Search This Blog

Sunday, June 7, 2009

செய்மதிப் படங்கள்

ஒரு சில மீற்றர் இடைவெளிகளில் அந்த இரு சோடிக் கண்கள் சந்தித்துக் கொண்டன. மூத்தவனுக்கு ஆச்சரியம், கோபம், கவலை... "இவன் வரக்கூடாதென்று தானே நான் வந்தேன். இப்போது இவன் இங்கே எதற்கு...?" ஆனாலும், இளையவனால் என்னதான் செய்ய முடியும்? எல்லாம் கை மீறி நடக்கின்ற பொழுதுகளில் கால் போன போக்கில் தானே பயணம்...

அன்றொரு நாள் தம்பி வரவில்லை என அழுதிருந்த ஓரிரவில் தான் மூத்தவன் முடிவெடுத்தான். அடுத்த நாள் இருவருக்குமான கடமைகள் மாறிக் கொள்ள இளையவன் வீட்டுக்கு வந்தான்.

"என்ர அப்பா... அம்மா... சகோதரங்கள் என்னவானார்கள்...? இவன் எப்ப வந்தவன்..? கண்டவர்களை எல்லாம் கேட்டபோதெல்லாம் எல்லோரும் சுகமென்று தானே சொன்னார்கள்." இளையவனுடன் கதைத்தால் ஆர்ப்பரித்து அழும் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கலாம். போகப்போகும் ஆன்மா கூட அமைதியாக போகலாம்.

ஆனால், இவனைக் கண்டதும் இளையவன் மெல்ல மெல்ல அப்பால் நகர்ந்து கொண்டிருந்தான். தோளின் சுமை அவன் நடை தள்ளாடலில் தெரிகிறது. மூத்தவன் அவனை நோக்கி இரண்டொரு அடி எடுத்து வைத்திருப்பான். வீழ்ந்திருந்த மனிதங்கள் காலில் தட்டுப்பட்டன. நகர முடியவில்லை... கடமையும் குறுக்கே வந்து தடுத்தது. சொல்லக் கூடாத செய்தியா...? அல்லது அண்ணனைக் காணக்கூடாத விரதமா...? "தம்பி... ஒருமுறையேனும் வந்து கதையடா...!!!" கத்த வேண்டும் போல் இருந்தது.

திடீரென கட்டளைகள் கிடைக்கின்றன. செவி அதிர எங்கும் புகைமண்டலம் பரவுகின்றது. அதனூடும் அந்த இரு சோடிக்கண்கள் ஒன்றையொன்று தேடுகின்றன.

அங்கே படம் பிடித்துக் கொண்டிருக்கும் செய்மதிகளின் படங்களில் எங்கே தெரியப் போகிறது இவர்களின் கதைகளும், வலிகளும்...

No comments:

Post a Comment

You might also like