Search This Blog

Saturday, July 4, 2009

தகுதிகள்

"பாரன் ஆளை... O/L இலேயே குண்டு. என்னைக் கட்டிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு...???"
அவள் செருப்பு போட்டிருந்தால் எட்டி நின்று கதையடா என நண்பன் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தான். அவளின் செருப்பால் அடி வாங்க தவம் செய்திருக்க வேண்டும் பதில் சொல்லிவிட்டு வந்தவனுக்கு இந்த சொற்கள் சுட்டன.
"பாரன் ஆளை... O/L இலேயே குண்டு. என்னைக் கட்டிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு...???"
அவள் செருப்பை வாங்கி தனக்கு தானே முகத்தில் அறையலாம் போன்றிருந்தது.

நாணம், நிலம் நோக்கிய பார்வை, மணல் மீது சித்திரம் வரையும் கால் விரல்கள், எந்தப் பதிலுமின்றிய மௌனம்... அந்த மௌனத்தையே சம்மதமாக்கி சந்தோசப்படும் அவன் மனம்!!! அவன் எதிர்பார்த்து வந்த இவைகளில் எதுவும் துளி கூட கிட்டவில்லை.

காதல் கரம் நீட்ட தகுதி கேட்டது. காதலுக்கு இவைகள் தகுதிகளா...? அல்லது இல்லாதவைகளை இட்டு முற்றுப்புள்ளி வைக்கும் விநோதங்களா...? இவன் அண்ணனுக்கு பேசி வந்த கல்யாணத்துக்கு கிடைக்காது எனத் தெரிந்தும் அவ்வளவு சீர்வரிசை கேட்ட அப்பனின் மூளை இவனுக்குள் இப்படி சிந்தித்தது.
O/L இல் உன்னால் தானே எல்லாப் பாடத்துக்கும் கொடி(F) நாட்டினேன் என்று கூற வேண்டும் போல இருந்தது. சீச்சீ... சமய பாடம் பாஸ் பண்ண தேவாரம் கூட தெரியாதா...?இப்படி அவள் கேட்டுவிட்டால்.... அல்லது, இம்முறை எல்லாப் பாடத்திலும் பாஸ் பண்ணுறேன் என்று இப்ப சத்தியம் செய்து அது முடியாமல் போனால்...?


அவன் உடல் இறுகியது... கூடவே உள்ளமும் தான். உள்ளுக்குள் சில சபதங்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டன. எதிரெதிர் திசைகளில் இரு சைக்கிள்களும் பயணித்தன.

★ ★ ★

அவனுக்கு நானோர் பெயரிட்டால் "அகிலன்". தமிழ் மொழியில் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிவதில் ஒரு அழகுண்டு. இந்தச் சமன்பாட்டில் அவளுக்குத் தேடினால், முந்திக் கொண்டு ஞாபகம் வருகின்றது "அசின்".

அகிலன் பதினோராம் ஆண்டில் படிக்கும் போது அசின் ஒரு வகுப்பு குறைய... பத்தாம் ஆண்டு. பாடசாலை விளையாட்டுப் போட்டியில் தற்செயலாக நடந்தேறிய நிகழ்ச்சி அவளுக்கு அவனையும், அவனுக்கு அவளையும் நெருக்கமாக அறிமுகம் செய்து வைக்கின்றது. அகிலனின் வகுப்பில் பிபிசி எனும் காரணப்பெயருடன் ஒருத்தன் இருந்தான்.
தனக்கும் அசினுக்கும் ஒரு 'இது' என்றும் ஒருத்தருக்கும் சொல்லாதே என்றும் பிபிசியிடம் காரணம் கருதி அகிலன் சொல்லி வைக்க, மறுநாள் பாடசாலையில் அகிலனுக்கு வரவேற்பு பிரமாதமாக இருந்தது. "அகிலன்அசின்" கொட்டை எழுத்துக்கள் கரும்பலகையை அலங்கோலமாக்கி இருந்தன.

அதன் பின்னான நாட்கள் அகிலன் மாறியிருந்தான். வைரமுத்து அவன் தலையணைக்குள் குடியிருந்தார். தூசி பிடித்திருந்த வானொலி செய்தி கேட்க துடைக்கப்பட்டதாக அப்பாவுக்கு ஒப்புவித்தான். ஆனால், 'வானம்பாடி' அவன் உதட்டசைவுடன் கானம் இசைத்தது.

அசின் பாடசாலை புறப்படுகின்ற நேரத்துக்கு அரை மணித்தியாலம் முன்னமே இவன் கைக்கடிகாரம் அலாரம் எழுப்பியது. அவள் சைக்கிள் எந்தப் பள்ளத்துக்குள் விழுந்தும், எந்தப்பள்ளத்தை விலத்தியும் பயணிப்பதை இவன் சைக்கிளும் மனப்பாடம் செய்து கொண்டது. "என்னடி.. இவன் புற்றுக்குள்ளிருந்து வரும் பாம்பு போல அடிக்கடி எங்களை முந்துகின்றான்..." ஒரு வழிப்பயணத்தில் இவன் பலமுறை முந்துவது அவள் தோழியர்களுக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும்.

அவளிடமிருந்து ஒரு பார்வை தரிசனத்துக்காய் காத்திருந்தவனுக்கு ஒரு நாள் அது கிடைத்தது. பின்னர் ஒரு நாளுக்கு பலமுறை என்று ஏறுவரிசையானது. அவள் பார்வை இவனை நோக்கி திரும்பும் அந்தக் கணங்களில் இவன் பார்வை கரும்பலகை நோக்கியது. மற்றும் படி அந்த தேவதை தான். மனம் சிறகடித்தது. "மச்சான் பார்க்கிறாளடா... அவளுக்கும் அது தான்..."

அகிலன், அசின் எனும் நேர்கோடு முக்கோணம் ஆவதாகவும், அதுவும் அசினின் வகுப்பிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது என்றதும் பத்தாம் ஆண்டை பதினோராம் ஆண்டு துவம்சம் செய்யப் புறப்பட்டது. பாவம் அப்பாவி ஒருத்தன் கொலைப்பயமுறுத்தலை சம்பாதிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் அவள் பார்வையில் ஒரு கர்ண கடூரம் இருப்பதாய் அகிலனுக்கு ஓர் பிரமை.

நாட்கள் நகர்ந்த போது, அசின் ஒருநாள் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.
"அடியே... உனக்குப் பின்னாலே திரிகிற அகிலன் O/L இல் எல்லாப்பாடமும் ஃபெயிலாம்." ம்... அகிலன் மட்டும் தான்...!!!


★ ★ ★

அவர்களை கண்டதும் ஏனோ தெரியவில்லை, காணாத மாதிரி நழுவிச் செல்ல முயன்றான். ஆனால், அவர்கள் இவனை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

"இங்க... எங்கட அகிலன்... தம்பி டாக்குத்தர் படிப்பெல்லாம் எப்படிப் போகுது..?"

"எனக்கு படிப்பு முடிஞ்சிட்டுது அங்கிள். இப்ப வேலை செய்கிறன். நாளைக்கு பட்டமளிப்பு விழா. அதுதான் உடுப்பு எடுப்பம் என்டு வந்தன் "

"அப்படியோ... நல்லது தம்பி. அது சரி உந்தப்பிள்ளை யார்..? கண்ட முகம் மாதிரி இருக்கு "

அகிலனுக்குத் தெரியும், அவர்கள் அவளைக் கண்டிருக்க சாத்தியமே இல்லை. ஆனாலும், மறைக்காமல் சொன்னான். "இதுதான் நான் கட்டிக்கப் போற பொண்ணு..." கூடவே, "அங்கிள் நீங்க கொழும்புக்கு ஏன் " கேட்டுத் தொலைத்தான்.

"என்ர மகள் அசினுக்கு கனடாவில மாப்பிள்ளை பார்த்திருக்கு. வீட்டில சும்மா இருக்கிறாள். அதுதான் மாப்பிள்ளையிட்ட அனுப்பி விடுவம் என்று வந்தனாங்கள். கெடுபிடி தானே ... அதுதான் அவளை லொட்ஜில விட்டிட்டு மனிசியுடன் சொப்பிங் வந்தனான் "


10 comments:

  1. சுதந்திரிJuly 4, 2009 at 9:37 PM

    நிறையா பேரி அனுபவம்,......
    அவள் மட்டும் சம்மதித்து இருந்தால் இன்று அவன் தந்தையாகி இருப்பான், இன்று.............???

    ReplyDelete
  2. கதை நன்றாக இருக்கு ஆதிரை. தொடருங்கள்...

    ReplyDelete
  3. எல்லா ரோட்டும் ரோமுக்குத்தான் போகுது :)

    ReplyDelete
  4. ரோட்டெண்டால் கூடப்பரவாயில்லை சயந்தன் குச்சொழுங்கைகள் கூடப்போகுது போலயிருக்கு

    ReplyDelete
  5. ///ரோட்டெண்டால் கூடப்பரவாயில்லை சயந்தன் குச்சொழுங்கைகள் கூடப்போகுது போலயிருக்கு///
    இந்த அகிலன் யார்??? சொல்லுங்க ஆதிரை?

    ReplyDelete
  6. சுதந்திரி, சதீஷன், யாழினி

    நன்றிகள்.

    ReplyDelete
  7. சயந்தன், அகிலன்

    எல்லா ரோட்டுக்களுக்கும் - குச்சொழுங்கைகளுக்கும் முடிவிடம் ரோமாக இருக்கின்றன போலும். ☺

    ReplyDelete
  8. கீத்,
    வருகைக்கு நன்றி.
    அகிலனின் பெயரிலுள்ள இணைப்பின் மூலம் அவர் பக்கங்களை அடையலாம்.

    ReplyDelete
  9. நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete

You might also like