Search This Blog

Thursday, February 12, 2009

ஏமாற்றம் தந்த நான் கடவுள்

சேது, நந்தா, பிதாமகன்... இவ்வரிசையில் பாலாவின் மற்றுமொரு படைப்பு நான் கடவுள். முன்னைய படங்களின் காட்சி நகர்த்தலும், அவற்றில் பாலா வலியுறுத்திய விடயங்களும் படம்பார்க்க முதலே நான் கடவுள் தொடர்பான படத்தினை மனதில் தீட்டிவிட்டன. மனித உறவு நிலைகளை கேள்விக்குட்படுத்தி, மனித மனங்களில் மிருக விம்பங்களை தெறிக்கவைத்து அதனூடு பாலா சொல்கின்ற செய்திகள் மனதுக்கு சங்கடங்களைத்தான் ஏற்படுத்துகின்றன. சிலவேளைகளில் காட்சிகள் நிஜங்களாயிருப்பினும் மனது ஏற்க மறுக்கின்ற கொடூரங்கள் நான் கடவுள் தொடர்பான திருப்தியையோ மகிழ்வையோ என்னுள் ஏற்படுத்த தவறிவிட்டது.

நாளும் காதை வந்தடைகின்ற செய்திகளின் கொடுமைகள் வார்த்தைகளுக்குள் அடங்காது. நண்பர்களுடன் கழியும் பொழுதுகள், சிலவேளைகளில் ஆலயதரிசனம் இவைகள்தான் மனதினை சாந்தம் கொள்ள வைக்கின்றன. அன்றும் நண்பர்களின் திட்டத்துக்கிணங்க நான் கடவுள் பார்க்க போகுமுன், பாலாவின் சுயரூபம் புரிந்து மனதுக்குள் ஒன்றுக்கு பலதடவை போகவேண்டுமா எனக்கேட்டும் ஈற்றில் தோற்றுத்தான் போனேன்.

பலர் பேசிக்கொள்கின்றார்கள் - எழுதுகின்றார்கள். வித்தியாசமான படம், தமிழ் சினிமாவின் திருப்பம் என... மனம் திறந்த பாராட்டுக்கள் வேறு. நந்தாவில் தாயின் அன்புக்காக ஏங்கி தாயினாலே நஞ்சூட்டிக் கொல்லப்படும் மகன், இங்கே  பிள்ளைப்பாசம் வேண்டி வரும் தாயின் அன்பை தூக்கியெறிந்துவிட்டு கடவுளின் பெயரால் கொலைகளையும் புரிகின்றான். சட்டம் கூட அவனுக்கு கட்டுப்படுகின்றது.
படம் இரு துருவங்களாக நகர்கின்றது. ஜோசியம் கேட்டு 14 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த மகன் ஆர்யா கடவுளின் உருவமாய் ருத்ரனாக வீடு வருகின்றான். மறுமுனையில் ஊனமுற்ற, மனநிலை பிறழ்ந்த உறவுகளை வைத்து பிழைக்கும் கும்பல். அவர்களில் கண் தெரியாத ஒருத்தியாக பூஜா... இரு துருவங்களும் இணைகின்ற இடங்களிலும் மனது ஏனோ திருப்தி கொள்ள மறுக்கின்றது. உடல் நலம் குன்றிய உறவுகளில் சிலர் நகைச்சுவைப்பேச்சினாலும், கலகலப்பினாலும் மனதைவிட்டு நீங்க மறுக்கின்ற போதிலும், அவர்களின் உடல் குறைகளினை வெளிச்சமிட்ட கமரா ஏனோ கூலிக்கு மேலாக வேலை செய்த உணர்வு எழுகின்றது.

ஆர்யா
, பூஜா நடிப்பினை குறை கூறவில்லை. தங்களுக்குரிய பாத்திரங்களில் ருத்ரனாகவும், பிறவிக்குருடியாகவும் வாழ்ந்திருக்கின்றார்கள். இளையராஜா மீண்டும் தானொரு இசையின் ராஜா என்பதை நீரூபித்திருக்கின்றார். பாடல்களும் சூப்பர்... ஆனால், தேடிச்சென்ற "மாதா உன் கோயிலில்..." பாடல் படத்தில் இல்லாதது ரொம்ப ஏமாற்றம்.


ருத்ரன்
புரிந்த கொலைக்கு சட்டம் தலை சாய்ப்பதும், நீதிமன்றத்தில் சட்டத்துக்கு வந்த சோதனைகளும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகள். இப்படம் உடல்நலம் குன்றியவர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஊட்டுகின்றது என வாதிடுபவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். உடல்நலம் குன்றிய உறவுகளுக்கு இப்படம் சொன்ன விமோசனம் என்ன? பிறப்பிலேயே நலிந்தவர்களாக பிறவி எடுத்து முதலாளித்துவங்களின் கிடுக்குப்பிடிக்குள் நசிந்து கொண்டிருந்தவர்கள் ஈற்றில் மலையை அசைக்கும் உரம் மிகுந்தவர்களாய் எழுந்து நின்றிருந்தால் இப்படம் சொல்லும் செய்தி கனதியானது. பூஜா கிறிஸ்தவ பெண்துறவியை சந்தித்த போது காட்சி நகர்த்தலில் நாம் வேண்டி நிற்கின்ற மாற்றம் பொய்த்துப்போய்விட மானிட நாய்களின் தாக்குதலுக்கு அவள் ஆளாகுவது கொடுமையிலும் கொடுமை.


உடல் நலம் குன்றியவர்களுக்கு நன்றியை தெரிவித்ததன் பின்னர் ஆரம்பித்து ஓடுகின்ற படத்தின் காட்சிகள் ஈற்றில் இவ்வுலகத்தில் துன்பத்தினால் அல்லற்படுகின்றவனுக்கு கிடைக்கின்ற வரம் மரணம் தான் என்று முடிவுக்கு வரும்போது - அம்மரணத்தையும் கடவுள்தான் அளிக்கின்றார் எனும் போது தியேட்டரில் எழும்பி நின்று "போடா..." என்று திட்டத் தோன்றுகின்றது. பிறப்பிலே பார்வையிழந்து, கிடைத்த குரல் வளத்தால் பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, கயவர்களின் கொடூரத்துக்கு ஆளாகி, ஈற்றிலே "காப்பாற்றுங்கோ சாமி..." என கடவுளை வேண்டிச்செல்பவள் கழுத்தினால் குருதி கொப்பளிக்க இறந்து கிடக்கின்றாள். இதற்குப் பெயர்தான் கருணைக்கொலையா...?

Sunday, February 8, 2009

காதால் இரத்தம் வழிகிறது

மருத்துவம் செய்யும் வைத்தியர் போலி எனத் தெரிந்திருந்தும் சட்டம் தன்பாட்டுக்கு விழிமூடித் தூங்குகின்றது. ஆங்காங்கே எழுகின்ற ஆர்ப்பாட்டங்களும், குளிக்கின்ற தீக்களும் சட்டமானவர்களிடமிருந்து கவலைகளையும் இரங்கல்களையும் தான் தருகின்றன. மீறினால், சட்டம் பெட்டி படுக்கையைக் கட்டவேண்டிய நிலை.

"அறுவைச்சிகிச்சை நடக்கிறது. கொஞ்சம் சகித்துக் கொள்ளுவீர்களானால் பின்னர் வசந்தக் காற்று உங்கள் வாசல் தேடி வரும்..." இப்படித்தான் அவர்கள் சொல்கின்றார்கள். எனக்கு அறிவு தெரிந்த காலம் முதல் என்னைச் சுற்றி நடப்பன பல பாடங்களை கற்றுத் தந்திருக்கின்றது. இணையத்தளங்களில் வரலாற்றைத் தேடிப்படித்துவிட்டு விதாண்டாவாதம் புரிபவர்கள் புரிந்துகொள்வதற்கு இன்னும் நிறைய விடயங்கள் உண்டு.

சகோதர இனத்துடனான உரையாடல்கள் - உறவாடல்கள் என் தொழில் ரீதியாக தவிர்க்கமுடியாதன. இப்போது அவர்கள் கேட்கின்ற கேள்விகளும், கொடுக்கின்ற வியாக்கியானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. தெற்கில் எகிறுகின்ற விலைகளை விட வடக்கில் வீழ்கின்ற நகரங்கள் முக்கியம் பெறுகின்றன. இனி அவர்களினால் மீள முடியாதாம், கிட்டத்தட்ட முற்றாக கதை முற்றுப் பெற்றுவிட்டதாம்... அந்த ஒருத்தரின் புகைப்படத்தை பல குறிப்புக்கள் மொய்க்கின்றன. அவற்றில் சில தற்கொலைக்கான வழிகளையும்... சில தப்பினால் பக்கத்துவீட்டுக்காரனுடன் சேர்ந்து பிடிப்பதற்கான வழிகளையும் படம் போடுகின்றன. ஒவ்வொரு நாளும் வருகின்ற குறுந்தகவல் செய்திகள் கூட பலரின் கதை முடித்தே வருகின்றன.

இம்மாத இறுதியில் பாதை திறப்பு... அங்கே எந்தவொரு சிவிலியனுக்கும் சேதம் இல்லையாம்... உடைந்துவிட்டது என ஐ.நா. சொன்ன வைத்தியசாலை சேதாரமின்றி உள்ளதாம்... விழுகின்ற எறிகணைகளை செஞ்சிலுவையினரால் கணக்கெடுக்கத்தான் முடியுமாம்... அவைகள் வருகின்ற திசை இன்னமும் சந்தேகமாம்.....

எனக்கு வரலாறு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர் பாடத்துடன் பத்தையையும் பலதையும் சேர்த்து ஊட்டியவர். பாடப்புத்தகத்தின் வரலாறுகள் நிஜங்களிலிருந்து தடம் மாறிய சம்பவங்கள் ஒன்றல்ல... பலவுண்டு. ஆனால், அவர் சொல்லித்தராத செய்தி ஒன்று அண்மையில் காதினை எட்டியது. வன்னியில் 1500 விகாரைகளும் மன்னர்கள் கட்டிய குளங்களும் உள்ளனவாம். நாடாளுமன்ற உரைகளின் தொகுப்புக்குள் ஆவணப்படுத்தப்பட்டு விட்ட இந்தச்செய்தி நாளை என்பிள்ளையின் பாடப்புத்தகத்திலும் வரும். எனக்கு கிடைத்த வரலாற்று ஆசிரியன் அவனுக்கு கிடைப்பானா?

இப்போதெல்லாம் இணையத்தளத்துக்குள் நுழைகின்றவர்கள் அழுகையுடன்தான் வெளியே வருகின்றார்கள். இதற்குப் பின்னும் எவரும் கேட்கமாட்டார்களா? ஒன்றுக்குப் பலகோடிதடவைகள் மனது வெட்கமின்றி மீண்டும் மீண்டும் கேட்கின்றது. நிறுத்துங்கள் என அள்ளிக்கொடுத்தவாறு வேதம் ஓதுகின்றார்கள். அல்லாதுவிடின் காகிதத்தில் கவலை சொல்கின்றார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் அப்பாவி உயிர்கள் விழுந்துகொண்டுதான் இருக்கின்றன. நீலக்கடலேறி விளையாடியிருக்கின்றேன். இன்று என் இனம் சிவத்தக்கடலில் மூழ்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

ஆக... காதால் மட்டுமல்ல, கண்ணாலும் குருதி கொப்பளிக்கின்றது.

Sunday, February 1, 2009

இந்தியாவும் ஈழத்தமிழரும்

காலம் தன்பாட்டுக்கு அவலங்களை விதைத்தவாறு நகர்கின்றது. ஏன் எதற்கென்று கேட்பார்கள் என நாம் எண்ணியவர்கள் எல்லாம் தடியெடுத்துக் கொடுத்த சண்டியர்களாகி விட்டனர். இனி உலக யுத்தம் வேண்டாம் என்று எழுப்பிய ஸ்தாபனமும் இது உலக யுத்தமாக மாறுமுன்னரே முடித்துவிட ஆசியுரை எழுதுகின்றது. சொந்தமாக சிந்திக்கத் தெரிந்தாலும் இறையாண்மைக்கு இழுக்கின்றி மற்றொருவரின் சிந்தனைக்குள் வாழவேண்டிய கட்டாயம் நம்மில் பலருக்கு...

வானொலி நிகழ்ச்சியொன்றில் பிரபல அறிவிப்பாளர் கூறிய கதையொன்றினை இங்கு பதிவிட்டால் தப்பேதும் இல்லையென்றே எண்ணுகின்றேன்.

சிறுகச்சிறுக சேமித்தவைகளை கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தது அந்த எறும்புக்கூட்டம். திடீரென அவைகளின் வாழ்விடத்துடன் கூடிய காணி இன்னொருத்தருக்கு தாரை வார்க்கப்பட எறும்புக்கூட்டத்தின் வாழ்க்கையிலும் இன்னல் வந்தது. கண்டவன் எல்லாம் தீண்டத்தகாதது எனும்படியாக நசித்து கொலை செய்தான்; உயிரென்றும் மதிக்காமல் ஏறி மிதித்தான். வலி தாங்காது அவைகள் திருப்பிக்கடித்த பொழுதுகளில் கொலைசெய்ய பூச்சிகொல்லிகளையும் தருவித்தான்.

எறும்பின் சந்ததி அழிந்து கொண்டிருந்தது. ஆனாலும், சீண்டியவர்களைக் கடிக்க அவைகள் தவறியதில்லை. அது அவைகளின் இருப்புக்கான போராட்டமாயினும், கொலைஞன் தன்னகராதியில் அதற்கு புதுநாமம் வழங்கியவாறு காரியம் ஆற்றினான். சிலர்... இல்லையில்லை பலர் தாராளமாக பூச்சிகொல்லிகளை அனுப்பிக்கொண்டிருக்க குஞ்சு குருமன் தொடக்கம் பாட்டன் பாட்டிவரை எவரையும் விட்டு வைக்காமல் அழித்தொழிப்பு தொடர்ந்தது.

இறுதியாக எறும்புக்கூட்டம் தங்கள் இருப்புக்கு அவன் உதவுவான் என்ற நம்பிக்கையில் - இறைவனிடம் வரம் கேட்க முடிவெடுத்தன. இறைவன் இரக்கமுள்ளவன்; எங்களுக்கொரு ஆபத்தெனில் அணைப்பதற்கு கரம் நீட்டுவன்; அவனின்றி கொலைஞனின் அணுகூட அசையாது என்ற நம்பிக்கை மேலோங்க கடவுளை நோக்கி தவமியற்றின எறும்புக்கூட்டம்.

கடவுளும் மௌனம் கலைத்து வானேகி வையகம் வந்தார். இவைகள் வரம் கேட்டன "நாங்கள் கடிக்கும்போது சாவைக் கொடுப்பாயாக..!" கேட்பதெல்லாம் கொடுப்பவர்தானே கடவுள். "அப்படியே ஆகட்டும்..." என அவர் பறந்து விட்டார். எறும்புக்கூட்டத்துக்கு அளவில்லா மகிழ்ச்சி.

ஒருநாள் தொந்தரவு செய்ய முயற்சித்தவன் எறும்புக்கடிக்கு இலக்கானான்... என்ன பரிதாபம்...! கடித்த எறும்பு துடிதுடித்து இறந்தது. இறந்த எறும்பின் ஆன்மா போகும் வழியில் கடவுளைக் கண்டு கேட்டது. "இது நியாயமா..?" எல்லாம் வல்ல இறைவனும் கவிதையொன்றில் பதில் சொன்னான். "சாவைத்தான் கேட்டாய்... யாருக்கென்று கேட்டாயா...?"
(மன்னிக்க - வானொலியில் ஒலிபரப்பிய கதையிலிருந்து சில காட்சிகள் மாறுகின்றன. )

இதுதான் நான் சொல்ல வந்த கடவுளும் எறும்புக்கூட்டமும் கதை.

You might also like