Search This Blog

Sunday, February 8, 2009

காதால் இரத்தம் வழிகிறது

மருத்துவம் செய்யும் வைத்தியர் போலி எனத் தெரிந்திருந்தும் சட்டம் தன்பாட்டுக்கு விழிமூடித் தூங்குகின்றது. ஆங்காங்கே எழுகின்ற ஆர்ப்பாட்டங்களும், குளிக்கின்ற தீக்களும் சட்டமானவர்களிடமிருந்து கவலைகளையும் இரங்கல்களையும் தான் தருகின்றன. மீறினால், சட்டம் பெட்டி படுக்கையைக் கட்டவேண்டிய நிலை.

"அறுவைச்சிகிச்சை நடக்கிறது. கொஞ்சம் சகித்துக் கொள்ளுவீர்களானால் பின்னர் வசந்தக் காற்று உங்கள் வாசல் தேடி வரும்..." இப்படித்தான் அவர்கள் சொல்கின்றார்கள். எனக்கு அறிவு தெரிந்த காலம் முதல் என்னைச் சுற்றி நடப்பன பல பாடங்களை கற்றுத் தந்திருக்கின்றது. இணையத்தளங்களில் வரலாற்றைத் தேடிப்படித்துவிட்டு விதாண்டாவாதம் புரிபவர்கள் புரிந்துகொள்வதற்கு இன்னும் நிறைய விடயங்கள் உண்டு.

சகோதர இனத்துடனான உரையாடல்கள் - உறவாடல்கள் என் தொழில் ரீதியாக தவிர்க்கமுடியாதன. இப்போது அவர்கள் கேட்கின்ற கேள்விகளும், கொடுக்கின்ற வியாக்கியானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. தெற்கில் எகிறுகின்ற விலைகளை விட வடக்கில் வீழ்கின்ற நகரங்கள் முக்கியம் பெறுகின்றன. இனி அவர்களினால் மீள முடியாதாம், கிட்டத்தட்ட முற்றாக கதை முற்றுப் பெற்றுவிட்டதாம்... அந்த ஒருத்தரின் புகைப்படத்தை பல குறிப்புக்கள் மொய்க்கின்றன. அவற்றில் சில தற்கொலைக்கான வழிகளையும்... சில தப்பினால் பக்கத்துவீட்டுக்காரனுடன் சேர்ந்து பிடிப்பதற்கான வழிகளையும் படம் போடுகின்றன. ஒவ்வொரு நாளும் வருகின்ற குறுந்தகவல் செய்திகள் கூட பலரின் கதை முடித்தே வருகின்றன.

இம்மாத இறுதியில் பாதை திறப்பு... அங்கே எந்தவொரு சிவிலியனுக்கும் சேதம் இல்லையாம்... உடைந்துவிட்டது என ஐ.நா. சொன்ன வைத்தியசாலை சேதாரமின்றி உள்ளதாம்... விழுகின்ற எறிகணைகளை செஞ்சிலுவையினரால் கணக்கெடுக்கத்தான் முடியுமாம்... அவைகள் வருகின்ற திசை இன்னமும் சந்தேகமாம்.....

எனக்கு வரலாறு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர் பாடத்துடன் பத்தையையும் பலதையும் சேர்த்து ஊட்டியவர். பாடப்புத்தகத்தின் வரலாறுகள் நிஜங்களிலிருந்து தடம் மாறிய சம்பவங்கள் ஒன்றல்ல... பலவுண்டு. ஆனால், அவர் சொல்லித்தராத செய்தி ஒன்று அண்மையில் காதினை எட்டியது. வன்னியில் 1500 விகாரைகளும் மன்னர்கள் கட்டிய குளங்களும் உள்ளனவாம். நாடாளுமன்ற உரைகளின் தொகுப்புக்குள் ஆவணப்படுத்தப்பட்டு விட்ட இந்தச்செய்தி நாளை என்பிள்ளையின் பாடப்புத்தகத்திலும் வரும். எனக்கு கிடைத்த வரலாற்று ஆசிரியன் அவனுக்கு கிடைப்பானா?

இப்போதெல்லாம் இணையத்தளத்துக்குள் நுழைகின்றவர்கள் அழுகையுடன்தான் வெளியே வருகின்றார்கள். இதற்குப் பின்னும் எவரும் கேட்கமாட்டார்களா? ஒன்றுக்குப் பலகோடிதடவைகள் மனது வெட்கமின்றி மீண்டும் மீண்டும் கேட்கின்றது. நிறுத்துங்கள் என அள்ளிக்கொடுத்தவாறு வேதம் ஓதுகின்றார்கள். அல்லாதுவிடின் காகிதத்தில் கவலை சொல்கின்றார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் அப்பாவி உயிர்கள் விழுந்துகொண்டுதான் இருக்கின்றன. நீலக்கடலேறி விளையாடியிருக்கின்றேன். இன்று என் இனம் சிவத்தக்கடலில் மூழ்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

ஆக... காதால் மட்டுமல்ல, கண்ணாலும் குருதி கொப்பளிக்கின்றது.

11 comments:

  1. தமிழ் மதுரம்February 9, 2009 at 8:11 PM

    எனக்கு வரலாறு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர் பாடத்துடன் பத்தையையும் பலதையும் சேர்த்து ஊட்டியவர். பாடப்புத்தகத்தின் வரலாறுகள் நிஜங்களிலிருந்து தடம் மாறிய சம்பவங்கள் ஒன்றல்ல... பலவுண்டு. ஆனால், அவர் சொல்லித்தராத செய்தி ஒன்று அண்மையில் காதினை எட்டியது. வன்னியில் 1500 விகாரைகளும் மன்னர்கள் கட்டிய குளங்களும் உள்ளனவாம். நாடாளுமன்ற உரைகளின் தொகுப்புக்குள் ஆவணப்படுத்தப்பட்டு விட்ட இந்தச்செய்தி நாளை என்பிள்ளையின் பாடப்புத்தகத்திலும் வரும். எனக்கு கிடைத்த வரலாற்று ஆசிரியன் அவனுக்கு கிடைப்பானா?//

    நண்பா ஏற்கனவே உள்ள சோகங்களுக்கு மேல் சோகத்தைத் தருகிறது பதிவு. வலிகளின் மீதிருந்து பிறந்த ஒரு குழந்தையின் ஏக்கம் தெரிகிறது?? ஏன் தமிழ் மணத்திலும் தமிழிஸிலும் இணைக்கலாம் தானே? நிறைய வாசகர்களைச் சென்றடையுமல்லவா?

    ReplyDelete
  2. அறுவைச்சிகிச்சை நடக்கிறது. கொஞ்சம் சகித்துக் கொள்ளுவீர்களானால் பின்னர் வசந்தக் காற்று உங்கள் வாசல் தேடி வரும்..."//


    தம்பி ராசா! உப்ப்டிச் சொல்லிச் சொல்லியே எங்கடை காலமும் போகுது ராசா? ஏதும் நடக்கிறதாத் தெரியேல்லை மோனை?? சனம் மலை மலையாச் சாகுது. சகட்டு மேனிக்கு மேனன் பக்ஸவோடை பிளாவிலை கள்ளடிக்கிறாராம். சொறி பியர் அடிக்கிறாராம்.

    ReplyDelete
  3. சிறுபான்மை இனம் எல்லாத்திலும் அடங்கித்தான் போக வேண்டுமாம்!!
    எப்ப கிடைக்கும் விடிவு ??

    ReplyDelete
  4. @நிமல்-NiMaL
    //:-(

    இப்போதெல்லாம் இந்தக் குறியீடுதான் எங்கும்... உங்கள் முகத்தில், என் முகத்தில், எங்கள் வாழ்க்கையில் கூட....

    ReplyDelete
  5. @Triumph
    //Perumuchu viduvathai thavira enna seivathu endu theriyelai

    எம்மவர்களுக்காக பெருமூச்சு விட்டால் கூட அது சட்டத்துக்கு முரணாகும் வாய்ப்பிருப்பதால், பெருமூச்சுக்கூட அனலாக உள்ளிருந்து எரிக்கின்றது.

    ReplyDelete
  6. @கமல்
    //நண்பா ஏற்கனவே உள்ள சோகங்களுக்கு மேல் சோகத்தைத் தருகிறது பதிவு.
    மேலும் சோகங்களை விதைக்க வேண்டுமென்பதற்காக நான் இதை எழுதவில்லை. இன்று கொடுமைகளை தாங்கியவண்ணம் சோகங்களின் உச்சத்தில் நீங்களும்... நானும்...
    ஆனால், என் மனதில் எழுந்த சில ஆற்றாமைகளை, கொடூர வலிகளைத்தான் பதிவிட்டுள்ளேன். அதுவும், சில வரம்புகளை மீறிவிடக் கூடாது எனும் கவனத்துடன்...:-(

    //ஏன் தமிழ் மணத்திலும் தமிழிஸிலும் இணைக்கலாம் தானே
    இணைத்துள்ளேன் நண்பரே... நன்றிகள்

    ReplyDelete
  7. @சக்(ங்)கடத்தார்
    //தம்பி ராசா! உப்ப்டிச் சொல்லிச் சொல்லியே எங்கடை காலமும் போகுது ராசா? ஏதும் நடக்கிறதாத் தெரியேல்லை மோனை?? சனம் மலை மலையாச் சாகுது. சகட்டு மேனிக்கு மேனன் பக்ஸவோடை பிளாவிலை கள்ளடிக்கிறாராம். சொறி பியர் அடிக்கிறாராம்.
    அப்பு... இனியும் மேனன் வருவார், மோட்சம் தருவார் என்று நம்பியிருந்தால் உங்களுக்கு வயதுக்கோளாறு என்று எல்லோரும் நக்கல் அடிப்பினம்.
    எம்மினம் அழிந்து கொண்டிருக்கின்றது. யாரிட்ட சாபமோ தெரியவில்லை.

    ReplyDelete
  8. @கார்த்தி
    //சிறுபான்மை இனம் எல்லாத்திலும் அடங்கித்தான் போக வேண்டுமாம்!!
    இது யார் வகுத்த சட்டம்?

    ReplyDelete
  9. ஆக... காதால் மட்டுமல்ல, கண்ணாலும் குருதி கொப்பளிக்கின்றது.
    வைத்தியரிடம் காட்டவும்....

    ReplyDelete
  10. ஒரு கை எரிகிறது....மறுகையால் அணைக்க முயற்சித்தோம்...முடியவில்லை...

    சாகப்ுபோவது உறுதியாகிவிட்டது...
    அதுவரைக்கும் மற்றக்கையால் சாப்பிடுவோம்...

    அதுதான் இப்படியான பதிவுகளை எழுதுவதையும் பின்னூட்டமிடுவதையும் விட்டுவிட்டேன்...
    நீங்களும்இப்படி எழுதிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள்....

    :(

    ReplyDelete
  11. முள்ளை முள்ளால் தான் எடுக்கவேணும் பாருங்கோ
    சூரிய தேவனின் எரிக்க வேண்டிய கணக்கு பட்டியல் நிரம்ப
    மரண வலியை தெற்கும்
    தமிழீழ பிரசவ வலியை தமிழனும்
    உணரும் காலம் மிக அருகில் தான் ...........................

    ReplyDelete

You might also like