Search This Blog

Sunday, January 4, 2009

ஏமாற்றிய புத்தாண்டும் பொலிஸ் பதிவும்

புதுவருடம் பிறந்து ஐந்து நாட்கள் கழிந்துவிட்டன. எப்போதையும் போலவே - எல்லோரையும் போலவே இப்புத்தாண்டு நன்மைகள் கொண்டுவரும் என்ற நம்பிக்கை தளராமல் தான் வரவேற்றோம். ஆனால், பிறக்கும் போதே தமிழனின் இரத்த ருசி பார்த்து, உயிர் குடித்தவாறு தான் பிறந்திருக்கின்றது இப்புத்தாண்டு.

எங்கள் சொந்தங்கள் சிலருக்கு சில நிகழ்வுகள் அன்றாட காரியங்களாகிவிட்டன. காயப்பட்டோருக்கு மருந்து பூசிவிட்டு - செத்தவரைத் தூக்கிப் புதைத்துவிட்டு அவர்கள் தயாராகின்றனர் இன்னொரு சாதலுக்காக... காக்க நாமிருக்கின்றோம் அஞ்சற்க என்றவர்கள் வெள்ளைக் காகிதத்தில் கவிதை அனுப்பிக் கொண்டிருக்க... காரியங்கள் அனைத்தும் கச்சிதமாக முடிவுரை எழுதிக்கொண்டிருக்கின்றன.

உலகப் பொருளாதார நெருக்கடி முதற்கொண்டு காசா விமானத்தாக்குதல் வரை அக்கறையாக செய்தித்துளிகளை செல்லிடத்தொலைபேசிக்கு அனுப்பும் CNN செய்திச் சேவையிலிருந்து முதன்முதலாக வந்தது இலங்கை தொடர்பான செய்தி... "கிளிநொச்சி இலங்கை அரச படையினர் வசம்." செய்தியின் முக்கியத்துவம் புரிகின்றது. ஆனால்....?

தமிழ்மணத்தை திறந்தால் சூடான இடுகைகள் எல்லாம் கிளிநொச்சி பெயர் உச்சரிக்கின்றன. இல்லை..! கிளிநொச்சி பற்றியதால் சூடான இடுகைகளாகின. ஆராய்ச்சிகள், எதிர்பார்ப்புக்கள், எதிர்வுகூறல்கள் என பதிவர்களின் பேனாக்களின் கிறுக்கலில் சிக்கி விழிபிதுங்குகின்றது அந்நகரம். அவர்களின் பட்டியலில் ஆனையிறவும் முல்லைத்தீவும் அடுத்ததாக காத்திருப்பது தெரிந்தாலும் காலமென்று ஒன்று இருக்கத்தான் செய்யும். இலங்கையில் ஜனவரி - 01 புலர்ந்த போது வெடித்த பட்டாசு வெடிகளை விட ஜனவரி - 02 மாலை நான்கு மணி விஞ்சித்தான் இருந்ததாக பதிகின்றார்கள். ஆனால், பல்குழலுக்குப் பழகி வந்தவர்கள் மனசுக்குள் சிரித்துவிட்டு நகர்கின்றோம்.

நண்பர்கள், உறவினர்கள், அயலார் எல்லோரையும் ஒன்றாக சந்திக்கும் தருணம் நேற்றுக் கிடைத்தது. குறுகிய காலத்தில் இரண்டாவது சந்திப்பு. ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி சொன்னால் பலரின் கோர(ப)ப் பார்வையில் எரிந்திடுவேன் என்றாலும், இடுக்கண் வருங்கால் நகுக என்பது நிஜமென்றால் தானே எங்களின் சிரிப்புக்களுக்கும் அர்த்தமுண்டு. என் கல்லூரித் தோழர்கள்... எனக்குத் தெரிந்த, தெரியாத ஊர்க்காரர்கள்... அப்போதைய பள்ளிப்பருவத்தை நினைத்து ஏங்க வைத்த இப்போதைய நங்கையர்கள்... எல்லோரும் வந்தனர். மாசி மாதக் கணக்கெடுப்புக்கு அழைத்தாலும் பொலிஸ் பதிவுக்கு போக நான் தயங்க மாட்டேன். கூடவே எங்களுக்குத்தானாம் பாதுகாப்பு. மூன்று தடவை உள்ளே போய் வந்தவன் சொன்னால் நம்பத்தானே வேண்டும்.

ஆனால், அதற்கு முதல் சிங்கள மொழி சுத்தமாக தெரிந்திட வேண்டும். வந்தது வடக்கு, கிழக்கு என்றாலும் அறிவித்தல்கள் சிங்களத்தில் தானே... பிரிக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் சேருகின்ற இடங்களும் இருக்கத்தானே செய்கின்றன. பெருமைப்படுவோம்!

"கதிரேசு இருக்கிறானோ...?"
பொலிஸ் பதிவுக்கு வந்த சனக்கூட்ட வரிசையில் யாரோ ஒருத்தர் வினவுவது கேட்கிறது. ஆனால், அந்தப் பெயர்வழி யாரும் இருந்ததாக எவரும் ஆமோதிக்கவில்லை.
"ம்... இருக்கட்டும். எப்படியும் இங்க தானே பதிய வரணும். வரட்டும் பார்க்கலாம்"
சொன்னவர் அந்த வரிசை உள்நுழையும் வாசலில் குந்தி விட்டார்.
கைத்தடி உதவியுடன் வரிசையில் நகர்ந்த இன்னொருத்தர் கேட்டார்.
"ஏன் தம்பி... என்ன பிரச்சினை...? இந்த இடத்தில் வந்து விசாரிக்கின்றீர்?"
அவர் சொன்னாரே ஒரு பதில்...
"இல்லை அப்பு... போன வருஷம் கொஞ்சக்காசு வாங்கினவன். இன்னும் தரவில்லை. வீட்டுக்குப் போனால் ஓடி ஒளிக்கிறான். அதுதான் இங்க வந்தேன்..."
இதற்குப் பெயர்தான் கலிகாலமா?

7 comments:

 1. :-)
  அடபாவிமகனே!மகளே! இதை இவ்வளவு சிம்பிளா நக்கலோட எழுதிப்போட்டுப் போறாய். எங்கடை முத்துலிங்கத்திடம் குடுத்திருந்தால், உதை வச்சே தமிழ்நாட்டு ரிவிற்றர்காஸ்ற்றிட்டை ஒரு கதை வித்திருப்பாரே. கெடுத்துப்போட்டியே

  ReplyDelete
 2. // அதற்கு முதல் சிங்கள மொழி சுத்தமாக தெரிந்திட வேண்டும். வந்தது வடக்கு, கிழக்கு என்றாலும் அறிவித்தல்கள் சிங்களத்தில் தானே... பிரிக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் சேருகின்ற இடங்களும் இருக்கத்தானே செய்கின்றன. பெருமைப்படுவோம்!

  :)

  ReplyDelete
 3. //பிறக்கும் போதே தமிழனின் இரத்த ருசி பார்த்து, உயிர் குடித்தவாறு தான் பிறந்திருக்கின்றது இப்புத்தாண்டு..

  போர்களத்தில் பிறந்தால்
  பூ புத்தாண்டை இரசிக்க முடியுமா...?

  :)

  ReplyDelete
 4. நானும் ஒவ்வொரு மாசமும் கூப்பிட்டா போக ரெடி :)
  இதுபோல சந்தர்ப்பம் கிடைக்காதுதானே :P

  ReplyDelete
 5. \\தமிழ்மணத்தை திறந்தால் சூடான இடுகைகள் எல்லாம் கிளிநொச்சி பெயர் உச்சரிக்கின்றன. இல்லை..! கிளிநொச்சி பற்றியதால் சூடான இடுகைகளாகின. \\

  :(

  ReplyDelete
 6. ம்ம்... எவ்வளவோ பெரிய விஷயம்.. ரொம்ப இலகுவா உணர்ச்சிவசப் படாமல் சொல்லிடீங்க.. பாராட்டுக்கள்....மீண்டும் கிளி யார் கையில் என்பது படைத்தவனுக்கு தான் தெரியும் என்றில்லை, எங்களுக்கும் விதியை மாத்துகின்ற வல்லமை இருக்கும் போது...

  ReplyDelete
 7. பெயரிலி, சுபானு, ரமணன், நட்புடன் ஜமால், மாதவி

  உங்களின் வருகைகளுக்கு நன்றி

  ReplyDelete

You might also like