Search This Blog

Monday, May 3, 2010

எனது நகரம்


அர்த்த சாமமொன்றில் இந்நகருக்கு
விடை கொடுத்து ஓடினோம்.
கை அசைக்கவில்லை...
கட்டிப்பிடித்து முத்தமிடவும் இல்லை....
எந்தச் சம்பிரதாயங்களுமற்று
அந்தரத்தில் தவிக்க விட்டுப் போனோம்..!!!
நகரை மட்டுமல்ல...
எட்டடி எட்டி வைக்க முடியாத பாட்டியும்,
இரத்தம் சொட்டச் சொட்ட
ஒரு துளி நீருக்காய் கூக்கிரலிட்ட அயலவனும்,
காரிருளில் வழிகாட்டிப் போன தோழன்
விழி மூடியதும் - அவனைக்
கட்டியிருந்த வேட்டியில் அள்ளி எடுத்து
பாடை கட்டி விட்டு...
ஓடிக் கொண்டிருந்தோம்...!!!

கசந்தது... வாழ்க்கை கசத்தது!!!
காலில் ஒட்டி வந்த மண்ணும்
பாதித்தூரத்துடன் பயணத்தை நிறுத்தியது.
என் வீடு...
என் வயல்...
என் கடல்...
எதுவுமே எனக்காக இல்லாத போது
என்னைத் தடுப்பதற்கு ஏது...?
நகரின் எல்லையில்
அன்புக் காதலியின் பெயரை
என்னுடன் செதுக்கி வைத்த மரத்தை தேடினேன்.
விழுப்புண் தாங்கி
எல்லைக்குக் காவலாய்க் கிடந்தது...
புரியாத மொழியில் வாசகங்கள் தாங்கி...!!!

இன்று எந்நகரம் புன்னகைக்கின்றது.
நெஞ்சுக்கு நேரே குறி பார்த்த எந்திரங்கள்
மண் நோக்கி குனிந்து கிடக்கின்றன.
‘நிறுத்துக’ என்ற கட்டளையும்,
தொட்டுத் தடவி தேடி அலசியபின்
‘ஒத்துழைப்புக்கு நன்றி’ சொன்ன
பதாகைகளும் வெயிலில் காய்கின்றன.
கஸ்டப்பட்டு உச்சரித்து வணக்கம் சொல்வதும்...
புன்னகை சிந்தி வழியனுப்புவதும்...
சங்கடங்கள் தான்.
ஆனாலும்...
பழக்கப்பட்டுக் கொள்கின்றோம் வேறு வழியின்றி.

எந்நகரம்
என்னை அகதியாகவும்
சகோதரனை சுற்றுலாப்பயணியாகவும்
வரவேற்றுக் கொண்டிருக்கின்றது.

10 comments:

 1. தமிழ் மதுரம்May 3, 2010 at 5:40 PM

  காலங் கடந்தாலும் மனதை விட்டகாலத நரக நினைவுகளினையும், எம் வலிகள் சுமந்த வாழ்வையும் தாங்கிய கவிதை வரிகள் மீண்டுமொரு தரம் கண்ணீரை வரவைக்கும் வண்ணம் நெஞ்சைத் தொடுகின்றன.


  எனது நகரம்... எரிந்து போனாலும் மீண்டெழும் எனும் நம்பிக்கையின் வடிவம்.

  ReplyDelete
 2. எங்கள் தெருக்களிலே அந்நியராய் திரிந்த காலங்கள்.

  ReplyDelete
 3. //காலில் ஒட்டி வந்த மண்ணும்
  பாதித்தூரத்துடன் பயணத்தை நிறுத்தியது//

  அருமை
  இந்த மண்ணுக்கா இவ்வளவு போர்?

  ReplyDelete
 4. ம்...
  சொந்த ஊர் திரும்பும் அனைவருக்கும் தோன்றும் உணர்வுகள்...
  அருமையான கவிதை...

  இப்பவெல்லாம் எனக்குக் கவிதைகள் கொஞ்சம் விளங்குது...
  ஹையா....

  ReplyDelete
 5. //கசந்தது... வாழ்க்கை கசத்தது!!!
  காலில் ஒட்டி வந்த மண்ணும்
  பாதித்தூரத்துடன் பயணத்தை நிறுத்தியது.
  என் வீடு...
  என் வயல்...
  என் கடல்...
  எதுவுமே எனக்காக இல்லாத போது
  என்னைத் தடுப்பதற்கு ஏது...?//

  அருமை!

  ReplyDelete
 6. நெஞ்சு கனக்கிறது.. உண்மை.. ஏழு ஆண்டுகளின் பின்னர் இம்முறை யாழ் சென்ற போதும் இதே போல் பல கலவை உணர்வுகள்..

  ReplyDelete
 7. /கசந்தது... வாழ்க்கை கசத்தது!!!
  காலில் ஒட்டி வந்த மண்ணும்
  பாதித்தூரத்துடன் பயணத்தை நிறுத்தியது.
  என் வீடு...
  என் வயல்...
  என் கடல்...
  எதுவுமே எனக்காக இல்லாத போது
  என்னைத் தடுப்பதற்கு ஏது...?//

  அருமை!

  // சங்கடங்கள் தான்.
  ஆனாலும்...
  பழக்கப்பட்டுக் கொள்கின்றோம் வேறு வழியின்றி.//

  சும்மா வீதியால் போகும் இராணுவத்தை கூப்பிட்டு ஹாய் சொல்லுகிறார்கள் எம் பெண்கள். இவை எல்லாவற்ரிட்கும் வேறு வழிஎன்று காரணம் சொல்லி எம்மை சமாதானப்படுத்துகிறோம். இதுவும் வலிக்கிறது.

  ReplyDelete
 8. //எந்நகரம்
  என்னை அகதியாகவும்
  சகோதரனை சுற்றுலாப்பயணியாகவும்
  வரவேற்றுக் கொண்டிருக்கின்றது.
  //

  அருமை, வரப்போகும் வாரங்களில் என்னை ஒரு வழிகாட்டியாகவும் :(

  ReplyDelete
 9. ///எந்நகரம்
  என்னை அகதியாகவும்
  சகோதரனை சுற்றுலாப்பயணியாகவும்
  வரவேற்றுக் கொண்டிருக்கின்றது.
  /// புரிகிறது ...அனைத்தும் அருமையான வரிகள்..

  ReplyDelete
 10. இதைப்படிக்கும்போது கண்ணிலிருந்து கண்ணீர் வடிகின்றது. எப்போது இதற்கெல்லாம் விடை.... உங்களின் வரிகள் அருமை.....

  ReplyDelete

You might also like