Search This Blog

Tuesday, August 25, 2009

இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் பட்டியல் & குழுமம்

நடந்து முடிந்த பதிவர் சந்திப்பில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இலங்கைத் தமிழ் பதிவர்களின் விபரங்களை பட்டியல் படுத்தியுள்ளேன்.பெறப்பட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டிருந்த சிலருடைய வலைத்தளங்களை அடைய முடியாமல் இருந்தது. சிலர் தமது வலைத்தளங்களை குறிப்பிடவில்லை.

இப்பட்டியலில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமாயின், அல்லது புதிய பதிவர்களை உள்ளடக்க வேண்டுமாயின் பின்னூட்டத்தில் தெரிவிக்கும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

பதிவர் சந்திப்பின் தீர்மானத்துக்கு அமைய கௌபாய் மது அவர்களினால் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சந்திப்பில் கலந்து கொண்டு மின்னஞ்சல் முகவரிகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கு இக்குழுமத்தில் இணைவதற்கான வேண்டுகையும் விடுக்கப்பட்டுள்ளது.

குழும இணைவு அழைப்பு கிடைக்கப் பெறாதவர்கள், இக்குழுமத்தில் இணைய http://groups.google.com/group/srilankantamilbloggers எனும் முகவரிக்குச் சென்று தன்னை இணைத்துக் கொள்ளலாம்.

இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் விரைவாக இதில் இணைந்தால் கலந்துரையாடல்கள், விவாதங்கள், உதவிகள் என்பனவற்றை எல்லோரும் பெற்றுக்கொள்ளலாம்.

Sunday, August 23, 2009

மீள் குடியேற்றம்

இதுவரை தேவைப்படாமல் இருந்த சில சான்றிதழ்களினதும் பத்திரங்களினதும் தேவை இப்போது எழுந்துள்ளது. அதன் விளைவு கடந்த வியாழக்கிழமை முழுநாளும் பல்கலைக்கழகத்தில் கழிக்க வேண்டியதாயிற்று. பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீடு திரும்பி பகல் தூக்கம் போடலாமென வேலைக்கு முழு நாள் லீவு எடுத்துப் போனேன். ஆனால், வீடு வந்து சேர மாலை நான்கு மணி.

பல்கலைக்கழகத்துக்கு நான் கடனாளி இல்லையென பத்துப்பேரிடம் கையொப்பம் வாங்கினால் தான் என் பத்திரங்கள் கிடைக்கும். இலகுவில் பிடிக்க முடியாத ஆள் எங்களின் விடுதிப் பொறுப்பாளர். ஆனால், என்னுடைய நல்ல காலம் ஒன்பதே முக்காலுக்கு முதலே முதல் ஆளாக அவரைப் பிடித்து விட்டேன். நான் மறந்து போன என் விடுதி அறை இலக்கத்துக்காக முறைத்துப் பார்த்த வண்ணம் கையொப்பமிட்டுத் தந்தார். என் விடுதி அறை இலக்கம் 231. இனியாவது நானும் என் மூன்று அறைத்தோழர்களும் மறக்காமல் இருப்போமாக...

எஞ்சிய எட்டுப் பேரிடமும் கையொப்பம் பெற கடினமிருக்கவில்லை. கடைசியாக எங்கள் டிபார்ட்மென்ட் ஹெட் இடம் வாங்க வேண்டும். சொல்லி வைத்தது போல நான் போகவும், அவர் மற்றைய கதவால் வெளியேறவும் நேரம் பத்தே முக்கால் இருக்கும்.நான் வியாழக்கிழமையை தேர்ந்தெடுக்க விசேட காரணங்கள் எதுவுமிருக்கவில்லை. ஆனால்,நாலு வருடங்கள் கம்பஸில் இருந்தும் வியாழக்கிழமைதான் போர்ட் மீற்றீங் நடப்பதென்பதை நான் மறந்து போனதுதான் ஆச்சரியம். இனியென்ன... பதினொரு மணிக்கு முன்னர் அவர் வரவேண்டும். தவறினால் பன்னிரண்டரை மணிக்குப் பின்னர்தான் என் காரியம் ஆகும்.

பதினொரு மணிவரை அவர் வாசலில் தவம் கிடந்தேன். மற்றைய பழைய மாணவர்களைப் போல என்னைக் கடந்து செல்லும் சிட்டுக்களுக்கு நான் இன்னும் இளமை என்பதைக் காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனங்கள் எடுக்க வேண்டிய தேவையிருக்கவில்லை.

பதினொரு மணிக்கு என்னை நோக்கி வந்த அலுவலக உதவியாளரின் பார்வையில் ஏளனம் இருக்கவில்லை. என்னைப் பார்த்து பரிதாபப்பட்டிருப்பான். பன்னிரண்டரை மணிவரை காத்திருக்க வேண்டுமன்றோ...

வேறு வழி தெரியவில்லை. நூறு ரூபாய்க்கு ஒரு நாள் முழுச் சாப்பாட்டுடன் இலவசமாக சில நோய்களையும் தந்த கன்ரீனுக்கு சென்றேன். பூனைகள் இப்போதும் அங்கு இருக்கின்றன... இல்லையில்லை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. முன்னெச்சரிக்கையாக ஒரு பணிஸும் ஒரு சோடாவும் குடித்தேன்... செமித்திருக்க வேண்டும்.

என்னைக் கண்ட ஜூனியர்த் தம்பி ஒருத்தன் எதற்காக இங்கே வந்தாய் எனக் கேட்க முதலே அவன் நலம் விசாரித்து காரணமும் சொல்லி விட்டேன். "அப்போ சிங்கப்பூரோ... அல்லது இலண்டனோ..." அவன் பதில் கேள்வி இப்படித்தான் இருந்தது. எல்லோரும் சொல்லாமல் ஓடி விடுகிறார்களாம். நானாவது சொல்லிப்போட்டு போக வேணுமாம். ஆனால், இப்போது எனக்கு நாடு கடக்கும் உத்தேசம் எதுவுமில்லை. ஆனால், நாடு கடந்தாலும் சொல்லிவிட்டுத்தான் போவேன் என்றுமில்லை.

எங்கள் கம்பஸ் விளையாட்டு மைதானத்தில் தடகள விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அதன் காரணத்தினால் இருப்பதற்கு ஒரு மரநிழலில் ஓரிடம் கிடைத்தது. ஜோடித்தொல்லை இருக்கவில்லை...

பன்னிரண்டு மணிக்கு திரும்பவும் வந்து டிபார்ட்மென்ட் வாசலில் கால் கடுக்க காவல் காக்க ஆரம்பித்தேன். எங்களின் டிபார்ட்மென்ட் மூன்றாம் மாடியில் இருந்தது. நான் நின்ற இடத்திலிருந்து கீழே பார்த்தால் நிலத்தில் நடப்பன நன்றாக தெரியும்.

அங்கே எலக்ரிக்கல் டிபார்ட்மென்ட் முன்றலில் இரு நாய்க்குட்டிகள் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. அப்பாதை வழியே செல்பவருக்கு அவைகளின் தொல்லை தாங்க முடியவில்லை.

பெண்ணொருத்தி அவ்வழியே சென்றாள்... இரு குட்டிகளும் அவளைத் தொடர்ந்தன...அதையறிந்த அவளின் நடையில் வேகம் தெரிந்தது. குட்டிகளும் விடவில்லை... ஒரு கட்டத்தில் கூக்குரலிட்ட வண்ணம் அவள் ஓடினாள். ஒரு குட்டி முன்னால் சென்று வழிமறிக்க, பின்னால் சென்ற குட்டி குதி உயர்ந்த அவள் செருப்பைக் கவ்வியது. அவள் கையிலிருந்த பொருளினால் அடிக்க... கொஞ்சம் விலத்தி பின்னர் முன்னிலும் வேகமாக அவை அவள் பின்னால் ஓடின...

இப்போது எதிர்த்திசையில் இன்னொருத்தி வந்தாள். தாவணியை விட்டு விட்டு டெனிம் நோக்கி வந்தன குட்டிகள். அதே சேஷ்டைகள்... அவளும் இயன்றளவு முயன்றாள்... முடியவில்லை குட்டிகள் தானாக விலகும் வரை...

நான் அந்த இரு குட்டிகளினதும் சேஷ்டைகளை என்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன். அவைகள் இரு பக்கத்திலும் தங்களுக்கான எல்லைகளை வகுத்து வைத்திருந்தன. எக்காரணம் கொண்டும் எல்லைகளை மீறியதில்லை. யாருமொருத்தர் அகப்பட்டால் எல்லைக்கோட்டின் நுனி வரை கலைத்துக் கொண்டு செல்கின்றன. திரும்பவும் அங்கிருந்து வரும் இன்னொருத்தரை எல்லைக்கோட்டின் அடி வரை கலைத்து வருகின்றன. இப்படியே மாறி மாறி ஓடும் அவைகளின் விளையாட்டைப் புரியாமல் போய்வருவோர் பட்டபாடு என்னைச் சிரிக்க வைத்தது.


நாய்களுக்கும் பெண்களைத்தான் பிடிக்குமோ...? இல்லையில்லை... வசமாக ஆண் சிங்கமொன்றும் மாட்டினான். அவன் தனது சிங்கத் தன்மையை நிரூபிக்க பலவாறு முயன்று ஈற்றில் நாய்க்குட்டிகளிடம் தோற்றுத்தான் போய்விட்டான். அவனையும் எல்லைக்கோடு வரை கொண்டு வந்துதான் விட்டன.

இப்போது குட்டிகளிடம் அகப்பட்டவள் சேலை அணிந்திருந்த ஒரு பெண்... நிச்சயமாக பல்கலைக்கழக விரிவுரையாளராகவோ அல்லது ஏதோவொரு மேலிடமாகவோ இருக்க வேண்டும். குட்டிகளுக்கு இது எங்கே தெரியப்போகின்றது...? அதே சேஷ்டைகள் தொடர்ந்தன... எல்லைக் கோட்டின் நுனி வரை தொல்லை கொடுத்த குட்டிகள் அதற்கப்பால் நகரவில்லை. பாவம்... அவள் நினைத்திருக்கவேண்டும் அது தன் திறமையென்று...

மேலிடத்துடன் முட்டியதன் விளைவாக திடீரென இரு சுத்திகரிப்பாளர்கள் வந்தனர். குழறக் குழற இரு குட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

ஒரு அலுவலகத்துக்கு இரு கதவுகள் இருப்பதற்காக மீளவும் அலுத்துக் கொண்டேன். ஒரு மணிக்கு 15 நிமிடங்கள் பிந்தி வந்த டிபார்ட்மென்ட் ஹெட்டை பின் தொடர அவர் மற்றைய கதவால் வெளியேறிவிட்டார். இன்னுமொரு 45 நிமிடங்கள்... ரசிப்பதற்கு நாய்க்குட்டிகளும் இருக்கவில்லை.

பத்து மணிக்கு தொடங்கிய காத்திருப்பு இரண்டு மணிக்கு முடிவுற்றது. பத்தாவது கையெழுத்தும் பெற்றாகிவிட்டது.

பசி வயிற்றை கிள்ள... ஒரு படியாக எல்லாம் முடிந்து விட்டது என பெரு மூச்சு விட்டவாறு கன்ரீனை நோக்கி நடையைக் கட்டினேன். எலட்ரிக்கல் டிபார்ட்மென்ட் இற்கு முன்னால் கால்களுக்குள் ஏதோ தட்டுப்பட்டன. ஆச்சரியம் எனக்கு... அதே நாய்க்குட்டிகள்... எல்லைக்கோடு வரை வந்தவை நான் அதனைத் தாண்டியதும் மறுபுறமாக இன்னொருத்தரை தொடர்ந்தன. திரும்பிப் பார்த்தேன். இப்போது தாய் நாய் வந்து நின்றது. நாக்கைத் தொங்கவிட்டவாறு தன் குட்டிகளை காவல் காத்தது. அதில் பிள்ளைகளை காவிக் கொண்டு வந்து மீள் குடியேற்றிய களைப்பு இளைப்பாக வெளித்தெரிந்தது.

மத்தியானம் சாப்பிட வந்த அந்த மேலிடப் பெண் பின்னேரம் ரீ குடிக்கவும் இந்தப் பாதையால் தான் வரவேணும்... என் மனம் ஏனோ விரும்பியது...!!!

பதிவர் சந்திப்பு - சில புகைப்படங்கள்

எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில...


இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஒலி வடிவில் முழுதும்

Saturday, August 22, 2009

இலங்கைப் பதிவர் சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு

ஆகஸ்ட் 23, 2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 (இலங்கை நேரம்) மணி தொடக்கம் இலங்கைப்பதிவர் சந்திப்பு நேரடி ஒளி, ஒலிபரப்புச் செய்யப்படும்.

நன்றி மது.
Friday, August 21, 2009

சந்திக்கின்றோம் நண்பர்களே...

நாளை காலை 9.00 (இலங்கை நேரம்) மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் பதிவர் சந்திப்பில் இலங்கைப் பதிவர்களாகிய நாம் இணைகின்றோம்.

Blogger இன் பத்தாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம் சில நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் முதன் முதலாக நடைபெறும் இப்பதிவர் சந்திப்பில் அனைத்து உள்ளங்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். பதிவர்கள் மட்டுமன்றி, பதிவுலக வாசகர்கள், பதிவிட ஆர்வமுள்ள எதிர்கால பதிவர்கள்,பின்னூட்ட ஆர்வலர்கள் என்று அனைவரையும் அழைக்கிறோம்.


இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.


View Larger Map


குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும்.


நிகழ்ச்சி நிரல்
 • அறிமுகவுரை
 • பதிவர்கள் அறிமுகம்
 • வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
 • திரட்டிகள்
 • சிறப்பு அதிதி உரை
 • இடைவேளை
 • வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
 • வலைப்பதிவும் சட்டமும்
 • பதிவுலக அனுபவங்கள்
 • எதிர்காலத் திட்டங்கள்
 • கலந்துரையாடல்
 • நன்றியுரை

இந்நிகழ்ச்சி நிரல் இதுவரை தாமாக முன்வந்த பதிவுலகப் பெருந்தகைகளை வைத்து நாம் தயாரித்த முன்னோடி நிகழ்ச்சி நிரல். யாராவது மேலும் முன்வந்து மேலும் பயனுள்ள விடயங்கள் பதிவுலகத்துக்கு/பதிவர்களுக்கு பயனுள்ள விடயங்கள் தொடர்பாக உரையாற்றவோ வித்தியாசமான நிகழ்ச்சி படைக்கவோ விரும்பின் தயங்காமல் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

Blogger இன் பத்தாவது பிறந்த நாளும் எமது முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்புடன் இணைந்தே வருவதால் ஒரு சிறப்பு ஏற்பாடும் செய்யலாம் என நினைத்துள்ளோம்.

ஆரம்பத்தில் நான்கு பேராக பெயரளவில் ஆரம்பித்த இந்த ஏற்பாட்டுக் குழு இப்போது பலத்துடன் அதிகரித்துள்ளது.

இதுவரை எம்முடன் தொடர்புகொண்டு வருகையை உறுதி செய்யாதவர்கள் தயவு செய்து உடனடியாக தொடர்புகொள்ளவும்.

லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

பல்வேறு ஊடகங்களையும் சேர்ந்த நண்பர்கள் தாமாக முன்வந்து இந்த சந்திப்பு பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறீர்கள். நன்றிகள்.

இதுபற்றிய தகவல்களை வெளியிட்டு பங்குபற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க ஆதரவை அளித்த அனைத்துப் பதிவர்கள் மற்றும் பல்வேறு திரட்டிகளுக்கும் நன்றிகள்.

ஒற்றுமையே பலம். அனைவரும் வாரீர்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

Wednesday, August 19, 2009

பொக்கிசம்


அன்புள்ள லெனின் அறிவது,


கண்களிரண்டும் கண்ணீர் சிந்த, இதயம் அழுது வடிக்க உங்கள் காதலி நதீரா எழுதிக் கொள்வது,

நீங்கள் செத்துப் போய் விட்டீர்களாம்..! நேற்றுத்தான் உங்கள் அன்புமகன் சொன்னான். என்றைக்கும் பொருள் கூறும் திருக்குறளின் ஈரடி போன்று நாம் ஈருடலும் ஓருயிருமாகிவிட்ட பின்னர் உங்களுக்கு ஏது சாவு? அலையெழுந்து தாலாட்டும் கடலின் கரை போல உங்கள் நினைவுகள் எப்போதும் என்னைத் தாலாட்டுகின்றன.


என்னைத் தேடி நீங்கள் பட்ட கஸ்டங்களையும், சந்தித்த இடர்களையும் உங்கள் கடிதங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். என் தந்தைக்கு கொடுத்த வாக்கின்படி மாதம் ஒருமுறை மட்டும் கடிதம் எழுதிய உங்கள் நேர்மையை என்னவென்று உரைப்பது? மதமா... மனிதமா எனும் போட்டியில் மனிதம் ஜெயித்த போது நாம் அடைந்த பரவசத்துக்கு ஈடேதும் உண்டோ? உங்கள் தந்தையும் என் தந்தையும் கட்டியணைத்த போது, இறக்கைகட்டி வானில் ஜோடிப் புறாக்களாக பறந்தோம். ஆனால், எல்லாம் போலியென்று உணர்ந்த போது - மனிதம் மரித்த போது இந்த உலகை விட்டுப் போய்விடத் துடித்தேன்.

ஆனாலும், என்றைக்கோ ஓர் நாள் உங்கள் அன்பு ஸ்பரிசம் கிடைக்குமென - அந்தக் கடற்கரையில் காத்துக்கிடக்கும் ஒற்றை ஓடமெனத் தவமிருந்தேன். நினைத்தது போல் எல்லாம் நடந்திடுமா...? கடிதங்களினூடு உறவாடி நாங்கள்வரைந்த காதல் காவியம் இப்படி ஆகுமென்று யார் கண்டது. குரங்கின் கை பூமாலையாக சிக்கிச் சின்னாபின்னமாகி விட்டது.

எல்லோரும் வலிந்து காட்ட விளைகின்ற எந்தவொரு ஹிரோயிசமுமின்றி - ஓர் மிருதுவாளனாக, கண்டதும் உங்கள் மேல் பரிவு கொள்கின்ற ஓர் கதாநாயகனாகத்தானே எனக்கு அறிமுகமானீர்கள். பிறகு எங்கிருந்து வந்தது உங்களுக்குள் வன்முறை?

நான் சொல்லாமல் மலேசியா வந்த பின்னர், நீங்கள் என்னைத் தேடி அலைந்த போது பதில் சொல்லாததற்காக என் வீட்டு வேலைக்காரனை அடித்தீர்களாமே...! எங்கள் காதல் காவியத்தில் எந்தவொரு மோதலும் இல்லை எனும் குறையைப் போக்க விளைந்திருக்கிறீர்கள் போல... ஆனால், கண்ணிரண்டும் கண்ணீர் சொரிய உங்கள் கடிதங்களை வாசித்த நான் சிரித்ததும் இந்த இடத்தில் தான்.

எப்படி அவனுக்கு அடித்திருப்பீர்கள்..? வானத்தில் பறந்து பறந்து... மின்னல் வேகத்தில் பாய்ந்து பதுங்கி... கைவிரல்களை நற நறவென முறுக்கி... அல்லாதுவிடின், அந்தக் கடற்கரை மணலில் உருண்டு புரண்டு உங்கள் மாறாத குழந்தைத்தனத்தை நிரூபித்தீர்களோ...? காதல் காவியத்தில் சண்டைக்காட்சியும் நகைச்சுவைக்காட்சியும் சேர்ந்து ஒன்றாகி வருவதை சகிக்க முடியவில்லை லெனின்...

இறுதி வரை அப்பா பிள்ளையாக இருந்து, அப்பாவின் ஆசைகளை நிறைவேற்றி ஒரு அன்பு மகனுக்கும் தந்தையாகி இருக்கின்றீர்கள். இந்தளவும் போதும் எனது மகிழ்ச்சிக்கு.

உங்களை முதன் முதலில் சந்தித்த வைத்தியசாலை... நீங்கள் பரிசளித்த இலக்கியப் புத்தகங்கள்... தெய்வமெனத் தொழுத தபால்காரன்... என் முக விம்பம் தெறித்த நீர்நிலைகள்... ஒற்றை ஓடம் தனித்திருந்த அந்தக் கடற்கரை... உங்களுடன் என் காதல் நினைவுகளையும் சுமந்து திரிந்த துவிச்சக்கர வண்டி... எல்லாவற்றையும் இன்று இரை மீட்டுப் பார்க்கின்றேன். ஈற்றில் சோகம்தானே எஞ்சுகின்றது.

என் வீடு தேடி வரும் போது உங்கள் வாகனத்தை காடையர்கள் இடை மறித்தார்கள் நினைவிருக்கிறதா? அதற்குள் இருந்த இளம் ஹீரோ வெகுண்டெழுந்து சண்டை பிடித்து எல்லாரையும் காப்பாற்றுவார் என சில்லறைத்தனமாய் நினைக்க... சாதுவாக வந்து சேர்ந்தீர்களே. உங்கள் புத்திசாலித்தனம் கண்டு வியக்கின்றேன் லெனின்.


ஏனோ தெரியவில்லை... உன் மகன் கொண்டு வந்து தந்த கடிதத்தை பிரித்து வாசிக்க முற்பட்ட போது யாரோ விட்ட கொட்டாவியும், உடைந்து சிதறிய போத்தல்களின் சத்தங்களும் தான் பிண்ணனியில் கேட்டன. ஆனாலும், பொக்கிசமாக நீங்கள் பொத்தி வைத்திருக்கும் என் நினைவுகளும், என்னிடம் விட்டுச் சென்று விட்ட உங்கள் நினைவுகளும் ஏழேழு ஜென்மம் கடந்தும் எங்கள் காதல்காவியத்தை வாழ வைத்துக்கொண்டு இருக்கும்.

அன்பு முத்தங்களுடன் அன்புக்காதலி,
நதீரா


பிற்குறிப்பு: இக்கடிதத்தை இறுதிவரை பொறுமையுடன் வாசித்து முடித்தவர்கள் பொக்கிசம் படம் பார்ப்பதற்கு தகுதியானவர்கள் என யாரும் சொன்னால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

Sunday, August 16, 2009

வேற்று மொழி வலைத்தளங்களைப் பார்வையிட Google Reader

பதிவுலகத்திலுள்ள அநேகர் இப்போது Google Reader இன் பயனராகவும் இருக்கின்றனர். அண்மையில் Google Reader தனது பயனர்களுக்கு சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அது தொடர்பான தகவல்களை நண்பரொருத்தர் கூகிள் ரீடர் - புது விஷயம்ஸ் எனும் தலைப்பிலான இடுகையில் தெளிவாக விளக்கியிருந்தார்.

இன்னும் சில தகவல்களாக, Google Reader புதிதாக அறிமுகம் செய்த Send to எனும் வசதியினூடாக வேற்று மொழித் தளங்களை ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்து பார்வையிடலாம்.

முதலில், Send to வசதியினை Google Reader இன் Settings பக்கத்திற்கு செல்வதன் மூலம் செயற்படுத்திக் கொள்ளலாம்

மொழிமாற்றத்தினை செயற்படுத்த
Name: Autotranslate
URL: http://translate.google.com/translate?u=${url}
Icon URL: http://translate.google.com/favicon.ico

பின்னர், குறிப்பிட்ட பக்கத்தை வாசிக்கும் போது பின்வருமாறு கிளிக் செய்க: Send To -> Autotranslate:

இதனூடாக, Google translate இனால் மொழிமாற்றம் செய்யக்கூடிய அனைத்து மொழியிலான இணையப்பக்கங்களையும் இலகுவாக ஆங்கில மொழியில் பார்வையிட முடியும்.


அத்துடன் Google Reader இன் துணையுடன் இணையப்பக்கங்களை PDF கோப்பாக சேமிக்கவும் முடியும். அதனைச் செயற்படுத்த பின்வருமாறு மாற்றங்களை மேற்கொள்ளவும்.
Name: Save as PDF
URL: http://savepageaspdf.pdfonline.com/pdfonline/pdfonline.asp?cURL=${url}
Icon URL: http://www.adobe.com/lib/com.adobe/template/icon/pdf.gif

பின்னர், குறிப்பிட்ட பக்கத்தை PDF கோப்பாக மாற்ற பின்வருமாறு கிளிக் செய்க: Send To -> Save as PDF:

Friday, August 14, 2009

ஆகஸ்ட் 23 - வரலாறும் எங்களுடன் கை குலுக்கின்றது

இலங்கைப் பதிவர்களுக்கு நற்செய்தியாக திரட்டிகள், வலைத்தளங்கள் தொட்டு உள்ளூர் ஊடகங்கள் வரையில் பதிவர் சந்திப்பு தொடர்பாகவே பேசுகின்றன. எதிர்வரும் 23ம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது தெரிந்ததே.

இதிலுள்ள விசேட அம்சம் என்னவென்றால்.....??? அநேக பதிவர்களின் நலன் கருதி விடுமுறை நாளாக இருத்தல் நன்று என்பதற்கேற்பவே - எதேச்சையாக நாங்கள் தேர்ந்தெடுத்தது எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை. ஆனால், வலையுலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டும் போது அந்நாள் முக்கியமிக்க நாளொன்றாகும். ஆம்... இற்றைக்கு 10 ஆண்டுகளின் முன்னர் இதே நாளில் - ஆகஸ்ட் 23, 1999 முதன் முதலாக Blogger தொடங்கப்பட்டது.

Blogger பத்தாவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கும் நாளில் இலங்கையில் முதன் முதலாக பதிவர் சந்திப்பை நடாத்துவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ்வேளையில், Blogger தொடர்பான சில தகவல்களையும் இங்கு பகிர்வதில் மகிழ்ச்சியே...


★ ஆகஸ்ட் 23, 1999 அன்று முதன் முதலாக Pyra Labs எனும் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.

★ பெப்ரவரி 2003 இல் கூகிள் நிறுவனத்தினால் வாங்கப்பட்டது.

★ 2004 இல் கூகிளுக்குச் சொந்தமாக்கப்பட்ட Picasa உடன் Blogger ஆனது இணைந்து படங்களை தரவேற்றும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

★ மே 2007 இல் Blogger ஆனது கூகிளின் வழங்கிகளுக்கு (Server) முழுமையாக மாற்றப்பட்டது.அத்துடன் இந்தப் பத்தாண்டு கால இடைவெளியில் Blogger எட்டிய சில மைல்கற்களும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
★ ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடங்களும் 270,000 சொற்கள் Blogger இல் எழுதப்படுகின்றன.

★ ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கானோர் Blogger இன் உதவியுடன் பதிவு இடுகின்றனர்.

★ மூன்றில் இரண்டு பங்கு Blogger traffic அமெரிக்க நாட்டிலிருந்து வருகின்றது. இரண்டாமிடத்தில் பிரேசிலும், அதைத் தொடர்ந்து முறையே துருக்கி, ஸ்பெயின், கனடா, ஐக்கிய இராய்ச்சியம் ஆகிய நாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

Blogger இல் பேசப்பட்ட மிகவும் பிரபலமான விளையாட்டு என்னவென்று தெரியுமா? - சரியான பதில் சொல்பவர்களில் அதிர்ஸ்டசாலிக்கு பதிவர் சந்திப்பில் சிறப்புப்பரிசு காத்திருக்கின்றது.
(உபயம்: லோஷன் :P)

Blogger இன் பத்தாவது ஆண்டு நிறைவு நாளில், ஒரு நல்லதொரு நிகழ்வினை இலங்கையில் படைப்போம் என்ற நம்பிக்கையை ஊட்டி நிற்கின்ற அனைவருக்கும் நன்றிகள்.

Monday, August 10, 2009

ஒன்றுகூடும் இலங்கைப் பதிவர்கள்

இதுவரை காலமும் பலமுறை முயன்றும் இயலாது போன - சில சமயங்களில் கைக் கெட்டியும் வாய்க்கெட்டாது போன பதிவர் சந்திப்பு இலங்கையில் நடைபெற உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :
இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.


பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌...

வலைப்பதிவர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.

லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.


பிற்குறிப்பு: மின்னஞ்சலினூடாக பலரை தொடர்பு கொண்ட போதிலும் சிலரின் பதில்களுக்காக இன்னமும் காத்திருக்கின்றோம்.

இது தொடர்பான தகவல்கள் எட்டாதவர்கள் தயக்கமின்றி தொடர்பு கொள்ளுமாறும் தங்களின் வருகையினை உறுதிப்படுத்துமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபனைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

அனைவரும் தனிப்பட்ட அழைப்பாக கருதி பங்கெடுப்பீர்களென நம்புகின்றோம்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Saturday, August 8, 2009

படம் காட்டும் பதிவுலகம் - 01

முற்குறிப்பு: பதிவெழுத வெளிக்கிட்டவன் எல்லாம் படம் காட்டத்தொடங்கிட்டாங்களாம். இன்றைக்கு யாரோ முணுமுணுத்தது காதுக்குள் விழுந்தது. என் பங்குக்கு நானும் படம் காட்ட முயசித்தேன். ஆனால், கிடைத்தது அசைவம் தான். என்ன செய்ய...? நல்லூர் திருவிழா முடியட்டும் அசைவம் சாப்பிடுவோம். சைவமென்று சொல்லி அசைவம் கொடுத்து, வாந்தி எடுக்க வைத்தவர்களும் இருக்கிறார்கள் கவனம்....

இதற்குப் பெயர் தான் மனிதாபிமான மீட்டெடுப்புஇறுதியில் நாயைக் கட்டி வைக்கும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை.

You might also like