Search This Blog

Sunday, January 24, 2010

ஆச்சி வாக்களிக்கப் போகின்றாள்காலம் தெட்டத்தெளிவாக தன் கையெழுத்துக்களை இவள் முகத்தில் பதித்திருக்கின்றது. எண்பது ஆண்டுகள் அவளைத் தாங்கிய மண்ணில் இப்போது தாங்கி நிற்பது கைத்தடி மட்டுமே... இறப்புக்குப் பின்னான வாழ்க்கையை ஆய்வு செய்யும் விஞ்ஞானம் முடிவைச் சொல்லும் முன்னர் இவள் முடிவறிந்திடுவாள். ஓலைக்குடிசை வீட்டிலிருந்து வீதிக்கு வருகின்றாள் ஆச்சி.

நேற்றும் இப்படித்தான்... அதிகாலைப் பொழுதொன்றில் வீட்டுக்கதவு தட்டப்படும். அதை எதிர்பார்த்திருந்ததாய் இவள் நித்திரை கலைய... சிலவேளைகளில் கதவு திறக்கப்படும் முன்னரே அவர்கள் உள் நுழைந்திருப்பார்கள். அடையாள அட்டை காட்டி... பானைக்குள் பழஞ்சோறு இல்லை என மெய்ப்பித்து... சேலைகள் உதறி எவரும் இங்கில்லை எனக் காட்டினாலும் இவள் கொட்டியா இல்லை என்பதை நிரூபிக்க வீதிக்கு வரத்தான் வேண்டும். ஆட்டும் தலைகளுக்கு மத்தியில் நரைகளும் அணிவகுத்துத் தான் போனார்கள்.

ஆனால், காலம் இன்று மாறியிருக்கின்றதாய் உணர்வு... சோதனைச் சாவடி இல்லை... நரைகளுக்கும் மட்டுமல்ல இளசுகளுக்கும் தான் அடையாள அட்டை கட்டாயம் இல்லை... அந்தக் கட்டாயத்தை செல்போன்கள் மாற்றீடு செய்து கொண்டன. நடு முற்றத்தில் இருந்து நிலாவை ரசிக்க முடிகின்றது. அர்த்த சாமத்தில் குரைக்கின்ற நாய்களுக்கு காரணங்கள் கூட மாறி விட்டன. ஆமியின் வருகையின்றி பாமினியின் குடிகாரப் புருசனின் தள்ளாடும் தாலாட்டு. இவைகள் நிஜங்களா...? வலிகளா...? அல்லது பிரமைகளா..?

ஒரு முறை தொட்டுப்பார்த்து உறுதி செய்து கொண்டாள். வாக்குச் சீட்டும் அடையாள அட்டையும் பத்திரமாகவே இருந்தன... சுருங்கிக் கொண்டிருக்கும் ஞாபகத்திரைக்குள் புள்ளடி போடும் சின்னத்தை கொண்டு வரும் முயற்சியிலும் வெற்றிதான். அவனுக்குத்தான்...!!!

எவனுக்கு...??? காவலுக்கு நின்ற காக்கிகளின் குழல்கள் இவளைக் கேட்பதாய் ஒரு பிரமை. ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தின் பெயரால் உதை மட்டும் மறைத்துக் கொண்டாள்.

நேற்று வரை வந்த தேர்தல்களுக்கு தெரிவும் அங்கிருந்தேதான் வந்தன. உடன்பட்டுக் கொண்டாள். தன் உயிர் வாழ்தலுக்காக உதிரம் சிந்துகின்ற உள்ளங்களுக்காக மறு பேச்சின்றி புள்ளடி போட்டாள்... சிலசமயங்களில் ஒதுங்கி நின்றாள். உண்ணச் சோறில்லை என்ற போதும் உணர்வில் தேசியம் இருந்ததாய் இறுமாந்திருந்தாள்.

இன்று அப்படி இல்லையே...!!! இடி விழுந்த போது தூக்கி நிறுத்த யாராவது வருவார்கள் என்று நம்பியிருந்தாள். முப்பது வருட உதிரப்பாய்ச்சல் முடிந்து... மௌனிக்கின்றோம் என்ற போது, முடிந்து போனதென இவள் முற்றுப்புள்ளி இடவில்லை. வளர்த்து விட்ட விதை ஒன்று விருட்சமாகி அரசியல் தலைவனாவான் என்றிருந்தாள்.

ஒன்றல்ல... ஒருத்தருக்குப் பின் ஒருத்தராய்ப் பலர் வந்தார்கள். புலியாக அல்ல... நரிகளாக! அறிக்கைகளினால் அர்ச்சனை செய்தபடி, மாறிமாறி முகங்களில் எச்சிலை உமிழ்ந்து பங்கிட்டுக் கொண்டார்கள். நான் தான்... நான் தான் என அறிக்கைகளில் பெயர் காட்டி மக்களின் வலிகளை ஆற்றிட முடியுமா?

இப்போது இவளுக்கு முன் இரு தெரிவுகள். வளமான எதிர்காலம்... நபிக்கையான மாற்றம்... ஏதாவது ஒன்றுக்கு இவள் புள்ளடி விழத்தான் போகின்றது. அவர்கள் கால் நக்கி வாழும் ஈனப்பிறவியென யாரோ ஒருத்தன் இவளைச் சபிக்கக் கூடும்... இவளுக்கு என்ன கவலை? இணையத்தின் நிறம் தெரியாதவரைக்கும்.

இவளைத் தாங்கியிருக்கும் பொல்லுக்கு தங்க முலாம் பூசி வளமான எதிர்காலம் காட்டப்படலாம்.

இவளின் நரைத்த தலைக்கு “டை” அடித்து, இளைமை திரும்பியதாய் நம்பிக்கையான மாற்றமும் உணர்த்தப்படலாம்.

இப்போது இவள் முறை. அப்போது தான் எப்போதும் இவள் கூட வருகின்ற செல்லம்மா ஞாபகத்துக்கு வந்தாள். மறுகணம் மனது ஆறுதல் செய்து கொண்டது... செல்லம்மா இன்றைக்கும் மகனைத் தேடி ஐ.சி.ஆர்.சி. போறனென்றவள்.

ஆச்சி கையைக் காட்டுங்கோ... மை பூசப்படுகின்றது.

Tuesday, January 19, 2010

படம் காட்டும் பதிவுலகம் - சோரு சாப்புங்ககடந்த 18ம் திகதி ஆப்கான் தலைநகர் காபூலின் மையப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் திடீர்த்தாக்குதலில் ஈடுபட்டனர்.

அரச அலுவலக கட்டடங்களை முற்றுகையிட்டு தீவிர தாக்குதலை மேற்கொண்ட ஆப்கான் தீவிரவாதிகளை முறியடிக்க இராணுவத்தினர் கடுமையாக போராட வேண்டியிருந்தது.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பதிவியேற்பு வைபவத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இத்தாக்குதல் கருதப்படுகின்றது.

★ ★ ★அரசியல் நெருக்கடி, வெள்ளம், புயல் என பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஹெய்ட்டி நட்டின் மீது இடியாய் விழுந்திருக்கின்றது பூகம்பம்... இந்த அனர்த்தத்தில் இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

★ ★ ★அதே ஹெய்ட்டி நாட்டில் தான் இந்தக்காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு நட்ட நடுவீதியில் வைத்து வழங்கப்படும் தீர்ப்பு இது.

பரவாயில்லை... இலங்கைக்குச் சொந்தக்காரராக இன்னும் சில நாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

★ ★ ★செம்புழுதி வாரி இறைக்கும் எம் வீதியின் ஓரத்தில் இப்படியொரு அறிவித்தல்... நிகழ்கால வசந்தம் அப்படியே பளிச்சிடுகின்றது.

★ ★ ★2010ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற உள்ள உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகளின் தகுதிகாண் ஆட்டப்போட்டி ஒன்றில் பிரான்ஸ் அணியுடன் மோதிய அயர்லாந்து எதிர்பாராத விதமாக அத்தகுதியை இழந்தது.

எந்த அணி முதலில் கோலைப் போடுகின்றதோ அந்த அணி உலக கிண்ணப் போட்டிகளில் விளையாட தகுதி பெறும் சூழ்நிலையில்... பிரான்ஸ் அணித்தலைவர் தியரி ஹென்றி பந்தை கையால் தடுத்தாட அதனைப் பயன்படுத்தி கோல் ஒன்றினைப் பெற்றார் இன்னொரு வீரர் வில்லியம்ஸ்.

இந்த விடயம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருந்தது. விதி முறைகளுக்கு முரணாக பந்தை கையால் தடுத்தாடிய பிரான்ஸ் வீரர் தியரி ஹென்றி தண்டனைக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இது தொடர்பாக ஆராய கூடிய உலகக் கால்பந்து சம்மேளனம் ஆச்சரியமளிக்கும் வகையில் ஹென்றி மீது எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை.

தியரி ஹென்றி பந்தை கையினால் தடுத்தாடும் காட்சி.
Monday, January 18, 2010

அட... அந்தக் கண்கள் கொல்லுதே...!!!மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் வருகின்ற கதைகளையும் கறைகளையும் கடந்து மனதுக்கு இதமாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது இப்பாடல். "களவாணியே... களவாணியே..." நாதஸ்வரக் குரல் - இன்னிசைப் பாடகி ஸ்ரீமதுமிதாவினால் பாடப்பட்ட இப்பாடலின் ரசனையில் மயங்கி... பாடலுக்காக படம் பார்த்து... காதல் மயக்கத்தில் உயிரை வாட்டியெடுக்கும் அந்த ஒரு சோடிக்கண்களின் பார்வையில் சிக்குண்டு போனது உணர்வுகள்.

படம் முழுவதும் கிராமப் பெண்ணாக வந்து படத்துக்கு உயிர் கொடுக்கும் கதாநாயகியின் கண்ணசைவும், அவள் கூந்தல் சூடியுள்ள மல்லிகை மாலையும் இளமைப்பராய நினைவுகளை மீட்டிவிட்டுச் செல்வதில் ஆச்சரியமில்லை.

அவள் திரும்பிப் பார்ப்பாள்... அதுவே காதலுக்கான சமிக்ஞை என இப்போது தமிழ்ச் சினிமா கண்டுபிடித்த கண்டுபிடிப்பெல்லாம் எங்களுக்கு அப்போதே அத்துப்படி. கிராமத்து வீதிச் சந்திகளும், அவள் வீட்டு ஒழுங்கையும் பேசக் கற்றுக் கொண்டால் அந்தக் கடைக்கண் பார்வையினையும், காத்திருப்புக்களையும் காவியங்களாக வடிக்கும்.விஞ்ஞானம் கலக்காத - இரசாயனம் தடவாத - பார்த்ததும் நிலைகுலைத்து காதல் விஷம் பருக்கும் கண்களின் வார்த்தைகள் நகர வாழ்வினில் குதிரைக் கொம்பாகத் தான் கிட்டுகின்றன. தென்றல் சுமந்து வரும் கிராமத்து மண் வாசமும் சேரும் போது அந்தப் பார்வைக்கு உயிரையே எழுதிக் கொடுக்கலாம்.

காவியம் பகிரத் துடிக்கின்ற உதடு... இருவிழிப் பார்வையில் தெறிக்கும் மையல்... பத்தாம் ஆண்டு பாடப்புத்தகத்துக்குள் முகம் மறைத்து ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்... பரந்து விரிந்த நீலக்கடலினை தாங்கி நிற்கும் வெண்மணற்பரப்புக்கள்... அவள் கறுத்தப் பொட்டுப் பறித்து, பாடக்கொப்பிக்கு திலகமிட்டு அழகு பார்த்த குறும்புத்தனம்... நினைவலைகளில் தவழ விடுகின்றது இப்பாடல்.


Thursday, January 14, 2010

சொல்லம்மாஇது நான்காவது தடவை... பக்கத்து வீட்டுக்காரனைத் தேடிப் போன செல்லம்மா இம்முறையும் வெறுங்கையுடன் தான் திரும்பினாள். மனுசியினால் அந்தக் கடிதம் என்னவென்று அறியாமல் ஓரிடத்தில் இருக்க முடியவில்லை. பத்துநிமிசத்துக்கு ஒருக்கால் போய்ப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் வருகுது. கடைசியாகப் போய் விட்டு வரும் போது ஆற்றாமையினால் "கொப்பன் எங்க போய்த் தொலைஞ்சான்..." என்று ஐந்து வயதுப் பெடியனைத் திட்டிப் போட்டும் வந்திட்டுது.

அந்தப் பெடியன் என்ன செய்ய முடியும்...? படமாகத் தொங்குகின்ற தாயிற்கு முன்னால் நின்று "அம்மா... அப்பாவைப் பேசுறாங்கள்" என்று முறையிடுவதைத் தவிர...

செல்லமாவுக்கு வந்த கடிதத்தை இவள் இல்லாததால் ஏற்கனவே சொல்லி வைத்ததைப் போல தபாற்காரன் பக்கத்து வீட்டிலே கொடுத்திட்டான். கடிதத்தை வாங்கினவனும் வீட்டுக்குள்ள வைத்துவிட்டு செல்லம்மாவை வழியிலே கண்டுதான் சொன்னான். "உனக்கு ஒரு கடிதம் வந்திருக்கு... இப்ப அலுவலாகப் போறன். வந்து தாறன்..."

அவளுக்குத் தெரியும். அது ஐ.சி.ஆர்.சி அல்லது கியுமன் றைற்ஸ் இடமிருந்துதான் வந்திருக்கும். சிலவேளை, அவன் தான் போட்டிருப்பானோ என்றும் மனம் அங்கலாய்த்தது...

அவன் என்றால், செல்லம்மாவின் மகன். ஒரேயொரு மகன்... இரண்டு வருஷமாக அவனைக் காணாமல் துடிக்கின்றாள். அவனைக் கண்டு பிடித்து தாங்கோ என்று இன்றைக்கும் ஐ.சி.ஆர்.சியிடம் போனதால் தான் வீட்டிலே ஆள் இருக்கவில்லை. உந்தக் கடிதமும் தவறிப் போய் பக்கத்து வீட்டிலே கிடக்குது.

★ ★ ★

ஒரேயொருவன் தானே ஒன்றும் செய்ய மாட்டாங்கள் என்ற நம்பிக்கை செல்லம்மாவிடம் இருந்தது. அவனும் பள்ளிக்கூடம், ரியூசன் என்று எல்லா இடமும் போய் வந்தான். "அம்மாவை நீதான் பார்க்க வேணும்" என்று அடிக்கொரு தரம் மகனுக்கு மந்திரம் போல ஒப்புவித்துக் கொண்டிருந்தாள். அது அவளுக்கு கட்டாயமாகவும் பட்டது.

ஆனால், ஒரு நாள் பள்ளிக்கூடம் போனவன் திரும்பி வரவில்லை. அவனாகப் போயிருக்க மாட்டான் என்று நம்பவும் முடியவில்லை. முதல் நாள் தான் தோட்டத்தில் நின்ற அவனின்ர மாமன்காரன் துடிதுடித்துச் செத்தான்.

"விரும்பிப் போனானா...? பிடிச்சுக் கொண்டு போனாங்களா...?" பூராயம் புடுங்குபவர்களின் இந்தக் கேள்வி அவளுக்கு ஈட்டி முள்ளால் குத்தும் வலி... விடை தெரியவில்லை.

அவனை விடச் சொல்லி அழுது புரண்டி மன்றாடினாள். உன் மகன் வந்தான் என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டார்கள். ஒரு முறையாவது அவனைப் பார்த்திட வேண்டுமென்று அன்றிலிருந்து அலைகின்றாள். காலம் ஏமாற்றிக் கொண்டிருந்தது.

அந்த நாள் கடைசி நாள்... எல்லாவற்றுக்கும் தான்... அந்தக் கொடூர கந்தக மண்ணில் நின்று மகனைத் தேடிக்கொண்டிருந்தவளை மீட்டெடுத்துக் கொண்டு வந்தார்களாம். மகனும் வந்திருப்பான் என்ற நம்பிக்கையைத் தவிர வேறொன்றும் அவளிடம் இருக்கவில்லை.

அன்றிலிருந்து ஐ.சி.ஆர்.சி, கியுமன் றைற்ஸ், கச்சேரி, மினிஸ்ரர்கள்... என்று எல்லா இடமும் ஏறி இறங்குகின்றாள். இவள் கதை கேட்டு வஞ்சகமின்றி எல்லோரும் கண் கலங்குகின்றார்கள். என்னைப் போல... அவ்வளவும் தான் அவள் மகனுக்கான பதிலாக இருக்கின்றது.

மீள் குடியேற்ரத்தின் முதல் நாள். "எங்களுக்கு எல்லாம் தெரியும்... மறைக்கக்கூடாது" என்ற கட்டளையின் பின்னர் விசாரணை ஆரம்பமானது.

"ஆச்சி... தனியவா?"

"ஓமோம்..."

"பிள்ளைகள் எங்கே...?"

"ஒரு பிள்ளைதான். அவன் இப்ப எங்கேயென்று தெரியாது..."

அடுத்த கேள்வி...
"விரும்பிப் போனானா...? பிடிச்சுக் கொண்டு போனாங்களா...?"

செல்லம்மா கண் முழித்த போது ஆஸ்பத்திரியில் இருந்தாள். கூடியிருந்த பிறஸரைக் குறைக்க வைத்தியர்கள் போராட வேண்டியிருந்தது.

★ ★ ★

மழை இருட்டு... ஏழு மணிக்கே கும்மென்று இருந்தது.

வீட்டுப்படலைக்குள் பக்கத்து வீட்டுக்காரன் தான் கூப்பிட்டான்.

"டேய்... இவளவு நேரமாக காத்திருக்கிறேன். எங்கே போனனி..? நில் வாறன். உது செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்தோ அல்லது ஏதும் முகாம் விலாசமோ..?" செல்லம்மா ஆர்வம் தாளாமல் கேட்டுக்கொண்டே ஓடிச்சென்று கடிதத்தை வாங்கினாள்.

யு.என் கொடுத்த லாம்பு வெளிச்சத்தில் படித்த கடிதத்தில் இப்படி இருந்தது.

வாக்காளர் அட்டை
பெயர்: கன்தயா சொல்லம்மா

Sunday, January 10, 2010

பிச்சைக்காரனின் பாட்டு"நீங்கள் தமிழா...?" கணீரென்ற பெண் குரல்... சகுனம் நல்லாயிருக்குதே என்று திரும்பிப் பார்த்தேன். கண்ட முகமாக ஞாபகம் இல்லை. ஒருத்தி நின்றாள்.


"ஓமோம்... நீங்களும் ரமிலோ..?" கொஞ்சம் நாகரிகம் சேர்த்து தமிழிலே கேட்டு வைத்தேன். தமிழ் பேசுபவளிடம் தமிழோ என்று கேட்பது முட்டாள்தனம் தான். ஆனால், நெற்றியிலே திருநீறு, சந்தனம், குங்குமம்... கையிலே மஞ்சள், கறுப்பு, சிவப்பு நிறங்களிலே கோயில் நூல்... என்னிலே இவ்வளவும் கண்ட பின்னும் அவள் கேட்ட கேள்வி...???

சரி... இதுவா முக்கியம்..? சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு. அவளை முந்திக்கொண்டு நான் கடலை போட ஆரம்பித்தேன்.

அடுத்த தரிப்பிடத்தில் பஸ் குலுக்கலுடன் நின்றது. என் சேர்ட்டும் அவள் ரீ-சேர்ட்டும் உராய்தலில் கசங்கியிருக்கலாம்... நான் கவலைப்படவில்லை; அவளும் தான்... அவள் அணிந்திருந்தது ரீ-சேர்ட்டும் டெனிம் என்றாலும் அவள் "ரிச்சு கேளா" என வரைவிலக்கணப்படுத்த தேவையான தரவுகள் எதுவும் நின்று கொண்டு பயணிக்கும் பஸ் பயணத்தில் கிடைக்கவில்லை.

இன்ரர்வியூவுக்குப் போறாளாம். ஆனால், இடம் தெரியாதென்று கேட்டாள். யாரினுடைய அதிர்ஸ்டமோ தெரியவில்லை. என் அலுவலகத்துக்கு அருகில் தான் அவள் கேட்ட அட்ரெஸும். "டோன்ற் வொறி... நான் இருக்கின்றேன்" என்றேன். மனது திறந்து சந்தோசப்பட்டாள்.

அடுத்த தரிப்பிடத்தில் நின்ற பஸ் பிச்சைக்காரன் ஒருத்தனையும் ஏற்றிக் கொண்டு பறந்தது.

கொழும்பு பஸ் பிரயாணத்தில் பிச்சைக்காரரின் தொல்லை தாங்க முடியாது. கைக்குழந்தைகள், அல்லது அவர்களின் போட்டோக்கள், எக்ஸ்-ரே படங்கள், வைத்திய அறிக்கை, அல்லாது போனால் உடலிலே எங்கேனும் ஓர் வெள்ளைத் துணிக்கட்டு. இவைகள் தான் இவர்களின் மூலதனம்... காட்டிக்காட்டி, கூவி விற்று பிச்சை எடுப்பார்கள். என்ன செய்ய..? பயணிகளுக்கு இடைஞ்சல், எரிச்சல். ஆனால், அவர்களுக்கோ எரியும் ஒரு சாண் வயிற்றுக்கான போராட்டம்.

பஸ்ஸில் ஏறிய பிச்சைக்காரன் சாரதிக்கு அருகில் வந்து சனங்களை நோக்கி தலை குனிந்து வணங்கினான். பின்னர், தன் கையிலிருந்த பொருளொன்றைத் தாளமாக்கி பாட்டுப் பாடினான்.

சிங்களப் பாட்டுத்தான். வரிகள் நன்றாகப் புரியவில்லை. ஆனால், இசைக்கேது மொழி...? அவனின் குரலசைவும், அந்தத்தாளமும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. என் பக்கத்தில் நின்ற 50 வயது மதிக்கத்தக்க ஒருத்தர் அவன் பாட்டுக்குத் தானும் வாயசைத்து தாளம் போட்டான். அட... என் கால்களும் தான் அவன் இசைக்கேற்ப அசைந்தன. அவள் கூட அப்பிச்சைக்காரனின் இசையை ரசித்தாள். நானும் ரசிப்பதை புரிந்து கொண்டு கண் சிமிட்டி கதை சொன்னாள்.

அடுத்த தரிப்பிடத்தில் சில இருக்கைகள் வெறுமையாகின... எனக்கு கால் கடுத்தாலும் ஒன்றாக அமர சோடி இருக்கைகள் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால், குறுக்கால போன கொண்டக்டர் விடவும் இல்லை. அவன் கத்தின கத்தலில், என்னை ஒரு இருக்கையிலும் அவளை எனக்குப் பின்னால் மூன்று வரி தள்ளி ஒரு இருக்கையிலும் இருத்திவிட்டான். பாவிப்பயல்...

இப்போது பிச்சைக்காரன் தன் பாட்டுக்குரிய சன்மானம் வாங்கும் நேரம். உண்மையில் அவன் இசையில் கிறங்கித்தான் போனேன். கட்டாயம் பத்து ரூபாயாவது கொடுக்கணும்...

அவன் வருகின்றான். அவன் பாட்டுக்குத் தாளம் போட்டு வாயசைத்த அந்த ஐம்பது வயது நபர் எங்கேயோ பார்வையைத் திருப்புகின்றார். அவன் கை அவரை நோக்கி நீளுகின்றது...

"எங்களிடம் பிச்சை எடுக்கிறது சாராயம் குடிக்கத்தானே..." சிங்களத்தில் திட்டிய அவர் தன் முகத்தை கர்ணகடூரமாக்குகின்றார். சீய்... இப்படியும் மனிதர்களா என என் மனது அவரைச் சபிக்கின்றது. இதெல்லாம் சகஜம் என்பது போல பிச்சைக்காரன் அங்கால் நகர்கின்றான்.

என் பேர்ஸைத் திறந்து பார்க்கின்றேன். அண்மையில் வெளியிடப்பட்ட புது ஆயிரம் ரூபாய்த்தாள் தான் என்னைப் பார்த்து பல்லிளிக்கின்றது. துலாவிப் பார்க்கின்றேன். ஒரு ரூபாய் சில்லறை கூட சிக்கவில்லை.

இப்போது என் முன்னால் அவன் கரம் இரந்து நிற்கின்றது. என் பார்வை பேருந்தின் யன்னல் வழியே எங்கோ பார்க்கின்றது. ஏமாற்றம் மேலிட அவன் என்னைக் கடந்து போகின்றான். சில்லறையானாலும் அவனுக்கு அவள் கொடுப்பதை என் கடைக்கண் பார்வை உறுதி செய்து கொள்கின்றது.

இறங்கும் போது என் விம்பம் உடைந்து சிதறு முன் அவளுக்கு கட்டாயம் இதைச் சொல்ல வேணும்.
பிச்சைக்காரன் பாடினது இராஜின் பாடலென... அவள் புரிந்து கொள்வாள்.

You might also like