Search This Blog

Wednesday, December 31, 2008

விடைபெறும் 2008 - வீட்டுப்படியினில் யுத்த அரக்கன்

புதியதொரு புலர்விற்கான மணித்துளிகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன . எதுவுமே நன்மையென்று தராமல் - கண்ணீரையும் காயங்களையும் தந்த ஆண்டு விடைபெற புத்தாண்டொன்று பிறக்கின்றது. சிலரிடம் இந்த வருடமாவது எங்களுக்குரியதாக மாறாதா என்ற ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பு... சிலரின் உணர்வுகள் சிதைக்கப்பட்ட நிலையில் எந்தச் சலனமுமின்றி நாளைய நாளில் பிரவேசம்... நேற்று வாழ்ந்த வாழ்வை நினைத்து இன்னொரு சாரார்... ஆடம்பரங்களுடன் தயாராகும் பிறிதொரு கூட்டம்...

எங்கள் வீட்டுப்படியினில் யுத்த அரக்கனை கொண்டுவந்து இருத்திவிட்டு 2008 நகர்கின்றது. உள்ளே அழைத்துச் சென்று மாமிசத்தீனி படைப்பதா அல்லது செவிடான அவன் காதில் அமைதி வேதம் ஓதி சமாதானம் செய்வதா இல்லாதுவிடின் அவன் கதை முடிக்க தீக்கொள்ளி சுமப்பதா...? 2009 தீர்மானிக்கவேண்டிய நிலை!

2008 நாட்காட்டியின் பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டுகின்றேன். எனக்கென்று அல்லது எங்களுக்கென்று வந்துபோன தினங்கள் சொற்பமே.
உணர்வினால் எங்களுக்காகப் பேசிய ஒருவனை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் பலியெடுத்தவளாய்த்தானே இவள் பிறந்தாள். கைது, கிளைமோர் வெடிப்பு, குண்டுத்தாக்குதல், கடத்தல், ஊடக அடக்குமுறை... இவைகளன்றி வேறென்ன தந்துவிட்டுப் போகின்றாள். ஒவ்வொரு வீட்டிலும் இவள் மறக்கப்பட மாட்டாள்! ஏனெனில், மறக்க முடியாதவர்களின் மறைவுகளுக்கெல்லாம் இவள்தானே ஆதாரம்.

இனம்தெரியாதவர்களுடன் கள்ளக்காதல் புரிந்ததும்... பசித்த வேளையில் எங்கள் ஊருக்குள் வந்து வெள்ளைவானேறி வேட்டையாடியதும் இல்லாதுவிடின் பற்றைக்குள் மறைந்திருந்து பஸ்களை குறிவைத்ததும்... இவைகளெல்லாம் உலகறிந்த இரகசியங்கள். சில குண்டுச்சத்தங்கள் சில காதுகளுக்கு கேட்க பல குண்டுச்சத்தங்கள் அக்காதுகளை செவிடாக்கி விட்டனவாம். பகுத்தறிவுக்கு ஒத்துவராட்டிலும் இது நம்பித்தான் ஆகவேண்டும். ஆனாலும், எங்களைத் தாங்கவும் கரமிருக்கின்றது என அருகிலிருந்து
அண்மையில் எழுந்த குரல்கள் நாங்கள் சாகமாட்டோம் என்ற நம்பிக்கையைத் தந்தாலும், செத்துக் கொண்டுதானே நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

நேற்றுப்போன்று இருக்கின்றது - வீட்டுக்கார அன்ரியிடம் 'கிரிபத்' வாங்கிச் சாப்பிட்டுவிட்டு பிள்ளையார் கோவிலிலே அர்ச்சனை செய்து வந்தது . ஆனால், விடிய அதுக்கு ஒருவருடமாகிவிடும். கடந்த வருட (2007) இறுதி விடுமுறைக்கு வீடு செல்லாத என்னைக் கவலையுடன் நோக்கி, "மச்சான்... ஏப்ரலில் ஏ9 திறந்திடும். கவலைப்படாதே... நீ போகலாம்" சகோதர மொழியில் ஆறுதல் சொன்ன கல்லூரி நண்பனுக்கு விடியும் போது புத்தாண்டு வாழ்த்துச்சொல்ல மறக்க மாட்டேன். இன்று தொழிலகத்தில் 2008ஐ ஒவ்வொருவரும் மீட்டி மறக்காத நினைவுகளைப் பகிர்ந்தோம். எங்களுக்கு எப்போதும் எங்கேயும் சோகக்கதைகள் தானே மிஞ்சுகின்றன. இந்த ஆண்டுதான் ஒரு மணித்துளியேனும் என்குடும்பத்துடன் வாழாது - அம்மாவின் கைப்பிடி அன்னமின்றி கழிகின்றது என்றேன். அருகிலிருந்த அண்ணன் திகைப்புடன் நோக்கிவிட்டுச் சொன்னான். "சித்திரையில் ஏ32 திறந்திடும்...". சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு எங்கிருந்தாலும் அவரையும் மறக்க மாட்டேன்.

அங்கே பட்டாடை கட்டிய
புதியவளொருத்தி வீடிழந்து நிற்கும் எங்கள் முற்றம் தேடி வருகின்றாள். உனக்கு காணிக்கை தந்து சுதந்திரம் கேட்பதற்கு எங்களிடம் உயிரைத்தவிர வேறெதுவுமில்லை. அதைக்கூட காணிக்கையாக்கியுள்ளோம். அறியாதவளல்ல நீ... எங்களுக்கு என்ன பதில் தரப்போகின்றாய்? சிறகு கட்டி ஆனந்தக் கூத்தாட கை கொடுப்பாயா...? அல்லது எங்களின் சிறகொடித்து தின்று பசி ஆறிப்போவாயா...?

3 comments:

 1. //அங்கே பட்டாடை கட்டிய புதியவளொருத்தி வீடிழந்து நிற்கும் எங்கள் முற்றம் தேடி வருகின்றாள். உனக்கு காணிக்கை தந்து சுதந்திரம் கேட்பதற்கு எங்களிடம் உயிரைத்தவிர வேறெதுவுமில்லை. ///

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. //எங்கள் வீட்டுப்படியினில் யுத்த அரக்கனை கொண்டுவந்து இருத்திவிட்டு 2008 நகர்கின்றது. உள்ளே அழைத்துச் சென்று மாமிசத்தீனி படைப்பதா அல்லது செவிடான அவன் காதில் அமைதி வேதம் ஓதி சமாதானம் செய்வதா இல்லாதுவிடின் அவன் கதை முடிக்க தீக்கொள்ளி சுமப்பதா...? 2009 தீர்மானிக்கவேண்டிய நிலை

  நம்பிக்கையோடு வரவேற்போம் புத்தாண்டை.

  ReplyDelete
 3. கலை - இராகலை, சுபானு,
  நன்றிகள். இப்புத்தாண்டை நம்பிக்கையுடன் வரவேற்க நானும் உங்களுடன் இணைகின்றேன்.

  ReplyDelete

You might also like