Search This Blog

Wednesday, December 31, 2008

விடைபெறும் 2008 - வீட்டுப்படியினில் யுத்த அரக்கன்

புதியதொரு புலர்விற்கான மணித்துளிகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன . எதுவுமே நன்மையென்று தராமல் - கண்ணீரையும் காயங்களையும் தந்த ஆண்டு விடைபெற புத்தாண்டொன்று பிறக்கின்றது. சிலரிடம் இந்த வருடமாவது எங்களுக்குரியதாக மாறாதா என்ற ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பு... சிலரின் உணர்வுகள் சிதைக்கப்பட்ட நிலையில் எந்தச் சலனமுமின்றி நாளைய நாளில் பிரவேசம்... நேற்று வாழ்ந்த வாழ்வை நினைத்து இன்னொரு சாரார்... ஆடம்பரங்களுடன் தயாராகும் பிறிதொரு கூட்டம்...

எங்கள் வீட்டுப்படியினில் யுத்த அரக்கனை கொண்டுவந்து இருத்திவிட்டு 2008 நகர்கின்றது. உள்ளே அழைத்துச் சென்று மாமிசத்தீனி படைப்பதா அல்லது செவிடான அவன் காதில் அமைதி வேதம் ஓதி சமாதானம் செய்வதா இல்லாதுவிடின் அவன் கதை முடிக்க தீக்கொள்ளி சுமப்பதா...? 2009 தீர்மானிக்கவேண்டிய நிலை!

2008 நாட்காட்டியின் பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டுகின்றேன். எனக்கென்று அல்லது எங்களுக்கென்று வந்துபோன தினங்கள் சொற்பமே.
உணர்வினால் எங்களுக்காகப் பேசிய ஒருவனை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் பலியெடுத்தவளாய்த்தானே இவள் பிறந்தாள். கைது, கிளைமோர் வெடிப்பு, குண்டுத்தாக்குதல், கடத்தல், ஊடக அடக்குமுறை... இவைகளன்றி வேறென்ன தந்துவிட்டுப் போகின்றாள். ஒவ்வொரு வீட்டிலும் இவள் மறக்கப்பட மாட்டாள்! ஏனெனில், மறக்க முடியாதவர்களின் மறைவுகளுக்கெல்லாம் இவள்தானே ஆதாரம்.

இனம்தெரியாதவர்களுடன் கள்ளக்காதல் புரிந்ததும்... பசித்த வேளையில் எங்கள் ஊருக்குள் வந்து வெள்ளைவானேறி வேட்டையாடியதும் இல்லாதுவிடின் பற்றைக்குள் மறைந்திருந்து பஸ்களை குறிவைத்ததும்... இவைகளெல்லாம் உலகறிந்த இரகசியங்கள். சில குண்டுச்சத்தங்கள் சில காதுகளுக்கு கேட்க பல குண்டுச்சத்தங்கள் அக்காதுகளை செவிடாக்கி விட்டனவாம். பகுத்தறிவுக்கு ஒத்துவராட்டிலும் இது நம்பித்தான் ஆகவேண்டும். ஆனாலும், எங்களைத் தாங்கவும் கரமிருக்கின்றது என அருகிலிருந்து
அண்மையில் எழுந்த குரல்கள் நாங்கள் சாகமாட்டோம் என்ற நம்பிக்கையைத் தந்தாலும், செத்துக் கொண்டுதானே நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

நேற்றுப்போன்று இருக்கின்றது - வீட்டுக்கார அன்ரியிடம் 'கிரிபத்' வாங்கிச் சாப்பிட்டுவிட்டு பிள்ளையார் கோவிலிலே அர்ச்சனை செய்து வந்தது . ஆனால், விடிய அதுக்கு ஒருவருடமாகிவிடும். கடந்த வருட (2007) இறுதி விடுமுறைக்கு வீடு செல்லாத என்னைக் கவலையுடன் நோக்கி, "மச்சான்... ஏப்ரலில் ஏ9 திறந்திடும். கவலைப்படாதே... நீ போகலாம்" சகோதர மொழியில் ஆறுதல் சொன்ன கல்லூரி நண்பனுக்கு விடியும் போது புத்தாண்டு வாழ்த்துச்சொல்ல மறக்க மாட்டேன். இன்று தொழிலகத்தில் 2008ஐ ஒவ்வொருவரும் மீட்டி மறக்காத நினைவுகளைப் பகிர்ந்தோம். எங்களுக்கு எப்போதும் எங்கேயும் சோகக்கதைகள் தானே மிஞ்சுகின்றன. இந்த ஆண்டுதான் ஒரு மணித்துளியேனும் என்குடும்பத்துடன் வாழாது - அம்மாவின் கைப்பிடி அன்னமின்றி கழிகின்றது என்றேன். அருகிலிருந்த அண்ணன் திகைப்புடன் நோக்கிவிட்டுச் சொன்னான். "சித்திரையில் ஏ32 திறந்திடும்...". சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு எங்கிருந்தாலும் அவரையும் மறக்க மாட்டேன்.

அங்கே பட்டாடை கட்டிய
புதியவளொருத்தி வீடிழந்து நிற்கும் எங்கள் முற்றம் தேடி வருகின்றாள். உனக்கு காணிக்கை தந்து சுதந்திரம் கேட்பதற்கு எங்களிடம் உயிரைத்தவிர வேறெதுவுமில்லை. அதைக்கூட காணிக்கையாக்கியுள்ளோம். அறியாதவளல்ல நீ... எங்களுக்கு என்ன பதில் தரப்போகின்றாய்? சிறகு கட்டி ஆனந்தக் கூத்தாட கை கொடுப்பாயா...? அல்லது எங்களின் சிறகொடித்து தின்று பசி ஆறிப்போவாயா...?

Monday, December 29, 2008

விடைபெறும் 2008 - ஈராக்கில் பலியெடுக்கப்படும் உயிர்கள்

ஈராக் மீது அமெரிக்கா இராணுவம் படை நடவடிக்கையை முடுக்கி விட்ட போது கூறிய காரணங்கள் இரண்டு. முதலாவது ஈராக்கின் அணுவாயுத உற்பத்தி. மற்றையது பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்தல்(கவனிக்க:- இங்கு பேசப்படுவது ஈராக்கிய யுத்தம் பற்றி). ஆனால், அமெரிக்காவின் இந்த இரண்டு காரணங்களும் ஐ.நாவினதும் - உலகத்தினதும் இரு காதுகளிலும் சுற்றப்பட்ட பூக்களாகின என்பது தான் கறைபடிந்த வரலாறு. அமெரிக்கா தேடிய அணுவாயுதம் ஈராக்கில் கிடைக்கவுமில்லை. அவர்கள் வரையறை செய்த பயங்கரவாதத்தை பூண்டோடு கருவறுக்கவும் முடியவில்லை. மாறாக, தனக்கு சவால் விட்ட எதிரி சதாம் ஹூசனை தூக்கிலிட்ட திருப்தியுடன் ஒரு சொல்லில் ஈராக் மண்ணிடம் மன்னிப்புக் கேட்டவாறு பெட்டி படுக்கைகளைக் கட்டிவிட்டார் புஷ். ஆனால், ஈராக்கின் நிலை...?

கடந்த காலங்களில் இடம்பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களும்
தற்கொலைத்தாக்குதல்களும் முடிவுக்கு வரவேண்டுமென்ற பிரார்த்தனையுடன் ஈராக்கிய மக்கள் 2008ஐ வரவேற்ற போது... வருடத்தின் முதல் நாள் புலர்ந்ததே கந்தக நெடியுடன்தான்.

ஈராக்கின் பக்தாத் நகரில் ஷியாம் முஸ்லிம் போராளி ஒருவரின் மரணச்சடங்கில் மரண ஓலம் எழுந்தது. தற்கொலைப் போராளியொருவர் நிகழ்த்திய தாக்குதலில் 30பேர் சாவடைய பலர் காயங்களுக்குள்ளாகினர். தாக்குதல் நடைபெற்ற உடனேயே அமெரிக்காவும் ஈராக்கும் அல்ஹைடாவை நோக்கி குற்றம் சுமத்தி விரல் நீட்டினர். வழமைபோன்று முன்னைய காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களின் உயிரிழப்புகளுடன் ஒப்பிடும் போது இத்தொகை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாய் திருப்தி வேறு! பாவம் ஈராக்கிய மக்கள்... அவர்களுக்கும் 2008 அழுது கொண்டே பிறந்தது.

அங்கு பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் அம்மக்களின் மானிட அவலங்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. மார்ச் மாதத்தில் ஈராக்கின்
வடபகுதியில் உள்ள ஹாலிஸ் நகரில் ஈராக்கிய படையினரால் பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதைகுழியில் காணப்பட்ட சடலங்கள் குறிக்கப்பட்ட ஒரு நாளில் புதைக்கப்படாமல் வெவ்வேறு நாட்களில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்த ஈராக்கிய அரசு, அல்ஹைடாவை சுட்டி குற்றம் சாட்டியது. வருட முதல்தினத்தில் இடம்பெற்றதைப் போன்று, ஏப்ரல் மாதமும் ஈராக்கின் வடபகுதி நகரான பகுவாவில் உள்ளூர் போராளிக்குழுவினரின் மரணச்சடங்கில் ஏற்பட்ட தற்கொலைத்தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

ஜூன் 18... ஈராக்கிய மக்கள் வேலை முடிந்து பேருந்துகளுக்காக காத்து நின்ற மாலைப் பொழுதினில், தென் ஈராக்கிய பஸ்தரிப்பிடமொன்றில் இடம்பெற்ற கார்க்குண்டுத்தாக்குதலில் 63 பேர் பலியானதுடன் 73இற்கு அதிகமானோர் காயமடைந்தனர். அமெரிக்காவும் ஈராக்கிய படைகளும் பாதுகாப்பை பலப்படுத்திவிட்டோம் என அறிவித்த ஒரு சில நாட்களில் இத்துயரம் நடந்தேறியது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் ஆயிரமாக இருந்த உயிரிழப்புக்கள் மே மாதத்தில் ஐநூறாக குறைந்துவிட்டன என வெளிவந்த அறிக்கையே அங்கு நடைபெறும் கோரச்சம்பவங்களின் பதிவாகின்றது.

டிசம்பர் 11... பல சமூகத்தவரும் வாழும் ஈராக்கிய வடபகுதியான கிர்குக் நகரில், ஹஜ் பெருநாள் விடுமுறையின் போது மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக உண்டு களித்துக் கொண்டிருந்த ஹோட்டலில் அந்த அநியாயம் நடந்தேறியது. உடலினுள் மறைக்கப்பட்ட குண்டுடன் உணவகத்துக்குள் நுழைந்த நபர் தன்னைத்தானே வெடிக்க வைக்க 55 பேர் பலியானதுடன் ஆகக்குறைந்தது 120 பேர் படுகாயமடைந்தனர்.

2008இல் மட்டும் ஈராக்கில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் குண்டுகளினால் சிதறடிக்கப் பட்டிருக்கின்றன என்பது ஜீரணிக்கமுடியாத உண்மை. அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைவிட்டிருக்கும் போராளிக்குழுக்களின் கண்மூடித்தனமான தாக்குதல்களும் ஆட்சியாளர்களின் பலவிதமான அடக்குமுறைகளும் ஈராக்கிய மக்களை மேலும் மேலும் நரக வாழ்க்கைக்குள் தள்ளிக் கொண்டேயிருக்கின்றன. போலித்தனமான காரணங்களைக் கற்பித்து அம்மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்போம் என்ற உச்சிகுளிரும் வாசகங்களுடன் ஈராக் மீது படையெடுத்த வல்லரசுகள் சாதித்தவை பூச்சியம். அதை உணர்ந்து அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப எத்தனிக்கும் இக்காலப்பகுதியில் ஈராக்கிய மக்களின் வாழ்க்கை கண்ணீரில் கரைகின்றது. 2009 அவர்களுக்கு கை கொடுக்குமா...? அல்லது அதே தற்கொலைத்தாக்குதல்களும் கார்க்குண்டுகளும் தான் தொடரப் போகின்றதா...? வல்லரசுகளும் முளைவிட்ட பயங்கரவாதக்குழுக்களும் பதில் தரட்டும்...

2008 இரத்தக்கறைபடிந்த ஈராக்கில்,
ஜனவரி 01 - தற்கொலைத்தாக்குதலில் குறைந்தது 30 பேர் பலி, 32 பேர் படுகாயம்.
பெப்ரவரி 01 -
தற்கொலைத்தாக்குதலில் 53 பேர் பலி, 94 பேர் படுகாயம்.
பெப்ரவரி 05 - பாரிய மனித புதைகுழி கண்டுபிடிப்பு.
மார்ச் 06 - இரட்டைக்குண்டுத்தாக்குதலில் 68 பேர் பலி, 130க்கு மேற்பட்டோர் காயம்.
ஏப்ரல் 14 - மனித புதைகுழி கண்டுபிடிப்பு.
ஏப்ரல் 28 - நூற்றுக்கு மேற்பட்ட சடலங்களைக் கொண்ட இரு பாரிய புதைகுழிகள் கண்டு பிடிப்பு.
ஜூன் 18 - கார்க்குண்டுத்தாக்குதலில் 63 பேர் பலி, 73 பேர் காயம்.
ஜூலை 09 - 21 சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு.
ஜூலை 28 - தற்கொலைத்தாக்குதலில் 50 பேர் பலி, 250 பேர் காயம்.
ஓகஸ்ட் 14 - தற்கொலைத்தாக்குதலில் 19 பேர் பலி.
டிசம்பர் 04 - குண்டு வெடிப்பில் 22 பேர் பலி, 167 பேர் காயம்.
டிசம்பர் 11 - தற்கொலைத்தாக்குதலில் 55 பேர் பலி, 120 பேர் காயம்.
டிசம்பர் 18 - இரட்டைக் குண்டுத்தாக்குதலில் 18 பேர் பலி.

விடைபெறும் 2008

இன்னும் மூன்று நாட்களில் இன்னொரு புதிய ஆண்டு பிறக்க 2008ஆனது கைகாட்டி விடைபெற்றுச் செல்லப்போகின்றது. வழமை போன்று பழையன கழித்து புதியன புகுதலில் எல்லோரும் 2009ஐ வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த 2008 ஆனது 2009 இடம் விட்டுச் செல்லுபவை பேசும் கதைகள் கொஞ்சநஞ்சமல்ல.

மனித இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி, உலக பொருளாதாரத்தை அதல பாதாளத்துக்குள் தள்ளி, முந்தானையில் முடிந்து வைத்துள்ளதை மறந்து விட்டு பயங்கரவாதத்தை வேறெங்கிலும் தேடி... ஈற்றில் வல்லவர்களின் கரங்களில் சிக்கி வதைக்கப்பட்டாலும் ஒரு சில சாதனைகளுக்கு சொந்தக்காரனாகவும் திகழ்ந்த 2008 நீ போய் வா! மன்னிக்கவும்... வராமலே போய் விடு...! ஆனால் வருகின்ற 2009இல் ஏதாவது உருப்படியாகுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் பதிலிலேயே இருக்கின்ற சலிப்பு வெளிப்படை..!

2008இல் உலக அரங்கில் அதிகமாக கவனத்தை தன் பக்கம் திருப்பிய சம்பவங்களாக... ஈராக்கில் இன்னமும் பலியெடுக்கப்படும் அப்பாவி உயிர்கள், கொசோவாவின் உதயம், இலங்கையில் தொடரும் யுத்தமும் மீறப்படும் மனித உரிமைகளும், ஜோர்ஜியா மோதல், கறுப்பின அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வெற்றி... என ஒரு பட்டியல் நீள்கின்றது. இந்தச் சம்பவங்கள் எனக்குள்ளே பேசிய கதைகள் பல பரிமாணங்கள் உடையவை. எல்லாவற்றையும் எழுத என் பேனாவுக்கு மை போதாதென்றால் சூழ்நிலை புரிந்து கொள்ளும் வல்லவர் நீங்கள். ஆனாலும், உலக அரங்கிலே இடம்பெற்ற சில சம்பவங்களை அடுத்தடுத்த பதிவுகளில் பதிவிடுகின்றேன்.

Wednesday, December 24, 2008

இன்று நத்தார் தினம்

இன்று நத்தார் தினம்... மனுக்குலத்தை மீட்டெடுக்க பாலன் யேசு அன்னை கன்னி மரியாளின் மகவாக மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்த நாள். அடிமைத்தளைகள் அகன்று சாந்தியும் சமாதானமும் இப்பூவுலகத்தில் நின்று நிலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் புனித நாள். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு தேவாலயங்களில் எழுப்பப்படும் ஆலயமணி ஓசை உங்களுக்காக ஒரு மீட்பர் பிறப்பெடுத்துள்ளார் என்பதை பறைசாற்ற உலகமக்கள் இந்நாளைக் கொண்டாட ஆயத்தமாகின்றனர்.

ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் இந்நத்தார் பெருநாளானது ஆடம்பரம், ஆரவாரமின்றி அமைதியாக அந்த அமைதியினை வேண்டியே கழிகின்றது.

இன்று நேற்றல்ல... அன்று தொட்டு நாங்கள் இறைஞ்சி நிற்கும் சமாதானமும் சாந்தியும் எப்போதாவது வந்து பூச்சாண்டி காட்டி விட்டு எட்டாத்தொலைவில் நின்று வேடிக்கை பார்க்கின்றது. ஒவ்வொரு பாலன் பிறப்பும் எங்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் ஊட்டினாலும், விடிவு வருமென்று அடுத்த பாலன் பிறப்புக்களுக்காகத்தானே காத்திருக்கின்றோம். கடந்த நத்தார் தினத்தன்று தனது சொந்தங்களுக்காக அமைதி வேண்டிய உறவுகள் இன்று அமைதி வேண்டி கானகங்களில் குடில் கட்டிக் காத்திருக்கின்றார்கள். ஆனாலும், அவர்கள் நெஞ்சுரம் குலையவில்லை.

இன்று ஈழத்தில் பிறக்கின்ற பாலன்களைத் தாங்கிட மாட்டுத் தொழுவங்கள் கூட இல்லாத சோகம். உன் பிறப்புக்கு குடில் தந்த மந்தைக்கூட்டம் எங்கள் ஊரில் இருந்த குற்றத்துக்காக தங்களின் உயிர்களையே தருகின்றன. வானத்தில் கண்சிமிட்டும் நட்சத்திரமில்லை. ஆனால், எங்கள் வானத்தில் இரைச்சல்களும் தொடர்ந்து கேட்கும் அந்தச் சத்தங்களும் எங்கள் காதுகளைச் செவிடாக்கி உயிர் குடித்துச் சென்றாலும், உலகின் காவலர்களின் காதுகளுக்கு இன்னும் கேட்காத சோகம்...!

விடிந்ததும் பத்திரிகையின் ஒரு மூலையில் யேசு பாலன் பிறந்த செய்திப்படம்... முதற்பக்கம் தொட்டு இறுதிப்பக்கம் வரை அரசியல்வாதிகளின் வாழ்த்துச்செய்திகள்... "இந்த நன்னாளில் சாந்தியும் சமாதானமும் மலரட்டும்" சத்தியமாக இதுதான் அவர்களின் வாழ்த்துக்களில் புதைந்து கிடக்கும் முத்தான செய்தி. கேட்பதற்கு இனித்தாலும், 'ஊருக்கடி உபதேசம் உனக்கில்லையடி' வாசிப்பவர் மனதில் தோன்றினாலும் எப்படியும் வெளிக்காட்டாமல் அடக்கிவிட வேண்டும். எங்கோ ஒரு மூலையில் ஆயர்களின் செய்தி அமைதி விரும்பி, உறவுகளின் உணர்வுகளைத் தாங்கி கண்ணீர் சிந்தி இறைவழிபடும்.

ஆனால் அப்பாவைத் தேடும் மகனும், மகனைத் தேடும் பெற்ற வயிறும், கூட்டிச் சென்ற மகனுக்காக செபம் சொல்லும் தாயவளும், அவருக்காக வணங்கும் அவளும், வீடிழந்த சொந்தங்களும், கூடிழந்த பறவைகளும், வானம் பார்த்து காலைக்கடன் தொடக்கம் எல்லாம் முடிக்கும் உறவுகளுமாக... நீண்டதொரு சோகம் அப்பிய வாழ்க்கைக்கு விடிவு வருமா...???

யேசு கிறிஸ்து நாதரே... நீ விரும்பிய சமாதானமும் சாந்தியும் எங்களுக்கும் வேண்டும். மனுக்குலத்தை மீட்க மானிடப்பிறவி எடுத்தவனே எங்களுக்கும் அமைதியைத் தருவாயாக...

Sunday, December 21, 2008

அந்தக் கடவுள் யார்...?

விழி மூட மறந்த நேற்றைய பின்னிரவில் எங்கோ ஆரம்பித்த கதை சூடான கருத்துக்களுடன் ஆன்மிகத்தில் வந்துநின்று போகும் வழி தெரியாது திக்குமுக்காடுகின்றது. இறைவன் இருக்கின்றானா? இல்லையென்று என் நண்பனும், ஏதோவொன்று அப்படி இருக்கின்றது என நானும் நேற்றைய இரவு நித்திரையைத் தொலைத்திருக்கின்றோம். ஆனாலும், என் கருத்துக்கள் தான் முடிவுரைக்கு முத்தமிடும் தூரத்தில் நிலையெடுத்திருக்கின்றன.

பாடசாலைக் காலத்தில் அவன் மூளைக்குள் உட்புகுவதற்குச் சிரமப்பட்ட விஞ்ஞான விளக்கமெல்லாம், இப்போது அவன் கேள்விகளாயிருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனெனில், அவன் இப்போது பொறியியலாளன். பூச்சியத்தையும் பூச்சியத்தையும் சேர்க்கும் போது பூச்சியம் தான் கிடைக்கும் என்பதையும் நிறுவப் பழகியவன்.

கடவுள் என்று கத்துகிறீர்களே... அதை உன்னால் காட்ட முடியுமா? அல்லது, உணரத்தான் முடிந்ததா...? அன்பே சிவமென்று உபதேசம் செய்துவிட்டு இரத்த வெறியுடன் மதக்கலவரம் புரிகின்றீர்களே...! பணமிருந்தால் தான் இறைவன் கண் திறப்பான் எனும் விதிக்கு எதிர் விதி இருக்கா...? அன்பைச் சொன்ன ஆலயங்களில் அக்கிரமங்களும் முளைவிட்டனவல்லவா...? மரணப்படுக்கையிலும் நீங்கள் அழைக்கும் கடவுளால் ஏன் நவாலியிலும் மடுவிலும் உங்களுக்கு மரணத்தைத்தான் தர முடிந்தது...?

அவன் தொடுத்த வினாக்கள் இவை. கேட்டவைகளின் பின்னால் இருக்கும் நியாயத்தை நான் மறுக்கவில்லை. ஆனாலும், இறைவன் இன்னும் இருக்கின்றான் என்ற நம்பிக்கை என்னுள் இன்னும் இருக்கின்றது.

என்னை ஒரு சக்தி இயக்கிக்கொண்டிருப்பதாய் உணர்கின்றேன். அதற்குத்தான் நான் இடும் பெயர் கடவுள். நெருப்பைத் தொட்டால் சுடும் என்றும், ஆழ்கடல் என்னை அமிழ்த்தும் என்றும், உதடு வரை வந்த சில விடயங்கள் என் பேனாவுக்குள் நுழைதல் ஆகாது என்றும் என்னைப் பின்னால் நின்று இயக்கும் அது என்ன...? பூமி தன்னைச் சுற்றி சூரியனையும் வலம் வருகின்றதே... அறிவியலால் பாதையையும் அதன் காலத்தையும் தான் கணிக்க முடிந்ததாயின் அந்த இயக்கத்தின் முதல் என்ன? பூமிக்கொரு ஈர்ப்புசக்தி இருப்பதாய் சொன்ன விஞ்ஞானம் அந்த ஈர்ப்பு சக்தியைக் கொடுத்தது யாரென்று சொல்லட்டும்.

ஆனால், நண்பன் சொன்ன அந்த மதக் கலவரங்களும், மரணங்களும், போலிச்சாமியார்களும் எங்களுக்குள் இருந்துதான் முளைத்தவை... தங்கள் இருப்புக்கு கடவுளை த் துணைக்கழைத்தவாறு. அது தான் சாபம்...!

அப்படியாயின் விநாயகர், சிவன், யேசு, நபி, புத்தன் இவர்கள் யாரென்று கேட்டால் என் பதில்... நாளை இந்த நாமங்கள் மறைந்து போக, இவர்கள் தான் கடவுளர்களின் உருவங்களென நெல்சன் மண்டேலாவுடன் இன்னும் சில சுதந்திர புருஷர்களின் பெயர்களை நான் பட்டியலிடுவேன். வேண்டுமாயின், சாத்தானையும் அரக்கர்களையும் புஷ்ஷும் இன்னும் ஒரு சிலரும் பிரதியீடு செய்யலாம்.

அப்போது அன்று இருக்கும் விஞ்ஞானம் தன் இனத்துக்காக அவர்கள் தங்களின் உயிர்களைத் தானம் செய்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் ஆராய்ச்சிகளின் படி நிறுவச் சொல்லும்போது... அகழ்வாராய்ச்சிக் கல்லறைகள் சில உண்மைகள் உரைக்கலாம்!

ஆனால், வல்லவர்களின்(?) கரங்களினால் எங்களின் வரலாறு வேண்டுமென்றே பொத்தி மறைக்கப்படுவது கவலையைத்தருகின்றது. கம்பனின் கவிநயத்தில் சிவபக்தனான இராவணன் எப்படி அரக்கனாக சித்தரிக்கப்பட்டானோ அப்படியே எங்களின் வரலாறுகளையும் அவர்கள் எழுதிவிட்டால்....? சிந்திக்கவும்!!!

***

அது 2004ம் ஆண்டு... இலங்கையில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலம். பல்கலை விடுமுறை நாளொன்றில் முகமாலை தாண்டி மாமாவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

மாமாவின் மூத்த மகன் அப்போது அவனுக்கு வயது ஒன்பது. காலையில் கடவுளை வணங்கியவாறு அந்த வீட்டிலுள்ள ஒவ்வொரு படத்துக்கும் பூ வைத்தவாறு வருகின்றான். சில கடவுள் படங்கள். ஒரு சில மரணித்தவர்களினது. ஆனால், அங்கு எல்லா வீட்டிலும் ஒரு நாட்காட்டி சுவரில் மாட்டப்பட்டிருக்கும் என்பது ஏனோ எழுதப்படாத விதி. நிச்சயமாக அது இறைவனின் படத்தைக் கொண்டிராது. அவன் தெரிந்தோ தெரியாமலோ அந்த நாட்காட்டியிலும் பூச்சூட்டியவாறு நகர்கின்றான். அவனை அழைத்துச் சொன்னேன். "கடவுளருக்கும் மரணித்தவர்களுக்கும் தான் பூ வைக்க வேண்டும். உயிருடன் இருப்பவர்களுக்கு அல்ல...". பட்டென்று சொன்னான் ஒரு பதில். "கடவுளுக்குத்தான் நான் பூ வைத்தேன்." கூர்ந்து பார்த்தேன் அந்த நாட்காட்டிப் படத்தை... சத்தியமாக அவருக்கும் சினிமாவுக்கும் கூட ஒரு துளி சம்பந்தமுமில்லை!!! அந்தக் கடவுள் யார்...?

( 2004 - டிசெம்பர்-26 அன்றைய நாளுக்குப் பின்னர் அந்தப் பாலகனும் எங்கள் வீட்டில் பூச்சூடிய படமாக...)

Wednesday, December 17, 2008

உங்களாலும் முடியும் காலணி வீசுவதற்கு...

இந்த வாரம் அதிகளவில் பேசப்பட்ட பிரபலம் யாரென வினாத்தொடுத்தால், ஒரு ஊடகவியலாளனின் காலணியுடன் போட்டி போடுபவர் வேறு யாருமல்ல... விடை பெற்றுச் செல்லப்போகும் அமெரிக்க ஜனாதிபதி புஷ் அவர்கள்தான். "இதுதான் ஈராக்கிய முற்றம் உனக்குத்தரும் கடைசி பிரியாவிடை முத்தம்" என்றவாறு ஈராக்கில் ஒரு ஊடகவியலாளனின் காலில் இருந்து பறந்த பாதணியின் இலக்கிலிருந்து இலாவகமாகத் தப்பிய பெருமையும் இப்போது அமெரிக்க ஜனாதிபதிக்கு...

ஈராக்கில் அணுவாயுதம் என்ற பெரிய பூச்சாண்டிக்கதையை அவிழ்த்துவிட்டு பயங்கரவாதம் தேடி பயங்கரவாதத்தையே விதைத்தவாறு விரைந்த புஷ்ஷின் அமெரிக்க நிர்வாகம் இன்று ஒரு மன்னிப்புக் கேட்டலுடன் பாவ விமோசனம் தேடப்பார்க்கின்றது. உண்மையில் ஈராக் மீதான படையெடுப்புக்கு அமெரிக்கா அன்று முன்வைத்த காரணங்கள் எல்லாம் வலிதற்றுப்போய் அமெரிக்காவையே திரும்பி ஏளனப்பார்வை பார்ப்பது போன்ற பிரமை. பயங்கரவாதிகளைப் பிடிக்க கூட்டுச்சேர்ந்த பிரிட்டன் போன்ற நாடுகளுக்கும் இன்று ஆப்பிழுத்த குரங்கின் நிலை... (மிகவிரைவில் ஈராக்கிலிருந்து தனது இராணுவத்தை மீளழைக்க பிரிட்டன் முடிவு செய்திருப்பது பிந்தைய செய்தி)

பாவம்... பயங்கரவாதம் என்னவென்று வரையறுக்காது அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற வகையில் தன்னை எதிர்த்து ஆயுதம் தூக்கியவன் எல்லாம் பயங்கரவாதியென வரையறை செய்தவர்களின் இறுதிக்காலம் இப்படித்தான் அமைகின்றன... வரலாறு எமக்குக் கற்றுத் தந்த பாடத்தின் இப்போதைய உதாரண புருசன் புஷ். இவர் முதலுமல்ல... கடைசியுமல்ல... நீட்சிக்குரிய பாதை தெளிவானது!

ஈராக்கில் ஊடகவியலாளர் ஒருத்தர் தனது காலணியைக் கழற்றி அமெரிக்க ஜனாதிபதியை நோக்கி வீசிய செய்தி இதுவரை அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அவமரியாதையில் தலையானது என கொட்டை எழுத்துக்களில் தலையங்கங்கள்... நான் அறிந்த வரையில் எந்தவொரு நாடும் இதற்குத்தனது மென்மையான கண்டணங்களைத்தானும் தெரிவித்ததாக அறியமுடியவில்லை. அப்படி தெரிவித்திருந்தாலும், அதற்கு ஊடகங்கள் வழங்கிய கனதியென்று எதுவுமில்லை. ஆனால், மறுதலையாக அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் புஷ் ஒரு ஊடகவியலாளரை நோக்கி ஒரு கடின வார்த்தை பிரயோகித்திருப்பின் எத்தனை நாடுகள் கண்டித்திருக்கும்? எத்தனை ஊடக அமைப்புக்கள் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கைகளால் துளைத்தெடுத்திருக்கும்? சிந்திக்க வைக்கின்ற நியாயமான விடயங்கள் இவை...

பல வலைப்பதிவுகளை மேய்ந்திருக்கின்றேன். ஒரு கைவிரலுக்குள் அடங்கும் எண்ணிக்கையினரைவிட மற்ற எல்லோரும் ஏதோ அதிர்ஸ்டம் வாசல் கதவைத்தட்டியது போன்றும், உலக நகைச்சுவை விருந்து நடந்தது போன்றும்தானே கிறுக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.(நானும் அப்படியா?)

தற்கொலைத்தாக்குதலொன்று வழங்கும் பாதிப்பினை விடவும் இந்த செருப்புத்தாக்குதலின் வடு காலத்தால் அழியாத கறுப்புப் புள்ளியாக புஷ்ஷின் முகத்தில் பதிந்து விட்டது. பயங்கரவாதிகளைத் தேடி ஈராக்கை நோக்கி படை நகர்த்திய போது, வியட்னாம் போன்றதொரு அதிர்ச்சி இவருக்கு காத்திருக்கும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த ஜனநாயக(?)த்திலிருந்து அவருக்கு மறக்க முடியாத அதிர்ச்சி காத்திருந்திருக்கின்றது. இது தான் விதி என்பதா...???

ஊடகங்கள் மட்டும் தான் இச்சம்பவத்தின் பக்கங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கின்றன என எண்ணியவர்களுக்கு ஒரு அதிர்ச்சி (எனக்கும் தான்)... இன்று இரவு இணையத்தில் உலாவிய போதுதான் புஷ் அவர்களுக்கு செருப்பெறிய எனக்கொரு சந்தர்ப்பமும் காத்திருந்தது. ஆரம்பித்து அடுத்த நாளே 1.4 பில்லியன் மக்களின் செருப்பெறிதல்களை புஷ்ஷிற்கு வாங்கிக் கொடுத்திருக்கின்றது ஒரு இணையத்தள விளையாட்டு. விரும்பினால்
http://kroma.no/2008/bushgame என்ற முகவரிக்குள் நுழைவதன் மூலம் உங்களாலும் அவரின் மீது செருப்பெறிய முடிகிறதா...? பரீட்சித்துப் பாருங்கள். அமெரிக்க இறையாண்மை பேசுபவராக இருந்தால் இப்போதே இப்பக்கத்தை மூடவும். ஏனனில், எனக்கு முதல் தடவை அந்த அமெரிக்க கொடியைத்தான் பதம் பார்க்க முடிந்தது. இரண்டாம் தடவை என்னால் முடிந்திருக்கின்றது அவரின் முகத்தில் எறிவதற்கு.....

Monday, December 8, 2008

கட்சித்தாவல் இங்கு சகஜமடா....

துணைக்கரம் கேட்ட அழைப்பை உயிர்வாழ்தலுக்கான இறைஞ்சல் என்கின்றார்கள் என நண்பனொருவன் சொன்னதன் அர்த்தம்...??? தெரியவில்லை. 'நான் அவனில்லை' என்பதற்காகவேனும் சிந்திக்காமல் இருப்பதே நல்லது. நண்பன் துணிந்தவன் எதையும் சொல்லிவிட்டுப் போகட்டும்.

வீட்டுக்குள் குழந்தையின் கதறலை மிஞ்சிய தடியின் ஓசை... அவன் அழுவது வெளியில் கேட்கக்கூடாதாம். தந்தையின் குரல் விரட்ட... அவர் கையிலுள்ள தடி தன் வேலையைப் பிசகின்றி செய்வதை ஊகிக்க முடிந்தாலும், வெளியார் தலையிட முடியாதே... அது அவர்கள் வீட்டுச் சமாச்சாரம். ஆனாலும், அழக்கூடாது என்று அடித்தால்??? விடை தெரியவில்லை.

வளங்கொழித்த மண்ணில் இன்று எங்களைத் தீண்ட எவரையும் அனுமதிக்காத நிலையில் வஞ்சகமின்றி அரவங்கள் தீண்டிச் செல்கின்றன. இது இலக்கிய நயம் அல்ல... ஒரு இதயத்தின் அலறல் என்கின்றது இணையத்தில் வந்த மடலொன்று.

செத்துக்கொண்டிருக்கும் எமக்காகவும் பேசுங்களேன் என்று கேட்டவர்களுக்கு வந்த பதில். சாப்பிடுங்கள்... உங்களுக்காக அழுகின்றோம்.... இப்படிச் சிலேடை பாடும் சிலருக்கு மேற்கோள் காட்ட இருக்கவே இருக்கிறது பகவத் கீதை. எல்லாம் நன்றாக நடக்கும்...

பதவி விலகல், சர்வகட்சி மாநாடு என எங்கள் காதில் பூச்சுற்றிய போதே உங்களை அவன் எடை போட்டு விட்டான் அரசியல் கோமாளிகளென... இப்படிப் பின்னூட்டமிட்டதை நீக்கிவிட்டார்களாம் புலத்திலுள்ள ஒருத்தன் அழுது கொண்டிருக்கின்றான்.

தமிழக காலம் முடிந்து ஹிலாரி பருவகாலம் ஆரம்பமாகின்றதாம். குடுகுடுப்பைக்காரன் குறி சொல்லிச் செல்கின்றான். "ஒருவன் ஒருவன் முதலாளி..." எங்கோ தொலைவில் கேட்ட பாட்டு நெருங்கியது அறிந்து அழுத பிள்ளை ஐஸ்ப்பழம் வாங்க வெளியில் வருகிறது.

ஆளுங்கட்சி அமைச்சருக்கு எதிர்க்கட்சி பிரதித்தலைவர் பதவி காத்திருக்கின்றதாம். வானொலி செய்தி கேட்ட உடனேயே என் நண்பனொருத்தன் கை கால் விரல் மடக்கி எதற்கோ கணக்குப் பார்க்கின்றான். திருந்தாத ஜென்மம். சிலர் இருந்த கட்சிகளை விட இருக்காத கட்சிகளைப் பட்டியலிடுவது சுலபமாகின்றது. கட்சித்தாவல் இங்கே சகஜமடா.....

Saturday, December 6, 2008

மலேசியாவில் பிரிந்த உறவு

விதி... அதுதான் வாழ்க்கைச்சக்கரத்துக்கு பாதை வரைந்து கொடுக்கின்றது. ஆனால், தன் மகன் பட்டம் பெற்று பொறியியலாளனாக வருவான் எனக்காத்திருந்தவர்களிடம் அவன் இறுதி ஊர்வலத்துக்கு தயாராய் வந்ததை விதி என்பதா? அந்தச்சிற்றுண்டிச்சாலையில் தேநீர் குடிக்கப்போனதன்றி வேறெதுவுமே அவன் செய்யவில்லை. ஆனாலும் அவன் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

சிறீஸ்கந்தராஜா சாரங்கன்
இவன் மலேசியாவின் University of Nattingham Malaysia பல்கலைக்கழகத்தில் மூன்றாவது கல்வியாண்டின் பொறியியல் மாணவன். 26 நவம்பர் 2008 அன்று வன்முறைக்கோஷ்டியொன்றின் தாக்குதலுக்கு இலக்காகியதில் இவன் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது. தாக்குதலாளிகளின் இலக்கு வேறாக இருந்த போதிலும் அவர்களின் கோரக்கண்களுக்கு இந்த்ச்செல்வத்தை பிரித்தறிய முடியாததுதான் கொடுமையிலும் கொடுமை.

அண்ணன் இங்கு (இலங்கையில்) பொறியியல் படிக்கின்றான். நான் மலேசியாவில் படிக்கப் போகின்றேன் என பெற்றவர்களின் ஆசீர்வாதத்துடன் விமானமேறிய இவன் இங்கு போலவே அங்கும் படிப்பில் சிகரத்தில் இருந்தான். இலங்கையில் தாண்டவமாடும் போர் இவன் குடும்பத்தை அலைக்கழித்த போதும், ஆரம்பக்கல்வியை யாழ் மாவட்டத்திலும் பின்னர் வவுனியாவிலும், பாடசாலைக்கல்வியின் இறுதியாண்டுகளை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் நிறைவு செய்த இவனுக்கு க.பொ.த. உயர்தரத்தில் அதி சிறந்த பெறுபேறான 3 அதிவிசேட சித்திகள் (3A) முதல்தடவையிலேயே சொந்தமாகின்றது.

இலங்கையின் மொறட்டுவ பல்கலைக்கழத்திற்கு அனுமதி பெற்று அங்கு ஆறு மாதங்கள் தனது பொறியியல் கல்வியைத் தொடர்ந்த வேளையில் தான் மலேசியாவின் University of Nattingham Malaysia பல்கலைக்கழகத்திலிருந்து இவனுக்கு அனுமதி கிடைத்தது. அங்கு முதல் வருடமும், இரண்டாம் வருடக்கல்வியை இங்கிலாந்தில் அதே பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தவன் மூன்றாம் வருடக்கல்வியைத் தொடர்வதற்காய் மீண்டும் மலேசியாவுக்கு வந்த போதுதான் இந்தக் கொடூரம் நடந்தேறியிருக்கின்றது.

நண்பர்களுடன் சிற்றுண்டிச்சாலையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த தாக்குதலாளிகள் இவர்களின் மீது தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர். உண்மையில் தாகுதலாளிகளின் இலக்கு பிறிதொரு கூட்டமாக இருந்த போதும் தெரியாத்தனமாக சாரங்கனும் அவன் நண்பர்களும் வெட்டுக்காயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

26 நவம்பர்... தனது பிறந்ததினத்துக்கு ஆசைமகனின் வாழ்த்துச் செய்திக்காக காத்திருந்த தாய்க்கு எட்டியது மகன் காயத்துக்குள்ளான செய்திதான். செய்தி அறிந்து மலேசியா சென்றவளுக்கு இவன் கிடைத்தான்... அதே புன்னகை மாறாத வதனத்துடன் உயிரற்றவனாக...

அந்த மலர்ச்சாலையில் சோகம் நிரம்பி வழிகின்றது... இவன் இழப்பை இன்னமும் ஏற்காமல் என் மகனைக் காப்பாற்று என இருகை கூப்பி இறைவனை இறைஞ்சும் அப்பா... உனக்காக அழுது கொண்டிருக்கும் அண்ணன் சஞ்சயன்... உன் காலடிகளைக்கட்டி வைத்து கண்ணீர் சிந்தும் ஆசைத்தங்கை சர்மிளா... உன் அம்மாவின் சோகம் வடிப்பதற்கு அப்பாற்பட்டது... சுவரெல்லாம் உன் புத்திசாலித்தனத்தை - குறும்புத்தனத்தைச் சொல்லி கண்ணீர் விட்டு அழுகின்றன.

"அவர்களின் குறி என் மகனுமல்ல. அவன் கொலையுமல்ல... விபத்தாக நடந்ததொன்றில்தான் இவன் பிரிந்திருக்கின்றான்...
அவர்களை நான் சபிக்கப் போவதில்லை. மன்னிக்கின்றேன்..." அந்த தந்தையின் இவ்வரிகள் கனத்த வைர வரிகள்.


சகோதரனே... உனது கனவுகள் புதைக்கப்படவில்லை. உன் பாசமிகு அண்ணனும் செல்லத்தங்கையும் நீ விட்டுச்சென்றவைகளை - உன் கனவுகளை ஈடேற்ற தயாராகவே உள்ளனர். சென்று வா சகோதரா... காலம் கை கொடுத்தால் மீண்டும் ஒரு தடவை கை குலுக்குவோம்... உன் ஆத்மா சாந்தியடையட்டும்.

Wednesday, December 3, 2008

இந்தியாவுக்கு தரைவழிப்பாதை

இன்று இரவு லண்டனிலிருந்து தொலைபேசி அழைப்பு... எதிர் முனையில் என் கல்லூரி நண்பன். வழமையான குல விசாரிப்புக்களுடன் ஆரம்பமாகியது எங்களின் உரையாடல்...

பல்கலைக்கழக வாழ்க்கை... விடுதியில் நாங்கள் செய்த அட்டகாசங்கள்... பல்கலைப்படிப்பு நிறைவு பெற்று வந்த போதும் அதே இளமைத்திமிருடன் கடந்த மாதம் நாங்கள் ஜெயித்த துடுப்பாட்டக்கிண்ணம்... தேவதைகள்... பல்கலைத்தம்பி தங்கைகள்... இப்படிப் பலவாறாக பல்வேறு விடயங்களைப்பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கும் போதுதான், குறி வைத்து அடிப்பார்கள் என்று சொல்வார்களே அப்படி ஒரு கேள்வி!!!

என்ன இந்தியாவுக்கும் பாதை திறக்கப் போறார்களாமே........???

மேற்கொண்டு அதே உற்சாகத்துடன் சம்பாசனை தொடர முடியாத நிலை எனக்கு. வழமை போல இப்படியான இடக்கு முடக்கு கேள்விகளுக்கு நான் வைத்திருக்கும் பதில் 'ம்... ம்...'. இதையே அவனுக்கும் பதிலாய் சொன்னேன். அவன் அத்தோடு விட்டானா? மாடு எந்தப்பக்கம் விழுந்தாலும் குறி சுடுவார்கள் என்று சொல்வார்களே. அதே ரகம் தான் இவன்... நற்செய்தி ஏதுமாயின் கூட இருந்து ஆரோகரிப்பான். தப்பாக நடந்தால் தள்ளி நின்று விமர்சிப்பான்.

நான் கேட்டுக்கொண்டிருக்க அவன் பேசிக்கொண்டேயிருந்தான். 90களுக்குப் பிறகு புகையிரதமே என்னவென்று தெரியாத மன்னாரில் ஒரு தரிப்பிடம்... இந்தியாவுக்கான தொடரூந்துப்பாதைக்கான செலவு... கட்டியமைக்க எடுக்கும் காலம்... ஏன் நேரசூசியும் தான்... நிறுத்தாமல் அவன் எல்லாத்திட்டங்களையும் எடுத்துவிட்டுக்கொண்டிருந்தான். உண்மையில் தான் பேசுகின்றானா? அல்லது எரிச்சலூட்டுகின்றானா? புரியவில்லை. திடீரென தொடர்பு துண்டிப்பு... கார்ட் முடிந்திருக்க வேண்டும்...

அப்பாடா என்று நிமிர்ந்த வேளையில் மீண்டும் தொலைபேசியின் சிணுங்கல்!!! இது யாழ்ப்பாணத்திலிருந்து... எப்போதாவது இருந்திட்டு எட்டிப்பார்க்கும் கைத்தொலைபேசி சமிக்ஞைகளின் நடுவே அந்தப் பிஞ்சு எனக்கு அழைப்பு எடுக்கத்தவறுவதேயில்லை.

"அண்ணா... சுகமாக இருக்கிறீங்களா...?"

"ம்... நீங்கள் என்ன செய்கிறீங்கள்? இரவு என்ன சப்பாடு...?"

"இந்த மாதம் 25ம் திகதி பேர்த்டே. கட்டாயம் வரணும்..." எனது சுக விசாரிப்பைக் கணக்கெடுக்காத அவசர வேண்டுகோள்.

"ம்.. வருகின்றேன்" என்னிடமிருந்து வெறுமையான பதில்.

"இரண்டு வருசமாய்ச் சொல்றீங்கள்... ஆனால், வரயில்லை. பிளீஸ் அண்ணா... இந்த முறையாவது வாங்கோ"

இந்த வருடமும் வருவதற்கு பாதை இல்லையென்று கூறினால், பதில் என்னவென்று அவள் புலமை புரிந்த எனக்குத் தெரியும். ஆனால், அதற்கிடையில் யாழ்ப்பாணத் தொலைபேசி சமிக்ஞை அந்தப்பிஞ்சிடமிருந்து என்னைப் பதிலளிக்காமல் காத்துவிட்டது.

இப்போது தொலைபேசியில் குறுஞ்செய்தி... அந்த நண்பனிடமிருந்து வந்திருந்தது. இந்தியாவுக்கு புகையிரதம் ஓடும்போது தனது காதலியை யாழிலிருந்து அழைத்து இந்தியாவில் திருமணமாம்.
பதில் அனுப்பினேன்... "வாழ்த்துக்கள் நண்பா"

எவ்வளவோ கேட்டிட்டம்... இதைக் கேட்கமாட்டமா?

Monday, December 1, 2008

வலைப்பதிவுக்குள் நான்

வணக்கம்!

நீண்டநாள் கனவொன்று நனவாகும் வேளையில் உங்களுடன் வலைப்பூவின் வழியே பேசுவதில் ரொம்ப மகிழ்ச்சி..!

என் உணர்வுகள், நான் கடந்து வந்த பாதைகள், அதில் விதைத்துவிடப்பட்ட முட்கள், என் சுற்றம், என் தாய்நாடு இவைகள் பற்றி என் உள்ளக்கிடக்கையில் குடிகொண்டிருக்கும் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள ரொம்பநாள் ஆசை. ஆனால், என் எண்ணங்கள் எல்லாம் உள்ளன உள்ளவாறு வெளியிட என்னைச்சூழ்ந்துள்ள சில இனந்தெரியாதவைகள் அனுமதிக்காது என்பதும் நான் உணர்வேன். அதை எல்லாம் மீறி நான்கு சுவருக்குள் என் மீதிக்காலத்தை கழிப்பதற்கும் நான் தயாரில்லை. அத்துடன் உயிராசை துறந்தவனுமல்ல... என்றாலும் பேசவேண்டிய சிலதுகள் பேசப்பட்டேயாக வேண்டுமல்லவா? அவை இங்கு பேசப்படும்.

எனக்கென்றொரு வலைப்பதிவு சொந்தமாக்கப்பட வேண்டுமென்ற ஆசை நீண்ட நாளாகவே என்னுள் குடிகொண்டிருந்தது. ஆனால், நான் தயாராகும் போதெல்லாம் ஏதோவொரு இடையூறு எப்படியோ வந்துவிடும். பல்கலைக்கழகத்தின் இறுதி வருட அரையாண்டுகளில் முதல் முயற்சி... கற்கவேண்டிய பாடப்பரப்பு சிறிதென்ற கனவுடன் முதல் பதிவும் எழுதினேன். ஆனால், இறுதி வருட project இன் பயமுறுத்தல்களுக்கிடையே தொடர முடியவில்லை. இறுதி வருடம் நிறைவு பெற்றபின், அடுத்த முயற்சி... ஆனால், புதுத்தொழில்!!! அங்கேயும் படிக்க நிறையவே இருக்க அடுத்த சறுக்கல்.

ஆனாலும், தமிழ்ப்பூங்கா உறுப்பினரொருவரின் வேண்டுகோளுக்கிணங்க - அவர் அறிவுறுத்தலுக்கமைய ஒரு சில ஆக்கங்களை அத்தளத்தில் பதிவிட்டுக்கின்றேன். சில வலைப்பதிவுகளில் என் எண்ணங்களும், உணர்வுகளும் பின்னூட்டங்களாயின.

இறுதியாக, கடந்த மாதத்தில் ஒரு நாள்... நன்றாக நினைவிருக்கிறது அது ஒரு சனிக்கிழமை... முதல் நாள் வெள்ளி இரவு நித்திரை மறந்து நான் எழுதிய முதல் பதிவுடன் இணையத்துக்குள் நுழைகின்றேன். நம்ப முடியவில்லை...

பதிவுலகத்திற்குள் கால் வைத்து குறுகிய காலமாயினும், நான் யாருடைய வலைப்பதிவை தினமும் ரசித்து வாசிப்பேனோ - என் முன்னோடி என்று கூடக் கூறலாம்... தினமும் பதிவிடும் அத்தளத்தில் அந்தச்சனிக்கிழமை பதிவின்றிய ஒரு வெறுமை...

அதிர்ச்சி... கவலை... ஒருவித பயம்... எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டேன்.

அந்த வேதாளம் முருங்கை மரக்கதை போல இப்போது மீண்டும் வருகின்றேன். அந்தச்சனி நடந்த சம்பவம் நிச்சயமாக எனக்குள் ஒருவித வடிகட்டல்கள் தேவைப்பட்டதை உணர்த்தியது. அந்த வடிகட்டல்களுடன் தான் உங்களிடம் வருகின்றேன்... (காலம் மாறாதவரை)வருவேன்...

தினமும் நான் புத்தகக்குறியிட்டு வாசிக்கும் வலைப்பதிவுகளில் ரகுபதிபாலஸ்ரீதரன் வாமலோசனனின் 'Loshan', சயந்தனின் சாரல், பகீயின்ஊரோடி, கானா பிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடி, தூயாவின் தூயா,நிமலின் TalkOut in Tamil என்பவை குறிப்பிட்டு சொல்லக் கூடியவை. இவை என்னுள் ஏதோவொரு பாதிப்பினை ஏற்படுத்தியவையாக, என் அறிவு சார்ந்த தேடலுக்கு தானம் வழங்குபவையாக, அல்லாதுவிடின் என் கதை பேசும் தளங்களாக இருக்கின்றன.

எனக்குள் புதியதொரு உலகத்தில் பிரசவிக்கப்பட்ட உணர்வு. தவள வைப்பதும்... நடை பழக்குவதும்... என் கை பிடித்து 'அ' எழுதுவதும்... பிழை செய்தால் (நோகாமல்) குட்டித்திருத்துவதும் நீங்கள் தான் நண்பர்களே...

You might also like