அன்றும் கூட இன்றுள்ளதைப் போலல்லாவிட்டாலும், திடீரென உயர்ந்த மக்கள் தொகையை கொள்ள முடியாது வன்னிமண் அந்தரித்தது. செம்மண் வீதிக்கும் காரணமுண்டு என்றாற்போல் மானிடம் குருதி சிந்திய காலம்.
மிக நீண்ட நாள் ஓய்விற்குப் பின்னரான ஒரு பதிவு இது...! ஓரிடத்திலிருந்து பொறுமையாக எழுதுவதற்கு சோம்பல் மறுத்து விடுகின்றது. சில எழுத முடியாத விடயங்களாகின... அதற்கும் மேலாக சில விடயங்கள் இக்காலநிலைக்கு ஒவ்வாதவனவாகி விட்டன.
நான் சொல்ல வருகின்ற கதையின் நாயகர்களையும் சமாதானத்திற்கான யுத்தம் ஊரை விட்டுக் கலைக்க - வன்னிமண் வாழவைத்துக் கொண்டிருந்தது.
அவனின் பெயர் குமரன். இளமை ததும்பும் அழகிய தோற்றம் அவனுடையதல்ல... மாறாக பள்ளி செல்லும் பாலகப் பருவம். அவள் கஸ்தூரி... இருவரும் பன்னிரு அகவைகளின் சொந்தக்காரர்கள். (பெயர்கள் கற்பனை முலாம் பூசப்பட்டவை)
1995இன் இடப்பெயர்வுக்குப் பின் இரணைப்பாலை 5ம் வட்டார குடிசையொன்று குமரனுக்கும், செந்தூரன் சிலையடி ஓலைக்குடிசையொன்று கஸ்தூரிக்கும் வாழ்விடங்கள். குரங்குகள் தாவுகின்ற பலாமரச்சோலை அவர்களை வரவேற்கின்றது கல்வியூட்டலுக்காக... எந்நேரமும் நிழல் பரப்பி நிற்கும் ஒரு பலாமரம், அதற்கு கீழே இருபத்தைந்து வரையான மேசை கதிரைகள், எழுபதுக்கும் குறையாத மாணவர்கள்... இதுதான் இரணைப்பாலை றோ.க.த.க. பாடசாலையின் ஆண்டு 7B.
அன்றும் வழமை போன்று 'அவன்' வானேறி வந்தான். யானை வரும் முன்னே கேட்கும் மணியோசை போன்று அருகிலே எழுந்த புழுதி கிளம்பிய சத்தம் காதடைக்க 'அவன்' பறந்து போனான். எங்கும் அல்லோலகல்லோலம். அடுக்கி வைக்கப்பட்ட மிதிவண்டிகளில் ஒன்று தட்டுப்பட நிரையென நின்ற அனைத்தும் ஒன்றன் மேல் ஒன்றாக படுத்துக்கொண்டன. அங்கேதான் இந்த இரு சோடிக்கண்கள் சந்தித்துக் கொண்டன.
குமரனின் சைக்கிளும் கஸ்தூரியின் சைக்கிளும் சிக்கிக்கொள்ள அவசரத்தில் அவற்றை பிரித்து எடுத்துக்கொண்டு எதிரெதிர் திசைகளில் ஓடும்போதும் பின்னால் திரும்பி ஒரு பார்வை... மரண பயத்திலும் அந்தப்பார்வைக்கிடையில் ஏதோ மொழி பேசியது.
பின்வந்த நாட்களில் எழுபதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்குள்ளும் அந்த வகுப்பறையில் அவளின் கண்கள் அவனையும், அவனின் கண்கள் அவளையும் தேடி மௌனமாக ஏதேதோ கதைகள் பேசின.
பாலகப் பருவம்... அறியாத வயது... அவர்கள் இருவரும் பிரிக்க முடியாத நட்புக்குள் புகுந்து கொண்டதாக ஊரெல்லாம் பேசியது. நிவாரண வரிசையில் கிடைத்தது 'அம்மாப்பச்சை'யாயினும் கரங்கள் மாறி உண்ணும்போது அமிர்தமாக இனித்தது அவர்களுக்கு...
குமரன் வீட்டில் அப்பா வாங்கி வந்த பலாப்பழம் வெட்டப்பட்ட நாளொன்றில் கஸ்தூரி ஆஜரானாள். எல்லோரும் தங்கள் பங்குகளை காலி செய்து விட ஈற்றில் குமரனின் பங்குதான் பங்கிடப்பட்டது. "யாரடா இந்தப் பிள்ளை...?" கேட்ட அம்மாவுக்கு, "வீட்டிலே சாப்பாடு இல்லையாம்... அதுதான் கூட்டி வந்தேன்..." என்றான். பின்னொரு நாளில், கஸ்தூரியின் அப்பாவும் குமரனின் அப்பாவும் ஒரே பாடசாலையில் கற்பிக்கின்றார்கள் என்பது தெரியும் வரைக்கும் அம்மா அந்தப் பிள்ளையை நலம் விசாரித்துக் கொண்டேயிருந்தாள்.
திட்டமிட்டதோ... அல்லது தற்செயலானதோ... இல்லாதுவிடின் தற்செயல் போன்ற திட்டமிடலோ தெரியவில்லை. ஆனால், அவளும் அவனும் ஒரே தனியார் கல்விநிலையத்தில் தான் கல்வி கற்றார்கள். மூன்றரை மணி வகுப்புக்களுக்கு முன்னரை மணித்துளிகள் பக்கத்து வீட்டுக்காரனின் காவல் இறுக்கப்படும் நேரம். ஆனாலும் வியூகம் வகுத்து, தடை உடைத்து மாங்காய் பிடுங்குவதில் வீராதி வீரர்கள் அந்த மாணவர்கள். தங்களுக்கும் பங்கு கிடைக்கும் என காவல் காக்கும் மகளிர் அணியினர் வெறுங்கையுடன் திரும்பினாலும், எப்போதும் கஸ்தூரிக்கு மட்டும் கிடைக்கின்ற மர்மம் துலங்க கனநாள் எடுக்கவில்லை.
கல்வி நிலைய நிர்வாகியின் கண்காணிப்பு இறுக்கப்பட்டிருந்தால், அந்த அரை மணித்துளிகளைப் போக்க கிட்டிப்புள் தான் அவர்களுக்கு ஒரே வழி. அன்றும் நண்பனின் பலமெல்லாம் சேர்ந்து சீறி வந்த புள் குமரனின் நெற்றியை பதம் பார்த்தபோது கஸ்தூரியின் கண்கள் சிந்திய நீரின் அர்த்தம் புரியவில்லை. கஸ்தூரியின் வீட்டுக்கருகில் "கண்ணன் மிதிவண்டி திருத்துமிடம்" இருந்ததினால், குமரனின் மிதிவண்டிக்கு அடிக்கடி கோளாறு வந்தது. அவள் வீடு தாண்டி அவன் நகரும் போதெல்லாம் சைக்கிள் மணி தானாக ஒலிக்க... குடிசையிலிருந்து ஒரு கையசைப்பு...!!! வாழ்நாள் பூராக அந்த மகிழ்வை அனுபவிக்கலாம் போலிருக்கும்.
அந்த மண் அவர்களுக்கு சந்தோசங்களை மட்டும் கொடுக்கவில்லை... வாழ்க்கையின் வலி, அவலங்களின் உச்சம், துன்பத்தின் கொடுமை... இவைகளையும் அவ்வப்போது வஞ்சகமின்றி பரிசளித்தது.
நிலவெறிக்கின்ற ஒரு இரவுப்பொழுது... தொடக்க நாட்களில் முல்லையிலிருந்து சாலை நோக்கி ஏவப்படுவன நேரம் எட்டாகி விட்டதை ஞாபகப்படுத்தும். பின்னாளில் அந்த அலாரம் இல்லாததினால், அன்று நேரம் சரியாக நினைவில்லை. ஆனால், எட்டு மணி கடந்திருக்கும். குமரனின் வீட்டில் முக்கிய முடிவு எடுத்தாகிவிட்டது. யாழ்ப்பாணத்தில் இயல்பு நிலை திரும்பியதால், அங்கு திரும்பி வராத அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட... வேறு வழியின்றி குமரனின் குடும்பமும் யாழ். திரும்ப முடிவு..!!!
அவனுக்கு துயரம் தொண்டையை அடைத்தது. முதன் முதலில் ஏதோவொன்றை பிரிகின்ற உணர்வு எழுந்தது. இன்னும் சில சந்தேகங்கள்... தடுமாற்றங்கள். ஆனால், வேறு வழியின்றி நாளை கஸ்தூரிக்கு பயணம் சொல்ல வேண்டிய நிலை.
சொன்னான்... "பொய் சொல்லாதீங்க..." என முதலில் செல்லமாக கோபம் கொண்டவள் உண்மையை அறிந்து மௌனமானாள். மறுநாள் வீடு தேடி வந்து அன்புப் பரிசாக கொப்பி, அடிமட்டம், கூடவே அப்போது ஐந்து ரூபாவுக்கு கிடைத்த சிவப்பு நிற இதய வடிவிலான அழிறபர் பரிசளித்துவிட்டுச் சென்றாள். வீட்டுப்படலை திறந்து அவள் புறப்படும் போது உள்ளுக்குள் அவர்களிருவம் அழுததன் அர்த்தம் அப்போது புரிந்ததா என இப்போது நினைவில்லை.
குமரன் யாழ்ப்பாணத்திற்கு வந்த பின்னர் கடிதங்களின் வழியாக பாசங்கள் பொழிந்தன. கூடவே அங்குமிங்கும் அரங்கேறும் அவலங்களும் கதை சொல்லின. ஆனால், கஸ்தூரியிடமிருந்து வருகின்ற கடிதங்கள் முன்னறிவித்தலின்றி தடைப்பட்டன. பாதையில்தான் சிக்கலென குமரன் அலுக்காமல் எழுதிக்கொண்டிருந்தான் அவள் பதில் வருமென்று... ஆனால், இன்றும் கூட வரவேயில்லை...!
//
ReplyDeleteமிக நீண்ட நாள் ஓய்விற்குப் பின்னரான ஒரு பதிவு இது...! ஓரிடத்திலிருந்து பொறுமையாக எழுதுவதற்கு சோம்பல் மறுத்து விடுகின்றது. சில எழுத முடியாத விடயங்களாகின... அதுக்கும் மேலாக சில விடயங்கள் இக்காலநிலைக்கு ஒவ்வாதவனவாகி விட்டன.//
உண்மைதான்ஆதிரை.... எல்லாரும் எதையோ பறிகொடுக்கப்போவது போல் இருக்கிறார்கள்... இதில் எழுதுவதற்கு எங்கிருந்து மூட் வரப்போகிறது... :(
//அவள் வீடு தாண்டி அவன் நகரும் போதெல்லாம் சைக்கிள் மணி தானாக ஒலிக்க... குடிசையிலிருந்து ஒரு கையசைப்பு...!!! வாழ்நாள் பூராக அந்த மகிழ்வை அனுபவிக்கலாம் போலிருக்கும்.//
நல்லா அனுபவித்து எழுதிக்கிடக்கு...
இது அப்பன் குதிருக்க இல்ல மாதிரி கதை இல்லைத்தானே ?
//அப்போது ஐந்து ரூபாவுக்கு கிடைத்த சிவப்பு நிற இதய வடிவிலான அழிறபர் பரிசளித்துவிட்டுச் சென்றாள்.//
ஆமாம் அதில் வெள்ளை நிற புள்ளிகளும் மேலே பச்சை நிறமுமாக இருக்கும்...
அதன் வாசனையை நினைத்துப்பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் வருகிறது...
மிகமிக சிறப்பான பதிவு... நல்ல எழுத்து... கதையை கண்முன்னால் கொண்டுவருவது போல சிலாகித்து எழுதியுள்ளிீர்கள்... வாழத்த்துக்கள்...
அன்றும் வழமை போன்று 'அவன்' வானேறி வந்தான். யானை வரும் முன்னே கேட்கும் மணியோசை போன்று அருகிலே எழுந்த புழுதி கிளம்பிய சத்தம் காதடைக்க 'அவன்' பறந்து போனான். எங்கும் அல்லோலகல்லோலம். அடுக்கி வைக்கப்பட்ட மிதிவண்டிகளில் ஒன்று தட்டுப்பட நிரையென நின்ற அனைத்தும் ஒன்றன் மேல் ஒன்றாக படுத்துக்கொண்டன. அங்கேதான் இந்த இரு சோடிக்கண்கள் சந்தித்துக் கொண்டன.//
ReplyDeleteஇதை அனுபவித்தவனுக்குத் தானே அதன் வலி தெரியும்??? ஸப்பா.....நல்லா தான் காதல் வசப்பட்டிருக்கிறீங்கள்??
''நிவாரண வரிசையில் கிடைத்தது 'அம்மாப்பச்சை'யாயினும் கரங்கள் மாறி உண்ணும்போது அமிர்தமாக இனித்தது அவர்களுக்கு...//
ReplyDeleteஆகா அனுபவ முதிர்வு தெரியுது??? எல்லாம் கற்பனையோ?? என்ன புலுடா உது??
மிகவும் அனுபவித்து எழுதியது போல் உள்ளது. ஆனாலும் கதை நெஞ்சை புளிகிறது. ஏனெனில் காதல் பிரிவது ஒரு கொடுமை. அதுவும் தமிழனுக்கோ இந்த நாட்டு பிரச்சினையாலே எத்தனை துன்பங்கள்.................. ஆனால் அவர்கள் சேருவதும், நமக்கு நாடு கிடைப்பதுவும் என்றோ எழுதப்பட்டு விட்டது. அதை எவனாலும் தடுக்க முடியாது.
ReplyDelete@புல்லட் பாண்டி
ReplyDelete//நல்லா அனுபவித்து எழுதிக்கிடக்கு...//
அப்படியாயின், உங்களுக்கும் அனுபவங்கள் இருக்கத்தான் வேண்டும்.
//இது அப்பன் குதிருக்க இல்ல மாதிரி கதை இல்லைத்தானே? //
இல்லை. இது ஒரு நான் கண்ட காதல்(?) கதை.
//மிகமிக சிறப்பான பதிவு... நல்ல எழுத்து... கதையை கண்முன்னால் கொண்டுவருவது போல சிலாகித்து எழுதியுள்ளிீர்கள்... வாழத்த்துக்கள்... //
நன்றி நண்பரே.
சனம் சாகுதுகள். உங்களுக்கு காதல் கதை கேட்குதோ?
ReplyDelete@கமல்
ReplyDelete//இதை அனுபவித்தவனுக்குத் தானே அதன் வலி தெரியும்??? //
இதை அனுபவிக்காதவர் யாருமுளரோ?
//நல்லா தான் காதல் வசப்பட்டிருக்கிறீங்கள்?? //
யார் நானா? இல்லை கமல். பனி இரவுகளில்... இல்லை வியர்வை நீராட்டும் இரவுகளில் என்னை மறந்திட்டீயா என தொ(ல்)லைபேசி அழைப்புக்கள் எதுவும் எனக்கு வருவதில்லை நண்பரே... :P
//ஆகா அனுபவ முதிர்வு தெரியுது??? //
தப்பு... இளமை ததும்பும் கட்டிளமைப் பருவம். :)
//எல்லாம் கற்பனையோ?? என்ன புலுடா உது?? //
பெயர்கள் மாத்திரம் கற்பனை. சம்பவங்கள் நான் கண்ட காதல் கதை.
//Rama
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
// சனம் சாகுதுகள். உங்களுக்கு காதல் கதை கேட்குதோ?//
ReplyDeleteபெயர் தொலைத்து விட்டு வந்த நண்பரே,
உங்களின் ஏக்கமும் ஆதங்கமும் எனக்கு புரியாமல் இல்லை. ஆனாலும், காதல் கதை எழுதுவதால் நடக்கின்ற சாவுகளை நான் மறைக்கின்றேனா? அல்லது நியாயப்படுத்துகின்றேன் என அர்த்தமாகுமா?
பெயரில்லா சொன்னது…
ReplyDeleteசனம் சாகுதுகள். உங்களுக்கு காதல் கதை கேட்குதோ??
ஏன் சாவுக் கணக்கெடுப்பு நடத்த ஆட்கள் போதாதாம்..நீங்களும் போகலாம் தானே???
நிலவெறிக்கின்ற ஒரு இரவுப்பொழுது... தொடக்க நாட்களில் முல்லையிலிருந்து சாலை நோக்கி ஏவப்படுவன நேரம் எட்டாகி விட்டதை ஞாபகப்படுத்தும். //
ReplyDeleteசொல்லாமற் சொல்லுறீங்கள்..சொல்லாடல் லயிப்பு....
குமரன் யாழ்ப்பாணத்திற்கு வந்த பின்னர் கடிதங்களின் வழியாக பாசங்கள் பொழிந்தன. கூடவே அங்குமிங்கும் அரங்கேறும் அவலங்களும் கதை சொல்லின. ஆனால், கஸ்தூரியிடமிருந்து வருகின்ற கடிதங்கள் முன்னறிவித்தலின்றி தடைப்பட்டன. பாதையில்தான் சிக்கலென குமரன் அலுக்காமல் எழுதிக்கொண்டிருந்தான் அவள் பதில் வருமென்று... ஆனால், இன்றும் கூட வரவேயில்லை...! //
ReplyDeleteகஸ்தூரி போராளியாகியிருப்பாளோ???
எழுத்து நடை..யதார்த்தம்...சொல்லாடல் பூரிப்பு...
ReplyDeleteமொழி வழக்கு அப்படியே வன்னி மண்ணை நினைவுபடுத்துது...தொடருங்கோ..
தொடர்ந்தும் பல விதக் கோணங்களில் நிறையப் படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.
இதேபோன்று இனிமையான மறக்கமுடியாத நினைவுகள் அதிகமானவர்களுக்கு இருக்கலாம்.உங்கள் பதிவு அவற்றை கொஞ்சம் தட்டிப்பார்க்க சொல்கிறது.
ReplyDeleteஉங்கள் பதிவுகள் எழுத்து நடை மிகவும் நன்றாக இருக்கிறது.
வளர்க ...............