Search This Blog

Thursday, January 14, 2010

சொல்லம்மாஇது நான்காவது தடவை... பக்கத்து வீட்டுக்காரனைத் தேடிப் போன செல்லம்மா இம்முறையும் வெறுங்கையுடன் தான் திரும்பினாள். மனுசியினால் அந்தக் கடிதம் என்னவென்று அறியாமல் ஓரிடத்தில் இருக்க முடியவில்லை. பத்துநிமிசத்துக்கு ஒருக்கால் போய்ப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் வருகுது. கடைசியாகப் போய் விட்டு வரும் போது ஆற்றாமையினால் "கொப்பன் எங்க போய்த் தொலைஞ்சான்..." என்று ஐந்து வயதுப் பெடியனைத் திட்டிப் போட்டும் வந்திட்டுது.

அந்தப் பெடியன் என்ன செய்ய முடியும்...? படமாகத் தொங்குகின்ற தாயிற்கு முன்னால் நின்று "அம்மா... அப்பாவைப் பேசுறாங்கள்" என்று முறையிடுவதைத் தவிர...

செல்லமாவுக்கு வந்த கடிதத்தை இவள் இல்லாததால் ஏற்கனவே சொல்லி வைத்ததைப் போல தபாற்காரன் பக்கத்து வீட்டிலே கொடுத்திட்டான். கடிதத்தை வாங்கினவனும் வீட்டுக்குள்ள வைத்துவிட்டு செல்லம்மாவை வழியிலே கண்டுதான் சொன்னான். "உனக்கு ஒரு கடிதம் வந்திருக்கு... இப்ப அலுவலாகப் போறன். வந்து தாறன்..."

அவளுக்குத் தெரியும். அது ஐ.சி.ஆர்.சி அல்லது கியுமன் றைற்ஸ் இடமிருந்துதான் வந்திருக்கும். சிலவேளை, அவன் தான் போட்டிருப்பானோ என்றும் மனம் அங்கலாய்த்தது...

அவன் என்றால், செல்லம்மாவின் மகன். ஒரேயொரு மகன்... இரண்டு வருஷமாக அவனைக் காணாமல் துடிக்கின்றாள். அவனைக் கண்டு பிடித்து தாங்கோ என்று இன்றைக்கும் ஐ.சி.ஆர்.சியிடம் போனதால் தான் வீட்டிலே ஆள் இருக்கவில்லை. உந்தக் கடிதமும் தவறிப் போய் பக்கத்து வீட்டிலே கிடக்குது.

★ ★ ★

ஒரேயொருவன் தானே ஒன்றும் செய்ய மாட்டாங்கள் என்ற நம்பிக்கை செல்லம்மாவிடம் இருந்தது. அவனும் பள்ளிக்கூடம், ரியூசன் என்று எல்லா இடமும் போய் வந்தான். "அம்மாவை நீதான் பார்க்க வேணும்" என்று அடிக்கொரு தரம் மகனுக்கு மந்திரம் போல ஒப்புவித்துக் கொண்டிருந்தாள். அது அவளுக்கு கட்டாயமாகவும் பட்டது.

ஆனால், ஒரு நாள் பள்ளிக்கூடம் போனவன் திரும்பி வரவில்லை. அவனாகப் போயிருக்க மாட்டான் என்று நம்பவும் முடியவில்லை. முதல் நாள் தான் தோட்டத்தில் நின்ற அவனின்ர மாமன்காரன் துடிதுடித்துச் செத்தான்.

"விரும்பிப் போனானா...? பிடிச்சுக் கொண்டு போனாங்களா...?" பூராயம் புடுங்குபவர்களின் இந்தக் கேள்வி அவளுக்கு ஈட்டி முள்ளால் குத்தும் வலி... விடை தெரியவில்லை.

அவனை விடச் சொல்லி அழுது புரண்டி மன்றாடினாள். உன் மகன் வந்தான் என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டார்கள். ஒரு முறையாவது அவனைப் பார்த்திட வேண்டுமென்று அன்றிலிருந்து அலைகின்றாள். காலம் ஏமாற்றிக் கொண்டிருந்தது.

அந்த நாள் கடைசி நாள்... எல்லாவற்றுக்கும் தான்... அந்தக் கொடூர கந்தக மண்ணில் நின்று மகனைத் தேடிக்கொண்டிருந்தவளை மீட்டெடுத்துக் கொண்டு வந்தார்களாம். மகனும் வந்திருப்பான் என்ற நம்பிக்கையைத் தவிர வேறொன்றும் அவளிடம் இருக்கவில்லை.

அன்றிலிருந்து ஐ.சி.ஆர்.சி, கியுமன் றைற்ஸ், கச்சேரி, மினிஸ்ரர்கள்... என்று எல்லா இடமும் ஏறி இறங்குகின்றாள். இவள் கதை கேட்டு வஞ்சகமின்றி எல்லோரும் கண் கலங்குகின்றார்கள். என்னைப் போல... அவ்வளவும் தான் அவள் மகனுக்கான பதிலாக இருக்கின்றது.

மீள் குடியேற்ரத்தின் முதல் நாள். "எங்களுக்கு எல்லாம் தெரியும்... மறைக்கக்கூடாது" என்ற கட்டளையின் பின்னர் விசாரணை ஆரம்பமானது.

"ஆச்சி... தனியவா?"

"ஓமோம்..."

"பிள்ளைகள் எங்கே...?"

"ஒரு பிள்ளைதான். அவன் இப்ப எங்கேயென்று தெரியாது..."

அடுத்த கேள்வி...
"விரும்பிப் போனானா...? பிடிச்சுக் கொண்டு போனாங்களா...?"

செல்லம்மா கண் முழித்த போது ஆஸ்பத்திரியில் இருந்தாள். கூடியிருந்த பிறஸரைக் குறைக்க வைத்தியர்கள் போராட வேண்டியிருந்தது.

★ ★ ★

மழை இருட்டு... ஏழு மணிக்கே கும்மென்று இருந்தது.

வீட்டுப்படலைக்குள் பக்கத்து வீட்டுக்காரன் தான் கூப்பிட்டான்.

"டேய்... இவளவு நேரமாக காத்திருக்கிறேன். எங்கே போனனி..? நில் வாறன். உது செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்தோ அல்லது ஏதும் முகாம் விலாசமோ..?" செல்லம்மா ஆர்வம் தாளாமல் கேட்டுக்கொண்டே ஓடிச்சென்று கடிதத்தை வாங்கினாள்.

யு.என் கொடுத்த லாம்பு வெளிச்சத்தில் படித்த கடிதத்தில் இப்படி இருந்தது.

வாக்காளர் அட்டை
பெயர்: கன்தயா சொல்லம்மா

9 comments:

 1. வாக்காளர் அட்டை
  பெயர்: கன்தயா சொல்லம்மா

  இந்தப் பெயரே பல கதைகள் சொல்கின்றது. சிறப்பான கதை.

  ReplyDelete
 2. //"டேய்... இவளவு நேரமாக காத்திருக்கிறேன். எங்கே போனனி..? நில் வாறன். உது செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்தோ அல்லது ஏதும் முகாம் விலாசமோ..?" செல்லம்மா ஆர்வம் தாளாமல் கேட்டுக்கொண்டே ஓடிச்சென்று கடிதத்தை வாங்கினாள்.

  யு.என் கொடுத்த லாம்பு வெளிச்சத்தில் படித்த கடிதத்தில் இப்படி இருந்தது.

  வாக்காளர் அட்டை
  பெயர்: கன்தயா சொல்லம்மா //

  :)

  நல்லாயிருக்கு....

  ReplyDelete
 3. //வாக்காளர் அட்டை
  பெயர்: கன்தயா சொல்லம்மா
  //

  கதை(ஆக இருந்தால்) நல்லாயிருக்கு

  ReplyDelete
 4. நல்லாருக்கு வாழ்த்துக்கள்... தோழரே

  ReplyDelete
 5. வாக்காளர் அட்டை
  பெயர்: கன்தயா சொல்லம்மா //
  பினிசிங்கில் கதை சொல்வது உன் சிறப்பான பாணியாகிவிட்டது..

  நெஞ்சை வருடிய கதை..

  கலக்கு..

  ReplyDelete
 6. /* வாக்காளர் அட்டை
  பெயர்: கன்தயா சொல்லம்மா
  */
  நிசத்தில் இந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளதாமே!

  ReplyDelete
 7. //வாக்காளர் அட்டை
  பெயர்: கன்தயா சொல்லம்மா//

  அதே.. பினிசிங்.. சூப்பர்

  நல்லாயிருக்கு..;)

  ReplyDelete
 8. ; (

  பல கதைகளை சொல்லும் ஒரு கதை..?

  ReplyDelete
 9. ஆதிரை, அருமை.. நல்லவொரு சிறுகதை எழுத்தாளனாக மாறிவருகிறாய்..
  யூ.என் கொடுத்த லாம்பும், வாக்காளர் அட்டைப் பெயருமே போதும் சூழ்நிலை சொல்ல..

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete

You might also like