Search This Blog

Thursday, April 9, 2009

நாளை நீ வருவாய்...!

நான்கு வருடங்களின் பின்னர்

காணக்கிடைத்த சந்தோசம்

நெஞ்சை வருடுகிறது.

உன் பெயர்


அது நான் சூட்டி அழகு பார்த்தது.

உடம்பு புரட்டி

நீ தவள எத்தனித்த பொழுதொன்றில்

கருமேகம் கருக்கட்ட

திறந்திருந்தவை எல்லாம் பூட்டிக்கொண்டன.

'அண்ணா' எனச் சொல்லித்தந்து

சொல்லச்சொன்ன போது

கருவிழி உருட்டி கதை பல பேசியவன் - பின்னர்

'அண்ணா' சொன்னபோது

அருகிருந்து கேட்க

போர் என்னை விடவில்லை.

'அம்மா' சொன்னது...

தத்தி தத்தி நடை பழகியது...

முதன் முதல் உண்ட அன்னம்...

பல்லுக் கொழுக்கட்டை...

.......................................

எல்லாமே

கடித வரிகளில் தான்

காணக்கிடைத்தது எனக்கு...

பின்னொரு நாளில் - எங்கள்

ஊருக்குள்ளும் புகுந்தார்கள் என்ற போது

நீ வருவாயெனக் காத்திருந்தேன்...

வந்தார்கள் சிலர் - ஆனால்

நீ வரவில்லை...!

சுட்டெரிக்கும் வெயிலில்

குறுகிக் கொண்டிருந்த பாதையில்

நாளை நிமிர்வாயென

பிஞ்சுப் பாதம் வலிக்க வலிக்க

ஓடிக் கொண்டிருந்தாயாம்...!

அள்ளி அணைத்து முத்தமிட்டு - உன்னைத்

தோளில் ஏற்றி

காவடி சுமக்க ஆசை இருந்தும்

உனக்கும் எனக்குமிடையே

இரும்புத் திரையிட்டு விட்டு

கொக்கரிக்கின்றனர் சிலர்...

ஆனால்,

எப்படியென்று தெரியவில்லை

இன்று நீ வந்தாய்...!

மங்காத உன் அழகு வதனம்

குண்டான உன் உடம்பு

இரு பிஞ்சுக்கரங்களையும் விரித்து

'அண்ணா' எனக் கூவியபடி

குடு குடு காலால் ஓடி வந்தாய்.

உன்னை வாரி அணைத்து

உச்சி முகர்ந்த பொழுதில் தான்

அழுகின்றேன் - அது

ஓர் கனவென உணர்ந்து...

ஆனாலும்,

நாளை பொழுது விடியும்...!

நீ வருவாய்....!!!

9 comments:

  1. ரெம்ப அழகாக இருக்கிறது ஆதிரை உங்களது கவிதை! நிட்சயமாக உங்களது கனவு ஒரு நாள் நனவாகும், நம்பிக்கையோடு இருங்கள்.

    ReplyDelete
  2. /* உச்சி முகர்ந்த பொழுதில் தான்
    அழுகின்றேன் - அது
    ஓர் கனவென உணர்ந்து...
    ஆனாலும்,
    நாளை பொழுது விடியும்...!
    நீ வருவாய்....!!! */

    கனவுகள் மெய்ப்படும் பொறுத்திருப்போம்...
    எமக்கென்று ஒரு சுதந்திர தேசம் கிடைக்காமலா போய்விடும்...
    தியாகங்கள் எல்லாம் வீணாகிவிடாது

    ReplyDelete
  3. @யாழினி
    //நிட்சயமாக உங்களது கனவு ஒரு நாள் நனவாகும்
    நம்பிக்கையோடு இருங்கள்.


    அந்த நம்பிக்கையில்தான் இப்படி முடித்தேன்
    நாளை பொழுது விடியும்...!
    நீ வருவாய்....!!!

    ReplyDelete
  4. @கார்த்தி
    // கனவுகள் மெய்ப்படும் பொறுத்திருப்போம்...
    எமக்கென்று ஒரு சுதந்திர தேசம் கிடைக்காமலா போய்விடும்...
    தியாகங்கள் எல்லாம் வீணாகிவிடாது


    ம்ம்ம்ம்...
    வருகைக்கு நன்றி கார்த்தி

    ReplyDelete
  5. ஆமாம் மிக நீண்டகாலத்தின் பின்பு....
    பலவற்றை எழுத வேண்டியுள்ளது....
    ஆனால் நேர பிரச்சனைகள்...
    மீண்டும் விரைவில் நானும் எழுதுவேன் அண்ணா...

    ReplyDelete
  6. கனவுகளில்தானே நமது வாழ்வு போகிறது. போர் தின்னும் நமது ஊரும் உறவுகளும் என்றுதான் காண்போமோ ??

    ReplyDelete
  7. தமிழ் மதுரம்April 11, 2009 at 4:03 PM

    உங்கள் எதிர்ப்பார்பு நிறைவேற வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பு.. கவிதை சோகம் சுமந்த யதார்த்தம்

    ReplyDelete
  8. " உடம்பு புரட்டி
    தத்தி தத்தி நடை பழகியது...
    குண்டான உன் உடம்பு
    குடு குடு காலால் ஓடி வந்தாய் "

    - இது ஆதிரையின் சுயசரிதையா?

    ReplyDelete
  9. உன்னை வாரி அணைத்து
    உச்சி முகர்ந்த பொழுதில் தான்
    அழுகின்றேன் - அது
    ஓர் கனவென உணர்ந்து...
    நன்றாக இருக்கின்றது நீங்கள் உங்களின் தவிப்பைச் சொல்லிய விதம்...

    ஆனாலும்,
    நாளை பொழுது விடியும்...!
    நீ வருவாய்....!!!
    நம்பிக்கையொன்றே மனிதனின் மனதைத் திடப்படுத்தும் மருந்து.. அதனை மட்டும் இழக்காதீர்கள்... நாளை பொழுது நிட்சயமாகப் புலரும்...

    ReplyDelete

You might also like