Search This Blog

Thursday, July 23, 2009

காட்டிக் கொடுத்த 'விசா'ப்பிள்ளையார்

அவர்கள் இருவரும் என் நண்பர்கள் தான். ஆனால், அன்று என்றுமே காணாத ஒரு தோற்றத்தில் காட்சி கொடுத்தார்கள். நெற்றி நிறைய விபூதி, அதன் நடுவே பெரியதாய் ஒரு சந்தனம், சந்தனத்தின் நடுவிலே குங்குமம்... போதாக்குறைக்கு காதிலே நித்திய கல்யாணி. பக்தி முத்தி பழங்களாக நின்ற அவர்களிடம் நான் கேட்காமலே காரணத்தை சொன்னார்கள்.

யு.கே போறதுக்காக நாளைக்கு விசா அப்ளை பண்ணப் போறார்களாம். அதுதான் கோயிலுக்கு போய்விட்டு வருகிறார்கள். அவர்கள் சொன்ன அந்தக் கோயிலின் பெயர் விசாகப் பிள்ளையார் என்றுதான் கேட்டது. "விசாகம்" கடவுளுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாக இப்போதும் உணர்வதால், அப்படிக் கேட்டிருக்கலாம். அதுவரை கொழும்பில் பம்பலப்பிட்டியில் போட்டி போட்டுக்கொண்டு நிற்கும் இரு பிள்ளையார்களை மட்டும் அறிந்திருந்தேன். அங்கே தான் கோயில் கும்பிடவென போயும் வந்தேன். இன்னொரு கோயிலுக்கும் போறனான். "விஷ்ணு விலாஸ்" என செல்லமாக அழைக்கப்படும் விஷ்ணு கோவிலுக்கு ஒவ்வொரு ஞாயிறும் அன்னதானத்திற்காக...

பக்திப்பழ வேடம் தாங்கி நின்ற அந்த நண்பர்களுக்கு பின்னர் விசாவும் கிடைத்து, 2008 செப்ரம்பருக்கு முன்னதாகவே அவர்கள் இலண்டனுக்கும் போய், செப்ரம்பரில் தொடங்கும் கற்கைநெறிகளை கற்று இப்போது முடிவடையும் தறுவாயில் அவர்கள்...

ஆனால், இந்தப் பிள்ளையாரின் அருமை பெருமைகள் எனக்கு கிட்டியது 2009 ஜனவரியில் தான். இன்னொரு நண்பன்... லண்டன் விசா... பக்தி முத்திய பழமாக நின்றான்.

"விசாப்பிள்ளையாரிடம் போய் விட்டு வருகின்றேன்".

திருப்பிக்கேட்டேன். "ஓமடா...
விசாப்பிள்ளையாரிடம் போய் விட்டு வருகின்றேன்..." என்றான்.

விசாகப் பிள்ளையாருமில்லை; விசர்ப் பிள்ளையாருமில்லை... இது "விசா"ப் பிள்ளையார்.


வெள்ளவத்தை சர்வதேச புத்தர் நிலையத்துக்கு அருகாக தலம், விருட்சம், தீர்த்தம், வாகனம் அணி சேர வீற்றிருக்கின்றார் இந்த விசாப்பிள்ளையார். தலம் - வெள்ளவத்தைக் கடற்கரை வீதி, விருட்சம் - அருகிலுள்ள அரச மரம், தீர்த்தம் - கால் நனைத்து கரை புரண்டோடும் இந்து மகா சமுத்திரம், வாகனம் - அரை மணிக்கு ஒரு தடவை பவனி வரும் இலங்கைத் தொடரூந்துகள்.

நான் முன் செய்த தவப்பயனின் பேறாய், என் வதிவிடமும் விசாப்பிள்ளையாரை அண்மித்து அமைந்தது பெரும் பேறு. காரணங்களைத் தேடிய போதுதான், விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அருள் பாலிக்கும் கடவுளராய் விளங்குவதால் இவர் பெயரும் விசாப்பிள்ளையார் என வழங்கலாயிற்றாம்.

கணபதி பால் குடித்தது போன்று, சுவரிலிருந்து நீறு உதிர்வது போன்று சில கதைகளும் இவர் சார்பாக உலவுகின்றது. இங்கெல்லாம் அர்ச்சனை செய்ய நட்சத்திரத்துக்குப் பதிலாக பாஸ்போட் இலக்கம் தானாம்... அர்ச்சனைத் தொகையைப் பொறுத்து தூதரகங்களிலுள்ள உங்கள் விசாப்படிவங்களின் இடங்களும் முன்னே பின்னே மாறுகின்றதாம்... கேட்கின்ற என்னை ஏதோவென நம்பி, விசாப்பிள்ளையார் பக்தனொருத்தன் என்மேல் ஏரோப்பிளேன் ஓட்டினான்.

நாளாக நாளாக வளர்ந்து வந்த அவன் விசா விநாயகர் புகழ்மாலை தாங்க இயலவில்லை. கடுப்படைந்திருந்த நான் ஒருநாள் அவனைப்பிடித்து கேட்டேன்.

"டேய்... வெளிநாடு போறதுக்கு கோயில் கும்பிட வேணும்தான்... அதுக்காக இப்படியாடா...? போடா நீயும் உன்ர விசாப்பிள்ளையாரும்..." அவனுக்கு வேண்டுமென்றே எரிச்சல் ஊட்டுவதற்கு முயற்சித்தேன்.

அவன் கூலாக சொன்னான். "அண்ணை... நீங்கள் தான் விசர்க்கதை கதைக்கிறீங்கள்... இவர் யார் என்று தெரியுமா? ஔவையாரைத் தும்பிக்கையால் தூக்கிவைத்த பிள்ளையார் இவர்தான். கட்டாயம் என்னையும் தூக்கி லண்டனில வைப்பார் பாருங்கோவன்..."

நேற்று வந்த தொலைபேசி அழைப்பொன்றுக்கு றிசீவரை தூக்கினேன். மறுமுனையில் அவன் தான் விசாப்பிள்ளையார் பக்தன்.
"விசாப்பிள்ளையார் சாதிச்சிட்டார்.... எனக்கு விசா கிடைச்சிட்டுது"

வாழ்த்துக்கள் நண்பா...!!!

★★★

சரசம்மா... பம்பலப்பிட்டி தொடர்மாடி ஒன்றின் வாடகைக்காரி. அண்மைக்காலமாக விசாப்பிள்ளையாரின் தீவிர பக்தராக மாறி விட்டிருந்தாள். காரணம்... அதுவும் விசா தொடர்பானதுதான். லண்டன் மாநகரில் "காட்" வைத்திருக்கின்ற வரனொன்று அவள் மகளுக்கு முற்றாகியிருந்தது.

ஆனால், கொஞ்ச நாட்களாக பொடியன் வீட்டாரிடமிருந்து நல்ல சமிக்ஞைகள் எதுவும் கிடைக்கவில்லை. காலையில்
சுப்பன் சொன்ன சேதி வேறு கலக்கத்தை கொடுத்தது. பொடியன் வீட்டாரையும் பொன்னம்மாவையும் குறிப்புப் பார்க்கிற வீட்டில் ஒன்றாக கண்டதாக சொன்னான். பொன்னம்மா இவளுக்குத் தெரிந்தவள் தான். வெள்ளவத்தை தொடர்மாடிக்காரி. 25 வயதில் அவளுக்கும் மகள் இருப்பதுதான் சரசுவுக்கு பலவாறான யோசனைகளை கிழறி விட்டிருந்தது.

சரசம்மா ஆற அமர இருந்து கணக்குப் போட்டு பார்த்தாள். வெள்ளம் தலைக்கு மேலே வந்து விட்டதுக்கு பிறகு எதுவும் செய்ய முடியாது. ஒரே வழி... விசாப்பிள்ளையாரின் காலில் விழுவது தான். தினமும் மாலையில் விநாயகரை நாடியவள்... அன்றிலிருந்து காலையும் மாலையுமாக இருமுறை சென்று வணங்கினாள். கூடவே அவள் மகளும்...

அன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணி... கொளுத்தும் வெயிலில் விசாப்பிள்ளையார் முன்றலில் நால்வர் மட்டுமே... பொன்னம்மாவும், சரசம்மாவும் அவர்கள் புத்திரிகளும் மட்டுமே அங்கிருந்தார்கள். தினமும் கஸ்டப்பட்டு உடைகின்ற சரசம்மாவின் தேங்காய், அன்று மட்டும் பல நூறு துண்டுகளாக உடைந்து தெறித்தது.

இப்போதெல்லாம், பொன்னம்மாவை தினமும் விசாப்பிள்ளையார் கோயிலில் காணக்கிடைக்கின்றது. சரசம்மா சிறிது கால இடைவெளி எடுத்துக் கொள்கிறாளாம். மீண்டும் திரும்பி வருவாள் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. சுப்பனும் பாவம்... பொன்னம்மா வீட்டுப்படி ஏறி இறங்குகின்றான்.

பி.கு: விசாப்பிள்ளையார் முன்றலில் என்னையோ அல்லது என் அன்னையையோ அல்லது அத்தையையோ அல்லது ........ காணக்கிடைக்கலாம்.
தயவு செய்து அப்போது மட்டும் கல்லெறியாதீர்கள்.

14 comments:

  1. பிள்ளயார் அருள் உங்களுக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. பிள்ளையாரோடு பகிடி........... ரொம்ப ஓவர்.....

    ReplyDelete
  3. // விசாகப் பிள்ளையாருமில்லை; விசர்ப் பிள்ளையாருமில்லை... இது "விசா"ப் பிள்ளையார்.

    நானும் இரு தடைவை போனா போச்சு!!! :)

    ReplyDelete
  4. @நிலாமதி
    //பிள்ளயார் அருள் உங்களுக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

    நன்றி சகோதரி... உங்களுக்கும் அருள் கிடைப்பதாகட்டும். ஆனால், இன்றைக்கு கனவில் வந்திடுவாரோ என்று உள்ளூரப் பயமிருக்குது. :P

    ReplyDelete
  5. @Anonymous
    //பிள்ளையாரோடு பகிடி........... ரொம்ப ஓவர்.....

    ஏனய்யா.... அவர் தன் பாடு, நான் என்பாடென்று இருக்கிறேன். கலகம் விளைவிக்கிறீர்.

    வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  6. @LOSHAN
    //ஹா ஹா.. இந்த விசாப் பிள்ளையார் பற்றி யாராவது எழுதுவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்..
    ஆஹா... மாட்டுப்பட்டது நானா...?

    //நான் எழுதினால் நாஸ்திகன் மீண்டும் தொடங்கிட்டான் என்பார்கள்.. ;)
    இப்ப்டி ஒரு சங்கதி இருக்கா? இன்றும் கூட என் பிள்ளையாரிடம் சென்று வந்தேன்.

    //ரசித்த வரிகள்..
    நன்றி அண்ணா...

    //எனக்கும் இதே கதைகள் காதுகளை பூ சுற்றப் பார்த்தன.. ;)...
    உங்களுக்கா...? ரொம்பக் கஸ்டப்பட்டிருப்பாங்களே... :P

    //அது சரி அந்த 'ஏதோ' எது? ;)
    ஏதோ... அது அதே தான். ஏ-9 திறந்திட்டுதாமே...

    ReplyDelete
  7. கார்த்தி

    //நானும் இரு தடைவை போனா போச்சு!!! :),.

    அது ஏன் இரு தடவை..?
    உதவிக் குறிப்பு: வெள்ளி மாலை போனால், சுட்ட மோதகம் சாப்பிடலாம்.

    ReplyDelete
  8. //அர்ச்சனைத் தொகையைப் பொறுத்து தூதரகங்களிலுள்ள உங்கள் விசாப்படிவங்களின் இடங்களும் முன்னே பின்னே மாறுகின்றதாம்... கேட்கின்ற என்னை ஏதோவென நம்பி, விசாப்பிள்ளையார் பக்தனொருத்தன் என்மேல் ஏரோப்பிளேன் ஓட்டினான்.

    அருமை... ஆனா பிள்ளையாரோடு வேண்டாம் பொல்லாப்பு

    ReplyDelete
  9. என் நண்பன் ஒருவன் சொன்னான் தாங்கள்தான் அந்தப் பிள்ளையார் சிலையை அங்கே வைத்தார்களாம்.

    கடலோரத்தில் இருந்த பிள்ளையார் சிலை தான் இந்த விசாப்பிள்ளையாராம்..

    ReplyDelete
  10. ஆஹா நம்ம விசாப் பிள்ளையார் பற்றி ஒரு பதிவா? ஐயா விசாப் பிள்ளையாரின் கடைக்கண் பார்வையில் இருப்போர் குடைக்குள் மறைந்திருந்து ரகசியம் பேசுபவர்கள்.

    ReplyDelete
  11. @வந்தியத்தேவன்
    //ஆஹா நம்ம விசாப் பிள்ளையார் பற்றி ஒரு பதிவா? ஐயா விசாப் பிள்ளையாரின் கடைக்கண் பார்வையில் இருப்போர் குடைக்குள் மறைந்திருந்து ரகசியம் பேசுபவர்கள்

    வந்தி, குடைக்குள் ரகசியம்... புரியுது புரியுது. நீங்கள் இல்லைத்தானே...

    ReplyDelete
  12. //ஆதிரை said...

    வந்தி, குடைக்குள் ரகசியம்... புரியுது புரியுது. நீங்கள் இல்லைத்தானே...//

    நான் பச்சை மண் ஐயா, நம்பவில்லை என்றால் லோஷனிடம் கேளுங்கள்.

    ReplyDelete
  13. ஆகா..
    நானும் இதைப்பற்றி எழுதியிருக்கிறேன். பார்க்க http://visaran.blogspot.com/2010/07/blog-post_7265.html
    இதுவும் விசாப்பிள்ளையாரின்ட மகிமையோ? ஓ மை கோட்..

    ReplyDelete
  14. //விசாப்பிள்ளையார் முன்றலில் என்னையோ அல்லது என் அன்னையையோ அல்லது அத்தையையோ அல்லது ........ காணக்கிடைக்கலாம். தயவு செய்து அப்போது மட்டும் கல்லெறியாதீர்கள்.//

    இதுதான் எல்லோருடைய நிலைமையும் ......!

    ReplyDelete

You might also like