Search This Blog

Thursday, October 29, 2009

சிலுவை சுமந்த சிங்காரி


பாடசாலைக் கன்ரீன்... தொடக்கப்புள்ளி இங்கேதான் துளிர்விட்டது. இருநூறுக்கு மேற்பட்டோரை கொள்ளக்கூடிய -  அந்தளவு பெரிய கன்ரீனின் எதிரெதிர் மூலைகளில் அவனும் அவளும்... இடை நடுவே நின்றவைகளையும், அசைந்தவைகளையும் ஊடுருவிப் பாய்ந்த அவர்களின் பார்வைகள் பல கதை பேசின. அவனுக்குத் தெரியாமல் அவளும், அவளுக்குத் தெரியாமல் அவனும்... இருவருக்கும் தெரிந்த போது அங்கே வாய் பார்த்துக் கொண்டிருந்த காகத்தின் மீதும் பார்வைகள் பட்டுத் தெறித்தன.

"டேய்... அந்த ஜூனியர்ப்பிள்ளை உன்னைத்தானடா பார்க்குது" தோளை உலுப்பிய பள்ளித்தோழனிடம் தெரியாத மாதிரி கேட்டான்.
"யாரடா அவள்..?"
சொன்னவன் சுட்டு விரல் அவளைச் சுட்டியதும் இவன் முகத்தில் நாணம் சிவந்தது.


* * *

பரீட்சைக்கான தயார்படுத்தல் வகுப்புக்கு தரம் பதின்மூன்றும் பன்னிரண்டும் ஒன்றாக அழைக்கப்பட்டிருந்தன. எல்லா மாணவர்களும் கற்றலில் ஊறி கரும்பலகையைத்தான் நோக்குகிறார்களென அவர்களிருவரும் எண்ணினார்கள். அதனால் தான் அந்த இருவரும் புத்தகம் கொண்டு தங்கள் முகம் மூடி கண்ணாமூச்சி விளையாடினார்கள்.

அவள் முகம் மறைத்த புத்தகம் சிறிது விலக, கயல்விழி இரண்டும் இவனை நோக்குவதும்... அந்தப் பார்வைக்காய் தவம் கிடந்தவன் நாணம் மேலிட தன் புத்தகத்துக்குள் தன் முகம் புதைப்பதுமாய் தொடர்ந்தன லீலைகள்.

அன்று ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அவன் துளியும் சம்பந்தமில்லாத ஏதோ உளற "கொல்" என்றது வகுப்பறை... தன்னை மறந்தவன் இவ்வேளையிலும் அவள் சிரிப்பை ரசித்தான்.

இது தரம் - 13... பாடசாலைப்பருவத்தின் இறுதி நாட்கள். கடைசிப் பேருந்து தவற விடாதே.... மனம் கரைச்சல் படுத்திக் கொண்டிருந்தது.


* * * 



பாடசாலை விளையாட்டுப் போட்டி... இரு சோடி விழிகளும் மீண்டும் சந்தித்துக் கொண்டன. பாரதியார் மஞ்சள் இல்லத்தின் அணித்தலைவி அவள். அவன் கடந்த வாரம் வெளியாகிய உயர்தரப் பரீட்சை முடிவில் பல்கலைக்கழகத் தகுதி பெற்றிருந்தான்.

"எதற்காக திரும்பத் திரும்ப அவளைச் சந்திக்கிறேன்..? அவள் எங்கேயோ பார்ப்பது போல் என்னைத்தானே பார்க்கிறாள். இது எதற்காக...? நான் மட்டும் என்ன குறைவா...? நானும் தானே பார்க்கிறேன். அப்படியானால்...?"

"அவளிடம் கேட்டுத் தொலைத்துவிட வேண்டியதுதான்... ஆனால், சில நேரம் அவள் மறுத்துவிட்டால்... வருகின்ற அவமானத்தையும் எழுகின்ற சோகத்தையும் தாங்குவேனா...?"

அப்படியானால், இப்படியே இருக்கப் போறீயா?

போராடிய மனதிடம் முடிவு இருக்கவில்லை.


* * *

பேருந்து நிரம்பி வழிந்தது. ஒரு கரத்தில் எல்லாச் சான்றிதழ்களையும் காவிக்கொண்டு மறுகரத்தால் கொலரைத் தூக்கி வியர்வை போக்க ஊதிக் கொண்டிருந்தவனுக்கு நெடுநேர இழுபறியின் பின் இருக்கை கிடைத்தது. இன்று இவன் ஒரு பட்டதாரி. வேலை தேடி நேர்முகப்பரீட்சைக்கு போய்க் கொண்டிருந்தான். தேவாரப்பதிகங்களுக்கு மாறாக எதிர்பார்க்கை வினாக்களுக்கான விடைகளை வாய் முணுமுணுத்தது. நூற்றோராவது பயணத்தில் ஆயிரத்தோராவது தடவையாக விடைகளை சரிபார்த்துக் கொண்டான்.

அடுத்த தரிப்பிடத்தில் நின்ற பேருந்து ஆச்சரியகரமாக அவளையும் உள்வாங்கியவாறு பயணப்பட்டது.

மதகுருமாருக்கான இருக்கையிலிருந்த இவன் எழும்பித்தானாக வேண்டிய நிலை.

"கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக..." நன்றியுடன் அவள் கூறி அமர்ந்தாள்.



5 comments:

  1. லேபிளில் அனுபவம் என்று ஒரு குறிச்சொல்லும் இருக்கிறதே...
    சொந்த அனுபவமா.... ;)

    ReplyDelete
  2. என்ன செய்வது ஆதிரை சில வேளைகளில் விதி உங்கள் வாழ்க்கையுடன் விளையாடுகிறது. தாவணி போனால் சுடிதார் இருக்கிறது என மனதைத் தேர்த்த வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. ஆதிரை……..

    நம்மட வந்தியருடன் அலைபேசிய போது, தங்களின் ‘சிலுவை சுமந்த சிங்காரி’ கதையை முழுமையாக எனக்கு சொல்லி முடித்துவிட்டார். இதற்கு ஏதோ பின்னணி இருப்பதாகவும்; கூறினார். தங்கயுடைய காட்சி மாற்றங்கள் (அதாவது கதை சொல்லும் பாங்கு) நல்லாயிருக்கே… ஏதாவது திரைக்கதை எழுதும் நோக்கமிருக்கா?

    ReplyDelete
  4. என்ன செய்வது... மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்... இன்னொண்டு மாட்டாமலா போகும்???

    ReplyDelete
  5. அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !



    நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
    http://wwwrasigancom.blogspot.com/
    shankarp071@gmail.com

    ReplyDelete

You might also like