Search This Blog

Wednesday, December 24, 2008

இன்று நத்தார் தினம்

இன்று நத்தார் தினம்... மனுக்குலத்தை மீட்டெடுக்க பாலன் யேசு அன்னை கன்னி மரியாளின் மகவாக மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்த நாள். அடிமைத்தளைகள் அகன்று சாந்தியும் சமாதானமும் இப்பூவுலகத்தில் நின்று நிலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் புனித நாள். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு தேவாலயங்களில் எழுப்பப்படும் ஆலயமணி ஓசை உங்களுக்காக ஒரு மீட்பர் பிறப்பெடுத்துள்ளார் என்பதை பறைசாற்ற உலகமக்கள் இந்நாளைக் கொண்டாட ஆயத்தமாகின்றனர்.

ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் இந்நத்தார் பெருநாளானது ஆடம்பரம், ஆரவாரமின்றி அமைதியாக அந்த அமைதியினை வேண்டியே கழிகின்றது.

இன்று நேற்றல்ல... அன்று தொட்டு நாங்கள் இறைஞ்சி நிற்கும் சமாதானமும் சாந்தியும் எப்போதாவது வந்து பூச்சாண்டி காட்டி விட்டு எட்டாத்தொலைவில் நின்று வேடிக்கை பார்க்கின்றது. ஒவ்வொரு பாலன் பிறப்பும் எங்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் ஊட்டினாலும், விடிவு வருமென்று அடுத்த பாலன் பிறப்புக்களுக்காகத்தானே காத்திருக்கின்றோம். கடந்த நத்தார் தினத்தன்று தனது சொந்தங்களுக்காக அமைதி வேண்டிய உறவுகள் இன்று அமைதி வேண்டி கானகங்களில் குடில் கட்டிக் காத்திருக்கின்றார்கள். ஆனாலும், அவர்கள் நெஞ்சுரம் குலையவில்லை.

இன்று ஈழத்தில் பிறக்கின்ற பாலன்களைத் தாங்கிட மாட்டுத் தொழுவங்கள் கூட இல்லாத சோகம். உன் பிறப்புக்கு குடில் தந்த மந்தைக்கூட்டம் எங்கள் ஊரில் இருந்த குற்றத்துக்காக தங்களின் உயிர்களையே தருகின்றன. வானத்தில் கண்சிமிட்டும் நட்சத்திரமில்லை. ஆனால், எங்கள் வானத்தில் இரைச்சல்களும் தொடர்ந்து கேட்கும் அந்தச் சத்தங்களும் எங்கள் காதுகளைச் செவிடாக்கி உயிர் குடித்துச் சென்றாலும், உலகின் காவலர்களின் காதுகளுக்கு இன்னும் கேட்காத சோகம்...!

விடிந்ததும் பத்திரிகையின் ஒரு மூலையில் யேசு பாலன் பிறந்த செய்திப்படம்... முதற்பக்கம் தொட்டு இறுதிப்பக்கம் வரை அரசியல்வாதிகளின் வாழ்த்துச்செய்திகள்... "இந்த நன்னாளில் சாந்தியும் சமாதானமும் மலரட்டும்" சத்தியமாக இதுதான் அவர்களின் வாழ்த்துக்களில் புதைந்து கிடக்கும் முத்தான செய்தி. கேட்பதற்கு இனித்தாலும், 'ஊருக்கடி உபதேசம் உனக்கில்லையடி' வாசிப்பவர் மனதில் தோன்றினாலும் எப்படியும் வெளிக்காட்டாமல் அடக்கிவிட வேண்டும். எங்கோ ஒரு மூலையில் ஆயர்களின் செய்தி அமைதி விரும்பி, உறவுகளின் உணர்வுகளைத் தாங்கி கண்ணீர் சிந்தி இறைவழிபடும்.

ஆனால் அப்பாவைத் தேடும் மகனும், மகனைத் தேடும் பெற்ற வயிறும், கூட்டிச் சென்ற மகனுக்காக செபம் சொல்லும் தாயவளும், அவருக்காக வணங்கும் அவளும், வீடிழந்த சொந்தங்களும், கூடிழந்த பறவைகளும், வானம் பார்த்து காலைக்கடன் தொடக்கம் எல்லாம் முடிக்கும் உறவுகளுமாக... நீண்டதொரு சோகம் அப்பிய வாழ்க்கைக்கு விடிவு வருமா...???

யேசு கிறிஸ்து நாதரே... நீ விரும்பிய சமாதானமும் சாந்தியும் எங்களுக்கும் வேண்டும். மனுக்குலத்தை மீட்க மானிடப்பிறவி எடுத்தவனே எங்களுக்கும் அமைதியைத் தருவாயாக...

No comments:

Post a Comment

You might also like