Search This Blog

Saturday, July 18, 2009

சரித்திர புருசன் நெல்சன் மண்டேலா - 02

இப்பதிவின் முதல் பகுதிக்கான சுட்டி

1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். இவர் மீது பயங்கரவாத, தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து நாசகார - சதித்திட்டங்கள் தீட்டினார் என்னும் குற்றச்சாட்டை இறுதிவரை மறுத்தே வந்தார்.

1964 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில், தன்னுடைய கரங்கள் ஆயுதத்தின் மேல் கொண்ட காதலினால்
அவற்றைத் தூக்கவில்லை எனும் தொனியில் வாக்குமூலம் வழங்கினார். அவர் கூறுகையில், இன அடக்குமுறைகளுக்கு எதிராக ஆரம்பத்திலேயே நாங்கள் ஆயுதங்களை தூக்கவில்லை. சாத்வீக வழியில் போராடினோம்... அப்படிப் போராடிய மக்கள் Sharpeville எனும் இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எங்கள் அமைப்பின் மீதும் காரணமின்றி தடை கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக வேறுவழியின்றி ஆயுதப் போராட்டமே எங்களின் தெரிவானது. ஆபிரிக்காவின் அடக்குமுறைக்குட்பட்ட சமுதாயத்துக்காக என் வாழ் நாள் பூராவும் போராடினேன். அது வெள்ளையின கொடுங்கோண்மைக்கும் எதிராகவே இருந்தது; கறுப்பின கொடுங்கோண்மைக்கும் எதிராகவே இருந்தது. என்னுடைய கொள்கையெல்லாம் இந்நாட்டில் அடக்குமுறையற்ற சமுதாயமாக மக்கள் எல்லோரும் ஒன்றாக அமைதியுடன் - சம உரிமையுடன் வாழ வேண்டும். இதற்காகவே நான் வாழ்ந்தேன்; போராடினேன். வேண்டுமானால், இதற்காக என் உயிரையும் அர்ப்பணிக்க தயங்க மாட்டேன்.

ஒரு சுதந்திர புருசனின் வாக்குமூலங்கள் இவை. சிறையில் வாடிய போதும், கொண்ட கொள்கை தவறாது தான் நேசித்த மக்களின் சுதந்திர வாழ்வே பெரிதென வலியுறுத்தினார்.


நெல்சன் மண்டேலாவின் சிறைக் கூடம் - நன்றி விக்கிபீடியா

சிறைக்கம்பிகளுக்குப் பின்னே வாழ்க்கை கழிந்த போதும் தனது அறிவுத் தேடலுக்கு மண்டேலா முற்றுப்புள்ளி இடவில்லை. சிறையிலிருந்தவாறே லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டமும் பெற்றார். 1981 இல் லண்டன் பல்கலைக்கழக வேந்தர் தெரிவில் இவரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுதப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி இடுவதாக மண்டேலா உறுதியளிக்கும் பட்சத்தில் அவரை விடுதலை செய்யமுடியும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஆலோசனை 1985 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி போதா அவர்களினால் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக மண்டேலா தனது மகளினூடாக சொன்ன செய்தி. "நிரபராதியாக நின்று சமரசம் பேசாலாமேயொழிய, குற்றவாளியாக சிறைக்கூண்டுக்குள் இருந்தவாறு உடன்படிக்கை செய்ய முடியாது" என்பதாகும்.

தொடர்ந்து வந்த 4 வருடங்கள் மண்டேலா அவர்களுக்கும், தேசிய அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த பரஸ்பர சந்திப்புக்களினதும், சமரசங்களினதும் விளைவாக 1990 பெப்ரவரி 02 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ஓர் அறிவித்தலை நாட்டு மக்களுக்கு வெளியிட்டார். அதன்படி, மிக விரைவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்படுவார் என்றும், அவரின் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தியோகபூர்வமாக நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

1962 ஆம் ஆண்டு முதல்
27 ஆண்டுகள் சிறைக்கூடமே வாழ்க்கையாக கிடந்த நெல்சன் மண்டேலா 1990 பெப்ரவரி 11 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார். இவரின் விடுதலை நிகழ்வு உலகம் பூராவும் நேரடியாக அஞ்சல் செய்யப்பட்டது. தென்னாபிரிக்காவின் இருண்ட யுகம் முடிவுக்கு வருவதற்கான ஒரு அடிகோலாக இவ்விடுதலை உலகெங்கும் பேசப்பட்டது.

சிறைக்கம்பிகளின் இடைவெளிகளினூடாக உலகை தரிசித்த இந்த உன்னத புருசன் மீண்டுமொரு முறை இவ்வுலகில் பிறப்பெடுத்ததாகவே உணர்ந்திருப்பான். பாதங்கள் சிறைப்படிகளிலிருந்து விலகி சொந்த மண்ணை தொட்ட வேளையில், அவர் ஆற்றிய உரை மிக முக்கியம் வாய்ந்தது.

"1960 இல் சாத்வீகத்தின் தோல்வி்யைத் தொடர்ந்து நாங்கள் தூக்கிய ஆயுதம் முற்றுமுழுதாக இனவெறிக்கு எதிரானது. எதற்காக ஆயுதங்கள் சுமக்கப்பட்டனவோ அத்தனை காரணங்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. மிக விரைவில் சமுதாயச் சூழ்நிலைக்கேற்ற ஒரு தீர்வு கிடைக்குமென
நாங்கள் வலுவாக நம்புகின்றோம். அப்படியாயின், ஆயுதத்துக்கான தேவையும் தானாகவே இல்லாமல் போய் விடும் " எனத் தன்னுரையில் நம்பிக்கையூட்டினார்.

உடனடியாக இதுவரை காணாமல் போயிருந்த தனது கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கு புது இரத்தம் பாய்ச்சினார். பட்டி தொட்டியெல்லாம் தனது கருத்துக்களை எடுத்துச் சென்றார். 1991 இல் நடைபெற்ற கட்சியின் முதலாவது மாநாட்டில், அக்கட்சியின் தலைமைப் பதவி இவருக்கு கிடைக்கின்றது. அத்துடன், 1993 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு இவரது சமாதான முயற்சிக்கு ஆப்பிறுக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்து விடுகின்றது.
இவரது கட்சியின் முக்கிய தலைவர் ஒருத்தர் கொல்லப்பட்டார்.
எங்கும் அச்சம்... ஆத்திரம்... கவலை. மீண்டும் ஒரு இரத்தக்களரியினை தாங்கும் வலிமை அந்த நாட்களுக்கு இருக்கவில்லை என்பதை மண்டேலா நன்காக உணர்ந்தார். அவசரப் புத்தி இதுவரை கட்டிக் காத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தின்று ஏப்பம் விட்டுவிடும். மக்கள் அனைவரையும் அமைதி காக்குமாறு அன்புடன் வேண்டினார்.

அந்தத் தலைவன் கொல்லப்பட்டு
சரியாக ஒரு வருட இறுதியில் (1994 ஏப்ரல் 27) தென்னாபிரிக்காவில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட நெல்சன் மண்டேலா அதிகப்படியான 62 வீத வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றி பெறுகின்றார்.

1994 மே 10 ஆம் திகதி... தென்னாபிரிக்க சரித்திரத்தில் மிக முக்கிய தினம். நாட்டின் முதலாவது கறுப்பினத் தலைவராக நெல்சன் மண்டேலா பதவி ஏற்றுக் கொண்டார்.


இன்று அவருக்கு தொண்ணூற்றொரு வயது. பத்து வருடங்களுக்கு முன்னர் அரசியல் வாழ்விலிருந்து நீங்கிய போதும், சமூக நடவடிக்கைகளின் பால் கொண்ட ஈர்ப்பின் காரணமாக உலக மக்கள் சமுதாயத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார். என்றைக்கும் இந்த உத்தம சரித்திர புருசனின் சேவை தடையறாது தொடர வேண்டும்.

2 comments:

  1. தியாகங்கள் மரிப்பதில்லை அதனால் தான் முன்னர் தேசத்துரேகி என குற்றம் சாட்டப்பட்டவருக்கு பின்னர் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    ReplyDelete
  2. இவ் அற்புத மனிதன் மேலும் மேலும் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வேண்டுமென்று வாழ்த்திகின்றேன் நான்!

    ReplyDelete

You might also like