Search This Blog

Wednesday, February 17, 2010

போர் முகத்தில்...


( சில கவிதைகள் படித்ததும் மனதினில் ஆணி அடித்தது போன்ற உணர்வைத் தந்துவிடும். இக்கவிதையைப் படித்த போதும் இனம் தெரியாத ஏதோவோர் உணர்வு என்னைத் தைத்தது. பேராசிரியர்.சி.சிவசேகரம் அவர்களினால் எழுதப்பட்ட இக்கவிதையை நன்றியுடன் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். )


என் முகத்தில் எதைக் காண்கிறாய் என வினவியது போர்...

இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்
இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி
குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்
போர்ப் பறைகளை எனச் சொன்ன இளைஞனைத் தொடர்ந்து
ஒப்பாரியை என முனகினாள் ஒரு பாடகி...
கண்ணி வெடிகளை எனக் கூவினான் ஒரு முடவன்
முடமான காவியங்களை என்றான் ஒரு கவிஞன்
உடல் ஊனமானோரை என்றாள் ஒரு தாதி
மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி
இறக்குமதி வாய்ப்புகளை என்றான் ஒரு விநியோகஸ்தான்...
விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்
மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி
பொருட்களின் தட்டுப்பாட்டை என்றாள் ஒரு குமரி
பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்
தரவேண்டிய என் பங்கை என நினைவூட்டினான் ஒரு சோதனைசாவடி அதிகாரி
இன்னும் விற்று முடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்
என்னுடைய கமிஷனை என்றான் ஒரு தரகன்
குண்டெறியும் விமானங்களை என நடுங்கினான் ஒரு சிறுவன்
மேலெழும் ஏவுகணைகளை எனக் குழறினான் ஒரு விமானி
இரத்து செய்யப்படும் விடுமுறையை என வாடினான் ஒரு சிப்பாய்
போர்க்கால மிகை ஊதியத்தை என்றான் அவனது மேலதிகாரி
மரித்த படையினருக்கான உபகார நிதியை எனப் பொறாமைப்பட்டான் அவனது மேலதிகாரி
என் தலைவிதியை என நொந்தாள் அவனது மனைவி
என் நண்பனின் பிரிவை என் வருந்தினான் அவனது தோழன்...
வீர மரணங்களை என்றான் ஒரு பிரசாரகன்
விடுதலையை என அடித்துரைத்தாள் ஒரு பெண் போராளி
பயங்கரவாதத்தின் முடிவை என கொக்கரித்தான் ஒரு அமைச்சன்
பைத்தியக்காரத்தனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி
பசியில் வாடும் குழந்தைகளை என பதறினாள் ஒரு தாய்
பாலுக்கான கியூ வரிசையை என்றால் ஒரு சிறுமி
போக முடியாத சாலைகளை என முறையிட்டான் ஒரு வண்டியோட்டி
வெறிதான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்
திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டாள் ஒரு ஆசிரியை
நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன்
நடத்த முடியாத நடன நிகழ்ச்சிகளை என்றாள் ஒரு நர்த்தகி
மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு நடிகன்
மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என்.ஜி. ஓ. ஊழியன்
ஏராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்
என்னை என்ற குரல் வந்த திசையில்
கவனிப்பாரற்று கிடந்தது
ஒரு அகதியின் பிணம்....!!!

18 comments:

  1. //என்னை என்ற குரல் வந்த திசையில்
    கவனிப்பாரற்று கிடந்தது
    ஒரு அகதியின் பிணம்....!!! //

    இந்தக் கவிதை உங்களுக்குப் பிடித்துப் போனதில் ஆச்சரியமேதும் இல்லை...

    வார்த்தைகள் இல்லை....

    அருமையான பகிர்வு....

    ReplyDelete
  2. போரின் கொடுமை வலி நிரம்பியது.

    ReplyDelete
  3. //என்னை என்ற குரல் வந்த திசையில்
    கவனிப்பாரற்று கிடந்தது
    ஒரு அகதியின் பிணம்....!!! //

    கடைசி வரியில் கண்கலங்க வைத்துவிட்டார் பேராசிரியர்,,

    போரின் வலிகளையும்
    தமிழனின் மனக்குமுறல்களையும்
    நான் காண்கிறேன் இந்த கவிதையில்,,,,

    ReplyDelete
  4. :( ... Thanks for sharing.

    ReplyDelete
  5. என்ன சொல்வது என்று தெரியவில்லை...

    ReplyDelete
  6. இங்கு அனானியாக இடப்பட்ட "எதிர்க்" கருத்துக்கள் சில வெளியிடப்படவில்லையே.... இது கூட வெளிவிடப்படுமா?

    ReplyDelete
  7. அன்பான அனானியே...
    இங்கு நான் பகிர்ந்துள்ள ஆக்கம் என்னுடையதல்ல. இந்த ஆக்கத்தின் மீது ஏன் மறைந்திருந்து சேறு பூச முயல்கின்றீர்கள். எதிர்க்கருத்துக்கள் - ஆட்சேபனைகள் இருக்குமிடத்து உண்மையாளனாய் வாருங்கள். பிரசுரிக்கத்தயாராக இருக்கிறேன். (அனானியாக என்னுடைய தளத்தில் பிரசுரிக்கப்படும் கருத்துக்கள் சிலவற்றுக்கு நானே பதிலளிக்க வேண்டியவனாகின்றேன். அதனால், அவற்றை தவிர்க்க விரும்புகின்றேன்)

    ReplyDelete
  8. ஒரு பெருமூச்சையே பின்னூட்டமாக .....

    ReplyDelete
  9. என் முகத்தில் எதைக் காண்கிறாய் என வினவியது போர்.............
    மேற்கூறிய அத்தனையிலும் விட இறுதியாய் கூறியது நாமாகவும் இருந்திருந்தால் வலி இல்லை.
    (தங்களது ஒவ்வொரு செயற்பாட்டிலும் தங்களது அப்பாவை தேடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளிற்கு அவர்களின் முகத்திற்கெதிரே உங்கள் அப்பாவை காணவில்லை என்று சொல்ல முடியாத தாயாக இருப்பதை விட ஒரு பிணமாக இருப்பது எவ்வளவோ மேல்.)

    ReplyDelete
  10. மானுடன்February 18, 2010 at 4:43 AM

    சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த கவிதையை வாசித்தேன். இந்த கவிதை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. இது எந்த ஒரு அரசியல் சாயத்தையும் பூசிக்கொள்ளாத, போரின் சுவாலைகளுக்குள் கருகிப்போன ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகளின் வெளிப்பாடு. முகத்தில் அறையும் யதார்த்தம். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  11. //என்னை என்ற குரல் வந்த திசையில்
    கவனிப்பாரற்று கிடந்தது
    ஒரு அகதியின் பிணம்....!!! //

    ம்... :(

    ReplyDelete
  12. ம்ஹ்ம்!, பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  13. http://pungayuran.blogspot.com/2010/02/blog-post_17.html

    இதையும் படித்துப்பாருங்கள்..

    ReplyDelete
  14. முன்பே வாசித்த ஒன்று தான்.. எனினும் மீண்டும் மனதை தொட்டது/சுட்டது

    ReplyDelete
  15. மனதைக் கிழிக்கின்ற வரிகள் தான்...

    ReplyDelete
  16. மனதைக் கிழிக்கின்ற வரிகள் தான்...

    ReplyDelete

You might also like