இவரின் சிறுபராயம் குத்துச் சண்டை வீரராகவே அடையாளம் காணப்பட்டது. அந்தக் குடும்பம் பெரியது. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாக 1918 இல் பிறந்தவர் தான் மண்டேலா. அந்தக் குடும்பத்திலிருந்து மண்டேலாவின் பாதங்கள் தான் முதன் முதலில் பள்ளிப்படிகளை மிதித்தது. இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பாடசாலை ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.
1948 ஆம் ஆண்டு... தென்னாபிரிக்காவின் ஆட்சி் அதிகாரங்களைப் பொறுபேற்ற அரசு அராஜக நடவடிக்கைகளை கட்டவிழ்க்கத் தொடங்கியது. இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். இவரின் தலைமையில் அரசின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன.
மண்டேலாவும் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எங்கும் மண்டேலா ஒலித்தார். விளைவு...? 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஆண்டாண்டு காலமாக தொடர்கின்ற ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் முன்னால் சாத்வீகம் தோற்கின்ற போது, ஆயுதப் போராட்டமே இறுதி வழியென்பதை உணர்ந்தார். வேறுவழியின்றி காலம் அவர் கையில் ஆயுதத்தை பரிசளிக்கின்றது.
1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்ற வண்ணம் அரச, இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடாத்தினார்.
1961 டிசம்பர் 16 ஆம் திகதி இனவெறி அரச பயங்கரவாதத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடாத்தப்பட்டது. அத்தாக்குதலில் பங்கு கொண்ட போராளி ஒருத்தன் இவ்வாறு அத்தாக்குதலை ஆவணப்படுத்தினான்.
"அன்று 1961 டிசெம்பர் 16... தாக்குதலுக்கான இலக்குகளாக அரச, இராணுவ அடையாளங்களாக கருதப்பட்ட பாஸ் அலுவலகம், நீதி மன்றங்கள், தபால் அலுவலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகி கடைசி நேர சரிபார்ப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது தான் மண்டேலாவிடமிருந்து கடுமையான கட்டளை ஒன்று கிடைக்கப்பெற்றது. எக்காரணம் கொண்டும் எந்தவொரு பொது மகனும் மரணிக்கவோ அல்லது காயமடையவோ கூடாது "
ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் துப்பாக்கியிலிருந்து உமிழப்பட்ட சன்னங்கள் சிவில் மக்களை அடையாளம் காணத் தவறியிருந்தன. இனவெறிக்கு எதிரான இவரது யுத்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைச் சாட்டாக வைத்து அமெரிக்க அரசும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் உள்நுழைவதற்கான தடை ஜூலை 2008 வரை அமுலில் இருந்தது.
1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மறு வேடமணிந்து புகுந்த பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாக தொடர்ந்தது.
(தொடரும்)
(இப் பதிவின் இறுதிப்பகுதிக்கான சுட்டி)
நெல்சன் மண்டேலா உண்மையிலேயே ஒரு அற்புத மனிதர். மீண்டும் இவரைப் பற்றி அறிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. தொடருங்கள் கடலேறி...
ReplyDeleteநன்றி யாழினி.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்.
பயனுள்ள பதிவு!!
ReplyDelete