Search This Blog

Thursday, January 22, 2009

ஒரு உளறல்... ஒரு சொதப்பல்...

கேட்கின்ற சேதிகளும்... காணுகின்ற காட்சிகளும் நல்லதாக இல்லை. பட்டுணர்ந்த போதும் காத்துக்கிடக்கின்றோம். தட்டிக்கேட்க யாரும் வருவதாக தெரியவில்லை. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும். ஆதலால், அழுது கொண்டிருக்கின்றோம். இப்போது துடுப்பாட்ட சீசன். காலை, மாலை, இரவு என ஸ்கோர் கேட்டே காலம் ஓடுகின்றது... கண்ணீரும் முடிகின்றது. முறையற்ற பந்து வீசினாலே எச்சரிக்கும் நடுவர்களுக்கு......... ம்... இவ்வாக்கியத்தை முடிக்கின்ற சொற்கள் சுயதணிக்கைக்கு ஆளாகின்றன. "பயந்தவன்..." நீங்கள் திட்டினாலும் கேட்பேன்; நையாண்டி செய்தாலும் சகிப்பேன்.

"நீண்ட நாளாக எந்தப்பதிவையும் காணவில்லை... வேலை தலைக்கு மேலேயா..?" வினவிய நண்பருக்கு மெளனம்தான் பதிலாய் கிடைத்தது. அவருக்கு எங்கே தெரியப்போகுது... எழுதிய மூன்று பதிவுகள் சுய தணிக்கையின் பின் உயிரற்ற முண்டம் போன்று பொருளற்று குப்பைக்கூடைக்குள் ஆழ்ந்து தூங்குவது.

யாரையும் நினைத்துக்கொண்டு படுத்தால் கனவில் வருவார்கள் என்று என் பாட்டி அன்று சொன்னது உண்மைதான். அவள் நேற்றும் கனவில் வந்தாள். பத்து வயது... இவ்வருடம் புலமைப்பரிசில்
பரீட்சை வேறு. இப்போது எந்தக் கானகம் அவளின் உறைவிடமோ தெரியவில்லை. சுனாமி அடித்த போது - அவள் இல்லையென்றே எல்லோரும் கதறிய போதும் புத்தி சாதுரியத்தால் வென்று வந்த பாலகி அவள். அந்த வல்லமையை இப்போதும் அவளுக்கு கொடு இறைவா...


வீதியில் இறங்கும் போதும் "அப்பனே முருகா..." இணையங்களை திறக்கும் போதும் அதே "அப்பனே முருகா..." பாவம் அவன்... எத்தனை பேரின் வேண்டுதல்களுக்கு செவி சாய்ப்பது. அவனைக்கூட அங்கே விட்டு வைக்கிறார்கள் இல்லை.

அவர்களில் சிலர்... இல்லையில்லை பலர் - எம்மவர்களும் தான் கேட்கின்றார்கள்... "எப்ப பயணம்...?" இனி இருவழிப்பாதை இருபதாயிரம் மிச்சமாம்..! ம்ம்ம்... வருகின்ற பெருமூச்சும் சுடுகின்றது.

நிச்சயமாக இது நானில்லை. எழுதுகின்ற என் கரத்தை இரும்புக்கரம் ஒன்று பற்றுகின்றது. என் எழுத்துக்கள் பல நீக்கப்படுகின்றன... சில தடம் மாறுகின்றன...
என் முன்னே இரண்டே இரண்டு தெரிவுகள்.
எழுதாமல் இரு...!!!
அல்லது
தடம்மாறி எழுது...!!!

எழுதுவேன்... தடம் மாறினாலும் சுயம் மாறாமல்...!!!

7 comments:

  1. // பெருமூச்சும் சுடுகின்றது..

    உண்மைதான்... எதுவும் செய்ய முடியவில்லையே என நினைக்கும் போது மிகுந்த வேதனையாகவும் அவமானமாகவும் இருக்கின்றது...

    ReplyDelete
  2. எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றோம்..
    இப்போது
    உணர்வையும் இழக்கச் சொல்கின்றார்களே...

    ReplyDelete
  3. //எழுதுகின்ற என் கரத்தை இரும்புக்கரம் ஒன்று பற்றுகின்றது. என் எழுத்துக்கள் பல நீக்கப்படுகின்றன... சில தடம் மாறுகின்றன...//

    இந்தப் பதிவு எல்லாப் பதிவாளர்களினதும் மனத்தில் பதுங்கி இருப்பது. உப்படி எழுதவே பயமாக கிடக்கிறது. என்றாலும் இந்த பதிவு அருமை. கவலைப்படாதீர்கள். மோட்டர் பெட்டியில் ஏறி தன்னோடு நாய்க்குட்டியையும் காப்பாற்றிய பிள்ளை மோட்டார குண்டுகளிலா அகப்பட்டுவிடும்? கடவுள் துணையிருப்பார்.

    ReplyDelete
  4. தமிழ் மதுரம்January 24, 2009 at 5:35 PM

    எழுதாமல் இரு...!!!
    அல்லது
    தடம்மாறி எழுது...!!!



    எழுதுவேன்... தடம் மாறினாலும் சுயம் மாறாமல்...!!!//


    இதைத் தான் சொல்வதோ பட்டும் படாமலும்..தொட்டும் தொடாமலும் சொல்வது என்று..... ம்...எங்களுக்கு எல்லாமே புரியுமப்பா......

    ReplyDelete
  5. சுபானு வருகைக்கு நன்றி. எவருக்கும் கேட்க திராணியில்லை. கவலை மட்டும் தெரிவித்துக் கொண்டிருக்க சபிக்கப்பட்ட இனமாக அழிந்து கொண்டிருக்கின்றோம்

    ReplyDelete
  6. புல்லட்பாண்டி...
    //மோட்டர் பெட்டியில் ஏறி தன்னோடு நாய்க்குட்டியையும் காப்பாற்றிய பிள்ளை மோட்டார குண்டுகளிலா அகப்பட்டுவிடும்? கடவுள் துணையிருப்பார்.

    அந்த நம்பிக்கை இன்னும் இருக்கின்றது. கடவுளை துணைக்கழைத்தாலும், வருகின்ற செய்திகளின் கோர வடிவங்கள் கவலையளிக்கின்றன. :(

    ReplyDelete
  7. கமல் வருகைக்கு நன்றி. உங்களுக்கு புரிந்தாலும் சிலருக்கு புரியாமலிருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றேன்.

    ReplyDelete

You might also like