Search This Blog

Wednesday, September 16, 2009

பத்துக் கேள்விகளும் வந்தியத்தேவனின் பதில்களும் - 1

"சிறுவயது முதல் நிறைய வாசித்தாலும் நான் ஒரு நாளும் இலங்கை எழுத்தாளர், இந்திய எழுத்தாளர் எனப் பேதம் காட்டியது இல்லை. செங்கை ஆழியானை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு சுஜாதாவையும் பிடிக்கும். அதே நேரம் ஜனரஞ்சகமான விகடன், குமுதம் வாசித்தளவு இலங்கையின் மல்லிகை போன்ற சஞ்சிகைகள் சிறுவயதில் வாசிக்கவில்லை. சிரித்திரன் விதிவிலக்கு. பலகாலமாக வாசித்த சஞ்சிகை சிரித்திரன்." - வந்தியத்தேவன்.

2006 ஜூலை தொடக்கம் இன்று வரை - மூன்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையிலிருந்து என் உளறல்கள் எனும் பெயரிலான வலைத்தளத்தில் எழுதி வருபவர் வந்தியத்தேவன். மயூரன் எனும் இயற்பெயர் கொண்ட இவரி்டம் வலையுலகம் தொடர்பாக தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். பத்து வினாக்களில் மிகுதி ஐந்து வினாக்களும் அவற்றுக்கான வந்தியத்தேவனின் பதில்களும் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும்.கேள்வி: அண்மையில் இலங்கைப்பதிவர் மு.மயூரன் அவர்களினால் தொடக்கிவைக்கப்பட்ட தொடர்பதிவில் நீங்கள் இணையத்தில் எழுத வந்த அறிமுகம் பற்றி எழுதியிருந்தீர்கள். ஆனாலும் உங்கள் பதிவுலக பிரவேசம் பற்றி அதனைத் தூண்டிய காரணிகள், ஞாபகமிருப்பின் நீங்கள் முதலில் வாசித்த தமிழ் வலைப்பதிவு, நீங்கள் பின்னூட்டல் கருத்திட்ட முதல் தமிழ் வலைப்பதிவு பற்றி சொல்லுங்கள்...

பதில்: 2005களில் எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயின. மு.மயூரன், கானாபிரபா, சினேகிதி, மயூரேசன், சந்திரவதனா அக்கா, போன்றவர்களின் வலைகளைப் படித்திருக்கின்றேன் ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை. காரணம் அப்போ எனக்கு பின்னூட்டம், பதிவு, அனானி போன்ற எந்த விடயமும் தெரியாது. அவர்கள் சொந்த டொமைனில் எழுதுகின்றார்களோ என்ற எண்ணம்.

2006ல் சும்மா இணையங்களை அலசி ஆராய்ந்ததில் தமிழ்நாடுடோல்க் என்ற விவாதக் களத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கே என் கருத்துகளைச் சொல்லும் போது நண்பர் லக்கிலுக் (யுவகிருஷ்ணா). நீங்கள் அழகாக எழுதுகின்றீர்கள் ஏன் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்ககூடாது என என்னைக் கேட்டார். அவரின் தூண்டுகோளுடன் லெனின் என்ற இன்னொரு நண்பனின் ஊக்குவிப்பும் சேர 2006 ஜூலையில் என் முதல் பதிவு பிரசவமாகியது. என் பதிவின் முதல் வாசகர்களாக இவர்கள் இருவரையும் குறிப்பிடலாம்.

என்னை எழுதத் தூண்டிய காரணிகளாக அக்காலத்தில் எழுதிய பிரபலங்களான லக்கிலுக், கானாபிரபா, செந்தழல் ரவி, டிசே தமிழன், மு.மயூரன், சினேகிதி, ஊரோடி பகி, பாவை, சயந்தன், வசந்தன், தூயா, தேவ், சின்னக்குட்டி, சுப்பையா வாத்தியார், மறைந்த சிந்தாநதி அத்துடன் இன்னும் பலரின் வலைகளைப் படிக்கும் போது நானும் ஒருக்கால் எழுதிப்பார்க்கவோ என்ற எண்ணம் வந்தது. அதே நேரத்தில் லக்கியின் தூண்டுதலும் என்னை வலைப்பதிவிற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட்டது. 

பாடசாலை நாட்களில் கட்டுரைகள், ஓஎல் பரீட்சையில் மட்டும் சிறுகதை எழுதிய அனுபவம் பின்னர் தகவல் தொழில்நுட்ப மாணவனாக இருந்து பத்திரிகைகளில் எழுதிய சில அது சம்பந்தப்பட்ட கட்டுரைகள், சில விளையாட்டுக் கட்டுரைகள் எனக்கு முன் அனுபவம் கொடுத்திருந்தாலும் இணையத்தில் எழுதுவது புதிதாகத் தான் இருந்தது. அதனால் தான் 2006ல் மட்டும் வெறும் 6 பதிவுகள்.

முதலில் பின்னூட்டம் இட்ட வலைப்பதிவு நிச்சயமாக லக்கியினுடையதாகத் தான் இருக்கும். அவர் தன் வலைப் பக்கத்தை மாற்றி அமைத்ததில் அந்தப் பின்னூட்டம் அறியமுடியாமல் இருக்கின்றது.

பின்னர் கானா பிரபாவின் மாம்பழம் பதிவில் என்னுடைய பின்னூட்டம் மூலம் அவரின் நட்பும் தொடர்பும் கிடைத்தது. இன்றுவரை அது ட்விட்டர் கும்மி வரை தொடர்கின்றது. 


கேள்வி: தமிழ்மண நட்சத்திரமாக இலங்கையிலிருந்து ஒளிர்ந்த ஒரு சில பதிவர்களில் நீங்களும் ஒருத்தர். தமிழ்மண நட்சத்திர வார அனுபவம் பற்றி...

பதில்: மிகவும் சுவாரசியமான கதை இது. 2008 செப்டம்பர் மாதம் புதிய புரொஜொட் ஒன்றுடன் அதிக வேலைப் பளுவுடன் இருந்த காலம். 2008 செப்டம்பர் 10ந்திகதி எனது மின்னஞ்சலுக்கு தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்னை செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியிலிருந்து ஒக்டோபர் 4 ஆம் தேதிவரை தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்க அன்புடன் அழைத்த அஞ்சல் வந்திருந்தது.
எனக்கு முதலில் அதிசயம் காரணம் அந்தக் காலத்தில் மொத்தமாக வெறும் 60 பதிவுகள் மட்டும் தான் எழுதியிருந்தேன். ஆகவே யாரோ தமிழ்மணம் போல் மின்னஞ்சல் தயாரித்து என்னுடன் விளையாடுகின்றார்கள் என நினைத்து எதற்கும் சில நண்பர்களை இதைப் பற்றிக்கேட்போம் எனக் கேட்டால் அவர்கள் சொன்னார்கள். அந்த முகவரி போலியல்ல தமிழ்மண முகவரி தான் அதனால் நட்சத்திரமாக இருக்க ஒத்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.
நானும் நட்சத்திரமாக இருக்க சம்மதம் தெரிவித்து, அவர்களுக்கு மறுமொழி இட்டுவிட்டேன். திடீரென தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகியிடம் இருந்து செப் 16ந்திகதி இன்னொரு மடல் என்னை செப் 29ந்திகதி அல்ல செப் 22ந்திகதி முதல் நட்சத்திரமாக இருக்கமுடியுமா? எனக் கேட்டிருந்தார்.
அவசர புத்தி என்னுடன் உடன் பிறந்தது என்பதால் நானும் அதற்கு ஒத்துக்கொண்டு செப் 22ந்திகதி முதல் 28ந்திகதி வரை தமிழ்மணத்தில் நட்சத்திரமானேன்.
அந்த நட்சத்திர வாரத்தில் என் வலையை மேய்ந்தவர்கள் எண்ணிக்கை முன்னைய நாட்களை விட அதிகம். அதுவரை பெரும்பாலும் சினிமா, விளையாட்டு, இடையிடையே கொஞ்சம் சீரியஸ் பதிவு, மொக்கைப் பதிவுகள் என பதிவிட்ட நான் அந்த வாரம் கொஞ்சம் நல்ல விடயங்கள் என நினைத்து சில பதிவுகளை இட்டிருந்தேன். கிட்டத்தட்ட 12 பதிவுகள் ஓரிரு பதிவுகள் தவிர ஏனையவை பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
சில பதிவுகளில் கொஞ்சம் சர்ச்சை ஏற்பட்டது. ஒருவர் நான் இலங்கையில் இருந்து எழுதினாலும் இந்திய சார்பு பதிவுகளே இடுகின்றேன் என எழுதியிருந்தார். அத்துடன் இலங்கை வலைப்பதிவாளர்கள் பற்றி நான் எழுதிய பதிவில் ஒரு சின்ன சர்ச்சை ஏற்பட்டிருந்தது அது பற்றி நான் இங்கே குறிப்பிடவிரும்பவில்லை. அந்தப் பதிவினைப் பாருங்கள் புரியும். (http://enularalkal.blogspot.com/2008/09/blog-post_24.html)
அத்துடன் நன்றி தெரிவித்து எழுதிய பதிவில் லக்கிலுக் "தமிழ்ப்பதிவர்கள் என்ற பெரும் குடையின் கீழ் இணையாமல் ஈழத்துப் பதிவர்கள் தங்களை இலங்கைப் பதிவர்கள் என்று சொல்லிக்கொள்வதாலும் இருக்கலாம் :‍)" என்ற விமர்சனத்தை வாசகர் தொகை அதிகரித்திருந்தாலும் பின்னூட்டங்கள் அவ்வளவாக வரவில்லை என நான் ஆதங்கப்பட்டிருந்த விடயத்துக்கு விமர்சனமாக எழுதியிருந்தார். அதற்கான பதில் அந்தப் பதிவில் இருக்கின்றது. (http://enularalkal.blogspot.com/2008/09/blog-post_1627.html)
அந்தக் காலத்தில் பின்னூட்டப் போதை எனக்கு இருந்தது. இப்போ ஏனோ அது இல்லை. சயந்தன் ஒரு பதிவில் குறிப்பிட்டதுபோல் முத்தி நிலை அடைந்துவிட்டனோ தெரியவில்லை. அதனால் தான் அதிக பின்னூட்டம் எதிர்பார்த்தேன், இதனைப் பற்றிப் பெயரிலியும் குறிப்பிட்டிருந்தார்.
நிறைய புதிய நண்பர்களுடன் கொஞ்சம் சர்ச்சைகள் என தமிழ்மண வாரம் மகிழ்ச்சியாகவே சென்றது. அந்த மகிழ்ச்சியான நினைவுகளை நினைவூட்டிய இந்தக் கேள்விக்கு நன்றி. 


கேள்வி: உங்களுடைய பதிவுகள் இந்தியா, சினிமா தொடர்பாக பேசிய அளவு இலங்கையைப் பற்றி - எங்களின் வாழ்வுகளைப்பற்றி பேசவில்லை எனும் குற்றச்சாட்டை முன்வைத்தால் உங்களின் பதில்...

பதில்: இந்தக் குற்றச்சாட்டை ஓரளவு ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கான காரணமாக நான் வலைப்பதிவராக மட்டுமல்ல ஒரு வாசகனாகவும் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன். சிறுவயது முதல் நிறைய வாசித்தாலும் நான் ஒரு நாளும் இலங்கை எழுத்தாளர், இந்திய எழுத்தாளர் எனப் பேதம் காட்டியது இல்லை. செங்கைஆழியானை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு சுஜாதாவையும் பிடிக்கும். அதே நேரம் ஜனரஞ்சகமான விகடன், குமுதம் வாசித்தளவு இலங்கையின் மல்லிகை போன்ற சஞ்சிகைகள் சிறுவயதில் வாசிக்கவில்லை. சிரித்திரன் விதிவிலக்கு. பலகாலமாக வாசித்த சஞ்சிகை சிரித்திரன்.
அத்துடன் பள்ளி நண்பர்கள் முதல் கொண்டு ஊர்ப் பொடியள் வரை அந்த நாளில் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதரவாளர்கள் (83 உலகக் கிண்ணம் எனக்குள் கிரிக்கெட் பார்க்கும் வெறியைத் தூண்டியது), ஆகவே விளையாட்டு என்றால் கிரிக்கெட் இந்திய அணி என இந்தியாவின் மேல் பாசம் நிறைந்திருந்த நாட்கள் அவை.
அத்துடன் சினிமாவும் எனக்கு நிறையப் பிடிக்கும் நல்ல சினிமாக்களைத் தேடிப்பார்க்கும் ரசிகன். ஆகவே சினிமா பற்றிய பதிவுகள் அதிகம் இடக் காரணம் இவைதான்.
இலங்கையைப் பற்றி அல்லது எங்கள் வாழ்க்கைகள் பற்றி ஆரம்பகாலங்களில் நான் எழுதாமல் இருக்க காரணம் அந்த நாட்களில் என்னுடைய எழுத்துக்களை அதிகம் படித்தவர்கள் தமிழக நண்பர்கள். ஆகவே அவர்களுக்காக அவர்கள் பாணியில் எழுதினேன். அத்துடன் ஒரு சிலரைத் தவிர ஏனைய புலம் பெயர் நம் உறவுகள் எனது வலையைப் படித்ததாகவோ பாராட்டியதாகவோ ஞாபகம் இல்லை.
அத்துடன் அரசியல் பற்றி எழுத எனக்கு விருப்பவில்லை. இலங்கை என்றால் அரசியல் என இருந்தகாலம் அது. ஆனாலும் இலங்கைக் கிரிக்கெட் பற்றியும் என்னுடய சில அனுபவங்களும் எழுதினேன். மற்றவற்றுடன் ஒப்பிடும் போது எண்ணிக்கை மிகவும் குறைவு.
பின்னர் இந்த ஆண்டில் கானாபிரபாவினால் ஆரம்பிக்கப்பட்ட ஈழத்துமுற்றத்தில் என்னுடய ஈழம் சார்ந்த அல்லது இலங்கை சார்ந்த வட்டார வழக்குகள், பண்பாடுகள் பற்றிய பதிவுகள் வெளிவந்தன. எங்கடை தமிழில் எழுதுகின்ற வாய்ப்பு அங்கே எனக்கு கிடைத்தது. இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும், என்னுடைய எழுத்து வித்தியாசமாக இருந்தாலும் பேச்சுத் தமிழ் என வரும்போது கொழும்பில் பல காலம் இருந்தாலும் இன்னும் யாழ்ப்பாணத் தமிழே வருகின்றது.

என்னுடைய வலையில் இலங்கை வாசகர்கள் பலர் அந்த நாட்களில் குறைவு ஆகவே இலங்கை விடயங்கள் எழுதுவது மிகவும் குறைவு. ஆனால் இன்றோ பல இலங்கை வாசகர்கள் இருப்பதால் இலங்கை விடயங்கள் எழுதப்படும் போது நிறைய விமர்சனங்கள் வருகின்றது. இதற்க்குச் சான்றாக அண்மையில் எழுதிய பகிடி வதை, பாடசாலைகளில் மதம் பற்றிய பதிவுகள் சான்றாகும்.
தற்போது இலங்கை பற்றி எழுதுவதால் தான் முதலில் இந்தக் குற்றச்சாட்டை ஓரளவு ஏற்கின்றேன் என்றேன்.


கேள்வி: 2006 ஆம் ஆண்டிலிருந்து இணையத்தில் எழுதி வருகின்றீர்கள். ஆனால், அண்மைய நாட்களில் நீங்கள் இடுகின்ற பதிவுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புக் காட்டுகின்றது. இதற்கு குறிப்பிடும் படியான காரணங்கள் எதுவும் உண்டா?

பதில்: இதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம். 
 1. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பலர் கல்விக்காகவும் வேலைக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்றமை. ஏனென்றால் முன்னைய நாளில் வேலை முடிந்த பின்னர் எங்கள் வேலை காலி வீதியைச் சுற்றுவதே. சிலவேளைகளில் எங்கள் உலாத்தல்கள் இரவு 10 மணி வரை கூட நீடிக்கும். ஆகவே பதிவு எழுதுவது கிழமைக்கு ஒன்று அல்லது மாதத்திற்கு ஒன்று ஆனாலும் வலையுலக நுண்ணரசியல்கள், போலிப் பிரச்சினைகள், எனப் பலவற்றையும் தமிழ்மணம் மூலம் அறியக்கிடைத்தது. நான் பதிவு எழுதாவிட்டாலும் பலரின் பதிவுகள் படித்து என் கருத்துகளை தெரிவிப்பது பழக்கம்.
 2. அடுத்த காரணமாக என்னுடைய வாசகர் வட்டம் கொஞ்சம் பெரிதாகி விட்டது. இதற்கான ஒரு காரணம் இலங்கைப் பதிவர் சந்திப்பு. அத்துடன் பலர் இன்றைக்கு வலையுலக நண்பர்களாக இருப்பதால் என்னுடைய பதிவுகளை விரும்பிவாசிப்பதை அறிந்தேன். அவர்கள் தந்த ஊக்கமும் பாராட்டுக்களும் என்னை அதிகம் எழுதவைத்தன.

கேள்வி: இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு நடந்து முடிந்ததன் பின்னர், நீங்கள் எழுதுகின்ற இடுகைகள், உங்களுக்கு கிடைக்கின்ற பின்னூட்டல் கருத்துக்கள், உங்கள் தளம் நாடி வருபவர்கள்... இவைகள் தொடர்பான தங்களின் கருத்துக்கள்...

பதில்: இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின்னர் என்னுடைய வலைக்கு மட்டுமல்ல சந்திப்பில் கலந்துகொண்ட பலரின் வலைக்கும் வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக அறிந்தேன். இதற்கான காரணம் இதுவரை இலைமறை காயாக இருந்த பலரின் வலைகள் பரவலாக அறியப்பட்டமையும், அத்துடன் இவர்கள் ஒருவருடன் ஒருவர் நேரடியாக அறிமுகமானபடியால் தங்கள் நட்பை வளர்க்க வலைகளினூடான கருத்துப் பரிமாற்றத்தை செய்துகொள்வதையும் அவதானிக்க முடிகின்றது.
இன்னும் சொல்லப்போனால் சந்திப்புக்கு முன்னரே சில இலங்கைப் பதிவர்கள் என்னுடைய வலையில் பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள். சந்திப்பின் பின்னர் பின்னூட்ட இடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் பலர் நட்பு ரீதியிலும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றார்கள். இதனை நீங்கள் என்னுடைய பி்ன்தொடர்பவர்களின் எண்ணிக்கையை வைத்தும் அறிந்துகொள்ளமுடியும். சந்திப்புக்கு முன்னர் 20 ஆக இருந்த பின்தொடர்பவர்கள் இன்றைக்கு கிட்டத்தட்ட 60 ஆக உயர்ந்திருக்கின்றது. ஏனைய மூத்த பிரபல பதிவர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.
பின்னூட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை 2006ல் இருந்து என்னை ஊக்கப்படுத்துபவர்கள் பலர் இன்றைக்கும் தங்கள் பின்னூட்டங்களை இட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். வெறுமனே பாராட்டாமல் தங்கள் கருத்துகளைச் சொல்லி பின்னூட்டங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றங்களுக்கு வகை செய்கின்றார்கள். புதியவர்களுக்கும் இது பொருந்தும். 

-- தொடரும்

10 comments:

 1. ஆகா.... எப்பிடி அண்ணை இப்பிடியெல்லாம் ஐடியா வருது உங்களுக்கு.... கேள்விகளும் பதில்களும் மெய்யாவே நல்லா இருக்கு

  ReplyDelete
 2. இதுக்கு தான் பேட்டி எடுப்பது என சொல்வாங்களோ? ஆமா வந்தி சொன்னதா இல்ல நீங்களே வந்திய நினைத்து எழுதியதா?

  ReplyDelete
 3. உங்கள் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். வந்து விளையாடுங்கள்.

  ReplyDelete
 4. //அப்பவாவது கொஞ்சம் சிக்கலான, சிரட்டை.. மன்னிக்கவும் சிரத்தையான கேள்விகளை கேட்பீர்கள் என்று நம்புகிறோம்.. ;)

  யோவ்... லோஷன், பப்ளிக்கில திட்டு வாங்காதையப்பா... :)

  ReplyDelete
 5. ஆகா இன்னொரு தொடரா ;-)

  கேள்விகளுக்கு விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லியிருக்கிறியள். மிச்சத்தை எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 6. நல்ல முயற்சி.
  ஒழுங்கான கேள்விகளும் பதில்களும்.
  பாராட்டுக்கள்.
  தொடருங்கள்

  ReplyDelete
 7. வந்தி அண்ணனைப்பற்றிய பதிவில் ஏன் வேறு யாரோ ஒருவரின் படத்தை போட்டிருக்கிறது...??

  ReplyDelete
 8. நல்லதொருமுயற்சி லைக்காமாதிரி வந்தி அகப்பட்டுவிட்டார்.கல்கியைப்பற்றிவந்தியத்தேவன் ஒன்றும்கூறவில்லை.
  அன்புடன்
  வர்மா.

  ReplyDelete
 9. ஙே ! என்ன கொடுமை இது? பேட்டி எடுத்து /குடுத்து பழகுறாங்களோ?

  வந்தியை எங்க வைச்சு பேட்டி எடுத்தனியள் ? பக்ரௌண்டில ஒரே ுகோழி கத்துற சத்தமா கிடக்கு? ;)

  ReplyDelete
 10. வித்தியாசமான பதிவு!!!!

  ReplyDelete

You might also like