Loading...

Sunday, December 6, 2009

முத்துக்கள் மூன்று

என் மனதை விட்டு அகலாத - நான் ரசிக்கின்ற - சில வேளைகளில் விமர்சிக்கின்ற பாடல்களை முத்துக்கள் மூன்றாக இங்கு தருகின்றேன்; இனியும் தருவேன்.

இப்பாடல் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்ற பாடலாயினும், இன்னும் இனிமை கெட்டு விடாமல் ரசித்துக் கேட்கக் கூடிய பாடல்.

என்னைச் சுற்றியிருக்கின்ற சமூகத்தின் வேதனைகளையும், அவர்களின் ஜீவனோபாய போராட்டத்தின் கவலை தோய்ந்த பக்கங்களையும் இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் கோடிட்டுக் காட்டுகின்றன. எனக்குப் பிடித்துப் போனதற்கும் காரணம் இதுவாகுமா?

ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்

மீனள்ள கடலேறிச் சென்றவன் திரும்பிக் கரை தொடும் வரை துணையவள் தவிக்கும் தவிப்பினை சொற்கள் கொண்டு வடித்து விட முடியாது.

சில சமயங்களில் அவன் வெறும் கையுடன் கசிந்த கண்களுடன் கரை திரும்பி இருக்கின்றான்... சில சமயங்களில் ஆயிரங்கள் தாண்டி இலட்சங்களும் அள்ளி வந்திருக்கின்றான்... கடவுளும் கைவிட்ட சமயங்களில் சூறாவளியும் புயலும் அவனை அள்ளிச் சென்றிருக்கின்றன... அரக்கர்கள் இரத்தம் குடிக்க, மீன்கள் உடல் தின்ன மூன்று நாள் கழித்து கரையேறும் அவன் சன்னம் துளைத்த சடலத்தின் ஊர்வலம் பலவற்றில் என் கால்கள் நடந்திருக்கின்றன...

கேட்டுப் பாருங்கள்... எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டித் திரைப்படத்தில் விஸ்வநாதன் இராமமூர்த்தி இசையில் டி.எம். செளந்தர்ராஜன் பாடிய பாடல் இது. பாடல் வரிகள் கவிஞர் வாலி.






★ ★ ★

எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யாரென்றால் அது என்றைக்கும் இளையராஜாதான். பாடகர்களைப் பட்டியலிட்டால், மற்ற எல்லோரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்குப் பின்னால் தான். இளையராஜா, எஸ்.பி.பி. கூட்டணி தந்த பாடல்களில் எப்போது கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது.

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது

இப்பாடலின் ஒவ்வொரு கருத்தாழமிக்க வரிகளையும் எஸ்.பி.பி.இன் தேன் குரலசைவில் இளையராஜாவின் இன்னிசையில் கேட்கும் போது உலகை மறந்து கண்மூடி இரசிக்கின்றேன்.

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலியின் ஆழமிக்க வரிகள் இவை. கேட்டுப் பாருங்கள்....







★ ★ ★

வான வெளி நிலா கண் சிமிட்டும் நேரம்
மனம் ஆசைகள் ஆயிரம் கொள்ளும்...
அவள் தோள் தழுவி மடி தவழ
இவன் எழுதிய அஞ்சலும் பதில் பெற்றதே...

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து வாணி ஜெயராம் பாடிய பாடல் இது.







மீண்டும் சந்திக்கின்றோம்

இலங்கைத் தமிழ்ப் பதிவர்களாகிய நாம் இரண்டாவது தடவையாக மீண்டும் சந்தித்து கலந்துரையாட உள்ளோம். கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு.மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13, 2009)  கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.



இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு



நிகழ்வு தொடர்பான முழுமையான விபரங்கள்:


இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி 



நிகழ்ச்சி நிரல்
  • அறிமுகவுரை 
  • புதிய பதிவர்கள் அறிமுகம் 
  • கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல் 
    • பதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன. 
  • கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை 
    • காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன 
  • சிற்றுண்டியும் சில பாடல்களும் 
  • கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது? 
  • கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும் 
    • பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும் 
  • பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி 
    • கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும். 
  • உங்களுக்குள் உரையாடுங்கள்


கடந்த தடவை போன்று இச்சந்திப்பும்   http://livestream.com/srilankatamilbloggers எனும் சுட்டியில் நிகழ்வு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.


இலங்கைத் தமிழ்ப் பதிவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து பயன்பெற்று மகிழ்வுறுவோம்.


Monday, November 9, 2009

இறப்புக்குப் பின் Facebook



எவருக்குமே தெரியாத - புரியாத புதிர் இறப்புக்குப் பின்னரான உலகம்... அது எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி நான் அலட்டிக்கப் போறதில்லை.


ஆனால், உங்கள் இறப்புக்குப் பின்னர் உங்களுடைய Facebook கணக்கிற்கு என்ன நடக்கும்..? அது முற்றுமுழுதாக முடக்கப்படுமா...? அல்லது, Facebook இல் நீங்கள் தொடர்ந்தும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்களா? அண்மையில் Facebook நிர்வாகம் இக்கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.


Facebook கணக்கு வைத்துள்ள பயனர் ஒருத்தரின் இறப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அவர் தேடுதல் பெறுபேறுகளிலிருந்து (Search results) நீக்கப்படுகின்றார். அதாவது, இறந்தவரின் கணக்கு முற்றாக நீக்கப்படாமலிருக்க, அவர் பெயர் மற்றைய பயனர்களின் தேடலில் மறைக்கப்படுகின்றது.


அத்துடன், அந்த பயனரின் கணக்குள் எவரும் login செய்து உள்நுழைய முடியாது. ஆனால், நண்பர்கள் தங்கள் இரங்கலையும் அஞ்சலிகளையும் செலுத்துவதற்காக அவரின் சுவர் (Wall)மட்டும் திறந்து விடப்படுகின்றது.அவரின் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் அங்கே சென்று தங்கள் அஞ்சலிகளையும் நினைவுப் பகிர்தல்களையும் பதிந்து கொள்ளலாம்.


Facebook ஆனது தனது முகப்புப்பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருக்கலாம் என சிலரை காட்சிப்படுத்தி (Friend Suggestions)அவர்களுக்கான நட்புறவினை வளர்க்க முயற்சிக்கின்றது. ஆனால், துரதிர்ஸ்டவசமாக இவ்வுலகை விட்டுச் சென்றவர்களையும் காட்சிப்படுத்தி நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுமாறு Facebbok பரிந்துரை செய்ய... வந்தது வினை. இணையத்தில் ஏகப்பட்ட விமர்சனங்கள் Facebook இனை நோக்கி வைக்கப்பட்டன. உதாரணத்துக்கு இங்கே ஒன்று.


இதற்குத் தீர்வு காணும் முகமாக, இறந்தவர்களின் கணக்குகளையும் கணக்கில் எடுக்க வேண்டிய தேவையின் நிமித்தமே "இறப்புக்குப் பின்னரான நினைவுபடுத்தல்" அறிமுகம் செய்யப்பட்டது.


உங்கள் நண்பர் ஒருத்தருக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில்,அதனை Facebook இற்கு அறியப்படுத்த முடியும். அதற்காக இங்கே கேட்கப்படும் தகவல்களை உண்மைத்தன்மையுடன் அளிக்க வேண்டும். (http://www.facebook.com/help/contact.php?show_form=deceased)


அளிக்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், இறந்தவரின் சுவர் (Wall) மரணத்துக்குப் பின்னரான நினைவுப் பகிர்தலுக்காக திறந்து விடப்படும்.



வந்தியத்தேவன் - நவம்பர் 09

னக்குத் தெரிந்த இரண்டு கமல் பைத்தியங்களில் இவரும் ஒருத்தர். ஆனால், சினிமா பைத்தியக்காரன் அல்ல... உலகநாயகனுக்காக உருகி வழிகின்ற இவரைக் கமலஹாசன் அகராதி என்றால் கூட தப்பில்லை. கமலைப்பற்றி என்ன வேண்டுமோ இவர் கை நுனிவிரலில் கிடைக்கும்.

த்தனை அகவைகளைத் தாண்டிவிட்ட பின்னும் குழந்தைத்தனம் மாறாத இவரின் "கொல்" என்ற சிரிப்பு சிலவேளைகளில் எரிச்சல்களை தந்திருக்கின்றன. ஏனெனில், அதனால் தானே இன்னமும் பச்சிளம்பாலகனாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.

லவச ஆயிர நிமிட தொலைபேசி சேவைக்கு உரித்துடையவர். இவருக்கு அழைப்பெடுக்கும் எவருக்கும் இது தெரிந்திருக்குதோ இல்லையோ அந்த ஆயிர இலவச நிமிடங்களும் கரியாகிக் கொண்டிருக்கின்றது என்பது மட்டும் புரிந்திருக்கும். பிறகென்ன.. நான் அழைப்பெடுக்க அதை அணைத்துவிட்டு திருப்பி அழைப்பெடுக்கும் பெரும் மனசு யாரிடமிருக்கும்.

வாரத்தில் குறைந்தது ஐந்து இரவுகளிலாவது எவருக்கும் தெரியாமல் எங்கோ ஒளிந்திருந்து அந்த நான்கு பேரும் கும்மியடிப்பார்கள். சிலருக்கு மூக்குடைபடும்... சிலருக்கு டவுசர் கிழியும்... நீலம், பச்சை, வெள்ளை வண்ணங்கள் வரும்... சில வேளைகளில் முட்டி மோதி கும்மி முடியும். ஆனாலும், சொந்தச் செலவில் கருத்துக்களை உதிர்த்து சூனியம் வைப்பதில் இவருக்கு நிகர் இவரே...


ன்னைப் போல் ஒருவன்... இவருடன் இணைந்து பார்த்த முதல் படம். அதிர்ஸ்டவசமாக அது கமலின் படம். இடைவேளையில் இவரும் லோஷன் அண்ணாவும் சொன்ன "கமலிடம் எதிர்பார்த்தவைகள்" இறுதிப் பாகத்தில் பேசப்பட்டது இன்னமும் எனக்கு பிரமிப்பைத் தருகின்றது.

தோசை... முதன்முதலாய் இருவரும் சேர்ந்து உண்ட உணவு. அந்தத் தோசை உண்பதற்காய், அதிகாலை ஐந்து மணிக்கு புல்லட்டின் கதவுகள் தட்டப்பட்டது ஊரறிந்த இரகசியம். அன்று தான் தெரிந்தது இவர் ஒரு தாவர உண்ணி என... :)

ல்லோரையும் இவருக்குப் பிடிக்கும் எனப் பொய் சொல்ல மாட்டேன். ஏனெனில்,  நடிகர் விஜய் உள்ளாரே....

வர் அண்மையில் செய்த சாதனை: இருக்கிறம் சந்திப்பு முடிய சுபாங்கனின் துணையுடன் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்து, இரவு பன்னிரண்டு மணிக்கு யாரோவென எண்ணி எனக்கு அழைப்பெடுத்து கதைத்து தொலைத்தது. ஒரு பொல்லாப்பும் இல்லை.

மிக விரைவில் எங்களுக்கு கிடைக்கப் போகும் இனிய செய்தியொன்றும் உள்ளது. இந்தத் தேவனுக்கு ஒரு தேவதை... இளவரசனுக்கு ஒரு இளவரசி!!!

இத்தனையும் எதற்காக என்கிறீர்களா...?
இன்று இவருக்கு பிறந்த நாள்.

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வந்தியரே...


Friday, October 30, 2009

சிலுவை சுமந்த சிங்காரி


பாடசாலைக் கன்ரீன்... தொடக்கப்புள்ளி இங்கேதான் துளிர்விட்டது. இருநூறுக்கு மேற்பட்டோரை கொள்ளக்கூடிய -  அந்தளவு பெரிய கன்ரீனின் எதிரெதிர் மூலைகளில் அவனும் அவளும்... இடை நடுவே நின்றவைகளையும், அசைந்தவைகளையும் ஊடுருவிப் பாய்ந்த அவர்களின் பார்வைகள் பல கதை பேசின. அவனுக்குத் தெரியாமல் அவளும், அவளுக்குத் தெரியாமல் அவனும்... இருவருக்கும் தெரிந்த போது அங்கே வாய் பார்த்துக் கொண்டிருந்த காகத்தின் மீதும் பார்வைகள் பட்டுத் தெறித்தன.

"டேய்... அந்த ஜூனியர்ப்பிள்ளை உன்னைத்தானடா பார்க்குது" தோளை உலுப்பிய பள்ளித்தோழனிடம் தெரியாத மாதிரி கேட்டான்.
"யாரடா அவள்..?"
சொன்னவன் சுட்டு விரல் அவளைச் சுட்டியதும் இவன் முகத்தில் நாணம் சிவந்தது.


* * *

பரீட்சைக்கான தயார்படுத்தல் வகுப்புக்கு தரம் பதின்மூன்றும் பன்னிரண்டும் ஒன்றாக அழைக்கப்பட்டிருந்தன. எல்லா மாணவர்களும் கற்றலில் ஊறி கரும்பலகையைத்தான் நோக்குகிறார்களென அவர்களிருவரும் எண்ணினார்கள். அதனால் தான் அந்த இருவரும் புத்தகம் கொண்டு தங்கள் முகம் மூடி கண்ணாமூச்சி விளையாடினார்கள்.

அவள் முகம் மறைத்த புத்தகம் சிறிது விலக, கயல்விழி இரண்டும் இவனை நோக்குவதும்... அந்தப் பார்வைக்காய் தவம் கிடந்தவன் நாணம் மேலிட தன் புத்தகத்துக்குள் தன் முகம் புதைப்பதுமாய் தொடர்ந்தன லீலைகள்.

அன்று ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அவன் துளியும் சம்பந்தமில்லாத ஏதோ உளற "கொல்" என்றது வகுப்பறை... தன்னை மறந்தவன் இவ்வேளையிலும் அவள் சிரிப்பை ரசித்தான்.

இது தரம் - 13... பாடசாலைப்பருவத்தின் இறுதி நாட்கள். கடைசிப் பேருந்து தவற விடாதே.... மனம் கரைச்சல் படுத்திக் கொண்டிருந்தது.


* * * 



பாடசாலை விளையாட்டுப் போட்டி... இரு சோடி விழிகளும் மீண்டும் சந்தித்துக் கொண்டன. பாரதியார் மஞ்சள் இல்லத்தின் அணித்தலைவி அவள். அவன் கடந்த வாரம் வெளியாகிய உயர்தரப் பரீட்சை முடிவில் பல்கலைக்கழகத் தகுதி பெற்றிருந்தான்.

"எதற்காக திரும்பத் திரும்ப அவளைச் சந்திக்கிறேன்..? அவள் எங்கேயோ பார்ப்பது போல் என்னைத்தானே பார்க்கிறாள். இது எதற்காக...? நான் மட்டும் என்ன குறைவா...? நானும் தானே பார்க்கிறேன். அப்படியானால்...?"

"அவளிடம் கேட்டுத் தொலைத்துவிட வேண்டியதுதான்... ஆனால், சில நேரம் அவள் மறுத்துவிட்டால்... வருகின்ற அவமானத்தையும் எழுகின்ற சோகத்தையும் தாங்குவேனா...?"

அப்படியானால், இப்படியே இருக்கப் போறீயா?

போராடிய மனதிடம் முடிவு இருக்கவில்லை.


* * *

பேருந்து நிரம்பி வழிந்தது. ஒரு கரத்தில் எல்லாச் சான்றிதழ்களையும் காவிக்கொண்டு மறுகரத்தால் கொலரைத் தூக்கி வியர்வை போக்க ஊதிக் கொண்டிருந்தவனுக்கு நெடுநேர இழுபறியின் பின் இருக்கை கிடைத்தது. இன்று இவன் ஒரு பட்டதாரி. வேலை தேடி நேர்முகப்பரீட்சைக்கு போய்க் கொண்டிருந்தான். தேவாரப்பதிகங்களுக்கு மாறாக எதிர்பார்க்கை வினாக்களுக்கான விடைகளை வாய் முணுமுணுத்தது. நூற்றோராவது பயணத்தில் ஆயிரத்தோராவது தடவையாக விடைகளை சரிபார்த்துக் கொண்டான்.

அடுத்த தரிப்பிடத்தில் நின்ற பேருந்து ஆச்சரியகரமாக அவளையும் உள்வாங்கியவாறு பயணப்பட்டது.

மதகுருமாருக்கான இருக்கையிலிருந்த இவன் எழும்பித்தானாக வேண்டிய நிலை.

"கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக..." நன்றியுடன் அவள் கூறி அமர்ந்தாள்.





Map IP Address
Powered byIP2Location.com