Search This Blog

Sunday, January 24, 2010

ஆச்சி வாக்களிக்கப் போகின்றாள்



காலம் தெட்டத்தெளிவாக தன் கையெழுத்துக்களை இவள் முகத்தில் பதித்திருக்கின்றது. எண்பது ஆண்டுகள் அவளைத் தாங்கிய மண்ணில் இப்போது தாங்கி நிற்பது கைத்தடி மட்டுமே... இறப்புக்குப் பின்னான வாழ்க்கையை ஆய்வு செய்யும் விஞ்ஞானம் முடிவைச் சொல்லும் முன்னர் இவள் முடிவறிந்திடுவாள். ஓலைக்குடிசை வீட்டிலிருந்து வீதிக்கு வருகின்றாள் ஆச்சி.

நேற்றும் இப்படித்தான்... அதிகாலைப் பொழுதொன்றில் வீட்டுக்கதவு தட்டப்படும். அதை எதிர்பார்த்திருந்ததாய் இவள் நித்திரை கலைய... சிலவேளைகளில் கதவு திறக்கப்படும் முன்னரே அவர்கள் உள் நுழைந்திருப்பார்கள். அடையாள அட்டை காட்டி... பானைக்குள் பழஞ்சோறு இல்லை என மெய்ப்பித்து... சேலைகள் உதறி எவரும் இங்கில்லை எனக் காட்டினாலும் இவள் கொட்டியா இல்லை என்பதை நிரூபிக்க வீதிக்கு வரத்தான் வேண்டும். ஆட்டும் தலைகளுக்கு மத்தியில் நரைகளும் அணிவகுத்துத் தான் போனார்கள்.

ஆனால், காலம் இன்று மாறியிருக்கின்றதாய் உணர்வு... சோதனைச் சாவடி இல்லை... நரைகளுக்கும் மட்டுமல்ல இளசுகளுக்கும் தான் அடையாள அட்டை கட்டாயம் இல்லை... அந்தக் கட்டாயத்தை செல்போன்கள் மாற்றீடு செய்து கொண்டன. நடு முற்றத்தில் இருந்து நிலாவை ரசிக்க முடிகின்றது. அர்த்த சாமத்தில் குரைக்கின்ற நாய்களுக்கு காரணங்கள் கூட மாறி விட்டன. ஆமியின் வருகையின்றி பாமினியின் குடிகாரப் புருசனின் தள்ளாடும் தாலாட்டு. இவைகள் நிஜங்களா...? வலிகளா...? அல்லது பிரமைகளா..?

ஒரு முறை தொட்டுப்பார்த்து உறுதி செய்து கொண்டாள். வாக்குச் சீட்டும் அடையாள அட்டையும் பத்திரமாகவே இருந்தன... சுருங்கிக் கொண்டிருக்கும் ஞாபகத்திரைக்குள் புள்ளடி போடும் சின்னத்தை கொண்டு வரும் முயற்சியிலும் வெற்றிதான். அவனுக்குத்தான்...!!!

எவனுக்கு...??? காவலுக்கு நின்ற காக்கிகளின் குழல்கள் இவளைக் கேட்பதாய் ஒரு பிரமை. ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தின் பெயரால் உதை மட்டும் மறைத்துக் கொண்டாள்.

நேற்று வரை வந்த தேர்தல்களுக்கு தெரிவும் அங்கிருந்தேதான் வந்தன. உடன்பட்டுக் கொண்டாள். தன் உயிர் வாழ்தலுக்காக உதிரம் சிந்துகின்ற உள்ளங்களுக்காக மறு பேச்சின்றி புள்ளடி போட்டாள்... சிலசமயங்களில் ஒதுங்கி நின்றாள். உண்ணச் சோறில்லை என்ற போதும் உணர்வில் தேசியம் இருந்ததாய் இறுமாந்திருந்தாள்.

இன்று அப்படி இல்லையே...!!! இடி விழுந்த போது தூக்கி நிறுத்த யாராவது வருவார்கள் என்று நம்பியிருந்தாள். முப்பது வருட உதிரப்பாய்ச்சல் முடிந்து... மௌனிக்கின்றோம் என்ற போது, முடிந்து போனதென இவள் முற்றுப்புள்ளி இடவில்லை. வளர்த்து விட்ட விதை ஒன்று விருட்சமாகி அரசியல் தலைவனாவான் என்றிருந்தாள்.

ஒன்றல்ல... ஒருத்தருக்குப் பின் ஒருத்தராய்ப் பலர் வந்தார்கள். புலியாக அல்ல... நரிகளாக! அறிக்கைகளினால் அர்ச்சனை செய்தபடி, மாறிமாறி முகங்களில் எச்சிலை உமிழ்ந்து பங்கிட்டுக் கொண்டார்கள். நான் தான்... நான் தான் என அறிக்கைகளில் பெயர் காட்டி மக்களின் வலிகளை ஆற்றிட முடியுமா?

இப்போது இவளுக்கு முன் இரு தெரிவுகள். வளமான எதிர்காலம்... நபிக்கையான மாற்றம்... ஏதாவது ஒன்றுக்கு இவள் புள்ளடி விழத்தான் போகின்றது. அவர்கள் கால் நக்கி வாழும் ஈனப்பிறவியென யாரோ ஒருத்தன் இவளைச் சபிக்கக் கூடும்... இவளுக்கு என்ன கவலை? இணையத்தின் நிறம் தெரியாதவரைக்கும்.

இவளைத் தாங்கியிருக்கும் பொல்லுக்கு தங்க முலாம் பூசி வளமான எதிர்காலம் காட்டப்படலாம்.

இவளின் நரைத்த தலைக்கு “டை” அடித்து, இளைமை திரும்பியதாய் நம்பிக்கையான மாற்றமும் உணர்த்தப்படலாம்.

இப்போது இவள் முறை. அப்போது தான் எப்போதும் இவள் கூட வருகின்ற செல்லம்மா ஞாபகத்துக்கு வந்தாள். மறுகணம் மனது ஆறுதல் செய்து கொண்டது... செல்லம்மா இன்றைக்கும் மகனைத் தேடி ஐ.சி.ஆர்.சி. போறனென்றவள்.

ஆச்சி கையைக் காட்டுங்கோ... மை பூசப்படுகின்றது.

15 comments:

  1. அடிச்சு சொல்லுறன்... மாற்றம் ஒன்று தேவை..
    ஆனால் மாறாது ஐயா மாறாது,,, அடிச்சு சொல்லுறன்..

    ReplyDelete
  2. அண்ணே.....
    கதை நல்லாயிருக்கண்ணே....

    ஒவ்வொரு முறையும் கதையை முடிக்கிறது வித்தியாசமா இருக்கு..... :)

    ReplyDelete
  3. //இப்போது இவளுக்கு முன் இரு தெரிவுகள். வளமான எதிர்காலம்... நபிக்கையான மாற்றம்... ஏதாவது ஒன்றுக்கு இவள் புள்ளடி விழத்தான் போகின்றது. அவர்கள் கால் நக்கி வாழும் ஈனப்பிறவியென யாரோ ஒருத்தன் இவளைச் சபிக்கக் கூடும்... இவளுக்கு என்ன கவலை? இணையத்தின் நிறம் தெரியாதவரைக்கும்//

    ம்...

    ReplyDelete
  4. கதை அருமை, கலக்கல்..;)

    ReplyDelete
  5. அருமை ஆதிரை ஹடரிக் கதை..ஆ...

    ReplyDelete
  6. //அர்த்த சாமத்தில் குரைக்கின்ற நாய்களுக்கு காரணங்கள் கூட மாறி விட்டன//

    You have to try poems.interesting wording.

    ReplyDelete
  7. @ப்ரியானந்த சுவாமிகள்
    //அடிச்சு சொல்லுறன்... மாற்றம் ஒன்று தேவை..
    ஆனால் மாறாது ஐயா மாறாது,,, அடிச்சு சொல்லுறன்...//


    சுவாமிகளே... உதைச் சொல்லும் போதாவது அடிக்காமல் சொல்லலாமே... இன்னும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் தலைவிதி எழுதப்பட்டு விடும்.

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  8. @கனககோபி
    //அண்ணே.....
    கதை நல்லாயிருக்கண்ணே....
    ஒவ்வொரு முறையும் கதையை முடிக்கிறது வித்தியாசமா இருக்கு..... :)


    @Bavan
    //கதை அருமை, கலக்கல்..;)

    @Balavasakan
    //அருமை ஆதிரை ஹடரிக் கதை..ஆ...


    நன்றி தம்பிங்களா...

    ReplyDelete
  9. @புல்லட்
    //கொஞசக்கதையை மொத்தமா எழுதி புத்தகமா விக்கப்பார்.. உண்மையா நல்லாருக்கு..
    புத்தகம் பதிக்கப்போய் நொந்துகொள்வான் ஏன்?

    கூகிள் ஆண்டவர் கைவிடாத வரைக்கும் இங்கே செட்டிலாகிற பிளான்.

    நன்றிடா

    ReplyDelete
  10. @Subankan
    //
    //இப்போது இவளுக்கு முன் இரு தெரிவுகள். வளமான எதிர்காலம்... நபிக்கையான மாற்றம்... ஏதாவது ஒன்றுக்கு இவள் புள்ளடி விழத்தான் போகின்றது. அவர்கள் கால் நக்கி வாழும் ஈனப்பிறவியென யாரோ ஒருத்தன் இவளைச் சபிக்கக் கூடும்... இவளுக்கு என்ன கவலை? இணையத்தின் நிறம் தெரியாதவரைக்கும்//

    ம்...
    //


    நன்றி சுபாங்கன்

    ReplyDelete
  11. @cherankrish
    //
    //அர்த்த சாமத்தில் குரைக்கின்ற நாய்களுக்கு காரணங்கள் கூட மாறி விட்டன//

    You have to try poems.interesting wording.
    //


    நன்றி சகோதரா...

    இன்னொரு இடத்தில் முயற்சிக்கின்றேன். (எஸ்கேப்பிசம்...!!!)

    ReplyDelete
  12. நல்லாக உணர்ந்து எழுதியிருக்கிரீரப்ப...

    ReplyDelete
  13. ம்ம்ம்ம் நீண்ட பெரு மூச்சு இன்று வருகிறது.

    அன்றே கதை வாசித்திருந்தாலும், இன்று பின்னூட்டம் போடும்போது வெறுமையான ஒரு உணர்வு.. ஆச்சியாக நானும்,நாமும்

    புல்லட்,
    இனி ஆதிரை 'அவர்களை' இடிக்க மாட்டார்.. வருங்காலத்தில் ஆதிரையும் 'அவர்களாக' மாறலாம்..

    ReplyDelete
  14. //இனி ஆதிரை 'அவர்களை' இடிக்க மாட்டார்.. வருங்காலத்தில் ஆதிரையும் 'அவர்களாக' மாறலாம்...//

    அவர்களாக மாறலாம்... ஆனால், ஆச்சியை மறக்கமாட்டேன்.

    நன்றி பின்னூட்டத்துக்கு.

    ReplyDelete
  15. நம்ம பாக்கமும் கொஞ்சம் பார்வைய செலுத்துறது...

    ReplyDelete

You might also like