Search This Blog

Sunday, May 31, 2009

மனதினில் நிறுத்தி...

ஒரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் பதிவிட சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்று சொல்வதை விட இன்று வெறுமையாகவேனும் ஏதாவது கிறுக்கித் தள்ள வேண்டும் போல் இருக்கின்றது. கடந்த நாட்கள் ஈழத் தமிழரின் வரலாற்றில் பல படிப்பினைகளைச் சொல்லித் தந்த நாட்கள். ரசிக்கும் படியாக - மகிழும் படியாக எந்தச் செய்திகளும் சம்பவங்களும் இருக்கவில்லை. மனிதங்கள் தொலைந்து போன உலகிலே, கேட்கக்கூடாத - காணக்கூடாத எல்லாவற்றையும் கேட்டுமாயிற்று; பார்த்துமாயிற்று.

நாளைய நாள்...??? என்பதற்குப் பின்னால் பெரியதொரு வினாக்குறி விழுந்து நிற்கின்றது. கடந்து போக முடியவில்லை... அதற்கு தடைகளாக இருப்பது முட்களாயின் அது எமக்கு பெரும் பொருட்டல்ல. ஆனால், எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடியிலும் மனித தலைகள் தட்டுப்படுகின்றன. சில மேல்வர்க்கங்கள் மொத்தக் கணக்கைப் பூட்டி பத்திரப்படுத்தி விட்டு இப்போது எண்ணத் தொடங்குகிறார்களாம். அவர்களின் எதிர்பார்ப்பு 20,000 தேறுமாம். எண்ணுங்கள்... எண்ணி முடியும் தறுவாயில் உங்களிடம் கணக்குக் கேட்க எவரும் இருக்கப் போறதில்லை. ஏனெனில், இந்நிலை தொடர்ந்தால் இப்போது மிஞ்சியுள்ள எல்லோரும் அந்தக் கணக்கினுள் அடங்கிவிடுவார்கள்.

கோயில் கட்டிக் கும்பிட தகுதியிருந்தும் மனதுக்குள் நிறுத்தி பலருக்கு வணக்கம் செலுத்துகின்றோம். ஈழத்தில் தமிழனாய் பிறக்கின்ற பாவம் கூட செய்யாமல், தமிழச்சியின் உதரம் சுமந்ததனால் எங்களுக்காக உயிர்துறந்த உறவுகள் தொடக்கம் அனைவருக்கும் காணிக்கையாக்க கண்ணீர்த்துளிகளை தவிர என்னிடம் வேறெதுவுமில்லை. நீங்கள் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும், இந்த உலகை ஆளும் எஜமான்களாக...

இப்போது கொழும்பின் ஆகாயப் பரப்பில் போர் விமானங்கள் அணிவகுப்பு செய்கின்றன. "கறள் பிடிக்காமல் இருக்க வேணுமே... அதுதான் எங்களுக்கு சாகசம் காட்டுறாங்கள்" எவருக்கும் கேட்கக் கூடாது என எழுகின்ற முணுமுணுப்பை கேட்க முடிகின்றது. சமாதான ஒப்பந்த காலங்களில் பறந்த விமானங்களுக்கும் இப்படித்தான் காரணம் கற்பித்து ஈற்றில் ஏமாந்து போனோம்.

திடீரென அயல்வீட்டுக் குழந்தை வீறிட்டுக் கத்தியது. வானத்தில் தாழப்பறந்து சாகசம் காட்டிய 'கிபிர்' விமானத்தின் சத்தத்தில் அதன் தூக்கம் குழம்பியிருக்க வேண்டும். அல்லது விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைக்கு அந்த மிகையொலி அச்சம் ஊட்டியிருக்க வேண்டும். (இந்த இரண்டும் தானா ஒரு பிள்ளை அழுவதற்கு காரணங்கள் என கேட்கும் ஜனநாயகத் தேசியவாதிகளுக்காக அந்தப்பிள்ளைக்கு தாயார் அடித்திருக்கலாம்; எறும்பு கடித்திருக்கலாம்; இன்ன பிற எல்லாக் காரணங்களும்...)

இப்படித்தான் சமாதான ஒப்பந்த காலத்தில் தாழப் பறந்த விமானத்தை என் சித்தியின் மகனுக்கு புதினம் காட்ட அவன் வீறிட்டு அழுததும் அது என்னுள் குற்ற உணர்ச்சிகளை விதைத்ததும் என் ஞாபகத்துக்கு வந்து போனது. இப்போது முகாமொன்றில் இருக்கின்ற அந்தக் குழந்தை இப்படிப் பயந்து அழுமென நான் நினைக்கவில்லை. வேண்டுமானால், என் அறிவுக்கு எட்டாத 'கிபிர்' பற்றிய புரிதல்களை அப்பிள்ளை போதிக்க கூடும்.

Sunday, May 24, 2009

நடக்க வேண்டிய நெடிய பாதையில்....

ம்... எங்கும் சோகம் அப்பிக்கிடக்கின்றது. நடக்கும் என்று எண்ணியவையெல்லாம் இனி நடக்காது என்றதாகிவிட்டது!!! என் தேசக் கடிகாரம் மூன்று நாட்களில் முப்பது வருடங்களை இடஞ்சுழியாக ஓடிக் களைத்துப் போய் தாகத்துக்கு நீர் கேட்கின்றது. உண்மைகளும் பொய்களும் போலிகளும் ஒன்றுடனொன்று நித்தமும் முட்டி மோதி பலம் பரீட்சிக்கின்றன.

ஆனாலும், எல்லாம் முடிந்ததென்று சும்மா கிடந்து மரணத்தை வரவேற்க முடியாது. நாங்கள் நடக்க வேண்டிய நெடிய பாதையில் வரலாறு சொல்லித் தந்த பாடங்கள் நிச்சயம் வழிகாட்டும்.

எழுப்பிய வெற்றிக் கோஷங்களும், வீர வசனங்களும் சாதித்தவைகளை பட்டியலிட மனது மறுக்கின்றது. ஏனெனில், அவற்றின் பின்னே துரோகங்களும், பழிவாங்கல்களும், குழிபறிப்புக்களும் தங்களின் வேலைகளை கனகச்சிதமாக செய்திருக்கின்றன. அதன் விளைவுகளை உணரும் பொழுதுகளில் எல்லாமே போய்விட்டன...

ஆராய்ச்சிகள் தேவையில்லை என்று சொல்லவில்லை; நிறுத்தி வைப்போம். ஒப்பாரிகளையும் நிறுத்துங்கள். எங்களுக்காக சிலுவை சுமந்த சமுதாயம் அடைபட்டுக் கிடக்கின்றது. நாங்கள் இணையத்தில் பட்டு வேட்டிக் கனவில் திளைத்திருந்த வேளைகளில் அந்த உறவுகள் தான் தீயினில் வெந்தார்கள். நாளை வரும்... நாளை வரும் எனக் காத்திருந்தது தூர விலகிப்போனாலும் அதற்காக சுமக்க முடியாத சுமைகளை சுமந்து, எங்களுக்காக பட்டினி கிடந்து, அவயங்கள் இழந்து, உயிரைக்கொடுத்து வாழ்ந்திருந்த வன்னி மக்களின் வாழ்வுக்காக குரல் கொடுங்கள்.

அதுவே, காலத்தின் கட்டாயம்.

பி.கு.: இப்பதிவை எழுத ஆரம்பிக்கும் போது இல்லாத செய்தியொன்று இதை இப்பொழுது வெளியிடும் தறுவாயில் வெளிவருகின்றது. ஆனாலும், என் பதிவில் எந்த திருத்தங்களுமின்றி வெளியிடுகின்றேன்.

Sunday, May 17, 2009

அப்போது வெட்கித் தலைகுனிந்து நிற்பீர்கள்...

ஒரு நாள்
என் தேசத்தின்
நடுநிலை மேதாவிகள்
சாதரண மனிதர்களால்
விசாரிக்கப்படுவார்கள்.

"உங்கள் தேசம்
மெதுவாக
மரணமடைந்து கொண்டிருந்த போது
தனியே ஒதுங்கி நிற்கும்
ஒரு அழகிய தீயைப் போல . ..
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?"
என்று கேள்வி கேட்கப்படுவார்கள்.

நடுநிலை மேதாவிகளே ...

உங்கள் உடைகளைப் பற்றி ....
மத்திய உணவிற்கு பின்
உங்கள் குட்டி தூக்கத்தைப் பற்றி....
அவர்கள் கேட்கப் போவது இல்லை

"ஒன்றுமில்லாததின் உள்ளடக்கம்" பற்றிய
உங்கள் உப்பு சப்பற்ற விவாதங்களை...
அவர்கள் தெரிந்துகொள்ளப் போவதில்லை

உங்கள் வருமானம் குறித்து...
மிகுந்த பட்டறிவு குறித்து.....
அவர்களுக்கு கவலை இல்லை

கேள்விகள்
கிரேக்க மெய்ஞானத்திலிருந்தோ
அல்லது
உங்களில் ஒருவன்
மரணமடைந்து கொண்டிருந்த போது
'உங்கள் கேவலமான சொந்த நலனுக்காக'
மௌனம் காத்தது பற்றியோ....
இருக்கப் போவதில்லை

பொய்களின் நிழலில் பிறந்த
உங்கள் வியாக்கியானங்கள் தொடர்பாக
அவர்கள் ஒன்றுமே கேட்கப் போவதில்லை

ஒரு நாளில்
அந்த சாதாரண மனிதன் வருவான்...!

மேதாவிகளின்
புத்தகங்களிலும் கவிதைகளிலும் காணப்படாத
ஆனால்
தினமும் அவர்களுக்கு
அரிசியும் பாலும்
ரொட்டியும் முட்டையும்
கொடுத்த
அவர்களின் ரதங்களை ஓட்டிய
அவர்களின் நாய்களையும் தோட்டங்களையும் கவனித்த
அவர்களுக்காய் உழைத்த
அந்த சாதரண மனிதன் கேட்பான்

"என் போன்ற ஏழைகள்
தன் வாழ்க்கையையும் காதலையும் தொலைத்து
துன்பத்தில் உழன்று கொண்டிருந்த போது ...
நடுநிலை மேதாவிகளே !!!
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

என் இனிய தேசத்தின்
நடுநிலை மேதாவிகளே
உங்களால் பதில் சொல்ல முடியாது!

அப்போது
மௌனம் எனும் கழுகுகள் வந்து
உங்கள் குரல்வளையை கவ்வும்!

உங்கள் பாவங்கள்
உங்கள் ஆன்மாவையே தூக்கிச்செல்லும்!

"அந்தக் கேள்வியின் முன்
நீங்கள் ஒரு நிமிடம் வெட்கித் தலைகுனிந்து
கூனிக் குறுகி நிற்பீர்கள் "

     -ஓட்டோ ரேனே காஸ்டில்லோ (கௌதமாலா கொரில்லா போராளி)

Friday, May 15, 2009

Youtube வீடியோ - தெரியாதவை சில

பெரிதாக முகம் தெரியாத ஒருத்தர் அவர். அவரைப்பற்றியதான ஒரு செய்தி இணையத்தில் வந்திருந்தது. யார் அவர் என அறியும் ஆவல் மேலிட தேடியதன் விளைவாக அவர் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று Youtube தளத்தில் கிடைத்தது. அந்த பத்து நிமிடத்திற்கும் மேலான வீடியோவில், ஐந்தே ஐந்து செக்கன்கள் மட்டும் அவரின் முகம் காணக்கிடைத்தது.

ம்ம்ம்... youtube வீடியோக்களை ஆரம்பத்தில் இருந்தன்றி குறிப்பிட்ட நேரத்திலிருந்து இயங்க ஏதாவது வழிகள் இருப்பின் நன்றாயிருக்கும் என எண்ணினேன். அதனால் சலிப்பு மனநிலை, நேரவிரயம் அத்துடன் வீணான இணையதரவிறக்க எல்லை தாண்டுதல் போன்ற விடயங்களிலிருந்து விடுதலை கிடைத்துவிடும்.


இன்று இணையத்தில் உலாத்திக் கொண்டிருந்த போது எனக்குள் ஆச்சரியம்... அன்று எது இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேனோ அதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டிருந்தன. Youtube தள வீடியோக்களை இடைநடுவிலிருந்தும் இயக்க முடியுமாம். அந்த வீடியோ இணைய முகவரியின் இறுதிப்பகுதியில் #t=1m33s என்பதைச் சேர்ப்பதன் மூலம் குறிப்பிட்ட அந்த வீடியோவை 1 நிமிடம் 33 செக்கன்களிலிருந்து இயக்க முடியும்.

உதாரணத்துக்கு,
http://www.youtube.com/watch?v=vh3uaeKXFHg#t=1m33s


ஆனால், பொதுவாக பதிவுலகில்
Youtube வீடியோக்களை இணைக்கும் போது அவற்றின் Embed வடிவங்களைத்தான் இணைக்கின்றோம். குறிப்பிட்ட நேரத்திலிருந்து அவ்வீடியோக்கள் இயங்குவதற்கு, இதற்கும் ஏதாவது வழிமுறைகள் உண்டா எனத் தேடியபோது Google தேடுபொறி என்னைக் கைவிடவில்லை. :-)

உதாரணத்துக்கு, கீழுள்ள Embed Code இல் தடித்த - சிவப்பு நிற பகுதிகளினால் குறித்துக்காட்டப்பட்ட பகுதிகளை இணைப்பதன் மூலம் அந்த வீடியோவை 113 செக்கன்களின் பின்னர் இயங்க வைக்க முடியும்.
(பெரிதாக்குவதற்கு படத்தின் மேல் சொடுக்குக.)

முதலாவது பாடல் - என் சுயநலத்துக்கானது.
இரண்டாவது பாடல் - ஏனோ தெரியவில்லை; இட்ட காரணம் புரியவில்லை. :(

Wednesday, May 13, 2009

Intel இற்கு அபராதம்!!!

உலகின் Computer chip விற்பனையில் முண்ணனி வகித்த அமெரிக்க Intel நிறுவனத்துக்கு பெரியதொரு ஆப்பு விழுந்திருக்கின்றது. இந்நிறுவனம் வர்த்தக விதி முறைகளுக்கு விரோதமாக நடந்து கொண்டது என குற்றம் சுமத்திய ஐரோப்பிய ஒன்றியம் அதற்கான தண்டப்பணமாக 1.45 பில்லியன் அமெரிக்க டொலர்களை அறவிட்டுள்ளது.

தொழில்நுட்ப சந்தையில் மற்றைய போட்டி நிறுவனங்களை நசுக்கும் நோக்குடன் செயற்பட்டதுடன் அதிலும் உச்சக்கட்டமாக கணனிகள் தங்களுடைய தயாரிப்பு x86 chips இன்றி இயங்க மாட்டாது எனவும் Intel தெரிவித்தது பெரும் சர்ச்சையை தோற்றுவித்த நிலையில் ஐரோப்பிய யூனியனின் இந்த அறிவிப்பும் வந்துள்ளது.

இந்த காலாண்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை லாபமாக ஈட்டிய Intel இற்கு இத்தொகையை செலுத்துவது பெரும் சவாலாக இருக்கப் போவதில்லை. எனினும், இதை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாக
Intel தெரிவித்துள்ளது.

Friday, May 8, 2009

அரங்கு அழுத ஆற்றுகை

இன்று காலை இணையத்தில் நுழைகின்றேன். எங்கும் எதிலும் "பிரேம் கோபால்". யார் இவர்...? ஏனிந்த ஆர்ப்பாட்டம்...? அப்படி என்ன செய்தார்...??? இவை எல்லாவற்றுக்கும் விடையாக கிடைத்தது பதினைந்து நிமிடங்கள் ஓடுகின்ற அந்த காணொலி. கண்களிலிருந்து நீர் சொரிய உள்ளம் அழுதது. ஈழத்தமிழன் ஒருவன் இந்திய தொலைக்காட்சி ஒன்றில் அரங்கேற்றிய அந்த ஆற்றுகை பல கதைகள் பேசின.

எங்கள் ஒவ்வொருத்தரின் வாழ்க்கையும் அனுபவித்த சுகங்கள், சுமந்து வந்த சுமைகள், தொலைத்து விட்டு வந்த சொந்தங்கள்... பிரேம் கோபாலின் ஏழு நிமிட அரங்காற்றுகை பேசியதெல்லாம் எங்களின் வாழ்க்கையைப்பற்றியது.

நாங்கள் யாசிக்கின்ற சமாதானத்தின் குறியாக இறுதியில் ஒரு புறாவைப் பறக்க விட எண்ணினோம். மிருகவதைச் சட்டத்தின் கீழ் மறுத்து விட்டார்கள். இங்கே மிருகவதைச் சட்டம்...!!! ஆனால், அங்கே உறவுகள்......

நீர் நிரம்பி வழிகின்ற கண்களுடன் அவன் சகோதரி கேட்கின்ற அந்த வரிகள்... "நாங்கள் இப்ப அகதிகள்... இந்தியாவே உன்னால தான் முடியும்.... எங்களுக்காக இதைச் செய்... கைவிட்டு விடாதே...."

* * *

அது இப்போதைக்கு மீண்டும் மீண்டு வராத காலம். ஆம்... இறுதியாக வந்து போன சமாதான ஒப்பந்த காலத்தின் 2003 ஆம் ஆண்டில் ஓர் நாள்...

யாரும் இலகுவில் நுழைந்து விடாத எங்கள் கல்லூரியில் மேடையேற்றுவதற்காக வன்னியிலிருந்து நாடகக்குழு ஒன்று வந்திருந்தது. கல்லூரி சமூகத்துடன், பருத்தித்துறை பிரிகேட் ராணுவத்தளபதியும் கூட இருக்க அவர்கள் முன்னிலையில் அரங்கு திறந்தது. இலங்கை சுதந்திரம் பெற்றதாக கூறப்படும் 1948 தொடக்கம் வட்டுக்கோட்டை தீர்மானம் ஊடாக அன்றைய நாள் வரை நாங்கள் யாசித்த சமாதானமும், அதைத் தட்டிப்பறித்த கரங்களும் அரங்கில் வெளிச்சமிடப்பட்டன.

அதில் ஒரு காட்சி.... வெள்ளைச் சீருடையுடன் ஒன்றாக பள்ளி சென்று வந்த அண்ணனும் தங்கையும் பிறிதொரு நாளில் சந்திக்கின்றனர். பட்டினி வயிற்றுடன் தங்கை... அண்ணனின் இடுப்பில் கறுத்தத்துணி கட்டப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக அவன் அணிந்திருந்த தொப்பி குறிப்பில் அவன் யாரென உணர்த்தியது. அண்ணன் பெயர் சொல்லி எவருமில்லாத தங்கை அழைக்கின்றாள். அவன் கடமையோ வேறொரு பெயர் சூட்டி அவனை அழைக்கின்றது. அப்போது அங்கு வழிந்தோடிய பாசத்தை அரங்கில் எழுந்த விசும்பல்களும், மனம் அழுது விட்ட கண்ணீர்களும் தான் பேசின.


இன்று வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

கூகிளில் ஆடுகள்

சிறிய தொழில் நிறுவனங்கள் தொட்டு உலகின் பல பாகங்களிலும் ஆயிரக்கணக்கான கிளைகளையுடைய பென்னம் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை உலகப் பொருளாதார நெருக்கடி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் விளைவு சம்பளக்குறைப்பு, வேலையிழப்பு, கிளைகளுக்கு மூடுவிழா. இவைகளுக்கும் தாக்குப்பிடிக்காவிட்டால் மொத்தமாக எல்லாவற்றையும் மூடிக்கட்டிக் கொண்டு நடையைக் கட்டுகின்றன சில நிறுவனங்கள்.


பல மென்பொருள் சார்ந்த நிறுவனங்களிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், Google நிறுவனம் 200 வரையான ஆடுகளை வேலைக்கமர்த்தியிருப்பதாக தெரியவருகின்றது. இது இணையத் தேடலில் ஆடுகளைக் கொண்டு புரட்சியை ஏற்படுத்தும் ஒரு முயற்சியா...??? :D

உண்மையில் என்ன நடந்தது...?

Google இன் தலைமை அலுவலகம் ஒன்றில் வளர்ந்திருந்த புற்களை அகற்றுவதற்காகத்தான் அவை வேலைக்கமர்த்தப்பட்டிருக்கின்றன. இயந்திர சாதனங்களைப் பாவிப்பதன் மூலமாக ஏற்படும் சத்தம், சூழல் மாசடைதல் போன்றவற்றினை தவிர்ப்பதுடன் வீணாக எரிந்து சாம்பலாகும் புற்களை 200 ஜீவராசிகளுக்கு தீனியிட்டு புண்ணியம் செய்திருக்கின்றது Google.

Wednesday, May 6, 2009

ஒ(ஓ)ட்டுக் கேட்ட போது...


ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள்... இரு நண்பர்கள் பேசிக் கொண்டனர்.

"மச்சான் எப்படியடா வாழ்க்கை போகுது..." புலத்திலிருந்து குசலம் விசாரித்தான்.

"ஏதோ... இருக்கிறோம்." பதிலின் தொனி இவன் இலங்கையில் இருப்பதைக் காட்டியது.

"என்னடா இப்படி நெருக்கிறாங்கள்... இன்னும் ஒன்றையும் காணவில்லை..."

"ம்...ம்..."

"என்னடா ம்...ம்... உங்க உண்மையில் நிலைமை எப்படி...?"

"என்னைக் கேட்டுத்தான் நீ தெரியவேணுமாக்கும். ஏதும் பிரயோசனமாகக் கதைப்போமா..."

பல்கலைக்கழகம், படிப்பு, மகளிர், நண்பர்கள் எனப் பிரயோசனமாக(?) நடந்த உரையாடல் மீண்டும் ஓரிடத்த்ல் வந்து சிக்கெடுத்துக் கொண்டது.

"Facebook இல் நான் அனுப்பிய Groupஇல் நீ இன்னும் சேரவில்லையா...?"

"ஓ அதுவா...! நான் இப்பவும் இறைமையுள்ள இலங்கையில் தான் இருக்கிறேன்..."

"அந்த Groupஇல் இணைவதில் என்னடா தப்பு..? எங்களுக்காக அவர் அங்கேயிருந்து உண்ணாவிரதமிருக்கிறார். அவருக்கு ஒரு சப்போட் கொடுக்கிற மாதிரியாவது நாங்கள் இருக்க வேண்டாமா...? Facebook இல் சும்மா இருந்து கடலை போடுற நேரம் இப்படி ஏதாவது பண்ணடா... "

"அதில் இணைவதனால் ஏதாவது நல்லது நடக்குமா...?"

"எங்களுக்கு நல்லது நடக்க வேணுமென்று அவர் செய்கிறதை கொச்சைப்படுத்தாதே..."

சொல்ல முடியாத - எழுத முடியாத
இருவருக்குமிடையேயான சூடு பறந்த விவாதப் பெறுபேறு அவனும் அந்தக் குழுவில் இணைந்து கொண்டான்.

* * *

நேற்றும் அவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்டேன்.

"மச்சான் எப்படி இருக்கிறாய்..." புலத்திலிருந்து வந்த குரல் உடைந்திருந்தது.

"என்னத்தைச் சொல்ல...? ஏதோ இருக்கிறம்..." குரலில் விரக்தி கூடியிருந்தது.

"என்னடா என்ன நடக்குது...? எங்கட சனத்தை ஒருத்தரும் காப்பாற்ற இயலாதா..??????"

"யார் சொன்னது இல்லையென்று... காப்பாற்ற என்று தானே பலர் படையெடுக்கினம்...:-("
சோகத்திலும் ஏளனம் எட்டிப் பார்த்தது.
------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------
"மச்சான் மன்னிச்சுக் கொள்ளடா... அன்றைக்கு அந்த Groupஇல் இணையச் சொல்லி உன்னை வற்புறுத்தி இருக்கக் கூடாது..."

"ஏன்....?"

"இல்லையடா... நேற்று அவர் சொன்னது கேட்டாயா...? அம்மா எங்களுக்காகத்தான் உழைக்கிறாவாம்."

"எந்த அம்மா...?"

"இத்தாலி அம்மணி..."

தொலைபேசி வைக்கப்படும் சத்தம் தெளிவாக கேட்டது.
"We Wish You Thiruma..." எனும் குழுவிலிருந்தும் விலகிக் கொள்கின்றான் அவன்.

* * *

Facebook இல் எனக்கு "AIADMK Supporters Group" எனும் குழுவில் இணைவதற்கான அழைப்பு வந்திருந்தது.

அவள் எதிரியாகவே இருக்கட்டும். காலம் மாறினால் கடவுளாகுவாள். ஆனால், அவளைத் துரோகியாக்க நான் விரும்பவில்லை.

Tuesday, May 5, 2009

ஒரு துவிச்சக்கர வண்டியின் கதை!!!


மன்னார் மடுமாதாவை
வணங்கிய பின் தொடங்கிய பயணம்...

அடிக்கடி மாறுகின்ற சாரதிகளின்
வீழுகின்ற உடலம் காவினாலும்

முள்ளிவாய்க்கால் தாண்டியும்
தொடர்கின்றது என் பயணம்...!!!

You might also like