Search This Blog

Monday, April 13, 2009

சம்பிரதாயத்துக்காக ஒரு வாழ்த்து

என் இனிய தமிழ் - சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆழ் மனதின் அடியிலிருந்து ஊற்றெடுத்து வந்த வாழ்த்தல்ல இது... போகும் போது எறிந்து விட்டுப் போகும் ஓர் பொருள் போன்று சம்பிரதாயத்துக்காக இங்கு போட்டு விட்டுப் போகின்றேன்.

இந்த வருடத்திலாவது சாந்தியும் சமாதானமும் பெருகட்டும், இன்பங்கள் சூழட்டும்... இப்படி கேட்பதற்கு மட்டும் இன்பம் தருகின்ற வாக்கியச் சொல்லாடல்களை - பல வருடங்கள் இரந்தும் கிடைக்காதவற்றைச் சுமந்தவாறு வாழ்த்துக்கள் சொல்ல என்னால் முடியாது. 'எல்லாம் போய்விட்டது...' என்றதொரு நிலையிலே மீண்டும் எழும்பி வருவோம் என்ற நம்பிக்கையை இழக்காத வண்ணம் தினமும் உயிர்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நிஜம்.

தொட்டுப் பார்க்க ஆசையிருக்கின்றது; ஆனால், எட்டிவிட முடியாத நிலையிலேயே வெற்றுச்சடமாக எங்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்புத்தாண்டும் அவலங்களையும் துன்பங்களையும் தவிர வேறெதுவும் தருவேன் என்ற நம்பிகையைத் தொலைத்துவிட்டுத்தான் விரோதியாக பிறப்பெடுக்கின்றது.

இன்றைய பத்திரிகைகளைப் புரட்டினால் - வானொலிகளைத் திருகினால், சாந்தி... சமாதானம்... பயங்கரவாத ஒழிப்பு... வசந்தம்... வெளிச்சம்... ஒன்றுக்கு ஆயிரம் தடவைகள் இந்தப் பதங்கள்தான் அலங்கரிக்கப் போகின்றன. ஆனால், இவைகளின் எந்த அலங்காரங்களுமின்றி - சாவை எண்ணிக்கொண்டு - பசியைப் புசித்தவாறு எங்களுக்குள்ளே எத்தனை பேர்?

இப்போதெல்லாம் சந்திக்கும் இரு முகங்கள் பேசுகின்ற மொழிகளிலிருந்து வாய்ப்பேச்சுக்கள் விலகி நிற்கி்ன்றன. பேச முடியவில்லை... எப்படிச் சுகமென்று கேட்க முடியவில்லை... மனதில் சுமந்துள்ள கவலைகளை கொட்டித் தீர்க்க ஓரிடமில்லை... இயந்திரம் பூட்டி விட்ட மனிதங்களாக சிரிக்க முடியாமல் சி்ரித்துக் கொண்டு, சந்தோஷிக்க முடியாமல் சந்தோஷம் பகிர்ந்து கொண்டு வாழப் பழகுகின்றோமா? நாளை நாமில்லாத எங்களுக்கான வாழ்க்கை இதுவாகிவிடுமா...?

3 comments:

  1. //இயந்திரம் பூட்டி விட்ட மனிதங்களாக சிரிக்க முடியாமல் சி்ரித்துக் கொண்டு, சந்தோஷிக்க முடியாமல் சந்தோஷம் பகிர்ந்து கொண்டு வாழப் பழகுகின்றோமா? நாளை நாமில்லாத எங்களுக்கான வாழ்க்கை இதுவாகிவிடுமா...?

    நியாயமான சந்தேகங்கள்........... விடை தெரியவில்லை.

    ReplyDelete
  2. // மனதில் சுமந்துள்ள கவலைகளை கொட்டித் தீர்க்க ஓரிடமில்லை...

    தலையணியிலும் கண்ணீரின் உப்புக் கரிக்கிறது.

    ReplyDelete
  3. உங்களுக்கும் எனது சித்திரைப் புதுவருட நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

You might also like