Search This Blog

Thursday, February 12, 2009

ஏமாற்றம் தந்த நான் கடவுள்

சேது, நந்தா, பிதாமகன்... இவ்வரிசையில் பாலாவின் மற்றுமொரு படைப்பு நான் கடவுள். முன்னைய படங்களின் காட்சி நகர்த்தலும், அவற்றில் பாலா வலியுறுத்திய விடயங்களும் படம்பார்க்க முதலே நான் கடவுள் தொடர்பான படத்தினை மனதில் தீட்டிவிட்டன. மனித உறவு நிலைகளை கேள்விக்குட்படுத்தி, மனித மனங்களில் மிருக விம்பங்களை தெறிக்கவைத்து அதனூடு பாலா சொல்கின்ற செய்திகள் மனதுக்கு சங்கடங்களைத்தான் ஏற்படுத்துகின்றன. சிலவேளைகளில் காட்சிகள் நிஜங்களாயிருப்பினும் மனது ஏற்க மறுக்கின்ற கொடூரங்கள் நான் கடவுள் தொடர்பான திருப்தியையோ மகிழ்வையோ என்னுள் ஏற்படுத்த தவறிவிட்டது.

நாளும் காதை வந்தடைகின்ற செய்திகளின் கொடுமைகள் வார்த்தைகளுக்குள் அடங்காது. நண்பர்களுடன் கழியும் பொழுதுகள், சிலவேளைகளில் ஆலயதரிசனம் இவைகள்தான் மனதினை சாந்தம் கொள்ள வைக்கின்றன. அன்றும் நண்பர்களின் திட்டத்துக்கிணங்க நான் கடவுள் பார்க்க போகுமுன், பாலாவின் சுயரூபம் புரிந்து மனதுக்குள் ஒன்றுக்கு பலதடவை போகவேண்டுமா எனக்கேட்டும் ஈற்றில் தோற்றுத்தான் போனேன்.

பலர் பேசிக்கொள்கின்றார்கள் - எழுதுகின்றார்கள். வித்தியாசமான படம், தமிழ் சினிமாவின் திருப்பம் என... மனம் திறந்த பாராட்டுக்கள் வேறு. நந்தாவில் தாயின் அன்புக்காக ஏங்கி தாயினாலே நஞ்சூட்டிக் கொல்லப்படும் மகன், இங்கே  பிள்ளைப்பாசம் வேண்டி வரும் தாயின் அன்பை தூக்கியெறிந்துவிட்டு கடவுளின் பெயரால் கொலைகளையும் புரிகின்றான். சட்டம் கூட அவனுக்கு கட்டுப்படுகின்றது.
படம் இரு துருவங்களாக நகர்கின்றது. ஜோசியம் கேட்டு 14 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த மகன் ஆர்யா கடவுளின் உருவமாய் ருத்ரனாக வீடு வருகின்றான். மறுமுனையில் ஊனமுற்ற, மனநிலை பிறழ்ந்த உறவுகளை வைத்து பிழைக்கும் கும்பல். அவர்களில் கண் தெரியாத ஒருத்தியாக பூஜா... இரு துருவங்களும் இணைகின்ற இடங்களிலும் மனது ஏனோ திருப்தி கொள்ள மறுக்கின்றது. உடல் நலம் குன்றிய உறவுகளில் சிலர் நகைச்சுவைப்பேச்சினாலும், கலகலப்பினாலும் மனதைவிட்டு நீங்க மறுக்கின்ற போதிலும், அவர்களின் உடல் குறைகளினை வெளிச்சமிட்ட கமரா ஏனோ கூலிக்கு மேலாக வேலை செய்த உணர்வு எழுகின்றது.

ஆர்யா
, பூஜா நடிப்பினை குறை கூறவில்லை. தங்களுக்குரிய பாத்திரங்களில் ருத்ரனாகவும், பிறவிக்குருடியாகவும் வாழ்ந்திருக்கின்றார்கள். இளையராஜா மீண்டும் தானொரு இசையின் ராஜா என்பதை நீரூபித்திருக்கின்றார். பாடல்களும் சூப்பர்... ஆனால், தேடிச்சென்ற "மாதா உன் கோயிலில்..." பாடல் படத்தில் இல்லாதது ரொம்ப ஏமாற்றம்.


ருத்ரன்
புரிந்த கொலைக்கு சட்டம் தலை சாய்ப்பதும், நீதிமன்றத்தில் சட்டத்துக்கு வந்த சோதனைகளும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகள். இப்படம் உடல்நலம் குன்றியவர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஊட்டுகின்றது என வாதிடுபவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். உடல்நலம் குன்றிய உறவுகளுக்கு இப்படம் சொன்ன விமோசனம் என்ன? பிறப்பிலேயே நலிந்தவர்களாக பிறவி எடுத்து முதலாளித்துவங்களின் கிடுக்குப்பிடிக்குள் நசிந்து கொண்டிருந்தவர்கள் ஈற்றில் மலையை அசைக்கும் உரம் மிகுந்தவர்களாய் எழுந்து நின்றிருந்தால் இப்படம் சொல்லும் செய்தி கனதியானது. பூஜா கிறிஸ்தவ பெண்துறவியை சந்தித்த போது காட்சி நகர்த்தலில் நாம் வேண்டி நிற்கின்ற மாற்றம் பொய்த்துப்போய்விட மானிட நாய்களின் தாக்குதலுக்கு அவள் ஆளாகுவது கொடுமையிலும் கொடுமை.


உடல் நலம் குன்றியவர்களுக்கு நன்றியை தெரிவித்ததன் பின்னர் ஆரம்பித்து ஓடுகின்ற படத்தின் காட்சிகள் ஈற்றில் இவ்வுலகத்தில் துன்பத்தினால் அல்லற்படுகின்றவனுக்கு கிடைக்கின்ற வரம் மரணம் தான் என்று முடிவுக்கு வரும்போது - அம்மரணத்தையும் கடவுள்தான் அளிக்கின்றார் எனும் போது தியேட்டரில் எழும்பி நின்று "போடா..." என்று திட்டத் தோன்றுகின்றது. பிறப்பிலே பார்வையிழந்து, கிடைத்த குரல் வளத்தால் பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, கயவர்களின் கொடூரத்துக்கு ஆளாகி, ஈற்றிலே "காப்பாற்றுங்கோ சாமி..." என கடவுளை வேண்டிச்செல்பவள் கழுத்தினால் குருதி கொப்பளிக்க இறந்து கிடக்கின்றாள். இதற்குப் பெயர்தான் கருணைக்கொலையா...?

21 comments:

  1. என் மனதிலும் இதே எண்ணங்கள் தான் எழுந்தன.. நான் எழுத நினைத்ததை விட நீங்கள் விரிவாக,தெளிவாக சொல்லி உள்ளீர்கள்..

    படம் பல இடங்களில் இந்து மதத்தை சரியென நிறுவுவதாகவும் எனக்குப் படுகிறது.பாலாவிடம் நான் எதிர்பார்த்து இது போன்ற படம் அல்ல.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.. இந்த படம் ஒரு நல்ல முயற்சி.. ஆனால் தப்பான கருத்து .. சொல்ல வந்ததை சரியாகவும் சொல்லவில்லை.. பாலா ஏமாற்றிவிட்டார்..

    ReplyDelete
  3. Bala Solla Vandhatha Solli Irukkar. Avlo tha. Parvaiyalarkal enna solli irukkanumnu Nenaikarangalo atho soldrathukku avangale padam eduthu sollikkalam. Entha vimarsanama irundalum athu Padathoda Paathippula varathu tha. So athuleya Naan Kadavul Jeyichuruchunnu tha sollanum. Silarukku Unmai Kasakkalam so Pidikkathu. Silarukku Ilagiya manam irukkalam so Anth kodumayana katchikal paaka sakikkathu.

    Ippdi oru Vaalkai Vaalndhuttu irukkanga endru Kaati irukkar Bala Avlotha.

    ReplyDelete
  4. Nermayaana vimarsanam !

    ReplyDelete
  5. பாலாவின் கிறுக்குத்தனங்களை முதல் ஆளாக காரியக்கிறுக்கன் ரஜினி பாராட்டிவிட்டார் இதவிட வேறு என்ன நற்சான்று வேண்டும்.அது முழுக்கவும் கிறுக்கன் படம் தான் என்பதற்கு தமிழகத்தின் மிகப்பெரிய‌ லூசே சான்றளித்து விட்ட பிறகு நாம் அமைதி கொள்ளலாம்.
    நீங்கள் கூறியது போல ராஜா தான் இந்த படத்தின் நாயகன்.
    ஆனால் படத்தில் நீங்கள் இடம்பெறவில்லையே என்று வருத்தப்பட்ட அந்த‌ பாடல் மிகவும் அற்புதமான பாடல் தான்,ஆனால் அதெல்லாம் இது போன்ற உலகப்புகழ் பெறப்போகும் படத்தில் இடம் பெறுவது படத்துக்கு மைனஸ் என்பது உங்களுக்கு புரியவில்லையா :)

    உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

    ReplyDelete
  6. சாதாரணமாக படங்கள் சொல்வது ஓன்று யதார்த்தம் வேறு ஓன்று "நான் கடவுள்" சற்றே மிகைபடுத்தப்பட்ட இது யதார்த்தம் ; நீங்களும் காலப்போக்கில் யதார்த்தை புரிந்து கொள்ளலாம் என்னை ஏமாற்றவில்லை

    ReplyDelete
  7. //கயவர்களின் கொடூரத்துக்கு ஆளாகி, ஈற்றிலே "காப்பாற்றுங்கோ சாமி..." என கடவுளை வேண்டிச்செல்பவள் கழுத்தினால் குருதி கொப்பளிக்க இறந்து கிடக்கின்றாள். இதற்குப் பெயர்தான் கருணைக்கொலையா...?//
    இவர்களை போன்றவர்களை காப்பாற்ற வலியுறுத்தாமல் கொலை செய்ய சொல்லுவது... முத்துக்குமார் மரணத்தைபோல் தவறான முன்னுதாரணம் - Nithy Toronto

    ReplyDelete
  8. கடைசிலே என்ன தான்பா சொல்றீங்க.

    ReplyDelete
  9. @LOSHAN
    //என் மனதிலும் இதே எண்ணங்கள் தான் எழுந்தன.. நான் எழுத நினைத்ததை விட நீங்கள் விரிவாக,தெளிவாக சொல்லி உள்ளீர்கள்..

    உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. நான் எழுதியிருப்பினும், உங்களின் இப்படம் தொடர்பான கருத்துக்களை உங்கள் வலைப்பதிவிலும் எதிர்பார்க்கின்றேன். அது உங்கள் சிந்தனையோட்டத்திலும், எழுத்து நடையிலும் அமையும்போது நிச்சயமாக சுவாரசியம்மிக்கதாக அமையும்.

    ReplyDelete
  10. @கார்த்திகைப் பாண்டியன்
    //இந்த படம் ஒரு நல்ல முயற்சி.. ஆனால் தப்பான கருத்து .. சொல்ல வந்ததை சரியாகவும் சொல்லவில்லை.. பாலா ஏமாற்றிவிட்டார்...

    நன்றி கார்த்திகைப் பாண்டியன்.
    இப்படம் உடல் நலம் குன்றியவர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்திருக்கலாம். ஆனால், இறுதி முடிவு ஏமாற்றம் அளிக்கின்றது.

    ReplyDelete
  11. @kulir
    //Parvaiyalarkal enna solli irukkanumnu Nenaikarangalo atho soldrathukku avangale padam eduthu sollikkalam.(பார்வையாளர்கள் என்ன சொல்லி இருக்கலாமென்று நினைக்கிறாங்களோ அதை சொல்வதற்கு அவங்களே படம் எடுத்து சொல்லிக்கலாம்)
    இக்கூற்றுடன் என்னால் உடன்படமுடியாது நண்பரே. ஒரு திரைப்படத்தை ஆதரித்தும், தாக்கியும் வெவ்வேறு கோணங்களில் விமர்சனங்கள் தொடுக்கப்படுகின்றனவே. அவைகள் தப்பாகுமா?

    //Entha vimarsanama irundalum athu Padathoda Paathippula varathu tha. So athuleya Naan Kadavul Jeyichuruchunnu tha sollanum. (எந்த விமர்சனமாக இருந்தாலும் அது படத்தின் பாதிப்பால் வாறது. எனவே, அதிலேயே நான் கடவுள் ஜெஜிச்சதென்றுதான் சொல்லணும்)
    நிச்சயமாக... நான் கடவுள் படம் என்னில் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவே இப்பதிவு. அத்துடன், இப்பதிவின் நோக்கம் பாலாவிற்கோ அல்லது இப்பட உழைப்புடன் சம்பந்தப்பட்ட எவருக்குமோ கரி பூசும் நோக்கமல்ல. முக்கியமான செய்தியொன்றை சொல்ல வந்த படத்தின் முடிவுடன், காட்சியோட்டங்களுடன் என்னால் இணங்கமுடியவில்லை.

    //Silarukku Unmai Kasakkalam so Pidikkathu. Silarukku Ilagiya manam irukkalam so Anth kodumayana katchikal paaka sakikkathu. (சிலருக்கு உண்மை கசக்கலாம் எனவே பிடிக்காது. சிலருக்கு இளகிய மனம் இருக்கலாம் எனவே அந்த கொடுமையான காட்சிகள் பார்க்க சகிக்க ஏலாது)
    நண்பரே... எனக்கு உண்மைகள் கசப்பதில்லை. (மனதுக்கு வலிதரும் உண்மைகளை மௌனமாக ஏற்றுக்கொள்வேன்) ஆனால், கொடுமையான சில காட்சிகள் பிடிக்கவில்லை. அவர்களின் உடல் குறைகளினை வெளிச்சமிட்ட கமரா ஏனோ கூலிக்கு மேலாக வேலை செய்த உணர்வு எழுகின்றது.

    ReplyDelete
  12. //Nermayaana vimarsanam !
    அனானி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பெயருடன் வந்தால் நன்றாக இருக்குமே.

    @superlinks
    உங்கள் வருகைக்கு நன்றி. ரொம்ப பாதிக்கப்பட்ட ஆள் நீங்கள் தான் போல... பின்னூட்டம் காட்டிக் கொடுக்கிறது

    ReplyDelete
  13. @Ganeshananth
    //சாதாரணமாக படங்கள் சொல்வது ஓன்று யதார்த்தம் வேறு ஓன்று "நான் கடவுள்" சற்றே மிகைபடுத்தப்பட்ட இது யதார்த்தம் ; நீங்களும் காலப்போக்கில் யதார்த்தை புரிந்து கொள்ளலாம் என்னை ஏமாற்றவில்லை

    உங்களின் கருத்துக்களை கூறியுள்ளீர்கள். நன்றி...
    ஆனால், நீங்கள் சொன்ன யதார்த்தத்தை இன்று என்னால் ஏற்கமுடியவில்லை. காலம் கரைகின்ற பொழுதிகளில் கூட கொடூரங்களின் நடுவே துன்பப்படுபவனுக்கு மரணம்தான் ஒரேயொரு தீர்ப்பு என்கின்ற யதார்த்தம் வலுப்பெற்றுவிடக்கூடாது என விரும்புகின்றேன்.

    உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் கூடவே என்னுடன் கரைநாடி வருவதற்கும் நன்றிகள் சகோதரனே..

    ReplyDelete
  14. வி.சபேசன்
    //எனக்கு மட்டும்தான் அப்படித் தோன்றியதோ என்று நினைத்தேன். பரவாயில்லை, நிறையப் பேர் இருக்கின்றீர்கள். இதையும் படியுங்கள்

    உங்களின் இரு பதிவுகளையும் பார்த்தேன். வித்தியாசமான அலசல். அது தொடர்பான கருத்துக்களும் இட்டுள்ளேன்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  15. Nithy Toronto
    உங்கள் வருகைக்கு நன்றி

    @அவன்யன்
    //கடைசிலே என்ன தான்பா சொல்றீங்க
    இப்படத்தின் முடிவு ஏமாற்றம் அளிக்கின்றது

    ReplyDelete
  16. மீண்டும் வந்ததுக்கு மன்னிக்கவும்...
    நான் வடிவாக கவனித்த அளவில் பூஜா இந்த வாழ்வு பிடிக்கவில்லை எண்டு, தனக்கு மரணத்தையே வேண்டியதாக நினைக்கிறேன்.

    ReplyDelete
  17. நா இன்னும் படம் பாக்கலை...

    ReplyDelete
  18. @கார்த்தி
    // கொடுமைகளில் சிக்கி சின்னாபின்னமான பூஜா தனது வாழ்விற்கு முடிவை கொண்டுவருமாறுதானே இரஞ்சி வேண்டினார். அதற்குதானே அந்த முடிவு வழங்கப்பட்டது.

    @ஆதிரை
    //பூஜா தன்னைக் காப்பாற்றுமாறுதானே இறைவனை வேண்டுகின்றார். மரணத்தை கேட்கவில்லையே..!

    @கார்த்தி
    //நான் வடிவாக கவனித்த அளவில் பூஜா இந்த வாழ்வு பிடிக்கவில்லை எண்டு, தனக்கு மரணத்தையே வேண்டியதாக நினைக்கிறேன்.

    துன்பத்தின் உச்ச எல்லையில் அவள் மரணத்தை கேட்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், மரணம்தான் அவளுக்கு ஒரேயொரு வரமாக காட்டப்பட்டதை ஏனோ என் மனம் ஏற்க மறுக்கின்றது.

    //மற்றப்படி இயலாதவர்களை கொடுமை செய்து தான் சொகுசாக வாழ்ந்த அந்த வில்லனை வதம் புரிந்து மற்ற ஊனம் உற்றவர்களை கடவுள் காப்பாற்றினார் எண்டு நீங்கள் நினைக்ககூடாதா?
    நினைக்கின்றேன். ஆனால், அந்த வில்லனை வதம் புரிந்த பின்னர் உடல் ஊனமுற்ற உறவுகளின் வாழ்க்கை விடை கொடுக்கப்படாத ஒன்றாகத்தானே காட்டப்படுகின்றது. நாளை அவர்களுக்கும் பிறவிக்குருடியின் முடிவைத்தான் கடவுள் அளிப்பாரா?

    //இது என் சிந்தனை. அது உங்கள் சிந்தனை.....
    எது சரி??????

    என் சிந்தனை உங்களுடன் முரண்படுவதால் உங்கள் சிந்தனை பிழையாகாது. ஆக, இப்படத்தில் பாலா கூறவந்தது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது. உங்களால் அம்முடிவுடன் ஒத்துப்போக முடிகிறது.

    உங்களின் தொடர்ச்சியான வருகைகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  19. தமிழ் மதுரம்February 18, 2009 at 11:03 AM

    நல்லதொரு விமர்சன....அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  20. @கமல்
    //நல்லதொரு விமர்சன....அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நன்றி கமல்

    ReplyDelete
  21. தமிழ் மதுரம்February 22, 2009 at 4:32 PM

    புல்லட் பாண்டியின் நண்பரே! மன்னிக்கவும் ஆதிரை...சும்மா குறும்பு..அதில் ஒரு எழுத்து விடுபட்டு போயிட்டு...அது விமர்சனம் என்று வர வேணும்??/

    ReplyDelete

You might also like