Search This Blog

Tuesday, January 6, 2009

ஊடக பயங்கரவாதம்

இறைமைமிக்க இலங்கை ஜனநாயக நாட்டில் மீண்டுமொருமுறை இனந்தெரியாதவர்களின் கொடூரத் தாக்குதலுக்கு ஊடக நிலையங்கள் இலக்காகி இருக்கின்றன. இதுவொன்றும் இங்கு புதிதல்ல... ஆனாலும், ஊடக அமைச்சை தனது அதிகாரங்களின் கீழ் இலங்கை ஜனாதிபதி கொண்டு வந்து ஒரு சில நாட்களில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. எம்.ரி.வி. நிறுவனத்தினால் மும்மொழிகளிலும் மேற்கொள்ளப்படும் ஒலி - ஒளிபரப்பு சேவைகளை முற்றுமுழுதாக முடக்கிவிட வேண்டும் என்ற தீய நோக்குடன் உள்நுழைந்த ஆயுதக்கும்பல் செயற்பட்டிருக்கின்றது. ஆனால், எரிந்த வேகத்தை விட பன்மடங்கு வீச்சுடன் அவர்கள் எழுந்து விட்டார்கள்.

இன்று (2009 - ஜனவரி - 06) அதிகாலைப்பொழுதினில் எம்.ரி.வி., எம்.பி.சி. கலையகத்தினுள் அத்துமீறி நுழைந்த 20 பேரடங்கிய ஆயுதக்குழுவின் கோழைத்தனமான தாக்குதலில் அக்கலையகம் பாரிய சேதத்தினை அடைந்துள்ளது. தொழில்நுட்ப உபகரணங்கள் முதற்கொண்டு அனைத்து சாதனங்களும் அக்கும்பலிட்ட தீயினில் கருகிக் கிடக்கின்றன. இச்சம்பவமோ அல்லது அச்சுறுத்தலோ எம்.ரி.வி. நிறுவனத்துக்கு புதிதானதல்ல. ஆனாலும், இன்றைய சம்பவம் ஏற்படுத்திய இழப்புக்களின் பெறுமதி இலகுவில் ஈடுசெய்ய முடியாததொன்றாகவே புலனாகின்றது.

உலகின் எந்த மூலையிலிருந்தும் யாராவது ஊடக சுதந்திரம் பற்றி பேசுவாராயின் நிச்சயம் இலங்கைக்கும் ஓரிடம் காத்திருக்கும் என்பது எப்போதோ எழுதிய விதி. இன்று வரை ஆட்சி மாறினால் என்ன... அல்லது அமைச்சு கைமாறினால் என்ன... அந்தச்சாதனையை இழக்க விரும்பாமல் பற்றிக்கொண்டிருக்கின்றது இத்திருநாடு. இன்று நடந்தது போன்றதொரு சம்பவம் யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை மீதும் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து உபகரணங்களும் சுட்டுப் பொசுக்கி தீக்கிரையாக்கப்பட்டது மட்டுமன்றி கடமையிலிருந்தவர்களும் தங்களின் உயிரினை ஊடகப்பயங்கரவாதத்துக்கு பலி கொடுக்க வேண்டியிருந்தது. இலங்கையில் நடைபெறும் ஊடகத்துக்கு எதிரான யுத்தத்தினை பட்டியலிடுவதாயின், எதிலிருந்து தொடங்குவது? உதயன், சன்டேலீடர், எம்.ரி.வி. ... என நீண்டு செல்லும் இந்தப்பட்டியலின் மூலங்கள் இனந்தெரியாதவர்களாகையால், பட்டியலின் முடிவுக்கும் முற்றுப்புள்ளியிடவும் முடியவில்லை.

இன்று நடந்த சம்பவங்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் கதையை முடிவுக்கு கொண்டுவரும் என கனவு கண்டவர்கள் பிரமிக்கத்தக்கவாறு அவைகள் அனைத்தும் புத்தெழுச்சியுடன் மக்கள் பணி நோக்கி நடைபோடுவது போற்றுதற்குரியது. உண்மைகள் என்றும் உறங்குவதில்லை. ஆனால், இச்செயலைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கான விடை கேள்விகளாகவே தொக்கி நிற்கின்றது.
இலங்கையில் ஒரு ஊடகம் அல்லது ஊடவியலாளர் தாக்கப்படும் போது வழமையாக நடப்பன நடக்கின்றன. கோட்டை தொடரூந்து நிலையத்தின் முன்னால் "நேற்று..., இன்று..., நாளை... " என்ற கோசங்களுடன் பதாகைகள் தாங்கி ஊடகவியலாளர்கள், ஜனாதிபதியின் கவலை தெரிவிப்பும் தக்க நடவடிக்கை எடுக்க பொலிஸ்மா அதிபருக்கான உத்தரவும், விசாரணைக்கு பல பொலிஸ்குழுக்கள், ஒரு சாரார் அரச பயங்கரவாதம் என்றுரைக்க, இன்னொரு சாரார் அரசின் வெற்றிக்கு களங்கம் பூசப்பட்ட செயல் எனக்கூற... நாளை இன்னொரு தாக்குதலுடன் அல்லது வெற்றிச்செய்தியுடன் எல்லாம் அடங்கிவிடும். இல்லை... இன்னொரு தாக்குதலுக்கு உதாரணம் காட்ட இச்சம்பவம் இருக்கும். இன்று உதயன் சம்பவம் எனக்கிருந்தது போல...

5 comments:

  1. உறைக்க கூடிய உண்மைகள்.....
    விளங்கியும் விளங்காமலும் காட்டி கொள்ளும் சாமர்த்யம்மிக்கவர்களுக்கு தேவையற்றதாய்ப்படும் காலம் இது நாடு இது...

    இருப்பினும் வெகுண்டு எழுந்து எழுதியிருக்கும் உங்களுக்கு
    நன்றி தோழா

    ReplyDelete
  2. உண்மையில் இலங்கையில் உள்ள எந்த ஊடகமாவது, எம்மக்களின் உண்மை நிலையை எடுத்துக்கூறியிருக்கின்றனவா? இல்லையே! தங்கள் நிறுவனத்துக்கு மட்டும் என்றாகும் போது மட்டும் துள்ளிக் குதிப்பார்கள். தினம் தினம் உண்மையை மறைத்து அவற்றை செய்திகளாய் வெளியிட்டு ஊடக தர்மத்தை கொன்றழித்த இலங்கை ஊடகங்கள் தாக்கப்பட்டால் நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?

    ReplyDelete
  3. தமிழ் மக்களின் எந்த ஒரு யுத்த அவலத்தையும் இந்த ஊடகம் எமக்கு ஒழுங்காக தருவதில்லை....ஒரு முறை ஒரு செய்தியை நாம் எதிர்பார்க்க இது நாளை புலமைப்பரீட்சை முடிவு வெளியாகும் என்றது...இவ்வாறு பலவற்றை குறிப்பிடலாம் .... இந்த ஊடகத்தால் எமக்கும் எந்த ஒரு சூடான செய்திகளும் கிடைப்பதில்லை...பிறகு நாம் ஏன் இவர்களைப்பற்றி பேசவேண்டும்.......

    ReplyDelete
  4. அந்த அநாமதேயரின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். 2005 உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளிவந்த பின்பு இடை நிறுத்தப்பட்டன. உடனே மேலதிக தகவல்கள் வேண்டி, சக்தியின் செய்திகளைக் கேட்டால் அவர்கள் சொன்னது இதுதான். "நாளை மறுதினம் அரசாங்கப் பாடசாலைகள் அனைத்தும் முதலாம் தவணைக்காக திறக்கப்படிகின்றன." அதைத் தவிர எந்த செய்தியையும் சொல்லவில்லை. எது முக்கியம் என்று அறியாத இவர்களை எல்லாம் அடித்தாலென்ன, இல்லை எரித்தால் தான் என்ன?

    ReplyDelete

You might also like