Search This Blog

Thursday, October 29, 2009

சிலுவை சுமந்த சிங்காரி


பாடசாலைக் கன்ரீன்... தொடக்கப்புள்ளி இங்கேதான் துளிர்விட்டது. இருநூறுக்கு மேற்பட்டோரை கொள்ளக்கூடிய -  அந்தளவு பெரிய கன்ரீனின் எதிரெதிர் மூலைகளில் அவனும் அவளும்... இடை நடுவே நின்றவைகளையும், அசைந்தவைகளையும் ஊடுருவிப் பாய்ந்த அவர்களின் பார்வைகள் பல கதை பேசின. அவனுக்குத் தெரியாமல் அவளும், அவளுக்குத் தெரியாமல் அவனும்... இருவருக்கும் தெரிந்த போது அங்கே வாய் பார்த்துக் கொண்டிருந்த காகத்தின் மீதும் பார்வைகள் பட்டுத் தெறித்தன.

"டேய்... அந்த ஜூனியர்ப்பிள்ளை உன்னைத்தானடா பார்க்குது" தோளை உலுப்பிய பள்ளித்தோழனிடம் தெரியாத மாதிரி கேட்டான்.
"யாரடா அவள்..?"
சொன்னவன் சுட்டு விரல் அவளைச் சுட்டியதும் இவன் முகத்தில் நாணம் சிவந்தது.


* * *

பரீட்சைக்கான தயார்படுத்தல் வகுப்புக்கு தரம் பதின்மூன்றும் பன்னிரண்டும் ஒன்றாக அழைக்கப்பட்டிருந்தன. எல்லா மாணவர்களும் கற்றலில் ஊறி கரும்பலகையைத்தான் நோக்குகிறார்களென அவர்களிருவரும் எண்ணினார்கள். அதனால் தான் அந்த இருவரும் புத்தகம் கொண்டு தங்கள் முகம் மூடி கண்ணாமூச்சி விளையாடினார்கள்.

அவள் முகம் மறைத்த புத்தகம் சிறிது விலக, கயல்விழி இரண்டும் இவனை நோக்குவதும்... அந்தப் பார்வைக்காய் தவம் கிடந்தவன் நாணம் மேலிட தன் புத்தகத்துக்குள் தன் முகம் புதைப்பதுமாய் தொடர்ந்தன லீலைகள்.

அன்று ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அவன் துளியும் சம்பந்தமில்லாத ஏதோ உளற "கொல்" என்றது வகுப்பறை... தன்னை மறந்தவன் இவ்வேளையிலும் அவள் சிரிப்பை ரசித்தான்.

இது தரம் - 13... பாடசாலைப்பருவத்தின் இறுதி நாட்கள். கடைசிப் பேருந்து தவற விடாதே.... மனம் கரைச்சல் படுத்திக் கொண்டிருந்தது.


* * * 



பாடசாலை விளையாட்டுப் போட்டி... இரு சோடி விழிகளும் மீண்டும் சந்தித்துக் கொண்டன. பாரதியார் மஞ்சள் இல்லத்தின் அணித்தலைவி அவள். அவன் கடந்த வாரம் வெளியாகிய உயர்தரப் பரீட்சை முடிவில் பல்கலைக்கழகத் தகுதி பெற்றிருந்தான்.

"எதற்காக திரும்பத் திரும்ப அவளைச் சந்திக்கிறேன்..? அவள் எங்கேயோ பார்ப்பது போல் என்னைத்தானே பார்க்கிறாள். இது எதற்காக...? நான் மட்டும் என்ன குறைவா...? நானும் தானே பார்க்கிறேன். அப்படியானால்...?"

"அவளிடம் கேட்டுத் தொலைத்துவிட வேண்டியதுதான்... ஆனால், சில நேரம் அவள் மறுத்துவிட்டால்... வருகின்ற அவமானத்தையும் எழுகின்ற சோகத்தையும் தாங்குவேனா...?"

அப்படியானால், இப்படியே இருக்கப் போறீயா?

போராடிய மனதிடம் முடிவு இருக்கவில்லை.


* * *

பேருந்து நிரம்பி வழிந்தது. ஒரு கரத்தில் எல்லாச் சான்றிதழ்களையும் காவிக்கொண்டு மறுகரத்தால் கொலரைத் தூக்கி வியர்வை போக்க ஊதிக் கொண்டிருந்தவனுக்கு நெடுநேர இழுபறியின் பின் இருக்கை கிடைத்தது. இன்று இவன் ஒரு பட்டதாரி. வேலை தேடி நேர்முகப்பரீட்சைக்கு போய்க் கொண்டிருந்தான். தேவாரப்பதிகங்களுக்கு மாறாக எதிர்பார்க்கை வினாக்களுக்கான விடைகளை வாய் முணுமுணுத்தது. நூற்றோராவது பயணத்தில் ஆயிரத்தோராவது தடவையாக விடைகளை சரிபார்த்துக் கொண்டான்.

அடுத்த தரிப்பிடத்தில் நின்ற பேருந்து ஆச்சரியகரமாக அவளையும் உள்வாங்கியவாறு பயணப்பட்டது.

மதகுருமாருக்கான இருக்கையிலிருந்த இவன் எழும்பித்தானாக வேண்டிய நிலை.

"கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக..." நன்றியுடன் அவள் கூறி அமர்ந்தாள்.



Monday, October 26, 2009

ரூபியும் நண்பர்களும்...

இத்தகவல் அவசரமாக எனக்குத் தேவைப்படுகிறது. நேற்று மாலைக்குள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தாலும், இன்னும் பொருத்தமான ஆளைக் கண்டுபிடிக்காமல் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

ஆபத்து, அவசரத்துக்கு உதவுகின்ற நண்பர்கள் இருக்கும் போது ஏன் கவலையென எண்ணி என் Gmail Chat இல் இருந்த நண்பர்களிடம் வினவினேன்.

உங்களில் யாருக்காவது ரூபி தெரியுமா...?

இக்கேள்விக்குப் பதிலாய் மூவர் அனுப்பிய தகவலால் என் வேலைத் தளமே அதிர்ந்தது. சிரித்து சிரித்து, மத்தியானச் சாப்பாடு செமித்து - வயிறு நோவெடுத்து வலித்தது.

முதலாவதாக நான் வினவியதே இவரிடம் தான். கிடைத்ததோ வில்லங்கமான பதில். குறும்பு பண்ணுபவர்களுக்கு முதல் குழந்தை ஆணாகவே கிடைக்கும் என சாத்திரக்காரன் ஒருத்தன் சொல்ல, குறும்பு பண்ணினால் தான் குழந்தையே கிடைக்கும் என அருள்வாக்கு கூறியவனிடம் விடையை எதிர்பார்த்தது என் தப்புத்தான். அவன் எனக்குப் பதிலாய் ஒரு வினாவையே அனுப்பினான்.
"டேய்... என் வாழ்க்கையில் இன்னும் சந்திக்கவில்லை. ஆனால், மூஞ்சிப்புத்தகத்தில் (Facebook) ஒருத்தியை கேள்விப்பட்டிருக்கிறேன். அவளையா கேட்கிறாய்...?"

இன்னொரு நண்பன் ஒரு படி மேலே போய், "டேய்... சும்மா நக்கலடிக்காதே... என் பக்கத்து வீட்டுப் பிள்ளையின் பேர் எப்படிடா உனக்குத் தெரியும்..? அவளுக்குப் போனமாதம் தான் நிச்சயதார்த்தம் முடிந்தது... விட்டுடா..." வாழ்த்துக்கள் நண்பா. உன் பாதையில் நான் ஏன் குறுக்கிடுவேன்!!!

"ஓமடா... தெரியும். என்னோட ஆறாம் ஆண்டிலிருந்து ஒன்றாகப் படிச்சவள். O/L இல் நல்ல றிசல்ட்டுடன் வந்து A/L இல் கொடி கட்டிப் பறந்தவள். பின்னொரு நாள் கனடாவிலிருந்து வந்த ஒருத்தன் கொண்டு போய்விட்டான்..." மூன்றாமவனுக்கு அனுதாப ஸ்மைலியை பதிலாக அனுப்பிவிட்டு Chat யன்னலை மூடியே விட்டேன்.

உங்களில் யாராவது தெரிந்திருக்கிறீர்களா எனக் கேட்டு திரும்பவும் நான் நொந்து போவதை விட விளக்கமாகவே கேட்டுவிடுகின்றேன்.

உங்களில் யாருக்காவது ரூபி(Ruby Programming Language) தெரியுமா?

அப்படித் தெரிந்து இலங்கையில் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி

Sunday, October 18, 2009

பொண்டாட்டிக்கு புள்ள பிறந்தாலும்....

தொண்டர்கள் பொண்டாட்டிக்கு புள்ள பிறந்தாலும் நீயே காரணம் தலைவா...................


Saturday, October 10, 2009

சமாதானக் கையூட்டு


ஐ.தே.க
நீண்ட காலத்தின் பின்னர்
நினைவூட்டப்படுகிறது இப்பெயர்...
வரத் தொடங்கியிருக்கும்
தேர்தல் முடிவு குறுஞ்செய்திகளில்
ஆச்சரியமாய்த் தொங்குகின்றது
எதிர்க்கட்சி ஜனநாயகம்...


விஜயம்
முப்பத்திரண்டு பற்களையும்
காட்டியவாறு வந்திறங்குவீர்கள்.
உங்களுடன் குலுக்குவதற்கு
கைகளில்லாதவனின் மனம்
இப்படியும் உங்களை சபிக்கலாம்...
"என்னையும் சேர்த்து கொல்வதற்கு
ஏன் மறந்தீர்கள்...?"


சமாதானம்
உன்னைத் தேடிக் களைத்துப் போனார்கள்.
அதனால் தான்,
நீ வருவாயென்ற நம்பிக்கையை விட
கையூட்டுக் கொடுத்தாவது வர வைக்கின்றார்கள்.
ஒபாமாவுக்கு நோபல் பரிசு...!!!


Couple Package
இன்னமும் என் தொலைபேசியில்
இரு வருடங்களுக்கு முன்னைய உன் SMS.
பார்த்தாயா...?
இரு வருடமாய் எனக்கு நீ SMS அனுப்பவில்லை.
எங்கள் Couple Package இற்கு இன்றுடன் இரு வருடங்கள்....!!!

Wednesday, October 7, 2009

இதுவும் கடந்து போகும் - அவதியுறும் அகதி வாழ்வு

பல்கலைக்கழக வாணி விழா(2009) கவியரங்கக்கவிதை.
அவதியுறும் அகதி வாழ்வு எனும் தலைப்பின் அறிமுகமாக என்னால் பகிரப்பட்ட கவிதை இது.

புரிகிறது...
இந்த அமைதிக்கு அர்த்தம் புரிகின்றது.

இனிப் பேசும் வார்த்தைகள் கூர்மையானவை...

துரோகி... பயங்கரவாதி...
இரண்டுக்கும் நடுவே
அப்பாவியாக கவிதை சொல்ல வேண்டும்.
ஆனாலும்,
அப்பாவிகள் தானே எங்கும் முதல் இலக்கு..!!!

அந்த மூன்று நாட்கள் - என்
தேசக் கடிகாரம் முப்பது வருடங்களை
இடஞ்சுழியாக ஓடிக்களைத்து
இன்று தாகத்துக்கு நீர் கேட்கின்றது...

மன்றாடிக் கேட்கின்றேன்...
ஆராய்ச்சிகளையும் ஒப்பாரிகளையும் நிறுத்தி விடுங்கள்...

நாங்கள் பட்டு வேட்டிக் கனவில் கிடந்த போது
சிலுவை சுமந்தார்களே...
நாம் இணையத்தில் பாட்டுக் கேட்டு சுதந்திரம் வேண்டிய போது
அதற்காக தீயினில் வெந்தார்களே...
நாளை வரும் நாம் நிமிர்வோம் எனக் காத்திருந்தது
தூர விலகினாலும்,
அதற்காக உயிரையும் கொடுத்தார்களே...
இன்று அடைபட்டுக் கிடக்கும் அந்த மக்களுக்காக
குரல் கொடுங்கள்...

அகதி வாழ்வு...
அது நேற்று வந்தது அல்ல...
91 ஜூலை மாதத்தில் ஓர் நாள்
என் பெயர் முன்னும்
வந்து குந்திய அடையாளம்
இன்றும் தொடர்கின்றது...

வீடிழந்து...
ஊரிழந்து...
உறவிழந்து...
தொடருகின்ற எங்கள் அவலப் பயணத்தில்
கணிதவியலாளனாய் சிந்தித்தால்
வர்க்கமுமல்ல... கனமுமல்ல...
இது அகதி வாழ்வின்
எத்தனையோ அடுக்கு...!!!

நீண்ட நெடும் பயணத்தில்
மீண்டும் வந்து பூச்சியத்தில் நிற்கின்றோம்.
குஞ்சு குருமன் எல்லாம்
விலையாகக் கொடுத்துவிட்டு
பிச்சைப்பாத்திரம் எங்கள் கரங்களில்...

தியாகங்கள்...
வரலாறுகள்...
எல்லாவற்றையும் பேசுங்கள்
குறை சொல்லவில்லை...
ஆனால்,
செல்லடித்து செத்து வந்தவர்களை - உங்கள்
சொல்லடியால் சாகடிக்காதீர்கள்.

நம்பிக்கை தானே வாழ்க்கை...
அந்த நம்பிக்கையின் மீதேறி சொல்கின்றேன்
இந்த அவலமும் ஓர் நாள் கடந்து போகும்.

You might also like