Search This Blog

Thursday, September 10, 2009

ஏறி வந்த கதை - ஒரு அஞ்சலோட்டம்

அஞ்சலோட்டம்... கல்லூரி விளையாட்டுப் போட்டியில் ஒருமுறை ஓடியிருக்கின்றேன். அதுவும் பழைய மாணவர்களுக்கான நிகழ்ச்சி. முதலில் கிடைத்த கோலை இறுதியாகச் சென்று கொடுத்த பெருமையும் என்னையே சாரும்...

அதே போல், என் பள்ளிக்கால நண்பன் கீத் தந்து விட்ட தொடர்பதிவை கரை சேர்க்க 13 நாட்கள் எடுத்திருக்கின்றேன். சில அவசரமான - காத்திரமான நாட்களுக்குள் சிக்குப்பட்டதால், இன்னமும் மீளாவிட்டாலும் இன்று என் வரலாற்றுக் கடமையை (:D) செய்யத்துணிந்துள்ளேன்.



எழுத வேண்டுமென பேனாவும் தூக்கிக் கொண்டு நான் நேரடியாக பதிவுலகத்திற்குள் தொப்பென்று குதிக்கவில்லை. நீண்ட நாள் வாசகனாக இருந்து பத்தும் பலதையும் - நல்லதையும் கெட்டதையும் - அரசியலையும் ஆன்மிகத்தையும் வாசித்திருக்கின்றேன். ஆனாலும், சாத்திரம் பார்த்ததாக ஞாபகம் இல்லை. இந்தப் பதிவுலக வாசிப்பு காதலா.கொம், Hi5 போன்ற தளங்களையும் அதற்குரிய கடவுச் சொற்களையும் மறக்கச் செய்யும் அளவுக்கு வெறி பிடித்து இருந்திருக்கின்றது.

பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ நாளொன்றுக்கு 12 மணித்தியாலம் கிடைத்த இலவச இணைய வசதி தான் பல தளங்களை அறிமுகம் செய்திருகின்றது. எப்படிப் போனேன் என்று ஞாபகம் இல்லை. இணையத்தில் மூழ்கியிருந்த வேளையில் தட்டுத்தடுமாறி என் கண்களுக்குத் தட்டுப்பட்டது... நிமல்
வைத்திருக்கும் வலைப்பதிவாக, அல்லது பகீயின் ஊரோடியாக, அல்லது சயந்தனின் சாரலாக இருக்க வேண்டும். இல்லாதுவிடின், மூன்றும் ஒரே நேரத்தில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், குறுகிய கால இடைவெளியில் முத்தளங்களையும் வாசித்து வியந்தேன். அப்படி வாசித்தவைகளில் இன்றும் முந்திக்கொண்டு ஞாபகத்துக்கு வருவது சயந்தனின் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்.

சயந்தன் சாரல் என சொந்தத் தளமொன்றுக்கு மாறினாலும் (பின்னர், அத்தள முகவரியும் மாற்றப்பட்டது. இப்போது, http://www.sajeek.com) Google இனால் இலவசமாக வழங்கப்படும் blogspot இனை நோண்டிப்பார்க்கத்தொடங்கினேன். என் பங்குக்கு கவிதைகள் என ஏதோவெல்லாம் கிறுக்கி தரவேற்றியிருந்தாலும், இன்றும் கூட அவ்வலைத்தள முகவரிகளை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஞாபகம் இருக்கின்றது.. பல்கலை இறுதி வருடத்தில் சொந்தமாக ஒரு வலைப்பூ ஆரம்பித்து, அதில் ஒரு பதிவிட்டு இணைய இணைப்பில் இருந்த கானா பிரபா அண்ணாவுக்கு அனுப்பினேன். எனக்கு முதன் முதல் பின்னூட்டிய பெருந்தகையோன் அவரே தான். ஆனால், கொடுமை என்னவென்றால்... ஒரு டிசம்பர் (2007) மாதத்தில் எழுதப்பட்ட அந்தப்பதிவும் பிரபா அண்ணாவின் பின்னூட்டமும் இப்போது என் தளத்தில் இல்லை.

என் முதல் பதிவும் நம்மைப் போன்று பல காலம் தனித்திருந்து காணாமல் போனது. சோம்பலும், நேரமும் எழுதுவதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும், இக்காலத்தில் கௌபாய் மதுவின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்ப்பூங்காவில் சில பதிவுகள் இட்டிருக்கின்றேன்.

இந்த நேரத்தில் தான் இறைமைமிக்க இலங்கைத் திருநாட்டிலிருந்து ஒருத்தர் வலைபதிய வந்தார். இவன்தானடா சிங்கம் சிக்கெனப் பிடியென... அவரின் ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டமிட்டுக் கொண்டு - என் வலைப்பதிவு ஆசையின் பரீட்சார்த்தத்தை லோஷன் அண்ணாவின் பின்னூட்டப் பெட்டிகளில் சோதித்துக் கொண்டிருந்தேன். ஆனால்... ஆனால்... அது ஒரு சனிக்கிழமை நடந்தது. பயம் துரத்த ஓடிச்சென்று என்னுடைய பயனர் கணக்கை முடக்கிவிட்டேன்.

ஆனாலும், சில நாட்களின் பின்னர் புதிதாக புதுத்தளத்துடன் நானும் எழுத வேண்டும் என்ற வைராக்கியம் மேலிட பதிவுலகத்துக்குள் வந்து சேர்ந்தேன்.

இந்தப் பதிவுலகம் எனக்குப் பல பாடங்களை சொல்லித்தந்திருக்கின்றது. சில பெறுமதியான நண்பர்களின் நட்புக்களினைப் பெற்றுத் தந்திருக்கின்றது. கடல் கடந்தும் என் நலம் விசாரிக்கும் உறவுகளைப் பெருக்கியிருக்கின்றது... இவங்கள் எல்லாம் பென்னாம் பெரிய மனுசங்கள், கிட்டக் கூட நெருங்க முடியாது என நான் எண்ணியவர்களுடன் நள்ளிரவு தாண்டியும் கும்மி அடித்துக் கொண்டிருக்கிறேன். அத்துடன், இன்னும் சிலரின் உண்மை முகங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. என்னால் தான் நடைபயின்றோம் என வாக்குமூலம் கொடுக்கும் பால்குடி, கீத் போன்றோரை எண்ணி பெருமை கொள்கின்றேன்.


எழுத்துருக்கள்
ஆரம்பத்தில் பாமினி எழுத்துக்களையே நான் பாவித்தேன். ஆனாலும்,
அம்மாவை amma என எழுதுவது பொருத்தமற்றது என வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், எனக்கு இம்முறை இலகுவானதாகப்பட்டதால் போனோட்டிக் முறைக்கு மாறி இன்றும் கூட அப்படியே எழுதுகின்றேன்.

பதிவர் சந்திப்பில் இது தொடர்பான சர்ச்சை கிளப்பப்படும் வரை இதன் "சீரியஸ்" தன்மையை நான் உணரவில்லை. துரதிஸ்டவசமாக முன்னைய பதிவுகளை நான் ஆழமாக வாசித்திருக்கவுமில்லை.

நான் எழுதும் முறையில் சொல்லின் இடையில் ஓரெழுத்து தடம் புரண்டால் அந்த எழுத்தை மட்டும் சீர்திருத்தி சொல்லின் வளம் பேணுவதில் கடினத்தன்மையை உணர்ந்திருக்கின்றேன். முற்றாக அந்தச் சொல்லை நீக்கியபின் புதிதாக எழுதுவதுதான் ஒரே வழி என்பதை பல இடங்களில் பிரயோகித்திருக்கின்றேன். பாமினி எழுத்துருவுக்கு அச்சிக்கல் இல்லையென புல்லட் சொன்னார்.

இது தொடர்பான சர்ச்சைகளுக்கோ அல்லது விவாதங்களில் மூக்கை நுழைக்கவோ எனக்கு அதிக வாசிப்புக்கள் தேவைப்படுகின்றன. தேவையான தரவுகளும், அதற்கான சுட்டிகளும் இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் உள்ளன. அதை ஆறுதலாக வாசித்தபின் என் கருத்துக்களை பதிவிடுகின்றேன் எனக் கூறி இப்போதைக்கு நழுவுகின்றேன்.

விதிமுறைகளுக்கு முரணாக பதினொருவரை விளையாட்டுக்கு அழைத்த சகோதரி சினேகிதிக்கு வன்மையான கண்டனங்களை பதிந்த வண்ணம் இவர்களை அஞ்சல் ஓட்டத்துக்கு அழைக்கின்றேன்.
டொக்டர் ஜீவராஜ் - ஜீவநதி
தர்ஷாயணீ - உறுபசி
ஹிஸாம் - உணர்வுகள்
குணா - நிழல்

19 comments:

  1. சுருக்கமாக கடலேறியை கதையை முடித்துவிட்டீர்கள். சினேகிதியின் அழைப்பால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நான் முதல் முதல் வாசித்த உங்கடை பதிவு மீன் வாங்கப்போன கதை என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  2. ஏறி வந்ததுக்கு வாழ்த்தக்கள்.

    //இன்று என் வரலாற்றுக் கடமையை (:D) செய்யத்துணிந்துள்ளேன்.//

    வரலாற்றில் உங்கள் பெயர் இருக்கும்...

    ReplyDelete
  3. முத்தளங்களையும் வாசித்து வியந்தேன்//

    இதென்ன முப்பழங்கள் மாதிரி... :)

    நான் ஆதிரை ஒரு பெண் என்றுதான் நிறைய நாளாக யோசித்தேன். நல்லவேளையாக வழமையாச் செய்யிறமாதிரி நீங்கள் அற்புதமாக எழுதுகிறீர்கள். அப்பிடியே எழுத்து உருகி வழிகிறதென்றெல்லாம் எடுத்துவிடவில்லை. :)

    மிகமுக்கியமாக நீங்கள் இலங்கையென்பதும் லேட் ஆகத்தான் தெரிந்தது.

    ReplyDelete
  4. ///என் பள்ளிக்கால நண்பன் கீத் தந்து விட்ட தொடர்பதிவை கரை சேர்க்க///
    இது அளாப்பல்... சாட்டோட சாட்டா ஒரு வயதைக் குறைச்சிட்டார் ஆதிரை அண்ணை :D

    பதிவெழுத வந்த கதையை தெளிவாயும் சுருக்கமாயும் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள் அண்ணா.. நல்லா இருக்கு

    பள்ளிக்கூடக் காலத்தில Prefects எண்டால் அடி உதை அப்பிடித்தான் போகும். ஒரு மிதப்பு இருக்கும் அதெல்லாம் இல்லாமல் ஒவ்வொரு பட்சில ஒவ்வொரு நல்ல சீவன் இருக்கும். ஹாட்லிக்கு வந்த தொடக்கத்தில வாணிமுகுந்தன், ஜோசப் ஆக்களின்ர பட்சில ஜேம்ஸ் அண்ணா (பாட்டெல்லாம் பாடுவார்) பிறகு எஸ். ஆர், அடுத்த பட்சில ஜனகன் அண்ணா, தினேஷ் அண்ணா, சு. சுதாகர் அண்ணா (TS எங்கட ஊர் எண்டபடியால் எனக்கு அடி விழாது) வரிசையில் உங்கட பட்சில நீங்கள், நிசாந்தன், பாலமுரளியின்ர அண்ணா (கொமேர்ஸ்) படிச்சவர் இருந்தீர்கள். அந்த அஞ்சலை (அடிக்காத அண்ணைமார்) நான், பால்குடி, செந்தில், பகீ, செந்தூர், தர்ஷன் அடுத்த பட்சில் சுமந்ததாக ஞாபகம்.இப்ப அஞ்சலை வளம் மாத்தித் தந்திருக்கிறம் அவ்வளவுதான்

    ReplyDelete
  5. வரலாற்றில் அழியா இடம்பிடிக்கப் போகும் இந்த பதிவில் நான் வைத்திருக்கும் வலைப்பதிவைப் பற்றியும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி...!

    ReplyDelete
  6. என்ன கொடுமையிது :) வந்தியண்ணா நாலுபேரை அழைக்க வேணும் ஆனால் 3 பேருக்கும் அழைப்பைத் தெரியப்படுத்த வேண்டும் என்டு எழுதியிருந்தார் :))

    நான் வந்தியண்ணாட்ட கேட்டுத்தான் 11 பேரை அழைச்சனான் இப்பிடி எல்லாரும் வரிஞ்சு கட்டிக்கொண்டு எனக்கு கண்டனம் தெரிவிச்சால் அப்புறம் நான் அழுதிடுவன் சொல்லிட்டன்.

    சயந்தன் அண்ணாக்கு அநேகமா இலங்கைப் பதிவர்கள் எல்லாரையும் தெரிஞ்சிருக்கு. ஆனால் அவர் எனக்கு உங்கள் ஒருத்தற்ற வலைப்பதிவு இணைப்பையும் தரேல்ல. அதை வன்மையாக் கண்டிக்கிறன். சந்திப்புக்கு 80 பேர் வந்த பிறகுதான் தெரிஞ்சது இவ்வளவு பேர் எழுதிறீங்கள் என்டு. இப்பத்தான் ஒவ்வொருதற்றா பதிவா வாசிக்கிறன்.

    ReplyDelete
  7. @வந்தியத்தேவன்

    //சுருக்கமாக கடலேறியை கதையை முடித்துவிட்டீர்கள்.

    உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அங்கிள்.


    //சினேகிதியின் அழைப்பால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

    பாரன் ஆளை... அனுமதி கொடுத்தது நீங்கள் தானே...


    //நான் முதல் முதல் வாசித்த உங்கடை பதிவு மீன் வாங்கப்போன கதை என நினைக்கின்றேன்.

    ம்ம்ம்... அப்பதிவில் தான் எனக்கு நீங்கள் பின்னூட்ட வந்தியானீர்கள்...

    ReplyDelete
  8. @யோ வாய்ஸ் (யோகா)

    //ஏறி வந்ததுக்கு வாழ்த்தக்கள்.

    நன்றிகள் சகோதரா...


    //வரலாற்றில் உங்கள் பெயர் இருக்கும்...

    மூத்த பிரபல பதிவர்களின் பெயரில் இப்போது தானே வீதிகள் அமைக்கப்படுகின்றன. அவர்களின் வயதுகளை எட்டிப்பிடிக்க எனக்கு இன்னும் ஒரு 35 வருடங்கள் காத்திருக்க வேண்டுமல்லோ

    ReplyDelete
  9. @சயந்தன்

    //நான் ஆதிரை ஒரு பெண் என்றுதான் நிறைய நாளாக யோசித்தேன். நல்லவேளையாக வழமையாச் செய்யிறமாதிரி நீங்கள் அற்புதமாக எழுதுகிறீர்கள். அப்பிடியே எழுத்து உருகி வழிகிறதென்றெல்லாம் எடுத்துவிடவில்லை. :)

    என்னைப் பெண்ணென்று எண்ணி நீங்கள் அனுப்பிய கவிதைகளைத் தொலைத்துவிட்டேன்... கவலைப்பட வேண்டாம்.

    ReplyDelete
  10. @கீத்

    //இது அளாப்பல்... சாட்டோட சாட்டா ஒரு வயதைக் குறைச்சிட்டார் ஆதிரை அண்ணை :D


    நட்புக்கு வயது ஏது தோழா...:)
    இது எப்பூடி...?


    //பதிவெழுத வந்த கதையை தெளிவாயும் சுருக்கமாயும் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள் அண்ணா.. நல்லா இருக்கு

    நன்றி தம்பி...

    இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த அஞ்சலோட்டத்தில் கடைசியாக வந்தது கவலையில்லை. "இவர்தானடா எங்களின்ர வகுப்பை அதிபரிட்ட மாட்டிவிட்டவர்" என்று ஒருத்தன் கத்தினானே...

    ReplyDelete
  11. @நிமல்-NiMaL

    //வரலாற்றில் அழியா இடம்பிடிக்கப் போகும் இந்த பதிவில் நான் வைத்திருக்கும் வலைப்பதிவைப் பற்றியும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி...!

    கவனம்... காலாவதியாகி விடப்போகிறது...:)
    வருகைக்கு நன்றி நிமல்.

    ReplyDelete
  12. சினேகிதி,

    நீங்கள் என் தளத்துக்கு வருவது இதுதான் முதல் தடவையாயினும், உங்களின் தத்தக்க பித்தக்க வின் நெடுநாள் வாசகன் நான். அதன் அடையாளமாய், உங்கள் நண்பியொருத்தி தொடர்பாக நீங்கள் எழுதிய பதிவொன்றில் ஆதிரை எனும் பெயரில் கருத்துக்களை எழுதியதும் நானே. அந்தக் கணக்குத்தான் என்னால் முடக்கப்பட்ட கணக்கு. இப்போதும், அந்தக் கருத்துக்கள் உங்கள் தளத்தில் இருக்கின்றன என எண்ணுகின்றேன்.

    ReplyDelete
  13. //Kiruthikan Kumarasamy
    இது அளாப்பல்... சாட்டோட சாட்டா ஒரு வயதைக் குறைச்சிட்டார் ஆதிரை அண்ணை :ட்//

    ஓமடா கீத் இவன் ஆதிரை அடிக்கடி வயதைக் குறைக்கிறான் பொடியன் எனக்கு 2 வயது குறைந்தவன் என ஒரு மரியாதை கொடுத்தால் என்னை அங்கிள் என்கிறான். என்ன செய்வது எல்லோருக்கும் இளமையாக இருக்க ஆசை.

    //பள்ளிக்கூடக் காலத்தில Prefects எண்டால் அடி உதை அப்பிடித்தான் போகும். ஒரு மிதப்பு இருக்கும் அதெல்லாம் இல்லாமல் ஒவ்வொரு பட்சில ஒவ்வொரு நல்ல சீவன் இருக்கும்//

    எங்கடை காலத்திலை ஒருதன் இருந்தவன் பெரிய ரவுடி, ஆனாலும் நாங்கள் அவருக்குப் பயப்படுவதில்லை. குறூப்பாக சேர்ந்து அடிக்கபிளான் போட்ட நாங்கள் ஆள் தப்பிவிட்டது. ஆனால் ராதன் அண்ணா, ஆதித்தன் அண்ணா, மணி அண்ணா, நக்கீரன் அண்ணா, குலா அண்ணா எல்லோரும் நல்லவர்கள், ராதன் அண்ணாவைப் பார்த்துதான் நேரம் தவறாமை பழகியது. ஆதிரையைப் பார்த்தபோதே அறிந்துகொள்ள முடிந்தது அவரும் ஒரு ப்ரிபெக்ட் தான் என.

    ReplyDelete
  14. @வந்தியத்தேவன்

    //பொடியன் எனக்கு 2 வயது குறைந்தவன் என ஒரு மரியாதை கொடுத்தால்...

    கீத்... உது உங்களுக்குத் தேவையா? இதைவிட நான் சொன்னது கொஞ்சமாவது சகித்திருக்கலாம் அல்லவா?


    //ஆதிரையைப் பார்த்தபோதே அறிந்துகொள்ள முடிந்தது அவரும் ஒரு ப்ரிபெக்ட் தான் என.

    ஓம்... பார்த்ததும் சொல்வதற்கு நீங்கள் சாத்திரியார் தானே...

    ReplyDelete
  15. ஆதிரைப் பாணி சுயசரிதை?
    அருமையான வார்த்தைகளின் அளவான அழகான பிரயோகம்..


    //ஆனால்... அது ஒரு சனிக்கிழமை நடந்தது. பயம் துரத்த ஓடிச்சென்று என்னுடைய பயனர் கணக்கை முடக்கிவிட்டேன்.
    //

    சிங்கம் பலரது வாழ்க்கைக்கு பயம் கொடுத்திருக்கு என்று தெரியுது..

    நானும் ஆதிரையை முதலில் பெண் என்று நினைத்து ஏமாந்தவன்.. பின்னர் எழுத்து பார்த்து தெரிந்து கொண்டேன். (என் மனைவி நீண்ட காலம் சந்தேகம் கொண்டிருந்தாள்.. ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டம் வந்ததால் ;))

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் அண்ணா, உங்களின் பதிவுகளைத் தொடர்ந்தும் சீரான இடைவெளியில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  17. "அஞ்சலோட்டம்... கல்லூரி விளையாட்டுப் போட்டியில் ஒருமுறை ஓடியிருக்கின்றேன்"

    தாங்கள் ஓடியதாக ஞாபகம் இல்லையே

    ReplyDelete
  18. என்னைப்பெண்ணென்று நினைத்து நீங்கள் அனுப்பிய கவிதைகளை//

    தயவு செய்து அந்தக் கவிதைகளை நான் சொல்லுகின்ற இரண்டு மூன்று பதிவர்களுக்கு forward செய்ய முடியுமா..?

    அப்படியே லோசன் எழுதிய கவிதைகளை எனக்கு காட்டமுடியுமா..
    நானோ லோசனோ நல்லா கவிதை எழுதுகிறோம் என நீங்கள் நினைக்கிறீர்கள் :)

    ReplyDelete
  19. அழைப்பிற்கு நன்றி ஆதிரை.

    ReplyDelete

You might also like