Search This Blog

Friday, March 27, 2009

எனக்குப் பிடித்தவர்கள்

என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்து அதனை விரைவில் பதிவிடுமாறு தாராள மனத்துடன் தொல்லை தந்த சகபதிவர் கமலுக்கு நன்றி சொன்ன வண்ணம் இதை எழுத தொடங்கும் இக்கணப்பொழுதில் என் ஞாபகங்கள் சில வருடங்கள் பின்னோக்கிச் செல்வதை தடை போட்டு மறிக்க முடியவில்லை.

ஆண்டு ஐந்து... பத்து வயது... புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த காலம் அது. எனது அம்மா, எங்கள் பாடசாலை, எனது ஊர், நான் ஆசிரியரானால்.... எனும் தலைப்புக்களில் எழுதிய கட்டுரைகள் இன்னொரு பரிணாமத்துக்குள் விழுந்தன. 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி, நீரின் முக்கியத்துவம், நான் விரும்பும் பெரியார்... முன்னைய தலைப்புக்கள் போலன்றி இத்தகைய விடயங்களுக்கு சில தேடல்கள் தேவைப்பட்டன. நான் விரும்பும் பெரியார்களில் சுப்பிரமணிய பாரதியார், சுவாமி விபுலானந்த அடிகளார், ஆறுமுக நாவலர், அஹிம்சை தேசத்தின் காந்தி... என்னிடம் இவர்களினது சுயவிபரக்கோவைகள் எப்போதும் தயாராக இருந்து கொண்டிருக்கும். ஆனாலும், சுப்பிரமணிய பாரதியார் தான் என்னுடைய முதலாவது தெரிவாக இருக்க காரணம் அவருடைய ஜனரஞ்சகப் பாடல்கள்தான்.



ஆண்டு எட்டு... வயது பதின்மூன்று... முதன்முதலில் மகாத்மா காந்தியின் அஹிம்சையை எள்ளி நகையாடி நான் எழுதிய கவிதை ஞாபகம் வருகின்றது. ஏனெனில், அப்போது காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தை இன்னொரு அஹிம்சைப் போராட்டம் விஞ்சியதாய் என் பருவம்
உணர்த்திய காலம் அது... காந்தி பிறந்த ஆண்டை மறந்து இன்னொரு தியாகத்தாயின் பிறந்த ஆண்டை மனது பாடமாக்கிக் கொண்டது. அன்றைய நாளில் நான் வாசித்த கட்டுரை ஒன்று இன்றும் ஞாபகம். எம்.ஜி.ஆர். எங்களின் தோழன் எனவும் கருணாநிதி அரசியல் செய்யப் பிறந்த துரோகி எனவும் சொல்லிய அக்கட்டுரையை பிழையென்று சொல்லும் நிகழ்வுகள் எதுவும் அதற்குப் பின் நடக்கவில்லை; சரியெனச் சொல்ல பல நடந்து கொண்டிருக்கின்றன.

பயங்கரவாதம்... இன்றும் எனக்குப் பொருள் தெரியாப் பதம் இது. ஆனால், புஷ் தொடங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனக்குப் பல பாடங்களை சொல்லித் தந்தது... பின்லேடனும் சதாம் ஹூசைனும் எனக்குப் பிடித்தவர்களாயினர் என்று சொல்வதை விட அமெரிக்க ஜனநாயகத்தின் ஜனாதிபதி புஷ் பிடிக்காத சீவனாக மாறினார். அவருக்கு பாதணியால் பூசை நிகழ்ந்தது அறிந்த போது ஒருவித மகிழ்ச்சி எனக்குள் எழுந்தது. ஈராக் இன்னொரு வியட்னாமாக மாறி உலக வல்லரசுக்கும் பட்டாளத்துக்கும் பாடம் புகட்டாதா என ஏங்கியவன் நான்.

பயங்கரவாதம் தொடர்பில் இன்னும் சிலரை - சிலவற்றைப்பற்றிக் கதைக்க விடயங்கள் இருந்தாலும் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.
- இப்படிக்கு, சுயநலமுள்ள என் பேனா.
* * *

கண்டிப்புடன் பாசத்தையும் அள்ளிப் பொழியும் - இன்று இன்னொரு அகவைக்குள் நுழைகின்ற அப்பா, அன்பான அம்மா, எனதருமைச் சகோதரர்கள்... இவர்களை எனக்காகப் படைத்த இறைவனுக்கு கோடி நன்றிகள். எனக்குப் பிடித்தவர்களில் முதல் ஸ்தானத்தில் இவர்களைத்தவிர வேறு எவருமில்லை.

ஆனாலும், என்றைக்கும் என்னால் மறக்க முடியாத உறவொன்று உண்டெனில், அது என் அத்தை தான். 1993ம் ஆண்டில் என் மாமாவின் திருமணம் எங்களுக்குத் தந்த பரிசுதான் இவள். அன்பு, பரிவு, கண்டிப்பு... இவை எல்லாம் அவளிடமிருந்து எனக்குக் கிடைத்திருக்கின்றன. ஆதிரை எனும் பெயருக்கு சொந்தக்காரன் நான் தான் என்பதையும் கண்டு சொன்னவள் இவள்.

மீண்டும் கிடைக்காது எனத் தெரிந்து விட்ட அன்றைய நாட்களின் நினைவுகள் பசுமை நிறைந்தவை.

பொங்கல், தீபாவளி போன்ற கொண்டாட்ட நாட்களில் என் அத்தை இல்லம்தான் எனக்கு ஆலயம். நீராடி புத்தாடை அணிந்து முதல் கருமமாக அத்தை வீடு சென்று அங்கிருந்து அவர்களுடன் தான் ஆலயம் செல்வேன். "எங்கே போறாய்...? என அம்மா கேட்பதுமில்லை. " கோயிலுக்குப் போக கரன் வருவான்..." என என் அத்தை காத்திருக்க தவறுவதுமில்லை.

சின்னவயதில் (ஆறாம் ஆண்டு படித்த பதினொரு வயதும் சின்ன வயதுதானே...) நான் பேருந்துப் பயணத்தை விரும்புவதில்லை. ஏனெனில், பேருந்தில் ஏறி ஐந்து நிமிடத்தில் என்னை எவரும் நெருங்காதவாறு ஒரு பாதுகாப்பு அரண் அமைத்திடுவேன். வெட்கத்தை விட்டு
காரணத்தை சொல்வதென்றால், வாந்தி எடுத்திடுவேன்... (இப்போ அந்தப் பழக்கம் இல்லை)

யாழ்ப்பாண நகரில் ஒருத்தரை சந்திப்பதற்கான பயணம் அது. மாமாவுடனும் அத்தையுடனும் கூடவே நானும் செல்வதற்கு அப்பாவின் அனுமதியும் கிடைத்துவிட்டது. ஆனால், பேருந்துப்பயணம்... அதுவும் செம்பியன்பற்றிலிருந்து.....
"கரன் பாவம்... சத்தி எடுப்பான்... எழுதுமட்டுவாள் வரை சைக்கிளில் போவோம். பிறகு அங்கிருந்து பஸ்ஸில் போவோம்...." என் வாடிய முகத்தின் குறிப்புணர்ந்த அத்தை மாமாவிடம் வேண்டிக்கொண்டாள். பிறகென்ன... எழுதுமட்டுவாள் மட்டும் என்ற வரையறையுடன் முன்னுக்கு என்னையும் பின்னுக்கு அத்தையையும் ஏற்றி சைக்கிள் மிதிக்கத் தொடங்கிய மாமா எழுதுமட்டுவாள் தாண்டி யாழ். நகர் வரை சைக்கிளிலேயே எம்மைக் காவிவந்தார். அதற்கு அத்தனை நன்றிகளும் என் அத்தைக்குத்தான். வந்த நோக்கம் நிறைவேற மீண்டும் சைக்கிளிலேயே திரும்பி வந்தோம்.

வரும் வழியில் இருள் சூழ்ந்து விட நாம் மூவரும் உறவினர் வீடொன்றில் தங்கி மறுநாள் காலையில் எங்கள் வீட்டுக்கு வரவும்.....
எங்களை காணவில்லையென நள்ளிரவுவரை காத்திருந்து பின்னர் யாழ்ப்பாண நகர்வரை சென்று எங்களைத் தேடிக்களைத்த அப்பா வீடு வரவும் சுபநேரம் ஒன்றாக கூடி வந்தது. நான் சின்னப்பிள்ளை தானே... எல்லா அபிசேகங்களையும் என் மேல் கொண்ட பாசத்திற்காக அத்தை வாங்கிக் கொண்டாள்.

பின்னர் இலங்கையில் நடந்த நிகழ்வுகள் பல பிரிவுகளை, ஈடு செய்ய முடியாத இழப்புக்களை எங்களிடையே விதைத்து விட்டுச் சென்றன. 1995இற்குப் பின்னர் வன்னியில் இரு வருடங்கள் அருகருகாகவும், பின்னர் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலுமாக வாழ்க்கை ஓடியது.

சமாதானத்தின் பெயரால் ஏ9 திறந்த போது பல வருடங்களாய் பிரிந்திருந்த உறவுகள் மீளச்சந்தித்துக் கொண்டோம். என்னுடைய பல்கலை விடுமுறை நாட்களில் அதிகமானவை அத்தை வீட்டில் மூன்று செல்லக் குழந்தைகளுடனேயே கழிந்திருக்கின்றன.

ஆனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி இவ்வளவு விரைவாக விழுந்திடும் என்று நான் கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. 2004 டிசம்பர் 26.... பல்கலைக்கழகத்தில் முதல்வருட பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். இயற்கை சுனாமி எனும் பெயரில் கொடிய அசுரத்தனத்தை நிகழ்த்தி அடங்கிக் கிடந்தது. மனது எது நிகழக் கூடாது என வேண்டியதோ அதற்கு மேலாக எல்லாம் நிகழ்ந்து விட்டதாக இரவு என் காதுகளுக்கு செய்தி கிட்டியது.
அன்பான உறவுகளை தேடிச் சென்ற போது... மாமா மட்டும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தன்னந்தனியாக... அத்தையும் மூன்று செல்வங்களும் ஒன்றாக ஒரே குழியினுள் கண் மூடித் தூங்குகின்றார்கள்.

Sunday, March 22, 2009

ஊடகப் போரில் வாக்குப்பதிவு - கள்ள வோட்டுக்கள் எச்சரிகை

இன அழிப்பு போருக்கு எதிரான உங்கள் வாக்கைச் செலுத்துங்கள் - இது புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த வேண்டுகை மின்னஞ்சல்....
எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினருக்கு ஆதரவாக செயற்படும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வாக்களியுங்கள் - இது என் பல்கலைக்கழக சகோதர மொழி நண்பனின் வேண்டுகை மின்னஞ்சல். அடிக்கடி என் மின்னஞ்சல் பெட்டிகள் இப்படிப்பட்ட மின்னஞ்சல்களால் நிறைந்து விடுகின்றன.

இலங்கையின் வடக்கில் யுத்தம் உக்கிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஊடகங்களிலும் அதன் தாக்கம் உக்கிரமடைந்திருக்கின்றது. ஊடகப்போரில் ஒரு சாரார் இது இன அழிப்பு யுத்தமென்றும் மற்றைய சாரார் மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமானப் போர் என்றும் வரையறைகளை செய்த வண்ணம் முட்டி மோதுகின்றனர். இன்று என்றுமில்லாதவாறு அனைத்துலக ஊடகங்களும் இலங்கை பக்கம் திரும்பிப் பார்க்கின்றன.

பொதுவாக அனைத்துலக ஊடகங்களின் இணையத்தளங்களில் ஒரு செய்திப் பதிவுக்கு பின்னூட்டமளிக்கும் வசதிகள் மட்டுமன்றி, அப்பின்னூட்டத்துடன் நீங்கள் உடன்படுகின்றீர்களா அல்லது எதிர்க்கின்றீர்களா என்பதை தெரிவு செய்யும் வழியும் உண்டு. அதாவது அந்தப் பின்னூட்டத்துக்கு நீங்கள் வாக்களிக்க முடியும். ஒரு முறை அளித்த வாக்கை அந்த வாக்கின் உரிமையாளர் மாற்றும் வசதி சில தளங்களில் இருப்பினும், ஒரு தடவைக்கு மேல் வாக்களிக்க முடியாது. இது தான் பொது நியதி...

அண்மையில் அவுஸ்திரேலியா ஊடகமொன்றினால் இலங்கை தொடர்பாக அறிக்கையிடப்பட்ட செய்தி அலசல் இன்று 1000 இற்கும் மேற்பட்ட பின்னூட்டங்களினால் நிரம்பி வழிகின்றது. ஒவ்வொரு பின்னூட்டங்களின் வாக்குகளின் எண்ணிக்கையும் நான்கு இலக்க எண்ணை அண்மிக்கின்றன.

ஆனால், ஒரு பின்னூட்டம் இடப்பட்டு ஒரு மணித்தியாலம் கழிவதற்குள் அப்பின்னூட்டத்திற்கு ஆதரவாக ஆயிரத்தை தாண்டிய வாக்குகளும் எதிராக ஐந்து வாக்குகளும் இடப்பட்டிருப்பின், அதன் அர்த்தம் என்ன...? அங்கு திருகுதாளமொன்று அரங்கேறி இருக்கலாம் என்பதை 'பவ்ரல்' அமைப்பு அறிக்கையிட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்றில்லை.

இந்த வாக்களிப்பு முறையில் ஏதாவது ஓட்டைகள், குளறுபடிகள் இருக்கின்றனவா என்பதை தேடிப்பார்த்ததில் சிக்கிய தகவல்கள் தான் இவை.

பொதுவாக இப்படிப்பட்ட வாக்களிப்பின் விபரங்கள் இணையத்தளங்களினால் உங்களின் இணைய உலவி(Browser)யின் Cookies இல் சேமித்து வைக்கப்படுகின்றன. அந்த
Cookies இனை ஒருத்தர் தன்னுடைய இணைய உலவியிலிருந்து அகற்றுவாராயின், அவர் புதிதாக வாக்களிக்கும் உரிமை பெற்றவராகிவிடுவார். அதாவது, அவர் ஏற்கனவே வாக்களித்தார் என்பதற்கான எந்தவொரு தடயங்களும் அங்கிருக்கப் போவதில்லை.

இங்கு Internet Explorer, Firefox, Google Chrome ஆகிய இணைய உலவிகளில் எப்படி Cookies இனை நீக்கி விடுகிறார்கள் என்பதை பின்வரும் படங்கள் காட்டுகின்றன. (படங்களினைப் பெரிதாக்க அவற்றின் மேல் சொடுக்குக.)


இணைய உலவி
Internet Explorer ஆயின்,

Internet Explorer படம் - 01



Internet Explorer படம் - 02



Internet Explorer படம் - 03



இணைய உலவி
Firefox ஆயின்,

Firefox படம் - 01



Firefox படம் - 02


இணைய உலவி
Google Chrome ஆயின்,

Google Chrome படம் - 01



Google Chrome படம் - 02

ஆக, ஒரு இணையத்தளத்தில் இப்படிப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குகளுக்காக நீங்கள் செலவு செய்யும் நேரங்களை இதிலுள்ள ஓட்டைகளை எடுத்துச் சொல்ல பயன்படுத்துங்கள். முடியுமானால், வாக்களிக்கும் நேரத்தில் உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக இடுங்கள்.
நான் தப்புச் செய் என்று சொல்லவில்லை...
இப்படித்தான் தப்புக்கள் நடக்கின்றன என்கின்றேன்.

எனக்குப் பிடித்த இளங்குயில்கள்

சக பதிவர் கமலிடமிருந்து ஒரு அழைப்பு. எனக்குப் பிடித்தவர்களைப் பற்றி பதிவிடுமாறு கேட்டிருந்தார். மறுப்பின்றி அதற்கு சம்மதமும் தெரிவித்திருந்தேன்.

ஆனால், வேலைத்தளத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புறொஜெக்ற்(Project) ஒன்று என்னையும் உள்வாங்கிவிட மூச்சு விடக் கூட அவகாசமின்றிய நிலை. என் கணனி 'கீபோர்ட்' இனை கேட்டால் என் வேதனையை அது சொல்லி அழும். ஏனெனில், என்
புறொஜெக்ற் மனேஜர் மீதான கோபங்களை தீர்ப்பதற்கு மிருதங்கம் அடிப்பதைப் போல அதை தட்டுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்...?

ஆனாலும், இவ்வார விடுமுறையில் எனக்குப் பிடித்தவர்களைப்பற்றி பதிவிட எண்ணியிருந்தேன். அவர்கள் ஒருத்தரும் உலகசாதனை விற்பன்னர்களல்ல... மாறாக, என்னுடன் ஒட்டி உறவாடிய அன்புள்ளங்கள்; என் மனதிலிருந்து எப்போதும் நீங்காதவர்கள்.

ஆனால், நேற்று மூஞ்சிப்புத்தகத்தின் (Facebook) ஊடாக நண்பன் அனுப்பிய இணைப்பு என் கவனத்தை ஈர்த்தது. Super Star Junior எனும் பாடல் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிய சிறுமி ஒருத்தியின் பாடல் காட்சி அது.

இந்தச் சின்ன வயதில் இத்தனை திறமைகளா என எனக்குள் ஒரு வியப்பு. பதின்ம வயது, மேடைக்கூச்சம் இல்லை, சபை அச்சமின்றிய உரையாடல், அவர்களின் குரல் வளம்... இத்தனையும் சேர்ந்து என்னுடைய இரு இரவுகளைத் தின்று விட்டன.

நண்பன் அனுப்பிய இணைப்பு எனக்குப் பிடித்துப் போக Youtube இணையத்தில் சென்று மீதமுள்ள பாடல் காட்சிகளையும் கண்டு ரசித்தேன். சில பாடல்களை தரவிறக்கம் செய்தும் வைத்துள்ளேன். இந்தப் பாலகர்கள் சில இடங்களில் தமிழ்மொழி உச்சரிப்பில் தடுமாற்றம் கண்டாலும் இப்பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன.

இவ்வார விடுமுறையில் என்னை கணனியுடனே கட்டிப்போட்ட இந்த இளங்குயில்களின் சில பாடல் காட்சிகளை உங்கள் ரசனைக்காகவும் இங்கு தந்துள்ளேன்.

மிக விரைவில் எனக்குப் பிடித்தவர்களை சுமந்த வண்ணம் இன்னொரு பதிவினூடு சந்திப்பேன் எனும் நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.
















Saturday, March 21, 2009

யாரிந்த ஆதிரை...?

2003 ஆம் ஆண்டு... இலங்கையில் சமாதானம் வேடம் தரித்த காலநிலை கருக்கட்டியிருந்த காலம். இப்போது சொல்வதென்றால் அது ஒரு கனாக்காலம். உயர்தரப்பரீட்சை எடுத்து விட்டு பருத்தித்துறை வீதி முழுவதும் எங்கள் இரு சில்லு வண்டிகள் புழுதி கிளப்பிக் கொண்டிருந்தன.

அடிக்கடி முகமாலை தாண்டி நான் பிறந்த மண்ணையும், அங்குள்ள என் உறவுகளையும் காணச் செல்வதுண்டு. 1991 ஆம் ஆண்டு ஆகாயமும் கடலும் வானமும் ஒருங்கு சேர பெயர் சூட்டி பின்னர் இழந்திருந்த மண்ணை அந்தச் சமாதான காலத்தில் காண முடிந்தது.

ஆழியவளை... என்னை ஈன்றெடுத்த மண். வடமராட்சி கிழக்கு கிராமங்களில் ஒன்று... யுத்தம் எப்படி எங்களைப் பிய்த்து உதறியது என்பதன் எச்சங்கள் இங்கும் தாராளமாக கிடைக்கும். (இப்போது இன்னும் தாராளம்...)

அங்கு சென்றிருந்த ஒரு நாளில் பத்திரமாக பொத்தி வைத்திருந்த கொழும்பு நாளிதழொன்றை அத்தை நீட்டினாள். அதிலிருந்த சிறுகதையொன்றை சுட்டிக்காட்டி, "கரன்... இந்தக் கதையைப் படிச்சுப்பார்... நல்லாயிருக்கு... யாரோ எங்களின் ஊர்ப்பிள்ளைதான் எழுதியிருக்கவேணும்... " அவளின் சந்தேகத்துக்கும் காரணமிருந்தது. ஏனெனில், எங்கள் ஊர் தொட்டு நாங்கள் இடம்பெயர்ந்து வசித்திருந்த ஊர்கள் ஊடாக, எங்கள் வலிகளினை தாங்கியவாறு அந்தக் கதை நகர்ந்திருந்தது. புன்னகை மேலிட "நிச்சயமாக..." என்று தலையாட்டினேன்.

என் அத்தை கெட்டிக்காரி... சில விடயங்களில் அவளிடம் நான் 'செக்மேட்' ஆகியிருக்கின்றேன். அன்றும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அந்த சிறுகதையை எழுதின ஆதிரையை எனக்குத் தெரியாது என அவள் மீது சத்தியம் செய்யச்சொன்னாள். நான் எழுதின சிறுகதையை நானே மீள வாசிக்கும் போது முகபாவனை அவளுக்கு என்னைக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். பிறகென்ன...? அதுவரை பொத்திவைத்த சங்கதிகள் வெளியில் வர அன்றிலிருந்து நான் ஆதிரையானேன்.

அப்பாவும் அம்மாவும் சிறிகரன் எனப்பெயர் சூட்ட நான் ஏன் ஆதிரை எனும் பெயரை தெரிவு செய்தேன்? காரணம் இருந்தது. இவ்வுலகில் புதுப்பிறப்பெடுத்த ஒவ்வொருத்தருக்கும் பெயர் சூட்டுதல் கட்டாயமாகிப் போனது. என் உறவொன்றுக்கும் சூட்டுவதற்காக நாள் நட்சத்திரம் பார்த்து மூன்று பெயர்கள் தெரிவாகிவிட்டன. அதற்குள் ஆதிரை எனும் பெயரும் அடக்கம். ஆனால், அவர்கள் வேறொரு பெயர் சூட்டிவிட - அப்பெயரை நான் உச்சரிக்க முடியாமல் போக எனக்குப் பிடித்த ஆதிரை எனும் பெயரை சூட்டிக்கொண்டேன். இப்போது அந்த உறவின் நினைவுகள் ஆதிரை எனும் பெயரினூடே என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

என்னுடைய பதிவுல பிரவேசமும் 'ஆதிரை' எனும் பெயரினூடே அமைய, பலர் ஆதிரை தான் சிறிகரன் என அறிந்திருந்தார்கள். சிலர் சந்தேகம் மேலிட கேட்ட போது ஏனோ தெரியவில்லை நழுவல் பதில்களே அவர்களுக்கு கிடைத்தன. இன்னும் சிலர் எச்சரித்து வசை பாடிச் சென்றார்கள்.

கருத்துக்களை நேரே சொல்லத் திராணியற்று - அச்சம் கொண்டு புனை பெயரில் முகம் புதைத்துள்ளேன் என குற்றம் சுமத்தி விரல் நீட்டினார்கள். இல்லையென்றும் இல்லை. ஆனாலும், தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சிக்கு முன்னால் முகத்துக்கு திரை போட்ட வண்ணம் இணையத்தில் உலாவரமுடியாது என்பதை நான் நன்குணர்ந்துள்ளேன். சிலரின் பட்டுத் தெளிந்த பட்டறிவு சொல்லும் கதைகள் ஒரு விதத்தில் சுவாரசியமானவை. :-)

யாழ். மாவட்டத்தின் ஆழியவளை மண் பெற்றெடுக்க இன்று இலங்கையின் மாநகரில் என் வாழ்க்கை ஓடவேண்டிய கட்டாயம். உண்மையில், இந்நகர வாழ்க்கை எனக்கொரு நரக வாழ்க்கை. எனக்கு நினைவு தெரியத்தொடங்கிய 80 களின் பிற்பகுதி தொட்டு இன்றுவரை என் வாழ்க்கை ஒரு ஈழத்தமிழனின் வாழ்க்கையாகவே ஓடிக்கொண்டிருக்கின்றது.

போர்... போர்... போர்...
நான் நடந்து வந்த பாதை நெடுகிலும் - கடந்து வந்த தடைகள் மீதிலும் இது தாராள மனத்துடன் கூடியே வந்திருக்கின்றது. சுருங்கக்கூறின், அன்றைய கோள்மூட்டி 'சீப்பிளேன்' தொட்டு இன்றைய 'கிபிர்' வரையிலான பரிணாம வளர்ச்சி அட்சரம் பிசகாது எனக்கு அத்துப்படி.

Sunday, March 15, 2009

அழாதே நண்பா...


செய்தி அறிந்தேன்...
அழாதே தோழனே
நாளை நான் அழும்போது
ஆறுதல் சொல்ல நீ வேண்டும்.

ஏனெனில்,
பாதுகாப்பு வளையத்துக்குள்
எனக்கும் சொந்தங்கள் உண்டு.

Thursday, March 12, 2009

திட்டித்தீர்த்த நட்பு

இணையத்தளத்தினூடாக என்னுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவனிடமிருந்து திடீரென தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது தான் பார்த்தேன் Gmail Chat இலிருந்து அவன் offline க்குப் போயிருந்தான். அவன் தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தேன். இடமொன்றைக் குறிப்பிட்டு என்னை அங்கே வருமாறு கட்டளையிட்டான். "என்ன விசயம்.... சொல்லு..." நான் வினவியதுக்கு அவன் பதில் தர விரும்பாமலே தொலைபேசி அழைப்பு அறுந்தது.

என்ன விடயமாக இருக்கலாம்...? என் மனதினில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். இதுவரை எந்த கவலையுமின்றி வழமையான சுக விசாரிப்புக்களுடன் ஆம்பித்து... இளமைப் பருவ குறும்புக் கதைகளைத் தானே அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். திடீரென இவனுக்கு என்ன நடந்தது? இணையத்தினூடு பகிர முடியாத - தொலைபேசியினூடு பேச முடியாத அந்த உணர்திறன் மிக்க செய்தி என்னவாக இருக்கும்? அந்தச் செய்தி இனிப்பாக இருக்கப்போவதில்லை என்பது அவன் பேசிய பேச்சின் தொனி சொல்லியது. அதில் கோபக்கனல் தெறித்ததை உணர முடிந்தது.

"டேய்... நீயும் ஒரு மனிசனா...? உனக்கு என்னடா நடந்தது...? இவ்வளவு படிப்பு படிச்சும் தலைக்குள் களிமண்ணா இருக்குது? நாட்டு நிலமையை உணர்ந்து கொள்ளடா... விருப்பமென்றால் நீ பொல்லைக் கொடுத்து அடியை வாங்கு. எதுக்கு என்னை வம்பில மாட்டிவிடுகிறாய்...?" - என் வாழ்நாளில் அப்பா கூட இப்படி பேசியிருக்க மாட்டார். என் வரவைக் காத்திருந்த நாய் போன்று சொற்களினால் கடித்துக் குதறினான். வெள்ளவத்தை வீதியால் போனோர் எல்லாரும் என்னை சூடு சொரணையற்ற மிருகம் போல் நோக்கினார்கள். அப்படி நான் செய்த குற்றமென்ன...? நிச்சயமாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆசை தீருமட்டும் அவன் கத்திக் குதறி ஓய்வு நிலையை அண்மித்த போது தான் நான் மெல்ல வாய் திறந்தேன். "இப்படிக் கத்துகிறாயே...அப்படி உனக்கு நான் என்னடா செய்தேன்...?" ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அதற்கு அவன் தந்த பதில் அதைக் கேட்காமல் பொத்திக் கொண்டு போயிருக்கலாம் போன்று இருந்தது. மழை தூறிக்கொண்டிருந்தது. அவன் சுடுதண்ணி குடித்தவன் போன்று திரும்ப தொடங்கினான்.

"என்ன செய்தனியோ? டேய்... Chat பண்ணும் போது தேவையில்லாத விசயங்கள் வேண்டாமென்று உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கிறேன்..? நாடு இருக்கிற நிலையிலே உதுகளை வைச்சுத்தான் எல்லாம் பிடிக்கிறாங்களாம். சில சொற்களை செலக்ட் பண்ணி, பிறகு அதுகளை filter பண்ணி IPஐ வைச்சு அமத்துறாங்களாம். அதுக்கு போய் இப்படி ஏன்டா செய்கிறாய்...? ஓடு... ஓடிப்போய் chat historyஐ அழியடா..."

சத்தியமாக நான் தப்பாக எதுவும் சொன்னதாக ஞாபகம் இல்லை; அப்படிப்பட்டவனுமல்ல. திரும்பவும் அவனிடம் வியாக்கியானம் கேட்டு வாங்கிக்கட்டவும் தயாரில்லை. அதற்கும்மேலாக, அவனும் அங்கு நிற்கவில்லை. அவனுடைய பெண் நண்பியை இணையத்தில் காத்திருக்க வைத்துவிட்டு வந்திருக்கவேண்டும். அவனுக்குள் இருந்த அத்தனை கோபங்களையும் சேர்த்து என்மீது வசைமாரி பொழிந்து விட்டு அவன் போய்விட்டான்.

அவன் என்னுடைய பள்ளிக்கால நண்பன். உயர்தரத்தில் இருவரும் வெவ்வேறு துறைகளில் பயின்றாலும், ஒன்றாகவே பள்ளி சென்று படித்து விளையாடி வாழ்ந்திருக்கின்றோம். இப்போதும் கூட மாறாத அதே நட்பு, தோழமை மீதான கரிசனை எவ்விதக் குறைச்சலுமின்றி தொடர்கின்றது.

திரும்பி வந்து அவனுடனான Chat history இனை வரி தவறாது ஒவ்வொரு வரிகளாக மேய்ந்து கொண்டிருக்கின்றேன். அவன் கோபப்படுமளவுக்கு அங்கு எதுவுமே தென்படவில்லை. அது இறுதியாக இப்படி முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

Friend: I'm going to get marry soon
Me: Good luck for your suicide operation. ha... ha...

அவன்: மிக விரைவில் நான் திருமணம் செய்ய உள்ளேன்.
நான்: உங்களுடைய தற்கொலைக்கு வாழ்த்துக்கள். ஹா... ஹா...

Monday, March 9, 2009

பன்சியாய் துன்சியாய் / ஐநூறு முன்னூறு

2004 தை மாதத்தில் ஒரு நாள்... இவனைப் பொறியியலாளன் ஆக்கித்தந்து விடு என 19 வருடங்களாக ஊட்டி வளர்த்த அப்பா கட்டுப்பத்தை கம்பஸிடம் பாரம் கொடுத்து விட்டுச் சென்றார். நான்கு வருடங்களாக பொறியியலாளனாகுதல் என்றவாறு நாங்கள் செய்தவை ஏராளம். அந்த நினைவுகளில் பல என்றும் இனிமையானவை. ஆனால், ஒரு சில நிகழ்வுகள் மறக்க வேண்டியவை எனினும், அவை கற்றுத் தந்த பாடங்கள் ஏராளம்...

நட்பு, உயர்ச்சி, வெற்றி, தோல்வி... இவைகள் எனக்குத் தரிசனம் கிடைத்திருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் நரித்தனங்கள், குழிபறிப்புக்கள், புறமுதுகு குத்தல்கள் இவைகளையும் சந்தித்திருக்கின்றேன். ஆனாலும், இன்றும் என்னுடன் கூட வரும் சொந்தங்களாக பல்கலை நட்புக்களும் இருக்கின்றார்கள் என்பது பெருமை தருகின்ற விடயம். இரு வருடங்களாக பெற்றோரின் அரவணைப்பு, சகோதரங்களின் பாச உறவாடல்கள் கிடைக்காத போதிலும் இன்றும் கூடிக்குலாவி - நெஞ்சிலுள்ள சோகங்கள், ஏக்கங்களை மறந்து நான் மட்டுமல்ல - எங்களில் எல்லோரும் சிரிப்பதற்கு நாங்கள் தான் காரணம். அதையிட்டு பெருமைப்படுகின்றோம்.

பல்கலைக்கழகத்தில் - அதுவும் இறுதி வருடத்தில் விடுதி (hostel) கிடைத்த பின்னர் நாங்கள் செய்த குறும்புகள், திருகுதாளங்களை இரை மீட்கின்ற போது மீண்டுமொரு முறை அந்த நாட்கள் கிடைக்காதா என ஏக்கம் பிறக்கும்.

யுத்த அரக்கன் தனது கோரமுகத்தை மீண்டும் வெளிக்காட்டிய பின்னர் ஏ-9 கனவாகிப் போனது. பின்னர் வந்த விடுமுறைகளில் எல்லாம் தங்கள் சொந்தங்கள் தேடி
எல்லோரும் வீடுகள் சென்று விடுவார்கள். ஆனால், "அப்பி யாப்பணய (நாங்கள் யாழ்ப்பாணம்)" என்றவாறு, யாழ்ப்பாணப் பாதைக்கான வரைபடம் கீறி - ஏ-9 மூடப்பட்ட சூத்திரம் விளக்கி விடுமுறையிலும் விடுதியில் தங்க அனுமதி பெறுவதற்கு போதுமென்றாகி விடும். அப்போது தான் சிலருக்கு ஏ-9 என்றால் என்னவென்றும், யாழ்ப்பாணம் எங்கிருக்கின்றது என்றும் புரிய வைத்த பெருமை எங்களுக்குண்டு. அந்த விடுமுறை நாட்களில், இருள் போக்க ஒளிரவிடப்பட்ட மின்குமிழ்கள் அணைவதற்கு மறுநாள் காலை பதினொரு மணி தாண்டி விடும்.

விடுமுறை நாளென்றதும் எங்களில் குறிப்பாக இருவருக்கு பெரியதொரு ஆப்பு இறங்கிவிடும்.
ஒருத்தர் உயர்தரம் சித்தி பெற்றதனால் பழுத்த அரசியல்வாதியாகும் சந்தர்ப்பத்தை கோட்டைவிட்ட - நடிகரொருவரின் பெயராலேயே எப்பொழுதும் அழைக்கப்படுபவர். மற்றவர் முதல் வருடம் எங்களுடனேயே படித்து, பின்னர் கட்டுப்பத்தை நுளம்புகளுக்கு இரத்ததானம் செய்த பயனின் பேறால் ஒரு வருடம் பிந்தினாலும் பின்னாளில் எங்களுடன் விடுதியில் இணைந்திருந்தவர்.

இவர்கள் இருவரும் தான் எங்களின் சிறந்த சமையல் வீரர்கள் எனும் விருதினை பெற்றவர்கள். சிலவேளைகளில் அம்மாக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக உப்பு, புளி அளவு கேட்டாலும், மாலை நான்கு மணி தாண்டியும் மதிய சாப்பாடு கிடைக்கும் எனும் நம்பிக்கையுண்டு. அதற்காக காத்திருப்போம். வெங்காயம் வெட்டுதல், யாருக்கும் தெரியாது வாழையிலை வெட்டி வந்து கழுவுதல் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த வேலைகளைத்தான் நான் பங்கிட்டு செய்வதுண்டு.

அன்று வெசாக் தினம்... ஏ-9 மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டு நொந்தவர் தவிர எல்லோரும் வீடுகளுக்குச் சென்று விட்டனர். எஞ்சியவர்களிலும் தட்டிவானில் 'வானேறி' யாழ். சென்றவர்கள், வெள்ளவத்தைக்கு படையெடுத்தவர்கள் தவிர ஏறக்குறைய எட்டுப்பேருக்கான மதிய உணவு சமைப்பதற்கு திட்டம் தீட்டியாகிவிட்டது.

எப்போதும் போலவே அவர்கள் இருவரும்தான் சமையல்காரர்கள். ஏனையோருக்கு மிகுதி வேலைகள் பங்கிடப்பட்டு அவர்களுக்குரிய நிலைகளை பலப்படுத்த ஆணை வழங்கப்பட்டாயிற்று.

எங்களுடைய மட்டத்தின் தலைமைப் பொறுப்பை நான்கு வருடமாக காவிய அந்தக் குட்டிப்பையத் தலைவனும் நானும் இணைந்து அன்றைய நாளின் கறியை வாங்கிவர வேண்டிய கட்டளை கிடைத்தது.

திட்டமோ எப்பாடுபட்டாவது கோழிக்கறி வாங்குதல் வேண்டும். அத்துடன் பொரிப்பதற்கு நெத்தோலியும் முட்டையும் வேண்டும்.

கொல்லப்பட்ட கோழிகள் வெசாக் தினத்தன்று குளிரூட்டிகளில் தான் உறங்கவேண்டுமாம்; விற்பனை செய்தலாகாது என
சட்டம் தடைபோட எல்லாக் கடைகளிலும் கையைவிரித்தார்கள்.
போ
ட்ட திட்டம் இடைநடுவில் புஸ்வாணமாகிவிடும் அபாயம்! அந்நிலை ஏற்பட்டால் ஏற்கெனவே நீரில் ஊறிக்கொண்டிருக்கும் அரிசியை எடுத்துக் கொட்டிவிட்டு, வெள்ளவத்தைக்கு பஸ் எடுக்கவேண்டும். அது ஒரு விபரீத விளைவை ஏற்படுத்தி விடும் என்றதாலும், எங்களுக்கென ஒப்படைக்கப்பட்ட வேலையை செய்யாதவிடத்து எப்போதும், எங்கேயும், எப்பக்கத்திலும் இருந்து வரும் அவமானக் கணைகளை தாங்கவும் முடியாது.

நிலைமையை எடுத்து விளக்கியதைத் தொடர்ந்து, இப்போது கோழிக்கறி எட்டுப்பேரினது சம்மதத்துடனும் மீன்கறியாக மாற்றம் எடுத்தது. மீனைத்தேடி நானும் நண்பனும் அலைந்த போது சொய்சாபுர தொடர்மாடி அருகில் ஒருத்தன் சிக்கினான். அவன் மீன் வியாபாரியல்ல. அப்படியாயின்....? அது சொல்லமுடியாது. அவனின் உதவியுடன் மீன் விற்கும் ஒருத்தனையும் கண்டு பிடித்தாச்சு.


உயர்தரம் பரீட்சை எடுத்து விட்டு வீட்டில் இருந்த நாட்களில் மீன் வாங்கிய அனுபவம் கை கொடுக்க, நல்லது கெட்டது தெரிந்து விலைக்கான பேரம் பேசலும் ஆரம்பமாயிற்று. விலையைக் குறைப்பதற்காக நாங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற உண்மை தொட்டு பல பொய்கள் வரை - அந்த வியாபாரி நம்பும் வண்ணம் சொன்னோம். அதன் பயனாக நானூறு ரூபாய் மீன் முன்னூறு ரூபாயாக குறைந்தது. மாணவர்கள் என்றதனால் அவனுக்கு பரிவு பிறந்திருக்க வேண்டும்... கூலியின்றி வெட்டித் தருவதாகவும் ஒப்புக் கொண்டான்.

இரண்டு கிலோ மீனை வாங்கியபடி வாய் நிறைய புன்னகையுடன் ஸ்துதி (நன்றி) என்றபடி அறுநூறு ரூபாயினை அவனிடம் நீட்டினேன். அப்போது தான் வில்லங்கம் வந்தது. "மல்லி... பன்சியாய் துன்சியாய் (தம்பி... ஐநூறு முன்னூறு)" என்று அப்பாவி போல் சொன்னான் அவன். முதன் முதலில் மீன் வியாபாரி ஒருத்தனின் சொல்லாடலில் தோற்றுப் போனோம்.

அப்போது தான் புரிந்தது... கொழும்பில் ஐநூறு கிராம் மீனின் விலையைத் தான் சொல்வார்களாம்.

இனி என்ன செய்ய...? அவன் பரிவுடன் வெட்டித் தந்த மீனை திருப்பிப் பொருத்திக் கொடுக்கவா முடியும்..? அருகில் கொமர்ஷல் வங்கி இருந்தது ஆபத்துக்கு உதவிய இறைவனின் செயல்... முகத்தில் கோபம் கொப்பளிக்குமாறு பொய்யாக காட்டிய வண்ணம் ஆயிரத்து இருநூறு ரூபாவை கொடுத்து விட்டு இருகிலோ மீனுடன் நடையைக் கட்டினோம்.

Monday, March 2, 2009

தலைப்பின்றி ஒரு இடுகை

பாலாவின் 'நான் கடவுள்' முடிவினை ஏற்காத என் மனது ஏனோ slumdog millionaire படம் முழுக்க அதனுடன் கூடவே பயணிக்கின்றது. நிச்சயமாக slumdog millionaire ஒஸ்கார் வென்றது அதற்கு காரணமில்லை. பாலாவின் நாயகன் ருத்ரனையும் அவனுடைய செயல்களையும் குறைகூறிய நான், slumdog millionaire இன் Jamal எனும் பாத்திரப்படைப்பை வாழ்நாளில் தரிசிப்பதாய் உணர்கின்றேன். எம்மைச் சுற்றி நடக்கும் சில மனிதாபிமான நடவடிக்கைகள் சின்னப்பையன் Jamalகளை உருவாக்குகின்றனவா என எழுகின்ற சந்தேகங்களுக்கு நியாயம் இல்லாமல் இல்லை. ஆனாலும், எங்கள் Jamalகளும் millionaire களாக உயர்வார்கள்.
(ஒஸ்காரை வென்றெடுத்த
slumdog millionaire படம் தொடர்பான எனது எண்ண ஓட்டங்களை காலம் கை கொடுத்தால் தனிப்பதிவிடுகின்றேன்.)

* * * * *

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளுக்கு ஏதாவது கொண்டுவரும் நண்பன் இம்முறை வெறுங்கையுடன் வந்தான். கேட்டதுக்கு தயார்நிலையில் பதில் இருந்திருக்கவேண்டும். சடாரென வந்தது. "Economic crisis..." (பொருளாதார நெருக்கடி)

எதையும் வேறொன்றாக மாற்றலாமேயொழிய முற்றாக அழிக்க முடியாது. நான் படித்த இரசாயனவியல் கோட்பாடு இப்படித்தான் சொன்னது. ஆகவே, தட்டுப்பாடாகிப் போன உலக்த்தின் நிதி எங்கே போய் ஒளிந்துள்ளது? அல்லது, எப்படி வேறொன்றாக மாற்றம் கொண்டது?

விடை தெரியாத நியாயமான கேள்விகள் இவை. முதலைகள் சில தின்று ஏப்பம் விட்டிருக்க வேண்டும். இல்லையெனில், சில பிசாசுகள் பொத்தி வைத்திருக்க வேண்டும்.

* * * * *

அது சமாதான ஒப்பந்த காலம். மிக நீண்ட நாட்களின் பின்னர் சொந்தங்கள் வீடு தேடி வந்திருந்தார்கள். அப்போது நான்கு வயதான டிலக்சனும் கூடவே வந்திருந்தான்.

அப்போதெல்லாம் தாழப்பறக்கும் வானூர்திகளை நோக்கி நாங்கள் கையசைத்திருக்கின்றோம்.
அதில் பூச்சொரியும் தேவர்கள் தான் போகின்றார்கள் என எண்ணி, வீட்டு முற்றத்துக்கு ஓடி வந்து ஆர்ப்பரித்திருக்கின்றோம்.

அன்றும் எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள இராணுவ முகாமிலிருந்து
உலங்குவானூர்தியொன்று மேலெழும்புகின்றது. அக்காட்சியை டிலக்சன் ஆவல் மேலிட பார்த்து மகிழ்வான் என்று எண்ணி, ஓடிச்சென்று தூக்கிக் கொண்டுவந்து அவனுக்கு புதினம் காட்டினேன். அப்போது அவன் என்னைக் கட்டிக்கொண்டு வீறிட்டுக் கத்தினானே... அந்த அழுகை ஆயிரம் சம்மட்டிகள் ஒன்றாக என் தலையில் இறங்கியதாய் உணர்ந்தேன். குற்ற உணர்ச்சி மேலிட அவன் அன்னையின் மடியில் பத்திரமாக அவனை ஒப்படைத்தேன்.

இன்று தினமும் வெளிவருகின்ற கணக்குச் சூத்திரத்தில் அந்தப்பிஞ்சு வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணின் பரப்பளவு சுருங்கிக் கொண்டு போகின்றது.

* * * * *

"பிரணாப்பின் சுருதி மாறி விட்டது. எங்களுக்கு நல்ல காலம் பிறக்குதாம்..." பழைய கள்ளு புதுச் சிரட்டையில் தரப்படப்போவது புரிந்திருந்தும், சில வேதாள மனங்கள் திரும்பவும் முருங்கை மரம் நாடுகின்றன.

ஆனால், மிக விரைவில் அங்கு வரப்போகும் தேர்தலுக்கான அரங்குகள் திறக்கப்பட்டு விட்டன.


* * * * *

வடிவேலும், விவேக்கும் பாவப்பட்ட ஜீவன்கள்...! எத்தனையோ படங்களில் எவ்வளவு நகைச்சுவை பண்ணினாலும், அவர் ஒருத்தர் தூக்கம் கலைந்து எழுதுகின்ற அறிக்கைகள் உலகத்தரம் வாய்ந்த "ஜோக்"குகள் நிறைந்தவை.

ஐயகோ... பாசப்பிணைப்புக்களே...!
எங்கேயோ ஒரு சதி நிகழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில்
ஒஸ்காருக்காக ரஹ்மானுடன் கலைஞரும் இணைந்திருக்க வேண்டுமல்லவா?
ஒருத்தர் இசைக்காக...
மற்றவர் வசைக்காக...

You might also like