Search This Blog

Sunday, September 20, 2009

பத்துக் கேள்விகளும் வந்தியத்தேவனின் பதில்களும் - 2

"வானொலி மூலம் வலைப்பதிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினமான காரியம். பல பிரபல வானொலி அறிவிப்பாளர்கள் வலைப்பதிவர்களாக இருந்தும் வானொலியில் ஒன்றும் செய்யமுடியாத நிலை. இதற்கான விளக்கத்தை அவர்கள் தந்தால் நல்லது." - வந்தியத்தேவன்.

2006 ஜூலை தொடக்கம் இன்று வரை - மூன்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையிலிருந்து என் உளறல்கள் எனும் பெயரிலான வலைத்தளத்தில் எழுதி வருபவர் வந்தியத்தேவன். வலையுலகம் தொடர்பாக இவரி்டம் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான தன் கருத்துக்களை பகிர்கின்றார். அதன் இறுதிப்பகுதி இது. முதல் பகுதியை இங்கு பார்க்கலாம்.

கேள்வி: இணையத்தில் அதிகமாக இந்தியச் சொற்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இலங்கைப் பதிவர்களும் பொருள் விளக்கமின்றி அச்சொற்களை பயன்படுத்த ஆரம்பித்து இசைவாக்கம் பெற்றுவிட்டார்கள் எனும் ஆதங்கம் ஒன்று எழுகின்றது. 2006 ஆம் ஆண்டிலிருந்து இணையத்தில் எழுதி வரும் உங்களின் இது தொடர்பான பார்வை...

பதில்: இணையத்தில் மட்டுமல்ல பொதுவாகவே தமிழகத்தில் பயன்படுத்திவரும் சொற்கள் குறிப்பாக சினிமாவில் பாவிக்கப்படும் சொற்கள் எம்மிடம் பரவுவது வழமை. முன்னர் நல்லாயிருக்கு என ஒரு விடயத்தை குறிப்பிட்ட நாம் இப்போது சூப்பர் என்கின்றோம் (சூப்பர் தமிழ்ச் சொல் அல்ல). அத்துடன் வடிவேல், விவேக் வசனங்களை சின்னவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்துகின்றோம், உதாரணமாக சப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே, எஸ்கேப் போன்ற வசனங்கள்.

இணையத்தைப் பொறுத்தவரை கும்மியடித்தல், மொக்கை போன்ற சொற்கள் தமிழகத்திடம் இருந்து பெற்றுக்கொண்டவையே. இவற்றை நம் பதிவர்கள் விளக்கமின்றிப் பயன்படுத்துகின்றார்கள் என்பது ஏற்புடையது அல்ல. அவர்கள் விளங்கியே பயன்படுத்துகின்றார்கள். அதே நேரம் இணையத்தில் கூடுதலாக தனித் தமிழில் பதிவுகள் காணப்படுவது சிறப்பு. காரணம் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகைகள் என அனைத்தும் தமிங்கிலீஸ்க்கு மாறும்போது வலைப் பதிவர்கள் பெரும்பாலும் தனித் தமிழுடன் நிற்கின்றார்கள்.

சென்னைத் தமிழில் சொன்னால் வலையில் பீட்டர் விடும் பதிவர்கள் குறைவு. அதே நேரம் அவர்களுக்கு நம்மவர்களின் எழுத்து நடையும், வட்டாரச் சொற்களின் பயன்பாடும் இணையம் மூலம் தெரியவந்திருக்கின்றது என்ற உண்மையையும் மறக்ககூடாது.


கேள்வி: இலங்கையிலிருந்து இணையத்தில் எழுதுபவர்களை ஊடகங்கள் கணக்கில் எடுப்பதில்லையெனும் குற்றச்சாட்டு தொடர்பான உங்களின் கருத்து...

பதில்: இங்கே ஊடகங்கள் எனும் போது பத்திரிகை, சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவை உள்ளடக்கப்படும். பத்திரிகைகளில் முன்னர் தினக்குரலில் இலங்கையைச் சேர்ந்த வலைப்பதிவர்கள் பற்றிய தகவல்கள் வந்தன. மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் இன்றும் இலங்கை வலைப்பதிவர் மட்டுமல்லாது ஏனைய சிறந்த வலைப்பதிவுகள், இணையப் பக்கங்கள் பற்றிய செய்திகள் வருகின்றது. சஞ்சிகைகளில் மல்லிகையில் பல காலமாக திரு.மேமன்கவி அவர்கள் "மின்வெளிதனிலே" என்ற தலைப்பில் வலைகள் பற்றி எழுதுகின்றார். அண்மையில் நடந்த இலங்கை வலைப் பதிவர் சந்திப்புப் பற்றி இந்த மாத மல்லிகையில் எழுதியுள்ளார். இருக்கிறம் சஞ்சிகை சில வலைப்பதிவர்களின் ஆக்கங்களை வெளியிட்டிருக்கின்றது, ஆனால் வலைப்பதிவுகள் பற்றிய விடயங்கள் வெகு குறைவு. அத்துடன் அங்கே ஆக்கங்கள் எழுதுபவர்கள் வலைப் பதிவர் என எந்த ஆதாரமும் அவர்கள் இடுவதில்லை.

மற்றும் படி வலைப் பதிவுகள் பற்றிய செய்திகளோ, வலைப் பதிவர் பற்றிய தகவல்களோ பத்திரிகைகள் சஞ்சிகைகளில் பெரும்பாலும் வருவதில்லை.

வானொலி மூலம் வலைப்பதிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினமான காரியம். பல பிரபல வானொலி அறிவிப்பாளர்கள் வலைப்பதிவர்களாக இருந்தும் வானொலியில் ஒன்றும் செய்யமுடியாத நிலை. இதற்கான விளக்கத்தை அவர்கள் தந்தால் நல்லது.

தொலைக்காட்சியைப் பொறுத்தவரை எங்கள் நாட்டுத் தொலைக்காட்சிகள் மெஹாசீரியலிலே பெரும்பாலும் தங்கியிருக்கின்றார்கள். இந்தியத் தொலைக்காட்சிகள் வலைப்பதிவர்களுக்கும் வலைப் பதிவுகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் நம் தொலைக்காட்சிகள் கொடுக்கவேயில்லை.

தொலைக்காட்சியினூடாக புதிய பதிவர்களை உள்வாங்குவது மிகவும் இலகு. காலை நேரத்தில் தலைவிரி கோலமாக நடத்தும் நிகழ்ச்சிகளில் இவர்கள் வலைப்பதிவுகளை அறிமுகப் படுத்தலாம் ஆனால் ஏனோ செய்வதில்லை. சில வேளைகளில் அவர்களுக்கு இது பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் பிரபல பதிவர் கேபிள் சங்கர் அவர்கள் ஜெயா தொலைக்காட்சியில் வலைப் பதிவு பற்றிய பல கருத்துகளை ஒரு நேரடி ஒளிபரப்பின் மூலம் தெரிவித்தார்.

முதலில் வலைப் பதிவு என்றால் என்ன? எப்படி வலைப்பதிவு செய்வது? இணையத்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி ஊடகங்கள் தெரிவித்தால் தான் மற்றவர்களுக்கும் இவை பற்றித் தெரியும். அதைவிடுத்து விட்டு நீங்கள் முதலில் ஆக்கபூர்வமாக எழுதுங்கள் பின்னர் ஊடகங்களைப் பார்க்கலாம் என்பது சின்னப் பிள்ளைத் தனமான கருத்து.

தினக்குரலில் பதிவர்கள் பற்றிய கட்டுரை வந்த நேரங்களில் பல வாசகர்கள் கிடைத்தார்கள் என்பது உண்மை.

அதே நேரம் இந்திய ஊடகங்கள் வலைப் பதிவர்கள் மேல் தங்களது பார்வையை வீசத் தொடங்கிவிட்டன. பல பதிவர்கள் விகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகளில் எழுதுகின்றார்கள்.

ஆனால் அந்த நிலைமை இங்கே இன்னும் வரவில்லை. பத்திரிகைகள், சஞ்சிகளைகளுக்கு கொடுத்த ஆக்கங்கள் பல அச்சேறுவதேயில்லை. ஆனால் வலையேறி பலரின் பாராட்டை பெறுகின்றது. இதற்கான காரணம் சிலவேளைகளில் வலைப் பதிவர்கள் பிரபலமாக இல்லாததுமாக இருக்கலாம்.

அத்துடன் மிகமுக்கியமான விடயம் வலைப்பதிவுக‌ள் ஏற்படுத்தும் தாக்கங்கள். அண்மையில் வெளியான கந்தசாமி திரைப்படத்திற்க்கு வலைப்பதிவர்கள் எழுதிய நேர்மையான நடுநிலையான விமர்சனங்கள் தயாரிப்பாளர்களையும், சில இயக்குனர்களை கடுப்பாக்கியிருக்கிறதாக ஒரு இணையம் செய்தி வெளியிட்டது.

வலைப்பதிவர் ஏனைய ஊடகங்கள் போல் சுமாரான படத்தை சூப்பர் என விமர்சிக்கவோ இல்லை நல்ல படத்தை குப்பை என விமர்சிக்கவோ இல்லை. அவர்கள் தங்கள் பாணியில் படத்தின் நல்லது கெட்டதுகளைச் சொல்கின்றார்கள்.

கேபிள் சங்கரின் திரைவிமர்சனத்தைப் படித்துவிட்டு படம் பார்க்க போகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

அடுத்ததாக இந்த வருடம் தென்னாபிரிக்காவில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர் அணியின் உள்வீட்டு ரகசியங்களை வெளிக்கொணர்ந்த போலி ஐபிஎல் வீரரும் வலைப்பதிவர்தான்.

ஆகவே வலைப்பதிவர்களின் பதிவுகளினால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்டவர்களை எங்கள் நாட்டு ஊடகங்கள் கண்டுகொள்ளாதது கவலையளிக்கின்றது.


கேள்வி: மூன்று வருட உங்களின் இணைய எழுத்தில் சிறந்ததென நீங்கள் கருதும் உங்களின் படைப்பு ஒன்றும், நீங்கள் வாசித்ததில் இன்றும் நினைவிலிருந்து அகலாத படைப்பு ஒன்றும் கேட்டால்...

பதில்: நான் எழுதியவற்றில் பல படைப்புகள் எனக்குப் பிடித்திருந்தாலும் தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் என்ற படைப்பு மிகவும் பிடித்திருந்தது. இதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம். ஒன்று நான் ஒரு கமல் ரசிகனாக இருப்பதால் அவரைப் பற்றி சுவையாக எழுதியது. இன்னொன்று சென்ற வருடம் தமிழ்மணம் நடாத்திய "தமிழ்மணம் விருதுகள் 2008" போட்டியில் காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்) என்ற பிரிவில் பத்தாவது இடத்தைப் பிடித்தது. (இணைப்பு - http://awards2008.tamilmanam.net/polls/?p=9)

அதே நேரம் பலரால் பாராட்டப்பட்ட பதிவாக அண்மையில் மீள் பதிவு செய்த "வாசிப்பு ஒரு தவம்" என்ற பதிவைக் குறிப்பிடலாம்.

பல படைப்புகள் மனதை விட்டு அகலாது இருந்தாலும் சில மட்டும் ஏனோ இன்னமும் ஞாபகம் இருக்கும். கானாபிரபாவின் 2006 செப்டம்பரில் எழுதிய "அந்த நவராத்திரி நாட்கள்" என்ற பதிவு மனதில் நிற்க காரணம் அவர் அந்த நாளில் நாம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுகின்ற சரஸ்வதி பூஜை பற்றி மண் மணத்துடன் எழுதியிருந்தார்.

அத்துடன், மு.மயூரனின் சர்ச்சை ஏற்படுத்திய பதிவான அவர் 2005 மேயில் எழுதிய "கம்பன் விழா மேடைக்கு ஏன் கல்லெறிய வேணும்?" என்ற பதிவு. அந்தப் பதிவு மனதில் நிற்க காரணம் அந்த நாட்களில் எந்த நிகழ்ச்சி பற்றியும் எதிர்க் கருத்துகள் வராத போது மிகவும் துணிவுடன் மு.மயூரன் தன் கருத்துகளைக் கூறியிருந்தார். மு.மயூரன் என்றால் இன்றைக்கும் ஏனோ கம்பன் கழகம் மனதில் வந்துபோகும்.


கேள்வி: இணையத்தில் எழுத வந்ததன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்...

பதில்: மறக்கமுடியாத அனுபவம் என்றால் அது நிச்சயமாக பதிவர் சந்திப்புதான். சந்திப்பில் பேசியவைகள், விவாதித்தவைகள் எல்லாவற்றையும் விட பல நண்பர்களை எனக்குத் தந்திருக்கின்றது. இதில் சிலர் எனது பாடசாலை மாணவர்கள் என்பது இன்னும் பெருமை. இந்த நட்பு இப்போது தொலைபேசி உரையாடல்கள், ட்விட்டர் கும்மிகள், ஜீமெயில் அரட்டைகள், நேரடிச் சந்திப்புகள் என தொடர்கின்றது.

இவர்களில் பலர் என்னைவிட ஓரிரண்டு வயது குறைந்தவர்கள் என்பதால் தம்பியாகவே பழகுகின்றேன். தம்பி உடையான் படைக்கஞ்சான் என்பார்கள். எனக்கு இப்போ புல்லட், ஆதிரை, சதீஸ், கெளபாய் மது, சுபானு, நிமல், யோகா, மருதமூரான் (அறிவில் எனக்கு அண்ணன்), பால்குடி எனப் பல தம்பிகள் கிடைத்திருக்கின்றார்கள்.

அத்துடன் இந்த சந்திப்பின் மூலம் நிறைய நண்பர்கள் நேரடியாகவும் வலைமூலமும் நண்பர்களாயிருக்கின்றார்கள். குறிப்பாக சந்ரு, கீத், கரவைக்குரல், சினேகிதி, மயூரேசன், மாயா, மயூரன்(பல காலமாகத் தெரிந்தவர்), சயந்தன், டொன்லீ, சேரன், கனககோபி, யாழினி, சம்யுக்தா என நம்பவர்களின் பட்டியல் நீளும் (தவறவிட்டவர்கள் மன்னிக்கவும்).

இவர்களை விட உலகம் முழுவதும் இருந்து நிறைய சொந்தங்கள் கிடைத்திருக்கிறார்கள். வலையைத் தாண்டி சிலருடன் நட்புகள் நீடிக்கின்றது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து என்னை ஊக்குவிக்கும் அத்துடன் என்னுடன் வலைமூலம் நண்பர்களாக இருக்கும் நண்பர்களின் பெயரைக் கூறினால் இன்னொரு பதிவு போடவேண்டிய நிலை ஏற்படும்.

அத்துடன் இந்த இடத்தில் இருவரைக் குறிப்பிடவேண்டியது என் கடமை. வர்மா அவர்கள் என்னுடைய சகல பதிவையும் நான் எழுதுகின்ற காலத்தில் இருந்து படித்து தன்னுடைய விமர்சனங்களைக் கூறுகின்றவர். இன்னொருவர் லோஷன் என்னுடன் படித்தவர் இடையில் இருவரும் வெவ்வேறு திசைகளில் சென்றபடியால் சில காலம் சந்திக்காமல் இருந்துவிட்டோம், பின்னர் அவர் வலைஞனான பின்னர் தொடர்புகள் ஏற்பட்டது. என்னுடைய இன்னொரு நல்ல வாசகர். பதிவுகளை ரசித்துப் படிப்பதாக அடிக்கடி கூறுவார். இவர்களிருவரின் அக்கறைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றிகள்.


கேள்வி: இப்போது இலங்கையிலிருந்து பலர் இணையத்தில் எழுத ஆரம்பித்துள்ளார்கள். அவர்களுக்காக நீங்கள் கூறுவது...

பதில்: வரவேற்கத் தக்க விடயமாகும். இதன் தாக்கம் இலங்கைப் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட பல புதியவர்களைப் பார்க்கும் போது தெரிந்தது. அத்துடன் அவர்களில் எழுத்துகளில் வித்தியாசமான கோணங்களில் இருக்கின்றன. ஆண் பதிவர்கள் பலதும் பத்தும் எழுதும்போது பெண் பதிவர்கள் பெரும்பாலும் கவிதைகளுடனேயே நின்றுகொள்கின்றார்கள்.

எதிர்காலத்தில் புதியவர்கள் மூலம் காத்திரமான படைப்புகள் வருகின்ற சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றது. இவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல, ஆனாலும் வலையுலகில் 3 ஆண்டுகள் குப்பை கொட்டியவன் என்ற வகையில் அவர்களுக்கும் சொல்லும் ஆலோசனை நிறைய வாசிக்கவும், திட்டமிட்டு உங்கள் படைப்புகளை எழுதவும், ஒரு விடயத்தில் மட்டும் நின்றுவிடாது பலதும் பத்தும் எழுதவும், முக்கியமாக உங்கள் ஆக்கம் தரமானதோ இல்லையோ என சந்தேகப்படாது முயற்சி செய்யவும்.

இதுவரை என்னுடைய உளறல்களை பதிவு செய்த நண்பர் ஆதிரைக்கு நன்றிகள் என்னுடன் மட்டும் நின்றுவிடாது பலரையும் பேட்டி வடிவில் அவர்களின் கருத்துக்களைக் கேட்டு பதிவுகள் இட அவருக்கு வாழ்த்துகள்.

நன்றி.

11 comments:

  1. நல்ல பதில்கள். இலங்கைப் பதிவல் சந்திப்பைத் தவறவிட்ட எனக்கு இப்போது உங்கள் எல்லோரையும் இப்படுப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. அடுத்த பதிவர் சந்திப்பில் நிச்சயம் பார்க்கலாம்.

    ReplyDelete
  2. பதில்கள் அருமை.. வந்தி குறிப்பிட்ட அந்தப் பதிவுகள் அனைத்துமே இன்று மீள் வாசித்தேன்.. :)

    //வானொலி மூலம் வலைப்பதிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினமான காரியம். பல பிரபல வானொலி அறிவிப்பாளர்கள் வலைப்பதிவர்களாக இருந்தும் வானொலியில் ஒன்றும் செய்யமுடியாத நிலை. இதற்கான விளக்கத்தை அவர்கள் தந்தால் நல்லது. //

    காட்சி சம்பந்தப்பட்டது இவை.. நான் முன்பு நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டது வலைப்பதிவு ஆரம்பித்தல் சம்பந்தமான விளக்கங்கள் பொறிமுறை பற்றி.. அதையெல்லாம் விலாவாரியாக வானொலியில் சொன்னால் கேட்பவன் கண்ட வார்த்தைகளால் திட்டி விட்டு போய்விடுவான்..

    ஆனால் வந்தி நீங்கள் கேட்டிருப்பீர்கள் கிடைத்தவரை எனது நிகழ்ச்சிகளில் பதிவர்களைப் பற்றி பதிவுகளைப் பற்றி பேசி இருக்கிறேன்.

    சனிக்கிழமை ஏன் எதற்கு எப்படி நிகழ்ச்சியில் முன்பே பதிவுகள் பற்றி ஒரு சஞ்சிகை நிகழ்ச்சி பிரதீப் வழங்கி இருக்கிறார்..
    இனியும் தொடர்ந்து முடியுமானவரை செய்வோம்.. திருப்தி?

    'தலைவிரி' நீங்கள் தான் கேட்டு 'பார்க்கணும்' ;)
    பத்திரிகைகள் எம்மை விட அதிகமாகவே செய்யலாம்.

    ReplyDelete
  3. //இதுவரை என்னுடைய உளறல்களை பதிவு செய்த நண்பர் ஆதிரைக்கு நன்றிகள் என்னுடன் மட்டும் நின்றுவிடாது பலரையும் பேட்டி வடிவில் அவர்களின் கருத்துக்களைக் கேட்டு பதிவுகள் இட //

    அது எங்கே இனி.. இதொடேயே பையனுக்கு வெறுத்திருக்கும்.. ;)

    ஒரு சீரிய பணி செய்த ஆதிரைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. வந்தி அண்ணாவின்ர நல்ல படத்தை போடட்டாம் அந்தாள் சரியா கவலைபடுது....

    ReplyDelete
  5. உங்கள் முயற்சி பாராட்டப்பட வேண்டியது... தொடருங்கள்....

    வந்தியின் அழகான படங்களைப் போடவில்லை என்று கவலையாக இருக்கின்றார். நண்பனுக்கு இப்படி துரோகம் செய்யலாமா?

    லோஷன் அண்ணா சொல்வதனைப்போல் பத்திரிகைகள் பதிவர்கள் தொடர்பாகவும் பதிவுகள் தொடர்பாகவும் முக்கியத்துவப் படுத்தலாம். இதனை பத்திரிகைத்துறையில் இருக்கும் பதிவுகள் செய்யலாம்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஆதிரை. நன்றி வந்தி என்னையும் தம்பி என குறிப்பிட்டதற்கு...

    ReplyDelete
  7. இரண்டாவது பாதியிலும் கலக்கியிருக்கிறீர்கள் வந்தியண்ணா...

    அழகான பதில்கள்...

    அதுசரி...
    மேல போட்டிருக்கிற உங்கட படம் 10 வருஷத்துக்கு முதலா அல்லது 15 வருஷத்துக்கு முதலா எடுத்தது?

    ஆதிரை அண்ணாவாவது உண்மைய சொல்லவும்...

    ReplyDelete
  8. ஆதிரைக்கு ஒரு தேங்ஸ் சொல்ல மறந்திட்டேன்.

    இன்னும் கலக்குங்க.
    (வந்தி உங்களையும் தான்)

    ReplyDelete
  9. //தலைவிரி கோலமாக நடத்தும் நிகழ்ச்சிகளில் இவர்கள் வலைப்பதிவுகளை அறிமுகப் படுத்தலாம் //

    அதிகாலை நிகழ்ச்சி அறிவிப்பாளர்களுக்கு தேடல் மிகக் குறைவாகவே இருக்கிறது.

    ஊடகம் எனும்போது தொழிலுக்கு அப்பால் மாபெரும் சமூகப்பொறுப்பு தமக்கு இருப்பதாக நினைக்க வேண்டும். ஆனால்....

    //

    பத்திரிகைகள் எம்மை விட அதிகமாகவே செய்யலாம்.//

    நிச்சயமாக லோஷன். ஆனால் இதை ஊடகம் சாராத வலைப்பதிவர் அல்லது வெளிநபர் எழுதவேண்டும். இல்லையெனில் சுயலாபத்துக்காக எழுதுவது போலாகிவிடும்.

    விரைவில் நான் எழுதுகிறேன்.

    ReplyDelete
  10. பேட்டி நல்லா இருக்கு..

    Thanks!!

    ReplyDelete
  11. என் பங்காச்சே...பதில்கள் அனைத்தும் அருமை :)

    ReplyDelete

You might also like