Search This Blog

Saturday, June 19, 2010

செம்மொழி மாநாடும் சில அலட்டல்களும்

விடயத்துக்குள் நுழைய முன்னர்...

காலம் அவளுக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தது. இன்றோ, நாளையோ அல்லது இன்னும் ஒரு சில நாட்களிலோ அவள் எங்கள் வீட்டில் புகைப்படமாகவே பிரசன்னமாயிருப்பாள். எண்பது ஆண்டுகள் வாழ்ந்து முடித்திருந்த என் பாட்டியின் இறுதி ஆசைகளை ஒன்றும் விடாமல் கேட்டு நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்பா. அவளுக்குப் பிடித்தமான உணவுகள், உடைகள் முதற்கொண்டு அவள் விரும்பிய உறவுகள் வரை தருவிக்கப்பட்டாயிற்று. எல்லாவற்றையும் அவளே கேட்டுப் பெற்றாள்.

அதுவரை இவள் வன்மம் பாராட்டிய குலத்தாரின் மூத்தவளையும் கூப்பிட்டாள். சாவின் வரவினை எதிர்பார்த்தவாறு அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள். குலத்தாரின் மூத்தவளுடன் கதைப்பதன் மூலம் அதுவரை தான் அந்தக் குடும்பத்துடன் கொண்டிருந்த பகைக்கு விமோசனம் தேட முயல்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது போலவே... குலத்தாரின் மூத்தவளுக்கும் புரிந்திருக்கும்...!!!


இனி... இதோ விடயம்...!

தமிழக அரசின் ஏற்பாட்டில் செம்மொழி மாநாடு எனும் ஓர் நிகழ்வு நடந்தேற இருக்கின்றது. அதை முன் வைத்து பலர் பல விதமாக எழுதியாயிற்று. அந்நிகழ்வினை சார்ந்து தனது அரசியலை முன்னெடுக்கின்றது ஒரு கூட்டம்; எப்போது என்ன நடந்தாலும் தமிழக அரசுக்கு சாமரம் வீசும் இன்னொரு கூட்டம் செம்மொழி மாநாட்டின் அவசியம் குறித்து ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றது.நான் பேசும் தமிழ் மொழிக்கு விழா எடுப்பதில் எனக்கும் பெருமை தான். ஆனால், இச்செம்மொழி மாநாட்டினை தமிழுக்கான விழாவாக கற்பிதம் செய்து பெருமைப்பட என்னால் முடியவில்லை.

ஒரு வரியில் சொல்லப்போனால், இந்நிகழ்வினை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தனக்குத்தானே எடுக்கும் ஒரு பாராட்டு விழாவாக என்னால் அடையாளப்படுத்த முடியும். அவரின் நோக்கில் அது தப்புமில்லை. கலைஞரின் காலம் அவரை நெருங்கும் வேளையில், தான் செய்த சாதனைகளில் தலையாய சாதனை ஒன்றைப் படைக்க விரும்புகின்றார். அதற்கு செம்மொழி மாநாடு என்று பெயர் சூட்டி அழகு பார்க்கின்றார்.

அதை விடுத்து, இந்நிகழ்வை ஈழ வரலாற்றில் பாரிய துரோக நிகழ்வாக அடையாளப்படுத்தி அதைப் புறக்கணிக்கச் சொல்வது என்னைப் பொறுத்தவரையில் அர்த்தமற்றது. புறக்கணிப்புக் கோசங்கள் எல்லாம் செம்மொழி மாநாடு நடந்தேறும் வரைக்கும்... அதற்குப் பின்னர், மாநாட்டில் நடந்தவைகளை அலசி ஆராய்ந்து விமர்சனம் வடிக்கும் யாவரும் புறக்கணிப்புக்கான முன்னைய காரணங்களை மறந்து போய்விடுவார்கள்.


ஆனாலும், கலைஞரின் அரசியல் சாணக்கியம் எப்போதும் வியந்து போற்றக் கூடியதாகவே உள்ளது. செத்துக் கொண்டிருந்த மக்களின் குருதி கொண்டு தனது வரலாற்றை எழுதியவர்... மூன்று மணி நேர உண்ணாவிரதம் மூலம் முப்பது வருடப் பிரச்சினைக்கு தீர்வு தந்தவராச்சே.!!! இந்த செம்மொழி மாநாட்டையும் அரசியல் படுத்தி ஒரு கல்லில் இரட்டை மாங்காய் விழுத்த முயல்கின்றார். அதன் விளைவு தான்... செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அறிஞர்களை வரவைக்க - வரவேற்க பாடாய்ப்படுகிறார்.

இலங்கையிலிருந்து தமிழ் அறிஞர்களை பங்குபற்ற வைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் மேல் தான் கொண்ட கரிசனையை புதிய வடிவில் மெய்ப்பிக்க முயல்கின்றார் கருணாநிதி. எத்தனை நாட்களுக்குத்தான் பேனாவும் கடதாசியும் கொண்டு கடிதம் எழுதி, டில்லிக்கு அனுப்பி அரசியல் புரிவது..!

இச்செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அழைக்கப்பட்டிருப்பவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். பாட்டியின் ஆவி பிரிய முன்னர் அழைக்கப்பட்ட குலத்தாரின் மூத்தவள் பாத்திரம் அவருக்கு... அந்த அழைப்பினை நிராகரித்து தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்க்க வேண்டுமென பலர் குரல்வளை கிழியக் கத்தி ஓய்ந்தும் விட்டார்கள். ஏனய்யா..? சிவத்தம்பி அவர்கள் புறக்கணித்தால் இன்னொரு கறுத்தத்தம்பி ஈழத்தமிழனிடத்தில் இல்லாமலா போய்விடுவான்? கடந்து வந்த பாதைகள் கற்றுத் தந்த பாடங்கள் இவை!!!


பேராசிரியர் சிவத்தம்பி மட்டுமல்ல... அழைப்புக் கிடைத்தால் எல்லோருமாகச் செல்வோம். எங்களைப் பற்றி நாங்களாக பேச இன்னொரு அரங்கம் இது. முத்துக்குமாரனுக்கு நன்றிகளையும், மூன்று மணி நேர உண்ணாவிரத்தத்துக்கு சன்மானமும் வழங்க ஒரு சந்தர்ப்பம். ஈழத்தமிழனாக சென்று... ஈழத்தமிழனை பிரதிநிதித்துவம் செய்து... ஈழத்தமிழனாகவே திரும்புவோம்...! மாலைகளுக்கும், பாராட்டு போதைகளுக்கும் மயங்காதவர்களாக...!!!

10 comments:

 1. சொன்ன விஷயம்.. சொல்லிய விதம் இரண்டுமே சரி.
  நேற்று ஜெயலலிதாவின் திடீர்க் கரிசனம் பார்த்தவுடனேயே ஏன் மனதிலும் இதே எண்ணங்கள் தான் எழுந்தன.

  கடலேறியின் உறுதியான மீள் வருகையில் திருப்தி.

  ReplyDelete
 2. எல்லாமே மாயை
  ஒரு பொல்லாப்புமில்லை
  எப்பவோ முடிந்த காரியம்
  யாரறிவார்

  நன்றி: யோகர் சுவாமிகள்

  ReplyDelete
 3. சரியாக சொன்னீர்கள். எனது கருத்தும் அதுதான். ஆனால் என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாதது என்னவென்றால் நம் தமிழினத் தலைவர் எது செய்தாலும் இந்தியர்களை விடுங்கள், உங்கள் ஈழப் பெரியவர்களும் ஆஹா ஓஹோ எனும் போது தமிழன் எங்கே இருந்தாலும் சூடு சொரனை இல்லாமல்தான் இருப்பான் என எண்ணத் தோன்றுகிறதே. நாங்கள்தான் இங்கே பொறுக்கிகளுக்கு பயந்து தலையை ஆட்டுகிறோம். அங்கே உங்களுக்கு தட்டி கேட்க என்ன கேடு என்பது புரியவில்லை. மன்னிக்கவும். ரொம்ப சூடாகிவிட்டேனோ?

  ReplyDelete
 4. :)))

  ஈழப் போரில் கருணாநிதி செய்தவை பல பற்றி எனக்கு சந்தேகங்கள் இருப்பினும் அந்தப் போரை வைத்து கருணாநிதி அரசியல் செய்தார் என்பதில் முழு உடன்பாடு,
  எனினும் கருணாநிதியால் இலங்கைப் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

  போரை தன்னால் நிறுத்த மடீயம் என்று சொல்லிச் சொல்லியே உசுப்பேற்றும் அரசியல் செய்து பிழைத்துக் கொண்டார்.

  விழா பற்றி எனக்குக் கருத்துக்கள் இல்லை.
  நடந்தாலும் ஒன்றுதான் நடக்காவிட்டாலும் ஒன்றுதான்.

  இலங்கையிலிருந்து காமன் கூத்தை அரங்கேற்றுவதற்காக கலைஞர்கள் செல்வதாக அறிந்தேன், பெருமை, மகிழ்ச்சி...

  பதிவு சிறப்பு, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நல்லாய் சொன்னீங்க ஆதிரை

  ReplyDelete
 6. எல்லாமே அரசியல்தான்

  ReplyDelete
 7. ஒத்த கருத்தையுடையேன்.... இதே எண்ணப்பாங்கினிற்றான் பேராசிரியர் சிவத்தம்பியும் இருப்பார் என்பதென் நம்பிக்கை.

  ReplyDelete
 8. சொன்ன விஷயம்.. சொல்லிய விதம் இரண்டுமே சரி.

  ReplyDelete
 9. அருமையான பதிவு.

  சமீபத்தில் படிக்க நேர்ந்தது அவை.

  எங்கள் கல்லறையில் எழுதுங்கள்.
  எங்கள் தாய்மொழி தமிழ் என்று..

  தொடரட்டும் உங்கள் சேவை...

  ReplyDelete
 10. உங்கள் கருத்தை 100% சரியென என்னால் ஏற்க முடியவில்லை. எனினும் 60% என் கருத்துக்களுடன் ஒத்திருக்கிறது.

  நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete

You might also like