Search This Blog

Saturday, April 25, 2009

நான் விரும்பும் பெரியார் - கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி... உங்களுக்காக தனிப்பதிவிடும் எண்ணம் எனக்கிருந்ததில்லை. அதற்கு உங்கள் மீது கொண்ட பற்றும், மரியாதையும் தான் காரணம் எனக் கருதுவீர்களாயின் அதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை. உங்களினால் தமிழ் வாழ்ந்தது என்பதை விட தமிழர் வீழ்ந்தனர் என்பதை வரலாறு கல்லில் செதுக்கிய பின்னர் உங்கள் கதை எங்களுக்கு எதற்கு...?

ஆனாலும், தவிர்க்க இயலாத காரணமாய் இன்று உங்கள் ஞாபகம் என் மனதில் வந்ததன் பிரதிபலிப்பாய் இதை எழுதுகின்றேன்.

நான் தரம் ஐந்து படித்துக் கொண்டிருந்த காலம்
அது... அது வரை சில தலைப்புக்களில் பத்து வசனங்கள் எழுதியது மெதுவாக கட்டுரை எழுதுதல் எனும் பரிணாமத்துக்குள் விழுந்தது. சுயசரிதைகள் அல்லது நான் விரும்பும் பெரியார் எனும் தலைப்புக்களில் கட்டுரை எழுதுவதென்றால் நீட்டி முழக்கிடுவேன். அன்று எங்கள் வகுப்பாசிரியர் வரவில்லை. எங்கள் குழப்படியும் சத்தமும் தாங்காது பக்கத்து வகுப்பில் கற்பித்துக் கொண்ட ஆசிரியர் கட்டுரை ஒன்று எழுதுமாறு பணித்தார். முதல் நாள் வாசித்த புத்தகம் ஞாபகத்துக்கு வர நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு 'நான் விரும்பும் கருணாநிதி'.

கேட்கப்பட்ட சொற்களுக்கு மேலதிகமாக பராசக்தி வசனங்கள் எல்லாம் கோர்வையாக்கப்பட்டு எழுதப்பட்ட அந்தக்கட்டுரைக்கு 90 புள்ளிகள் கிடைத்தன. ஆனால், அன்பாக அழைத்த அந்த ஆசிரியர் சில வரலாற்றுக் கதைகளும் சொல்லிவிட்டுப் போனார். முதல் நாள் உச்சத்தில் ஏறி நின்ற கலைஞரின் புகழ் மறு நாளே எனக்குள் மண் கவ்விக் கொண்டது. கட்டுரை, வசனம், கவிதை எனும் பரப்புக்களைத் தாண்டி வரலாறு, அரசியல் எனும் பரப்புக்களில் அப்பெயரை அலசிப் பார்த்தேன். முன்னையதில் கண்ணில் மட்டும் கறுத்தக்கண்ணாடி போட்டவர் பின்னையதில் முகம் முழுவதும் கறுப்பு பூசியிருந்தார்.

இன்று அந்த ஆசிரியரின் குடும்பமும் வந்ததாக சொல்கின்றார்கள். ஆனால், எனக்கு வரலாறு சொல்லித் தந்த ஆசிரியர் மட்டும் வரவில்லையாம்...!!!

கலைஞரே... மனம் விட்டுச் சொல்லுங்கள். எங்கள் வீட்டு முற்றத்தில் கொழுந்து விட்டெரியும் தீ நாக்குகளின் தோற்றுவாய் உங்களுக்குத் தெரியாதா...? அல்லது, எரிவது எங்கள் ஊழ்வினை என்று விட்டு எட்டுச் செலவுக்கு பொருள் சேர்ப்பதுதான் உங்கள் கடமை என்றாகி விட்டதா...? எரிவது எங்கள் ஊழ்வினையாயின், நாங்கள் தலை நிமிர எண்ணியது தப்பா? நாம் தலை நிமிர்ந்தால் உங்கள் உச்சி குளிரும் என கவிதை வடிப்பீர்கள்...! ஆனால், எங்கள் தலை கொய்ய அத்தனையும் செய்து முடிப்பீர்கள்...!!!

கலைஞரே... நீங்கள் பேச்சாலும் மூச்சாலும் உச்சரித்த தமிழின் சொந்தங்கள் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பணமும் பொருளும் தான் காக்கும் என்றால், பிச்சை போட பலர் அணிவகுத்துள்ளார்கள். அவர்களிடம் மண்டியிட்டு வாங்கிக் கொள்கின்றோம். பரவாயில்லை!!! ஆனால், கெஞ்சிக் கேட்கின்றோம்... எங்கள் அவலங்களின் மேல் ஏறி நின்று உங்கள் அரசியல் நாடகங்களை மேடையேற்றாதீர்கள்.

ஒன்றா.. இரண்டா... எத்தனை தடவைகள் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டீர்கள்? போதும் நிறுத்துங்கள்... பத்திரிகை விற்பவன் மணியோசை கேட்டு அகதி முகாமிலுள்ள இளங்குருத்து ஓடி வந்து வினவுகின்றது. "அண்ணே... கறுத்தக் கண்ணாடி ஐயா இன்று என்ன ஜோக் அடிச்சிருக்கிறார்..?" என்ன செய்ய... தன் அவலம் மறந்து சிரிப்பதற்கு உங்கள் செய்தியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு...

என் பிள்ளைக்கும், மாணவனுக்கும் சொல்லிக் கொடுக்க அந்த ஆசிரியர் சொன்னவைகளுடன் இன்னும் பல என்னிடம் இருக்கின்றன. நாளை என் பிள்ளை எழுதக்கூடாது "நான் விரும்பும் பெரியார் கருணாநிதி" என...

Friday, April 17, 2009

தேர்தல்...!!! தனி ஈழ மாநிலம்...?

இலங்கையிலும், இந்தியாவிலும் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. வாக்குறுதிகள், கூட்டணிகள், கட்சித்தாவல்கள், பிரச்சார வெடிகள் பஞ்சமின்றி தாராளமாகின்றன. நம்பியிருந்த பாமர மக்கள் வாய் பிளந்து நிற்க, கூடாத கரங்கள் கூடுகின்றன; ஏணிகள் சரிய ஏறியவன் உச்சத்தில் நின்று துள்ளுகின்றான்.

இலங்கை மாகாணசபைத் தேர்தல்... என்னைப் பொறுத்தவரையில் முடிவு தீர்மானிக்கப்பட்ட ஒன்று. யானை தலையால் நடந்தால் கூட தீர்ப்பு மாறிடுமா? அலட்டிக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில், யார் ஆண்டாலும் நாம் 'அப்படியே' தான் வாழச் சபிக்கப்பட்டுள்ளோம். கடந்த கால வரலாறு கற்றுத் தருகின்ற இந்தப் பாடம் கசக்கின்றது. இனி என்ன செய்ய முடியும்...?


இந்தியத் தேர்தல்... அதிலும் குறிப்பாக ஆட்சியைத் தீர்மானிக்கும் எனப்படுகின்ற தமிழகத் தேர்தல் முன்னெப்போதுமின்றி 20 சதுர கிலோமீற்றர்(?) நிலப்பரப்பையே சுற்றி வருகின்றது. எங்களின் தலைவிதிகள் தான் சில ஆட்சிக் கதிரைகளின் மந்திரப் பெட்டிகள் போன்றதொரு உணர்வு. இது நிஜமா...? அல்லது மாயமான் தோற்றம் தானா...? அல்லது திரும்பவும் ஏறிய பின் எட்டி உதைக்கப்படும் ஏணிகளாகப் போகின்றோமா...? கடந்த கால நிகழ்வுகள் இப்படியெல்லாம் சந்தேகம் கொள்ள வைக்கின்றன.

எல்லாம் எப்போதே முடிந்து விடும் என்று எண்ணியவர்கள் இப்படிப் பொறுத்த நேரத்தில் வந்து காலை வாருவதைக் கண்டு அதிசயிக்கின்றார்கள். முடிந்திருந்தால் எஞ்சியுள்ளவர்களுக்கு எட்டுச்செலவுக்குப் பொருள் கொடுத்து எட்டுக் கோடி உறவுகளுக்கு காதில் பூச்சூட்டியிருப்பார்கள். அதுதான் முடியவில்லை. இப்போது என்ன செய்வது...? நாராயண சிதம்பர சகுனி மூளைகள் இல்லாத ஒன்றுக்காக
அதிகமாக கசக்கப்படுகின்றன.

அன்று இங்கு வந்தார்கள். போகும் போது 'போரை நிறுத்தச் சொன்னோம்' என்று சொல்லி்விட்டுத்தான் டட்டா காட்டினார்கள். கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் போர் நிற்கவில்லை...!

இன்று போரை நிறுத்தச் சொல்லி கேட்ட போது அங்கு கூப்பிட்டு ஆறுதல் சொல்கின்றார்கள்...!

அன்று வந்தது...??? இன்று கூப்பிடுவது...???
இன்னுமா நம்புகின்றீர்கள் நாங்கள் முட்டாள்களென...

தமிழக மேடையில் முகம் அறிமுகமான கதாபாத்திரங்கள்
பல ...!!! சிலருக்கு உண்மையில் எங்கள் மீது அக்கறை... சிலருக்கு கதிரைக்கு அக்கறை... இது தெளிவாகப் புரிகின்றது.

அறிக்கைகள் எங்களுக்குப் பால் வார்க்கின்றன.
ஈழத் தமிழர்... ஈழத் தமிழர்... ஈழத் தமிழர்... வரிக்கு வரி மறக்காமல் எழுதுகின்றார்கள்; ஒரு முறைக்குப் பல முறை உச்சரிக்கின்றார்கள். ஆனாலும், கேட்க முடியவில்லையே...! கேட்பதற்காக பதுங்கு குழியிலிருந்து தலை நிமிர்த்தினால் தலையின்றி முண்டம் மட்டும் கிடந்து துடிக்கின்றதே....

மனம் விட்டுச் சொல்வதானால் நம்ப முடியவில்லை. பல்லக்கில் சவாரி செய்வதற்காக பள்ளத்தில் விழுந்துள்ள எங்களுக்காக அழுகின்றீர்களா...? அல்லது தொப்புள் கொடி உறவென்று அணைக்கத் துடிக்கின்றீர்களா...? ஆனாலும், தமிழக உறவுகளே கோடி நன்றிகள் உங்களுக்கு...!!! எங்களைப் பற்றி பேசினால் தான் உங்கள் வாக்குக் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியமைக்காக... நாளையாயினும் வந்து எம்மைத் தாங்குவீர்கள் என்ற நம்பிக்கையைத் தந்ததற்காக...

அம்மா..., தாத்தாவை உசுப்பேற்றுவதில் உனக்குத்தான் எவ்வளவு அக்கறை...! ஈழத்தமிழரென நீ உச்சரித்த ஒரு சொல்லுக்காக சர்வகட்சி மாநாடு, நாடாளுமன்ற இராஜினாமா, மனித சங்கிலி... பின்னர், நீ உண்ணாது இருந்த ஒரு நாட் பொழுதுக்காக தன்னையும் தனயனையும் தாங்கிய கொடி ஊர்வலம்... இன்று தனி ஈழ மாநிலம் என்று அறிக்கை விட்டதாக ஊடகங்கள் சொல்கின்றன. நாளை ஏதாவது வார்த்தை ஜாலம் காட்டியவாறு தாத்தா நிச்சயம் வருவார்.

தனி ஈழ மாநிலம்... அதுவும் அவர்களுடன் இணைந்து ஒன்றாக இருக்க முடியாது போனால் தான் நீ ஆதரிப்பாயாம். ஊடகங்கள் இப்படிச் சொல்வது உண்மையெனில், ஒரே ஒரு கேள்வி...!!!

தமிழ் நாட்டு மாநில அரசு இந்திய மத்திய அரசை மீறி தன் விருப்புக்கு என்ன செய்தது...? எங்களுக்காக வேண்டாம்.... ஆகக் குறைந்தது மீனவ உறவுகளுக்காக...???


Monday, April 13, 2009

சம்பிரதாயத்துக்காக ஒரு வாழ்த்து

என் இனிய தமிழ் - சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆழ் மனதின் அடியிலிருந்து ஊற்றெடுத்து வந்த வாழ்த்தல்ல இது... போகும் போது எறிந்து விட்டுப் போகும் ஓர் பொருள் போன்று சம்பிரதாயத்துக்காக இங்கு போட்டு விட்டுப் போகின்றேன்.

இந்த வருடத்திலாவது சாந்தியும் சமாதானமும் பெருகட்டும், இன்பங்கள் சூழட்டும்... இப்படி கேட்பதற்கு மட்டும் இன்பம் தருகின்ற வாக்கியச் சொல்லாடல்களை - பல வருடங்கள் இரந்தும் கிடைக்காதவற்றைச் சுமந்தவாறு வாழ்த்துக்கள் சொல்ல என்னால் முடியாது. 'எல்லாம் போய்விட்டது...' என்றதொரு நிலையிலே மீண்டும் எழும்பி வருவோம் என்ற நம்பிக்கையை இழக்காத வண்ணம் தினமும் உயிர்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நிஜம்.

தொட்டுப் பார்க்க ஆசையிருக்கின்றது; ஆனால், எட்டிவிட முடியாத நிலையிலேயே வெற்றுச்சடமாக எங்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்புத்தாண்டும் அவலங்களையும் துன்பங்களையும் தவிர வேறெதுவும் தருவேன் என்ற நம்பிகையைத் தொலைத்துவிட்டுத்தான் விரோதியாக பிறப்பெடுக்கின்றது.

இன்றைய பத்திரிகைகளைப் புரட்டினால் - வானொலிகளைத் திருகினால், சாந்தி... சமாதானம்... பயங்கரவாத ஒழிப்பு... வசந்தம்... வெளிச்சம்... ஒன்றுக்கு ஆயிரம் தடவைகள் இந்தப் பதங்கள்தான் அலங்கரிக்கப் போகின்றன. ஆனால், இவைகளின் எந்த அலங்காரங்களுமின்றி - சாவை எண்ணிக்கொண்டு - பசியைப் புசித்தவாறு எங்களுக்குள்ளே எத்தனை பேர்?

இப்போதெல்லாம் சந்திக்கும் இரு முகங்கள் பேசுகின்ற மொழிகளிலிருந்து வாய்ப்பேச்சுக்கள் விலகி நிற்கி்ன்றன. பேச முடியவில்லை... எப்படிச் சுகமென்று கேட்க முடியவில்லை... மனதில் சுமந்துள்ள கவலைகளை கொட்டித் தீர்க்க ஓரிடமில்லை... இயந்திரம் பூட்டி விட்ட மனிதங்களாக சிரிக்க முடியாமல் சி்ரித்துக் கொண்டு, சந்தோஷிக்க முடியாமல் சந்தோஷம் பகிர்ந்து கொண்டு வாழப் பழகுகின்றோமா? நாளை நாமில்லாத எங்களுக்கான வாழ்க்கை இதுவாகிவிடுமா...?

Thursday, April 9, 2009

நாளை நீ வருவாய்...!

நான்கு வருடங்களின் பின்னர்

காணக்கிடைத்த சந்தோசம்

நெஞ்சை வருடுகிறது.

உன் பெயர்


அது நான் சூட்டி அழகு பார்த்தது.

உடம்பு புரட்டி

நீ தவள எத்தனித்த பொழுதொன்றில்

கருமேகம் கருக்கட்ட

திறந்திருந்தவை எல்லாம் பூட்டிக்கொண்டன.

'அண்ணா' எனச் சொல்லித்தந்து

சொல்லச்சொன்ன போது

கருவிழி உருட்டி கதை பல பேசியவன் - பின்னர்

'அண்ணா' சொன்னபோது

அருகிருந்து கேட்க

போர் என்னை விடவில்லை.

'அம்மா' சொன்னது...

தத்தி தத்தி நடை பழகியது...

முதன் முதல் உண்ட அன்னம்...

பல்லுக் கொழுக்கட்டை...

.......................................

எல்லாமே

கடித வரிகளில் தான்

காணக்கிடைத்தது எனக்கு...

பின்னொரு நாளில் - எங்கள்

ஊருக்குள்ளும் புகுந்தார்கள் என்ற போது

நீ வருவாயெனக் காத்திருந்தேன்...

வந்தார்கள் சிலர் - ஆனால்

நீ வரவில்லை...!

சுட்டெரிக்கும் வெயிலில்

குறுகிக் கொண்டிருந்த பாதையில்

நாளை நிமிர்வாயென

பிஞ்சுப் பாதம் வலிக்க வலிக்க

ஓடிக் கொண்டிருந்தாயாம்...!

அள்ளி அணைத்து முத்தமிட்டு - உன்னைத்

தோளில் ஏற்றி

காவடி சுமக்க ஆசை இருந்தும்

உனக்கும் எனக்குமிடையே

இரும்புத் திரையிட்டு விட்டு

கொக்கரிக்கின்றனர் சிலர்...

ஆனால்,

எப்படியென்று தெரியவில்லை

இன்று நீ வந்தாய்...!

மங்காத உன் அழகு வதனம்

குண்டான உன் உடம்பு

இரு பிஞ்சுக்கரங்களையும் விரித்து

'அண்ணா' எனக் கூவியபடி

குடு குடு காலால் ஓடி வந்தாய்.

உன்னை வாரி அணைத்து

உச்சி முகர்ந்த பொழுதில் தான்

அழுகின்றேன் - அது

ஓர் கனவென உணர்ந்து...

ஆனாலும்,

நாளை பொழுது விடியும்...!

நீ வருவாய்....!!!

Saturday, April 4, 2009

இன்னொரு காதலின் சின்னம் - தாஜ்மஹால்

மீண்டுமொரு காதலின் சின்னத்துக்கான பணிகள் ஆரம்பமாகிவிட்டன... இரவு பகல் பாராது கொட்டும் மழைக்கும், சுட்டெரிக்கும் வெயிலுக்கும் சோர்ந்து விடாது கட்டுமாணங்கள் எழும்ப ஆரம்பித்து விட்டன. இன்னொரு காதலின் உயிர்ப்பிற்காக இரவு நித்திரைகளை தொலைத்த வண்ணம் சிற்பி ஒருவன் உழைக்கின்றான்.

சாஜஹான் தாஜ்மஹாலின் தேவதை மும்தாஜ் போன்று இந்த தாஜ்மஹாலின் தேவதை யாரென்பது நாமறியோம். ஆனாலும், யாராயினும் ஒருத்தி இருக்கலாம் என்பதும் சந்தேகம்தான். ஆனாலும், காரணமின்றி இக்காதல் சின்னம் உயிர்ப்படையாது என்பதும் நியாயமான வாதம்தான்!

அன்புக்காதலியினை தாஜ்மஹாலாக உயிர்ப்பித்த சாஜஹான் இறுதிக்காலத்தில் சிறைக்கூடத்தின் கம்பிகள் வழியேதான் அதனைக் காணக்கிடைத்ததாக வரலாறு சொல்கின்றது. அதனால் தான் இந்த தாஜ்மஹாலின் எழுச்சி வெளியில் தெரிந்து விடாமல் பொத்தி வைக்கப்படுகின்றது போலும்.

வியாபார நோக்குடன் - இன்னொரு காதலுக்காக விற்றுக் காசு சேர்க்கும் எண்ணத்துடன் இதனைக் கட்டலாமென எண்ணியவை எல்லாம் இப்போது கேவலமான எண்ணங்களாகவே தோன்றுகின்றது. ஏனெனில், இதன் ஒவ்வொரு அடி உயர்விற்கும் சிற்பி உழைக்கின்ற உழைப்பு, அவன் தூக்கி வைக்கின்ற ஒவ்வொரு சலவைக்கல்லுக்கும் அவன் மனதுருகி செப்பும் காதல் வார்த்தைகள், பின்னணியில் தென்றல் சுமந்து வரும் காதல் சொல்லும் பாடல்கள் இவை ஒவ்வொன்றும் ஆத்மார்த்தமான காதலுக்கான கதைகளை பேசுகின்றன. ஆனாலும், காரணம் கேட்டால் அல்லது யாரந்த காதல் தேவதை என வினவினால், விடைகள் எதுவும் நம்பத்தகுந்தவையாக இல்லை. ஒன்றுக்கொன்று முட்டி மோதி முரண்பட்டு நிற்கின்றன.

சாஜஹானின் தாஜ்மஹாலின் பின்னாலும் சில சோகக்கதைகள் நிரம்பி இருக்கின்றன. சிற்பியின் தலை கூட உருண்டதாக வரலாறு ஆவணப்படுத்துகின்றது. இங்கேயும் இப்போதே சில கொடூரங்கள் மெல்ல மெல்ல முளைவிடுகின்றன. ஒடுங்கிய - ஆனால் சன அடர்த்தி மிக்க நிலப்பரப்பொன்றில் எழும்புகின்ற இந்த தாஜ்மஹாலின் பாதுகாப்புக்கென சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகிவிட்டன. அத்துமீறி நுழைவோர் சுட்டுப் பொசுக்கப்படுவார் என்ற அறிவித்தல் வேறு. அம்மையாரின் காணிக்கெதிராக வழக்குப் போட்டவர்களை அழைத்துத் தான் தீர்வுகாண வேண்டிய நிலை. ஒரு சிறு துரும்பு கூட தாஜ்மஹாலினை தொட முடியாதாம்... தொட்டால் சிரச்சேதமின்றி வேறெதுவுமில்லையாம். நள்ளிரவு தாண்டி விடிகாலை வரை தொடரும் கட்டுமாணப்பணிகளினால் நித்திரையின்றி பலர் தவிக்கின்றனர். அத்துடன் அப்பகுதியில் அர்த்தசாமம் ஐந்து மணிக்கு (அதுதான்... விடிகாலை ஐந்து) நித்திரைத்தூக்கத்தில் எழுந்து நடமாடும் சீவன்களின் கால்மிதி ஓசை கூட பயம் தருகின்றது.

இதை பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் கூட சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கின்றேன். தோளில் சிறியதொரு மூட்டையை காவிய வண்ணம் சிற்பி என் அறைக்குள் நுழைகின்றான். அதற்குள் இருப்பவை தாஜ்மஹாலிற்கான கட்டுமாணப் பொருட்கள் என்பது அவன் அப்பொதியைப் பத்திரப்படுத்தும் விதத்திலிருந்து புரிகின்றது. அத்திவாரம் இடப்பட்டு, தூண்கள் எழுப்பப்பட்டு, அலங்கார முடிகள் செதுக்கப்பட்ட நிலையிலே தாஜ்மஹால் மெல்ல மெல்ல பூரணம் பெறுகின்றது. நாளை அது எழுதப் போகும் காதலின் வலிமை வரிகளுக்காக காத்திருக்கின்றேன்...!

(நண்பன் றஜீத் அவர்களினால் 'ரெஜிபோம்' இன் உதவியுடன் கட்டி எழுப்பப்படும் தாஜ்மஹாலைப் பற்றி சொல்ல வேண்டுமென மனம் விரும்பியது. அதன் விளைவு தான் இப்பதிவு. கிகிகி....(
இச்சிரிப்புக்கான காப்புரிமையைப் பெற்று விட்ட தூயா மன்னிக்கவும் ))

You might also like