எவருக்குமே தெரியாத - புரியாத புதிர் இறப்புக்குப் பின்னரான உலகம்... அது எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி நான் அலட்டிக்கப் போறதில்லை.
ஆனால், உங்கள் இறப்புக்குப் பின்னர் உங்களுடைய Facebook கணக்கிற்கு என்ன நடக்கும்..? அது முற்றுமுழுதாக முடக்கப்படுமா...? அல்லது, Facebook இல் நீங்கள் தொடர்ந்தும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்களா? அண்மையில் Facebook நிர்வாகம் இக்கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.
Facebook கணக்கு வைத்துள்ள பயனர் ஒருத்தரின் இறப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அவர் தேடுதல் பெறுபேறுகளிலிருந்து (Search results) நீக்கப்படுகின்றார். அதாவது, இறந்தவரின் கணக்கு முற்றாக நீக்கப்படாமலிருக்க, அவர் பெயர் மற்றைய பயனர்களின் தேடலில் மறைக்கப்படுகின்றது.
அத்துடன், அந்த பயனரின் கணக்குள் எவரும் login செய்து உள்நுழைய முடியாது. ஆனால், நண்பர்கள் தங்கள் இரங்கலையும் அஞ்சலிகளையும் செலுத்துவதற்காக அவரின் சுவர் (Wall)மட்டும் திறந்து விடப்படுகின்றது.அவரின் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் அங்கே சென்று தங்கள் அஞ்சலிகளையும் நினைவுப் பகிர்தல்களையும் பதிந்து கொள்ளலாம்.
Facebook ஆனது தனது முகப்புப்பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம் என சிலரை காட்சிப்படுத்தி (Friend Suggestions)அவர்களுக்கான நட்புறவினை வளர்க்க முயற்சிக்கின்றது. ஆனால், துரதிர்ஸ்டவசமாக இவ்வுலகை விட்டுச் சென்றவர்களையும் காட்சிப்படுத்தி நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுமாறு Facebbok பரிந்துரை செய்ய... வந்தது வினை. இணையத்தில் ஏகப்பட்ட விமர்சனங்கள் Facebook இனை நோக்கி வைக்கப்பட்டன. உதாரணத்துக்கு இங்கே ஒன்று.
இதற்குத் தீர்வு காணும் முகமாக, இறந்தவர்களின் கணக்குகளையும் கணக்கில் எடுக்க வேண்டிய தேவையின் நிமித்தமே "இறப்புக்குப் பின்னரான நினைவுபடுத்தல்" அறிமுகம் செய்யப்பட்டது.
உங்கள் நண்பர் ஒருத்தருக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில்,அதனை Facebook இற்கு அறியப்படுத்த முடியும். அதற்காக இங்கே கேட்கப்படும் தகவல்களை உண்மைத்தன்மையுடன் அளிக்க வேண்டும். (http://www.facebook.com/help/contact.php?show_form=deceased)
அளிக்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், இறந்தவரின் சுவர் (Wall) மரணத்துக்குப் பின்னரான நினைவுப் பகிர்தலுக்காக திறந்து விடப்படும்.