Search This Blog

Friday, December 25, 2009

உறவெல்லாம் படமாக... உணர்வெல்லாம் ஜடமாக...

26-12-2004 அந்த நாளை மறக்க நினைக்கின்றேன். ஆனால், மறக்க முடியாத சொந்தங்களின் நினைவுகள் வந்து என் நெஞ்சில் பாரமாக அழுத்துகின்றன. கனவிலும் கற்பனை செய்யாத ஒரு கொடூரம் அந்தக் காலைப் பொழுதில் நினைவினில் மாறாத வடுக்களை வரைந்து விட்டுச் சென்றது. அன்று வரை எங்களுக்கு உணவு தந்த கடல் தாய் அன்று எங்கள் ஊருக்குள் வந்து எங்களையே உண்டு ஏப்பம் விட்ட கொடிய நாள். சுமாத்திரா தீவுகளில் எழுந்த அலைகள் எங்கள் வீட்டுக்கூரைக்கு மேலாகவும் சன்னதமாடும் என்று யார் நினைத்தது...உறவுகளே... உங்களுக்கு என் அஞ்சலிகள்.

Thursday, December 24, 2009

படம் காட்டும் பதிவுலகம் - கட்டடங்கள் வடுக்களே...


வவுனியாவில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில் இடம்பெயர்ந்த முகாமிலுள்ள சிறுவனால் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியம் இது. இன்னொரு ஓவியத்தில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதைந்து போன உயிருக்கும் சிதைந்து போன மக்களுக்கும் மத்தியில்
உடைந்து போன கட்டடங்கள் வடுக்களே அன்றி வலிகளல்ல...
★ ★ ★


நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் இரு பிரதான வேட்பாளர்களும்.... (என்ன தான் பேசியிருப்பாங்களோ...? )
★ ★ ★


ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவைப் பிரிக்கும் இந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹைதராபாத் இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் மீது பொலிஸின் பாய்ச்சல்.
★ ★ ★


தாக்குதலினால் மூக்குடைந்த இத்தாலியப் பிரதமரை இத்தாலியின் தென் நகரொன்றில் இப்படிக் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
★ ★ ★


சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதை ஆர்ஜன்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸி(22 வயது) வென்றுள்ளார். சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் கடந்த டிசம்பர் 21 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவின்போது போர்த்துக்கல் வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவை பின் தள்ளி இந்த விருதை வென்றதன் மூலம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வெல்லும் முதல் ஆர்ஜன்டீன வீரரானார். இந்த ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டார்.

Tuesday, December 22, 2009

மொக்கை...! மொக்கை...!! மொக்கை...!!!

எச்சரிக்கை: இது முற்று முழுதான மொக்கைப் பதிவு (அப்படியென்றால்...?); பல தலைகள் உருளும் பரிகாச விளையாட்டு. சீரியஸ் பாட்டிகள், பாட்டன்கள், பூட்டன்கள் மேற்கொண்டு நுழைய வேண்டாம்.

எந்தப் புண்ணியவானில் இருந்து ஆரம்பிப்பது...? இவர் இருக்கப் பஞ்சமேன்...? இங்கேயும் சொந்தச் செலவில் சூனியம் வைக்கத் தயாரானார் வந்தியத்தேவர்.

"மொக்கை எனப்படுவது யாதெனில்...."

சிறிது பொறுங்கள் வந்தி. எந்தக் காரியத்துக்கும் முதலில் பிள்ளையார் சுழி போட வேண்டும். ஆகவே,

"வணக்கம் லோஷன்..."

இனித் தொடரலாம் வந்தியத்தேவா.

"அழகை அழகு சொன்னால் தான் அழகாகும் என நான் உளறினால் அது அழகு ஆகாது..."

வந்தி சுத்தமாக விளங்கவில்லை... மொக்கை பின்னவீனத்துவம் ஆனதோ? விளக்கம் வேண்டி அண்ணாந்து பார்த்தேன். அந்த நிலாவைக் கூட காணவில்லை. ஆதித்தன் சுட்டெரிக்கும் வேளையில் அம்புலி தேடிய என் அறிவை என்னவென்பது...? என்ன கொடுமை... ருவீட்டரில் சலசலப்பு!!!

வந்தி தொடர்ந்தார்...

"என் நீலச் சட்டைக்கு வந்த மவுசு... அது அம்மா தந்த பரிசு.."அவர் கவி(?) முற்றுப் பெற முன்னரே அவள் புரக்கடித்துச் சிரித்தாள். சிந்தனைச் சிறகினை விரித்த போதும், காரணம் புரியவில்லை.

"மொ+க்+கை+ப்+ப+தி+வு= மொக்கைப்பதிவு" பவன் மொக்கைக்கு வரவிலக்கணம் கொடுத்த வேளையில் தான், அங்கே குறிஞ்சிக்குமரன் திருப்பதிகம் ஒலிக்கக் கேட்டேன். திருப்பதிகம் என்றதும் சந்த்ரு ஞாபகத்துக்கு வந்தான். கூடவே, இர்சாத், வரோ... இவர்களையும் இவன் கூட்டி வர மறக்கவில்லை.

எப்படி இருக்கிறீங்கள் என யாரும் கேட்டால் இருக்கிறம் என்ற பதிலில் வரோவும் யோகாவும் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றார்கள். இன்னொருத்தரும் தான்... அவருக்கு தனிப்பட்ட கவனிப்பு இருக்கு.

ஆனால், அந்த குறிஞ்சிக்குமரன் புகழ்பாடி வந்தவரோ ப்ரியானந்த சுவாமிகள். நெதர்லாந்துக் குளிருக்கு 42 ஆம் ஒழுங்கையில் சூடாற வந்திருக்கிறார்.

அப்போதுதான் அந்த ரணகளம் நடந்தது. "புலி உறுமுது... புலி உறுமுது..." எல்லோரும் விக்கித்துப் போனார்கள். வேறு யார்...? அட நம்மட சதீஸன் தான். "வாறான் வாறான் ஓடு ஓடு..." ஓடிப் போன எல்லோருக்கும் பெடியன் இனிப்பு வழங்கிச் சந்தோசித்தான். காரணம் கேட்டேன்... கடந்த 18 ஆம் திகதியுடன் வில்லு வெற்றிப் படம் ஆயிடுச்சாம். சுறா வருகையுடன் குருவியும் வெற்றிப்படமாகிடும் என்ற நம்பிக்கையும் இருக்குதாம். உச்சந்தலையில் சுர் என்றது.

"அதை அவ்ருக்குப் பக்கத்தில் வையுங்கோ... இதை எனக்குப் பக்கத்தில் வையுங்கோ..." கரத்தில் சிவப்பு நிற மாம்பழ ஜூசுடன் இருந்த விமல் சூளுரைத்தது எவர் காதிலும் சரியாக விழவில்லை.

பட்டத்தில் மின் பெற்ற சுபாங்கனின் மூளை துரிதமாக வேலை செய்திருக்க வேண்டும். நொந்து நூடில்ஸாகி ஒடிந்து போயிருந்த புல்லட்டை வம்புக்கு இழுத்தான்...

"புல்லட்... உமக்குத்தானே சுளகுக்காது. விமல்வன்ச என்ன சொன்னார் என்று சொல்லு பார்க்கலாம்."

"விமல் கூட ஒருத்தர் இருக்கிறாரே... அந்த வெற்றியாளன் சொன்னாராம். அவர் அவரை அவரிடத்தில் வைத்திருக்கணுமாம்..." வேண்டுமென்றே புல்லட்டினால் பிளேட் மாற்றப்பட்டது.

"ஐயோ... அரசியல்... நீல அரசியல்..." கூவிக்கூவி... கேவிக்கேவி அழுதவண்ணம் காவமுடியாத நமீதாவையும் காவிக்கொண்டு கங்கோன் ஓடிவிட்டான். யுவராஜ் இற்கு எங்கே பந்து பட்டது என்ற ஆராய்ச்சி அவனுக்காக காத்திருந்தது.

அப்போது தான் பார்த்தேன்... 22 பேர் கொண்ட அணி சிதறிக் கிடந்தது... தெரிந்த பல முகங்கள் தெரியாத முகமூடிகளுடன். :(


தூரத்தே ஓர் உருவம் தெரிந்தது... அசோக்பரன் வந்து கொண்டிருந்தான்.

விமல் கூட இருந்தாரே ஒருத்தர்... வேறு யாருமல்ல. மூன்றாவது தடவையாகவும் ஓர்டர் செய்யப்பட்ட Hot Butter Cuttlefish இனைத் தீர்த்து முடித்த திருப்தி லோஷன் அண்ணாவின் முகத்தில் தெரிந்தது.இதை எப்படி நிறைவுக்கு கொண்டு வாறது..?

இல்லையில்லை... உங்களைச் சொல்லவில்லை. அண்ணருக்கு இன்னொரு மரக்கறிச் சூப் ஓர்டர் கொடுங்கோ... தனக்குச் சொன்னதென்று லோஷன் அண்ணா குழம்பிவிட்டார்.

இந்தப் பதிவை எப்படி நிறைவுக்கு கொண்டு வாறது..? மொக்கைக்கு ஏது முடிவு..? ஆனாலும், வாழ்க தமிழ்மொழி... வளர்க செந்தமிழ்... என சுபானு தமிழிசை இசைக்க... பால்குடி புதிர் போட... புகைப்படக்கலைஞர் - முன்னாள் பதிவர் - நித்திரை தொலைத்த செம்மல் - மட்டைக்கும் குட்டைக்கும் விளக்கம் சொன்ன நிமல் புகைப்படம் சுட மொக்கை நிறைவுக்கு வருகிறது.

மது... அடே... உன்னை எனக்குத் தெரியாதடா. தெரியும் என்றால் கடலேறி இழுத்துப் பூட்டப்படும்.

Tuesday, December 15, 2009

வேட்டைக்காரன் புறக்கணிப்பு - நண்பனுக்கு கடிதம்நண்பா,

பல வேளைகளில் சொல்ல வேண்டுமென்று நினைத்து தயங்கி நின்றேன். இப்போது சொல்கின்றேன்...

"வேட்டைக்காரன் பகிஷ்கரிப்பை வலிதாக முன்னெடுக்கவும்" எனத் தலைப்பிட்டு - தமிழகப் பிரச்சாரப் பீரங்கிகள் றேஞ்சிலே என்னை நினைத்து நீ அனுப்பிய மின்னஞ்சல் எரிச்சலைத்தான் எனக்கு ஊட்டியது.

நடிகர் விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை ஈழத்தமிழர்கள் புறக்கணிக்க அளிக்கப்பட்ட உமக்கு வலிதான காரணங்கள் இரண்டு... முதலாவது, விஜய் இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிரஸ்காரர்களை சந்தித்து அவர் அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடியது. இரண்டாவது, இலங்கை இராணுவத்துக்கு இசையமைத்த இராஜ் வேட்டைக்காரன் படத்தில் விஜய் அன்ரனி உடன் இணைந்து இசையமைப்பது.

நண்பா, விஜய் மட்டுமல்ல... இந்தியாவின் எல்லா அரசியல்வாதிகளும் அவர்களின் அரசியல் வாழ்வு கருதி அடிக்கின்ற பல்டிகளுக்காக இனியும் நாங்கள் வாய் பார்த்துக் காத்திருக்கப் போகின்றோமா...? நேற்று காங்கிரஸ்காரர்களை சந்தித்த விஜய் நாளை சீமானைக் கட்டிப்பிடித்து "போஸ்" கொடுப்பதால் மட்டும் - அன்று அஜித், அர்ஜூன் அடித்த கரணம் போல - வேட்டைக்காரன் ஈழத்தமிழர்களுக்கான படமாகிவிடுமா..?

பருத்தித்துறை வீதியில் பயணிக்கும் போது கொடிகாமம் சந்தியைக் கடந்த பின் மனதிலே ஒரு வித அமைதி குடி கொள்ள - ஒரு முறை அவர்களுக்காக நான் என்றைக்கும் வணங்கிச் செல்கின்றேன். அந்த உணர்வில் - தனது இராணுவத்துக்காக தலை வணங்குகின்ற இராஜின் உணர்வில் எப்படி எங்களால் குற்றம் காண முடியும்...?

இலங்கையின் ஒவ்வொரு சிங்களக் குடிமகனும் தன் நாட்டுப்படைகளுக்கு தலை வணங்குவதை மட்டும் காரணம் காட்டி கொழும்பிலுள்ள என்னால் அவர்களைப் புறக்கணிக்க முடியாது. இதற்கு அவர்களின் கால் நக்கியாய் என்னைக் காரணப்படுத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. இராஜ் இனைப் புறக்கணிக்க முடிவு செய்தால் வேட்டைக்காரனை மட்டுமல்ல - கொமர்ஷியல் வங்கியில் ATM மூலம் பணம் கூட பெற முடியாதே...

எங்கள் உறவுகளிடம் வேட்டைக்காரனைப் பற்றிக் கேட்டுப்பார்த்தால் "தெரியாது" என்றுதான் பதில் தருவார்கள். தன் மகன் எங்கே..? அவன் எப்போது வருவான்..? என்பதை விட உன்னையும் என்னையும் போல வேட்டைக்காரனுக்காக அலட்டிக் கொள்ள அவர்களுக்கு நேரம் இருக்காது. அப்படித்தான், அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் சொல்ல மாட்டார்கள்... ஏனெனில், எங்கள் பார்வையில் அது கலாச்சார சீரழிவாகிவிடுமே...

நீ குறிப்பிட்ட ஈழத்தமிழர் புறக்கணிப்பு தலையங்கத்துடன் மட்டும் தங்கி விட, படத்துக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றித்தானே அறிக்கையின் உள்ளடக்கம் அதிகமாக பேசுகின்றது. என் நண்பன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது... இது இதேதான்...
"நாங்கள் என்னவும் செய்வம். அதைப்பற்றி மற்றவன் மூச்சு விடக்கூடாது. ஆனா மற்றவன் மூச்சு விடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம் - புலம்பெயர் தமிழர்"

நான் விஜய் என்னும் நடிகனின் தீவிர ரசிகனும் அல்ல... அவன் படங்களை முந்திக் கொண்டு பார்க்கத் துடிப்பவனும் அல்ல. ஆனால், முதல் நாள் காட்சியில் களேபரம் நடக்குமே... எப்படியென்றால், கடந்த நவம்பர் 27 - புனிதமான நன்னாளில் சுவீஸில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் செய்த கோஷ்டி மோதல் போல... சில காட்சிகளை வேண்டுமானால் உனக்கும் அனுப்பி விடுகிறேன்.

ஒன்று சொல்ல மறந்திட்டேன்... நேற்றும் உனக்காக விசாரித்துப் பார்த்தேன். ஜனவரி வரைக்கும் சிறிலங்கா எயர்லைன்ஸ் இல் இலங்கைக்கான ரிக்கட்டுக்கள் இல்லையாம்.

சந்திப்போம்.

Monday, December 14, 2009

படம் காட்டும் பதிவுலகம் - மூக்குடைந்த பிரதமர்

73 வயதுடைய இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அவர்கள் மீது நேற்று நடாத்தப்பட்ட திடீர்த்தாகுதலில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் அவருடைய இரு பற்களும் நொறுக்கப்பட்டுள்ளன.

மக்களுடன் பிரதமர் அளவளாவிக் கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர் ஒரு மனநோயாளி எனவும் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தாலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்த பாதுகாப்பு கமரா ஒன்றில் பிரதமர் மீதான தாக்குதல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

★ ★ ★முகத்திலும் வாயிலும் தாக்குதலுக்கு இலக்காகிய இத்தாலியப் பிரதமர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து பாதுக்காப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்படுகிறார்.

★ ★ ★நேற்று தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டிற்க்கான உலக அழகிப் போட்டியில் கிப்ரால்டர் (Gibraltar) நாட்டைச் சேர்ந்த‌ கயானி அல்டோரினோ (23 வயது) வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்.

★ ★ ★சமாதானத்துக்கான நோபல் பரிசினைப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்கள் நிகழ்வின் சிறப்பாக முன்னைய விருதாளர்களின் பெயர்ப் பட்டியலில் தன் பெயரையும் இணைத்துக் கொள்கிறார்.

★ ★ ★இலங்கையுடனான இறுதி ருவென்ரி-20 போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்து தொடரை சமப்படுத்திய பெருமிதம்...

பந்து வீச்சில் மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி, துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது அதிரடியாக 60 ஓட்டங்களைக் குவித்து ஆட்ட நாயகனாக யுவராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.

சிறப்பம்சம் என்னவென்றால், தனது பிறந்தநாளன்று - சொந்த மைதானத்தில் - கட்டிப்பிடித்து முத்தங்கள் வாங்கிய மைதானத்தில் இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

Sunday, December 13, 2009

பதிவர் சந்திப்பு 2 - சில புகைப்படங்கள்

இன்று ( டிசம்பர் 13, 2009) சிறப்புற நடைபெற்ற இலங்கைத்தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 2 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில...


முத்துக்கள் மூன்று - 02

காதலைப் பாடாத கவிஞன் இல்லை என்பது போல காமத்தைத் தொட்டுக் கவிபுனையாக் கவிஞனும் இல்லையெனலாம்... காமத்தை காதலினூடு குழைத்து தருகின்ற பாடல் இது. காமத்தை பச்சையான ஆபாசங்களாக முன்வைக்காது இரட்டை அர்த்தத்துக்குள் நுழைந்து காதுக்கினிய கானம் தருகின்றான் இந்தக் கவிஞன்.

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற...

இப்பாடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்ததாகவும் ஒரு தகவல்.

இம்மாதம் தனது அறுபதாவது அகவைக்குள் காலடி எடுத்து வைத்த நடிப்புலக மேதை ரஜனி அவர்கள் நடித்த தங்கமகன் திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றது.

இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலியெனப் பலர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் இப்பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் புலமைப்பித்தன். (இதனைத் தெளிவுறுத்திய கானாபிரபா அண்ணாவுக்கு நன்றிகள்)

இளையராஜா இசையமைக்க எஸ்.பி.பி.யுடன் இணைந்து எஸ்.ஜானகி இப்பாடலைப் பாடியுள்ளார்.

★ ★ ★

முண்டாசுக் கவிஞன் பாரதியார் எழுதி பின்னர் தமிழ்த் திரைப்படங்களில் ஒலி ஒளி வடிவம் அளிக்கப்பட்ட பாடல்களில் என்றைக்கும் நின்று அர்த்தம் அளிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்து போனதனால்
நானும் ஓர் கனவோ... இந்த ஞாலமும் பொய் தானோ...?

வாழ்வின் விளிம்பில் இருந்தவாறு தான் நடந்து வந்த பாதைகளையும், சுமந்து வந்த பாரங்களையும், சமூகம் தனக்குத் தந்த சன்மானங்களையும் எண்ணிப்பார்க்கின்றான் இக்கவிஞன்.

சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை, சுதந்திர தாகம், காதல், ஆன்மிகம்... என இவன் தொட்டுச் செல்லாத பக்கங்களே இல்லை எனுமாப் போல் எந்தக்காலமும் நின்று வாழும் கவிதை படைத்த எட்டயபுரத்தோன் இவன்...

கேட்டுப்பாருங்கள்... இளையராஜாவின் இன்னிசையில் ஹரிஸ் ராகவேந்திராவின் குரலசைவில் ஒலிக்கின்றது இப்பாடல்...

★ ★ ★

அண்மையில் வெளிவந்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களில் பலமுறை பலராலும் கேட்டும் பார்த்தும் முணுமுணுக்கப்பட்ட பாடல் இது.

எந்தவித பிண்ணனிக்காட்சிகளுமற்று - வெட்ட வெளி போன்ற பிரதேசத்தில் காதலனும் காதலியும் இணைந்து காதலிசைப்பது போன்ற பாடலுக்கான காட்சி பலமுறை பார்த்தும் அலுக்காத ஒன்று...

நதியே நீ எங்கே என்று கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேடக் கூடாதா

பாடலின் ஒவ்வொரு வரிகளும் காதலர்கள் பலரின் கடிதங்களில் மேற்கோளிடப்பட்டன.

சர்வம் படத்தில் யுவன் சங்கர்ராஜா இசையமைக்க ஜாவேட் அலி உடன் இணைந்து மதுஸ்ரீ பாடுகின்றார்.
Wednesday, December 9, 2009

அம்மாக்கா

கனகத்தார் வீட்டுப்படலையைத் திறக்கும் போதே "உவர் இப்ப என்னத்துக்கு வாறார்.." என்று அலுத்துக் கொண்டேன். ஆனாலும், மனுசன் பூராயம் புடுங்கத்தான் வருகுது என்று விளங்காமலும் இல்லை. நேற்றுத்தான் "உவ்வளவு நடந்தும் உவன் கனகன் இன்னும் திருந்தவில்லை" என்று பக்கத்து வீட்டுக்கு குடியிருக்க வந்த சரசு ஆச்சி அம்மாவுக்குச் சொல்லிக் கவலைப்பட்டா. மனிசி பாவம்... மூத்தது இரண்டும் எங்கேயென்று தெரியாமல் தவிக்க கனகத்தார் போய் நாட்டாமை கதைச்சிருக்கிறார்.

"பிள்ளை எப்படி இருக்கிறாய்" நான் எதிர்பார்த்தது போலவே அக்காவிடம் தான் அவர் கதையைத் தொடக்கினார்.

"இருக்கிறம்..." நீண்ட பெருமூச்சுடன் வெளிப்பட்ட அவள் பதிலில் வெறுமை தெரிந்தது. உண்மையாக எல்லாவற்றையும் தொலைத்து விட்டு இன்று 'உறவு இணைப்பாக' எங்களிடம் வந்திருக்கிறாள். இப்ப கொஞ்சம் முதல் தான் வெளிநாட்டிலுள்ள ஒருத்தனிடம் உதவி கேட்க கோல் எடுத்தவள் டெலிபோனையே அடிச்சு நொறுக்கும் கோபத்தோடு தூக்கி எறிந்து விட்டு இருக்கிறாள். பிறகென்ன... மே 17 என்ன நடந்தது... எப்படி வந்தனீங்கள்... அவர் எங்கே... இத்தனை கேள்விகளுக்கும் குறுக்கு விசாரணைகளுக்கும் பதில் சொல்லித்தான் யூரோக்கள் பெற வேண்டுமா..?

அந்த நேரம் பார்த்து கனகத்தார் இன்னொரு கேள்வி கேட்டார். "பிள்ளை... உவள் அம்மாக்கா உங்களுக்கு கிட்டவாகத்தானே இருந்தாள். இங்கால எங்கேனும் வந்தவளோ...?"

★ ★ ★

அம்மாக்காவை எனக்கும் தெரியும்... 15 வருசத்துக்கு முதல் - நான் சின்னவனாக இருக்கும் போதே தினமும் அவளைக் காணுவேன். காலையிலே நித்திரையாலே எழும்பி வேலியிலே வேப்பங்குச்சி முறிச்சு பல் தீட்டும் போது ஒரு உருவம் கடற்கரையாலே ஓட்டமும் நடையுமாக வரும். ஐயன் சம்மாட்டியின்ர கரைவலை குறுகிற நேரமும் அதுதான். தலையிலே மீன் சந்தைப்பெட்டியைக்காவிக்கொண்டு வாற அந்த உருவம் தான் அம்மாக்கா.

அவளுக்கு எப்படி அம்மாக்கா என்ற பெயர் வந்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால், எல்லோருக்கும் அவள் அம்மாக்கா தான்.

அப்போது, அவளுக்கு ஒரு மகள் படிச்சுக் கொண்டு இருந்தாள். அதைத்தவிர அவளுக்கு சொந்தமென்று ஊருக்குள் யாரும் இருந்தாதாக ஞாபகமில்லை. அவள் தலை சுமக்கின்ற அந்த சந்தைப்பெட்டிதான் அவளுக்கும் மகளுக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தது.

ஒரு நாள் அம்மாக்கா வீங்கிப்போன முகத்துடன் எங்கட வீட்டுக்கு வந்தாள்... அவள் கண்கள் சிவந்து போயிருந்தன. அம்மாவை தனியக் கூட்டிக் கொண்டு போய் விம்மி விம்மி அழுதாள்... பார்க்கப் பாவமாய் இருந்தது.

அம்மாக்காவுக்குத் துணையாய் இருந்த அவள் மகளும் போய் விட்டாளாம்... அவளைப் பார்க்கப் போறதுக்குத்தான் காசு மாற வந்தவள் என்று அவள் போனதுக்குப் பிறகு அம்மா சொல்லிக் கவலைப்பட்டா.

அம்மாக்காவின் மகள் மட்டுமல்ல... பல இளசுகள் போய்க் கொண்டிருந்த காலம் அது...

அதற்குப் பின்னும் அவள் சந்தைப் பெட்டி சுமந்தாள். அவள் மகளுக்காக...

★ ★ ★

நான் எதிர்பார்த்ததற்கு மாறாக கனகத்தார் கேட்டதுக்கு அக்கா பதில் சொல்லத் தொடங்கினாள். கனக்கின்ற மனதை எங்கேயாவது இறக்கி வைத்தால் சுகமென நினைத்திருப்பாள் போல...

"அம்மாக்காவின்ர மகள் அங்கேயே கலியாணமும் முடிச்சு அவளுக்கு மூன்று வயதில ஒரு பெடியனும் இருந்தது... அவன் பேர்த்தியைப் போல நல்ல வடிவும் நிறமும்... அம்மாக்காவுடன் தான் இருந்தவன்.


நாங்கள் வாறதுக்கு மூன்று நாளுக்கு முன்னமும் சந்திச்சம். அப்பத்தான் சொன்னவா... 'இப்பவெல்லாம் ஒவ்வொரு நாளும் மகளும் மருமகனும் வந்து பேரனைப் பார்த்து கொஞ்சிப்போட்டு போகினம். அதுகள் வராமல் எப்படிப் பிள்ளை இவனைக் கொண்டுவாறது...? ஏதோ நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் வேற வழி இல்லை... ஆனால், நான் கும்பிடுற மண்டலாய்ப்பிள்ளையார் கைவிடமாட்டார் பிள்ளை...'

மனிசியைப்பற்றித் தெரியும் தானே. மகளுக்காக உயிரையும் கொடுக்கும். பிறகு நாங்கள் வந்திட்டம். என்ன பாடோ தெரியவில்லை..."

கேட்டுக் கொண்டிருந்த எல்லோரும் 'உச்' கொட்டி, நீண்டதாய் பெருமூச்சு விட்டு கண்ணீர் கசிந்தார்கள். ஆனால், அக்காவோ பல கதைகளில் இதுவும் ஒன்று எனுமாற்போல் சொல்லி முடித்தாள்.

இப்போது கனகத்தாரின்ர முகத்தை அவதானித்தேன். என்னாலே நம்ப முடியவில்லை. சத்தியமாக அவர் முகத்திலும் கவலை ரேகைகள் வரைந்திருந்தன... ஆனால், "ஒப்பந்த காலத்திலே அம்மாக்கா கொஞ்சக்காசு வாங்கிக் கொண்டு போனவள்... அதுதான் கேட்டன்..." என்ற கனகத்தார் சடக்கென எழும்பி சறத்தை மடிச்சு தொடை தெரியக் கட்டிக் கொண்டு நடையைக் கட்டினார்.

அம்மாக்கா எப்போதும் போலவே இப்போதும் கெட்டிக்காரி... கடனாளிகளாக ஒருத்தரையும் விட்டு வைக்காமல் மகளையும் பேரனையும் கூட்டிக் கொண்டே போய் விட்டாள்...


Monday, December 7, 2009

படம் காட்டும் பதிவுலகம் - 02


இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற மோசமான அனர்த்தம் தந்த வடுக்கள் இவை. டிசம்பர் 3, 1984 அன்று இந்தியாவின் போபாலில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட நச்சு வாயுக்கசிவினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழ்ந்தனர். இன்றும் கூட அங்கு பிறக்கின்ற குழந்தைகளை அன்றைய கொடூரம் விட்டு வைக்கவில்லை.
(படம்: பிபிசி இணையத்தளம்)

★ ★ ★காலம் மாறிய கோலம். இன்று எதிரும் புதிருமாய்....

★ ★ ★உலகளாவிய ரீதியில் டிசம்பர் முதலாம் திகதி எயிட்ஸ் விழிப்புணர்வு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று பிபிசி செய்திச்சேவையின் இணையத்தளத்தில் காணப்பட்ட அதிர்ச்சிகரமான செய்தி இது.

நியூசிலாந்திலுள்ள ஒருத்தர் உறக்கத்திலிருந்த தன் மனைவிக்கு ஊசி மூலம் HIV கிருமிகளை உட் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறிபிட்ட அந்த நியூசிலாந்து வாசிக்கு ஏற்கனவே HIV தொற்று இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஆனால், அவர் மனைவியோ அல்லது பிள்ளைகளோ எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளாகவில்லை. அப்படியாயின், தன் மனைவிக்கு இவர் ஏன் பலவந்தமாக தன் இரத்தத்தை செலுத்தினார் என்ற கேள்விக்கு அவர் தரும் பதில்... தன் மனைவி எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுவிடலாம் எனப் பயந்து தன்னுடனான உறவுகளைத் தவிர்த்து வந்தாளாம்...

★ ★ ★உலகை ஆட்டிப்படைக்கும் பன்றிக்காய்ச்சலின் விபரீதம்....

★ ★ ★
அண்மையில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கட் ஒன்றைக் கைப்பற்றிய மகிழ்ச்சியினை ஹர்பஜனுடன் பகிரும் சிறீசாந்.

Sunday, December 6, 2009

முத்துக்கள் மூன்று - 01

என் மனதை விட்டு அகலாத - நான் ரசிக்கின்ற - சில வேளைகளில் விமர்சிக்கின்ற பாடல்களை முத்துக்கள் மூன்றாக இங்கு தருகின்றேன்; இனியும் தருவேன்.

இப்பாடல் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்ற பாடலாயினும், இன்னும் இனிமை கெட்டு விடாமல் ரசித்துக் கேட்கக் கூடிய பாடல்.

என்னைச் சுற்றியிருக்கின்ற சமூகத்தின் வேதனைகளையும், அவர்களின் ஜீவனோபாய போராட்டத்தின் கவலை தோய்ந்த பக்கங்களையும் இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் கோடிட்டுக் காட்டுகின்றன. எனக்குப் பிடித்துப் போனதற்கும் காரணம் இதுவாகுமா?

ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்

மீனள்ள கடலேறிச் சென்றவன் திரும்பிக் கரை தொடும் வரை துணையவள் தவிக்கும் தவிப்பினை சொற்கள் கொண்டு வடித்து விட முடியாது.

சில சமயங்களில் அவன் வெறும் கையுடன் கசிந்த கண்களுடன் கரை திரும்பி இருக்கின்றான்... சில சமயங்களில் ஆயிரங்கள் தாண்டி இலட்சங்களும் அள்ளி வந்திருக்கின்றான்... கடவுளும் கைவிட்ட சமயங்களில் சூறாவளியும் புயலும் அவனை அள்ளிச் சென்றிருக்கின்றன... அரக்கர்கள் இரத்தம் குடிக்க, மீன்கள் உடல் தின்ன மூன்று நாள் கழித்து கரையேறும் அவன் சன்னம் துளைத்த சடலத்தின் ஊர்வலம் பலவற்றில் என் கால்கள் நடந்திருக்கின்றன...

கேட்டுப் பாருங்கள்... எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டித் திரைப்படத்தில் விஸ்வநாதன் இராமமூர்த்தி இசையில் டி.எம். செளந்தர்ராஜன் பாடிய பாடல் இது. பாடல் வரிகள் கவிஞர் வாலி.


★ ★ ★

எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யாரென்றால் அது என்றைக்கும் இளையராஜாதான். பாடகர்களைப் பட்டியலிட்டால், மற்ற எல்லோரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்குப் பின்னால் தான். இளையராஜா, எஸ்.பி.பி. கூட்டணி தந்த பாடல்களில் எப்போது கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது.

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது

இப்பாடலின் ஒவ்வொரு கருத்தாழமிக்க வரிகளையும் எஸ்.பி.பி.இன் தேன் குரலசைவில் இளையராஜாவின் இன்னிசையில் கேட்கும் போது உலகை மறந்து கண்மூடி இரசிக்கின்றேன்.

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலியின் ஆழமிக்க வரிகள் இவை. கேட்டுப் பாருங்கள்....★ ★ ★

வான வெளி நிலா கண் சிமிட்டும் நேரம்
மனம் ஆசைகள் ஆயிரம் கொள்ளும்...
அவள் தோள் தழுவி மடி தவழ
இவன் எழுதிய அஞ்சலும் பதில் பெற்றதே...

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து வாணி ஜெயராம் பாடிய பாடல் இது.

மீண்டும் சந்திக்கின்றோம்

இலங்கைத் தமிழ்ப் பதிவர்களாகிய நாம் இரண்டாவது தடவையாக மீண்டும் சந்தித்து கலந்துரையாட உள்ளோம். கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு.மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13, 2009)  கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்புநிகழ்வு தொடர்பான முழுமையான விபரங்கள்:


இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி நிகழ்ச்சி நிரல்
 • அறிமுகவுரை 
 • புதிய பதிவர்கள் அறிமுகம் 
 • கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல் 
  • பதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன. 
 • கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை 
  • காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன 
 • சிற்றுண்டியும் சில பாடல்களும் 
 • கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது? 
 • கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும் 
  • பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும் 
 • பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி 
  • கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும். 
 • உங்களுக்குள் உரையாடுங்கள்


கடந்த தடவை போன்று இச்சந்திப்பும்   http://livestream.com/srilankatamilbloggers எனும் சுட்டியில் நிகழ்வு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.


இலங்கைத் தமிழ்ப் பதிவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து பயன்பெற்று மகிழ்வுறுவோம்.

Monday, November 9, 2009

இறப்புக்குப் பின் Facebookஎவருக்குமே தெரியாத - புரியாத புதிர் இறப்புக்குப் பின்னரான உலகம்... அது எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி நான் அலட்டிக்கப் போறதில்லை.


ஆனால், உங்கள் இறப்புக்குப் பின்னர் உங்களுடைய Facebook கணக்கிற்கு என்ன நடக்கும்..? அது முற்றுமுழுதாக முடக்கப்படுமா...? அல்லது, Facebook இல் நீங்கள் தொடர்ந்தும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்களா? அண்மையில் Facebook நிர்வாகம் இக்கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.


Facebook கணக்கு வைத்துள்ள பயனர் ஒருத்தரின் இறப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அவர் தேடுதல் பெறுபேறுகளிலிருந்து (Search results) நீக்கப்படுகின்றார். அதாவது, இறந்தவரின் கணக்கு முற்றாக நீக்கப்படாமலிருக்க, அவர் பெயர் மற்றைய பயனர்களின் தேடலில் மறைக்கப்படுகின்றது.


அத்துடன், அந்த பயனரின் கணக்குள் எவரும் login செய்து உள்நுழைய முடியாது. ஆனால், நண்பர்கள் தங்கள் இரங்கலையும் அஞ்சலிகளையும் செலுத்துவதற்காக அவரின் சுவர் (Wall)மட்டும் திறந்து விடப்படுகின்றது.அவரின் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் அங்கே சென்று தங்கள் அஞ்சலிகளையும் நினைவுப் பகிர்தல்களையும் பதிந்து கொள்ளலாம்.


Facebook ஆனது தனது முகப்புப்பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம் என சிலரை காட்சிப்படுத்தி (Friend Suggestions)அவர்களுக்கான நட்புறவினை வளர்க்க முயற்சிக்கின்றது. ஆனால், துரதிர்ஸ்டவசமாக இவ்வுலகை விட்டுச் சென்றவர்களையும் காட்சிப்படுத்தி நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுமாறு Facebbok பரிந்துரை செய்ய... வந்தது வினை. இணையத்தில் ஏகப்பட்ட விமர்சனங்கள் Facebook இனை நோக்கி வைக்கப்பட்டன. உதாரணத்துக்கு இங்கே ஒன்று.


இதற்குத் தீர்வு காணும் முகமாக, இறந்தவர்களின் கணக்குகளையும் கணக்கில் எடுக்க வேண்டிய தேவையின் நிமித்தமே "இறப்புக்குப் பின்னரான நினைவுபடுத்தல்" அறிமுகம் செய்யப்பட்டது.


உங்கள் நண்பர் ஒருத்தருக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில்,அதனை Facebook இற்கு அறியப்படுத்த முடியும். அதற்காக இங்கே கேட்கப்படும் தகவல்களை உண்மைத்தன்மையுடன் அளிக்க வேண்டும். (http://www.facebook.com/help/contact.php?show_form=deceased)


அளிக்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், இறந்தவரின் சுவர் (Wall) மரணத்துக்குப் பின்னரான நினைவுப் பகிர்தலுக்காக திறந்து விடப்படும்.

Sunday, November 8, 2009

வந்தியத்தேவன் - நவம்பர் 09

னக்குத் தெரிந்த இரண்டு கமல் பைத்தியங்களில் இவரும் ஒருத்தர். ஆனால், சினிமா பைத்தியக்காரன் அல்ல... உலகநாயகனுக்காக உருகி வழிகின்ற இவரைக் கமலஹாசன் அகராதி என்றால் கூட தப்பில்லை. கமலைப்பற்றி என்ன வேண்டுமோ இவர் கை நுனிவிரலில் கிடைக்கும்.

த்தனை அகவைகளைத் தாண்டிவிட்ட பின்னும் குழந்தைத்தனம் மாறாத இவரின் "கொல்" என்ற சிரிப்பு சிலவேளைகளில் எரிச்சல்களை தந்திருக்கின்றன. ஏனெனில், அதனால் தானே இன்னமும் பச்சிளம்பாலகனாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.

லவச ஆயிர நிமிட தொலைபேசி சேவைக்கு உரித்துடையவர். இவருக்கு அழைப்பெடுக்கும் எவருக்கும் இது தெரிந்திருக்குதோ இல்லையோ அந்த ஆயிர இலவச நிமிடங்களும் கரியாகிக் கொண்டிருக்கின்றது என்பது மட்டும் புரிந்திருக்கும். பிறகென்ன.. நான் அழைப்பெடுக்க அதை அணைத்துவிட்டு திருப்பி அழைப்பெடுக்கும் பெரும் மனசு யாரிடமிருக்கும்.

வாரத்தில் குறைந்தது ஐந்து இரவுகளிலாவது எவருக்கும் தெரியாமல் எங்கோ ஒளிந்திருந்து அந்த நான்கு பேரும் கும்மியடிப்பார்கள். சிலருக்கு மூக்குடைபடும்... சிலருக்கு டவுசர் கிழியும்... நீலம், பச்சை, வெள்ளை வண்ணங்கள் வரும்... சில வேளைகளில் முட்டி மோதி கும்மி முடியும். ஆனாலும், சொந்தச் செலவில் கருத்துக்களை உதிர்த்து சூனியம் வைப்பதில் இவருக்கு நிகர் இவரே...


ன்னைப் போல் ஒருவன்... இவருடன் இணைந்து பார்த்த முதல் படம். அதிர்ஸ்டவசமாக அது கமலின் படம். இடைவேளையில் இவரும் லோஷன் அண்ணாவும் சொன்ன "கமலிடம் எதிர்பார்த்தவைகள்" இறுதிப் பாகத்தில் பேசப்பட்டது இன்னமும் எனக்கு பிரமிப்பைத் தருகின்றது.

தோசை... முதன்முதலாய் இருவரும் சேர்ந்து உண்ட உணவு. அந்தத் தோசை உண்பதற்காய், அதிகாலை ஐந்து மணிக்கு புல்லட்டின் கதவுகள் தட்டப்பட்டது ஊரறிந்த இரகசியம். அன்று தான் தெரிந்தது இவர் ஒரு தாவர உண்ணி என... :)

ல்லோரையும் இவருக்குப் பிடிக்கும் எனப் பொய் சொல்ல மாட்டேன். ஏனெனில்,  நடிகர் விஜய் உள்ளாரே....

வர் அண்மையில் செய்த சாதனை: இருக்கிறம் சந்திப்பு முடிய சுபாங்கனின் துணையுடன் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்து, இரவு பன்னிரண்டு மணிக்கு யாரோவென எண்ணி எனக்கு அழைப்பெடுத்து கதைத்து தொலைத்தது. ஒரு பொல்லாப்பும் இல்லை.

மிக விரைவில் எங்களுக்கு கிடைக்கப் போகும் இனிய செய்தியொன்றும் உள்ளது. இந்தத் தேவனுக்கு ஒரு தேவதை... இளவரசனுக்கு ஒரு இளவரசி!!!

இத்தனையும் எதற்காக என்கிறீர்களா...?
இன்று இவருக்கு பிறந்த நாள்.

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வந்தியரே...

Thursday, October 29, 2009

சிலுவை சுமந்த சிங்காரி


பாடசாலைக் கன்ரீன்... தொடக்கப்புள்ளி இங்கேதான் துளிர்விட்டது. இருநூறுக்கு மேற்பட்டோரை கொள்ளக்கூடிய -  அந்தளவு பெரிய கன்ரீனின் எதிரெதிர் மூலைகளில் அவனும் அவளும்... இடை நடுவே நின்றவைகளையும், அசைந்தவைகளையும் ஊடுருவிப் பாய்ந்த அவர்களின் பார்வைகள் பல கதை பேசின. அவனுக்குத் தெரியாமல் அவளும், அவளுக்குத் தெரியாமல் அவனும்... இருவருக்கும் தெரிந்த போது அங்கே வாய் பார்த்துக் கொண்டிருந்த காகத்தின் மீதும் பார்வைகள் பட்டுத் தெறித்தன.

"டேய்... அந்த ஜூனியர்ப்பிள்ளை உன்னைத்தானடா பார்க்குது" தோளை உலுப்பிய பள்ளித்தோழனிடம் தெரியாத மாதிரி கேட்டான்.
"யாரடா அவள்..?"
சொன்னவன் சுட்டு விரல் அவளைச் சுட்டியதும் இவன் முகத்தில் நாணம் சிவந்தது.


* * *

பரீட்சைக்கான தயார்படுத்தல் வகுப்புக்கு தரம் பதின்மூன்றும் பன்னிரண்டும் ஒன்றாக அழைக்கப்பட்டிருந்தன. எல்லா மாணவர்களும் கற்றலில் ஊறி கரும்பலகையைத்தான் நோக்குகிறார்களென அவர்களிருவரும் எண்ணினார்கள். அதனால் தான் அந்த இருவரும் புத்தகம் கொண்டு தங்கள் முகம் மூடி கண்ணாமூச்சி விளையாடினார்கள்.

அவள் முகம் மறைத்த புத்தகம் சிறிது விலக, கயல்விழி இரண்டும் இவனை நோக்குவதும்... அந்தப் பார்வைக்காய் தவம் கிடந்தவன் நாணம் மேலிட தன் புத்தகத்துக்குள் தன் முகம் புதைப்பதுமாய் தொடர்ந்தன லீலைகள்.

அன்று ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அவன் துளியும் சம்பந்தமில்லாத ஏதோ உளற "கொல்" என்றது வகுப்பறை... தன்னை மறந்தவன் இவ்வேளையிலும் அவள் சிரிப்பை ரசித்தான்.

இது தரம் - 13... பாடசாலைப்பருவத்தின் இறுதி நாட்கள். கடைசிப் பேருந்து தவற விடாதே.... மனம் கரைச்சல் படுத்திக் கொண்டிருந்தது.


* * * பாடசாலை விளையாட்டுப் போட்டி... இரு சோடி விழிகளும் மீண்டும் சந்தித்துக் கொண்டன. பாரதியார் மஞ்சள் இல்லத்தின் அணித்தலைவி அவள். அவன் கடந்த வாரம் வெளியாகிய உயர்தரப் பரீட்சை முடிவில் பல்கலைக்கழகத் தகுதி பெற்றிருந்தான்.

"எதற்காக திரும்பத் திரும்ப அவளைச் சந்திக்கிறேன்..? அவள் எங்கேயோ பார்ப்பது போல் என்னைத்தானே பார்க்கிறாள். இது எதற்காக...? நான் மட்டும் என்ன குறைவா...? நானும் தானே பார்க்கிறேன். அப்படியானால்...?"

"அவளிடம் கேட்டுத் தொலைத்துவிட வேண்டியதுதான்... ஆனால், சில நேரம் அவள் மறுத்துவிட்டால்... வருகின்ற அவமானத்தையும் எழுகின்ற சோகத்தையும் தாங்குவேனா...?"

அப்படியானால், இப்படியே இருக்கப் போறீயா?

போராடிய மனதிடம் முடிவு இருக்கவில்லை.


* * *

பேருந்து நிரம்பி வழிந்தது. ஒரு கரத்தில் எல்லாச் சான்றிதழ்களையும் காவிக்கொண்டு மறுகரத்தால் கொலரைத் தூக்கி வியர்வை போக்க ஊதிக் கொண்டிருந்தவனுக்கு நெடுநேர இழுபறியின் பின் இருக்கை கிடைத்தது. இன்று இவன் ஒரு பட்டதாரி. வேலை தேடி நேர்முகப்பரீட்சைக்கு போய்க் கொண்டிருந்தான். தேவாரப்பதிகங்களுக்கு மாறாக எதிர்பார்க்கை வினாக்களுக்கான விடைகளை வாய் முணுமுணுத்தது. நூற்றோராவது பயணத்தில் ஆயிரத்தோராவது தடவையாக விடைகளை சரிபார்த்துக் கொண்டான்.

அடுத்த தரிப்பிடத்தில் நின்ற பேருந்து ஆச்சரியகரமாக அவளையும் உள்வாங்கியவாறு பயணப்பட்டது.

மதகுருமாருக்கான இருக்கையிலிருந்த இவன் எழும்பித்தானாக வேண்டிய நிலை.

"கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக..." நன்றியுடன் அவள் கூறி அமர்ந்தாள்.Monday, October 26, 2009

ரூபியும் நண்பர்களும்...

இத்தகவல் அவசரமாக எனக்குத் தேவைப்படுகிறது. நேற்று மாலைக்குள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தாலும், இன்னும் பொருத்தமான ஆளைக் கண்டுபிடிக்காமல் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

ஆபத்து, அவசரத்துக்கு உதவுகின்ற நண்பர்கள் இருக்கும் போது ஏன் கவலையென எண்ணி என் Gmail Chat இல் இருந்த நண்பர்களிடம் வினவினேன்.

உங்களில் யாருக்காவது ரூபி தெரியுமா...?

இக்கேள்விக்குப் பதிலாய் மூவர் அனுப்பிய தகவலால் என் வேலைத் தளமே அதிர்ந்தது. சிரித்து சிரித்து, மத்தியானச் சாப்பாடு செமித்து - வயிறு நோவெடுத்து வலித்தது.

முதலாவதாக நான் வினவியதே இவரிடம் தான். கிடைத்ததோ வில்லங்கமான பதில். குறும்பு பண்ணுபவர்களுக்கு முதல் குழந்தை ஆணாகவே கிடைக்கும் என சாத்திரக்காரன் ஒருத்தன் சொல்ல, குறும்பு பண்ணினால் தான் குழந்தையே கிடைக்கும் என அருள்வாக்கு கூறியவனிடம் விடையை எதிர்பார்த்தது என் தப்புத்தான். அவன் எனக்குப் பதிலாய் ஒரு வினாவையே அனுப்பினான்.
"டேய்... என் வாழ்க்கையில் இன்னும் சந்திக்கவில்லை. ஆனால், மூஞ்சிப்புத்தகத்தில் (Facebook) ஒருத்தியை கேள்விப்பட்டிருக்கிறேன். அவளையா கேட்கிறாய்...?"

இன்னொரு நண்பன் ஒரு படி மேலே போய், "டேய்... சும்மா நக்கலடிக்காதே... என் பக்கத்து வீட்டுப் பிள்ளையின் பேர் எப்படிடா உனக்குத் தெரியும்..? அவளுக்குப் போனமாதம் தான் நிச்சயதார்த்தம் முடிந்தது... விட்டுடா..." வாழ்த்துக்கள் நண்பா. உன் பாதையில் நான் ஏன் குறுக்கிடுவேன்!!!

"ஓமடா... தெரியும். என்னோட ஆறாம் ஆண்டிலிருந்து ஒன்றாகப் படிச்சவள். O/L இல் நல்ல றிசல்ட்டுடன் வந்து A/L இல் கொடி கட்டிப் பறந்தவள். பின்னொரு நாள் கனடாவிலிருந்து வந்த ஒருத்தன் கொண்டு போய்விட்டான்..." மூன்றாமவனுக்கு அனுதாப ஸ்மைலியை பதிலாக அனுப்பிவிட்டு Chat யன்னலை மூடியே விட்டேன்.

உங்களில் யாராவது தெரிந்திருக்கிறீர்களா எனக் கேட்டு திரும்பவும் நான் நொந்து போவதை விட விளக்கமாகவே கேட்டுவிடுகின்றேன்.

உங்களில் யாருக்காவது ரூபி(Ruby Programming Language) தெரியுமா?

அப்படித் தெரிந்து இலங்கையில் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி

Sunday, October 18, 2009

பொண்டாட்டிக்கு புள்ள பிறந்தாலும்....

தொண்டர்கள் பொண்டாட்டிக்கு புள்ள பிறந்தாலும் நீயே காரணம் தலைவா...................


Saturday, October 10, 2009

சமாதானக் கையூட்டு


ஐ.தே.க
நீண்ட காலத்தின் பின்னர்
நினைவூட்டப்படுகிறது இப்பெயர்...
வரத் தொடங்கியிருக்கும்
தேர்தல் முடிவு குறுஞ்செய்திகளில்
ஆச்சரியமாய்த் தொங்குகின்றது
எதிர்க்கட்சி ஜனநாயகம்...


விஜயம்
முப்பத்திரண்டு பற்களையும்
காட்டியவாறு வந்திறங்குவீர்கள்.
உங்களுடன் குலுக்குவதற்கு
கைகளில்லாதவனின் மனம்
இப்படியும் உங்களை சபிக்கலாம்...
"என்னையும் சேர்த்து கொல்வதற்கு
ஏன் மறந்தீர்கள்...?"


சமாதானம்
உன்னைத் தேடிக் களைத்துப் போனார்கள்.
அதனால் தான்,
நீ வருவாயென்ற நம்பிக்கையை விட
கையூட்டுக் கொடுத்தாவது வர வைக்கின்றார்கள்.
ஒபாமாவுக்கு நோபல் பரிசு...!!!


Couple Package
இன்னமும் என் தொலைபேசியில்
இரு வருடங்களுக்கு முன்னைய உன் SMS.
பார்த்தாயா...?
இரு வருடமாய் எனக்கு நீ SMS அனுப்பவில்லை.
எங்கள் Couple Package இற்கு இன்றுடன் இரு வருடங்கள்....!!!

Wednesday, October 7, 2009

இதுவும் கடந்து போகும் - அவதியுறும் அகதி வாழ்வு

பல்கலைக்கழக வாணி விழா(2009) கவியரங்கக்கவிதை.
அவதியுறும் அகதி வாழ்வு எனும் தலைப்பின் அறிமுகமாக என்னால் பகிரப்பட்ட கவிதை இது.

புரிகிறது...
இந்த அமைதிக்கு அர்த்தம் புரிகின்றது.

இனிப் பேசும் வார்த்தைகள் கூர்மையானவை...

துரோகி... பயங்கரவாதி...
இரண்டுக்கும் நடுவே
அப்பாவியாக கவிதை சொல்ல வேண்டும்.
ஆனாலும்,
அப்பாவிகள் தானே எங்கும் முதல் இலக்கு..!!!

அந்த மூன்று நாட்கள் - என்
தேசக் கடிகாரம் முப்பது வருடங்களை
இடஞ்சுழியாக ஓடிக்களைத்து
இன்று தாகத்துக்கு நீர் கேட்கின்றது...

மன்றாடிக் கேட்கின்றேன்...
ஆராய்ச்சிகளையும் ஒப்பாரிகளையும் நிறுத்தி விடுங்கள்...

நாங்கள் பட்டு வேட்டிக் கனவில் கிடந்த போது
சிலுவை சுமந்தார்களே...
நாம் இணையத்தில் பாட்டுக் கேட்டு சுதந்திரம் வேண்டிய போது
அதற்காக தீயினில் வெந்தார்களே...
நாளை வரும் நாம் நிமிர்வோம் எனக் காத்திருந்தது
தூர விலகினாலும்,
அதற்காக உயிரையும் கொடுத்தார்களே...
இன்று அடைபட்டுக் கிடக்கும் அந்த மக்களுக்காக
குரல் கொடுங்கள்...

அகதி வாழ்வு...
அது நேற்று வந்தது அல்ல...
91 ஜூலை மாதத்தில் ஓர் நாள்
என் பெயர் முன்னும்
வந்து குந்திய அடையாளம்
இன்றும் தொடர்கின்றது...

வீடிழந்து...
ஊரிழந்து...
உறவிழந்து...
தொடருகின்ற எங்கள் அவலப் பயணத்தில்
கணிதவியலாளனாய் சிந்தித்தால்
வர்க்கமுமல்ல... கனமுமல்ல...
இது அகதி வாழ்வின்
எத்தனையோ அடுக்கு...!!!

நீண்ட நெடும் பயணத்தில்
மீண்டும் வந்து பூச்சியத்தில் நிற்கின்றோம்.
குஞ்சு குருமன் எல்லாம்
விலையாகக் கொடுத்துவிட்டு
பிச்சைப்பாத்திரம் எங்கள் கரங்களில்...

தியாகங்கள்...
வரலாறுகள்...
எல்லாவற்றையும் பேசுங்கள்
குறை சொல்லவில்லை...
ஆனால்,
செல்லடித்து செத்து வந்தவர்களை - உங்கள்
சொல்லடியால் சாகடிக்காதீர்கள்.

நம்பிக்கை தானே வாழ்க்கை...
அந்த நம்பிக்கையின் மீதேறி சொல்கின்றேன்
இந்த அவலமும் ஓர் நாள் கடந்து போகும்.

Sunday, September 20, 2009

பத்துக் கேள்விகளும் வந்தியத்தேவனின் பதில்களும் - 2

"வானொலி மூலம் வலைப்பதிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினமான காரியம். பல பிரபல வானொலி அறிவிப்பாளர்கள் வலைப்பதிவர்களாக இருந்தும் வானொலியில் ஒன்றும் செய்யமுடியாத நிலை. இதற்கான விளக்கத்தை அவர்கள் தந்தால் நல்லது." - வந்தியத்தேவன்.

2006 ஜூலை தொடக்கம் இன்று வரை - மூன்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையிலிருந்து என் உளறல்கள் எனும் பெயரிலான வலைத்தளத்தில் எழுதி வருபவர் வந்தியத்தேவன். வலையுலகம் தொடர்பாக இவரி்டம் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான தன் கருத்துக்களை பகிர்கின்றார். அதன் இறுதிப்பகுதி இது. முதல் பகுதியை இங்கு பார்க்கலாம்.

கேள்வி: இணையத்தில் அதிகமாக இந்தியச் சொற்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இலங்கைப் பதிவர்களும் பொருள் விளக்கமின்றி அச்சொற்களை பயன்படுத்த ஆரம்பித்து இசைவாக்கம் பெற்றுவிட்டார்கள் எனும் ஆதங்கம் ஒன்று எழுகின்றது. 2006 ஆம் ஆண்டிலிருந்து இணையத்தில் எழுதி வரும் உங்களின் இது தொடர்பான பார்வை...

பதில்: இணையத்தில் மட்டுமல்ல பொதுவாகவே தமிழகத்தில் பயன்படுத்திவரும் சொற்கள் குறிப்பாக சினிமாவில் பாவிக்கப்படும் சொற்கள் எம்மிடம் பரவுவது வழமை. முன்னர் நல்லாயிருக்கு என ஒரு விடயத்தை குறிப்பிட்ட நாம் இப்போது சூப்பர் என்கின்றோம் (சூப்பர் தமிழ்ச் சொல் அல்ல). அத்துடன் வடிவேல், விவேக் வசனங்களை சின்னவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்துகின்றோம், உதாரணமாக சப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே, எஸ்கேப் போன்ற வசனங்கள்.

இணையத்தைப் பொறுத்தவரை கும்மியடித்தல், மொக்கை போன்ற சொற்கள் தமிழகத்திடம் இருந்து பெற்றுக்கொண்டவையே. இவற்றை நம் பதிவர்கள் விளக்கமின்றிப் பயன்படுத்துகின்றார்கள் என்பது ஏற்புடையது அல்ல. அவர்கள் விளங்கியே பயன்படுத்துகின்றார்கள். அதே நேரம் இணையத்தில் கூடுதலாக தனித் தமிழில் பதிவுகள் காணப்படுவது சிறப்பு. காரணம் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகைகள் என அனைத்தும் தமிங்கிலீஸ்க்கு மாறும்போது வலைப் பதிவர்கள் பெரும்பாலும் தனித் தமிழுடன் நிற்கின்றார்கள்.

சென்னைத் தமிழில் சொன்னால் வலையில் பீட்டர் விடும் பதிவர்கள் குறைவு. அதே நேரம் அவர்களுக்கு நம்மவர்களின் எழுத்து நடையும், வட்டாரச் சொற்களின் பயன்பாடும் இணையம் மூலம் தெரியவந்திருக்கின்றது என்ற உண்மையையும் மறக்ககூடாது.


கேள்வி: இலங்கையிலிருந்து இணையத்தில் எழுதுபவர்களை ஊடகங்கள் கணக்கில் எடுப்பதில்லையெனும் குற்றச்சாட்டு தொடர்பான உங்களின் கருத்து...

பதில்: இங்கே ஊடகங்கள் எனும் போது பத்திரிகை, சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவை உள்ளடக்கப்படும். பத்திரிகைகளில் முன்னர் தினக்குரலில் இலங்கையைச் சேர்ந்த வலைப்பதிவர்கள் பற்றிய தகவல்கள் வந்தன. மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் இன்றும் இலங்கை வலைப்பதிவர் மட்டுமல்லாது ஏனைய சிறந்த வலைப்பதிவுகள், இணையப் பக்கங்கள் பற்றிய செய்திகள் வருகின்றது. சஞ்சிகைகளில் மல்லிகையில் பல காலமாக திரு.மேமன்கவி அவர்கள் "மின்வெளிதனிலே" என்ற தலைப்பில் வலைகள் பற்றி எழுதுகின்றார். அண்மையில் நடந்த இலங்கை வலைப் பதிவர் சந்திப்புப் பற்றி இந்த மாத மல்லிகையில் எழுதியுள்ளார். இருக்கிறம் சஞ்சிகை சில வலைப்பதிவர்களின் ஆக்கங்களை வெளியிட்டிருக்கின்றது, ஆனால் வலைப்பதிவுகள் பற்றிய விடயங்கள் வெகு குறைவு. அத்துடன் அங்கே ஆக்கங்கள் எழுதுபவர்கள் வலைப் பதிவர் என எந்த ஆதாரமும் அவர்கள் இடுவதில்லை.

மற்றும் படி வலைப் பதிவுகள் பற்றிய செய்திகளோ, வலைப் பதிவர் பற்றிய தகவல்களோ பத்திரிகைகள் சஞ்சிகைகளில் பெரும்பாலும் வருவதில்லை.

வானொலி மூலம் வலைப்பதிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினமான காரியம். பல பிரபல வானொலி அறிவிப்பாளர்கள் வலைப்பதிவர்களாக இருந்தும் வானொலியில் ஒன்றும் செய்யமுடியாத நிலை. இதற்கான விளக்கத்தை அவர்கள் தந்தால் நல்லது.

தொலைக்காட்சியைப் பொறுத்தவரை எங்கள் நாட்டுத் தொலைக்காட்சிகள் மெஹாசீரியலிலே பெரும்பாலும் தங்கியிருக்கின்றார்கள். இந்தியத் தொலைக்காட்சிகள் வலைப்பதிவர்களுக்கும் வலைப் பதிவுகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் நம் தொலைக்காட்சிகள் கொடுக்கவேயில்லை.

தொலைக்காட்சியினூடாக புதிய பதிவர்களை உள்வாங்குவது மிகவும் இலகு. காலை நேரத்தில் தலைவிரி கோலமாக நடத்தும் நிகழ்ச்சிகளில் இவர்கள் வலைப்பதிவுகளை அறிமுகப் படுத்தலாம் ஆனால் ஏனோ செய்வதில்லை. சில வேளைகளில் அவர்களுக்கு இது பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் பிரபல பதிவர் கேபிள் சங்கர் அவர்கள் ஜெயா தொலைக்காட்சியில் வலைப் பதிவு பற்றிய பல கருத்துகளை ஒரு நேரடி ஒளிபரப்பின் மூலம் தெரிவித்தார்.

முதலில் வலைப் பதிவு என்றால் என்ன? எப்படி வலைப்பதிவு செய்வது? இணையத்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி ஊடகங்கள் தெரிவித்தால் தான் மற்றவர்களுக்கும் இவை பற்றித் தெரியும். அதைவிடுத்து விட்டு நீங்கள் முதலில் ஆக்கபூர்வமாக எழுதுங்கள் பின்னர் ஊடகங்களைப் பார்க்கலாம் என்பது சின்னப் பிள்ளைத் தனமான கருத்து.

தினக்குரலில் பதிவர்கள் பற்றிய கட்டுரை வந்த நேரங்களில் பல வாசகர்கள் கிடைத்தார்கள் என்பது உண்மை.

அதே நேரம் இந்திய ஊடகங்கள் வலைப் பதிவர்கள் மேல் தங்களது பார்வையை வீசத் தொடங்கிவிட்டன. பல பதிவர்கள் விகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகளில் எழுதுகின்றார்கள்.

ஆனால் அந்த நிலைமை இங்கே இன்னும் வரவில்லை. பத்திரிகைகள், சஞ்சிகளைகளுக்கு கொடுத்த ஆக்கங்கள் பல அச்சேறுவதேயில்லை. ஆனால் வலையேறி பலரின் பாராட்டை பெறுகின்றது. இதற்கான காரணம் சிலவேளைகளில் வலைப் பதிவர்கள் பிரபலமாக இல்லாததுமாக இருக்கலாம்.

அத்துடன் மிகமுக்கியமான விடயம் வலைப்பதிவுக‌ள் ஏற்படுத்தும் தாக்கங்கள். அண்மையில் வெளியான கந்தசாமி திரைப்படத்திற்க்கு வலைப்பதிவர்கள் எழுதிய நேர்மையான நடுநிலையான விமர்சனங்கள் தயாரிப்பாளர்களையும், சில இயக்குனர்களை கடுப்பாக்கியிருக்கிறதாக ஒரு இணையம் செய்தி வெளியிட்டது.

வலைப்பதிவர் ஏனைய ஊடகங்கள் போல் சுமாரான படத்தை சூப்பர் என விமர்சிக்கவோ இல்லை நல்ல படத்தை குப்பை என விமர்சிக்கவோ இல்லை. அவர்கள் தங்கள் பாணியில் படத்தின் நல்லது கெட்டதுகளைச் சொல்கின்றார்கள்.

கேபிள் சங்கரின் திரைவிமர்சனத்தைப் படித்துவிட்டு படம் பார்க்க போகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

அடுத்ததாக இந்த வருடம் தென்னாபிரிக்காவில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர் அணியின் உள்வீட்டு ரகசியங்களை வெளிக்கொணர்ந்த போலி ஐபிஎல் வீரரும் வலைப்பதிவர்தான்.

ஆகவே வலைப்பதிவர்களின் பதிவுகளினால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்டவர்களை எங்கள் நாட்டு ஊடகங்கள் கண்டுகொள்ளாதது கவலையளிக்கின்றது.


கேள்வி: மூன்று வருட உங்களின் இணைய எழுத்தில் சிறந்ததென நீங்கள் கருதும் உங்களின் படைப்பு ஒன்றும், நீங்கள் வாசித்ததில் இன்றும் நினைவிலிருந்து அகலாத படைப்பு ஒன்றும் கேட்டால்...

பதில்: நான் எழுதியவற்றில் பல படைப்புகள் எனக்குப் பிடித்திருந்தாலும் தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் என்ற படைப்பு மிகவும் பிடித்திருந்தது. இதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம். ஒன்று நான் ஒரு கமல் ரசிகனாக இருப்பதால் அவரைப் பற்றி சுவையாக எழுதியது. இன்னொன்று சென்ற வருடம் தமிழ்மணம் நடாத்திய "தமிழ்மணம் விருதுகள் 2008" போட்டியில் காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்) என்ற பிரிவில் பத்தாவது இடத்தைப் பிடித்தது. (இணைப்பு - http://awards2008.tamilmanam.net/polls/?p=9)

அதே நேரம் பலரால் பாராட்டப்பட்ட பதிவாக அண்மையில் மீள் பதிவு செய்த "வாசிப்பு ஒரு தவம்" என்ற பதிவைக் குறிப்பிடலாம்.

பல படைப்புகள் மனதை விட்டு அகலாது இருந்தாலும் சில மட்டும் ஏனோ இன்னமும் ஞாபகம் இருக்கும். கானாபிரபாவின் 2006 செப்டம்பரில் எழுதிய "அந்த நவராத்திரி நாட்கள்" என்ற பதிவு மனதில் நிற்க காரணம் அவர் அந்த நாளில் நாம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுகின்ற சரஸ்வதி பூஜை பற்றி மண் மணத்துடன் எழுதியிருந்தார்.

அத்துடன், மு.மயூரனின் சர்ச்சை ஏற்படுத்திய பதிவான அவர் 2005 மேயில் எழுதிய "கம்பன் விழா மேடைக்கு ஏன் கல்லெறிய வேணும்?" என்ற பதிவு. அந்தப் பதிவு மனதில் நிற்க காரணம் அந்த நாட்களில் எந்த நிகழ்ச்சி பற்றியும் எதிர்க் கருத்துகள் வராத போது மிகவும் துணிவுடன் மு.மயூரன் தன் கருத்துகளைக் கூறியிருந்தார். மு.மயூரன் என்றால் இன்றைக்கும் ஏனோ கம்பன் கழகம் மனதில் வந்துபோகும்.


கேள்வி: இணையத்தில் எழுத வந்ததன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்...

பதில்: மறக்கமுடியாத அனுபவம் என்றால் அது நிச்சயமாக பதிவர் சந்திப்புதான். சந்திப்பில் பேசியவைகள், விவாதித்தவைகள் எல்லாவற்றையும் விட பல நண்பர்களை எனக்குத் தந்திருக்கின்றது. இதில் சிலர் எனது பாடசாலை மாணவர்கள் என்பது இன்னும் பெருமை. இந்த நட்பு இப்போது தொலைபேசி உரையாடல்கள், ட்விட்டர் கும்மிகள், ஜீமெயில் அரட்டைகள், நேரடிச் சந்திப்புகள் என தொடர்கின்றது.

இவர்களில் பலர் என்னைவிட ஓரிரண்டு வயது குறைந்தவர்கள் என்பதால் தம்பியாகவே பழகுகின்றேன். தம்பி உடையான் படைக்கஞ்சான் என்பார்கள். எனக்கு இப்போ புல்லட், ஆதிரை, சதீஸ், கெளபாய் மது, சுபானு, நிமல், யோகா, மருதமூரான் (அறிவில் எனக்கு அண்ணன்), பால்குடி எனப் பல தம்பிகள் கிடைத்திருக்கின்றார்கள்.

அத்துடன் இந்த சந்திப்பின் மூலம் நிறைய நண்பர்கள் நேரடியாகவும் வலைமூலமும் நண்பர்களாயிருக்கின்றார்கள். குறிப்பாக சந்ரு, கீத், கரவைக்குரல், சினேகிதி, மயூரேசன், மாயா, மயூரன்(பல காலமாகத் தெரிந்தவர்), சயந்தன், டொன்லீ, சேரன், கனககோபி, யாழினி, சம்யுக்தா என நம்பவர்களின் பட்டியல் நீளும் (தவறவிட்டவர்கள் மன்னிக்கவும்).

இவர்களை விட உலகம் முழுவதும் இருந்து நிறைய சொந்தங்கள் கிடைத்திருக்கிறார்கள். வலையைத் தாண்டி சிலருடன் நட்புகள் நீடிக்கின்றது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து என்னை ஊக்குவிக்கும் அத்துடன் என்னுடன் வலைமூலம் நண்பர்களாக இருக்கும் நண்பர்களின் பெயரைக் கூறினால் இன்னொரு பதிவு போடவேண்டிய நிலை ஏற்படும்.

அத்துடன் இந்த இடத்தில் இருவரைக் குறிப்பிடவேண்டியது என் கடமை. வர்மா அவர்கள் என்னுடைய சகல பதிவையும் நான் எழுதுகின்ற காலத்தில் இருந்து படித்து தன்னுடைய விமர்சனங்களைக் கூறுகின்றவர். இன்னொருவர் லோஷன் என்னுடன் படித்தவர் இடையில் இருவரும் வெவ்வேறு திசைகளில் சென்றபடியால் சில காலம் சந்திக்காமல் இருந்துவிட்டோம், பின்னர் அவர் வலைஞனான பின்னர் தொடர்புகள் ஏற்பட்டது. என்னுடைய இன்னொரு நல்ல வாசகர். பதிவுகளை ரசித்துப் படிப்பதாக அடிக்கடி கூறுவார். இவர்களிருவரின் அக்கறைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றிகள்.


கேள்வி: இப்போது இலங்கையிலிருந்து பலர் இணையத்தில் எழுத ஆரம்பித்துள்ளார்கள். அவர்களுக்காக நீங்கள் கூறுவது...

பதில்: வரவேற்கத் தக்க விடயமாகும். இதன் தாக்கம் இலங்கைப் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட பல புதியவர்களைப் பார்க்கும் போது தெரிந்தது. அத்துடன் அவர்களில் எழுத்துகளில் வித்தியாசமான கோணங்களில் இருக்கின்றன. ஆண் பதிவர்கள் பலதும் பத்தும் எழுதும்போது பெண் பதிவர்கள் பெரும்பாலும் கவிதைகளுடனேயே நின்றுகொள்கின்றார்கள்.

எதிர்காலத்தில் புதியவர்கள் மூலம் காத்திரமான படைப்புகள் வருகின்ற சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றது. இவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல, ஆனாலும் வலையுலகில் 3 ஆண்டுகள் குப்பை கொட்டியவன் என்ற வகையில் அவர்களுக்கும் சொல்லும் ஆலோசனை நிறைய வாசிக்கவும், திட்டமிட்டு உங்கள் படைப்புகளை எழுதவும், ஒரு விடயத்தில் மட்டும் நின்றுவிடாது பலதும் பத்தும் எழுதவும், முக்கியமாக உங்கள் ஆக்கம் தரமானதோ இல்லையோ என சந்தேகப்படாது முயற்சி செய்யவும்.

இதுவரை என்னுடைய உளறல்களை பதிவு செய்த நண்பர் ஆதிரைக்கு நன்றிகள் என்னுடன் மட்டும் நின்றுவிடாது பலரையும் பேட்டி வடிவில் அவர்களின் கருத்துக்களைக் கேட்டு பதிவுகள் இட அவருக்கு வாழ்த்துகள்.

நன்றி.

Wednesday, September 16, 2009

பத்துக் கேள்விகளும் வந்தியத்தேவனின் பதில்களும் - 1

"சிறுவயது முதல் நிறைய வாசித்தாலும் நான் ஒரு நாளும் இலங்கை எழுத்தாளர், இந்திய எழுத்தாளர் எனப் பேதம் காட்டியது இல்லை. செங்கை ஆழியானை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு சுஜாதாவையும் பிடிக்கும். அதே நேரம் ஜனரஞ்சகமான விகடன், குமுதம் வாசித்தளவு இலங்கையின் மல்லிகை போன்ற சஞ்சிகைகள் சிறுவயதில் வாசிக்கவில்லை. சிரித்திரன் விதிவிலக்கு. பலகாலமாக வாசித்த சஞ்சிகை சிரித்திரன்." - வந்தியத்தேவன்.

2006 ஜூலை தொடக்கம் இன்று வரை - மூன்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையிலிருந்து என் உளறல்கள் எனும் பெயரிலான வலைத்தளத்தில் எழுதி வருபவர் வந்தியத்தேவன். மயூரன் எனும் இயற்பெயர் கொண்ட இவரி்டம் வலையுலகம் தொடர்பாக தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். பத்து வினாக்களில் மிகுதி ஐந்து வினாக்களும் அவற்றுக்கான வந்தியத்தேவனின் பதில்களும் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும்.கேள்வி: அண்மையில் இலங்கைப்பதிவர் மு.மயூரன் அவர்களினால் தொடக்கிவைக்கப்பட்ட தொடர்பதிவில் நீங்கள் இணையத்தில் எழுத வந்த அறிமுகம் பற்றி எழுதியிருந்தீர்கள். ஆனாலும் உங்கள் பதிவுலக பிரவேசம் பற்றி அதனைத் தூண்டிய காரணிகள், ஞாபகமிருப்பின் நீங்கள் முதலில் வாசித்த தமிழ் வலைப்பதிவு, நீங்கள் பின்னூட்டல் கருத்திட்ட முதல் தமிழ் வலைப்பதிவு பற்றி சொல்லுங்கள்...

பதில்: 2005களில் எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயின. மு.மயூரன், கானாபிரபா, சினேகிதி, மயூரேசன், சந்திரவதனா அக்கா, போன்றவர்களின் வலைகளைப் படித்திருக்கின்றேன் ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை. காரணம் அப்போ எனக்கு பின்னூட்டம், பதிவு, அனானி போன்ற எந்த விடயமும் தெரியாது. அவர்கள் சொந்த டொமைனில் எழுதுகின்றார்களோ என்ற எண்ணம்.

2006ல் சும்மா இணையங்களை அலசி ஆராய்ந்ததில் தமிழ்நாடுடோல்க் என்ற விவாதக் களத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கே என் கருத்துகளைச் சொல்லும் போது நண்பர் லக்கிலுக் (யுவகிருஷ்ணா). நீங்கள் அழகாக எழுதுகின்றீர்கள் ஏன் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்ககூடாது என என்னைக் கேட்டார். அவரின் தூண்டுகோளுடன் லெனின் என்ற இன்னொரு நண்பனின் ஊக்குவிப்பும் சேர 2006 ஜூலையில் என் முதல் பதிவு பிரசவமாகியது. என் பதிவின் முதல் வாசகர்களாக இவர்கள் இருவரையும் குறிப்பிடலாம்.

என்னை எழுதத் தூண்டிய காரணிகளாக அக்காலத்தில் எழுதிய பிரபலங்களான லக்கிலுக், கானாபிரபா, செந்தழல் ரவி, டிசே தமிழன், மு.மயூரன், சினேகிதி, ஊரோடி பகி, பாவை, சயந்தன், வசந்தன், தூயா, தேவ், சின்னக்குட்டி, சுப்பையா வாத்தியார், மறைந்த சிந்தாநதி அத்துடன் இன்னும் பலரின் வலைகளைப் படிக்கும் போது நானும் ஒருக்கால் எழுதிப்பார்க்கவோ என்ற எண்ணம் வந்தது. அதே நேரத்தில் லக்கியின் தூண்டுதலும் என்னை வலைப்பதிவிற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட்டது. 

பாடசாலை நாட்களில் கட்டுரைகள், ஓஎல் பரீட்சையில் மட்டும் சிறுகதை எழுதிய அனுபவம் பின்னர் தகவல் தொழில்நுட்ப மாணவனாக இருந்து பத்திரிகைகளில் எழுதிய சில அது சம்பந்தப்பட்ட கட்டுரைகள், சில விளையாட்டுக் கட்டுரைகள் எனக்கு முன் அனுபவம் கொடுத்திருந்தாலும் இணையத்தில் எழுதுவது புதிதாகத் தான் இருந்தது. அதனால் தான் 2006ல் மட்டும் வெறும் 6 பதிவுகள்.

முதலில் பின்னூட்டம் இட்ட வலைப்பதிவு நிச்சயமாக லக்கியினுடையதாகத் தான் இருக்கும். அவர் தன் வலைப் பக்கத்தை மாற்றி அமைத்ததில் அந்தப் பின்னூட்டம் அறியமுடியாமல் இருக்கின்றது.

பின்னர் கானா பிரபாவின் மாம்பழம் பதிவில் என்னுடைய பின்னூட்டம் மூலம் அவரின் நட்பும் தொடர்பும் கிடைத்தது. இன்றுவரை அது ட்விட்டர் கும்மி வரை தொடர்கின்றது. 


கேள்வி: தமிழ்மண நட்சத்திரமாக இலங்கையிலிருந்து ஒளிர்ந்த ஒரு சில பதிவர்களில் நீங்களும் ஒருத்தர். தமிழ்மண நட்சத்திர வார அனுபவம் பற்றி...

பதில்: மிகவும் சுவாரசியமான கதை இது. 2008 செப்டம்பர் மாதம் புதிய புரொஜொட் ஒன்றுடன் அதிக வேலைப் பளுவுடன் இருந்த காலம். 2008 செப்டம்பர் 10ந்திகதி எனது மின்னஞ்சலுக்கு தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்னை செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியிலிருந்து ஒக்டோபர் 4 ஆம் தேதிவரை தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்க அன்புடன் அழைத்த அஞ்சல் வந்திருந்தது.
எனக்கு முதலில் அதிசயம் காரணம் அந்தக் காலத்தில் மொத்தமாக வெறும் 60 பதிவுகள் மட்டும் தான் எழுதியிருந்தேன். ஆகவே யாரோ தமிழ்மணம் போல் மின்னஞ்சல் தயாரித்து என்னுடன் விளையாடுகின்றார்கள் என நினைத்து எதற்கும் சில நண்பர்களை இதைப் பற்றிக்கேட்போம் எனக் கேட்டால் அவர்கள் சொன்னார்கள். அந்த முகவரி போலியல்ல தமிழ்மண முகவரி தான் அதனால் நட்சத்திரமாக இருக்க ஒத்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.
நானும் நட்சத்திரமாக இருக்க சம்மதம் தெரிவித்து, அவர்களுக்கு மறுமொழி இட்டுவிட்டேன். திடீரென தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகியிடம் இருந்து செப் 16ந்திகதி இன்னொரு மடல் என்னை செப் 29ந்திகதி அல்ல செப் 22ந்திகதி முதல் நட்சத்திரமாக இருக்கமுடியுமா? எனக் கேட்டிருந்தார்.
அவசர புத்தி என்னுடன் உடன் பிறந்தது என்பதால் நானும் அதற்கு ஒத்துக்கொண்டு செப் 22ந்திகதி முதல் 28ந்திகதி வரை தமிழ்மணத்தில் நட்சத்திரமானேன்.
அந்த நட்சத்திர வாரத்தில் என் வலையை மேய்ந்தவர்கள் எண்ணிக்கை முன்னைய நாட்களை விட அதிகம். அதுவரை பெரும்பாலும் சினிமா, விளையாட்டு, இடையிடையே கொஞ்சம் சீரியஸ் பதிவு, மொக்கைப் பதிவுகள் என பதிவிட்ட நான் அந்த வாரம் கொஞ்சம் நல்ல விடயங்கள் என நினைத்து சில பதிவுகளை இட்டிருந்தேன். கிட்டத்தட்ட 12 பதிவுகள் ஓரிரு பதிவுகள் தவிர ஏனையவை பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
சில பதிவுகளில் கொஞ்சம் சர்ச்சை ஏற்பட்டது. ஒருவர் நான் இலங்கையில் இருந்து எழுதினாலும் இந்திய சார்பு பதிவுகளே இடுகின்றேன் என எழுதியிருந்தார். அத்துடன் இலங்கை வலைப்பதிவாளர்கள் பற்றி நான் எழுதிய பதிவில் ஒரு சின்ன சர்ச்சை ஏற்பட்டிருந்தது அது பற்றி நான் இங்கே குறிப்பிடவிரும்பவில்லை. அந்தப் பதிவினைப் பாருங்கள் புரியும். (http://enularalkal.blogspot.com/2008/09/blog-post_24.html)
அத்துடன் நன்றி தெரிவித்து எழுதிய பதிவில் லக்கிலுக் "தமிழ்ப்பதிவர்கள் என்ற பெரும் குடையின் கீழ் இணையாமல் ஈழத்துப் பதிவர்கள் தங்களை இலங்கைப் பதிவர்கள் என்று சொல்லிக்கொள்வதாலும் இருக்கலாம் :‍)" என்ற விமர்சனத்தை வாசகர் தொகை அதிகரித்திருந்தாலும் பின்னூட்டங்கள் அவ்வளவாக வரவில்லை என நான் ஆதங்கப்பட்டிருந்த விடயத்துக்கு விமர்சனமாக எழுதியிருந்தார். அதற்கான பதில் அந்தப் பதிவில் இருக்கின்றது. (http://enularalkal.blogspot.com/2008/09/blog-post_1627.html)
அந்தக் காலத்தில் பின்னூட்டப் போதை எனக்கு இருந்தது. இப்போ ஏனோ அது இல்லை. சயந்தன் ஒரு பதிவில் குறிப்பிட்டதுபோல் முத்தி நிலை அடைந்துவிட்டனோ தெரியவில்லை. அதனால் தான் அதிக பின்னூட்டம் எதிர்பார்த்தேன், இதனைப் பற்றிப் பெயரிலியும் குறிப்பிட்டிருந்தார்.
நிறைய புதிய நண்பர்களுடன் கொஞ்சம் சர்ச்சைகள் என தமிழ்மண வாரம் மகிழ்ச்சியாகவே சென்றது. அந்த மகிழ்ச்சியான நினைவுகளை நினைவூட்டிய இந்தக் கேள்விக்கு நன்றி. 


கேள்வி: உங்களுடைய பதிவுகள் இந்தியா, சினிமா தொடர்பாக பேசிய அளவு இலங்கையைப் பற்றி - எங்களின் வாழ்வுகளைப்பற்றி பேசவில்லை எனும் குற்றச்சாட்டை முன்வைத்தால் உங்களின் பதில்...

பதில்: இந்தக் குற்றச்சாட்டை ஓரளவு ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கான காரணமாக நான் வலைப்பதிவராக மட்டுமல்ல ஒரு வாசகனாகவும் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன். சிறுவயது முதல் நிறைய வாசித்தாலும் நான் ஒரு நாளும் இலங்கை எழுத்தாளர், இந்திய எழுத்தாளர் எனப் பேதம் காட்டியது இல்லை. செங்கைஆழியானை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு சுஜாதாவையும் பிடிக்கும். அதே நேரம் ஜனரஞ்சகமான விகடன், குமுதம் வாசித்தளவு இலங்கையின் மல்லிகை போன்ற சஞ்சிகைகள் சிறுவயதில் வாசிக்கவில்லை. சிரித்திரன் விதிவிலக்கு. பலகாலமாக வாசித்த சஞ்சிகை சிரித்திரன்.
அத்துடன் பள்ளி நண்பர்கள் முதல் கொண்டு ஊர்ப் பொடியள் வரை அந்த நாளில் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதரவாளர்கள் (83 உலகக் கிண்ணம் எனக்குள் கிரிக்கெட் பார்க்கும் வெறியைத் தூண்டியது), ஆகவே விளையாட்டு என்றால் கிரிக்கெட் இந்திய அணி என இந்தியாவின் மேல் பாசம் நிறைந்திருந்த நாட்கள் அவை.
அத்துடன் சினிமாவும் எனக்கு நிறையப் பிடிக்கும் நல்ல சினிமாக்களைத் தேடிப்பார்க்கும் ரசிகன். ஆகவே சினிமா பற்றிய பதிவுகள் அதிகம் இடக் காரணம் இவைதான்.
இலங்கையைப் பற்றி அல்லது எங்கள் வாழ்க்கைகள் பற்றி ஆரம்பகாலங்களில் நான் எழுதாமல் இருக்க காரணம் அந்த நாட்களில் என்னுடைய எழுத்துக்களை அதிகம் படித்தவர்கள் தமிழக நண்பர்கள். ஆகவே அவர்களுக்காக அவர்கள் பாணியில் எழுதினேன். அத்துடன் ஒரு சிலரைத் தவிர ஏனைய புலம் பெயர் நம் உறவுகள் எனது வலையைப் படித்ததாகவோ பாராட்டியதாகவோ ஞாபகம் இல்லை.
அத்துடன் அரசியல் பற்றி எழுத எனக்கு விருப்பவில்லை. இலங்கை என்றால் அரசியல் என இருந்தகாலம் அது. ஆனாலும் இலங்கைக் கிரிக்கெட் பற்றியும் என்னுடய சில அனுபவங்களும் எழுதினேன். மற்றவற்றுடன் ஒப்பிடும் போது எண்ணிக்கை மிகவும் குறைவு.
பின்னர் இந்த ஆண்டில் கானாபிரபாவினால் ஆரம்பிக்கப்பட்ட ஈழத்துமுற்றத்தில் என்னுடய ஈழம் சார்ந்த அல்லது இலங்கை சார்ந்த வட்டார வழக்குகள், பண்பாடுகள் பற்றிய பதிவுகள் வெளிவந்தன. எங்கடை தமிழில் எழுதுகின்ற வாய்ப்பு அங்கே எனக்கு கிடைத்தது. இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும், என்னுடைய எழுத்து வித்தியாசமாக இருந்தாலும் பேச்சுத் தமிழ் என வரும்போது கொழும்பில் பல காலம் இருந்தாலும் இன்னும் யாழ்ப்பாணத் தமிழே வருகின்றது.

என்னுடைய வலையில் இலங்கை வாசகர்கள் பலர் அந்த நாட்களில் குறைவு ஆகவே இலங்கை விடயங்கள் எழுதுவது மிகவும் குறைவு. ஆனால் இன்றோ பல இலங்கை வாசகர்கள் இருப்பதால் இலங்கை விடயங்கள் எழுதப்படும் போது நிறைய விமர்சனங்கள் வருகின்றது. இதற்க்குச் சான்றாக அண்மையில் எழுதிய பகிடி வதை, பாடசாலைகளில் மதம் பற்றிய பதிவுகள் சான்றாகும்.
தற்போது இலங்கை பற்றி எழுதுவதால் தான் முதலில் இந்தக் குற்றச்சாட்டை ஓரளவு ஏற்கின்றேன் என்றேன்.


கேள்வி: 2006 ஆம் ஆண்டிலிருந்து இணையத்தில் எழுதி வருகின்றீர்கள். ஆனால், அண்மைய நாட்களில் நீங்கள் இடுகின்ற பதிவுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புக் காட்டுகின்றது. இதற்கு குறிப்பிடும் படியான காரணங்கள் எதுவும் உண்டா?

பதில்: இதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம். 
 1. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பலர் கல்விக்காகவும் வேலைக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்றமை. ஏனென்றால் முன்னைய நாளில் வேலை முடிந்த பின்னர் எங்கள் வேலை காலி வீதியைச் சுற்றுவதே. சிலவேளைகளில் எங்கள் உலாத்தல்கள் இரவு 10 மணி வரை கூட நீடிக்கும். ஆகவே பதிவு எழுதுவது கிழமைக்கு ஒன்று அல்லது மாதத்திற்கு ஒன்று ஆனாலும் வலையுலக நுண்ணரசியல்கள், போலிப் பிரச்சினைகள், எனப் பலவற்றையும் தமிழ்மணம் மூலம் அறியக்கிடைத்தது. நான் பதிவு எழுதாவிட்டாலும் பலரின் பதிவுகள் படித்து என் கருத்துகளை தெரிவிப்பது பழக்கம்.
 2. அடுத்த காரணமாக என்னுடைய வாசகர் வட்டம் கொஞ்சம் பெரிதாகி விட்டது. இதற்கான ஒரு காரணம் இலங்கைப் பதிவர் சந்திப்பு. அத்துடன் பலர் இன்றைக்கு வலையுலக நண்பர்களாக இருப்பதால் என்னுடைய பதிவுகளை விரும்பிவாசிப்பதை அறிந்தேன். அவர்கள் தந்த ஊக்கமும் பாராட்டுக்களும் என்னை அதிகம் எழுதவைத்தன.

கேள்வி: இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு நடந்து முடிந்ததன் பின்னர், நீங்கள் எழுதுகின்ற இடுகைகள், உங்களுக்கு கிடைக்கின்ற பின்னூட்டல் கருத்துக்கள், உங்கள் தளம் நாடி வருபவர்கள்... இவைகள் தொடர்பான தங்களின் கருத்துக்கள்...

பதில்: இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின்னர் என்னுடைய வலைக்கு மட்டுமல்ல சந்திப்பில் கலந்துகொண்ட பலரின் வலைக்கும் வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக அறிந்தேன். இதற்கான காரணம் இதுவரை இலைமறை காயாக இருந்த பலரின் வலைகள் பரவலாக அறியப்பட்டமையும், அத்துடன் இவர்கள் ஒருவருடன் ஒருவர் நேரடியாக அறிமுகமானபடியால் தங்கள் நட்பை வளர்க்க வலைகளினூடான கருத்துப் பரிமாற்றத்தை செய்துகொள்வதையும் அவதானிக்க முடிகின்றது.
இன்னும் சொல்லப்போனால் சந்திப்புக்கு முன்னரே சில இலங்கைப் பதிவர்கள் என்னுடைய வலையில் பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள். சந்திப்பின் பின்னர் பின்னூட்ட இடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் பலர் நட்பு ரீதியிலும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றார்கள். இதனை நீங்கள் என்னுடைய பி்ன்தொடர்பவர்களின் எண்ணிக்கையை வைத்தும் அறிந்துகொள்ளமுடியும். சந்திப்புக்கு முன்னர் 20 ஆக இருந்த பின்தொடர்பவர்கள் இன்றைக்கு கிட்டத்தட்ட 60 ஆக உயர்ந்திருக்கின்றது. ஏனைய மூத்த பிரபல பதிவர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.
பின்னூட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை 2006ல் இருந்து என்னை ஊக்கப்படுத்துபவர்கள் பலர் இன்றைக்கும் தங்கள் பின்னூட்டங்களை இட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். வெறுமனே பாராட்டாமல் தங்கள் கருத்துகளைச் சொல்லி பின்னூட்டங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றங்களுக்கு வகை செய்கின்றார்கள். புதியவர்களுக்கும் இது பொருந்தும். 

-- தொடரும்

Thursday, September 10, 2009

ஏறி வந்த கதை - ஒரு அஞ்சலோட்டம்

அஞ்சலோட்டம்... கல்லூரி விளையாட்டுப் போட்டியில் ஒருமுறை ஓடியிருக்கின்றேன். அதுவும் பழைய மாணவர்களுக்கான நிகழ்ச்சி. முதலில் கிடைத்த கோலை இறுதியாகச் சென்று கொடுத்த பெருமையும் என்னையே சாரும்...

அதே போல், என் பள்ளிக்கால நண்பன் கீத் தந்து விட்ட தொடர்பதிவை கரை சேர்க்க 13 நாட்கள் எடுத்திருக்கின்றேன். சில அவசரமான - காத்திரமான நாட்களுக்குள் சிக்குப்பட்டதால், இன்னமும் மீளாவிட்டாலும் இன்று என் வரலாற்றுக் கடமையை (:D) செய்யத்துணிந்துள்ளேன்.எழுத வேண்டுமென பேனாவும் தூக்கிக் கொண்டு நான் நேரடியாக பதிவுலகத்திற்குள் தொப்பென்று குதிக்கவில்லை. நீண்ட நாள் வாசகனாக இருந்து பத்தும் பலதையும் - நல்லதையும் கெட்டதையும் - அரசியலையும் ஆன்மிகத்தையும் வாசித்திருக்கின்றேன். ஆனாலும், சாத்திரம் பார்த்ததாக ஞாபகம் இல்லை. இந்தப் பதிவுலக வாசிப்பு காதலா.கொம், Hi5 போன்ற தளங்களையும் அதற்குரிய கடவுச் சொற்களையும் மறக்கச் செய்யும் அளவுக்கு வெறி பிடித்து இருந்திருக்கின்றது.

பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ நாளொன்றுக்கு 12 மணித்தியாலம் கிடைத்த இலவச இணைய வசதி தான் பல தளங்களை அறிமுகம் செய்திருகின்றது. எப்படிப் போனேன் என்று ஞாபகம் இல்லை. இணையத்தில் மூழ்கியிருந்த வேளையில் தட்டுத்தடுமாறி என் கண்களுக்குத் தட்டுப்பட்டது... நிமல்
வைத்திருக்கும் வலைப்பதிவாக, அல்லது பகீயின் ஊரோடியாக, அல்லது சயந்தனின் சாரலாக இருக்க வேண்டும். இல்லாதுவிடின், மூன்றும் ஒரே நேரத்தில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், குறுகிய கால இடைவெளியில் முத்தளங்களையும் வாசித்து வியந்தேன். அப்படி வாசித்தவைகளில் இன்றும் முந்திக்கொண்டு ஞாபகத்துக்கு வருவது சயந்தனின் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்.

சயந்தன் சாரல் என சொந்தத் தளமொன்றுக்கு மாறினாலும் (பின்னர், அத்தள முகவரியும் மாற்றப்பட்டது. இப்போது, http://www.sajeek.com) Google இனால் இலவசமாக வழங்கப்படும் blogspot இனை நோண்டிப்பார்க்கத்தொடங்கினேன். என் பங்குக்கு கவிதைகள் என ஏதோவெல்லாம் கிறுக்கி தரவேற்றியிருந்தாலும், இன்றும் கூட அவ்வலைத்தள முகவரிகளை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஞாபகம் இருக்கின்றது.. பல்கலை இறுதி வருடத்தில் சொந்தமாக ஒரு வலைப்பூ ஆரம்பித்து, அதில் ஒரு பதிவிட்டு இணைய இணைப்பில் இருந்த கானா பிரபா அண்ணாவுக்கு அனுப்பினேன். எனக்கு முதன் முதல் பின்னூட்டிய பெருந்தகையோன் அவரே தான். ஆனால், கொடுமை என்னவென்றால்... ஒரு டிசம்பர் (2007) மாதத்தில் எழுதப்பட்ட அந்தப்பதிவும் பிரபா அண்ணாவின் பின்னூட்டமும் இப்போது என் தளத்தில் இல்லை.

என் முதல் பதிவும் நம்மைப் போன்று பல காலம் தனித்திருந்து காணாமல் போனது. சோம்பலும், நேரமும் எழுதுவதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும், இக்காலத்தில் கௌபாய் மதுவின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்ப்பூங்காவில் சில பதிவுகள் இட்டிருக்கின்றேன்.

இந்த நேரத்தில் தான் இறைமைமிக்க இலங்கைத் திருநாட்டிலிருந்து ஒருத்தர் வலைபதிய வந்தார். இவன்தானடா சிங்கம் சிக்கெனப் பிடியென... அவரின் ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டமிட்டுக் கொண்டு - என் வலைப்பதிவு ஆசையின் பரீட்சார்த்தத்தை லோஷன் அண்ணாவின் பின்னூட்டப் பெட்டிகளில் சோதித்துக் கொண்டிருந்தேன். ஆனால்... ஆனால்... அது ஒரு சனிக்கிழமை நடந்தது. பயம் துரத்த ஓடிச்சென்று என்னுடைய பயனர் கணக்கை முடக்கிவிட்டேன்.

ஆனாலும், சில நாட்களின் பின்னர் புதிதாக புதுத்தளத்துடன் நானும் எழுத வேண்டும் என்ற வைராக்கியம் மேலிட பதிவுலகத்துக்குள் வந்து சேர்ந்தேன்.

இந்தப் பதிவுலகம் எனக்குப் பல பாடங்களை சொல்லித்தந்திருக்கின்றது. சில பெறுமதியான நண்பர்களின் நட்புக்களினைப் பெற்றுத் தந்திருக்கின்றது. கடல் கடந்தும் என் நலம் விசாரிக்கும் உறவுகளைப் பெருக்கியிருக்கின்றது... இவங்கள் எல்லாம் பென்னாம் பெரிய மனுசங்கள், கிட்டக் கூட நெருங்க முடியாது என நான் எண்ணியவர்களுடன் நள்ளிரவு தாண்டியும் கும்மி அடித்துக் கொண்டிருக்கிறேன். அத்துடன், இன்னும் சிலரின் உண்மை முகங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. என்னால் தான் நடைபயின்றோம் என வாக்குமூலம் கொடுக்கும் பால்குடி, கீத் போன்றோரை எண்ணி பெருமை கொள்கின்றேன்.


எழுத்துருக்கள்
ஆரம்பத்தில் பாமினி எழுத்துக்களையே நான் பாவித்தேன். ஆனாலும்,
அம்மாவை amma என எழுதுவது பொருத்தமற்றது என வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், எனக்கு இம்முறை இலகுவானதாகப்பட்டதால் போனோட்டிக் முறைக்கு மாறி இன்றும் கூட அப்படியே எழுதுகின்றேன்.

பதிவர் சந்திப்பில் இது தொடர்பான சர்ச்சை கிளப்பப்படும் வரை இதன் "சீரியஸ்" தன்மையை நான் உணரவில்லை. துரதிஸ்டவசமாக முன்னைய பதிவுகளை நான் ஆழமாக வாசித்திருக்கவுமில்லை.

நான் எழுதும் முறையில் சொல்லின் இடையில் ஓரெழுத்து தடம் புரண்டால் அந்த எழுத்தை மட்டும் சீர்திருத்தி சொல்லின் வளம் பேணுவதில் கடினத்தன்மையை உணர்ந்திருக்கின்றேன். முற்றாக அந்தச் சொல்லை நீக்கியபின் புதிதாக எழுதுவதுதான் ஒரே வழி என்பதை பல இடங்களில் பிரயோகித்திருக்கின்றேன். பாமினி எழுத்துருவுக்கு அச்சிக்கல் இல்லையென புல்லட் சொன்னார்.

இது தொடர்பான சர்ச்சைகளுக்கோ அல்லது விவாதங்களில் மூக்கை நுழைக்கவோ எனக்கு அதிக வாசிப்புக்கள் தேவைப்படுகின்றன. தேவையான தரவுகளும், அதற்கான சுட்டிகளும் இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் உள்ளன. அதை ஆறுதலாக வாசித்தபின் என் கருத்துக்களை பதிவிடுகின்றேன் எனக் கூறி இப்போதைக்கு நழுவுகின்றேன்.

விதிமுறைகளுக்கு முரணாக பதினொருவரை விளையாட்டுக்கு அழைத்த சகோதரி சினேகிதிக்கு வன்மையான கண்டனங்களை பதிந்த வண்ணம் இவர்களை அஞ்சல் ஓட்டத்துக்கு அழைக்கின்றேன்.
டொக்டர் ஜீவராஜ் - ஜீவநதி
தர்ஷாயணீ - உறுபசி
ஹிஸாம் - உணர்வுகள்
குணா - நிழல்

You might also like