Search This Blog

Thursday, January 29, 2009

தீ... உடலுக்கல்ல உணர்வுகளுக்கு

தீக்குளித்தல்... மூட நம்பிக்கைகளின் உச்சக்கட்டம் என்று தான் நேற்று வரை நம்பிக்கிடந்தேன். ஆனால், இன்று உள்மனதில் ஏதோவொன்று ஓங்கி உதைக்க நம்ப மறுக்கிறது அச்செய்தியை... ஏனய்யா இப்படி பண்ணினாய்..? கேட்பவர்களுக்கு மரணப்படுக்கையில் விடையையும் தானே சொல்லிவிட்டுப் போனான் அவன்.

முத்துக்களின் குமரனே... நீ கேட்டவர்களிடம் நியாயம் வேண்டி எத்தனை உயிர்கள் மடிந்தன. பேச்சளவில் தன்னுடன் அஹிம்சையையும் சேர்த்துக் கொண்ட நாடு நீ நேசித்த மக்களுக்கு அளித்த அஹிம்சைப் பரிசுகளை வரலாறு செப்புகின்றது.

உன் இன உணர்வுக்கு, எங்கள் மேல் கொண்ட பற்றுக்கு தலை வணங்கும் அதேவேளை இப்படிப்பட்ட செயல்கள் இனியும் வேண்டாம். இன்னொரு உயிருக்காக உன்னுயிரைக் கருக்காதே. உடலுக்கல்ல... உணர்வுகளுக்கு தீ மூட்டுங்கள். அத்தனையும் போதும்.

தலைவர்களே... எப்படி சுகமாக இருக்கின்றீர்கள்...? இனி எப்போது அடுத்த ஆலோசனை மாநாடு? தமிழினத் தலைவர் மதிப்புக்குரிய தமிழக முதல்வர் கருணாநிதி ஐயாவை நலம் வினவியதாக சொல்லிவிடுங்கள்.

Sunday, January 25, 2009

காதல்... ஒரு சுயசோதனை

காதல்...! இதனை சொற்களால் வர்ணனை செய்வதை விட எங்களில் பலருக்கு தொட்டுணர்ந்த வல்லமையும், பட்டு நலிந்த சோகங்களும் உண்டு. சில சமயங்களில் வைரமுத்துவின் கவிவரிகள் எல்லாவற்றையும் மேவிய உணர்ச்சிகள் சிலவற்றையும் விதைத்துவிட்டு செல்லும் வல்லமை பொருந்தியவை.

நேற்று எனக்கு வந்த மின்னஞ்சலொன்று நாங்கள் யார் மீதும் காதல் வயப்பட்டுள்ளோமா என்பதை எக்ஸ்றே பிடித்துக்காட்டும் எனும் தலைப்பில் வந்தது. நானும் ஒரு தடவை சுயசோதனை செய்து பார்த்தேன். சோதனையில் வெற்றியா அல்லது தோல்வியா என்பது என்னுடனேயே இரகசியமாக இருக்க - இம்மின்னஞ்சலை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட எண்ணவோட்டங்கள், சிந்தனை மாற்றங்கள், விரிந்து கிடந்த எதிர்காலக் கனவுகள்... இவைகளும் உங்கள் மனவோட்டத்தில் திரையிடப்படும் எனும் நம்பிக்கையில் அம்மின்னஞ்சலை உங்களுடன் பகிர்கின்றேன்.

நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்களா? கண்டு கொள்ள பன்னிரண்டு வழிகள்
பன்னிரண்டாவது:
நித்திரையைத் தொலைத்த பின்னிரவுகளில் உங்கள் தொலைபேசி கரமெடுத்துக் கும்பிடாத குறையாக உங்களிடம் இறைஞ்சும். ஆனாலும், சார்ஜ் ஏற்றிக்கொண்டே அவளுடனோ/அவனுடனோ நீங்கள் இறைத்துக் கொண்டிருப்பீர்கள். (இறைத்தல் - நண்பனிடமிருந்து சுட்ட சொல்) அதிகாலை வேளையில் இரவு நித்திரைக்காக படுக்கைக்கு போகும் போதும் அவளின்/ அவனின் நினைவுகளே உங்களை ஆக்கிரமிக்கும்.

பதினோராவது:
அவளுடன்/அவனுடன் நீங்கள் சேர்ந்து நடக்கும் போது அன்னம் கூட உங்களை வென்றுவிடும். உலகை மறந்து எதிர்காலக் கனவுகளை சுமந்த வண்ணம் அப்படியொரு ஆறுதல் நடை.

பத்தாவது:
அவள்/அவன் தூர விலகி நின்றால் (ஐந்து மீற்றர் கூட அதிகம்) உங்கள் மனதில் ஏதோவொன்று குறைவது போன்ற சங்கடம் எழும்.

ஒன்பதாவது:
அவள்/ அவன் குரல் கேட்டால் உங்கள் வதனத்தில் புன்னகை பூக்கும். (நிஜத்தில் குரங்கின் குரல் என்றாலும் எப்போதும் உங்களுக்கு குயிலின் குரல்தான்)

எட்டாவது:
அவளை/அவனை காணும் போது நீங்கள் சனத்திரளின் மத்தியில் நின்றாலும் உங்களைச் சுற்றி எவருமே இல்லாதது போன்றதொரு உணர்வு எழும். உங்கள் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அந்தத் தேவதை/மன்மதன்.


ஆறாவது:
உங்கள் சிந்தனையெல்லாம் ஒன்றே ஒன்று. அந்த தேவதை/மன்மதனைப் பற்றியதாகவே இருக்கும்.

ஐந்தாவது:
அவளை/அவனை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களிடமிருந்து புன்னகையொன்று வெளிப்படுவதை உணர்வீர்கள்.


நான்காவது:
அவளை/அவனைப் பார்த்து விடவேண்டுமென்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாரக இருப்பீர்கள்.

மூன்றாவது:
இப்பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இக்கணங்களில் உங்கள் ஞாபகம் எல்லாம் ஒருத்தரைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கும்.


இரண்டாவது:
உங்கள் எண்ணங்கள் அந்த ஜீவனைத் தழுவி வரும் வழியில் ஏழாவது வழிமுறையை நீங்கள் தவறவிட்டதை கண்டுகொள்ள மறந்திருப்பீர்கள்.

முதலாவது:
அது உண்மைதானா என்பதை சோதிக்க மேற்சென்று வரும் நீங்கள் மெளனமாக உங்களுக்குள்ளே சிரிக்கின்றீர்கள் அல்லவா...!!!

நீங்கள் மனம் விரும்பும் - இப்போது மனதில் சுமந்துள்ள அந்த ஜீவன் உங்களையும் தன்மனதில் புன்னகை சிந்த சுமக்க வேண்டுமாயின், இப்பன்னிரண்டு வழிமுறைகளினூடும் அழைத்து வாருங்கள்.
வாழ்த்துக்கள் நண்பர்களே...!!!


பி.கு: இம்மின்னஞ்சலை எனக்கு அனுப்பிய நண்பர் செந்தில்(சினிமாவுக்கு தொடர்பில்லாதவர்) அவர்களுக்கு நன்றிகள். அவரின் அண்மைக்கால நடவடிக்கைகளின் பெறுபேறுதான் இது.:-)

Thursday, January 22, 2009

ஒரு உளறல்... ஒரு சொதப்பல்...

கேட்கின்ற சேதிகளும்... காணுகின்ற காட்சிகளும் நல்லதாக இல்லை. பட்டுணர்ந்த போதும் காத்துக்கிடக்கின்றோம். தட்டிக்கேட்க யாரும் வருவதாக தெரியவில்லை. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும். ஆதலால், அழுது கொண்டிருக்கின்றோம். இப்போது துடுப்பாட்ட சீசன். காலை, மாலை, இரவு என ஸ்கோர் கேட்டே காலம் ஓடுகின்றது... கண்ணீரும் முடிகின்றது. முறையற்ற பந்து வீசினாலே எச்சரிக்கும் நடுவர்களுக்கு......... ம்... இவ்வாக்கியத்தை முடிக்கின்ற சொற்கள் சுயதணிக்கைக்கு ஆளாகின்றன. "பயந்தவன்..." நீங்கள் திட்டினாலும் கேட்பேன்; நையாண்டி செய்தாலும் சகிப்பேன்.

"நீண்ட நாளாக எந்தப்பதிவையும் காணவில்லை... வேலை தலைக்கு மேலேயா..?" வினவிய நண்பருக்கு மெளனம்தான் பதிலாய் கிடைத்தது. அவருக்கு எங்கே தெரியப்போகுது... எழுதிய மூன்று பதிவுகள் சுய தணிக்கையின் பின் உயிரற்ற முண்டம் போன்று பொருளற்று குப்பைக்கூடைக்குள் ஆழ்ந்து தூங்குவது.

யாரையும் நினைத்துக்கொண்டு படுத்தால் கனவில் வருவார்கள் என்று என் பாட்டி அன்று சொன்னது உண்மைதான். அவள் நேற்றும் கனவில் வந்தாள். பத்து வயது... இவ்வருடம் புலமைப்பரிசில்
பரீட்சை வேறு. இப்போது எந்தக் கானகம் அவளின் உறைவிடமோ தெரியவில்லை. சுனாமி அடித்த போது - அவள் இல்லையென்றே எல்லோரும் கதறிய போதும் புத்தி சாதுரியத்தால் வென்று வந்த பாலகி அவள். அந்த வல்லமையை இப்போதும் அவளுக்கு கொடு இறைவா...


வீதியில் இறங்கும் போதும் "அப்பனே முருகா..." இணையங்களை திறக்கும் போதும் அதே "அப்பனே முருகா..." பாவம் அவன்... எத்தனை பேரின் வேண்டுதல்களுக்கு செவி சாய்ப்பது. அவனைக்கூட அங்கே விட்டு வைக்கிறார்கள் இல்லை.

அவர்களில் சிலர்... இல்லையில்லை பலர் - எம்மவர்களும் தான் கேட்கின்றார்கள்... "எப்ப பயணம்...?" இனி இருவழிப்பாதை இருபதாயிரம் மிச்சமாம்..! ம்ம்ம்... வருகின்ற பெருமூச்சும் சுடுகின்றது.

நிச்சயமாக இது நானில்லை. எழுதுகின்ற என் கரத்தை இரும்புக்கரம் ஒன்று பற்றுகின்றது. என் எழுத்துக்கள் பல நீக்கப்படுகின்றன... சில தடம் மாறுகின்றன...
என் முன்னே இரண்டே இரண்டு தெரிவுகள்.
எழுதாமல் இரு...!!!
அல்லது
தடம்மாறி எழுது...!!!

எழுதுவேன்... தடம் மாறினாலும் சுயம் மாறாமல்...!!!

Monday, January 19, 2009

மூஞ்சிப்புத்தகமும் ஒரு எச்சரிக்கையும்

"முந்தி எல்லாம் இருந்த புகைப்படங்களை Facebook இல் பதிவேற்றி அழகு பார்த்தார்கள். ஆனால், இன்று Facebook இல் பதிவேற்றுவதற்காகவே புகைப்படங்கள் எடுக்கின்றார்கள்." என் நண்பனொருவனின் ஆதங்கம் இது. அதில் உண்மையில்லாமலும் இல்லை. உலகில் அதிகூடிய பயனர்களை உள்வாங்கி அபரீத வளர்ச்சி கண்டு வரும் இணையத்தளமாக www.facebook.com மாறியுள்ளது. இதுவரை அரசோச்சிய Hi5, Myspace போன்ற பிரசித்தமான சமூக உறவாடல் தளங்களையெல்லாம் புறமொதுக்கி விட்டு இன்று இணைய வரலாற்றில் Facebook தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. பயனர்கள் அதிகளவில் உள்நுழையும் இணையத்தளங்களை பட்டியலிட்ட www.quarkbase.com எனும் இணையத்தளம் Facebook இற்கு ஐந்தாமிடத்தை வழங்கியுள்ளதென்றால் பாருங்களேன். (முதலிடத்தில் www.yahoo.com உம் இரண்டாமிடத்தில் www.google.com உம் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.)

பரந்து விரிந்த உலகம் இன்று தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் உள்ளங்கையளவில் சுருங்கிக் கிடக்கின்றது. இன்று என்னுடனிருந்தவன் நாளை இன்னொரு தேசத்திலிருந்து வணக்கம் சொல்கின்ற காலம் இது. உங்கள் நண்பர்கள், உறவினர்கள், பிடித்தமானவர்கள் ஏன் நண்பர்களின் நண்பர்கள் கூட இன்று எங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை தெரிய வைக்கும் குணம்தான் இந்த Facebook வெற்றியின் அடிப்படைக்காரணம் என்கின்றார்கள்.

Facebook..... இதை தமிழில் நேரடியாக மொழிபெயர்த்தால் முகப்புத்தகம். ஆனாலும், நண்பர் நிமலின் பதிவொன்றில் அவர் மூஞ்சிப்புத்தகம் என அழைக்க - எனக்கும் அது பிடித்துப்போக இப்போது எல்லாம் எனக்கு அது மூஞ்சிப்புத்தகம். வேலைத்தளத்தில் இது தடைசெய்யப்பட்ட இணையத்தளமாயினும், அந்தத்தடையையும் உடைத்து உள்நுழையும் போதெல்லாம் அருகிலுள்ள என்மொழி நண்பனுடனான உரையாடல்களில் எல்லாம் மூஞ்சிப்புத்தகம் தான்... Facebook அல்ல...! யாருக்கும் எதுவும் புரியாது. :-)

நான் மூஞ்சிப்புத்தகத்தை நேசிக்கின்றேன். ஒன்றாக என்னுடன் இருந்தவர்கள் தூரதேசம் பறந்த போதும் அவர்களை என்னுடனும், நான் அவர்களுடனும் உறவாடிக்கொண்டிருக்கும் பாலம் இது. தொலைந்துவிட்ட என்னுடைய பாலகப்பருவ நினைவுகள் மீளக்கிடைத்தன. தசாப்தங்களாக எங்கிருக்கின்றோம் என அறியாத நட்புக்கள் தோள்களில் தட்டிக்கொள்கின்றன. கிடைக்காத சொந்தங்கள் கிடைக்கின்றன; புதுப்புது உறவுகள் புன்னகைக்கின்றன.

ஆனாலும்.....!!!

மூஞ்சிப்புத்தகத்திலும் சில துஷ்பிரயோகங்களும் அக்கிரமங்களும் நடந்தேறுகின்றன.

அவன் என்னுடைய நண்பன். மூஞ்சிப்புத்தகத்தில் எப்போதோ அவனுடைய நட்பு வேண்டுகை என்னால் ஏற்கப்பட்டு நண்பர்களின் பட்டியலிலும் இருக்கின்றான். கருத்துக்களும் தகவல்களும் கூட பரிமாறி இருக்கின்றோம். ஆனால், நேற்று இன்னொரு புதிய நட்பு வேண்டுகை அதே பெயரிடமிருந்து.... அதனை ஏற்றுக்கொள்ளாது காக்க வைத்துவிட்டு ஒரு தகவல் அனுப்பினேன். பதில் வந்தது - "முன்னையது யாரோ ஒருத்தரால் போலியாக உருவாக்கப்பட்டதாம்... இதுதானாம் நிஜம்..." நான் எதை நம்புவது...???

ஏதோவொரு காரணத்துக்காக உங்களின் மூஞ்சிப்புத்தக பக்கத்தினுள் மாற்றான் எவரும் நுழையாதவாறு தடுப்பரண் அமைத்திருப்பீர்கள். யாரும் ஒருத்தருக்கு மூஞ்சிப்புத்தகத்திலிருந்து தகவல் அனுப்பினால், அவர் உங்கள் விபரங்கள் சிலவற்றை பார்வையிடலாம் எனவும் தெரிந்திருக்கலாம். ஆனால், நடந்தது என்ன...? உங்களின் நண்பர் ஒருத்தர் புதுவருட வாழ்த்து தகவல் ஒன்றினை உங்களுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் கூட்டாக அனுப்புகின்றார். அந்த வாழ்த்துக்கு நீங்கள் பதிலளித்தவராயின், நீங்கள் அவருடைய நண்பர்களுக்கு தகவல் அனுப்பியவராகவே கருதப்படுவீர்கள். கவனம்...!!!

மூஞ்சிப்புத்தகத்தை மிகவும் நோகடிக்கின்ற விடயம் சங்கம் (குழுக்கள்) அமைத்தல். ஒரு முக்கிய நிகழ்வொன்றுக்காக, நிறுவனம் சார்பாக, பிரசித்தமான ஒருவரின் ரசிகர்கள் சார்பாக சங்கம் அமைத்தல் பிழையாகாது. உதாரணத்துக்கு We Wish You Thiruma..., Linux Forum, VETTRI FM, ShakthiFM, தமிழ் ஒலிபரப்பாளர்கள் குழுமம் எனும் குழுக்களை ஏற்றுக்கொள்கின்றேன்; இவைகளின் நோக்கம் தெளிவானது. ஆனால், பின்வரும் சங்கங்களை ஒருமுறை பாருங்கள்.
  • பரோட்டா சாப்பிடுவோர் சங்கம்
  • பெயரில் 'S' எழுத்தினை உடையோர் சங்கம்
  • பஸ்ஸிற்கு காசு கொடுக்காதோர் சங்கம்
  • காதலுக்கு ஐடியா கொடுப்போர் சங்கம்
  • காலையில் ரீ குடிப்போர் சங்கம், குடிக்காதோர் சங்கம்
  • Profileஇல் சொந்தப்படம் போடாதோர் சங்கம்
  • சொந்தப்படம் போடாதோரை எதிர்ப்போர் சங்கம்
  • ....................................................................................................
அப்பப்பா.... மூஞ்சிப்புத்தக தரவுமூலம் (Database) என்ன பாடுபடும் கடவுளே... எந்தவொரு நோக்கமுமின்றி, எழுந்தமான காரணங்களுக்காக கட்டியெழுப்பப்படும் சங்கங்களின் தலைவர்களே, நிர்வாகிகளே... உங்களின் சங்கத்தை கலையுங்கள். கோடி புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு...

இப்போதெல்லாம் மூஞ்சிப்புத்தகத்தில் பலரும் தங்கள் உள்ளக்கிடக்கைகளை கொட்டித்தீர்க்கின்றார்கள். நான் கூட இதற்கு விதிவிலக்கானவனல்ல. ஆனால், நாங்கள் இட்ட கருத்துக்களை எங்கள் நண்பர்கள் தானே பார்வையிடுகின்றார்கள் என எண்ணுகின்றோம். ஆனால், உங்கள் நண்பர்களின் பெயரில் பலர் உலா வருகின்றார்களாம். சில நிறுவனங்கள் தங்கள் கைங்கரியத்தை கச்சிதமாக நிறைவேற்றுவதாகவும் கேள்வி. உங்களுக்கு உணர்வெழுச்சிகளை ஊட்டியவாறு வருகின்றவர்களை சரியாக அடையாளங்கண்டு கை கோர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் நல்லது. உங்கள் உடலுக்கும் நன்று....

Saturday, January 17, 2009

தமிழ் மொழியும் தமிங்கிலிஸும்

"மெல்லத் தமிழினிச் சாகும்..." பாரதி பாட்டிலே சொன்னதற்கு பலர் பலவாறு பொருளுரை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். செம்மொழி... கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்தகுடி உச்சரித்த மொழி... என அடுக்கு வசனங்களில் எங்கள் தமிழ்மொழி வாழ்ந்துகொண்டிருக்கின்றது. ஆனால், எங்களின் நாகரிகம் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் ஆளையும் கடிப்பதைப்போல் ஆடைக்குறைப்பில் முளைவிட்டு இன்று எங்களின் தாய்மொழியையும் சூறையாடிச் செல்கின்றது.

என் நண்பரிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சல் சொன்ன செய்தி கனதியானது... சிந்திக்க வைத்தது. கடந்த மாதம் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் தனது 89 ஆவது வயதில் மரணமடைந்த மரியா ஸ்மித் ஜோனேஸ் என்ற பெண்மணியுடன் 'ஏயக்' என்கின்ற மொழிக்கும் முடிவுரை எழுதப்பட்டுள்ளது. பழங்குடி இன மக்களின் ஒரு மொழியாக விளங்கிய 'ஏயக்' மொழியினை பேசும் திறன் பெற்றிருந்த கடைசிப் பெண்மணிதான் இவர். இவருக்கு ஒன்பது பிள்ளைகள் இருந்த போதிலும் ஒரு மொழியின் முழு உருவமாக விளங்கிய தாயின் இறுதி ஊர்வலத்தில் "மம்மி..." என ஆங்கிலத்தில் தான் அவர்களால் கண்ணீர் சிந்த முடிந்திருக்கின்றது.

எங்கள் மத்தியிலும்- பிறப்பாலும் வளர்ப்பாலும் தமிழராக இருப்பினும் ஆங்கில மொழியில் தான் பேசுவது நாகரிகம் என்கின்ற மோட்டுத்தனமான கலாசாரத்துக்குள் மெல்ல மெல்ல நுழைந்து கொண்டிருக்கின்றோம். இப்போது எல்லாம் 'வணக்கம்' என்கின்ற சொல் எங்கேனும் ஒரு வானொலியின் அல்லது தொலைக்காட்சியின் நிகழ்ச்சித்தொடக்கத்தில் தலைகாட்டிவிட்டுச் செல்ல 'ஹாய்...' என்கின்ற அர்த்தம் புலப்படாத வாக்கியத்தை பிச்சையெடுத்து வைத்து அழகு பார்க்கின்றோம். நன்றி சொல்வதற்கெல்லாம் மனது கூச்சப்பட்டுக்கொள்ள 'தாங்ஸ்' மெல்ல வெளிவருகின்றது.

யாரோ ஒரு வேற்று மொழியாளன் தமிழ் மொழியில் உரையாற்றுகின்றான் என்பதை ஆங்கில
மொழியிலல்லவா எங்களுக்குள் பகிர்ந்து பூரித்துக் கொள்கின்றோம்(?).

இங்கு ஆங்கில மொழிப்பாவனை தப்பென்பதை நான் சுட்டிக்காட்ட வரவில்லை. அப்படிப்பட்ட முட்டாளும் நானில்லை. எங்களின் வாழ்வுச்சிறப்புக்கள், தாண்டி வந்த மைல்கற்கள், சுமந்து வந்த சுமைகள் இவைகள் எல்லாம் ஆங்கிலத்திலும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், வேற்று மொழியியலாளன் எங்களை அறிவதற்காக...

அதை விடுத்து, என் பிள்ளைக்கு ஆங்கிலம் மட்டும் ஊட்டிவிட்டு, தள்ளாடும் வயதிலுள்ள என் பாட்டிக்கு ஆங்கில அகராதி வாங்கிக் கொடுத்துத்தான் உறவுப்பாலம் கட்ட வேண்டுமா?

நினைவுக்கு வரும் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுவது தப்பில்லையென்று நினைக்கின்றேன். இப்போதெல்லாம் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கருத்தாடல்களில் முக்கிய பங்கு வகிக்கும் சமாச்சாரம் என்ன என்பது நான் சொல்லித்தான் தெரிய வேன்டியதில்லை. அப்படியான ஒரு கருத்தாடலில் புலம்பெயர் உறவொன்று தெரிவித்த கருத்துக்கள் நிதர்சனமானவை... கவனத்தை தன்பால் ஈர்க்கவல்லன... "எங்கள் காலத்திலேயே ஒரு முடிவு எழுதப்பட வேண்டும். அல்லாது விடின், புலத்திலேயே உருவாகி அங்கேயே வளர்கின்ற கொஞ்சம் தமிழ் தெரிந்த என் மகனுக்கு தமிழ் தேசியம் பற்றி விளக்கவுரை அளிக்கவேண்டும்". சிந்திக்க....

இப்போது இணையத்திலும் தமிழ்மொழியின் பாவனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதற்காக உழைத்த - உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இணையங்களில் தமிழ் மொழியிலான ஆவணங்களில் பல தமிங்கிலிஸ் வார்த்தைப் பிரயோகங்களில் உலா வருகின்றன. ஆங்கில மொழியில் இருக்க வேண்டுமென்ற அவசியமிக்க தமிழ் சார்ந்த ஆவணங்கள் ஆங்கில மொழியிலேயே இருக்கட்டும். ஆனால், தமிங்கிலிஸ் வகையராவுக்குள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் கோப்புக்களை சம்பந்தப்பட்டோர் - பதிவேற்றம் செய்தோர் இயலுமானவரை தமிழிலேயே மொழி பெயருங்கள். உதாரணத்துக்கு, amma என்பது அம்மா ஆகவும், appa என்பது அப்பா ஆகவும் மாறட்டும். இல்லாதுவிடின், நாளை தமிழ்மொழி
யானது தமிங்கிலிஸ் என்ற மகவை பிரசவித்த வலி தாங்காது உயிர் விடும்.

Friday, January 9, 2009

பல்கலை வந்து பார்

வைரமுத்துவுக்கும் கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. நேற்றுத்தான் அந்தக் கவிதையை படித்தேன். எலிபிடிக்கப் போன லோசன் அண்ணா கடைசியில் கைப்பற்றி வந்த பொக்கிசம் அது. ஃபெயில் பண்ணிப்பார் எனும் தலைப்பில் 1997 களில் தான் அனுபவித்தவைபற்றி எழுதியிருந்தார். அக்கவிதையைப் படித்துக் கொண்டிருந்தபோது தான் எனக்குள்ளும் ஒரு உசுப்பல். பல்கலையில் இரண்டாம் வருட பரீட்சை முடிந்தபின் கிறுக்கிய கிறுக்கல்கள் ஞாபகம் வந்தது. கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற ஒருவித வெறியுடன் பழைய புத்தகங்கள் எல்லாம் தேடிப்பார்த்தேன். ம்ஹூம்... கிடைக்கவேயில்லை அந்தக் கிறுக்கல். என்னிடம் பாடக்குறிப்புக்களை கடன் வாங்கிக்கொண்ட தம்பிமாரின் (சத்தியமாக தங்கைகள் இல்லை) கைகளில் சிக்கியிருந்தால் தந்துதவுவீர்களாக... கோடி புண்ணியம் கிடைக்கும்.

எனினும், அன்று நான் கிறுக்கியிருப்பேன் என இன்று எண்ணுபவைகளுடன் இன்னும் சிலவற்றை சேர்த்து, பலவற்றை மறந்திருப்பினும் ஞாபகம் உள்ளவற்றிலும் சிலவற்றை நீக்கி இன்றிரவு என் தூக்கத்துக்கு ஆப்பு வைத்ததுதான் இந்த "பல்கலை வந்து பார்". லோசன் அண்ணாவினை எப்படி சகித்தீர்களோ அதற்கு மேலாகவும் சகிப்புத்தன்மை, பொறுமை பெற வேண்டுமா? (குருவி பார்க்காதவர்களுக்கும் இன்னொரு வாய்ப்பு) மேலே செல்க...


பல்கலை வந்து பார்...
"இஞ்சினியர் மாப்பிள்ளை - அல்லது
பொம்பிள்ளை"
வாழ்த்தி அனுப்பிய ஊர்
பப்பா மரத்தில் ஏற்றியதை
முதல் நாளிலேயே உணர்வாய்.
முதல் நான்கு நாட்களும்
நான்கு வருட தேரோட்டத்துக்குத் தயார் செய்தலாம்.
நீ கடைசி வரிசையில் கண்மூடித் துயிலுவாய்
உன்னைத் தயார்படுத்திய வாறு...

உன்னை வரவேற்க
'சீனியர்' கொடுத்த
'கிரிபத்'உம் 'கிரி பக்கற்'உம்
அன்று முதல் உனக்கு காலை உணவாகும்...

பல்கலை வந்து பார்...
கூடிப்பேசுவோமென்று
கூட்டிச் செல்வதுதான்
உனக்குப் பகிடிவதை...
தொடமாட்டார்கள்; - ஆனால்,
கதைத்தே உன்கதை முடிக்கும்
கனவான்களும் இருக்கின்றார்கள்.
தப்பிக்கப் பார் - முடியாது போனால்
கற்றுக்கொள் தப்பில்லை.
அந்தப் பரம்பரை எப்போதும் அழியக்கூடாது.

உயர்தரத்தில் ஆங்கிலத்திற்கு
கொடி (F) நட்டு வந்தவனாயின்
கொடுத்து வைத்தது உன் விரிவுரைகள்.
கொஞ்சக்காலம் போகப்பிடிக்கலாமென்றது
நாலு வருடம் தாண்டியும் போகலாம்.

3A எடுத்தாலும் பல்கலையில் முதல் நிறுவல்
"பூச்சியத்தையும் பூச்சியத்தையும் கூட்டினால் பூச்சியம்"
பாடமாக்கிய ஸ்ரெப்(step) மறந்திடின்,
பூச்சியமும் பூச்சியமும் சேர்ந்து
ஒன்றாக வந்து நின்று பல்லிளிக்கும்.

பல்கலை வந்து பார்...
சாப்பாட்டை எட்டுப் பேர் பகிர மறுத்தாலும்
Assignment எட்டல்ல...
எண்பது பேருக்கும் ஒன்றுதான்.
Ctrl+C உம் Ctrl+V உம் உனக்கு
சொல்லித்தெரிவதில்லை.
ஈயடிச்சான் கொப்பிக்கதைகள்
காவியக்குவியலாக நிறைகின்றன.
நீ வர மறுத்தாலும் - உன் தோழர்கள்
மறக்க மாட்டார்கள் உன்னையும்
காப்பியத் தலைவனாக்க...

பரீட்சையிலும் திணறாத திணறல்
சகோதர மொழி நண்பனின்
நல விசாரிப்புக்கள் கொண்டுவரும்..!
சிலவேளை மெளனங்கள் தான்
உனக்குரியதாக வேண்டும்...

பல்கலை வந்து பார்...
கடிதங்கள் கிடையாது...
மின்னஞ்சல்களும் இருக்காது...
மிஸ் கோலுகள் தான் உனது காதல் தூதுவர்கள்...
நள்ளிரவு பன்னிரண்டுக்கும்
விடிகாலை மூன்றுக்கும் கூட
வெவ்வேறு முனைகளிலிருந்து தூது வரும்.
சிலவேளை அதிலே செய்தி வரும்.
தொலைபேசிக்கு 'சார்ஜ்' ஏற்றியே
உனக்கு 'கரண்ட் பில்' எகிறும்.

ஒருவருடம் கழிந்து உனக்கு
'சீனியர்' பட்டம் கிடைக்கும் போது
'ஜூனியர்' பிள்ளைகளுக்கு
தேவதை நாமமும் கூடியே வரும்...
நீ பெண்ணாயின், உன் முதல் நாளிலேயே
அண்ணாக்கள் பலருக்கு மன்மத வாசனை வீசிடும்.

பரீட்சை.....
ஒரு முறை அனுபவித்துப் பார்...

உனக்கு நரகத்தின் அர்த்தம் புரியும்.
ஆறு மணிக்கு அலாரத்துணையுடன் தூக்கம் கலைந்து -
நூலகத்துக்கு இடம்பிடிக்க வரிசை காத்து -
நூலக மேசைகளிலும் கடைவாய் வடித்து -
'குப்பி'க்கு பறந்து -
'பாஸ் பேப்பருக்கு' தவம் கிடந்து -
படுக்கைக்கு போகும்போது
உனது ஊரில் சேவல் கூவிவிடும்.
பரீட்சை முடிந்த அன்றிரவே
கோட்டை புகையிரத நிலையத்தில்
யாழ்தேவிக்கு காத்திருக்கத்தான்
உனக்கு கொடுத்துவைக்கவில்லை.
பரவாயில்லை...
மீன் ரின்னும் பாணும் போதும்
வெள்ளவத்தை வராத நாட்களை சமாளிக்க...

'குப்பி'க்கு அர்த்தம் தெரியுமா உனக்கு...?
கண்டு பிடிக்க முயற்சி செய்...
அப்போது சில தேவதைகள் கை கோர்க்கலாம்.
வாளியின் பொருள் விளங்குமா உனக்கு...?
சொல்லித்தருவதற்கு நிறையவே சீனியர்கள்...
என்னால் முடியாது.
'வெடி'யின் அர்த்தம் புரிய
அதிக நாட்கள் தேவையில்லை...
இரண்டாவது நாளிலேயே உன் செவிப்பறை வெடித்து விடும்.
இறுதிப் பரீட்சை நெருங்கும்போது
UK எம்பஸிக்கும் ஒரு நாள் ஒதுக்கிடு.

ஆனாலும்...
நீ அழும்போது கண்ணீர் துடைக்க
சொந்தங்கள் பலர் உள்ளனர்...
நீ சுமக்கும் சிலுவை காவ
தோழர்கள் காத்திருக்கின்றனர்.
இன்று பிடிபட்டவனை மீட்பதற்காய் நீயும்
நாளை பிடிபடும் உனக்காக கையெழுத்திட
நண்பர்களும் நிறையவே உள்ளனர்.
துவண்டு விழும் போது
தூக்கி விடுவதற்கும்...
அமிழ்ந்து போகும் போது
வாரி அணைக்கவும்...
கரங்கள் பல உன்னுடன் இருக்கும்.
பல்கலை வந்து பார்...

Thursday, January 8, 2009

மரணத்திலும் வழிகின்ற பாசம்

இன்றைய பொழுதுகள் ஏனோ வழமையாக விட எரிச்சலாகவும் துன்பமாகவும் கழிகின்றன. என்னைப் பிடித்திருக்கும் தடிமனும் காய்ச்சலும் காரணங்களாக இருக்கலாம். ஆனாலும், இரவு இணையத்தில் நுழைகின்றேன். மனதைக் கசக்கிப் பிழியும் சில படங்களும், சுருதி மாறாத அதே செய்திகளும் தான் இருக்கின்றன... நிலம் கைப்பற்றல், முன்னேற்றம் முறியடிப்பு, தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியெடுப்பு.... வழமைக்கு மாறாக இன்று அவர்களும் ஜனநாயக நாடு பற்றி விவாதிக்கின்றார்கள். ஊடகவியலுடன் மருத்துவம் இரு மணித்தியாலங்கள் போராடியும் ஊடகவியலைக் காப்பாற்ற முடியவில்லையாம். :-(

இணையத்தில் மேய்ந்த போதுதான் இந்தப் புகைப்படங்கள் என்னை ஒருகணம் அதிரச்செய்தன. யூதர்களைக் கொன்றதால் சர்வதிகாரியாக மரணித்தான் ஹிட்லர். அவன் சர்வதிகாரிதான். மறுக்கவில்லை. ஆனால், இன்று பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருப்பதற்கு என்ன பெயர்? "ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போர்" என்ற மகுடம் தாங்கி காசாப் பிரதேசத்தில் தனது அனைத்து அட்டூழியங்களையும் அப்பாவி மக்கள் மீது ஏவி விடுகின்றது இஸ்ரேல் படை. நேற்றுக்கூட தங்களது உறைவிடங்கள் தாக்குதலில் தரைமட்டமானதினால் பாடசாலையில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொத்தாக பலியெடுத்திருக்கின்றது.

உலகத்தின் கண்களுக்கு இவையெல்லாம் தெரிந்தாலும் அவை விழித்தெழப்போவதில்லை. ஒரு அறிக்கை... அல்லது ஒரு கண்டனம். அத்துடன் எல்லாம் அடங்கி விடும். மீட்பர்கள் வருவார்கள் என அமெரிக்காவையோ அல்லது அண்டை தேசங்களையோ நம்பிப் பயனில்லை. வேண்டுமானால், செத்தபின் வாய்க்கரிசியிட அல்லது அடுக்கி வைத்து அனல் மூட்ட அவர்கள் அணிவகுத்து நிற்க முடியும்.

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த தாயும் சேயும் மரணத்தறுவாயில் நடத்தும் பாசப்போராட்டம் இது. இங்கு யார் யாரை மீட்பது?
பாலஸ்தீனத்தில் மட்டும் தானா இந்தப் பாசப்பிணைப்பு...? இல்லவே இல்லை. வீட்டுப் படலையை ஒருமுறை திறவுங்கள்....:-(

Tuesday, January 6, 2009

ஊடக பயங்கரவாதம்

இறைமைமிக்க இலங்கை ஜனநாயக நாட்டில் மீண்டுமொருமுறை இனந்தெரியாதவர்களின் கொடூரத் தாக்குதலுக்கு ஊடக நிலையங்கள் இலக்காகி இருக்கின்றன. இதுவொன்றும் இங்கு புதிதல்ல... ஆனாலும், ஊடக அமைச்சை தனது அதிகாரங்களின் கீழ் இலங்கை ஜனாதிபதி கொண்டு வந்து ஒரு சில நாட்களில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. எம்.ரி.வி. நிறுவனத்தினால் மும்மொழிகளிலும் மேற்கொள்ளப்படும் ஒலி - ஒளிபரப்பு சேவைகளை முற்றுமுழுதாக முடக்கிவிட வேண்டும் என்ற தீய நோக்குடன் உள்நுழைந்த ஆயுதக்கும்பல் செயற்பட்டிருக்கின்றது. ஆனால், எரிந்த வேகத்தை விட பன்மடங்கு வீச்சுடன் அவர்கள் எழுந்து விட்டார்கள்.

இன்று (2009 - ஜனவரி - 06) அதிகாலைப்பொழுதினில் எம்.ரி.வி., எம்.பி.சி. கலையகத்தினுள் அத்துமீறி நுழைந்த 20 பேரடங்கிய ஆயுதக்குழுவின் கோழைத்தனமான தாக்குதலில் அக்கலையகம் பாரிய சேதத்தினை அடைந்துள்ளது. தொழில்நுட்ப உபகரணங்கள் முதற்கொண்டு அனைத்து சாதனங்களும் அக்கும்பலிட்ட தீயினில் கருகிக் கிடக்கின்றன. இச்சம்பவமோ அல்லது அச்சுறுத்தலோ எம்.ரி.வி. நிறுவனத்துக்கு புதிதானதல்ல. ஆனாலும், இன்றைய சம்பவம் ஏற்படுத்திய இழப்புக்களின் பெறுமதி இலகுவில் ஈடுசெய்ய முடியாததொன்றாகவே புலனாகின்றது.

உலகின் எந்த மூலையிலிருந்தும் யாராவது ஊடக சுதந்திரம் பற்றி பேசுவாராயின் நிச்சயம் இலங்கைக்கும் ஓரிடம் காத்திருக்கும் என்பது எப்போதோ எழுதிய விதி. இன்று வரை ஆட்சி மாறினால் என்ன... அல்லது அமைச்சு கைமாறினால் என்ன... அந்தச்சாதனையை இழக்க விரும்பாமல் பற்றிக்கொண்டிருக்கின்றது இத்திருநாடு. இன்று நடந்தது போன்றதொரு சம்பவம் யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை மீதும் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து உபகரணங்களும் சுட்டுப் பொசுக்கி தீக்கிரையாக்கப்பட்டது மட்டுமன்றி கடமையிலிருந்தவர்களும் தங்களின் உயிரினை ஊடகப்பயங்கரவாதத்துக்கு பலி கொடுக்க வேண்டியிருந்தது. இலங்கையில் நடைபெறும் ஊடகத்துக்கு எதிரான யுத்தத்தினை பட்டியலிடுவதாயின், எதிலிருந்து தொடங்குவது? உதயன், சன்டேலீடர், எம்.ரி.வி. ... என நீண்டு செல்லும் இந்தப்பட்டியலின் மூலங்கள் இனந்தெரியாதவர்களாகையால், பட்டியலின் முடிவுக்கும் முற்றுப்புள்ளியிடவும் முடியவில்லை.

இன்று நடந்த சம்பவங்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் கதையை முடிவுக்கு கொண்டுவரும் என கனவு கண்டவர்கள் பிரமிக்கத்தக்கவாறு அவைகள் அனைத்தும் புத்தெழுச்சியுடன் மக்கள் பணி நோக்கி நடைபோடுவது போற்றுதற்குரியது. உண்மைகள் என்றும் உறங்குவதில்லை. ஆனால், இச்செயலைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கான விடை கேள்விகளாகவே தொக்கி நிற்கின்றது.
இலங்கையில் ஒரு ஊடகம் அல்லது ஊடவியலாளர் தாக்கப்படும் போது வழமையாக நடப்பன நடக்கின்றன. கோட்டை தொடரூந்து நிலையத்தின் முன்னால் "நேற்று..., இன்று..., நாளை... " என்ற கோசங்களுடன் பதாகைகள் தாங்கி ஊடகவியலாளர்கள், ஜனாதிபதியின் கவலை தெரிவிப்பும் தக்க நடவடிக்கை எடுக்க பொலிஸ்மா அதிபருக்கான உத்தரவும், விசாரணைக்கு பல பொலிஸ்குழுக்கள், ஒரு சாரார் அரச பயங்கரவாதம் என்றுரைக்க, இன்னொரு சாரார் அரசின் வெற்றிக்கு களங்கம் பூசப்பட்ட செயல் எனக்கூற... நாளை இன்னொரு தாக்குதலுடன் அல்லது வெற்றிச்செய்தியுடன் எல்லாம் அடங்கிவிடும். இல்லை... இன்னொரு தாக்குதலுக்கு உதாரணம் காட்ட இச்சம்பவம் இருக்கும். இன்று உதயன் சம்பவம் எனக்கிருந்தது போல...

Sunday, January 4, 2009

ஏமாற்றிய புத்தாண்டும் பொலிஸ் பதிவும்

புதுவருடம் பிறந்து ஐந்து நாட்கள் கழிந்துவிட்டன. எப்போதையும் போலவே - எல்லோரையும் போலவே இப்புத்தாண்டு நன்மைகள் கொண்டுவரும் என்ற நம்பிக்கை தளராமல் தான் வரவேற்றோம். ஆனால், பிறக்கும் போதே தமிழனின் இரத்த ருசி பார்த்து, உயிர் குடித்தவாறு தான் பிறந்திருக்கின்றது இப்புத்தாண்டு.

எங்கள் சொந்தங்கள் சிலருக்கு சில நிகழ்வுகள் அன்றாட காரியங்களாகிவிட்டன. காயப்பட்டோருக்கு மருந்து பூசிவிட்டு - செத்தவரைத் தூக்கிப் புதைத்துவிட்டு அவர்கள் தயாராகின்றனர் இன்னொரு சாதலுக்காக... காக்க நாமிருக்கின்றோம் அஞ்சற்க என்றவர்கள் வெள்ளைக் காகிதத்தில் கவிதை அனுப்பிக் கொண்டிருக்க... காரியங்கள் அனைத்தும் கச்சிதமாக முடிவுரை எழுதிக்கொண்டிருக்கின்றன.

உலகப் பொருளாதார நெருக்கடி முதற்கொண்டு காசா விமானத்தாக்குதல் வரை அக்கறையாக செய்தித்துளிகளை செல்லிடத்தொலைபேசிக்கு அனுப்பும் CNN செய்திச் சேவையிலிருந்து முதன்முதலாக வந்தது இலங்கை தொடர்பான செய்தி... "கிளிநொச்சி இலங்கை அரச படையினர் வசம்." செய்தியின் முக்கியத்துவம் புரிகின்றது. ஆனால்....?

தமிழ்மணத்தை திறந்தால் சூடான இடுகைகள் எல்லாம் கிளிநொச்சி பெயர் உச்சரிக்கின்றன. இல்லை..! கிளிநொச்சி பற்றியதால் சூடான இடுகைகளாகின. ஆராய்ச்சிகள், எதிர்பார்ப்புக்கள், எதிர்வுகூறல்கள் என பதிவர்களின் பேனாக்களின் கிறுக்கலில் சிக்கி விழிபிதுங்குகின்றது அந்நகரம். அவர்களின் பட்டியலில் ஆனையிறவும் முல்லைத்தீவும் அடுத்ததாக காத்திருப்பது தெரிந்தாலும் காலமென்று ஒன்று இருக்கத்தான் செய்யும். இலங்கையில் ஜனவரி - 01 புலர்ந்த போது வெடித்த பட்டாசு வெடிகளை விட ஜனவரி - 02 மாலை நான்கு மணி விஞ்சித்தான் இருந்ததாக பதிகின்றார்கள். ஆனால், பல்குழலுக்குப் பழகி வந்தவர்கள் மனசுக்குள் சிரித்துவிட்டு நகர்கின்றோம்.

நண்பர்கள், உறவினர்கள், அயலார் எல்லோரையும் ஒன்றாக சந்திக்கும் தருணம் நேற்றுக் கிடைத்தது. குறுகிய காலத்தில் இரண்டாவது சந்திப்பு. ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி சொன்னால் பலரின் கோர(ப)ப் பார்வையில் எரிந்திடுவேன் என்றாலும், இடுக்கண் வருங்கால் நகுக என்பது நிஜமென்றால் தானே எங்களின் சிரிப்புக்களுக்கும் அர்த்தமுண்டு. என் கல்லூரித் தோழர்கள்... எனக்குத் தெரிந்த, தெரியாத ஊர்க்காரர்கள்... அப்போதைய பள்ளிப்பருவத்தை நினைத்து ஏங்க வைத்த இப்போதைய நங்கையர்கள்... எல்லோரும் வந்தனர். மாசி மாதக் கணக்கெடுப்புக்கு அழைத்தாலும் பொலிஸ் பதிவுக்கு போக நான் தயங்க மாட்டேன். கூடவே எங்களுக்குத்தானாம் பாதுகாப்பு. மூன்று தடவை உள்ளே போய் வந்தவன் சொன்னால் நம்பத்தானே வேண்டும்.

ஆனால், அதற்கு முதல் சிங்கள மொழி சுத்தமாக தெரிந்திட வேண்டும். வந்தது வடக்கு, கிழக்கு என்றாலும் அறிவித்தல்கள் சிங்களத்தில் தானே... பிரிக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் சேருகின்ற இடங்களும் இருக்கத்தானே செய்கின்றன. பெருமைப்படுவோம்!

"கதிரேசு இருக்கிறானோ...?"
பொலிஸ் பதிவுக்கு வந்த சனக்கூட்ட வரிசையில் யாரோ ஒருத்தர் வினவுவது கேட்கிறது. ஆனால், அந்தப் பெயர்வழி யாரும் இருந்ததாக எவரும் ஆமோதிக்கவில்லை.
"ம்... இருக்கட்டும். எப்படியும் இங்க தானே பதிய வரணும். வரட்டும் பார்க்கலாம்"
சொன்னவர் அந்த வரிசை உள்நுழையும் வாசலில் குந்தி விட்டார்.
கைத்தடி உதவியுடன் வரிசையில் நகர்ந்த இன்னொருத்தர் கேட்டார்.
"ஏன் தம்பி... என்ன பிரச்சினை...? இந்த இடத்தில் வந்து விசாரிக்கின்றீர்?"
அவர் சொன்னாரே ஒரு பதில்...
"இல்லை அப்பு... போன வருஷம் கொஞ்சக்காசு வாங்கினவன். இன்னும் தரவில்லை. வீட்டுக்குப் போனால் ஓடி ஒளிக்கிறான். அதுதான் இங்க வந்தேன்..."
இதற்குப் பெயர்தான் கலிகாலமா?

You might also like