Search This Blog

Monday, January 19, 2009

மூஞ்சிப்புத்தகமும் ஒரு எச்சரிக்கையும்

"முந்தி எல்லாம் இருந்த புகைப்படங்களை Facebook இல் பதிவேற்றி அழகு பார்த்தார்கள். ஆனால், இன்று Facebook இல் பதிவேற்றுவதற்காகவே புகைப்படங்கள் எடுக்கின்றார்கள்." என் நண்பனொருவனின் ஆதங்கம் இது. அதில் உண்மையில்லாமலும் இல்லை. உலகில் அதிகூடிய பயனர்களை உள்வாங்கி அபரீத வளர்ச்சி கண்டு வரும் இணையத்தளமாக www.facebook.com மாறியுள்ளது. இதுவரை அரசோச்சிய Hi5, Myspace போன்ற பிரசித்தமான சமூக உறவாடல் தளங்களையெல்லாம் புறமொதுக்கி விட்டு இன்று இணைய வரலாற்றில் Facebook தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. பயனர்கள் அதிகளவில் உள்நுழையும் இணையத்தளங்களை பட்டியலிட்ட www.quarkbase.com எனும் இணையத்தளம் Facebook இற்கு ஐந்தாமிடத்தை வழங்கியுள்ளதென்றால் பாருங்களேன். (முதலிடத்தில் www.yahoo.com உம் இரண்டாமிடத்தில் www.google.com உம் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.)

பரந்து விரிந்த உலகம் இன்று தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் உள்ளங்கையளவில் சுருங்கிக் கிடக்கின்றது. இன்று என்னுடனிருந்தவன் நாளை இன்னொரு தேசத்திலிருந்து வணக்கம் சொல்கின்ற காலம் இது. உங்கள் நண்பர்கள், உறவினர்கள், பிடித்தமானவர்கள் ஏன் நண்பர்களின் நண்பர்கள் கூட இன்று எங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை தெரிய வைக்கும் குணம்தான் இந்த Facebook வெற்றியின் அடிப்படைக்காரணம் என்கின்றார்கள்.

Facebook..... இதை தமிழில் நேரடியாக மொழிபெயர்த்தால் முகப்புத்தகம். ஆனாலும், நண்பர் நிமலின் பதிவொன்றில் அவர் மூஞ்சிப்புத்தகம் என அழைக்க - எனக்கும் அது பிடித்துப்போக இப்போது எல்லாம் எனக்கு அது மூஞ்சிப்புத்தகம். வேலைத்தளத்தில் இது தடைசெய்யப்பட்ட இணையத்தளமாயினும், அந்தத்தடையையும் உடைத்து உள்நுழையும் போதெல்லாம் அருகிலுள்ள என்மொழி நண்பனுடனான உரையாடல்களில் எல்லாம் மூஞ்சிப்புத்தகம் தான்... Facebook அல்ல...! யாருக்கும் எதுவும் புரியாது. :-)

நான் மூஞ்சிப்புத்தகத்தை நேசிக்கின்றேன். ஒன்றாக என்னுடன் இருந்தவர்கள் தூரதேசம் பறந்த போதும் அவர்களை என்னுடனும், நான் அவர்களுடனும் உறவாடிக்கொண்டிருக்கும் பாலம் இது. தொலைந்துவிட்ட என்னுடைய பாலகப்பருவ நினைவுகள் மீளக்கிடைத்தன. தசாப்தங்களாக எங்கிருக்கின்றோம் என அறியாத நட்புக்கள் தோள்களில் தட்டிக்கொள்கின்றன. கிடைக்காத சொந்தங்கள் கிடைக்கின்றன; புதுப்புது உறவுகள் புன்னகைக்கின்றன.

ஆனாலும்.....!!!

மூஞ்சிப்புத்தகத்திலும் சில துஷ்பிரயோகங்களும் அக்கிரமங்களும் நடந்தேறுகின்றன.

அவன் என்னுடைய நண்பன். மூஞ்சிப்புத்தகத்தில் எப்போதோ அவனுடைய நட்பு வேண்டுகை என்னால் ஏற்கப்பட்டு நண்பர்களின் பட்டியலிலும் இருக்கின்றான். கருத்துக்களும் தகவல்களும் கூட பரிமாறி இருக்கின்றோம். ஆனால், நேற்று இன்னொரு புதிய நட்பு வேண்டுகை அதே பெயரிடமிருந்து.... அதனை ஏற்றுக்கொள்ளாது காக்க வைத்துவிட்டு ஒரு தகவல் அனுப்பினேன். பதில் வந்தது - "முன்னையது யாரோ ஒருத்தரால் போலியாக உருவாக்கப்பட்டதாம்... இதுதானாம் நிஜம்..." நான் எதை நம்புவது...???

ஏதோவொரு காரணத்துக்காக உங்களின் மூஞ்சிப்புத்தக பக்கத்தினுள் மாற்றான் எவரும் நுழையாதவாறு தடுப்பரண் அமைத்திருப்பீர்கள். யாரும் ஒருத்தருக்கு மூஞ்சிப்புத்தகத்திலிருந்து தகவல் அனுப்பினால், அவர் உங்கள் விபரங்கள் சிலவற்றை பார்வையிடலாம் எனவும் தெரிந்திருக்கலாம். ஆனால், நடந்தது என்ன...? உங்களின் நண்பர் ஒருத்தர் புதுவருட வாழ்த்து தகவல் ஒன்றினை உங்களுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் கூட்டாக அனுப்புகின்றார். அந்த வாழ்த்துக்கு நீங்கள் பதிலளித்தவராயின், நீங்கள் அவருடைய நண்பர்களுக்கு தகவல் அனுப்பியவராகவே கருதப்படுவீர்கள். கவனம்...!!!

மூஞ்சிப்புத்தகத்தை மிகவும் நோகடிக்கின்ற விடயம் சங்கம் (குழுக்கள்) அமைத்தல். ஒரு முக்கிய நிகழ்வொன்றுக்காக, நிறுவனம் சார்பாக, பிரசித்தமான ஒருவரின் ரசிகர்கள் சார்பாக சங்கம் அமைத்தல் பிழையாகாது. உதாரணத்துக்கு We Wish You Thiruma..., Linux Forum, VETTRI FM, ShakthiFM, தமிழ் ஒலிபரப்பாளர்கள் குழுமம் எனும் குழுக்களை ஏற்றுக்கொள்கின்றேன்; இவைகளின் நோக்கம் தெளிவானது. ஆனால், பின்வரும் சங்கங்களை ஒருமுறை பாருங்கள்.
  • பரோட்டா சாப்பிடுவோர் சங்கம்
  • பெயரில் 'S' எழுத்தினை உடையோர் சங்கம்
  • பஸ்ஸிற்கு காசு கொடுக்காதோர் சங்கம்
  • காதலுக்கு ஐடியா கொடுப்போர் சங்கம்
  • காலையில் ரீ குடிப்போர் சங்கம், குடிக்காதோர் சங்கம்
  • Profileஇல் சொந்தப்படம் போடாதோர் சங்கம்
  • சொந்தப்படம் போடாதோரை எதிர்ப்போர் சங்கம்
  • ....................................................................................................
அப்பப்பா.... மூஞ்சிப்புத்தக தரவுமூலம் (Database) என்ன பாடுபடும் கடவுளே... எந்தவொரு நோக்கமுமின்றி, எழுந்தமான காரணங்களுக்காக கட்டியெழுப்பப்படும் சங்கங்களின் தலைவர்களே, நிர்வாகிகளே... உங்களின் சங்கத்தை கலையுங்கள். கோடி புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு...

இப்போதெல்லாம் மூஞ்சிப்புத்தகத்தில் பலரும் தங்கள் உள்ளக்கிடக்கைகளை கொட்டித்தீர்க்கின்றார்கள். நான் கூட இதற்கு விதிவிலக்கானவனல்ல. ஆனால், நாங்கள் இட்ட கருத்துக்களை எங்கள் நண்பர்கள் தானே பார்வையிடுகின்றார்கள் என எண்ணுகின்றோம். ஆனால், உங்கள் நண்பர்களின் பெயரில் பலர் உலா வருகின்றார்களாம். சில நிறுவனங்கள் தங்கள் கைங்கரியத்தை கச்சிதமாக நிறைவேற்றுவதாகவும் கேள்வி. உங்களுக்கு உணர்வெழுச்சிகளை ஊட்டியவாறு வருகின்றவர்களை சரியாக அடையாளங்கண்டு கை கோர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் நல்லது. உங்கள் உடலுக்கும் நன்று....

7 comments:

  1. //"முன்னையது யாரோ ஒருத்தரால் போலியாக உருவாக்கப்பட்டதாம்... இதுதானாம் நிஜம்..." நான் எதை நம்புவது...???//

    எனக்கு ஒரே நாளில் ஒரே பெயரில் 3 அழைப்புக்கள்... இதைவிட கொடுமையெல்லாம் நடக்கும்..

    கும்மி குழுக்களாலும், டம்மி அப்ளிகேஷன்களானும் இப்ப ஒரே வெறுப்பா இருக்கு...!!!

    ReplyDelete
  2. மூங்சிப்புத்தகத்துக்கு அடிமையாகி அதோடய படுத்துகிடக்கிறாக்களப்ற்றியும் எழுதுவீங்கன்னு எதிர்பாரத்தென். எல்லாத்த விடவும் ஆபத்த அதுதான்.

    ReplyDelete
  3. மூஞசிப் புத்தகத்தின் மறு மூஞ்சி பற்றியும் தெரியத் தந்ததற்க நன்றி. நானும் அதிலிருந்தாலும் அதிக ஈடுபாடு இல்லை.

    ReplyDelete
  4. தமிழ் மதுரம்January 21, 2009 at 7:31 AM

    ஸப்பா...இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்களே?? தாங்க முடியலையே??

    ReplyDelete
  5. என்ன இருந்தாலும் பழைய அரிய பாடசாலை காலத்து படங்களை இதன்மூலம் பெற்றுக் கொண்டேன்.

    என்னை பொறுத்தவரை என் பழைய மூஞ்சி புத்தகம் இது :)

    ReplyDelete
  6. @டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
    //மூஞசிப் புத்தகத்தின் மறு மூஞ்சி பற்றியும் தெரியத் தந்ததற்க நன்றி.
    உங்கள் வருகைக்கு நன்றி டொக்டர்...

    ReplyDelete
  7. @மெல்போர்ன் கமல்
    //இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்களே?? தாங்க முடியலையே??

    நீங்கள் யோசிக்காத யோசிப்பா இது? ஏன் கங்காரு தேசத்தில் ரொம்பக் குளிரோ? தாங்க முடியாமல் இருக்க...? :D

    @சயந்தன்
    சாரல் உங்கள் வருகைக்கு நன்றி. நிச்சயமாக... பழைய கால வசந்தங்களை அசை போட இம்மூஞ்சிப்புத்தகத்தால் முடிகின்றது

    ReplyDelete

You might also like