Search This Blog

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, May 8, 2010

இராவணா - வரலாற்றுத் திரிபு


மணிரத்னம்... சினிமா உலகில் வியந்து நோக்கப்படும் இயக்குனர்களில் ஒருத்தர். காதல், தீவிரவாதத்தின் தாண்டவம் போன்றவற்றை தனது திரைப்படங்களினூடு மக்களின் மனங்களில் பதித்தவர். எப்போதும் இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறுவதில்லை.

இவரின் இயக்கத்தில் அடுத்து வெளிவரப்போகும் இராவணா படத்தின் பாடல்கள்தான் இப்போது எங்கும் ஆக்கிரமித்து நிற்கின்றன. இப்படத்தில் விக்ரத்துடன் ஜோடி சேர்கின்றார் ஜஸ்வர்யா ராய். வைரமுத்துவின் வைர வரிகள், இரகுமானின் தெவிட்டாத இசை... இரண்டும் இணைந்து காதில் தேன் வார்க்கின்றன. இரகுமானை இசையுலகத்துக்கு தனது ரோஜா படத்தின் மூலம் அறிமுகம் செய்தவரும் மணிரத்னமே.

வெளிவந்த பாடல்களில் “காட்டுச் சிறுக்கி... காட்டுச் சிறுக்கி...”, “உசிரே போகுதே... உசிரே போகுதே... உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே” ஆகிய படல்கள் கேட்டதும் சிக்கெனப் பிடித்துக் கொண்டன. சங்கர் மகாதேவனுடன் இணைந்து அனுராதா பாடும் காட்டுச் சிறுக்கி என்று ஆரம்பிக்கும் பாடலில் வரும் வரிகளில், "பாறாங்கல்லை சுமந்து வழி மறந்து ஒரு நத்தைக் குட்டி நகருதடி" தனிமையின் கனதியினை வடித்தெடுக்கின்றது வைரமுத்துவின் பேனா... கூடவே இசையும். “உசிரே போகுதே... உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே” எனும் பாடல் தினமும் காலை வேளையில் என் தேசிய கீதமானது. படத்துக்காகக் காத்திருக்கின்றேன்!!!

தளபதி படத்தின் மூலம் மகாபாரதக்கதையையும், ரோஜா படத்தின் மூலம் நள-தமயந்தி கதையையும் நினைவூட்டிய மணிரத்னம் இப்படத்தின் மூலம் இராமாயணத்தைப்பற்றி பேச விரும்புகின்றார் என ஊகிப்பது இலகு.

ஆனால், இராமாயணத்தில் அரக்கனாகவும், அசுரனாகவும், பெண் பித்துப் பிடித்தவனாகவும் சித்திரிக்கப்பட்ட தமிழ் மன்னனான இராவணன் உண்மையில் ஒரு கொடுங்கோலனா என்ற வினாவை இங்கு எழுப்ப முனைகின்றேன்.

வரலாற்றின் திரிபுகளால் - ஆரிய ஆதிக்கத்தின் விளைவால் இராமன் எனும் கதாபாத்திரத்துக்கு எதிர் மறையாக உருவகிக்கப்பட்டவன் தான் இராவணன். கம்பர் சொல்கின்ற வலிதற்ற - நடைமுறையில் ஓட்டைகள் மிகுந்த - கவித்துவ மயக்கத்தில் அடங்கிப்போன காரணங்களை எடுத்து அலசி ஆராய முற்படுங்கள். இராவணன் கொடுங்கோலனாக அன்றி, சிவபக்தனாக தோன்றுவான். இராமனைக் கடவுளாக்க கம்பன் கையாண்ட உத்தி இராவணனை அசுரனாக்கியது.

சூரியன் வானொலியின் நேற்றைய காற்று நிகழ்ச்சியில் இவ்விடயம் தொடர்பாக அன்றொருநாள் வரலாறுகள் அலசி ஆராயப்பட்டது ஞாபகத்துக்கு வருகின்றது. அப்போது சூரியனில் பணியாற்றிய கிருஷ்ணாவும் பிரதீப்பும் இந்நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினார்கள். ஆனால், அந்நிகழ்ச்சி தொடர்பாக எழுத்து வடிவங்களில் எதுவுமே என் தேடலுக்குள் அகப்படவில்லை.

மணிரத்னத்தின் இராவணனுக்காக காத்திருக்கின்றேன்... வரலாற்றுத்தவறுகள் திருத்தப்படும் என்ற நம்பிக்கையுடன்...!!!

Thursday, May 6, 2010

தமன்னா - பிடிச்சிருக்கு


நேற்று வரைக்கும் அவிச்ச இறால் நிறத்தழகி என்றிருந்த தமன்னாவை இன்று பிடித்திருக்கின்றது. அண்மைக்காலத்தில் எல்லோர் மனதையும் தீண்டிய விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸியையும் விஞ்சி நிற்கின்றாள் பையாவின் சாரு!!! இளசுகள் பலவற்றின் தூக்கக் கலைதலுக்குக் காரணமாய் நடை, நளினம், அசைவு என்று எல்லாவிதத்திலும் நிறைந்திருக்கின்றாள்...

பையா படத்தைப்பற்றி ஆஹா ஓஹோ என்று புளுகுவதற்கு அதில் எதுவுமில்லை. படத்தில் லொஜிக் தேடி பிழைபிடிப்பவர்களுக்கு தாராளமாக அது நிறைந்துள்ள ஒரு படம். கண்டதும் காதல், காதலுக்காய் அலைதல், வழமையான தமிழ்ச்சினிமா தடாலடிச் சண்டைகள், இறுதியில் இணைதல்... இதுதான் பையா படமென்றால்... இல்லை! அதற்கும் மேலாக படம் முழுவதும் ஓடித் திரியும் ஒரு காரின் பயணம்... அந்தக்காரின் பயணத்தினூடு இயக்குனர் லிங்குசாமி பேசுகின்ற காதலும், அதன் வலிகளும் தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றது. கூடவே பாடல்களும்...!!!

நா.முத்துக்குமார் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி தந்த பையா பாடல்கள் இப்போது போலவே எப்போதும் காதல்க்கீதம் இசைக்கத்தான் போகின்றன.






கார்த்தி... இரசிக்க வைக்கின்றார். இடைக்கிடை அண்ணன் சூர்யாவையும் நினைவுபடுத்த மறக்கவில்லை.

அது சரி...! எப்போதோ பார்த்த பையா பற்றி இப்போது என்ன பேச்சு என்றுதானே கேட்கின்றீர்கள். நண்பன் ஒருத்தன் சொன்னான் - தமன்னாவுக்காக சுறா பார்க்கலாமாம். பையாவில் வந்த தமன்னா பிடித்திருக்கின்றது என்பதற்காக சுறா பார்க்கப் போவேன் என்பது அந்த விஜய் பக்தனின் எதிர்பார்ப்பு... கூடவே, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல சிந்தனையும் தான். ஆனால், சொந்தச்செலவில் சூனியம் வைக்கும் எண்ணம் எனக்கில்லை!!!

Sunday, April 25, 2010

அங்காடித்தெரு


வசந்தபாலன், பிளீஸ்... இனியும் இப்படியொரு படம் வேண்டாமே...!!!

வயிற்றுப் பிழைப்புக்காக கால்களில் சில்லுப் பூட்டிய மாந்தர்கள், முதலாளித்துவத்தின் கொடுமை, வறுமையின் பிரதிபலிப்பு, அதனூடு சேர்ந்து உண்மையான - போலியான காதல்கள் என அங்காடித்தெரு சொல்ல வந்த யதார்த்தங்கள் அத்தனையும் உண்மைதான்... பேசப்படவேண்டியவைதான்.

அதற்காக படம் முழுவதும் செத்தவீடா...? சாவு... சாவு... ஓடிக்கொண்டிருக்கும் படத்தில் அரை மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஓருயிர் கொடூரமாக விழுகின்றது. வேண்டாம் சார்... தியேட்டரில் இருக்கின்றோமா காசு கொடுத்து செத்த வீட்டுக்கு வந்தோமா என்ற உணர்வு எழுகின்றது. பரிதாபங்களையும், அனுதாபங்களையும் தான் சேகரிக்க முடிகின்றது.

ஆனாலும், கனாக்காணும் காலங்கள் புகழ் பாண்டியின் அந்தக் குசும்பு பிடித்திருக்கின்றது. காதல்க்கவிதை எழுதத் தெரியாமல் ஒருத்தன் படும்பாட்டை நான் பட்டபாடாய் ரசிக்க முடிகின்றது. ஒன்பதாம் வகுப்புத் தேவாரத்தின் அடிவரியில் தன் காதலியின் பெயரை எழுதி காதல் கவிதையாய் ஒப்புவிக்கும் வல்லமையை எனக்கும் தருவாயாக...!!!

Sunday, April 4, 2010

தடித்த எழுத்துக்களில் இந்நாள்


எதிர்பார்க்காது தற்செயலாக நடக்கின்ற சில சம்பவங்கள் வாழ்க்கையில் பாரிய அத்தியாயத்தை தொடக்கிவிட்டுச் சென்று விடக்கூடியன. நேற்றுவரை இதெல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்று நம்பி இருந்த என் மனதை என்னவென்று அழைப்பது? பைத்தியக்காரன் என்று என்னை நானே திட்டிக் கொள்வதைத் தவிர...

நாட்காட்டியிலும் சரி, என் தினக்குறிப்பேட்டிலும் சரி இன்றைய நாளை தடித்த எழுத்துக்களினால் குறித்து வைத்துவிட்டு நாளைய நாளுக்குள் நுழைகின்றேன்.

நேரம்: காலை XX : XX
திகதி: 04 - 04 - 2010

என் டயரியிலிருந்து...

Monday, January 18, 2010

அட... அந்தக் கண்கள் கொல்லுதே...!!!



மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் வருகின்ற கதைகளையும் கறைகளையும் கடந்து மனதுக்கு இதமாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது இப்பாடல். "களவாணியே... களவாணியே..." நாதஸ்வரக் குரல் - இன்னிசைப் பாடகி ஸ்ரீமதுமிதாவினால் பாடப்பட்ட இப்பாடலின் ரசனையில் மயங்கி... பாடலுக்காக படம் பார்த்து... காதல் மயக்கத்தில் உயிரை வாட்டியெடுக்கும் அந்த ஒரு சோடிக்கண்களின் பார்வையில் சிக்குண்டு போனது உணர்வுகள்.

படம் முழுவதும் கிராமப் பெண்ணாக வந்து படத்துக்கு உயிர் கொடுக்கும் கதாநாயகியின் கண்ணசைவும், அவள் கூந்தல் சூடியுள்ள மல்லிகை மாலையும் இளமைப்பராய நினைவுகளை மீட்டிவிட்டுச் செல்வதில் ஆச்சரியமில்லை.

அவள் திரும்பிப் பார்ப்பாள்... அதுவே காதலுக்கான சமிக்ஞை என இப்போது தமிழ்ச் சினிமா கண்டுபிடித்த கண்டுபிடிப்பெல்லாம் எங்களுக்கு அப்போதே அத்துப்படி. கிராமத்து வீதிச் சந்திகளும், அவள் வீட்டு ஒழுங்கையும் பேசக் கற்றுக் கொண்டால் அந்தக் கடைக்கண் பார்வையினையும், காத்திருப்புக்களையும் காவியங்களாக வடிக்கும்.



விஞ்ஞானம் கலக்காத - இரசாயனம் தடவாத - பார்த்ததும் நிலைகுலைத்து காதல் விஷம் பருக்கும் கண்களின் வார்த்தைகள் நகர வாழ்வினில் குதிரைக் கொம்பாகத் தான் கிட்டுகின்றன. தென்றல் சுமந்து வரும் கிராமத்து மண் வாசமும் சேரும் போது அந்தப் பார்வைக்கு உயிரையே எழுதிக் கொடுக்கலாம்.

காவியம் பகிரத் துடிக்கின்ற உதடு... இருவிழிப் பார்வையில் தெறிக்கும் மையல்... பத்தாம் ஆண்டு பாடப்புத்தகத்துக்குள் முகம் மறைத்து ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்... பரந்து விரிந்த நீலக்கடலினை தாங்கி நிற்கும் வெண்மணற்பரப்புக்கள்... அவள் கறுத்தப் பொட்டுப் பறித்து, பாடக்கொப்பிக்கு திலகமிட்டு அழகு பார்த்த குறும்புத்தனம்... நினைவலைகளில் தவழ விடுகின்றது இப்பாடல்.


Tuesday, December 15, 2009

வேட்டைக்காரன் புறக்கணிப்பு - நண்பனுக்கு கடிதம்



நண்பா,

பல வேளைகளில் சொல்ல வேண்டுமென்று நினைத்து தயங்கி நின்றேன். இப்போது சொல்கின்றேன்...

"வேட்டைக்காரன் பகிஷ்கரிப்பை வலிதாக முன்னெடுக்கவும்" எனத் தலைப்பிட்டு - தமிழகப் பிரச்சாரப் பீரங்கிகள் றேஞ்சிலே என்னை நினைத்து நீ அனுப்பிய மின்னஞ்சல் எரிச்சலைத்தான் எனக்கு ஊட்டியது.

நடிகர் விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை ஈழத்தமிழர்கள் புறக்கணிக்க அளிக்கப்பட்ட உமக்கு வலிதான காரணங்கள் இரண்டு... முதலாவது, விஜய் இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிரஸ்காரர்களை சந்தித்து அவர் அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடியது. இரண்டாவது, இலங்கை இராணுவத்துக்கு இசையமைத்த இராஜ் வேட்டைக்காரன் படத்தில் விஜய் அன்ரனி உடன் இணைந்து இசையமைப்பது.

நண்பா, விஜய் மட்டுமல்ல... இந்தியாவின் எல்லா அரசியல்வாதிகளும் அவர்களின் அரசியல் வாழ்வு கருதி அடிக்கின்ற பல்டிகளுக்காக இனியும் நாங்கள் வாய் பார்த்துக் காத்திருக்கப் போகின்றோமா...? நேற்று காங்கிரஸ்காரர்களை சந்தித்த விஜய் நாளை சீமானைக் கட்டிப்பிடித்து "போஸ்" கொடுப்பதால் மட்டும் - அன்று அஜித், அர்ஜூன் அடித்த கரணம் போல - வேட்டைக்காரன் ஈழத்தமிழர்களுக்கான படமாகிவிடுமா..?

பருத்தித்துறை வீதியில் பயணிக்கும் போது கொடிகாமம் சந்தியைக் கடந்த பின் மனதிலே ஒரு வித அமைதி குடி கொள்ள - ஒரு முறை அவர்களுக்காக நான் என்றைக்கும் வணங்கிச் செல்கின்றேன். அந்த உணர்வில் - தனது இராணுவத்துக்காக தலை வணங்குகின்ற இராஜின் உணர்வில் எப்படி எங்களால் குற்றம் காண முடியும்...?

இலங்கையின் ஒவ்வொரு சிங்களக் குடிமகனும் தன் நாட்டுப்படைகளுக்கு தலை வணங்குவதை மட்டும் காரணம் காட்டி கொழும்பிலுள்ள என்னால் அவர்களைப் புறக்கணிக்க முடியாது. இதற்கு அவர்களின் கால் நக்கியாய் என்னைக் காரணப்படுத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. இராஜ் இனைப் புறக்கணிக்க முடிவு செய்தால் வேட்டைக்காரனை மட்டுமல்ல - கொமர்ஷியல் வங்கியில் ATM மூலம் பணம் கூட பெற முடியாதே...

எங்கள் உறவுகளிடம் வேட்டைக்காரனைப் பற்றிக் கேட்டுப்பார்த்தால் "தெரியாது" என்றுதான் பதில் தருவார்கள். தன் மகன் எங்கே..? அவன் எப்போது வருவான்..? என்பதை விட உன்னையும் என்னையும் போல வேட்டைக்காரனுக்காக அலட்டிக் கொள்ள அவர்களுக்கு நேரம் இருக்காது. அப்படித்தான், அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் சொல்ல மாட்டார்கள்... ஏனெனில், எங்கள் பார்வையில் அது கலாச்சார சீரழிவாகிவிடுமே...

நீ குறிப்பிட்ட ஈழத்தமிழர் புறக்கணிப்பு தலையங்கத்துடன் மட்டும் தங்கி விட, படத்துக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றித்தானே அறிக்கையின் உள்ளடக்கம் அதிகமாக பேசுகின்றது. என் நண்பன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது... இது இதேதான்...
"நாங்கள் என்னவும் செய்வம். அதைப்பற்றி மற்றவன் மூச்சு விடக்கூடாது. ஆனா மற்றவன் மூச்சு விடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம் - புலம்பெயர் தமிழர்"

நான் விஜய் என்னும் நடிகனின் தீவிர ரசிகனும் அல்ல... அவன் படங்களை முந்திக் கொண்டு பார்க்கத் துடிப்பவனும் அல்ல. ஆனால், முதல் நாள் காட்சியில் களேபரம் நடக்குமே... எப்படியென்றால், கடந்த நவம்பர் 27 - புனிதமான நன்னாளில் சுவீஸில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் செய்த கோஷ்டி மோதல் போல... சில காட்சிகளை வேண்டுமானால் உனக்கும் அனுப்பி விடுகிறேன்.

ஒன்று சொல்ல மறந்திட்டேன்... நேற்றும் உனக்காக விசாரித்துப் பார்த்தேன். ஜனவரி வரைக்கும் சிறிலங்கா எயர்லைன்ஸ் இல் இலங்கைக்கான ரிக்கட்டுக்கள் இல்லையாம்.

சந்திப்போம்.

Sunday, December 13, 2009

முத்துக்கள் மூன்று - 02

காதலைப் பாடாத கவிஞன் இல்லை என்பது போல காமத்தைத் தொட்டுக் கவிபுனையாக் கவிஞனும் இல்லையெனலாம்... காமத்தை காதலினூடு குழைத்து தருகின்ற பாடல் இது. காமத்தை பச்சையான ஆபாசங்களாக முன்வைக்காது இரட்டை அர்த்தத்துக்குள் நுழைந்து காதுக்கினிய கானம் தருகின்றான் இந்தக் கவிஞன்.

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற...

இப்பாடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்ததாகவும் ஒரு தகவல்.

இம்மாதம் தனது அறுபதாவது அகவைக்குள் காலடி எடுத்து வைத்த நடிப்புலக மேதை ரஜனி அவர்கள் நடித்த தங்கமகன் திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றது.

இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலியெனப் பலர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் இப்பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் புலமைப்பித்தன். (இதனைத் தெளிவுறுத்திய கானாபிரபா அண்ணாவுக்கு நன்றிகள்)

இளையராஜா இசையமைக்க எஸ்.பி.பி.யுடன் இணைந்து எஸ்.ஜானகி இப்பாடலைப் பாடியுள்ளார்.









★ ★ ★

முண்டாசுக் கவிஞன் பாரதியார் எழுதி பின்னர் தமிழ்த் திரைப்படங்களில் ஒலி ஒளி வடிவம் அளிக்கப்பட்ட பாடல்களில் என்றைக்கும் நின்று அர்த்தம் அளிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்து போனதனால்
நானும் ஓர் கனவோ... இந்த ஞாலமும் பொய் தானோ...?

வாழ்வின் விளிம்பில் இருந்தவாறு தான் நடந்து வந்த பாதைகளையும், சுமந்து வந்த பாரங்களையும், சமூகம் தனக்குத் தந்த சன்மானங்களையும் எண்ணிப்பார்க்கின்றான் இக்கவிஞன்.

சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை, சுதந்திர தாகம், காதல், ஆன்மிகம்... என இவன் தொட்டுச் செல்லாத பக்கங்களே இல்லை எனுமாப் போல் எந்தக்காலமும் நின்று வாழும் கவிதை படைத்த எட்டயபுரத்தோன் இவன்...

கேட்டுப்பாருங்கள்... இளையராஜாவின் இன்னிசையில் ஹரிஸ் ராகவேந்திராவின் குரலசைவில் ஒலிக்கின்றது இப்பாடல்...









★ ★ ★

அண்மையில் வெளிவந்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களில் பலமுறை பலராலும் கேட்டும் பார்த்தும் முணுமுணுக்கப்பட்ட பாடல் இது.

எந்தவித பிண்ணனிக்காட்சிகளுமற்று - வெட்ட வெளி போன்ற பிரதேசத்தில் காதலனும் காதலியும் இணைந்து காதலிசைப்பது போன்ற பாடலுக்கான காட்சி பலமுறை பார்த்தும் அலுக்காத ஒன்று...

நதியே நீ எங்கே என்று கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேடக் கூடாதா

பாடலின் ஒவ்வொரு வரிகளும் காதலர்கள் பலரின் கடிதங்களில் மேற்கோளிடப்பட்டன.

சர்வம் படத்தில் யுவன் சங்கர்ராஜா இசையமைக்க ஜாவேட் அலி உடன் இணைந்து மதுஸ்ரீ பாடுகின்றார்.








Sunday, December 6, 2009

முத்துக்கள் மூன்று - 01

என் மனதை விட்டு அகலாத - நான் ரசிக்கின்ற - சில வேளைகளில் விமர்சிக்கின்ற பாடல்களை முத்துக்கள் மூன்றாக இங்கு தருகின்றேன்; இனியும் தருவேன்.

இப்பாடல் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்ற பாடலாயினும், இன்னும் இனிமை கெட்டு விடாமல் ரசித்துக் கேட்கக் கூடிய பாடல்.

என்னைச் சுற்றியிருக்கின்ற சமூகத்தின் வேதனைகளையும், அவர்களின் ஜீவனோபாய போராட்டத்தின் கவலை தோய்ந்த பக்கங்களையும் இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் கோடிட்டுக் காட்டுகின்றன. எனக்குப் பிடித்துப் போனதற்கும் காரணம் இதுவாகுமா?

ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்

மீனள்ள கடலேறிச் சென்றவன் திரும்பிக் கரை தொடும் வரை துணையவள் தவிக்கும் தவிப்பினை சொற்கள் கொண்டு வடித்து விட முடியாது.

சில சமயங்களில் அவன் வெறும் கையுடன் கசிந்த கண்களுடன் கரை திரும்பி இருக்கின்றான்... சில சமயங்களில் ஆயிரங்கள் தாண்டி இலட்சங்களும் அள்ளி வந்திருக்கின்றான்... கடவுளும் கைவிட்ட சமயங்களில் சூறாவளியும் புயலும் அவனை அள்ளிச் சென்றிருக்கின்றன... அரக்கர்கள் இரத்தம் குடிக்க, மீன்கள் உடல் தின்ன மூன்று நாள் கழித்து கரையேறும் அவன் சன்னம் துளைத்த சடலத்தின் ஊர்வலம் பலவற்றில் என் கால்கள் நடந்திருக்கின்றன...

கேட்டுப் பாருங்கள்... எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டித் திரைப்படத்தில் விஸ்வநாதன் இராமமூர்த்தி இசையில் டி.எம். செளந்தர்ராஜன் பாடிய பாடல் இது. பாடல் வரிகள் கவிஞர் வாலி.






★ ★ ★

எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யாரென்றால் அது என்றைக்கும் இளையராஜாதான். பாடகர்களைப் பட்டியலிட்டால், மற்ற எல்லோரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்குப் பின்னால் தான். இளையராஜா, எஸ்.பி.பி. கூட்டணி தந்த பாடல்களில் எப்போது கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது.

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது

இப்பாடலின் ஒவ்வொரு கருத்தாழமிக்க வரிகளையும் எஸ்.பி.பி.இன் தேன் குரலசைவில் இளையராஜாவின் இன்னிசையில் கேட்கும் போது உலகை மறந்து கண்மூடி இரசிக்கின்றேன்.

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலியின் ஆழமிக்க வரிகள் இவை. கேட்டுப் பாருங்கள்....







★ ★ ★

வான வெளி நிலா கண் சிமிட்டும் நேரம்
மனம் ஆசைகள் ஆயிரம் கொள்ளும்...
அவள் தோள் தழுவி மடி தவழ
இவன் எழுதிய அஞ்சலும் பதில் பெற்றதே...

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து வாணி ஜெயராம் பாடிய பாடல் இது.





Wednesday, August 19, 2009

பொக்கிசம்


அன்புள்ள லெனின் அறிவது,


கண்களிரண்டும் கண்ணீர் சிந்த, இதயம் அழுது வடிக்க உங்கள் காதலி நதீரா எழுதிக் கொள்வது,

நீங்கள் செத்துப் போய் விட்டீர்களாம்..! நேற்றுத்தான் உங்கள் அன்புமகன் சொன்னான். என்றைக்கும் பொருள் கூறும் திருக்குறளின் ஈரடி போன்று நாம் ஈருடலும் ஓருயிருமாகிவிட்ட பின்னர் உங்களுக்கு ஏது சாவு? அலையெழுந்து தாலாட்டும் கடலின் கரை போல உங்கள் நினைவுகள் எப்போதும் என்னைத் தாலாட்டுகின்றன.


என்னைத் தேடி நீங்கள் பட்ட கஸ்டங்களையும், சந்தித்த இடர்களையும் உங்கள் கடிதங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். என் தந்தைக்கு கொடுத்த வாக்கின்படி மாதம் ஒருமுறை மட்டும் கடிதம் எழுதிய உங்கள் நேர்மையை என்னவென்று உரைப்பது? மதமா... மனிதமா எனும் போட்டியில் மனிதம் ஜெயித்த போது நாம் அடைந்த பரவசத்துக்கு ஈடேதும் உண்டோ? உங்கள் தந்தையும் என் தந்தையும் கட்டியணைத்த போது, இறக்கைகட்டி வானில் ஜோடிப் புறாக்களாக பறந்தோம். ஆனால், எல்லாம் போலியென்று உணர்ந்த போது - மனிதம் மரித்த போது இந்த உலகை விட்டுப் போய்விடத் துடித்தேன்.

ஆனாலும், என்றைக்கோ ஓர் நாள் உங்கள் அன்பு ஸ்பரிசம் கிடைக்குமென - அந்தக் கடற்கரையில் காத்துக்கிடக்கும் ஒற்றை ஓடமெனத் தவமிருந்தேன். நினைத்தது போல் எல்லாம் நடந்திடுமா...? கடிதங்களினூடு உறவாடி நாங்கள்வரைந்த காதல் காவியம் இப்படி ஆகுமென்று யார் கண்டது. குரங்கின் கை பூமாலையாக சிக்கிச் சின்னாபின்னமாகி விட்டது.

எல்லோரும் வலிந்து காட்ட விளைகின்ற எந்தவொரு ஹிரோயிசமுமின்றி - ஓர் மிருதுவாளனாக, கண்டதும் உங்கள் மேல் பரிவு கொள்கின்ற ஓர் கதாநாயகனாகத்தானே எனக்கு அறிமுகமானீர்கள். பிறகு எங்கிருந்து வந்தது உங்களுக்குள் வன்முறை?

நான் சொல்லாமல் மலேசியா வந்த பின்னர், நீங்கள் என்னைத் தேடி அலைந்த போது பதில் சொல்லாததற்காக என் வீட்டு வேலைக்காரனை அடித்தீர்களாமே...! எங்கள் காதல் காவியத்தில் எந்தவொரு மோதலும் இல்லை எனும் குறையைப் போக்க விளைந்திருக்கிறீர்கள் போல... ஆனால், கண்ணிரண்டும் கண்ணீர் சொரிய உங்கள் கடிதங்களை வாசித்த நான் சிரித்ததும் இந்த இடத்தில் தான்.

எப்படி அவனுக்கு அடித்திருப்பீர்கள்..? வானத்தில் பறந்து பறந்து... மின்னல் வேகத்தில் பாய்ந்து பதுங்கி... கைவிரல்களை நற நறவென முறுக்கி... அல்லாதுவிடின், அந்தக் கடற்கரை மணலில் உருண்டு புரண்டு உங்கள் மாறாத குழந்தைத்தனத்தை நிரூபித்தீர்களோ...? காதல் காவியத்தில் சண்டைக்காட்சியும் நகைச்சுவைக்காட்சியும் சேர்ந்து ஒன்றாகி வருவதை சகிக்க முடியவில்லை லெனின்...

இறுதி வரை அப்பா பிள்ளையாக இருந்து, அப்பாவின் ஆசைகளை நிறைவேற்றி ஒரு அன்பு மகனுக்கும் தந்தையாகி இருக்கின்றீர்கள். இந்தளவும் போதும் எனது மகிழ்ச்சிக்கு.

உங்களை முதன் முதலில் சந்தித்த வைத்தியசாலை... நீங்கள் பரிசளித்த இலக்கியப் புத்தகங்கள்... தெய்வமெனத் தொழுத தபால்காரன்... என் முக விம்பம் தெறித்த நீர்நிலைகள்... ஒற்றை ஓடம் தனித்திருந்த அந்தக் கடற்கரை... உங்களுடன் என் காதல் நினைவுகளையும் சுமந்து திரிந்த துவிச்சக்கர வண்டி... எல்லாவற்றையும் இன்று இரை மீட்டுப் பார்க்கின்றேன். ஈற்றில் சோகம்தானே எஞ்சுகின்றது.

என் வீடு தேடி வரும் போது உங்கள் வாகனத்தை காடையர்கள் இடை மறித்தார்கள் நினைவிருக்கிறதா? அதற்குள் இருந்த இளம் ஹீரோ வெகுண்டெழுந்து சண்டை பிடித்து எல்லாரையும் காப்பாற்றுவார் என சில்லறைத்தனமாய் நினைக்க... சாதுவாக வந்து சேர்ந்தீர்களே. உங்கள் புத்திசாலித்தனம் கண்டு வியக்கின்றேன் லெனின்.


ஏனோ தெரியவில்லை... உன் மகன் கொண்டு வந்து தந்த கடிதத்தை பிரித்து வாசிக்க முற்பட்ட போது யாரோ விட்ட கொட்டாவியும், உடைந்து சிதறிய போத்தல்களின் சத்தங்களும் தான் பிண்ணனியில் கேட்டன. ஆனாலும், பொக்கிசமாக நீங்கள் பொத்தி வைத்திருக்கும் என் நினைவுகளும், என்னிடம் விட்டுச் சென்று விட்ட உங்கள் நினைவுகளும் ஏழேழு ஜென்மம் கடந்தும் எங்கள் காதல்காவியத்தை வாழ வைத்துக்கொண்டு இருக்கும்.

அன்பு முத்தங்களுடன் அன்புக்காதலி,
நதீரா


பிற்குறிப்பு: இக்கடிதத்தை இறுதிவரை பொறுமையுடன் வாசித்து முடித்தவர்கள் பொக்கிசம் படம் பார்ப்பதற்கு தகுதியானவர்கள் என யாரும் சொன்னால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

Thursday, February 12, 2009

ஏமாற்றம் தந்த நான் கடவுள்

சேது, நந்தா, பிதாமகன்... இவ்வரிசையில் பாலாவின் மற்றுமொரு படைப்பு நான் கடவுள். முன்னைய படங்களின் காட்சி நகர்த்தலும், அவற்றில் பாலா வலியுறுத்திய விடயங்களும் படம்பார்க்க முதலே நான் கடவுள் தொடர்பான படத்தினை மனதில் தீட்டிவிட்டன. மனித உறவு நிலைகளை கேள்விக்குட்படுத்தி, மனித மனங்களில் மிருக விம்பங்களை தெறிக்கவைத்து அதனூடு பாலா சொல்கின்ற செய்திகள் மனதுக்கு சங்கடங்களைத்தான் ஏற்படுத்துகின்றன. சிலவேளைகளில் காட்சிகள் நிஜங்களாயிருப்பினும் மனது ஏற்க மறுக்கின்ற கொடூரங்கள் நான் கடவுள் தொடர்பான திருப்தியையோ மகிழ்வையோ என்னுள் ஏற்படுத்த தவறிவிட்டது.

நாளும் காதை வந்தடைகின்ற செய்திகளின் கொடுமைகள் வார்த்தைகளுக்குள் அடங்காது. நண்பர்களுடன் கழியும் பொழுதுகள், சிலவேளைகளில் ஆலயதரிசனம் இவைகள்தான் மனதினை சாந்தம் கொள்ள வைக்கின்றன. அன்றும் நண்பர்களின் திட்டத்துக்கிணங்க நான் கடவுள் பார்க்க போகுமுன், பாலாவின் சுயரூபம் புரிந்து மனதுக்குள் ஒன்றுக்கு பலதடவை போகவேண்டுமா எனக்கேட்டும் ஈற்றில் தோற்றுத்தான் போனேன்.

பலர் பேசிக்கொள்கின்றார்கள் - எழுதுகின்றார்கள். வித்தியாசமான படம், தமிழ் சினிமாவின் திருப்பம் என... மனம் திறந்த பாராட்டுக்கள் வேறு. நந்தாவில் தாயின் அன்புக்காக ஏங்கி தாயினாலே நஞ்சூட்டிக் கொல்லப்படும் மகன், இங்கே  பிள்ளைப்பாசம் வேண்டி வரும் தாயின் அன்பை தூக்கியெறிந்துவிட்டு கடவுளின் பெயரால் கொலைகளையும் புரிகின்றான். சட்டம் கூட அவனுக்கு கட்டுப்படுகின்றது.
படம் இரு துருவங்களாக நகர்கின்றது. ஜோசியம் கேட்டு 14 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த மகன் ஆர்யா கடவுளின் உருவமாய் ருத்ரனாக வீடு வருகின்றான். மறுமுனையில் ஊனமுற்ற, மனநிலை பிறழ்ந்த உறவுகளை வைத்து பிழைக்கும் கும்பல். அவர்களில் கண் தெரியாத ஒருத்தியாக பூஜா... இரு துருவங்களும் இணைகின்ற இடங்களிலும் மனது ஏனோ திருப்தி கொள்ள மறுக்கின்றது. உடல் நலம் குன்றிய உறவுகளில் சிலர் நகைச்சுவைப்பேச்சினாலும், கலகலப்பினாலும் மனதைவிட்டு நீங்க மறுக்கின்ற போதிலும், அவர்களின் உடல் குறைகளினை வெளிச்சமிட்ட கமரா ஏனோ கூலிக்கு மேலாக வேலை செய்த உணர்வு எழுகின்றது.

ஆர்யா
, பூஜா நடிப்பினை குறை கூறவில்லை. தங்களுக்குரிய பாத்திரங்களில் ருத்ரனாகவும், பிறவிக்குருடியாகவும் வாழ்ந்திருக்கின்றார்கள். இளையராஜா மீண்டும் தானொரு இசையின் ராஜா என்பதை நீரூபித்திருக்கின்றார். பாடல்களும் சூப்பர்... ஆனால், தேடிச்சென்ற "மாதா உன் கோயிலில்..." பாடல் படத்தில் இல்லாதது ரொம்ப ஏமாற்றம்.


ருத்ரன்
புரிந்த கொலைக்கு சட்டம் தலை சாய்ப்பதும், நீதிமன்றத்தில் சட்டத்துக்கு வந்த சோதனைகளும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகள். இப்படம் உடல்நலம் குன்றியவர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஊட்டுகின்றது என வாதிடுபவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். உடல்நலம் குன்றிய உறவுகளுக்கு இப்படம் சொன்ன விமோசனம் என்ன? பிறப்பிலேயே நலிந்தவர்களாக பிறவி எடுத்து முதலாளித்துவங்களின் கிடுக்குப்பிடிக்குள் நசிந்து கொண்டிருந்தவர்கள் ஈற்றில் மலையை அசைக்கும் உரம் மிகுந்தவர்களாய் எழுந்து நின்றிருந்தால் இப்படம் சொல்லும் செய்தி கனதியானது. பூஜா கிறிஸ்தவ பெண்துறவியை சந்தித்த போது காட்சி நகர்த்தலில் நாம் வேண்டி நிற்கின்ற மாற்றம் பொய்த்துப்போய்விட மானிட நாய்களின் தாக்குதலுக்கு அவள் ஆளாகுவது கொடுமையிலும் கொடுமை.


உடல் நலம் குன்றியவர்களுக்கு நன்றியை தெரிவித்ததன் பின்னர் ஆரம்பித்து ஓடுகின்ற படத்தின் காட்சிகள் ஈற்றில் இவ்வுலகத்தில் துன்பத்தினால் அல்லற்படுகின்றவனுக்கு கிடைக்கின்ற வரம் மரணம் தான் என்று முடிவுக்கு வரும்போது - அம்மரணத்தையும் கடவுள்தான் அளிக்கின்றார் எனும் போது தியேட்டரில் எழும்பி நின்று "போடா..." என்று திட்டத் தோன்றுகின்றது. பிறப்பிலே பார்வையிழந்து, கிடைத்த குரல் வளத்தால் பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, கயவர்களின் கொடூரத்துக்கு ஆளாகி, ஈற்றிலே "காப்பாற்றுங்கோ சாமி..." என கடவுளை வேண்டிச்செல்பவள் கழுத்தினால் குருதி கொப்பளிக்க இறந்து கிடக்கின்றாள். இதற்குப் பெயர்தான் கருணைக்கொலையா...?

You might also like