொள்ளுவோம் என்றால் அதுவும் தெய்வக்குற்றம் ஆகிடுமாம்.

அப்போதெல்லாம் எப்போதாவது இருந்து விட்டு எங்கேயாவது தட்டுப்படுகின்ற சாத்திரிகள் யாழ்ப்பாணத்துக்கு படையெடுத்து வந்த காலமும் இருந்தது. விடுதலைப்புலிகளுக்கும் ரணில் தலைமையிலான அரசுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம் அது...!

கழுத்து நிறைய மாலை, கை நிறைந்த வளையல்கள், ஒரு ஓலைக் கட்டு, வெற்றிலைச்சாறு வழிகின்ற வாய், சிலருக்கு இடுப்பிலே ஒரு குழந்தை... இவைகள் தான் சாத்திரக்காரர்களின் அடையாளங்களாக இருந்தது. குஞ்சு குருமன்கள் கூட தொழில் தேர்ச்சியுடன் வந்தார்கள். “சாத்திரம் பார்க்கலையா...?” என்று ஆரம்பித்து, “உங்களுக்கு நல்ல காலம் காத்திருக்கிறது... ஒரு தரம் கேட்டுப்பாருங்கோ அம்மா/ஐயா... ” என்று நெஞ்சிலே பால் வார்ப்பார்கள். அல்லாது விடின், “தூரப்பயணம் காத்திருக்கு... உயிருக்கே ஆபத்து வரலாம்” என்று மரண பயம் காட்டி பீதியைக் கிளப்புவார்கள். இந்த வார்த்தை ஜாலத்துக்கு மயங்கி மயில்களை இழந்தவர்கள் பலருண்டு.

சிவனே என்று என்பாட்டுக்கு வீதியால் போன என்னை யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் வம்புக்கிழுத்து சாத்திரம் பார்த்த ஒருத்தன்... ஈற்றில் அதுவரை கேட்டிராத வார்த்தைகளில் என்னை அர்ச்சித்து சபித்துப் போன கதை மறக்க முடியாதது.

ஏ9 பாதையால் வந்த இவர்கள் தங்களை சாத்திரக்காரர் என்று சொன்னாலும் - ஊர் நம்பினாலும், பக்கத்து வீட்டு பார்வதி ஆச்சிக்கு உவர்கள் றோவின்ர ஆட்கள்... அல்லது சிஐடிமார்.

நீங்கள் சாத்திரக்காரர்களின் தொல்லையை அனுபவிக்க வேண்டுமா? வார இறுதி நாட்களில் வெள்ளவத்தை பீச்சுக்குப் போய்ப் பாருங்கள். அதே வார்த்தை ஜால மாய வித்தை. ஒரு நற்செய்தியுடன் ஆரம்பிப்பார்கள் - அல்லது, உயிருக்கு உலை வைக்கும் செய்தியை காவி வருவார்கள்..! ஆரம்பக்கட்டணம் எப்போதும் ஐம்பது ரூபாய்தான். (நேற்று முன்தினம் ஏறின காஸ் விலைக்கு முந்தைய நிலவரப்படி.) எவ்வளவு நேரம் அவர்கள் திருப்பாவுக்கு நீங்கள் தலையாட்டி மத்தளம் வாசிக்கின்றீர்களோ... அந்தளவுக்கு நேர் விகிதமாய் பொக்கட்டும் காலியாகும். ஜனாதிபதி கூட கை மாறுவார்... ஆயிரம் ரூபாய் தாளைச் சொன்னேன்!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை... நண்பர்கள் இருவருடன் வெள்ளவத்தையில் கடற்காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். சாத்திரக்காரர்கள் அங்கே வழமையாக காதல் ஜோடிகளையே குறி வைப்பார்கள். ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கும் நோக்கில்... ஆனால், அன்று மாட்டுப்பட்டது நாங்கள் மூவரும்... வழமை போல கேட்காமலே முன் புராணம் பாடத் தொடங்கினாள் சாத்திரக்காரி ஒருத்தி. இப்படித்தான் தொடங்கினாள்... “இன்னும் இரண்டு வருடத்தில்.... அப்போது எனக்கு இருபத்திரெண்டு வயது ஆகும் போது...” நல்லதோ கெட்டதோ அவள் சொல்லி முடிக்கவில்லை. ஆனால், அன்பு நண்பர்கள் இருவரும் முடித்து வைத்தார்கள். அப்படி ஒரு ஏச்சு இது நாள் வரை அவள் வாங்கியிருப்பாளோ தெரியாது. எப்போதும் போல சாபங்களைத் தெளித்தவாறு போய் விட்டாள். என்னால் மெல்லவும் முடியவில்லை; விழுங்கவும் முடியவில்லை.

★ ★ ★


வீட்டுக்கு வந்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தேன். மின்னஞ்சலொன்று காவி வந்த செய்தி இப்படி இருந்தது: “யாத்ரா நிகழ்வை முன்னிட்டு இளமைத்துடிப்புள்ள உங்கள் நட்சத்திர வாரம் யாழ்தேவியில் நீடிக்கப்பட்டுள்ளது.

சாத்திரங்கள் எப்போதும் பொய்ப்பதில்லை...

(சம்பவங்கள் கற்பனையானவை - நம்புங்கள்)

Sunday, May 9, 2010

தேசியப்பட்டியலில் சனத்?


இலங்கை கிரிக்கட் அணியிலும் தேசியப்பட்டியல் நியமனம் உள்ளதா என்று சிந்திக்க வைக்கின்றார் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் ஜெயசூரியா அவர்கள். இவர் பல சாதனைகளுக்கு உரித்தான முன்னாள் கிரிக்கட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறகென்ன... கடந்த ஐபிஎல் போட்டியில் 04 போட்டிகளில் விளையாடி இவர் மொத்தமாக பெற்றது 33 ஓட்டங்கள் மட்டுமே. நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கிண்ண T20 போட்டிகளில் 03 போட்டிகளில் 14 ஓட்டங்களைப் பெற்றும் அணியில் அசையாத நந்தியாய் இடம்பிடித்துள்ளார்.

வாக்குப்போட்ட மக்கள் உங்கள் சேவைக்காக காத்திருக்கின்றனர். மைதானத்தை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்... இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டும்.

தோற்றுப் போகின்றேன்

நீ...
உன் கரம் ஏந்தும் ரோஜா...
உன் குறும்பு...
சந்தித்த முதல் நாள்...
இவைகளை எழுதத் தொடங்கும் போது
பேனா மை தீர
என்னிடம் நானே தோற்றுப் போகின்றேன்.
உணர்ந்து கொண்டேன்...!!!
உன்னை வடிப்பதற்கு சொற்களுக்கேது வேலை
என் நெஞ்சில் நீ சிற்பமாய் வந்த பின்பு...!!!

Saturday, May 8, 2010

இராவணா - வரலாற்றுத் திரிபு


மணிரத்னம்... சினிமா உலகில் வியந்து நோக்கப்படும் இயக்குனர்களில் ஒருத்தர். காதல், தீவிரவாதத்தின் தாண்டவம் போன்றவற்றை தனது திரைப்படங்களினூடு மக்களின் மனங்களில் பதித்தவர். எப்போதும் இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறுவதில்லை.

இவரின் இயக்கத்தில் அடுத்து வெளிவரப்போகும் இராவணா படத்தின் பாடல்கள்தான் இப்போது எங்கும் ஆக்கிரமித்து நிற்கின்றன. இப்படத்தில் விக்ரத்துடன் ஜோடி சேர்கின்றார் ஜஸ்வர்யா ராய். வைரமுத்துவின் வைர வரிகள், இரகுமானின் தெவிட்டாத இசை... இரண்டும் இணைந்து காதில் தேன் வார்க்கின்றன. இரகுமானை இசையுலகத்துக்கு தனது ரோஜா படத்தின் மூலம் அறிமுகம் செய்தவரும் மணிரத்னமே.

வெளிவந்த பாடல்களில் “காட்டுச் சிறுக்கி... காட்டுச் சிறுக்கி...”, “உசிரே போகுதே... உசிரே போகுதே... உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே” ஆகிய படல்கள் கேட்டதும் சிக்கெனப் பிடித்துக் கொண்டன. சங்கர் மகாதேவனுடன் இணைந்து அனுராதா பாடும் காட்டுச் சிறுக்கி என்று ஆரம்பிக்கும் பாடலில் வரும் வரிகளில், "பாறாங்கல்லை சுமந்து வழி மறந்து ஒரு நத்தைக் குட்டி நகருதடி" தனிமையின் கனதியினை வடித்தெடுக்கின்றது வைரமுத்துவின் பேனா... கூடவே இசையும். “உசிரே போகுதே... உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே” எனும் பாடல் தினமும் காலை வேளையில் என் தேசிய கீதமானது. படத்துக்காகக் காத்திருக்கின்றேன்!!!

தளபதி படத்தின் மூலம் மகாபாரதக்கதையையும், ரோஜா படத்தின் மூலம் நள-தமயந்தி கதையையும் நினைவூட்டிய மணிரத்னம் இப்படத்தின் மூலம் இராமாயணத்தைப்பற்றி பேச விரும்புகின்றார் என ஊகிப்பது இலகு.

ஆனால், இராமாயணத்தில் அரக்கனாகவும், அசுரனாகவும், பெண் பித்துப் பிடித்தவனாகவும் சித்திரிக்கப்பட்ட தமிழ் மன்னனான இராவணன் உண்மையில் ஒரு கொடுங்கோலனா என்ற வினாவை இங்கு எழுப்ப முனைகின்றேன்.

வரலாற்றின் திரிபுகளால் - ஆரிய ஆதிக்கத்தின் விளைவால் இராமன் எனும் கதாபாத்திரத்துக்கு எதிர் மறையாக உருவகிக்கப்பட்டவன் தான் இராவணன். கம்பர் சொல்கின்ற வலிதற்ற - நடைமுறையில் ஓட்டைகள் மிகுந்த - கவித்துவ மயக்கத்தில் அடங்கிப்போன காரணங்களை எடுத்து அலசி ஆராய முற்படுங்கள். இராவணன் கொடுங்கோலனாக அன்றி, சிவபக்தனாக தோன்றுவான். இராமனைக் கடவுளாக்க கம்பன் கையாண்ட உத்தி இராவணனை அசுரனாக்கியது.

சூரியன் வானொலியின் நேற்றைய காற்று நிகழ்ச்சியில் இவ்விடயம் தொடர்பாக அன்றொருநாள் வரலாறுகள் அலசி ஆராயப்பட்டது ஞாபகத்துக்கு வருகின்றது. அப்போது சூரியனில் பணியாற்றிய கிருஷ்ணாவும் பிரதீப்பும் இந்நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினார்கள். ஆனால், அந்நிகழ்ச்சி தொடர்பாக எழுத்து வடிவங்களில் எதுவுமே என் தேடலுக்குள் அகப்படவில்லை.

மணிரத்னத்தின் இராவணனுக்காக காத்திருக்கின்றேன்... வரலாற்றுத்தவறுகள் திருத்தப்படும் என்ற நம்பிக்கையுடன்...!!!

கிளப்பப்படும் பீதிகளும் வதந்திகளும்

காலை பத்து மணி... சோம்பல் முறித்து நித்திரைப் பாயினால் எழும்பும் போதுதான் அந்த விடயம் உறைத்தது. நேற்றிரவு என் நண்பனுக்கு சொல்ல வேண்டிய செய்தி ஒன்றை மறந்திருந்தேன்... அவசரமாக அவனுக்கு அழைப்பெடுத்தேன்.

துரதிர்ஸ்டம்... அவனுடைய கைத்தொலைபேசி அவனுடைய தம்பியின் உபயோகத்தில் இருந்தது. அவனிடம் வீட்டுத் தொலைபேசி எண் பெற்று முயற்சித்தேன். ம்கூம்.... அழைப்பு இணைப்புப் பெறவில்லை. தொலைபேசி அணைக்கப்பட்டிருப்பதாக மறுமுனையில் கீச்சிட்ட பெண் சொல்லிப் போனாள்.

வேறு வழியில்லை... அவன் தம்பி வீட்டுக்குப் போகும் வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான். ஆனால், நீண்ட நேரம் எடுக்கவில்லை. பதினொரு மணியளவில் நண்பனே அழைப்பெடுத்தான்.... வீட்டுத் தொலைபேசியிலிருந்து!!!

பேசி முடிக்கும் தறுவாயில் தான் சொன்னான். சில தொலைபேசி எண்களிடமிருந்து வருகின்ற அழைப்புக்களுக்கு பதிலளிக்க முற்பட்ட 27 பேர் மரணித்திட்டார்கள். அந்த அழைப்புக்கள் சிவப்பு நிறத்திலே வருகின்றன. வீட்டுத் தொலைபேசியில் அழைப்பு எண் காட்சிப்படுத்தப்படாமையினால் அதை அணைத்து வைத்திருந்தார்களாம்.

என்ன கொடுமை இது...! அப்போதுதான் அர்த்த சாமம் 6.30 இற்கு (விடுமுறை நாட்களில் காலை 6.30 எனக்கு அர்த்த சாமம் தான்) யாழ்ப்பாணத்திலிருந்து நண்பனொருத்தன் அழைப்பெடுத்து இது தொடர்பாக அறிவுறுத்தியது ஞாபகம் வந்தது. பாவம் அவன்...! நித்திரைத் தூக்கத்தில் என்ன உளறித்தொலைத்தேனோ தெரியாது... கேட்க வேண்டும்...!!! ஆனாலும், அக்கறைக்கு நன்றி நண்பா.

இந்த விடயம் தொடர்பாக இன்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்; அக்கறையாக வந்த குறுஞ்செய்திகளை நெருங்கியவர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால், தமிழ்நாட்டு மர்ம வெளிச்சம் போன்ற கதைதான் இதுவும்.

ஒரு தொலைபேசியிலிருந்து எடுக்கப்படும் அழைப்பின் மூலமோ அல்லது பெற்றுக்கொள்ளப்படும் அழைப்பின் மூலமோ பேசும் தொலைபேசியின் அதிர்வெண்களில் மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது. அதுமட்டுமன்றி, தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்துவதன் மூலம் அதனூடு வைரஸினை உட்புகுத்தி மறுமுனையில் இருப்பவரை சாகடிக்கவும் முடியாது.

இந்த வதந்தியின் பிறப்பிடம் பாகிஸ்தான். 2007 ஆம் ஆண்டு இப்படியான வதந்தி ஒன்று அங்கே காட்டுத்தீ போல பரவியது. பின்னர், உடனடியாக ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாதிகள் இப்படியான ஒரு தாக்குதலை தொலைபேசிகளினூடு நடாத்த முயற்சிப்பதாக வதந்தி பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அந்நாட்டு அரசுகள் தங்கள் தொலைபேசி இணைப்பு வழங்குனர்களுடன் இணைந்து இந்தச்செய்திகளை மறுத்திருந்தனர்.

உயர்தர தொழில்நுட்ப உதவியுடன் தீவிரவாதிகள் அமெரிக்க மக்களை பழிவாங்கும் நோக்குடன் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவர்களை கொல்வதாக புனைகதை எழுத்தாளர் எழுதிய கதையொன்றின் அடிப்படையிலேயே இப்படியான வதந்திகளும் பீதிகளும் கிளப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆச்சரியம் என்னவெனில், தொலைபேசியினூடான வைரஸ் தாக்குதலின் மூலம் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதும் 27 பேர்... ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதும் 27 பேர்... இன்று இலங்கையில் கொல்லப்பட்டதும் 27 பேர்... அதில் ஒருத்தர் யாழ்ப்பாணம், இன்னொருத்தர் வெள்ளவத்தையாம்...!!!

Thursday, May 6, 2010

தமன்னா - பிடிச்சிருக்கு


நேற்று வரைக்கும் அவிச்ச இறால் நிறத்தழகி என்றிருந்த தமன்னாவை இன்று பிடித்திருக்கின்றது. அண்மைக்காலத்தில் எல்லோர் மனதையும் தீண்டிய விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸியையும் விஞ்சி நிற்கின்றாள் பையாவின் சாரு!!! இளசுகள் பலவற்றின் தூக்கக் கலைதலுக்குக் காரணமாய் நடை, நளினம், அசைவு என்று எல்லாவிதத்திலும் நிறைந்திருக்கின்றாள்...

பையா படத்தைப்பற்றி ஆஹா ஓஹோ என்று புளுகுவதற்கு அதில் எதுவுமில்லை. படத்தில் லொஜிக் தேடி பிழைபிடிப்பவர்களுக்கு தாராளமாக அது நிறைந்துள்ள ஒரு படம். கண்டதும் காதல், காதலுக்காய் அலைதல், வழமையான தமிழ்ச்சினிமா தடாலடிச் சண்டைகள், இறுதியில் இணைதல்... இதுதான் பையா படமென்றால்... இல்லை! அதற்கும் மேலாக படம் முழுவதும் ஓடித் திரியும் ஒரு காரின் பயணம்... அந்தக்காரின் பயணத்தினூடு இயக்குனர் லிங்குசாமி பேசுகின்ற காதலும், அதன் வலிகளும் தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றது. கூடவே பாடல்களும்...!!!

நா.முத்துக்குமார் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி தந்த பையா பாடல்கள் இப்போது போலவே எப்போதும் காதல்க்கீதம் இசைக்கத்தான் போகின்றன.






கார்த்தி... இரசிக்க வைக்கின்றார். இடைக்கிடை அண்ணன் சூர்யாவையும் நினைவுபடுத்த மறக்கவில்லை.

அது சரி...! எப்போதோ பார்த்த பையா பற்றி இப்போது என்ன பேச்சு என்றுதானே கேட்கின்றீர்கள். நண்பன் ஒருத்தன் சொன்னான் - தமன்னாவுக்காக சுறா பார்க்கலாமாம். பையாவில் வந்த தமன்னா பிடித்திருக்கின்றது என்பதற்காக சுறா பார்க்கப் போவேன் என்பது அந்த விஜய் பக்தனின் எதிர்பார்ப்பு... கூடவே, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல சிந்தனையும் தான். ஆனால், சொந்தச்செலவில் சூனியம் வைக்கும் எண்ணம் எனக்கில்லை!!!

Wednesday, May 5, 2010

கோழிப்புக்கை - ஒரு ஒப்புதல் வாக்குமூலம்


தலைப்பை கோழிப்பொங்கல் என்று இட வேண்டுமா என எண்ணுகின்றேன். யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரைக்கும் தைப்பொங்கலுக்கு காய்ச்சிப் படைப்பது எங்களுக்கு புக்கையாகத்தான் இருந்தது. ஆனால், கொழும்புக்குள் நகர்ந்த போது - வேறொரு மொழியை உள்வாங்கிய போது உச்சரிக்கப்படக்கூடாத ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்ட தெரிந்த முதல் பதம் இந்த புக்கை தான். வேற்று மொழி பழகிய ஆரம்ப காலங்களில், தெரியாத்தனமாக வாய்க்குள் தட்டுத்தடுமாறி வரும் போதெல்லாம் சகோதர மொழி நண்பனுக்குப் புரியாமல் விழுங்குவதில் உள்ள சங்கடம்... அனுபவித்துப் பார்க்க வேண்டும்.

”அடேய்... வடமராட்சியில் கோழிப்புக்கை என்று ஒரு சாப்பாடு செய்வாங்களாமே. உனக்குத் தெரியுமா...?” பல்கலைக்கழகத்தில் இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன் கேட்ட நண்பனுக்கு என் பதில் இப்படித்தான் இருந்தது. “தெரியுமாவா...? வீட்டிலே பானை பானையாய்க் காய்ச்சிக் கொட்டுவாங்கள்...! ஏ9 பாதை திறக்கும் போது கட்டாயம் வா... செய்து தரலாம்.”

கோழிப்புக்கையின் ருசி மட்டுமல்ல... அதன் நிறம் கூட என்னவென்று அறியாத நான் இப்படிச் சொல்லவும் ஒரு காரணம் இருந்தது. அது... எப்போது இந்தப் பாதை திறந்து, எப்போது இவர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள் என்ற அதீத நம்பிக்கைதான். குறைப்படாதீர்கள்...! அந்த நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல... அப்போது எல்லோருக்கும் தானே இருந்தது.

வடமராட்சியின் சில ஊர்கள் எப்போதும் சில உணவுப்பண்டங்களின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. வல்வெட்டித்துறை எள்ளுப்பாகு, பருத்தித்துறை வடை, நாகர்கோவில் நாவற்பழம், வடமராட்சி கிழக்கின் கரைவலை மீன்.... இலண்டன் சந்தைகளிலும் இவற்றுக்கு கிராக்கி அதிகமாம். அங்குள்ள வல்வெட்டித்துறை நண்பன் புளுகியிருக்கமாட்டான் என்ற நம்பிக்கையில் சொல்கின்றேன்.

நான்கு வருடங்களுக்கு முதல் கேட்டதை ஞாபகம் வைத்திருந்தவன் அன்றைக்கு அழைப்பெடுத்தான்.
“மச்சான் நாங்களும் யாழ்ப்பாணத்தில் தான் நிற்கிறோம். கொழும்பிலேயிருந்தும் கொஞ்சம் இறக்குமதியாகியிருக்கிறாங்கள்... நாளைக்கு வடமராட்சி வாற ஐடியா. மணற்காட்டுக் கடல்... பிறகு உன் வீட்டிலே கோழிப்புக்கை மத்தியானச் சாப்பாடு...”

கிழிஞ்சுது போ... வேறு வழி தெரியவில்லை... தொலைபேசி ஆமென்று பதில் சொல்லி அணைவதைத்தவிர!!! பத்து செக்கன் உரையாடலின் முடிவில் கைத்தொலைபேசி நூறு டிகிறியில் சுட்டது.

அம்மாவைப் பார்த்தேன்... ம்கூம்... என் மானப் பிரச்சினையின் வீரியத்தை விளங்கப்படுத்தி, முடியாவிட்டால் சக்கரைப்பொங்கலாவது காய்ச்சுங்கோ என்றேன்.

★ ★ ★

வல்லிபுரக்கோவிலின் சுற்றாடலில் கிளைவிட்டு நின்ற பனைமரத்தை தரிசித்த வண்ணம் மணற்காட்டுக் கடலை அடைந்தாயிற்று.


மணற்காடு என்றதும் எப்போதும் பதினாறு வயது இளங்குருத்தொன்றுதான் என் ஞாபகத்திரைகளில் தோன்றி மறைவான். 1993 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். கப்பல் வடிவிலான ஊர்தியில் பவனி வந்த அவனுக்கு காத்திருந்து பூக்கள் சொரிந்ததும் - அந்தப் பூ வாங்கிப் போட்டவள் இன்னொரு நாள் அதே மாதிரிக்கப்பலில் பவனி வந்ததும் மனது மறக்காத வரலாறுகள்.

வெயில் சுட்டெரித்தது... ஆனாலும், கடல் நீர் இதமாகத் தான் இருந்தது. மூன்று மணித்தியாலங்கள்.... அருமையான பொழுது. கடலுக்குள் நாங்கள் தாண்டு போனாலும் தூக்குவதற்கென்று துணையொன்றைக் கரையில் இருத்தி விட்டு கும்மாளம் நடந்தது. பாவம்.... எங்கள் போட்டோப் பிரியன்.

அந்த மண் மலை, சவுக்கம் தோப்பு, தூர்ந்து போன மணலில் இருந்து வெளிப்படும் தேவாலயம், எங்களுக்காய் உயிர் துறந்த நண்டு, ஒரு துண்டு எச்சமுமின்றி துடைத்து வழித்த இடியப்பமும் சொதியும்.... என்றைக்கும் மறக்காது!!!


இதிலே இன்னொன்றையும் மறைக்காமல் ஒத்துக் கொள்ள வேண்டும். அன்றைக்குத்தான் நானும் முதன் முதலாய் மணற்காட்டுக்கடலில் கால் நனைத்தேன். ஆனாலும், நண்பர்களுக்கு எல்லாம் தெரிந்த வழிகாட்டியாய் நடித்ததை எண்ணி இப்பவும் பிரமிக்கின்றேன்.

அடுத்ததாய் மதிய உணவு... அது தான் கோழிப்புக்கை. என்ன நடந்ததென்று நான் சொல்வது சுயதம்பட்டம் அடிப்பது போலாகிவிடும். ஆனாலும், கூடவே ஒரு மூடை சீனியும் வாங்கி வைத்திருக்கலாம் என நண்பர்கள் உணர்ந்ததை என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களுடன் கூட இருந்து உண்டவன் தானே நானும்.

ஊர் சுற்றிப்பார்க்கவென வந்தவர்கள் கோழிப்புக்கை சாப்பிட்ட மறுநாள் ஓய்வெடுத்து வீட்டில் தங்கியிருந்தார்களாம்... நல்லது தானே!!! ம்ம்ம்.... யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிற்கின்ற மின்சாரம் போல தண்ணிக்கு அந்தப் பிரச்சினை இல்லை. தப்பிக் கொண்டார்கள்.

கடந்தது கடந்து போகட்டும்...!!! எந்தளவுகளில் தூள், கடுகு, மிளகு, பச்சை மிளகாய் இடுவதென இப்போது அம்மாவுக்குத் தெரிந்திருக்கும்.... இரண்டாவது தடவையாக இன்னொரு தரம் சமைப்பதற்கு தயாராக இருக்கிறாளாம். ஆகவே, அடுத்த தடவை வரும் போதும் மறக்காமல் வந்திடுங்கள்...!!!

Monday, May 3, 2010

எனது நகரம்


அர்த்த சாமமொன்றில் இந்நகருக்கு
விடை கொடுத்து ஓடினோம்.
கை அசைக்கவில்லை...
கட்டிப்பிடித்து முத்தமிடவும் இல்லை....
எந்தச் சம்பிரதாயங்களுமற்று
அந்தரத்தில் தவிக்க விட்டுப் போனோம்..!!!
நகரை மட்டுமல்ல...
எட்டடி எட்டி வைக்க முடியாத பாட்டியும்,
இரத்தம் சொட்டச் சொட்ட
ஒரு துளி நீருக்காய் கூக்கிரலிட்ட அயலவனும்,
காரிருளில் வழிகாட்டிப் போன தோழன்
விழி மூடியதும் - அவனைக்
கட்டியிருந்த வேட்டியில் அள்ளி எடுத்து
பாடை கட்டி விட்டு...
ஓடிக் கொண்டிருந்தோம்...!!!

கசந்தது... வாழ்க்கை கசத்தது!!!
காலில் ஒட்டி வந்த மண்ணும்
பாதித்தூரத்துடன் பயணத்தை நிறுத்தியது.
என் வீடு...
என் வயல்...
என் கடல்...
எதுவுமே எனக்காக இல்லாத போது
என்னைத் தடுப்பதற்கு ஏது...?
நகரின் எல்லையில்
அன்புக் காதலியின் பெயரை
என்னுடன் செதுக்கி வைத்த மரத்தை தேடினேன்.
விழுப்புண் தாங்கி
எல்லைக்குக் காவலாய்க் கிடந்தது...
புரியாத மொழியில் வாசகங்கள் தாங்கி...!!!

இன்று எந்நகரம் புன்னகைக்கின்றது.
நெஞ்சுக்கு நேரே குறி பார்த்த எந்திரங்கள்
மண் நோக்கி குனிந்து கிடக்கின்றன.
‘நிறுத்துக’ என்ற கட்டளையும்,
தொட்டுத் தடவி தேடி அலசியபின்
‘ஒத்துழைப்புக்கு நன்றி’ சொன்ன
பதாகைகளும் வெயிலில் காய்கின்றன.
கஸ்டப்பட்டு உச்சரித்து வணக்கம் சொல்வதும்...
புன்னகை சிந்தி வழியனுப்புவதும்...
சங்கடங்கள் தான்.
ஆனாலும்...
பழக்கப்பட்டுக் கொள்கின்றோம் வேறு வழியின்றி.

எந்நகரம்
என்னை அகதியாகவும்
சகோதரனை சுற்றுலாப்பயணியாகவும்
வரவேற்றுக் கொண்டிருக்கின்றது.

Sunday, May 2, 2010

யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக...


சொந்தத் தேவையின் நிமித்தம் திருகோணமலை சென்றதனால் இரு நாட்களுக்குப் பிறகு நேற்றிரவு தான் மின்னஞ்சல் பெட்டியினை திறந்தேன்.

அதிசயம்...!!! இலங்கையிலிருந்து செயற்படும் திரட்டியான யாழ்தேவியிடமிருந்து ஒரு மின்னஞ்சல்.... இன்று தொடக்கம் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு என்னை யாழ்தேவியின் நட்சத்திரப்பதிவராக அறிவித்துள்ளார்கள் - போதிய கால முன்னறிவித்தலுடன்.

அழைப்பைத் தட்டிக்கழிக்க முடியுமா...? அன்புடன் - நன்றியுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

கடந்த சில தினங்களாக சோம்பலிடமும், வீட்டுக்காய்ச்சல் போன்ற சில இதர எண்ணங்களிடமும் தொலைத்து விட்ட என் நேரத்தை இவ்வாரம் முழுவதும் பதிவுலகத்துடன் கழிக்க விரும்புகின்றேன்.

சந்தர்ப்பத்தை தந்த யாழ்தேவி திரட்டி நிர்வாகத்தினருக்கு நன்றிகள்!!!

விஜய் படம் - நூறு புள்ளிகள்


பரீட்சையில் கேட்கப்பட்டது...
உள் உள்ளவர்கள் வெளி வரத் துடிப்பார்கள்
வெளியிலுள்ளவர்கள் உள் நுழையத் தவிப்பார்கள்
அது என்ன..?
விடைகளுக்கான தெரிவுகளில்
முதலாவது மலசலகூடம்...
இரண்டாவது விஜய் படம்...
விடை அளித்தவர்கள் யாவரும்
பெற்றனர் நூறு புள்ளிகள்!!!
இரு தெரிவுகளும் பொருத்தமாம்!!

படித்ததில் ரசித்தது

Sunday, April 25, 2010

அங்காடித்தெரு


வசந்தபாலன், பிளீஸ்... இனியும் இப்படியொரு படம் வேண்டாமே...!!!

வயிற்றுப் பிழைப்புக்காக கால்களில் சில்லுப் பூட்டிய மாந்தர்கள், முதலாளித்துவத்தின் கொடுமை, வறுமையின் பிரதிபலிப்பு, அதனூடு சேர்ந்து உண்மையான - போலியான காதல்கள் என அங்காடித்தெரு சொல்ல வந்த யதார்த்தங்கள் அத்தனையும் உண்மைதான்... பேசப்படவேண்டியவைதான்.

அதற்காக படம் முழுவதும் செத்தவீடா...? சாவு... சாவு... ஓடிக்கொண்டிருக்கும் படத்தில் அரை மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஓருயிர் கொடூரமாக விழுகின்றது. வேண்டாம் சார்... தியேட்டரில் இருக்கின்றோமா காசு கொடுத்து செத்த வீட்டுக்கு வந்தோமா என்ற உணர்வு எழுகின்றது. பரிதாபங்களையும், அனுதாபங்களையும் தான் சேகரிக்க முடிகின்றது.

ஆனாலும், கனாக்காணும் காலங்கள் புகழ் பாண்டியின் அந்தக் குசும்பு பிடித்திருக்கின்றது. காதல்க்கவிதை எழுதத் தெரியாமல் ஒருத்தன் படும்பாட்டை நான் பட்டபாடாய் ரசிக்க முடிகின்றது. ஒன்பதாம் வகுப்புத் தேவாரத்தின் அடிவரியில் தன் காதலியின் பெயரை எழுதி காதல் கவிதையாய் ஒப்புவிக்கும் வல்லமையை எனக்கும் தருவாயாக...!!!

Saturday, April 24, 2010

நாடு கடந்த அத்திவாரம்



எங்களிடம் அழகான வீடொன்று இருந்தது
உயிரை விலை கொடுத்து கட்டி வைத்தோம்!!!
புயல் பல தீண்டியும் புழுதி வாரி இறைத்தும்
அழகு குன்றாது அது நிமிர்ந்து நின்றது...!
ஆனால்,
நேற்று அடித்த புயல் அதைக் கொன்று போனது
அத்திவாரத்தையும் ஆட்டி வைத்தது,.
இன்று...
மீண்டும் அந்த வீட்டுக்கனவுடன்...
வட்டுக்கோட்டையில் கூரை...
நாடு கடந்து அத்திவாரம்...
தாயகத்தில் க(கூ)ட்டமைப்பு...
இவையெல்லாம்
ஒரு புள்ளியில் சந்திக்காதவரை
விழலுக்கு நீர் பாய்ச்சுகின்றோம்...!!!

Sunday, April 4, 2010

தடித்த எழுத்துக்களில் இந்நாள்


எதிர்பார்க்காது தற்செயலாக நடக்கின்ற சில சம்பவங்கள் வாழ்க்கையில் பாரிய அத்தியாயத்தை தொடக்கிவிட்டுச் சென்று விடக்கூடியன. நேற்றுவரை இதெல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்று நம்பி இருந்த என் மனதை என்னவென்று அழைப்பது? பைத்தியக்காரன் என்று என்னை நானே திட்டிக் கொள்வதைத் தவிர...

நாட்காட்டியிலும் சரி, என் தினக்குறிப்பேட்டிலும் சரி இன்றைய நாளை தடித்த எழுத்துக்களினால் குறித்து வைத்துவிட்டு நாளைய நாளுக்குள் நுழைகின்றேன்.

நேரம்: காலை XX : XX
திகதி: 04 - 04 - 2010

என் டயரியிலிருந்து...

Thursday, April 1, 2010

வீதிக்கு வந்த மாடுகள்


பால் சொரியப் போகின்றனவாம் - வீட்டு முற்றத்தில்
கால் பதிக்கின்றன மாடுகள்...!!!
சில பழக்கப்பட்டவை - கோடிகள் பேசி
பல இறக்கப்பட்டவை...!!

நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போது
றோட்டிற்கு வந்து விட்டன எல்லாம்.
ஒட்டாது என்ற சிவலையும் கறுவலும்
கூட்டாக வந்து குடும்பம் நடத்துகின்றன.
ஒரு மடியில் தாகம் தீரக் குடித்தவைகளும்
வேறு திசைகளில் நடையைக் கட்டுகின்றன.

கொம்புகளை மறைத்து, மடியினை நிரப்பி
தம்புகழ் பாடி தம்பட்டம் அடித்தாலும்
உங்கள் வருகையில் வீசுவதெல்லாம்
எங்கள் இரத்த வாடையன்றோ...
தாவர உண்ணிகளுக்குள்ளும் என்னால்
மாமிச உண்ணிகளை காண முடிகின்றது...

நாளை உங்களுக்கு முடிசூட்டும் விழாவாம்...!!!
காலை விடிந்ததும் கன்றுகளும் கூடி வர
எல்லை கடந்திடுவீர் பெட்டி பொட்டலங்களுடன்...
அதற்கும் மட்டும்,
வென்றவர் தோற்றவர் சட்டம் கிடையாது...
ஆறு வருடங்களின் பின்னரும்
ஆறாத காயத்துடன் என்வாசல் திறந்திருக்கும்...
பால் சொரிய வருவீர்கள் என்ற வரட்டு நம்பிக்கையுடன்...!!!

- ஆதிரை

Wednesday, March 3, 2010

ஓருயிரல்ல...

கொதித்துக் கொண்டிருந்தது புகையிரத தண்டவாளம்...
அருகில் துடித்துக் கொண்டிருந்த தலையில்
வளர்ந்திருந்த சிகைதான்
அடையாளம் காட்டியது பெண்ணென்று...
ஐஞ்சு மீற்றர் இருக்கலாம்
எஞ்சிய உடல் குருதி வெள்ளத்தில்...

காதல் தோல்வி
எப்போதும் போலவே முந்திக்கொண்ட சந்தேகம்...
குடும்ப வறுமை...
தீராத நோய்...
பரீட்சையில் தோல்வி...
வாழ்க்கையில் விரக்தி...
ஊர் கூடிக் காரணம் கற்பித்தது.
“படிச்சவள் செய்யிற வேலையா இது...?”
ஆதங்கங்களும் எரிச்சல்களும்
செத்துப்போனவளை விசரி என்று சபித்தன.

பொலீஸ் வந்தாயிற்று...
மஞ்சள் கோடும் கீறியாச்சு...
நீதிபதி வரவுக்காய்
தலையும் முண்டமும் சேராமல் காத்திருந்தன.
கேரளா நதியில் தேனிலவு கொண்டாடும்
அவள் காதலனுக்கு மட்டும் தெரிந்திருந்தது
செத்துப் போனது ஓருயிர் அல்ல... ஈருயிர்!!!

Sunday, February 21, 2010

2010 பொதுத்தேர்தலும் தமிழ்க்கூட்டமைப்பும்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து அது தொடர்பான சர்ச்சைகளும், விமர்சனங்களும் அடங்கும் முன்னரே இன்னொரு தேர்தலுக்கு நாடு ஆயத்தமாகி விட்டது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி வசம் குவிந்து இருந்தாலும், நாடாளுமன்றுக்கான 225 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், வழக்கம் போலவே பல்டிகள், பேரம் பேசல்கள், தாவல்கள், குழிபறிப்புக்களும் உச்சக்கட்ட நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கின்றன.

சபிக்கப்பட்ட இனமாக - நிர்க்கதி நிலையிலுள்ள தமிழினம் இத்தேர்தலில் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் உலகிற்கு ஓர் செய்தியை உரத்துச் சொல்ல வேண்டுமென்ற வழக்கம் போன்ற கோசங்களை புத்திஜீவிகள் எழுப்பத் தொடங்கிவிட்டனர். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் நித்திரை போன்று நடிக்கும் உலகிற்கு எத்தனை தடவைகள் உறைக்கச் சொல்வது...? ஆனாலும், மக்கள் பிரதிநிதித்துவம் கைநழுவிப் போவதைத் தடுக்கவேணும், வாக்களிக்க வேண்டிய நிலைமை - கட்டாயம் ஒவ்வொரு ஈழத் தமிழன் தலையிலும் கட்டப்பட்டுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் இருபத்திரண்டு தமிழ்க்கூட்டமைப்பு உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்த தமிழ்மக்கள் இப்பொதுத்தேர்தலில் என்ன செய்யப் போகின்றார்கள்...? என்ன சொல்லப் போகின்றார்கள்...?


ஆண்டவன் வந்து தலையால் நடந்தாலும் கூட இந்த இருபத்திரண்டு என்கின்ற வடக்கு கிழக்கின் அறுதிப் பெரும்பான்மை இப்பொதுத்தேர்தல் முடிவுகளில் தமிழ்க்கூட்டமைப்புக்கு கிடையாது என்பது மட்டும் உறுதி. தமிழ்மக்களின் தாயகப்பிரதேசங்களில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெறப்பட்ட முடிவுகளின் பின்னர் ஒரு சில கட்சிகளின் அத்திவாரங்கள் ஆட்டம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தங்கள் இருப்பினை இப்பொதுத்தேர்தலில் உறுதிப்படுத்த முயலலாம். அது மட்டுமன்றி, தமிழ்க்கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள குத்துவெட்டுக்களும் கணிசமான வாக்குப் பிரிப்பினை ஏற்படுத்தப் போகின்றன.

இனி எவர் முயற்சித்தாலும் தமிழ்க்கூட்டமைப்புக்குள் உண்டான சிதறல்களை பொருத்தி அழகுபார்க்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது. அத்துடன் கூட்டமைப்புக்குள் இருந்து புடுங்கி எறியப்படும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இலகுவாகப் பட்டியலிட முடியும் என்ற நிலை.

கடந்த தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட, மாவட்ட முதன்மை வேட்பாளர்களாக போட்டியிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் தட்டுத்தடுமாறி ஆசனங்களைப் பிடித்தனர். இந்நிலைமை எதிர்வரும் தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கலாம். ஆனால் இத்தடவை வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் வெற்றுக் கோசங்களினால் ஏமாற்றாத, கண்ணியமான, பொறுப்புணர்ந்த, உண்மையான, கல்வியியலாளர்கள் என கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தர் அவர்கள் தருகின்ற உறுதிமொழிச் சான்றிதழ் உண்மையானால் நல்லதே....!!! வெற்றுக் கோஷங்கள் வலிகளை விதைத்ததே தவிர... வழிகளைக் காட்டவில்லை!!!

தயாரிக்கப்பட்ட / தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்க்கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் மறுக்கப்பட்ட முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் கிஷோர், கனகரட்ணம், சிவாஜிலிங்கம், தங்கேஸ்வரி, கஜேந்திரன், பத்மினி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் என ஊடகங்கள் சில பட்டியலிடுகின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பின் கொள்கைக்கு மாறாக தனித்துப் போட்டியிட்டதன் மூலம் சிவாஜிலிங்கமும், அவருக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக சிறீகாந்தாவும் அவர்கள் சார்ந்த ரெலோ கட்சியிலிருந்து நீக்கப்பட்டது யாவரும் அறிந்ததே...அதற்குப் பின்னும் அவர்களுக்கு தமிழ்க்கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

நான் மலையாக நம்பி நின்ற சம்பந்தர் ஐயா மடுவாக மாறிவிட்டார் என குற்ற வாக்குமூலம் கொடுத்த தங்கேஸ்வரி மட்டு மாவட்டத்தில் ஆளும்கட்சி வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளாராம்.


இன்னும் இருவர்... செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன். கடந்த பொதுத்தேர்தலில் விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று, யாழ் மாவட்டத்தில் அமோக வெற்றியீட்டி பாராளுமன்றம் சென்றவர்கள். இவர்கள் இருவருக்கும் எதிர்வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது யாவரும் அறிந்த இரகசியம்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த தமிழ்க்க்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தர், வடக்கு கிழக்கு தாயக மக்களின் கருத்துக்களை ஏற்று, அங்குள்ள பல்கலைக்கழக ஒன்றியங்கள், கல்வியியலாளர்களின் ஆலோசனைப்படியே 2010 பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார். ஆக, சம்பந்தரைப் பொறுத்தவரை, தாயகமக்களின் விருப்பின் அடிப்படையில் அமைந்ததே தமிழ்க்கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல்.


ஆனால், புலம்பெயர் தேசங்கள் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஒரு நிலையினைக் காணலாம். தமிழ்த்தேசியத்தலைமையென தங்களுக்குத் தாங்களே பெயர் சூட்டிக் கொண்ட சம்பந்தர் போன்றவர்கள் கஜேந்திரன், பத்மினி போன்றோரை சந்தர்ப்பம் பார்த்து வேண்டுமென்றே கழட்டி விட்டுள்ளார்கள் எனும் படியான கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள்; சம்பந்தரின் முடிவு அராஜகமானது என குற்றம் சுமத்துகின்றார்கள்.

சம்பந்தர் துணைக்கழைக்கின்ற தாயகமும், புலம் பெயர் தேசமும் இங்கே எதிரெதிர்த் திசைகளில் முட்டி மோதுகின்றன.

கடந்த பொதுத்தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற கஜேந்திரன் மற்றும் பத்மினி உட்பட எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பினால் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வேறு கட்சிகளுடன் இணைந்து அல்லது சுயேட்சையாகவேனும் போட்டியிடுவார்கள் எனும் நிலை இப்பொதுத் தேர்தலில் ஏற்படலாம்... அப்போது தாயக மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு சம்பந்தருக்கும்... புலம் பெயர் தேசத்துக்கும் கனதியான விடயங்களைப் புரிய வைக்கும்...!!!

இறுதியாக ஒரு வேண்டுகோள்:
தமிழ்க்கூட்டமைப்புக்கு இனியாவது இளைய இரத்தம் பாய்ச்சுங்களேன்... அல்லாது விடின், வேறு வழிகள் விரிந்திருக்கின்றன...

Saturday, February 20, 2010

படம் காட்டும் பதிவுலகம் - தெய்வம் இன்று...


வன்கூவரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பிரதிபலிக்கும் முகமாக வன்கூவர் துறைமுகத்துக்கு மேலாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் வளையம் இது.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

★ ★ ★


தென்னாபிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுதலையாகி இருபது ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவு கூர்ந்து அண்மையில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. 27 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் அவர் கடைசிக்காலப்பகுதியை கழித்த சிறைச்சாலையில் வரையப்பட்டிருக்கும் மண்டேலாவின் உருவம்.

★ ★ ★


தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் பெற்ற வெற்றியைக் குறிக்கும் முகமாக, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்பங்களை வழங்கிய ஆனையிறவில் சிறிலங்கா இராணுவத்தினரால் கட்டியெழுப்பப்படும் நினைவுச் சின்னம்.

★ ★ ★


அதோ தெரிகிறது... காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை.

★ ★ ★


அரசன் அன்று ...
தெய்வம் இ(நி)ன்று ...

Wednesday, February 17, 2010

போர் முகத்தில்...


( சில கவிதைகள் படித்ததும் மனதினில் ஆணி அடித்தது போன்ற உணர்வைத் தந்துவிடும். இக்கவிதையைப் படித்த போதும் இனம் தெரியாத ஏதோவோர் உணர்வு என்னைத் தைத்தது. பேராசிரியர்.சி.சிவசேகரம் அவர்களினால் எழுதப்பட்ட இக்கவிதையை நன்றியுடன் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். )


என் முகத்தில் எதைக் காண்கிறாய் என வினவியது போர்...

இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்
இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி
குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்
போர்ப் பறைகளை எனச் சொன்ன இளைஞனைத் தொடர்ந்து
ஒப்பாரியை என முனகினாள் ஒரு பாடகி...
கண்ணி வெடிகளை எனக் கூவினான் ஒரு முடவன்
முடமான காவியங்களை என்றான் ஒரு கவிஞன்
உடல் ஊனமானோரை என்றாள் ஒரு தாதி
மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி
இறக்குமதி வாய்ப்புகளை என்றான் ஒரு விநியோகஸ்தான்...
விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்
மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி
பொருட்களின் தட்டுப்பாட்டை என்றாள் ஒரு குமரி
பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்
தரவேண்டிய என் பங்கை என நினைவூட்டினான் ஒரு சோதனைசாவடி அதிகாரி
இன்னும் விற்று முடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்
என்னுடைய கமிஷனை என்றான் ஒரு தரகன்
குண்டெறியும் விமானங்களை என நடுங்கினான் ஒரு சிறுவன்
மேலெழும் ஏவுகணைகளை எனக் குழறினான் ஒரு விமானி
இரத்து செய்யப்படும் விடுமுறையை என வாடினான் ஒரு சிப்பாய்
போர்க்கால மிகை ஊதியத்தை என்றான் அவனது மேலதிகாரி
மரித்த படையினருக்கான உபகார நிதியை எனப் பொறாமைப்பட்டான் அவனது மேலதிகாரி
என் தலைவிதியை என நொந்தாள் அவனது மனைவி
என் நண்பனின் பிரிவை என் வருந்தினான் அவனது தோழன்...
வீர மரணங்களை என்றான் ஒரு பிரசாரகன்
விடுதலையை என அடித்துரைத்தாள் ஒரு பெண் போராளி
பயங்கரவாதத்தின் முடிவை என கொக்கரித்தான் ஒரு அமைச்சன்
பைத்தியக்காரத்தனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி
பசியில் வாடும் குழந்தைகளை என பதறினாள் ஒரு தாய்
பாலுக்கான கியூ வரிசையை என்றால் ஒரு சிறுமி
போக முடியாத சாலைகளை என முறையிட்டான் ஒரு வண்டியோட்டி
வெறிதான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்
திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டாள் ஒரு ஆசிரியை
நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன்
நடத்த முடியாத நடன நிகழ்ச்சிகளை என்றாள் ஒரு நர்த்தகி
மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு நடிகன்
மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என்.ஜி. ஓ. ஊழியன்
ஏராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்
என்னை என்ற குரல் வந்த திசையில்
கவனிப்பாரற்று கிடந்தது
ஒரு அகதியின் பிணம்....!!!

Sunday, January 24, 2010

ஆச்சி வாக்களிக்கப் போகின்றாள்



காலம் தெட்டத்தெளிவாக தன் கையெழுத்துக்களை இவள் முகத்தில் பதித்திருக்கின்றது. எண்பது ஆண்டுகள் அவளைத் தாங்கிய மண்ணில் இப்போது தாங்கி நிற்பது கைத்தடி மட்டுமே... இறப்புக்குப் பின்னான வாழ்க்கையை ஆய்வு செய்யும் விஞ்ஞானம் முடிவைச் சொல்லும் முன்னர் இவள் முடிவறிந்திடுவாள். ஓலைக்குடிசை வீட்டிலிருந்து வீதிக்கு வருகின்றாள் ஆச்சி.

நேற்றும் இப்படித்தான்... அதிகாலைப் பொழுதொன்றில் வீட்டுக்கதவு தட்டப்படும். அதை எதிர்பார்த்திருந்ததாய் இவள் நித்திரை கலைய... சிலவேளைகளில் கதவு திறக்கப்படும் முன்னரே அவர்கள் உள் நுழைந்திருப்பார்கள். அடையாள அட்டை காட்டி... பானைக்குள் பழஞ்சோறு இல்லை என மெய்ப்பித்து... சேலைகள் உதறி எவரும் இங்கில்லை எனக் காட்டினாலும் இவள் கொட்டியா இல்லை என்பதை நிரூபிக்க வீதிக்கு வரத்தான் வேண்டும். ஆட்டும் தலைகளுக்கு மத்தியில் நரைகளும் அணிவகுத்துத் தான் போனார்கள்.

ஆனால், காலம் இன்று மாறியிருக்கின்றதாய் உணர்வு... சோதனைச் சாவடி இல்லை... நரைகளுக்கும் மட்டுமல்ல இளசுகளுக்கும் தான் அடையாள அட்டை கட்டாயம் இல்லை... அந்தக் கட்டாயத்தை செல்போன்கள் மாற்றீடு செய்து கொண்டன. நடு முற்றத்தில் இருந்து நிலாவை ரசிக்க முடிகின்றது. அர்த்த சாமத்தில் குரைக்கின்ற நாய்களுக்கு காரணங்கள் கூட மாறி விட்டன. ஆமியின் வருகையின்றி பாமினியின் குடிகாரப் புருசனின் தள்ளாடும் தாலாட்டு. இவைகள் நிஜங்களா...? வலிகளா...? அல்லது பிரமைகளா..?

ஒரு முறை தொட்டுப்பார்த்து உறுதி செய்து கொண்டாள். வாக்குச் சீட்டும் அடையாள அட்டையும் பத்திரமாகவே இருந்தன... சுருங்கிக் கொண்டிருக்கும் ஞாபகத்திரைக்குள் புள்ளடி போடும் சின்னத்தை கொண்டு வரும் முயற்சியிலும் வெற்றிதான். அவனுக்குத்தான்...!!!

எவனுக்கு...??? காவலுக்கு நின்ற காக்கிகளின் குழல்கள் இவளைக் கேட்பதாய் ஒரு பிரமை. ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தின் பெயரால் உதை மட்டும் மறைத்துக் கொண்டாள்.

நேற்று வரை வந்த தேர்தல்களுக்கு தெரிவும் அங்கிருந்தேதான் வந்தன. உடன்பட்டுக் கொண்டாள். தன் உயிர் வாழ்தலுக்காக உதிரம் சிந்துகின்ற உள்ளங்களுக்காக மறு பேச்சின்றி புள்ளடி போட்டாள்... சிலசமயங்களில் ஒதுங்கி நின்றாள். உண்ணச் சோறில்லை என்ற போதும் உணர்வில் தேசியம் இருந்ததாய் இறுமாந்திருந்தாள்.

இன்று அப்படி இல்லையே...!!! இடி விழுந்த போது தூக்கி நிறுத்த யாராவது வருவார்கள் என்று நம்பியிருந்தாள். முப்பது வருட உதிரப்பாய்ச்சல் முடிந்து... மௌனிக்கின்றோம் என்ற போது, முடிந்து போனதென இவள் முற்றுப்புள்ளி இடவில்லை. வளர்த்து விட்ட விதை ஒன்று விருட்சமாகி அரசியல் தலைவனாவான் என்றிருந்தாள்.

ஒன்றல்ல... ஒருத்தருக்குப் பின் ஒருத்தராய்ப் பலர் வந்தார்கள். புலியாக அல்ல... நரிகளாக! அறிக்கைகளினால் அர்ச்சனை செய்தபடி, மாறிமாறி முகங்களில் எச்சிலை உமிழ்ந்து பங்கிட்டுக் கொண்டார்கள். நான் தான்... நான் தான் என அறிக்கைகளில் பெயர் காட்டி மக்களின் வலிகளை ஆற்றிட முடியுமா?

இப்போது இவளுக்கு முன் இரு தெரிவுகள். வளமான எதிர்காலம்... நபிக்கையான மாற்றம்... ஏதாவது ஒன்றுக்கு இவள் புள்ளடி விழத்தான் போகின்றது. அவர்கள் கால் நக்கி வாழும் ஈனப்பிறவியென யாரோ ஒருத்தன் இவளைச் சபிக்கக் கூடும்... இவளுக்கு என்ன கவலை? இணையத்தின் நிறம் தெரியாதவரைக்கும்.

இவளைத் தாங்கியிருக்கும் பொல்லுக்கு தங்க முலாம் பூசி வளமான எதிர்காலம் காட்டப்படலாம்.

இவளின் நரைத்த தலைக்கு “டை” அடித்து, இளைமை திரும்பியதாய் நம்பிக்கையான மாற்றமும் உணர்த்தப்படலாம்.

இப்போது இவள் முறை. அப்போது தான் எப்போதும் இவள் கூட வருகின்ற செல்லம்மா ஞாபகத்துக்கு வந்தாள். மறுகணம் மனது ஆறுதல் செய்து கொண்டது... செல்லம்மா இன்றைக்கும் மகனைத் தேடி ஐ.சி.ஆர்.சி. போறனென்றவள்.

ஆச்சி கையைக் காட்டுங்கோ... மை பூசப்படுகின்றது.

Tuesday, January 19, 2010

படம் காட்டும் பதிவுலகம் - சோரு சாப்புங்க



கடந்த 18ம் திகதி ஆப்கான் தலைநகர் காபூலின் மையப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் திடீர்த்தாக்குதலில் ஈடுபட்டனர்.

அரச அலுவலக கட்டடங்களை முற்றுகையிட்டு தீவிர தாக்குதலை மேற்கொண்ட ஆப்கான் தீவிரவாதிகளை முறியடிக்க இராணுவத்தினர் கடுமையாக போராட வேண்டியிருந்தது.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பதிவியேற்பு வைபவத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இத்தாக்குதல் கருதப்படுகின்றது.

★ ★ ★



அரசியல் நெருக்கடி, வெள்ளம், புயல் என பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஹெய்ட்டி நட்டின் மீது இடியாய் விழுந்திருக்கின்றது பூகம்பம்... இந்த அனர்த்தத்தில் இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

★ ★ ★



அதே ஹெய்ட்டி நாட்டில் தான் இந்தக்காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு நட்ட நடுவீதியில் வைத்து வழங்கப்படும் தீர்ப்பு இது.

பரவாயில்லை... இலங்கைக்குச் சொந்தக்காரராக இன்னும் சில நாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

★ ★ ★



செம்புழுதி வாரி இறைக்கும் எம் வீதியின் ஓரத்தில் இப்படியொரு அறிவித்தல்... நிகழ்கால வசந்தம் அப்படியே பளிச்சிடுகின்றது.

★ ★ ★



2010ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற உள்ள உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகளின் தகுதிகாண் ஆட்டப்போட்டி ஒன்றில் பிரான்ஸ் அணியுடன் மோதிய அயர்லாந்து எதிர்பாராத விதமாக அத்தகுதியை இழந்தது.

எந்த அணி முதலில் கோலைப் போடுகின்றதோ அந்த அணி உலக கிண்ணப் போட்டிகளில் விளையாட தகுதி பெறும் சூழ்நிலையில்... பிரான்ஸ் அணித்தலைவர் தியரி ஹென்றி பந்தை கையால் தடுத்தாட அதனைப் பயன்படுத்தி கோல் ஒன்றினைப் பெற்றார் இன்னொரு வீரர் வில்லியம்ஸ்.

இந்த விடயம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருந்தது. விதி முறைகளுக்கு முரணாக பந்தை கையால் தடுத்தாடிய பிரான்ஸ் வீரர் தியரி ஹென்றி தண்டனைக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இது தொடர்பாக ஆராய கூடிய உலகக் கால்பந்து சம்மேளனம் ஆச்சரியமளிக்கும் வகையில் ஹென்றி மீது எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை.

தியரி ஹென்றி பந்தை கையினால் தடுத்தாடும் காட்சி.




Monday, January 18, 2010

அட... அந்தக் கண்கள் கொல்லுதே...!!!



மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் வருகின்ற கதைகளையும் கறைகளையும் கடந்து மனதுக்கு இதமாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது இப்பாடல். "களவாணியே... களவாணியே..." நாதஸ்வரக் குரல் - இன்னிசைப் பாடகி ஸ்ரீமதுமிதாவினால் பாடப்பட்ட இப்பாடலின் ரசனையில் மயங்கி... பாடலுக்காக படம் பார்த்து... காதல் மயக்கத்தில் உயிரை வாட்டியெடுக்கும் அந்த ஒரு சோடிக்கண்களின் பார்வையில் சிக்குண்டு போனது உணர்வுகள்.

படம் முழுவதும் கிராமப் பெண்ணாக வந்து படத்துக்கு உயிர் கொடுக்கும் கதாநாயகியின் கண்ணசைவும், அவள் கூந்தல் சூடியுள்ள மல்லிகை மாலையும் இளமைப்பராய நினைவுகளை மீட்டிவிட்டுச் செல்வதில் ஆச்சரியமில்லை.

அவள் திரும்பிப் பார்ப்பாள்... அதுவே காதலுக்கான சமிக்ஞை என இப்போது தமிழ்ச் சினிமா கண்டுபிடித்த கண்டுபிடிப்பெல்லாம் எங்களுக்கு அப்போதே அத்துப்படி. கிராமத்து வீதிச் சந்திகளும், அவள் வீட்டு ஒழுங்கையும் பேசக் கற்றுக் கொண்டால் அந்தக் கடைக்கண் பார்வையினையும், காத்திருப்புக்களையும் காவியங்களாக வடிக்கும்.



விஞ்ஞானம் கலக்காத - இரசாயனம் தடவாத - பார்த்ததும் நிலைகுலைத்து காதல் விஷம் பருக்கும் கண்களின் வார்த்தைகள் நகர வாழ்வினில் குதிரைக் கொம்பாகத் தான் கிட்டுகின்றன. தென்றல் சுமந்து வரும் கிராமத்து மண் வாசமும் சேரும் போது அந்தப் பார்வைக்கு உயிரையே எழுதிக் கொடுக்கலாம்.

காவியம் பகிரத் துடிக்கின்ற உதடு... இருவிழிப் பார்வையில் தெறிக்கும் மையல்... பத்தாம் ஆண்டு பாடப்புத்தகத்துக்குள் முகம் மறைத்து ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்... பரந்து விரிந்த நீலக்கடலினை தாங்கி நிற்கும் வெண்மணற்பரப்புக்கள்... அவள் கறுத்தப் பொட்டுப் பறித்து, பாடக்கொப்பிக்கு திலகமிட்டு அழகு பார்த்த குறும்புத்தனம்... நினைவலைகளில் தவழ விடுகின்றது இப்பாடல்.


Thursday, January 14, 2010

சொல்லம்மா



இது நான்காவது தடவை... பக்கத்து வீட்டுக்காரனைத் தேடிப் போன செல்லம்மா இம்முறையும் வெறுங்கையுடன் தான் திரும்பினாள். மனுசியினால் அந்தக் கடிதம் என்னவென்று அறியாமல் ஓரிடத்தில் இருக்க முடியவில்லை. பத்துநிமிசத்துக்கு ஒருக்கால் போய்ப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் வருகுது. கடைசியாகப் போய் விட்டு வரும் போது ஆற்றாமையினால் "கொப்பன் எங்க போய்த் தொலைஞ்சான்..." என்று ஐந்து வயதுப் பெடியனைத் திட்டிப் போட்டும் வந்திட்டுது.

அந்தப் பெடியன் என்ன செய்ய முடியும்...? படமாகத் தொங்குகின்ற தாயிற்கு முன்னால் நின்று "அம்மா... அப்பாவைப் பேசுறாங்கள்" என்று முறையிடுவதைத் தவிர...

செல்லமாவுக்கு வந்த கடிதத்தை இவள் இல்லாததால் ஏற்கனவே சொல்லி வைத்ததைப் போல தபாற்காரன் பக்கத்து வீட்டிலே கொடுத்திட்டான். கடிதத்தை வாங்கினவனும் வீட்டுக்குள்ள வைத்துவிட்டு செல்லம்மாவை வழியிலே கண்டுதான் சொன்னான். "உனக்கு ஒரு கடிதம் வந்திருக்கு... இப்ப அலுவலாகப் போறன். வந்து தாறன்..."

அவளுக்குத் தெரியும். அது ஐ.சி.ஆர்.சி அல்லது கியுமன் றைற்ஸ் இடமிருந்துதான் வந்திருக்கும். சிலவேளை, அவன் தான் போட்டிருப்பானோ என்றும் மனம் அங்கலாய்த்தது...

அவன் என்றால், செல்லம்மாவின் மகன். ஒரேயொரு மகன்... இரண்டு வருஷமாக அவனைக் காணாமல் துடிக்கின்றாள். அவனைக் கண்டு பிடித்து தாங்கோ என்று இன்றைக்கும் ஐ.சி.ஆர்.சியிடம் போனதால் தான் வீட்டிலே ஆள் இருக்கவில்லை. உந்தக் கடிதமும் தவறிப் போய் பக்கத்து வீட்டிலே கிடக்குது.

★ ★ ★

ஒரேயொருவன் தானே ஒன்றும் செய்ய மாட்டாங்கள் என்ற நம்பிக்கை செல்லம்மாவிடம் இருந்தது. அவனும் பள்ளிக்கூடம், ரியூசன் என்று எல்லா இடமும் போய் வந்தான். "அம்மாவை நீதான் பார்க்க வேணும்" என்று அடிக்கொரு தரம் மகனுக்கு மந்திரம் போல ஒப்புவித்துக் கொண்டிருந்தாள். அது அவளுக்கு கட்டாயமாகவும் பட்டது.

ஆனால், ஒரு நாள் பள்ளிக்கூடம் போனவன் திரும்பி வரவில்லை. அவனாகப் போயிருக்க மாட்டான் என்று நம்பவும் முடியவில்லை. முதல் நாள் தான் தோட்டத்தில் நின்ற அவனின்ர மாமன்காரன் துடிதுடித்துச் செத்தான்.

"விரும்பிப் போனானா...? பிடிச்சுக் கொண்டு போனாங்களா...?" பூராயம் புடுங்குபவர்களின் இந்தக் கேள்வி அவளுக்கு ஈட்டி முள்ளால் குத்தும் வலி... விடை தெரியவில்லை.

அவனை விடச் சொல்லி அழுது புரண்டி மன்றாடினாள். உன் மகன் வந்தான் என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டார்கள். ஒரு முறையாவது அவனைப் பார்த்திட வேண்டுமென்று அன்றிலிருந்து அலைகின்றாள். காலம் ஏமாற்றிக் கொண்டிருந்தது.

அந்த நாள் கடைசி நாள்... எல்லாவற்றுக்கும் தான்... அந்தக் கொடூர கந்தக மண்ணில் நின்று மகனைத் தேடிக்கொண்டிருந்தவளை மீட்டெடுத்துக் கொண்டு வந்தார்களாம். மகனும் வந்திருப்பான் என்ற நம்பிக்கையைத் தவிர வேறொன்றும் அவளிடம் இருக்கவில்லை.

அன்றிலிருந்து ஐ.சி.ஆர்.சி, கியுமன் றைற்ஸ், கச்சேரி, மினிஸ்ரர்கள்... என்று எல்லா இடமும் ஏறி இறங்குகின்றாள். இவள் கதை கேட்டு வஞ்சகமின்றி எல்லோரும் கண் கலங்குகின்றார்கள். என்னைப் போல... அவ்வளவும் தான் அவள் மகனுக்கான பதிலாக இருக்கின்றது.

மீள் குடியேற்ரத்தின் முதல் நாள். "எங்களுக்கு எல்லாம் தெரியும்... மறைக்கக்கூடாது" என்ற கட்டளையின் பின்னர் விசாரணை ஆரம்பமானது.

"ஆச்சி... தனியவா?"

"ஓமோம்..."

"பிள்ளைகள் எங்கே...?"

"ஒரு பிள்ளைதான். அவன் இப்ப எங்கேயென்று தெரியாது..."

அடுத்த கேள்வி...
"விரும்பிப் போனானா...? பிடிச்சுக் கொண்டு போனாங்களா...?"

செல்லம்மா கண் முழித்த போது ஆஸ்பத்திரியில் இருந்தாள். கூடியிருந்த பிறஸரைக் குறைக்க வைத்தியர்கள் போராட வேண்டியிருந்தது.

★ ★ ★

மழை இருட்டு... ஏழு மணிக்கே கும்மென்று இருந்தது.

வீட்டுப்படலைக்குள் பக்கத்து வீட்டுக்காரன் தான் கூப்பிட்டான்.

"டேய்... இவளவு நேரமாக காத்திருக்கிறேன். எங்கே போனனி..? நில் வாறன். உது செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்தோ அல்லது ஏதும் முகாம் விலாசமோ..?" செல்லம்மா ஆர்வம் தாளாமல் கேட்டுக்கொண்டே ஓடிச்சென்று கடிதத்தை வாங்கினாள்.

யு.என் கொடுத்த லாம்பு வெளிச்சத்தில் படித்த கடிதத்தில் இப்படி இருந்தது.

வாக்காளர் அட்டை
பெயர்: கன்தயா சொல்லம்மா

Sunday, January 10, 2010

பிச்சைக்காரனின் பாட்டு



"நீங்கள் தமிழா...?" கணீரென்ற பெண் குரல்... சகுனம் நல்லாயிருக்குதே என்று திரும்பிப் பார்த்தேன். கண்ட முகமாக ஞாபகம் இல்லை. ஒருத்தி நின்றாள்.


"ஓமோம்... நீங்களும் ரமிலோ..?" கொஞ்சம் நாகரிகம் சேர்த்து தமிழிலே கேட்டு வைத்தேன். தமிழ் பேசுபவளிடம் தமிழோ என்று கேட்பது முட்டாள்தனம் தான். ஆனால், நெற்றியிலே திருநீறு, சந்தனம், குங்குமம்... கையிலே மஞ்சள், கறுப்பு, சிவப்பு நிறங்களிலே கோயில் நூல்... என்னிலே இவ்வளவும் கண்ட பின்னும் அவள் கேட்ட கேள்வி...???

சரி... இதுவா முக்கியம்..? சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு. அவளை முந்திக்கொண்டு நான் கடலை போட ஆரம்பித்தேன்.

அடுத்த தரிப்பிடத்தில் பஸ் குலுக்கலுடன் நின்றது. என் சேர்ட்டும் அவள் ரீ-சேர்ட்டும் உராய்தலில் கசங்கியிருக்கலாம்... நான் கவலைப்படவில்லை; அவளும் தான்... அவள் அணிந்திருந்தது ரீ-சேர்ட்டும் டெனிம் என்றாலும் அவள் "ரிச்சு கேளா" என வரைவிலக்கணப்படுத்த தேவையான தரவுகள் எதுவும் நின்று கொண்டு பயணிக்கும் பஸ் பயணத்தில் கிடைக்கவில்லை.

இன்ரர்வியூவுக்குப் போறாளாம். ஆனால், இடம் தெரியாதென்று கேட்டாள். யாரினுடைய அதிர்ஸ்டமோ தெரியவில்லை. என் அலுவலகத்துக்கு அருகில் தான் அவள் கேட்ட அட்ரெஸும். "டோன்ற் வொறி... நான் இருக்கின்றேன்" என்றேன். மனது திறந்து சந்தோசப்பட்டாள்.

அடுத்த தரிப்பிடத்தில் நின்ற பஸ் பிச்சைக்காரன் ஒருத்தனையும் ஏற்றிக் கொண்டு பறந்தது.

கொழும்பு பஸ் பிரயாணத்தில் பிச்சைக்காரரின் தொல்லை தாங்க முடியாது. கைக்குழந்தைகள், அல்லது அவர்களின் போட்டோக்கள், எக்ஸ்-ரே படங்கள், வைத்திய அறிக்கை, அல்லாது போனால் உடலிலே எங்கேனும் ஓர் வெள்ளைத் துணிக்கட்டு. இவைகள் தான் இவர்களின் மூலதனம்... காட்டிக்காட்டி, கூவி விற்று பிச்சை எடுப்பார்கள். என்ன செய்ய..? பயணிகளுக்கு இடைஞ்சல், எரிச்சல். ஆனால், அவர்களுக்கோ எரியும் ஒரு சாண் வயிற்றுக்கான போராட்டம்.

பஸ்ஸில் ஏறிய பிச்சைக்காரன் சாரதிக்கு அருகில் வந்து சனங்களை நோக்கி தலை குனிந்து வணங்கினான். பின்னர், தன் கையிலிருந்த பொருளொன்றைத் தாளமாக்கி பாட்டுப் பாடினான்.

சிங்களப் பாட்டுத்தான். வரிகள் நன்றாகப் புரியவில்லை. ஆனால், இசைக்கேது மொழி...? அவனின் குரலசைவும், அந்தத்தாளமும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. என் பக்கத்தில் நின்ற 50 வயது மதிக்கத்தக்க ஒருத்தர் அவன் பாட்டுக்குத் தானும் வாயசைத்து தாளம் போட்டான். அட... என் கால்களும் தான் அவன் இசைக்கேற்ப அசைந்தன. அவள் கூட அப்பிச்சைக்காரனின் இசையை ரசித்தாள். நானும் ரசிப்பதை புரிந்து கொண்டு கண் சிமிட்டி கதை சொன்னாள்.

அடுத்த தரிப்பிடத்தில் சில இருக்கைகள் வெறுமையாகின... எனக்கு கால் கடுத்தாலும் ஒன்றாக அமர சோடி இருக்கைகள் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால், குறுக்கால போன கொண்டக்டர் விடவும் இல்லை. அவன் கத்தின கத்தலில், என்னை ஒரு இருக்கையிலும் அவளை எனக்குப் பின்னால் மூன்று வரி தள்ளி ஒரு இருக்கையிலும் இருத்திவிட்டான். பாவிப்பயல்...

இப்போது பிச்சைக்காரன் தன் பாட்டுக்குரிய சன்மானம் வாங்கும் நேரம். உண்மையில் அவன் இசையில் கிறங்கித்தான் போனேன். கட்டாயம் பத்து ரூபாயாவது கொடுக்கணும்...

அவன் வருகின்றான். அவன் பாட்டுக்குத் தாளம் போட்டு வாயசைத்த அந்த ஐம்பது வயது நபர் எங்கேயோ பார்வையைத் திருப்புகின்றார். அவன் கை அவரை நோக்கி நீளுகின்றது...

"எங்களிடம் பிச்சை எடுக்கிறது சாராயம் குடிக்கத்தானே..." சிங்களத்தில் திட்டிய அவர் தன் முகத்தை கர்ணகடூரமாக்குகின்றார். சீய்... இப்படியும் மனிதர்களா என என் மனது அவரைச் சபிக்கின்றது. இதெல்லாம் சகஜம் என்பது போல பிச்சைக்காரன் அங்கால் நகர்கின்றான்.

என் பேர்ஸைத் திறந்து பார்க்கின்றேன். அண்மையில் வெளியிடப்பட்ட புது ஆயிரம் ரூபாய்த்தாள் தான் என்னைப் பார்த்து பல்லிளிக்கின்றது. துலாவிப் பார்க்கின்றேன். ஒரு ரூபாய் சில்லறை கூட சிக்கவில்லை.

இப்போது என் முன்னால் அவன் கரம் இரந்து நிற்கின்றது. என் பார்வை பேருந்தின் யன்னல் வழியே எங்கோ பார்க்கின்றது. ஏமாற்றம் மேலிட அவன் என்னைக் கடந்து போகின்றான். சில்லறையானாலும் அவனுக்கு அவள் கொடுப்பதை என் கடைக்கண் பார்வை உறுதி செய்து கொள்கின்றது.

இறங்கும் போது என் விம்பம் உடைந்து சிதறு முன் அவளுக்கு கட்டாயம் இதைச் சொல்ல வேணும்.
பிச்சைக்காரன் பாடினது இராஜின் பாடலென... அவள் புரிந்து கொள்வாள்.

You might also like