Search This Blog

Thursday, July 30, 2009

காதலும் கத்தரிக்காயும்

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..." மனது இப்படித்தான் ஆறுதல் வேண்டிக் கிடந்தது. அதில் உண்மை கூட இருந்தது. நேற்று வரை நடந்தவைகள் நகுலனுக்கு நல்லவைகளாகத் தான் இருந்தன. இன்று நடப்பதை ஏற்க மனது முரட்டுப் பிடிவாதம் பிடித்தாலும், உண்மை அதுவன்றோ....!

"அவள் சந்தோசமாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சி." உற்றுப்பார்த்தான். அவள் முகம் மலர்ந்துதான் இருந்தது. அதனால் தானோ இந்த வார்த்தைகள் இப்போது நகுலனுக்கு சுடுகின்றன. அவள் விருப்பமின்றி கூட இப்படி நடந்திருக்கலாம் அல்லவா...? வெளிநாட்டு மாப்பிள்ளை - அதுவும் "கார்ட்" கிடைத்தவன் என்றதும் அக்காளுக்கு அவன் தந்தை நடாத்தி வைத்த திருமணம் போல... "படிக்கப்போறேன்... படிக்கப்போறேன்..." என அவன் அக்கா எத்தனை தடவை கெஞ்சிப்பார்த்தாள். படித்து என்னத்தைக் கிழிக்கப்போறாய் என்ற தந்தையின் கர்ணகடூரம் கனடாவிலிருந்து வானைக்கிழித்துக் கொண்டு ஒருத்தனைக் கொண்டு வந்ததில் முடிந்தது.

"சுதந்திரி... இல்லையில்லை... கணபதி சுதந்தரி..."
பல்கலைக்கழகத்தில் தந்தை பெயரை இணைத்துச் சொல்ல வேண்டுமென்பது முதலாம் வருட விதிகளில் ஒன்று. ராகிங்கின் தொடக்கப்புள்ளியும் இதுதான். இப்படித்தான் முதலாம் வருட சுதந்தரி இரண்டாம் வருட நகுலனுக்கு அறிமுகமானாள். அம்மா பெயர், அப்பா தொழில், சகோதரங்கள் எத்தனை, என்ன செய்கிறார்கள் என்று சுபமாக ஆரம்பித்து... சீனியரில் எந்த அண்ணா வடிவு, சீனியரில் யாரைப் பிடிச்சிருக்கு, லவ்வு இருக்குதா, அது இருக்குதா, இது இருக்குதா என்ற மிரட்டல்களின் இறுதியில்..... நீ ஒவ்வொரு நாளும் என்னுடன் கதைக்க வேண்டுமென சுதந்தரிக்கு நகுலன் சொன்ன போது, அதுவரை இருந்த சீனிய ர் என்கின்ற மேலாண்மை உடைந்து சிதறி, ஒரு இறைஞ்சல் இழையோடியது. ஒரு நேரச் சாப்பாடு கேட்டு பிச்சைக்காரன் ஒருத்தன் நகுலனைக் கெஞ்சியது ஞாபகம் வந்து தொலைந்தது.



மிஸ் கோல்களினால் கூட உறவுகள் தொடரலாம் என்பதும், இரவு பதினொன்று ஐம்பத்தைந்துக்கு சிணுங்குகின்ற குட்நைட்டுக்களாலும், பின்னர் ஐந்தே ஐந்து நிமிடம் தாண்டி வரும் குட்மோர்னிங்களாலும் நலம் பேணலாம் என்பதும் ஆச்சரியமளிக்காத உண்மைகள்.

அவளுக்கு அவன் எப்போதும் 'அண்ணா'வாகவும், அவனுக்கு அவள் தங்கையாக அல்லாமல் எப்போதும் சுதந்தரியாகவும்தான் இருந்தார்கள். அவளுக்கு அவன் 'நகுலனாக' இல்லாதவரை வெளியுலகம்(த்துக்கு) மெய்ப்பித்த நட்பு வாழ்ந்துகொண்டுதான் இருந்தது.

பல்கலைக்கழக மூன்றாம் வருடத்தில் ஒருநாள் நகுலன் அடித்தளத்தை ஆராய முற்பட்டான்.
"இனிமேல் நீர் என்னை நகுலனென்றே கூப்பிடு..."
"அதெப்படி..."
"நான் சுதந்தரியென பெயர் சொல்லி கூப்பிடுகிற மாதிரி..."
"ஒரு சீனியரை எப்படி பெயர் சொல்லி கூப்பிடுறது...?"
"சீனியர்... ஜூனியர் எல்லாம் முதல்வருடத்திலேயே போய் விட்டுது..." அப்படியாயின் இது என்ன உறவென்று அவள் கேட்டிருந்தால், நகுலனுக்குப் பதில் இருந்திருக்காது. சிலவேளை அன்றே கட்டுடைந்திருக்கும்.

"எப்படியென்றாலும் வயது கூடினவைகளை நான் பெயர் சொல்லிக் கூப்பிடமாட்டன்..." முடிவாகச் சொன்னாள்.

"சரியான பிடிவாதக்காரியாக நிற்கிறாய்... உனக்கு வாறவன் என்ன பாவம் செய்தவனோ..." சொன்னவாறு ஓரக்கண்ணால் அவள் முகத்தை திருடினான். கண்ணைச் சிமிட்டி, உதடுகளைச் சுழித்து, செல்லமாகச் சிணுங்கி... அந்தளவும் அவனுக்குப் போதுமாக இருந்தது. எங்கோ ஒரு வெளி நோக்கி அவன் முகம் திரும்பியது.

எவருக்கும் தெரியாமல்... யாருக்கும் புரியாமல் வளர்ந்து விட்ட அப்பயிர் இனிக்கருகித்தான் போகுமா? சீ... அவளுக்கு கம்பஸ் முடிஞ்ச போதாவது சொல்லியிருக்க வேண்டும். யார் கண்டது... எனக்கு வெளிநாடு விருப்பமில்லை என்ற போது, தனக்கும் வெளிநாடு விருப்பம் இல்லை என்றவள்... முடிவுகள் காலத்துடன் மாறித்தான் போகின்றன.
★★★

நண்பர் ஒருத்தரின் காதல்கவிதைகளின் தாராளங்கள் தாங்க முடியவில்லை. நடந்தால், இருந்தால், நின்றால்... மழை பொழிந்தால் கூட அவருக்கு காதல் வருகின்றது.

அவரைச் சீண்டிப்பார்க்க ஆசைப்பட்டேன். அவர் எழுதிய ஒவ்வொரு வரிகளையும் நோண்டியெடுத்து என் அர்த்தம் விளக்கி ருவீட்டிக் கொண்டிருந்தேன். அவர் எரிச்சல் அடைந்திருக்க வேண்டும். அதுதானே எந்நோக்கமும்...

"காதலும்... கத்தரிக்காயும்..." அவரிடமிருந்தே வந்தது. ஆனால், நல்ல காலம் எனக்குப் பதிலாய் வரவில்லை. இன்னொருத்தர் என் பங்கையும் சேர்த்து வாங்கியிருந்தார்.

காதலுக்கும் கத்தரிக்காயுக்கும் என்ன சம்பந்தம்? எதுகை மோனை நிறுவல்களை ஏற்க முடியவில்லை. "காதலும் கதலியும்..." இங்கே எதுகை மோனைகள் விஞ்சி நிற்பதாய் உணர்கின்றேன்.

கால ஓட்டத்தில் நாம் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால், ஓரிடத்தில் கவிஞன் இப்படி எழுதி வைத்தான்.
"
காதலென்ன மாலையென்ன இந்த வேளையில்?"

இன்னும் ஓரிடத்தில் விளக்கம் இப்படி இருந்தது.
கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்தாகனும் அப்படின்னு ஒரு பழமொழி இருக்குங்க. அர்த்தம்: ஒரு விஷயத்த (காதல) ரொம்ப நாள் மூடி மறைக்க முடியாது.

சொல்வதில் உண்மை இருந்தாலும், காதலை எறிந்து பேசும் பொழுதில் தானே கத்தரிக்காயும் சேர்ந்து விடுகிறது.
★★★

லண்டன் மாப்பிள்ளை... யாழ்ப்பாணப் பொம்பிள்ளை... கல்யாணம் கொழும்பில்... மண்டபத்தை நிரப்புவதற்காகவும், ஓர்டர் கொடுத்த சாப்பாட்டுக்கு நட்டம் வராமல் இருப்பதற்காகவும் இயலுமானவரை எல்லோருக்கும் சொல்லியும் கதிரைகள் பல வெறுமையாக இருந்தன.

சபையோரின் தொட்டுக் கும்பிடுதல் முடிந்து, சுதந்தரியின் கழுத்திலே மூன்று முடிச்சுப் போடும் முகூர்த்த நேரம்... மேள தாளங்களுடன் நாதஸ்வரம் உச்சஸ்தாதியில் ஒலிக்கின்றது.

"காதலும் கத்தரிக்காயும்..." காதுக்குள் யாரோ இரைவது போன்றிருந்தது நகுலனுக்கு. ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். கடைத் தெருவுக்கு வராத கத்தரிக்காயொன்று வாடி விழுந்தது.

பிற்குறிப்பு 1: அண்மைக்காலமாக நான் ரசித்துப்படிக்கும் காதல் கவிதைகள் இங்கே.

பிற்குறிப்பு 2: காதலும் கத்தரிக்காயும் எனும் தலைப்பின் கீழ் சுவாரசியம் கலந்த பின்னூட்டங்களுடனான இடுகையொன்று சாரலில் இருந்தது. சாரலும் இடம்மாற அதையும் காணக்கிடைக்கவில்லை. அதை மீள்பதிவிடமுடியுமா?

Sunday, July 26, 2009

பதிவுலக வாக்கெடுப்புக்கள் நம்பகமானவையா???

முக்கிய குறிப்பு: நான் இதை எழுதுவதன் நோக்கம் யார் மீதும் கொண்ட காழ்ப்புணர்ச்சியாலோ அல்லது யாரையும் கொச்சைப் படுத்தும் நோக்கமோ அல்ல என்பதை தெளிவாக முதலிலே தெரிவிக்கின்றேன்.

அண்மைக்காலமாக, பதிவுலகத்திலே பல்வேறு தலைப்புக்களின் கீழ் வாக்கெடுப்புக்களை சந்திக்க வேண்டி வருகின்றது. சிறந்த பதிவாளர், சிறந்த படைப்பு என்பதை தெரிவுசெய்யும் உரிமை பதிவுலக வாசகர்களின் கடமையாகின்றது. சில தளங்கள் தங்களுக்கான ஹிட்ஸ் வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் - வாசகர்களை தங்கள் தளங்களை தேடி வரச் செய்யும் விளம்பர யுக்தியில் அவற்றை இடுகின்றன எனும் குற்றச்சாட்டு இருந்த போதிலும், சில தளங்களின் முடிவுகள் உண்மையில் ஜீரணிக்கக் கூடிய - எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளை வெளியிட்டன என்பது மகிழ்ச்சி தரக் கூடிய விடயங்கள்.

ஆனாலும், இவ்வாக்களிப்பு முறை நம்பகத்தன்மை வாய்ந்ததா? இக்கேள்விக்கான விடை "இல்லை" என்பதே ஆகும்.

நான் ஏற்கனவே இது தொடர்பாக எழுதிய ஊடகப் போரில் வாக்குப்பதிவு - கள்ள வோட்டுக்கள் எச்சரிகை எனும் தலைப்பிலான இடுகை ஒன்றில் எவ்வாறு குளறுபடிகளின் தோற்றுவாய்கள் அமைந்து விடுகின்றன என்பதை குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாக்களிப்பு முறை மூலம் விருதுகளை பெற்ற பதிவுகளையோ, பதிவர்களையோ விமர்சிக்கும் எண்ணம் எனக்கில்லை. இந்த இடுகையின் நோக்கம் அதுவுமல்ல என்பதை மீளவும் வலியுறுத்திய வண்ணம் என்னுடைய முன்னைய இடுகையினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
http://kadaleri.blogspot.com/2009/03/blog-post_5060.html

Thursday, July 23, 2009

காட்டிக் கொடுத்த 'விசா'ப்பிள்ளையார்

அவர்கள் இருவரும் என் நண்பர்கள் தான். ஆனால், அன்று என்றுமே காணாத ஒரு தோற்றத்தில் காட்சி கொடுத்தார்கள். நெற்றி நிறைய விபூதி, அதன் நடுவே பெரியதாய் ஒரு சந்தனம், சந்தனத்தின் நடுவிலே குங்குமம்... போதாக்குறைக்கு காதிலே நித்திய கல்யாணி. பக்தி முத்தி பழங்களாக நின்ற அவர்களிடம் நான் கேட்காமலே காரணத்தை சொன்னார்கள்.

யு.கே போறதுக்காக நாளைக்கு விசா அப்ளை பண்ணப் போறார்களாம். அதுதான் கோயிலுக்கு போய்விட்டு வருகிறார்கள். அவர்கள் சொன்ன அந்தக் கோயிலின் பெயர் விசாகப் பிள்ளையார் என்றுதான் கேட்டது. "விசாகம்" கடவுளுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாக இப்போதும் உணர்வதால், அப்படிக் கேட்டிருக்கலாம். அதுவரை கொழும்பில் பம்பலப்பிட்டியில் போட்டி போட்டுக்கொண்டு நிற்கும் இரு பிள்ளையார்களை மட்டும் அறிந்திருந்தேன். அங்கே தான் கோயில் கும்பிடவென போயும் வந்தேன். இன்னொரு கோயிலுக்கும் போறனான். "விஷ்ணு விலாஸ்" என செல்லமாக அழைக்கப்படும் விஷ்ணு கோவிலுக்கு ஒவ்வொரு ஞாயிறும் அன்னதானத்திற்காக...

பக்திப்பழ வேடம் தாங்கி நின்ற அந்த நண்பர்களுக்கு பின்னர் விசாவும் கிடைத்து, 2008 செப்ரம்பருக்கு முன்னதாகவே அவர்கள் இலண்டனுக்கும் போய், செப்ரம்பரில் தொடங்கும் கற்கைநெறிகளை கற்று இப்போது முடிவடையும் தறுவாயில் அவர்கள்...

ஆனால், இந்தப் பிள்ளையாரின் அருமை பெருமைகள் எனக்கு கிட்டியது 2009 ஜனவரியில் தான். இன்னொரு நண்பன்... லண்டன் விசா... பக்தி முத்திய பழமாக நின்றான்.

"விசாப்பிள்ளையாரிடம் போய் விட்டு வருகின்றேன்".

திருப்பிக்கேட்டேன். "ஓமடா...
விசாப்பிள்ளையாரிடம் போய் விட்டு வருகின்றேன்..." என்றான்.

விசாகப் பிள்ளையாருமில்லை; விசர்ப் பிள்ளையாருமில்லை... இது "விசா"ப் பிள்ளையார்.


வெள்ளவத்தை சர்வதேச புத்தர் நிலையத்துக்கு அருகாக தலம், விருட்சம், தீர்த்தம், வாகனம் அணி சேர வீற்றிருக்கின்றார் இந்த விசாப்பிள்ளையார். தலம் - வெள்ளவத்தைக் கடற்கரை வீதி, விருட்சம் - அருகிலுள்ள அரச மரம், தீர்த்தம் - கால் நனைத்து கரை புரண்டோடும் இந்து மகா சமுத்திரம், வாகனம் - அரை மணிக்கு ஒரு தடவை பவனி வரும் இலங்கைத் தொடரூந்துகள்.

நான் முன் செய்த தவப்பயனின் பேறாய், என் வதிவிடமும் விசாப்பிள்ளையாரை அண்மித்து அமைந்தது பெரும் பேறு. காரணங்களைத் தேடிய போதுதான், விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அருள் பாலிக்கும் கடவுளராய் விளங்குவதால் இவர் பெயரும் விசாப்பிள்ளையார் என வழங்கலாயிற்றாம்.

கணபதி பால் குடித்தது போன்று, சுவரிலிருந்து நீறு உதிர்வது போன்று சில கதைகளும் இவர் சார்பாக உலவுகின்றது. இங்கெல்லாம் அர்ச்சனை செய்ய நட்சத்திரத்துக்குப் பதிலாக பாஸ்போட் இலக்கம் தானாம்... அர்ச்சனைத் தொகையைப் பொறுத்து தூதரகங்களிலுள்ள உங்கள் விசாப்படிவங்களின் இடங்களும் முன்னே பின்னே மாறுகின்றதாம்... கேட்கின்ற என்னை ஏதோவென நம்பி, விசாப்பிள்ளையார் பக்தனொருத்தன் என்மேல் ஏரோப்பிளேன் ஓட்டினான்.

நாளாக நாளாக வளர்ந்து வந்த அவன் விசா விநாயகர் புகழ்மாலை தாங்க இயலவில்லை. கடுப்படைந்திருந்த நான் ஒருநாள் அவனைப்பிடித்து கேட்டேன்.

"டேய்... வெளிநாடு போறதுக்கு கோயில் கும்பிட வேணும்தான்... அதுக்காக இப்படியாடா...? போடா நீயும் உன்ர விசாப்பிள்ளையாரும்..." அவனுக்கு வேண்டுமென்றே எரிச்சல் ஊட்டுவதற்கு முயற்சித்தேன்.

அவன் கூலாக சொன்னான். "அண்ணை... நீங்கள் தான் விசர்க்கதை கதைக்கிறீங்கள்... இவர் யார் என்று தெரியுமா? ஔவையாரைத் தும்பிக்கையால் தூக்கிவைத்த பிள்ளையார் இவர்தான். கட்டாயம் என்னையும் தூக்கி லண்டனில வைப்பார் பாருங்கோவன்..."

நேற்று வந்த தொலைபேசி அழைப்பொன்றுக்கு றிசீவரை தூக்கினேன். மறுமுனையில் அவன் தான் விசாப்பிள்ளையார் பக்தன்.
"விசாப்பிள்ளையார் சாதிச்சிட்டார்.... எனக்கு விசா கிடைச்சிட்டுது"

வாழ்த்துக்கள் நண்பா...!!!

★★★

சரசம்மா... பம்பலப்பிட்டி தொடர்மாடி ஒன்றின் வாடகைக்காரி. அண்மைக்காலமாக விசாப்பிள்ளையாரின் தீவிர பக்தராக மாறி விட்டிருந்தாள். காரணம்... அதுவும் விசா தொடர்பானதுதான். லண்டன் மாநகரில் "காட்" வைத்திருக்கின்ற வரனொன்று அவள் மகளுக்கு முற்றாகியிருந்தது.

ஆனால், கொஞ்ச நாட்களாக பொடியன் வீட்டாரிடமிருந்து நல்ல சமிக்ஞைகள் எதுவும் கிடைக்கவில்லை. காலையில்
சுப்பன் சொன்ன சேதி வேறு கலக்கத்தை கொடுத்தது. பொடியன் வீட்டாரையும் பொன்னம்மாவையும் குறிப்புப் பார்க்கிற வீட்டில் ஒன்றாக கண்டதாக சொன்னான். பொன்னம்மா இவளுக்குத் தெரிந்தவள் தான். வெள்ளவத்தை தொடர்மாடிக்காரி. 25 வயதில் அவளுக்கும் மகள் இருப்பதுதான் சரசுவுக்கு பலவாறான யோசனைகளை கிழறி விட்டிருந்தது.

சரசம்மா ஆற அமர இருந்து கணக்குப் போட்டு பார்த்தாள். வெள்ளம் தலைக்கு மேலே வந்து விட்டதுக்கு பிறகு எதுவும் செய்ய முடியாது. ஒரே வழி... விசாப்பிள்ளையாரின் காலில் விழுவது தான். தினமும் மாலையில் விநாயகரை நாடியவள்... அன்றிலிருந்து காலையும் மாலையுமாக இருமுறை சென்று வணங்கினாள். கூடவே அவள் மகளும்...

அன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணி... கொளுத்தும் வெயிலில் விசாப்பிள்ளையார் முன்றலில் நால்வர் மட்டுமே... பொன்னம்மாவும், சரசம்மாவும் அவர்கள் புத்திரிகளும் மட்டுமே அங்கிருந்தார்கள். தினமும் கஸ்டப்பட்டு உடைகின்ற சரசம்மாவின் தேங்காய், அன்று மட்டும் பல நூறு துண்டுகளாக உடைந்து தெறித்தது.

இப்போதெல்லாம், பொன்னம்மாவை தினமும் விசாப்பிள்ளையார் கோயிலில் காணக்கிடைக்கின்றது. சரசம்மா சிறிது கால இடைவெளி எடுத்துக் கொள்கிறாளாம். மீண்டும் திரும்பி வருவாள் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. சுப்பனும் பாவம்... பொன்னம்மா வீட்டுப்படி ஏறி இறங்குகின்றான்.

பி.கு: விசாப்பிள்ளையார் முன்றலில் என்னையோ அல்லது என் அன்னையையோ அல்லது அத்தையையோ அல்லது ........ காணக்கிடைக்கலாம்.
தயவு செய்து அப்போது மட்டும் கல்லெறியாதீர்கள்.

Wednesday, July 22, 2009

அறு சுவை பதிவர்கள்

நண்பர் செந்தழல் ரவி அவர்களினால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்ட "சுவாரஸ்யப் பதிவர்" பட்டம் சூட்டும் படலம் இப்போது என் முறையாகிவிட்டது. என் உள்ளத்து உணர்வுகளை, என் மக்களோடு கை கோர்த்து நடந்து வந்த பாதைகளில் சந்தித்த சோதனைகளை - அரிதாக சாதித்த சாதனைகளை பதிவுகளாக்கும் நோக்கத்துடன் கடலேறி என்னும் இத்தளத்திலே ஏறி வந்தேன். உள்ளத்தில் எழுந்த சில விடயங்களை சொல்லியிருக்கின்றேன்; பல விடயங்களை சொல்ல நாவிருந்தும் சொல்ல முடியாமல் மௌனம் காத்திருக்கின்றேன். அப்போது வெளிப்பட்டுப் போகும் என் மூச்சின் வெம்மை ஆதவனையே சுட்டெரிக்கும் வல்லமையுள்ளதாய் உணர்வேன்.

என் பதிவுகளுக்கு ஊக்க மருந்துகளாக கிடைக்கின்ற பின்னூட்டங்களும் வாக்குகளும் என்னை இன்னும் இந்தப் பதிவுலகத்தில் நிலைநிறுத்தி வைத்திருக்கின்றன. இப்போது நண்பர் சுபானு அவர்களினால் எனக்கு வழங்கப்பட்ட "சுவாரஸ்ய பதிவர்
" எனும் விருது மகிழ்ச்சியளிக்கின்றது. மனமுவந்து அவர் அளித்த இந்தக் கௌரவத்தை தலைசாய்த்து வாங்கிக் கொள்கின்றேன். நன்றி நண்பரே...

இப்போது என் முறை. இவ்விருதை அறுவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டியது அன்பான அறிவுறுத்தல். பதிவுலகத்தில் அநேகமாக எல்லோருடைய பதிவுகளையும் விரும்பி வாசிப்பேன். ஆனாலும் ஒரு சில பதிவர்கள், ஒரு சில பதிவுகள் மனதை விட்டு நீங்க மறுக்கின்றன(ர்). அவ்வகையில், எனக்கு கிடைத்த இவ்விருதினை என் பதிவுலக நண்பர்கள் அறுவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றேன். அவர்களும், மறுக்காது இவ்விருதினைப் பெறுவதில் உவகையடைவார்களென உளமார நம்புகின்றேன்.

லோசன்
இலங்கையின் ஊடக, வானொலித் துறையில் பின்னிப்பிணைந்துள்ள ஒருத்தர். வானொலியாலும், வலைப்பதிவாலும் எல்லோருக்கும் பரிச்சயமான அண்ணர். என்னுடைய பதிவுலகத்திற்கு வழிகாட்டியென்று இவரை மாட்டிவிடவும் உள்ளூர ஆசை. ஆனால், இவர் ஏற்கனவே இந்த விருதைப் பெற்றது மட்டுமன்றி (சுபானுவிடமிருந்தே பெற்றார் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி), அவ்விருதுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவில் நான் விருது கொடுக்க எண்ணியவர்களில் இருவரை கண்டெடுத்து அவர்களுக்கு வழங்கியவர்.
http://www.loshan-loshan.blogspot.com

சயந்தன்
இவருடைய எழுத்துக்கள் பேசுகின்ற பொருள் கனதியானது. நாட்டு நடப்பை பற்றி சீரியஸாகவும், சில வேளைகளில் எள்ளி நகையாடியும் இவர் இடுகின்ற கட்டுரைகள், சிறுகதைகளுக்கு நான் எப்போதிருந்தோ அடிமை. அண்மையில் இவர் எழுதிய பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள், மஞ்சள் மற்றும் கறுப்புக் கயிறுகள் பற்றிய கதை எனும் பதிவுகள் எங்கள் நிகழ்கால வாழ்வின் சூனியத்தை உணர்த்தி நிற்கின்றன.
http://sajeek.com

சதீஷன்
இளம்புயல்... அறிவிப்புத்துறையில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்திருக்கும் இவர் வலையுலகிலும் அதிரடிப் பதிவுகளுக்குச் சொந்தக்காரர். வானொலி வாழ்க்கையில் மட்டுமல்ல, பதிவுலக வாழ்விலும் லோசனுடன் சேர்ந்து பயணிப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. அடிக்கடி இடுகின்ற கிரிக்கட் பதிவுகளே இதற்கு சாட்சி. ஒருபடி மேலே சென்று, திரையுலகத்துக்கு விருது வழங்கும் நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரர். http://sshathiesh.blogspot.com

நிமலபிரகாசன்
பல்கலைக்கழக மாணவன். சிறந்த கணனி அறிவியலாளி. தொழில் நுட்பம் சார்ந்தும் - சிலவேளைகளில் நக்கல் நளினங்களுடநும் இவர் இடும் பதிவுகள் பிரமாதம். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான தளங்களுக்கு சொந்தக்காரர். http://talkouttamil.blogspot.com

கரவைக்குரல்
பாடசாலைக் காலங்களிலிருந்து இவரை அறிவேன். சிறந்த பேச்சாளர். வில்லுப்பாட்டில் கொடிகட்டிப்பறந்த வானம்பாடி. இப்போது பதிவுலகத்திற்கும் புதுவரவானவர். மண்வாசனை வீசும் பதிவுகளின் சொந்தக்காரன். http://karavaikkural.blogspot.com


புல்லட் பாண்டி
அண்மைக்காலமாக பதிவுலகில் பேனாவைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருப்பவர். இசை வகுப்பு, வேலைத்தளம், ஆங்கிலத்திரைப்படம் என அரக்கப்பறக்க ஓடித்திரிகின்ற 'மனுசன்'. நகைச்சுவை சொட்ட சொட்ட இவரிடுகின்ற பதிவுகள் வாய்விட்டுச் சிரிக்க வைப்பன. http://ariyalion.blogspot.com

மீண்டுமொரு முறை நண்பர் சுபானுவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டு, விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். இனி உங்கள் முறை.... உங்கள் தெரிவாளர்களுக்கும் முன்கூட்டிய எனது வாழ்த்துக்கள். :)

Saturday, July 18, 2009

சரித்திர புருசன் நெல்சன் மண்டேலா - 02

இப்பதிவின் முதல் பகுதிக்கான சுட்டி

1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். இவர் மீது பயங்கரவாத, தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து நாசகார - சதித்திட்டங்கள் தீட்டினார் என்னும் குற்றச்சாட்டை இறுதிவரை மறுத்தே வந்தார்.

1964 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில், தன்னுடைய கரங்கள் ஆயுதத்தின் மேல் கொண்ட காதலினால்
அவற்றைத் தூக்கவில்லை எனும் தொனியில் வாக்குமூலம் வழங்கினார். அவர் கூறுகையில், இன அடக்குமுறைகளுக்கு எதிராக ஆரம்பத்திலேயே நாங்கள் ஆயுதங்களை தூக்கவில்லை. சாத்வீக வழியில் போராடினோம்... அப்படிப் போராடிய மக்கள் Sharpeville எனும் இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எங்கள் அமைப்பின் மீதும் காரணமின்றி தடை கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக வேறுவழியின்றி ஆயுதப் போராட்டமே எங்களின் தெரிவானது. ஆபிரிக்காவின் அடக்குமுறைக்குட்பட்ட சமுதாயத்துக்காக என் வாழ் நாள் பூராவும் போராடினேன். அது வெள்ளையின கொடுங்கோண்மைக்கும் எதிராகவே இருந்தது; கறுப்பின கொடுங்கோண்மைக்கும் எதிராகவே இருந்தது. என்னுடைய கொள்கையெல்லாம் இந்நாட்டில் அடக்குமுறையற்ற சமுதாயமாக மக்கள் எல்லோரும் ஒன்றாக அமைதியுடன் - சம உரிமையுடன் வாழ வேண்டும். இதற்காகவே நான் வாழ்ந்தேன்; போராடினேன். வேண்டுமானால், இதற்காக என் உயிரையும் அர்ப்பணிக்க தயங்க மாட்டேன்.

ஒரு சுதந்திர புருசனின் வாக்குமூலங்கள் இவை. சிறையில் வாடிய போதும், கொண்ட கொள்கை தவறாது தான் நேசித்த மக்களின் சுதந்திர வாழ்வே பெரிதென வலியுறுத்தினார்.


நெல்சன் மண்டேலாவின் சிறைக் கூடம் - நன்றி விக்கிபீடியா

சிறைக்கம்பிகளுக்குப் பின்னே வாழ்க்கை கழிந்த போதும் தனது அறிவுத் தேடலுக்கு மண்டேலா முற்றுப்புள்ளி இடவில்லை. சிறையிலிருந்தவாறே லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டமும் பெற்றார். 1981 இல் லண்டன் பல்கலைக்கழக வேந்தர் தெரிவில் இவரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுதப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி இடுவதாக மண்டேலா உறுதியளிக்கும் பட்சத்தில் அவரை விடுதலை செய்யமுடியும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஆலோசனை 1985 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி போதா அவர்களினால் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக மண்டேலா தனது மகளினூடாக சொன்ன செய்தி. "நிரபராதியாக நின்று சமரசம் பேசாலாமேயொழிய, குற்றவாளியாக சிறைக்கூண்டுக்குள் இருந்தவாறு உடன்படிக்கை செய்ய முடியாது" என்பதாகும்.

தொடர்ந்து வந்த 4 வருடங்கள் மண்டேலா அவர்களுக்கும், தேசிய அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த பரஸ்பர சந்திப்புக்களினதும், சமரசங்களினதும் விளைவாக 1990 பெப்ரவரி 02 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ஓர் அறிவித்தலை நாட்டு மக்களுக்கு வெளியிட்டார். அதன்படி, மிக விரைவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்படுவார் என்றும், அவரின் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தியோகபூர்வமாக நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

1962 ஆம் ஆண்டு முதல்
27 ஆண்டுகள் சிறைக்கூடமே வாழ்க்கையாக கிடந்த நெல்சன் மண்டேலா 1990 பெப்ரவரி 11 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார். இவரின் விடுதலை நிகழ்வு உலகம் பூராவும் நேரடியாக அஞ்சல் செய்யப்பட்டது. தென்னாபிரிக்காவின் இருண்ட யுகம் முடிவுக்கு வருவதற்கான ஒரு அடிகோலாக இவ்விடுதலை உலகெங்கும் பேசப்பட்டது.

சிறைக்கம்பிகளின் இடைவெளிகளினூடாக உலகை தரிசித்த இந்த உன்னத புருசன் மீண்டுமொரு முறை இவ்வுலகில் பிறப்பெடுத்ததாகவே உணர்ந்திருப்பான். பாதங்கள் சிறைப்படிகளிலிருந்து விலகி சொந்த மண்ணை தொட்ட வேளையில், அவர் ஆற்றிய உரை மிக முக்கியம் வாய்ந்தது.

"1960 இல் சாத்வீகத்தின் தோல்வி்யைத் தொடர்ந்து நாங்கள் தூக்கிய ஆயுதம் முற்றுமுழுதாக இனவெறிக்கு எதிரானது. எதற்காக ஆயுதங்கள் சுமக்கப்பட்டனவோ அத்தனை காரணங்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. மிக விரைவில் சமுதாயச் சூழ்நிலைக்கேற்ற ஒரு தீர்வு கிடைக்குமென
நாங்கள் வலுவாக நம்புகின்றோம். அப்படியாயின், ஆயுதத்துக்கான தேவையும் தானாகவே இல்லாமல் போய் விடும் " எனத் தன்னுரையில் நம்பிக்கையூட்டினார்.

உடனடியாக இதுவரை காணாமல் போயிருந்த தனது கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸுக்கு புது இரத்தம் பாய்ச்சினார். பட்டி தொட்டியெல்லாம் தனது கருத்துக்களை எடுத்துச் சென்றார். 1991 இல் நடைபெற்ற கட்சியின் முதலாவது மாநாட்டில், அக்கட்சியின் தலைமைப் பதவி இவருக்கு கிடைக்கின்றது. அத்துடன், 1993 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு இவரது சமாதான முயற்சிக்கு ஆப்பிறுக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்து விடுகின்றது.
இவரது கட்சியின் முக்கிய தலைவர் ஒருத்தர் கொல்லப்பட்டார்.
எங்கும் அச்சம்... ஆத்திரம்... கவலை. மீண்டும் ஒரு இரத்தக்களரியினை தாங்கும் வலிமை அந்த நாட்களுக்கு இருக்கவில்லை என்பதை மண்டேலா நன்காக உணர்ந்தார். அவசரப் புத்தி இதுவரை கட்டிக் காத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தின்று ஏப்பம் விட்டுவிடும். மக்கள் அனைவரையும் அமைதி காக்குமாறு அன்புடன் வேண்டினார்.

அந்தத் தலைவன் கொல்லப்பட்டு
சரியாக ஒரு வருட இறுதியில் (1994 ஏப்ரல் 27) தென்னாபிரிக்காவில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட நெல்சன் மண்டேலா அதிகப்படியான 62 வீத வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றி பெறுகின்றார்.

1994 மே 10 ஆம் திகதி... தென்னாபிரிக்க சரித்திரத்தில் மிக முக்கிய தினம். நாட்டின் முதலாவது கறுப்பினத் தலைவராக நெல்சன் மண்டேலா பதவி ஏற்றுக் கொண்டார்.


இன்று அவருக்கு தொண்ணூற்றொரு வயது. பத்து வருடங்களுக்கு முன்னர் அரசியல் வாழ்விலிருந்து நீங்கிய போதும், சமூக நடவடிக்கைகளின் பால் கொண்ட ஈர்ப்பின் காரணமாக உலக மக்கள் சமுதாயத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார். என்றைக்கும் இந்த உத்தம சரித்திர புருசனின் சேவை தடையறாது தொடர வேண்டும்.

Friday, July 17, 2009

சரித்திர புருசன் நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா... இன்று இவருக்கு தொண்ணூற்றொரு வயது. தென்னாபிரிக்க சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கின்ற போது தரித்து நின்று தரிசிக்க வேண்டியவர். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை ஜனநாயக ஆட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். சாத்வீக போராளியாக, ஆயுதப் போராட்ட தலைவனாக, தேசத்துரோகம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி, ஜனாதிபதியாக, சமாதான நோபல் பரிசின் சொந்தக்காரராக இவரின் அரசியல் பயணம் தொடர்கின்றது.

இவரின் சிறுபராயம் குத்துச் சண்டை வீரராகவே அடையாளம் காணப்பட்டது. அந்தக் குடும்பம் பெரியது. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாக 1918 இல் பிறந்தவர் தான் மண்டேலா. அந்தக் குடும்பத்திலிருந்து மண்டேலாவின் பாதங்கள் தான் முதன் முதலில் பள்ளிப்படிகளை மிதித்தது. இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பாடசாலை ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.


1948 ஆம் ஆண்டு... தென்னாபிரிக்காவின் ஆட்சி் அதிகாரங்களைப் பொறுபேற்ற அரசு அராஜக நடவடிக்கைகளை கட்டவிழ்க்கத் தொடங்கியது. இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். இவரின் தலைமையில் அரசின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன.

மண்டேலாவும் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எங்கும் மண்டேலா ஒலித்தார். விளைவு...? 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆண்டாண்டு காலமாக தொடர்கின்ற ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் முன்னால் சாத்வீகம் தோற்கின்ற போது, ஆயுதப் போராட்டமே இறுதி வழியென்பதை உணர்ந்தார். வேறுவழியின்றி காலம் அவர் கையில் ஆயுதத்தை பரிசளிக்கின்றது.

1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்ற வண்ணம் அரச, இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடாத்தினார்.

1961 டிசம்பர் 16 ஆம் திகதி இனவெறி அரச பயங்கரவாதத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடாத்தப்பட்டது. அத்தாக்குதலில் பங்கு கொண்ட போராளி ஒருத்தன் இவ்வாறு அத்தாக்குதலை ஆவணப்படுத்தினான்.
"அன்று 1961 டிசெம்பர் 16... தாக்குதலுக்கான இலக்குகளாக அரச, இராணுவ அடையாளங்களாக கருதப்பட்ட பாஸ் அலுவலகம், நீதி மன்றங்கள், தபால் அலுவலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகி கடைசி நேர சரிபார்ப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது தான் மண்டேலாவிடமிருந்து கடுமையான கட்டளை ஒன்று கிடைக்கப்பெற்றது. எக்காரணம் கொண்டும் எந்தவொரு பொது மகனும் மரணிக்கவோ அல்லது காயமடையவோ கூடாது "

ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் துப்பாக்கியிலிருந்து உமிழப்பட்ட சன்னங்கள் சிவில் மக்களை அடையாளம் காணத் தவறியிருந்தன. இனவெறிக்கு எதிரான இவரது யுத்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைச் சாட்டாக வைத்து அமெரிக்க அரசும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் உள்நுழைவதற்கான தடை ஜூலை 2008 வரை அமுலில் இருந்தது.

1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மறு வேடமணிந்து புகுந்த பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாக தொடர்ந்தது.
(தொடரும்)

(இப் பதிவின் இறுதிப்பகுதிக்கான சுட்டி)

Wednesday, July 15, 2009

நீங்கள் ஒரு ஊடகவியலாளரா...?

ஆம்... நானொரு ஊடகவியலாளன்.

இதுதான் உங்கள் பதிலாயின், Youtube இணையத்தளம் உங்களுக்காக சில டிப்ஸ்களை வழங்குகின்றது. உங்கள் வீடியோக்கள் எவ்வகையினதாக இருத்தல் வேண்டும், அது எவ்வாறு சமூகத்தினரை வந்தடைய வேண்டும் போன்ற சில தகவல்கள் குறிப்பிடப்பட்டிருகின்றன. நான் பெற்ற பயன் நீவீரும் பெறுவீராக... :)



Friday, July 10, 2009

Google Images - படங்களின் மீது முறையீடு!

கூகிள் தளத்தில் படங்களை தேடும்போது காட்சிப்படுத்தப்படும் படங்கள் விதிமுறைகளுக்கு முரணானவையாக, வன்முறைகளை தூண்டுவனவாக, பாலுணர்ச்சிகளை கிளறுவனவாக அல்லது உங்களுக்கு எரிச்சலூட்டுவனவாகக் கூட இருக்கலாம். அப்படியான படங்களை முறையிடும் வசதி இப்போது கூகிள் தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கூகிள் தளத்தில் குறிப்பிடப்பட்ட Offensive எனும் சொல் இன்னும் வரையறுக்கப்படாமலே, எந்தெந்த விதிமுறைகளை மீறிய படங்கள் மீது புகார் செய்யலாம் என்பது தெளிவாக குறிப்பிடாமலே இருக்கின்றது. நிச்சயமாக இந்த வசதி "spam" விளைவுகளை ஏற்படுத்துமாகையால் கூகிள் நிறுவனம் இது தொடர்பான தெளிவான வரையறை ஒன்றை விதிக்கும் என எதிர்பார்க்கலாம்.


அத்துடன், பாதுகாப்பு தேடலை இலகு செய்யும் முகமாக படங்களை வடிகட்டும் வசதியினையும் search box இற்கு அருகாமையாக நகர்த்தியுள்ளது.

இயல்பாகவே Moderate எனும் தெரிவினூடாக சில ஆபாசம்-வன்முறை தூண்டும் படங்களை நீக்கி பட்டியலிடப்படும் உங்கள் தேடல் பெறுபேறுகளை உங்கள் விருப்பப்படி மாற்றியும் கொள்ளலாம். பாதுகாப்பை நோக்கிய தேடல்களை மேற்கொள்ளவோ அல்லது பாதுகாப்பை இன்னும் இறுக்கமாக்கவோ முடியும். இவ்வசதியின் பயனாய், சிறுவர்கள் பயன்படுத்தும் கணனிகளில் சில வன்முறை - ஆபாச காட்சிப்படுத்தல்களை மட்டுறுத்திக் கொள்ள முடியும்.


"வயது வந்தவர்களுக்கு மட்டுமான விடயங்களை தங்கள் தேடல் பெறுபேறுகளிலிருந்து நீக்கும் வசதியினை பயனர்கள் பலர் வேண்டி நின்றனர். இப்போது, கூகிளினுடைய பாதுகாப்புடன் கூடியதான தேடல் வசதியின் மூலம் ஆபாசமான படங்களை பயனர்களின் தேடல் பெறுபேறுகளிலிருந்து நீக்க முடியும். ஆனால், இப்பொறிமுறை நூறு வீதம் திருத்தமானது என சொல்ல முடியாவிட்டாலும், பயனர்களின் தேவையினை நிறைவு செய்ய போதுமானதாக உள்ளது." என கூகிள் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Saturday, July 4, 2009

தகுதிகள்

"பாரன் ஆளை... O/L இலேயே குண்டு. என்னைக் கட்டிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு...???"
அவள் செருப்பு போட்டிருந்தால் எட்டி நின்று கதையடா என நண்பன் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தான். அவளின் செருப்பால் அடி வாங்க தவம் செய்திருக்க வேண்டும் பதில் சொல்லிவிட்டு வந்தவனுக்கு இந்த சொற்கள் சுட்டன.
"பாரன் ஆளை... O/L இலேயே குண்டு. என்னைக் கட்டிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு...???"
அவள் செருப்பை வாங்கி தனக்கு தானே முகத்தில் அறையலாம் போன்றிருந்தது.

நாணம், நிலம் நோக்கிய பார்வை, மணல் மீது சித்திரம் வரையும் கால் விரல்கள், எந்தப் பதிலுமின்றிய மௌனம்... அந்த மௌனத்தையே சம்மதமாக்கி சந்தோசப்படும் அவன் மனம்!!! அவன் எதிர்பார்த்து வந்த இவைகளில் எதுவும் துளி கூட கிட்டவில்லை.

காதல் கரம் நீட்ட தகுதி கேட்டது. காதலுக்கு இவைகள் தகுதிகளா...? அல்லது இல்லாதவைகளை இட்டு முற்றுப்புள்ளி வைக்கும் விநோதங்களா...? இவன் அண்ணனுக்கு பேசி வந்த கல்யாணத்துக்கு கிடைக்காது எனத் தெரிந்தும் அவ்வளவு சீர்வரிசை கேட்ட அப்பனின் மூளை இவனுக்குள் இப்படி சிந்தித்தது.
O/L இல் உன்னால் தானே எல்லாப் பாடத்துக்கும் கொடி(F) நாட்டினேன் என்று கூற வேண்டும் போல இருந்தது. சீச்சீ... சமய பாடம் பாஸ் பண்ண தேவாரம் கூட தெரியாதா...?இப்படி அவள் கேட்டுவிட்டால்.... அல்லது, இம்முறை எல்லாப் பாடத்திலும் பாஸ் பண்ணுறேன் என்று இப்ப சத்தியம் செய்து அது முடியாமல் போனால்...?


அவன் உடல் இறுகியது... கூடவே உள்ளமும் தான். உள்ளுக்குள் சில சபதங்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டன. எதிரெதிர் திசைகளில் இரு சைக்கிள்களும் பயணித்தன.

★ ★ ★

அவனுக்கு நானோர் பெயரிட்டால் "அகிலன்". தமிழ் மொழியில் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிவதில் ஒரு அழகுண்டு. இந்தச் சமன்பாட்டில் அவளுக்குத் தேடினால், முந்திக் கொண்டு ஞாபகம் வருகின்றது "அசின்".

அகிலன் பதினோராம் ஆண்டில் படிக்கும் போது அசின் ஒரு வகுப்பு குறைய... பத்தாம் ஆண்டு. பாடசாலை விளையாட்டுப் போட்டியில் தற்செயலாக நடந்தேறிய நிகழ்ச்சி அவளுக்கு அவனையும், அவனுக்கு அவளையும் நெருக்கமாக அறிமுகம் செய்து வைக்கின்றது. அகிலனின் வகுப்பில் பிபிசி எனும் காரணப்பெயருடன் ஒருத்தன் இருந்தான்.
தனக்கும் அசினுக்கும் ஒரு 'இது' என்றும் ஒருத்தருக்கும் சொல்லாதே என்றும் பிபிசியிடம் காரணம் கருதி அகிலன் சொல்லி வைக்க, மறுநாள் பாடசாலையில் அகிலனுக்கு வரவேற்பு பிரமாதமாக இருந்தது. "அகிலன்அசின்" கொட்டை எழுத்துக்கள் கரும்பலகையை அலங்கோலமாக்கி இருந்தன.

அதன் பின்னான நாட்கள் அகிலன் மாறியிருந்தான். வைரமுத்து அவன் தலையணைக்குள் குடியிருந்தார். தூசி பிடித்திருந்த வானொலி செய்தி கேட்க துடைக்கப்பட்டதாக அப்பாவுக்கு ஒப்புவித்தான். ஆனால், 'வானம்பாடி' அவன் உதட்டசைவுடன் கானம் இசைத்தது.

அசின் பாடசாலை புறப்படுகின்ற நேரத்துக்கு அரை மணித்தியாலம் முன்னமே இவன் கைக்கடிகாரம் அலாரம் எழுப்பியது. அவள் சைக்கிள் எந்தப் பள்ளத்துக்குள் விழுந்தும், எந்தப்பள்ளத்தை விலத்தியும் பயணிப்பதை இவன் சைக்கிளும் மனப்பாடம் செய்து கொண்டது. "என்னடி.. இவன் புற்றுக்குள்ளிருந்து வரும் பாம்பு போல அடிக்கடி எங்களை முந்துகின்றான்..." ஒரு வழிப்பயணத்தில் இவன் பலமுறை முந்துவது அவள் தோழியர்களுக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும்.

அவளிடமிருந்து ஒரு பார்வை தரிசனத்துக்காய் காத்திருந்தவனுக்கு ஒரு நாள் அது கிடைத்தது. பின்னர் ஒரு நாளுக்கு பலமுறை என்று ஏறுவரிசையானது. அவள் பார்வை இவனை நோக்கி திரும்பும் அந்தக் கணங்களில் இவன் பார்வை கரும்பலகை நோக்கியது. மற்றும் படி அந்த தேவதை தான். மனம் சிறகடித்தது. "மச்சான் பார்க்கிறாளடா... அவளுக்கும் அது தான்..."

அகிலன், அசின் எனும் நேர்கோடு முக்கோணம் ஆவதாகவும், அதுவும் அசினின் வகுப்பிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது என்றதும் பத்தாம் ஆண்டை பதினோராம் ஆண்டு துவம்சம் செய்யப் புறப்பட்டது. பாவம் அப்பாவி ஒருத்தன் கொலைப்பயமுறுத்தலை சம்பாதிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் அவள் பார்வையில் ஒரு கர்ண கடூரம் இருப்பதாய் அகிலனுக்கு ஓர் பிரமை.

நாட்கள் நகர்ந்த போது, அசின் ஒருநாள் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.
"அடியே... உனக்குப் பின்னாலே திரிகிற அகிலன் O/L இல் எல்லாப்பாடமும் ஃபெயிலாம்." ம்... அகிலன் மட்டும் தான்...!!!


★ ★ ★

அவர்களை கண்டதும் ஏனோ தெரியவில்லை, காணாத மாதிரி நழுவிச் செல்ல முயன்றான். ஆனால், அவர்கள் இவனை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

"இங்க... எங்கட அகிலன்... தம்பி டாக்குத்தர் படிப்பெல்லாம் எப்படிப் போகுது..?"

"எனக்கு படிப்பு முடிஞ்சிட்டுது அங்கிள். இப்ப வேலை செய்கிறன். நாளைக்கு பட்டமளிப்பு விழா. அதுதான் உடுப்பு எடுப்பம் என்டு வந்தன் "

"அப்படியோ... நல்லது தம்பி. அது சரி உந்தப்பிள்ளை யார்..? கண்ட முகம் மாதிரி இருக்கு "

அகிலனுக்குத் தெரியும், அவர்கள் அவளைக் கண்டிருக்க சாத்தியமே இல்லை. ஆனாலும், மறைக்காமல் சொன்னான். "இதுதான் நான் கட்டிக்கப் போற பொண்ணு..." கூடவே, "அங்கிள் நீங்க கொழும்புக்கு ஏன் " கேட்டுத் தொலைத்தான்.

"என்ர மகள் அசினுக்கு கனடாவில மாப்பிள்ளை பார்த்திருக்கு. வீட்டில சும்மா இருக்கிறாள். அதுதான் மாப்பிள்ளையிட்ட அனுப்பி விடுவம் என்று வந்தனாங்கள். கெடுபிடி தானே ... அதுதான் அவளை லொட்ஜில விட்டிட்டு மனிசியுடன் சொப்பிங் வந்தனான் "


You might also like