காலம் தன்பாட்டுக்கு அவலங்களை விதைத்தவாறு நகர்கின்றது. ஏன் எதற்கென்று கேட்பார்கள் என நாம் எண்ணியவர்கள் எல்லாம் தடியெடுத்துக் கொடுத்த சண்டியர்களாகி விட்டனர். இனி உலக யுத்தம் வேண்டாம் என்று எழுப்பிய ஸ்தாபனமும் இது உலக யுத்தமாக மாறுமுன்னரே முடித்துவிட ஆசியுரை எழுதுகின்றது. சொந்தமாக சிந்திக்கத் தெரிந்தாலும் இறையாண்மைக்கு இழுக்கின்றி மற்றொருவரின் சிந்தனைக்குள் வாழவேண்டிய கட்டாயம் நம்மில் பலருக்கு...
வானொலி நிகழ்ச்சியொன்றில் பிரபல அறிவிப்பாளர் கூறிய கதையொன்றினை இங்கு பதிவிட்டால் தப்பேதும் இல்லையென்றே எண்ணுகின்றேன்.
சிறுகச்சிறுக சேமித்தவைகளை கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தது அந்த எறும்புக்கூட்டம். திடீரென அவைகளின் வாழ்விடத்துடன் கூடிய காணி இன்னொருத்தருக்கு தாரை வார்க்கப்பட எறும்புக்கூட்டத்தின் வாழ்க்கையிலும் இன்னல் வந்தது. கண்டவன் எல்லாம் தீண்டத்தகாதது எனும்படியாக நசித்து கொலை செய்தான்; உயிரென்றும் மதிக்காமல் ஏறி மிதித்தான். வலி தாங்காது அவைகள் திருப்பிக்கடித்த பொழுதுகளில் கொலைசெய்ய பூச்சிகொல்லிகளையும் தருவித்தான்.
எறும்பின் சந்ததி அழிந்து கொண்டிருந்தது. ஆனாலும், சீண்டியவர்களைக் கடிக்க அவைகள் தவறியதில்லை. அது அவைகளின் இருப்புக்கான போராட்டமாயினும், கொலைஞன் தன்னகராதியில் அதற்கு புதுநாமம் வழங்கியவாறு காரியம் ஆற்றினான். சிலர்... இல்லையில்லை பலர் தாராளமாக பூச்சிகொல்லிகளை அனுப்பிக்கொண்டிருக்க குஞ்சு குருமன் தொடக்கம் பாட்டன் பாட்டிவரை எவரையும் விட்டு வைக்காமல் அழித்தொழிப்பு தொடர்ந்தது.
இறுதியாக எறும்புக்கூட்டம் தங்கள் இருப்புக்கு அவன் உதவுவான் என்ற நம்பிக்கையில் - இறைவனிடம் வரம் கேட்க முடிவெடுத்தன. இறைவன் இரக்கமுள்ளவன்; எங்களுக்கொரு ஆபத்தெனில் அணைப்பதற்கு கரம் நீட்டுவன்; அவனின்றி கொலைஞனின் அணுகூட அசையாது என்ற நம்பிக்கை மேலோங்க கடவுளை நோக்கி தவமியற்றின எறும்புக்கூட்டம்.
கடவுளும் மௌனம் கலைத்து வானேகி வையகம் வந்தார். இவைகள் வரம் கேட்டன "நாங்கள் கடிக்கும்போது சாவைக் கொடுப்பாயாக..!" கேட்பதெல்லாம் கொடுப்பவர்தானே கடவுள். "அப்படியே ஆகட்டும்..." என அவர் பறந்து விட்டார். எறும்புக்கூட்டத்துக்கு அளவில்லா மகிழ்ச்சி.
ஒருநாள் தொந்தரவு செய்ய முயற்சித்தவன் எறும்புக்கடிக்கு இலக்கானான்... என்ன பரிதாபம்...! கடித்த எறும்பு துடிதுடித்து இறந்தது. இறந்த எறும்பின் ஆன்மா போகும் வழியில் கடவுளைக் கண்டு கேட்டது. "இது நியாயமா..?" எல்லாம் வல்ல இறைவனும் கவிதையொன்றில் பதில் சொன்னான். "சாவைத்தான் கேட்டாய்... யாருக்கென்று கேட்டாயா...?"
(மன்னிக்க - வானொலியில் ஒலிபரப்பிய கதையிலிருந்து சில காட்சிகள் மாறுகின்றன. )
இதுதான் நான் சொல்ல வந்த கடவுளும் எறும்புக்கூட்டமும் கதை.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல 'கதை'...!
ReplyDelete// "சாவைத்தான் கேட்டாய்... யாருக்கென்று கேட்டாயா...?"
ReplyDeleteஎங்களுக்கும் இதுதானா நடக்குது??
//எங்களுக்கொரு ஆபத்தெனில் அணைப்பதற்கு கரம் நீட்டுவன்; அவனின்றி கொலைஞனின் அணுகூட அசையாது என்ற நம்பிக்கை மேலோங்க கடவுளை நோக்கி தவமியற்றின எறும்புக்கூட்டம்.
ReplyDelete“கதை“ நல்லாயிருக்கு...
// சீண்டியவர்களைக் கடிக்க அவைகள் தவறியதில்லை.
ReplyDeleteமலைபோல் துயர்வரினும் தன்னிலை காக்க தவறமாட்டாதவர்கள்..
// "சாவைத்தான் கேட்டாய்... யாருக்கென்று கேட்டாயா...?"
ReplyDeleteஎங்களுக்கும் இதுதானா நடக்குது??
:)
ம்...நல்லாத்தான் சொல்லாமற் சொல்லுறீங்கள். விதி வலியது.
ReplyDelete