Search This Blog

Sunday, February 21, 2010

2010 பொதுத்தேர்தலும் தமிழ்க்கூட்டமைப்பும்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து அது தொடர்பான சர்ச்சைகளும், விமர்சனங்களும் அடங்கும் முன்னரே இன்னொரு தேர்தலுக்கு நாடு ஆயத்தமாகி விட்டது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி வசம் குவிந்து இருந்தாலும், நாடாளுமன்றுக்கான 225 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், வழக்கம் போலவே பல்டிகள், பேரம் பேசல்கள், தாவல்கள், குழிபறிப்புக்களும் உச்சக்கட்ட நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கின்றன.

சபிக்கப்பட்ட இனமாக - நிர்க்கதி நிலையிலுள்ள தமிழினம் இத்தேர்தலில் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் உலகிற்கு ஓர் செய்தியை உரத்துச் சொல்ல வேண்டுமென்ற வழக்கம் போன்ற கோசங்களை புத்திஜீவிகள் எழுப்பத் தொடங்கிவிட்டனர். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் நித்திரை போன்று நடிக்கும் உலகிற்கு எத்தனை தடவைகள் உறைக்கச் சொல்வது...? ஆனாலும், மக்கள் பிரதிநிதித்துவம் கைநழுவிப் போவதைத் தடுக்கவேணும், வாக்களிக்க வேண்டிய நிலைமை - கட்டாயம் ஒவ்வொரு ஈழத் தமிழன் தலையிலும் கட்டப்பட்டுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் இருபத்திரண்டு தமிழ்க்கூட்டமைப்பு உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்த தமிழ்மக்கள் இப்பொதுத்தேர்தலில் என்ன செய்யப் போகின்றார்கள்...? என்ன சொல்லப் போகின்றார்கள்...?


ஆண்டவன் வந்து தலையால் நடந்தாலும் கூட இந்த இருபத்திரண்டு என்கின்ற வடக்கு கிழக்கின் அறுதிப் பெரும்பான்மை இப்பொதுத்தேர்தல் முடிவுகளில் தமிழ்க்கூட்டமைப்புக்கு கிடையாது என்பது மட்டும் உறுதி. தமிழ்மக்களின் தாயகப்பிரதேசங்களில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெறப்பட்ட முடிவுகளின் பின்னர் ஒரு சில கட்சிகளின் அத்திவாரங்கள் ஆட்டம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தங்கள் இருப்பினை இப்பொதுத்தேர்தலில் உறுதிப்படுத்த முயலலாம். அது மட்டுமன்றி, தமிழ்க்கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள குத்துவெட்டுக்களும் கணிசமான வாக்குப் பிரிப்பினை ஏற்படுத்தப் போகின்றன.

இனி எவர் முயற்சித்தாலும் தமிழ்க்கூட்டமைப்புக்குள் உண்டான சிதறல்களை பொருத்தி அழகுபார்க்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது. அத்துடன் கூட்டமைப்புக்குள் இருந்து புடுங்கி எறியப்படும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இலகுவாகப் பட்டியலிட முடியும் என்ற நிலை.

கடந்த தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட, மாவட்ட முதன்மை வேட்பாளர்களாக போட்டியிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் தட்டுத்தடுமாறி ஆசனங்களைப் பிடித்தனர். இந்நிலைமை எதிர்வரும் தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கலாம். ஆனால் இத்தடவை வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் வெற்றுக் கோசங்களினால் ஏமாற்றாத, கண்ணியமான, பொறுப்புணர்ந்த, உண்மையான, கல்வியியலாளர்கள் என கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தர் அவர்கள் தருகின்ற உறுதிமொழிச் சான்றிதழ் உண்மையானால் நல்லதே....!!! வெற்றுக் கோஷங்கள் வலிகளை விதைத்ததே தவிர... வழிகளைக் காட்டவில்லை!!!

தயாரிக்கப்பட்ட / தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்க்கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் மறுக்கப்பட்ட முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் கிஷோர், கனகரட்ணம், சிவாஜிலிங்கம், தங்கேஸ்வரி, கஜேந்திரன், பத்மினி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் என ஊடகங்கள் சில பட்டியலிடுகின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பின் கொள்கைக்கு மாறாக தனித்துப் போட்டியிட்டதன் மூலம் சிவாஜிலிங்கமும், அவருக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக சிறீகாந்தாவும் அவர்கள் சார்ந்த ரெலோ கட்சியிலிருந்து நீக்கப்பட்டது யாவரும் அறிந்ததே...அதற்குப் பின்னும் அவர்களுக்கு தமிழ்க்கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

நான் மலையாக நம்பி நின்ற சம்பந்தர் ஐயா மடுவாக மாறிவிட்டார் என குற்ற வாக்குமூலம் கொடுத்த தங்கேஸ்வரி மட்டு மாவட்டத்தில் ஆளும்கட்சி வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளாராம்.


இன்னும் இருவர்... செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன். கடந்த பொதுத்தேர்தலில் விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று, யாழ் மாவட்டத்தில் அமோக வெற்றியீட்டி பாராளுமன்றம் சென்றவர்கள். இவர்கள் இருவருக்கும் எதிர்வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது யாவரும் அறிந்த இரகசியம்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த தமிழ்க்க்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தர், வடக்கு கிழக்கு தாயக மக்களின் கருத்துக்களை ஏற்று, அங்குள்ள பல்கலைக்கழக ஒன்றியங்கள், கல்வியியலாளர்களின் ஆலோசனைப்படியே 2010 பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார். ஆக, சம்பந்தரைப் பொறுத்தவரை, தாயகமக்களின் விருப்பின் அடிப்படையில் அமைந்ததே தமிழ்க்கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல்.


ஆனால், புலம்பெயர் தேசங்கள் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஒரு நிலையினைக் காணலாம். தமிழ்த்தேசியத்தலைமையென தங்களுக்குத் தாங்களே பெயர் சூட்டிக் கொண்ட சம்பந்தர் போன்றவர்கள் கஜேந்திரன், பத்மினி போன்றோரை சந்தர்ப்பம் பார்த்து வேண்டுமென்றே கழட்டி விட்டுள்ளார்கள் எனும் படியான கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள்; சம்பந்தரின் முடிவு அராஜகமானது என குற்றம் சுமத்துகின்றார்கள்.

சம்பந்தர் துணைக்கழைக்கின்ற தாயகமும், புலம் பெயர் தேசமும் இங்கே எதிரெதிர்த் திசைகளில் முட்டி மோதுகின்றன.

கடந்த பொதுத்தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற கஜேந்திரன் மற்றும் பத்மினி உட்பட எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பினால் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வேறு கட்சிகளுடன் இணைந்து அல்லது சுயேட்சையாகவேனும் போட்டியிடுவார்கள் எனும் நிலை இப்பொதுத் தேர்தலில் ஏற்படலாம்... அப்போது தாயக மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு சம்பந்தருக்கும்... புலம் பெயர் தேசத்துக்கும் கனதியான விடயங்களைப் புரிய வைக்கும்...!!!

இறுதியாக ஒரு வேண்டுகோள்:
தமிழ்க்கூட்டமைப்புக்கு இனியாவது இளைய இரத்தம் பாய்ச்சுங்களேன்... அல்லாது விடின், வேறு வழிகள் விரிந்திருக்கின்றன...

26 comments:

 1. யார் அங்கே! தமிழ் தேசியக் கூட்டமைப்பா? அப்படி ஒரு அமைப்பு இலங்கையில் இருக்கின்றதா? அது என்ன சம்மந்தன் கோஷ்டியா..? சுpவாஜிலிங்கம் கோஷ்டியா..? கஜேந்திரகுமார் பொனனம்;பலம் கோஷ்டியா..? எந்தக் கோஷ்டியைக் குறிபிடுகின்றீர்கள்?

  ReplyDelete
 2. தங்களுடைய சுயநல வாழ்க்கை, ஏமாற்று அரசியல் பிழைப்பு, பொருளாதார வருமானங்களுக்காக கயிறு விட்டு, கயிறு திரித்து தமிழ் இனத்தையே விற்ற தமிழ்தேசிய துரோகிகள் இவர்களே.

  இன்னும் எஞ்சியிருக்கும் தமிழ் மக்களது வாழ்வை கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருப்பவர்களும் இவர்களே.

  எங்கள் இனத்தை அழித்த இந்த மானங்கெட்ட தமிழ்தேசிய துரோகிகளுக்கு தமிழ் பேசும் மக்கள் இத்தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.

  இந்த கோவணக் கோஷ்டிகளும் இல்லாது ஒளித்து போகட்டும்.
  மனித கழிவுகள் உலகில் உயிர் வாழ்வதில் எதுவித பலனும் இல்லை.

  ReplyDelete
 3. இலங்கையில் வீட்டுக்கு ஒரு பெரியார் பிறந்தாலும் இலங்கையை காப்பாற்ற முடியாது……………………

  ReplyDelete
 4. இன்னும் இந்த சம்பந்தன் போன்றவர்களுக்கு அரசாங்கம் மற்றும் பதிரிகைகாரர் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் விளங்கவில்லை ……யாழ்ப்பாணத்து மக்கள் இவர்களை பற்றி அலட்டி கொள்வதில்லை….வெளிநாட்டு ஊடகங்களும் ,நட்டு கழன்ற அரசாங்கமும் , பிரிட்டிஷ் அமெரிக்காவின் உளவு ,தொண்டர் நிறுவனமுமே இவர்கள் மூலம் தமிழ் மக்கள் தலையில் பழையபடி மிளகாய் அரைக்க பார்க்கினம்…..

  ReplyDelete
 5. இந்த விடயம் தாயக மக்களுக்கும் புலம் வாழ் உறவுகளுக்குமிடையில் பிளவை உண்டாக்கிவிடுமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
 6. அண்ணா...
  நான் அறுதியிட்டுச் சொல்வேன். பத்மினிக்குச் செய்யப்பட்டது அநியாயமா இல்லையா என்பதைவிட கஜேந்திரனை நீக்கியது நியாயமான முடிவு என்பதே என்னுடைய கருத்து. உண்மையாக உழைத்தவர்களை ஓரங்கட்டி வாளி வைத்து வந்த கஜேந்திரன் தமிழ் மக்கள் பிரதிநிதியாக முடியாது. கஜேந்திரனோடு ஒப்பிடும்போது வடமராட்சி மாணவரமைப்புகளுக்குப் பொறுப்பாக இருந்த ஆதிகூட எவ்வளவோ மேல்.

  தமிழ்க்கூட்டமைப்பின் மற்றைய முடிவுகளின் தாக்கத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பெண்கள்/இளையோருக்கான (கஜேந்திரன் தவிர்ந்த) சரியான இடம் வழங்கப்படவில்லை. எங்களின் பதவி ஆசை மாறப்போவதில்லை. சின்னச் சின்னப் பதவிகளிலேயே தம்முடைய செயற்றிறன் குறைந்ததும் ஒதுங்காமல் குந்தியிருப்பது எங்களுக்குக் கைவந்த கலைதானே!! (உ-ம்: ஹாட்லிக்கல்லூரி பழையமாணவர் சங்கத்துத் தாய்க்கழகச் செயலாளர்)

  ReplyDelete
 7. // வெற்றுக் கோஷங்கள் வலிகளை விதைத்ததே தவிர... வழிகளைக் காட்டவில்லை!!! //

  அருமை...!

  அண்ணா,
  கஜேந்திரனும், பத்மினியும் மற்றவர்களும் எங்கள் மக்களுக்காக எதையும் கிழித்துவிடவில்லை. இவர்கள் உண்மையாக கொள்கை மேல் அக்கறை கொண்டவர்கள் என்றால் பத்மினி இப்போது அரசாங்கத்தில் இணைந்து போட்டியிடக் காரணம் என்ன?
  வெறும் பதவிக்காக அலையும் கூட்டமிது.

  ஆனால் கஜேந்திரன், பத்மினி, கனகரட்ணம், தங்கேஸ்வரி போன்றவர்கள் வெளிநாட்டில் இருந்து மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லும் தகுதி சம்பந்தருக்கோ அல்லது அவர் தலைமை தாங்கும் அந்த கோமாளிக் கூட்டத்திற்கோ கிடையாது.

  கஜேந்திரன் ஒரு லட்சம் வாக்குகள் என்பதெல்லாம் உண்மையாக கணிப்பீடு அல்ல.
  அந்தத் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்ட அவரால் ஒருபோதும் நேர்மையாக அத்தனை வாக்குகளைப் பெறமுடியாது.
  (அந்தத் தேர்தலில் பழுத்த அரசியல்வாதியான (????)த.தே.கூட்டமைப்பில் போட்டியிட்ட மாவை சேனாதிராஜா இற்கு வெறும் 32000 அல்லது அதற்கு அண்ணளவான வாக்குகளை கிடைத்தமை குறிப்பிடத்தக்கது)

  ReplyDelete
 8. @Shanker
  // இலங்கையில் வீட்டுக்கு ஒரு பெரியார் பிறந்தாலும் இலங்கையை காப்பாற்ற முடியாது……………………//

  இதைக் காலம் கடந்த ஞானம் என்பதா?

  ReplyDelete
 9. @பால்குடி
  //இந்த விடயம் தாயக மக்களுக்கும் புலம் வாழ் உறவுகளுக்குமிடையில் பிளவை உண்டாக்கிவிடுமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

  நியாயமான சந்தேகம்... கஜேந்திரன், பத்மினி போன்றோருக்கு இடம்வழங்கப்படாமை புலம் பெயர் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது; அல்லது, அப்படிக் காட்டப்படுகின்றது. ஆகவே, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட அவர்களுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டு இருக்குமாயின், சுயேட்சையாக போட்டியிட்டு தங்கள் இருப்பினை அவர்கள் உறுதி செய்துகொள்ளலாம்.

  இக்கருத்து வாக்குப்பிரிப்பினை ஊக்கப்படுத்துவதாக யாரும் குற்றம் சுமத்தலாம். ஆனால், தாயகத்தின் எண்ணவோட்டத்தைனை அறிந்து கொள்வதற்கு இதைத்தவிர வேறு வழியென்ன...?

  சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பினை மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா...? அல்லது, அவர்களுக்குப் பதிலாக கஜேந்திரன், பத்மினி போன்றோரை தங்கள் பிரதிநிதிகளாக்க மக்கள் விரும்புகின்றார்களா..? இல்லையேல், இதற்கும் மேலான மாறுதல்களை தாயகம் வேண்டி நிற்கின்றதா...?

  ReplyDelete
 10. @Kiruthikan Kumarasamy

  //நான் அறுதியிட்டுச் சொல்வேன். பத்மினிக்குச் செய்யப்பட்டது அநியாயமா இல்லையா என்பதைவிட கஜேந்திரனை நீக்கியது நியாயமான முடிவு என்பதே என்னுடைய கருத்து. உண்மையாக உழைத்தவர்களை ஓரங்கட்டி வாளி வைத்து வந்த கஜேந்திரன் தமிழ் மக்கள் பிரதிநிதியாக முடியாது. கஜேந்திரனோடு ஒப்பிடும்போது வடமராட்சி மாணவரமைப்புகளுக்குப் பொறுப்பாக இருந்த ஆதிகூட எவ்வளவோ மேல்.//

  உங்கள் கருத்துக்களுடன் நானும் உடன் படுகின்றேன்... தெளிவாகச் சொலிகின்றேன். செயற்றிறன் அற்ற வெற்றுக் கோஷங்கள் வலிகளை விதைத்ததே தவிர... வழிகளைக் காட்டவில்லை!!!

  //தமிழ்க்கூட்டமைப்பின் மற்றைய முடிவுகளின் தாக்கத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பெண்கள்/இளையோருக்கான (கஜேந்திரன் தவிர்ந்த) சரியான இடம் வழங்கப்படவில்லை. எங்களின் பதவி ஆசை மாறப்போவதில்லை. சின்னச் சின்னப் பதவிகளிலேயே தம்முடைய செயற்றிறன் குறைந்ததும் ஒதுங்காமல் குந்தியிருப்பது எங்களுக்குக் கைவந்த கலைதானே!! (உ-ம்: ஹாட்லிக்கல்லூரி பழையமாணவர் சங்கத்துத் தாய்க்கழகச் செயலாளர்)//

  பாடையில் வேகும் போதும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் / செயலாளர் எனும் பதவிகளுடன் போவது கௌரவம் என்று நினைக்கின்றார்கள்.

  ReplyDelete
 11. @கன்கொன் || Kangon
  //ஆனால் கஜேந்திரன், பத்மினி, கனகரட்ணம், தங்கேஸ்வரி போன்றவர்கள் வெளிநாட்டில் இருந்து மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லும் தகுதி சம்பந்தருக்கோ அல்லது அவர் தலைமை தாங்கும் அந்த கோமாளிக் கூட்டத்திற்கோ கிடையாது. //

  திரும்பவும் சொல்கின்றேன்... மாற்று வழி திறக்கப்படாதவரை கூட்டமைப்புத் தான் ஒரே வழி... ஆனால், பூனைக்கு மணி கட்டுவது யார்??

  //கஜேந்திரன் ஒரு லட்சம் வாக்குகள் என்பதெல்லாம் உண்மையாக கணிப்பீடு அல்ல.
  அந்தத் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்ட அவரால் ஒருபோதும் நேர்மையாக அத்தனை வாக்குகளைப் பெறமுடியாது. //

  :-)

  ReplyDelete
 12. நலல பதிவு ஆதிரை.. சம்பந்தன் சாணக்கியம் என்பது இதுதானோ?


  இளையரத்தம் இளையரத்தம் என்கிறீக்ளே? ாங்கள் போய் இணைய வேண்டியதுதானே? :P

  ReplyDelete
 13. //சம்பந்தர் துணைக்கழைக்கின்ற தாயகமும், புலம் பெயர் தேசமும் இங்கே எதிரெதிர்த் திசைகளில் முட்டி மோதுகின்றன. //

  அனைவராலும் உண்மை ஜீரனிக்கப் படும் போது காலம் கடந்த காலமாகி இருக்கும். என்ன தான் இருந்தாலும் இராமர் இருக்கும் இடம் தான் அயோத்திபோல, சம்மந்தர் இருக்கும் இடம் தான் கூட்டமைப்பு என்பதை எல்லாரும் ஏற்று கொள்ளும், உணர்ந்து கொள்ளும் நிலையை உருவாக்குவது தாயகத்தில் உள்ள புத்தியீவிகளின் (புலத்தவருக்கு எல்லாம் தெரிய நியாயம் இல்லை தானே... :) )சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட கடமை.

  SKM

  ReplyDelete
 14. தமிழ் கூட்டமைப்புக்கு பல குத்தல்கள் குடையல்கள் இருக்கின்றது உண்மைதான் என்றாலும், ஒவ்வொருதரும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது எண்டு சுயேச்சையாக நிற்பது சரியாக படவில்லை எனக்கு..
  இன்னோர் நம்பிக்கைதரும் வழியோ கட்சியோ உதிக்குமென்று நம்புவதும் சுத்த மோட்டுத்தனம். இதற்காக இன்னோர் அணியை பலமான சக்தியாக உருவாக்குவதம் சரிவராது.
  எனவே திருப்பி திருப்பி ஒருவரை ஒருவர் குறைசொல்லாம TNAஐ ஒரு ஒழுங்கான கட்டுக்கோப்பான கட்சியாக வளர்க்க இளையவர்கள், படித்தவர்கள் முன்வரவேண்டும். ஆதிரை ஏன் உங்களால் முடியாது???? அதை விடுத்து அர்த்தமற்று கதைப்பது வேஸ்ட்.....

  ReplyDelete
 15. //வெற்றுக் கோஷங்கள் வலிகளை விதைத்ததே தவிர... வழிகளைக் காட்டவில்லை!!//

  உண்மை.

  நம்பிக்கைதரும் வழியோ கட்சியோ உதிக்குமென்று நம்புவதும் சுத்த மோட்டுத்தனம். இதற்காக இன்னோர் அணியை பலமான சக்தியாக உருவாக்குவதம் சரிவராது//

  அதேதான்.

  பதவி புகழ் இதனை விரும்பாதவர் ?.....விதிவிலக்கு இதற்கு மட்டும் இல்லை. ஒவ்வொரு மனிதனும் முதலில் சுயநலவாதி, அதற்கு பின்னரே பொதுநலவாதி. அதை விட அரசியலில் உள்ளவர்களுக்கு தங்கள் கொள்கைகளை விட தங்களது இருப்பை நிலைநிறுத்துவது தான் முக்கியம்.
  யார் வந்தாலும் மஹிந்த குடும்பத்தினால் தீர்மானிப்பது தான் தமிழர் ஒவ்வொருவரினதும் தலைவிதி . இது யார் வந்தாலும் மாறப் போவதில்லை. ............ .......நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பதே மேல்.

  ReplyDelete
 16. தமிழ்க்கூட்டமைப்புக்கு இனியாவது இளைய இரத்தம் பாய்ச்சுங்களேன்... அல்லாது விடின், வேறு வழிகள் விரிந்திருக்கின்றன..///

  அருமை ...

  அந்த இள ரத்தம் ???

  ReplyDelete
 17. கூட்டமைப்பு எண்டுறது ஒரு கூத்தமைப்பு தானே! பிறகேன் டைம் வேஸ்ட் பண்ணுவான்..

  ReplyDelete
 18. நல்லதொரு அலசல், இளரத்தங்கள் சரிப்பட்டு வருமா தெரியவில்லை. ஆனாலும் சும்மா சீட்டை கட்டி பிடித்து கொண்டிருப்பவர்களை அகற்ற வேண்டும்.

  ReplyDelete
 19. அருமையான அலசல் அண்ணா. வேறு தெரிவுகள் இல்லாவிட்டாலும், இருக்கின்ற தெரிவுகள் இப்படி இருந்தால் மீண்டும் ஒரு 20 வீதம்தான் விழப்போகிறது. தமிழர் பகுதிகளில் புதிதாக ஓட்டுப்போடப் புறப்பட்டவர்களும், முதியவர்களையும் தவிர ஏனயோர் இதில் ஆர்வமற்றிருக்கிறார்கள். இப்போது கூட்டமைப்பினருக்கிடையே(?) நடக்கும் குத்துவெட்டுக்களைப் பார்க்கும்போது முன்னொருமுறை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது.

  //தமிழ்க்கூட்டமைப்புக்கு இனியாவது இளைய இரத்தம் பாய்ச்சுங்களேன்... அல்லாது விடின், வேறு வழிகள் விரிந்திருக்கின்றன...//

  தேவையான ஒன்று. ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யாரோ?

  ReplyDelete
 20. @புல்லட்
  //நலல பதிவு ஆதிரை.. சம்பந்தன் சாணக்கியம் என்பது இதுதானோ? //

  சம்பந்தர் வலியுறுத்துகின்ற யதார்த்தங்களை விளங்கிக் கொள்கின்றேன். ஆடுகிற ஆட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் தான் தன்னால் கறக்க முடியுமென்ற தன்னம்பிக்கையுடன் மக்களின் அபிலாசைகளுக்கேற்ப அவர் செயற்பட்டால் மகிழ்ச்சியே...

  ஆனால், சிவலிங்கத்துக்கு முன்னால் குந்தியிருக்கும் நந்தியாகவும்... இன்னமும் இந்தியாவை மட்டுமே நம்பியுள்ள அனுபவஸ்தனாகவும் இருக்க எவ்வளவு காலத்துக்குத்தான் முடியும்..?

  ReplyDelete
 21. @SKM
  // அனைவராலும் உண்மை ஜீரனிக்கப் படும் போது காலம் கடந்த காலமாகி இருக்கும். என்ன தான் இருந்தாலும் இராமர் இருக்கும் இடம் தான் அயோத்திபோல, சம்மந்தர் இருக்கும் இடம் தான் கூட்டமைப்பு என்பதை எல்லாரும் ஏற்று கொள்ளும், உணர்ந்து கொள்ளும் நிலையை உருவாக்குவது தாயகத்தில் உள்ள புத்தியீவிகளின் (புலத்தவருக்கு எல்லாம் தெரிய நியாயம் இல்லை தானே... :) )சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட கடமை.//

  கட்டிவைத்த கூட்டமைப்பு என்கின்ற கோட்டை சிதறுகிறது என்பதை உறுதியாகியுள்ள நிலையில், யாருக்காக விரல்களில் மை பூசுகின்றது என்கின்ற குழப்பம் ஏற்படத்தான் போகின்றது...

  ReplyDelete
 22. @archchana
  //பதவி புகழ் இதனை விரும்பாதவர் ?.....விதிவிலக்கு இதற்கு மட்டும் இல்லை. ஒவ்வொரு மனிதனும் முதலில் சுயநலவாதி, அதற்கு பின்னரே பொதுநலவாதி. அதை விட அரசியலில் உள்ளவர்களுக்கு தங்கள் கொள்கைகளை விட தங்களது இருப்பை நிலைநிறுத்துவது தான் முக்கியம்.
  யார் வந்தாலும் மஹிந்த குடும்பத்தினால் தீர்மானிப்பது தான் தமிழர் ஒவ்வொருவரினதும் தலைவிதி . இது யார் வந்தாலும் மாறப் போவதில்லை. ............ .......நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பதே மேல்.//

  கவலையளிக்கும் உண்மை நிலவரம்.... :-(

  ReplyDelete
 23. @கரவைக்குரல்
  //உண்மையில் நீங்கள் குறிப்பிட்டதைப்போலவே சம்பந்தர் புலம்பெயர் மக்களுடனான உறவை முற்றிலும் முறித்துக்கொள்வது என்ற போக்கில்தான் அவரின் செயற்பாடுகளை கொண்டுசெல்கிறார் என்றவகையில் புலம்பெயர் சமூகமும் பேசிக்கொண்டிருக்கிறது.வானொலிகளில் முன்னைய தமிழார் விடுதலைக்கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தமிழ் மக்கள் கொடுத்த பதில் போல சம்பந்தருக்கும் கொடுக்கப்படும் என்றவாறான பேச்சு.//
  புலம் பெயர் தேசங்களில் சம்பந்தர் மீது எழுப்பப்படும் காழ்ப்புணர்ச்சிகளுக்கு தாயக மக்களின் அபிளாசைகளை விடுத்து இன்னொரு காரணம் தான் முதன்மை வகிக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகின்றேன்.

  //லோஷன் அண்ணா குறிப்பிட்டதைப்போலவே யாருக்கு எம்மவர்கள் தங்கள் வாக்கை போடுவது என்ற கேள்விதான் இங்கு இருக்கிறது.மக்கள் எப்படியாவது கூட்டமைப்பு என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சில கட்சிகளின் கூட்டமைப்புக்குத்தான் எப்படியும் போடவேண்டும், அதை விட வேறு வழியே இல்லை என்ற எண்ணத்துடனான செயற்பாடுதான் இது.
  முக்கியமாக எத்தனையோ இழப்புக்களை தாண்டிவந்திருக்கிறோம். அறியாத பாலகர் போல செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்களே?//

  கூட்டமைப்பு உடைந்து வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது உறுதியானால்(எப்போதே உறுதியாகிவிட்டது)... இனி என்னதான் நடக்கும்? "யாருமற்ற" வெட்டைவெளியில் மல்லாக்காக படுத்திருந்து தங்களின் மேல் எச்சில் உமிழ்வதைத் தவிர... கூத்தாடிகள் கொண்டாடுவார்கள்.

  //தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணய உரிமை,தாயகம்,தன்னாட்சி பற்றிய கோட்பாடுகளை உள்ளடக்காமல் தேர்தல் வெற்றிக்கு பின் அதைப்பற்றி உள்ளடக்குவோம் என்று சம்மந்தர் சொல்வாராக இருந்தால் பேரினவாத கட்சிகளும் தங்கள் விஞ்ஞாபனத்தில் எதுவுமே உள்ளடக்காமல் குறிப்பிடும் கருத்தைப்போலல்லவா இருக்கிறது??????????????//
  தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதைப் புகுத்தினாலும், "நிறைவேற்று அதிகாரம்" என்கின்ற ஒன்று உண்டல்லவா...? வரிக்கு வரி உணர்வினைச் சுண்டி இழுக்கும் வசனங்கள் எழுத்துருக்களில் மட்டும் உயிர்வாழும்...

  ReplyDelete
 24. தமிழ் மக்கள் அரசியல் ஞானம் பெற்றவர்கள் சிந்தித்து முடிவுகளை எடுக்க கற்றுக்கொண்டுவிட்டோம்...............
  இல ரத்தம் பாச்சுவதட்கு முதல் இவங்களுக்கு(இப்போது உள்ளவர்களுக்கு) அரசியல் ராஜ தந்திரங்கள் சிலவற்றை சொல்லி கொடுக்க வேண்டும் .

  ReplyDelete
 25. சம்பந்தர் துணைக்கழைக்கின்ற தாயகமும், புலம் பெயர் தேசமும் இங்கே எதிரெதிர்த் திசைகளில் முட்டி மோதுகின்றன.

  ReplyDelete
 26. எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை! பாவம் சனங்கள் - இதுக்குத்தான் செல்வநாயகத்தார் சாகும்போது கடவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாரோ? இப்ப கடவுளும் கைவிட்டவிட்டார்! விடுவார்தானே? சின்ன வயசில படிச்ச ஒளவையாரின்ர பாடங்கள் மறந்துபோச்சுது!

  ReplyDelete

You might also like