Search This Blog

Saturday, January 17, 2009

தமிழ் மொழியும் தமிங்கிலிஸும்

"மெல்லத் தமிழினிச் சாகும்..." பாரதி பாட்டிலே சொன்னதற்கு பலர் பலவாறு பொருளுரை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். செம்மொழி... கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்தகுடி உச்சரித்த மொழி... என அடுக்கு வசனங்களில் எங்கள் தமிழ்மொழி வாழ்ந்துகொண்டிருக்கின்றது. ஆனால், எங்களின் நாகரிகம் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் ஆளையும் கடிப்பதைப்போல் ஆடைக்குறைப்பில் முளைவிட்டு இன்று எங்களின் தாய்மொழியையும் சூறையாடிச் செல்கின்றது.

என் நண்பரிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சல் சொன்ன செய்தி கனதியானது... சிந்திக்க வைத்தது. கடந்த மாதம் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் தனது 89 ஆவது வயதில் மரணமடைந்த மரியா ஸ்மித் ஜோனேஸ் என்ற பெண்மணியுடன் 'ஏயக்' என்கின்ற மொழிக்கும் முடிவுரை எழுதப்பட்டுள்ளது. பழங்குடி இன மக்களின் ஒரு மொழியாக விளங்கிய 'ஏயக்' மொழியினை பேசும் திறன் பெற்றிருந்த கடைசிப் பெண்மணிதான் இவர். இவருக்கு ஒன்பது பிள்ளைகள் இருந்த போதிலும் ஒரு மொழியின் முழு உருவமாக விளங்கிய தாயின் இறுதி ஊர்வலத்தில் "மம்மி..." என ஆங்கிலத்தில் தான் அவர்களால் கண்ணீர் சிந்த முடிந்திருக்கின்றது.

எங்கள் மத்தியிலும்- பிறப்பாலும் வளர்ப்பாலும் தமிழராக இருப்பினும் ஆங்கில மொழியில் தான் பேசுவது நாகரிகம் என்கின்ற மோட்டுத்தனமான கலாசாரத்துக்குள் மெல்ல மெல்ல நுழைந்து கொண்டிருக்கின்றோம். இப்போது எல்லாம் 'வணக்கம்' என்கின்ற சொல் எங்கேனும் ஒரு வானொலியின் அல்லது தொலைக்காட்சியின் நிகழ்ச்சித்தொடக்கத்தில் தலைகாட்டிவிட்டுச் செல்ல 'ஹாய்...' என்கின்ற அர்த்தம் புலப்படாத வாக்கியத்தை பிச்சையெடுத்து வைத்து அழகு பார்க்கின்றோம். நன்றி சொல்வதற்கெல்லாம் மனது கூச்சப்பட்டுக்கொள்ள 'தாங்ஸ்' மெல்ல வெளிவருகின்றது.

யாரோ ஒரு வேற்று மொழியாளன் தமிழ் மொழியில் உரையாற்றுகின்றான் என்பதை ஆங்கில
மொழியிலல்லவா எங்களுக்குள் பகிர்ந்து பூரித்துக் கொள்கின்றோம்(?).

இங்கு ஆங்கில மொழிப்பாவனை தப்பென்பதை நான் சுட்டிக்காட்ட வரவில்லை. அப்படிப்பட்ட முட்டாளும் நானில்லை. எங்களின் வாழ்வுச்சிறப்புக்கள், தாண்டி வந்த மைல்கற்கள், சுமந்து வந்த சுமைகள் இவைகள் எல்லாம் ஆங்கிலத்திலும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், வேற்று மொழியியலாளன் எங்களை அறிவதற்காக...

அதை விடுத்து, என் பிள்ளைக்கு ஆங்கிலம் மட்டும் ஊட்டிவிட்டு, தள்ளாடும் வயதிலுள்ள என் பாட்டிக்கு ஆங்கில அகராதி வாங்கிக் கொடுத்துத்தான் உறவுப்பாலம் கட்ட வேண்டுமா?

நினைவுக்கு வரும் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுவது தப்பில்லையென்று நினைக்கின்றேன். இப்போதெல்லாம் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கருத்தாடல்களில் முக்கிய பங்கு வகிக்கும் சமாச்சாரம் என்ன என்பது நான் சொல்லித்தான் தெரிய வேன்டியதில்லை. அப்படியான ஒரு கருத்தாடலில் புலம்பெயர் உறவொன்று தெரிவித்த கருத்துக்கள் நிதர்சனமானவை... கவனத்தை தன்பால் ஈர்க்கவல்லன... "எங்கள் காலத்திலேயே ஒரு முடிவு எழுதப்பட வேண்டும். அல்லாது விடின், புலத்திலேயே உருவாகி அங்கேயே வளர்கின்ற கொஞ்சம் தமிழ் தெரிந்த என் மகனுக்கு தமிழ் தேசியம் பற்றி விளக்கவுரை அளிக்கவேண்டும்". சிந்திக்க....

இப்போது இணையத்திலும் தமிழ்மொழியின் பாவனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதற்காக உழைத்த - உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இணையங்களில் தமிழ் மொழியிலான ஆவணங்களில் பல தமிங்கிலிஸ் வார்த்தைப் பிரயோகங்களில் உலா வருகின்றன. ஆங்கில மொழியில் இருக்க வேண்டுமென்ற அவசியமிக்க தமிழ் சார்ந்த ஆவணங்கள் ஆங்கில மொழியிலேயே இருக்கட்டும். ஆனால், தமிங்கிலிஸ் வகையராவுக்குள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் கோப்புக்களை சம்பந்தப்பட்டோர் - பதிவேற்றம் செய்தோர் இயலுமானவரை தமிழிலேயே மொழி பெயருங்கள். உதாரணத்துக்கு, amma என்பது அம்மா ஆகவும், appa என்பது அப்பா ஆகவும் மாறட்டும். இல்லாதுவிடின், நாளை தமிழ்மொழி
யானது தமிங்கிலிஸ் என்ற மகவை பிரசவித்த வலி தாங்காது உயிர் விடும்.

6 comments:

  1. எங்கடை சனத்துக்கு கன விடயம் புரிவதில்லை!!
    செம்மறி ஆட்டுக்கூட்டம் மாதிரி ஒருத்தன் செய்தா பின்னாலை எல்லோருமே!!!
    அதில் இதுவும் ஒன்று!!
    எங்களால் இயன்றவரை முயற்சிப்போம்!!

    ReplyDelete
  2. // என் பிள்ளைக்கு ஆங்கிலம் மட்டும் ஊட்டிவிட்டு, தள்ளாடும் வயதிலுள்ள என் பாட்டிக்கு ஆங்கில அகராதி வாங்கிக் கொடுத்துத்தான் உறவுப்பாலம் கட்ட வேண்டுமா?//


    மிகச்சிறப்பான வரைவு. ஆயினும் நிச்சயமாக இதுவும் விழலுக்கிறைத்த நீர்தான்.

    ReplyDelete
  3. நேற்று இன்று என்றில்லை. நம்ம தமிழ் ஆக்களுக்கு தமிழ்ப் பற்று எவ்வளவு எண்டு வெள்ளவத்தைக்குப் போனாலே தெரியும். சும்மா தமிழ் தமிழ் எண்டு கட்டிப்பிடிச்சு அழாம, இருக்கிற வரைக்குமாவது(வெளிநாட்டுக்கோ அல்லது பொலிஸ் நிலையத்துக்கோ போகுமட்டாவது) சந்தோஷமா இருப்பம், வெள்ளவத்தை சனம் மாதிரி

    ReplyDelete
  4. தமிழ் மதுரம்January 21, 2009 at 7:00 AM

    நல்லதொரு பதிவு.. சிந்தனைக்குரியவ்ர்களைச் சிந்திக்க வைக்கும் என நினைக்கிறேன்... நானும் இது பற்றியதொரு பதிவு எழுதி உள்ளேன்.. நேரமிருந்தால் என் வலைப்பதிவின் பகுப்பாய்வுகள் பகுதியில் முற்றத்தினைப் பார்க்கவும்.

    ReplyDelete
  5. //எங்களால் இயன்றவரை முயற்சிப்போம்!!
    பெயரிலி... நன்றி. கூடி வடம் பிடித்தால் தான் தேரசையும். முயற்சிப்போம்.

    @புல்லட் பாண்டி
    //ஆயினும் நிச்சயமாக இதுவும் விழலுக்கிறைத்த நீர்தான்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இப்பதிவினைப் பார்த்தவர்கள் எல்லோரும் செந்தமிழில் தான் பேசுவார்கள் என நானும் எண்ணமாட்டேன். ஆனால், அவர்களின் மனச்சாட்சி ஒரு வினாத் தொடுத்திருக்கும்.

    ReplyDelete
  6. @நிஜம்
    சும்மா தமிழ் தமிழ் எண்டு கட்டிப்பிடிச்சு அழாம, இருக்கிற வரைக்குமாவது(வெளிநாட்டுக்கோ அல்லது பொலிஸ் நிலையத்துக்கோ போகுமட்டாவது) சந்தோஷமா இருப்பம், வெள்ளவத்தை சனம் மாதிரி
    உங்களின் வருகைக்கு நன்றி. நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் ஒரு விதத்தில் யதார்த்தம் கலந்தவைகள் தான். ஆனாலும், தமிழை மறந்துவிட்டு சந்தோசமாக இருக்க என்னால் முடியாது. வேண்டுமென்றால் உணர்வற்ற ஜடமாக இருந்து விடுகின்றேன்.

    @மெல்போர்ன் கமல்
    உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. உங்கள் பதிவினையும் நிச்சயம் வாசிப்பேன்.

    ReplyDelete

You might also like