Search This Blog

Friday, March 27, 2009

எனக்குப் பிடித்தவர்கள்

என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்து அதனை விரைவில் பதிவிடுமாறு தாராள மனத்துடன் தொல்லை தந்த சகபதிவர் கமலுக்கு நன்றி சொன்ன வண்ணம் இதை எழுத தொடங்கும் இக்கணப்பொழுதில் என் ஞாபகங்கள் சில வருடங்கள் பின்னோக்கிச் செல்வதை தடை போட்டு மறிக்க முடியவில்லை.

ஆண்டு ஐந்து... பத்து வயது... புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த காலம் அது. எனது அம்மா, எங்கள் பாடசாலை, எனது ஊர், நான் ஆசிரியரானால்.... எனும் தலைப்புக்களில் எழுதிய கட்டுரைகள் இன்னொரு பரிணாமத்துக்குள் விழுந்தன. 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி, நீரின் முக்கியத்துவம், நான் விரும்பும் பெரியார்... முன்னைய தலைப்புக்கள் போலன்றி இத்தகைய விடயங்களுக்கு சில தேடல்கள் தேவைப்பட்டன. நான் விரும்பும் பெரியார்களில் சுப்பிரமணிய பாரதியார், சுவாமி விபுலானந்த அடிகளார், ஆறுமுக நாவலர், அஹிம்சை தேசத்தின் காந்தி... என்னிடம் இவர்களினது சுயவிபரக்கோவைகள் எப்போதும் தயாராக இருந்து கொண்டிருக்கும். ஆனாலும், சுப்பிரமணிய பாரதியார் தான் என்னுடைய முதலாவது தெரிவாக இருக்க காரணம் அவருடைய ஜனரஞ்சகப் பாடல்கள்தான்.ஆண்டு எட்டு... வயது பதின்மூன்று... முதன்முதலில் மகாத்மா காந்தியின் அஹிம்சையை எள்ளி நகையாடி நான் எழுதிய கவிதை ஞாபகம் வருகின்றது. ஏனெனில், அப்போது காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தை இன்னொரு அஹிம்சைப் போராட்டம் விஞ்சியதாய் என் பருவம்
உணர்த்திய காலம் அது... காந்தி பிறந்த ஆண்டை மறந்து இன்னொரு தியாகத்தாயின் பிறந்த ஆண்டை மனது பாடமாக்கிக் கொண்டது. அன்றைய நாளில் நான் வாசித்த கட்டுரை ஒன்று இன்றும் ஞாபகம். எம்.ஜி.ஆர். எங்களின் தோழன் எனவும் கருணாநிதி அரசியல் செய்யப் பிறந்த துரோகி எனவும் சொல்லிய அக்கட்டுரையை பிழையென்று சொல்லும் நிகழ்வுகள் எதுவும் அதற்குப் பின் நடக்கவில்லை; சரியெனச் சொல்ல பல நடந்து கொண்டிருக்கின்றன.

பயங்கரவாதம்... இன்றும் எனக்குப் பொருள் தெரியாப் பதம் இது. ஆனால், புஷ் தொடங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனக்குப் பல பாடங்களை சொல்லித் தந்தது... பின்லேடனும் சதாம் ஹூசைனும் எனக்குப் பிடித்தவர்களாயினர் என்று சொல்வதை விட அமெரிக்க ஜனநாயகத்தின் ஜனாதிபதி புஷ் பிடிக்காத சீவனாக மாறினார். அவருக்கு பாதணியால் பூசை நிகழ்ந்தது அறிந்த போது ஒருவித மகிழ்ச்சி எனக்குள் எழுந்தது. ஈராக் இன்னொரு வியட்னாமாக மாறி உலக வல்லரசுக்கும் பட்டாளத்துக்கும் பாடம் புகட்டாதா என ஏங்கியவன் நான்.

பயங்கரவாதம் தொடர்பில் இன்னும் சிலரை - சிலவற்றைப்பற்றிக் கதைக்க விடயங்கள் இருந்தாலும் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.
- இப்படிக்கு, சுயநலமுள்ள என் பேனா.
* * *

கண்டிப்புடன் பாசத்தையும் அள்ளிப் பொழியும் - இன்று இன்னொரு அகவைக்குள் நுழைகின்ற அப்பா, அன்பான அம்மா, எனதருமைச் சகோதரர்கள்... இவர்களை எனக்காகப் படைத்த இறைவனுக்கு கோடி நன்றிகள். எனக்குப் பிடித்தவர்களில் முதல் ஸ்தானத்தில் இவர்களைத்தவிர வேறு எவருமில்லை.

ஆனாலும், என்றைக்கும் என்னால் மறக்க முடியாத உறவொன்று உண்டெனில், அது என் அத்தை தான். 1993ம் ஆண்டில் என் மாமாவின் திருமணம் எங்களுக்குத் தந்த பரிசுதான் இவள். அன்பு, பரிவு, கண்டிப்பு... இவை எல்லாம் அவளிடமிருந்து எனக்குக் கிடைத்திருக்கின்றன. ஆதிரை எனும் பெயருக்கு சொந்தக்காரன் நான் தான் என்பதையும் கண்டு சொன்னவள் இவள்.

மீண்டும் கிடைக்காது எனத் தெரிந்து விட்ட அன்றைய நாட்களின் நினைவுகள் பசுமை நிறைந்தவை.

பொங்கல், தீபாவளி போன்ற கொண்டாட்ட நாட்களில் என் அத்தை இல்லம்தான் எனக்கு ஆலயம். நீராடி புத்தாடை அணிந்து முதல் கருமமாக அத்தை வீடு சென்று அங்கிருந்து அவர்களுடன் தான் ஆலயம் செல்வேன். "எங்கே போறாய்...? என அம்மா கேட்பதுமில்லை. " கோயிலுக்குப் போக கரன் வருவான்..." என என் அத்தை காத்திருக்க தவறுவதுமில்லை.

சின்னவயதில் (ஆறாம் ஆண்டு படித்த பதினொரு வயதும் சின்ன வயதுதானே...) நான் பேருந்துப் பயணத்தை விரும்புவதில்லை. ஏனெனில், பேருந்தில் ஏறி ஐந்து நிமிடத்தில் என்னை எவரும் நெருங்காதவாறு ஒரு பாதுகாப்பு அரண் அமைத்திடுவேன். வெட்கத்தை விட்டு
காரணத்தை சொல்வதென்றால், வாந்தி எடுத்திடுவேன்... (இப்போ அந்தப் பழக்கம் இல்லை)

யாழ்ப்பாண நகரில் ஒருத்தரை சந்திப்பதற்கான பயணம் அது. மாமாவுடனும் அத்தையுடனும் கூடவே நானும் செல்வதற்கு அப்பாவின் அனுமதியும் கிடைத்துவிட்டது. ஆனால், பேருந்துப்பயணம்... அதுவும் செம்பியன்பற்றிலிருந்து.....
"கரன் பாவம்... சத்தி எடுப்பான்... எழுதுமட்டுவாள் வரை சைக்கிளில் போவோம். பிறகு அங்கிருந்து பஸ்ஸில் போவோம்...." என் வாடிய முகத்தின் குறிப்புணர்ந்த அத்தை மாமாவிடம் வேண்டிக்கொண்டாள். பிறகென்ன... எழுதுமட்டுவாள் மட்டும் என்ற வரையறையுடன் முன்னுக்கு என்னையும் பின்னுக்கு அத்தையையும் ஏற்றி சைக்கிள் மிதிக்கத் தொடங்கிய மாமா எழுதுமட்டுவாள் தாண்டி யாழ். நகர் வரை சைக்கிளிலேயே எம்மைக் காவிவந்தார். அதற்கு அத்தனை நன்றிகளும் என் அத்தைக்குத்தான். வந்த நோக்கம் நிறைவேற மீண்டும் சைக்கிளிலேயே திரும்பி வந்தோம்.

வரும் வழியில் இருள் சூழ்ந்து விட நாம் மூவரும் உறவினர் வீடொன்றில் தங்கி மறுநாள் காலையில் எங்கள் வீட்டுக்கு வரவும்.....
எங்களை காணவில்லையென நள்ளிரவுவரை காத்திருந்து பின்னர் யாழ்ப்பாண நகர்வரை சென்று எங்களைத் தேடிக்களைத்த அப்பா வீடு வரவும் சுபநேரம் ஒன்றாக கூடி வந்தது. நான் சின்னப்பிள்ளை தானே... எல்லா அபிசேகங்களையும் என் மேல் கொண்ட பாசத்திற்காக அத்தை வாங்கிக் கொண்டாள்.

பின்னர் இலங்கையில் நடந்த நிகழ்வுகள் பல பிரிவுகளை, ஈடு செய்ய முடியாத இழப்புக்களை எங்களிடையே விதைத்து விட்டுச் சென்றன. 1995இற்குப் பின்னர் வன்னியில் இரு வருடங்கள் அருகருகாகவும், பின்னர் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலுமாக வாழ்க்கை ஓடியது.

சமாதானத்தின் பெயரால் ஏ9 திறந்த போது பல வருடங்களாய் பிரிந்திருந்த உறவுகள் மீளச்சந்தித்துக் கொண்டோம். என்னுடைய பல்கலை விடுமுறை நாட்களில் அதிகமானவை அத்தை வீட்டில் மூன்று செல்லக் குழந்தைகளுடனேயே கழிந்திருக்கின்றன.

ஆனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி இவ்வளவு விரைவாக விழுந்திடும் என்று நான் கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. 2004 டிசம்பர் 26.... பல்கலைக்கழகத்தில் முதல்வருட பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். இயற்கை சுனாமி எனும் பெயரில் கொடிய அசுரத்தனத்தை நிகழ்த்தி அடங்கிக் கிடந்தது. மனது எது நிகழக் கூடாது என வேண்டியதோ அதற்கு மேலாக எல்லாம் நிகழ்ந்து விட்டதாக இரவு என் காதுகளுக்கு செய்தி கிட்டியது.
அன்பான உறவுகளை தேடிச் சென்ற போது... மாமா மட்டும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தன்னந்தனியாக... அத்தையும் மூன்று செல்வங்களும் ஒன்றாக ஒரே குழியினுள் கண் மூடித் தூங்குகின்றார்கள்.

3 comments:

 1. தமிழ் மதுரம்March 27, 2009 at 6:33 PM

  யோ இதென்னப்ப்பா வேலை/
  என்னைக் கவர்ந்தவர்கள் என்று சந்தோசமாகப் பதியச் சொன்னால் கண்ணீரை வர வைக்கிற மாதிரிப் பதிஞ்சிட்டீங்களே???

  ReplyDelete
 2. ippavarai tsunami or ketta kanavu poolave irukkirathu... may be i was not there... i still cant believe what it did to our ppl..

  ReplyDelete
 3. அருமை சகோதரா.. இயல்பாக உங்கள் மனதில் பதிந்தவர்களைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்..

  கடைசிப் பந்தி கண்ணில் நீர் வரவழைத்து விட்டது..

  ReplyDelete

You might also like