Search This Blog

Monday, March 9, 2009

பன்சியாய் துன்சியாய் / ஐநூறு முன்னூறு

2004 தை மாதத்தில் ஒரு நாள்... இவனைப் பொறியியலாளன் ஆக்கித்தந்து விடு என 19 வருடங்களாக ஊட்டி வளர்த்த அப்பா கட்டுப்பத்தை கம்பஸிடம் பாரம் கொடுத்து விட்டுச் சென்றார். நான்கு வருடங்களாக பொறியியலாளனாகுதல் என்றவாறு நாங்கள் செய்தவை ஏராளம். அந்த நினைவுகளில் பல என்றும் இனிமையானவை. ஆனால், ஒரு சில நிகழ்வுகள் மறக்க வேண்டியவை எனினும், அவை கற்றுத் தந்த பாடங்கள் ஏராளம்...

நட்பு, உயர்ச்சி, வெற்றி, தோல்வி... இவைகள் எனக்குத் தரிசனம் கிடைத்திருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் நரித்தனங்கள், குழிபறிப்புக்கள், புறமுதுகு குத்தல்கள் இவைகளையும் சந்தித்திருக்கின்றேன். ஆனாலும், இன்றும் என்னுடன் கூட வரும் சொந்தங்களாக பல்கலை நட்புக்களும் இருக்கின்றார்கள் என்பது பெருமை தருகின்ற விடயம். இரு வருடங்களாக பெற்றோரின் அரவணைப்பு, சகோதரங்களின் பாச உறவாடல்கள் கிடைக்காத போதிலும் இன்றும் கூடிக்குலாவி - நெஞ்சிலுள்ள சோகங்கள், ஏக்கங்களை மறந்து நான் மட்டுமல்ல - எங்களில் எல்லோரும் சிரிப்பதற்கு நாங்கள் தான் காரணம். அதையிட்டு பெருமைப்படுகின்றோம்.

பல்கலைக்கழகத்தில் - அதுவும் இறுதி வருடத்தில் விடுதி (hostel) கிடைத்த பின்னர் நாங்கள் செய்த குறும்புகள், திருகுதாளங்களை இரை மீட்கின்ற போது மீண்டுமொரு முறை அந்த நாட்கள் கிடைக்காதா என ஏக்கம் பிறக்கும்.

யுத்த அரக்கன் தனது கோரமுகத்தை மீண்டும் வெளிக்காட்டிய பின்னர் ஏ-9 கனவாகிப் போனது. பின்னர் வந்த விடுமுறைகளில் எல்லாம் தங்கள் சொந்தங்கள் தேடி
எல்லோரும் வீடுகள் சென்று விடுவார்கள். ஆனால், "அப்பி யாப்பணய (நாங்கள் யாழ்ப்பாணம்)" என்றவாறு, யாழ்ப்பாணப் பாதைக்கான வரைபடம் கீறி - ஏ-9 மூடப்பட்ட சூத்திரம் விளக்கி விடுமுறையிலும் விடுதியில் தங்க அனுமதி பெறுவதற்கு போதுமென்றாகி விடும். அப்போது தான் சிலருக்கு ஏ-9 என்றால் என்னவென்றும், யாழ்ப்பாணம் எங்கிருக்கின்றது என்றும் புரிய வைத்த பெருமை எங்களுக்குண்டு. அந்த விடுமுறை நாட்களில், இருள் போக்க ஒளிரவிடப்பட்ட மின்குமிழ்கள் அணைவதற்கு மறுநாள் காலை பதினொரு மணி தாண்டி விடும்.

விடுமுறை நாளென்றதும் எங்களில் குறிப்பாக இருவருக்கு பெரியதொரு ஆப்பு இறங்கிவிடும்.
ஒருத்தர் உயர்தரம் சித்தி பெற்றதனால் பழுத்த அரசியல்வாதியாகும் சந்தர்ப்பத்தை கோட்டைவிட்ட - நடிகரொருவரின் பெயராலேயே எப்பொழுதும் அழைக்கப்படுபவர். மற்றவர் முதல் வருடம் எங்களுடனேயே படித்து, பின்னர் கட்டுப்பத்தை நுளம்புகளுக்கு இரத்ததானம் செய்த பயனின் பேறால் ஒரு வருடம் பிந்தினாலும் பின்னாளில் எங்களுடன் விடுதியில் இணைந்திருந்தவர்.

இவர்கள் இருவரும் தான் எங்களின் சிறந்த சமையல் வீரர்கள் எனும் விருதினை பெற்றவர்கள். சிலவேளைகளில் அம்மாக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக உப்பு, புளி அளவு கேட்டாலும், மாலை நான்கு மணி தாண்டியும் மதிய சாப்பாடு கிடைக்கும் எனும் நம்பிக்கையுண்டு. அதற்காக காத்திருப்போம். வெங்காயம் வெட்டுதல், யாருக்கும் தெரியாது வாழையிலை வெட்டி வந்து கழுவுதல் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த வேலைகளைத்தான் நான் பங்கிட்டு செய்வதுண்டு.

அன்று வெசாக் தினம்... ஏ-9 மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டு நொந்தவர் தவிர எல்லோரும் வீடுகளுக்குச் சென்று விட்டனர். எஞ்சியவர்களிலும் தட்டிவானில் 'வானேறி' யாழ். சென்றவர்கள், வெள்ளவத்தைக்கு படையெடுத்தவர்கள் தவிர ஏறக்குறைய எட்டுப்பேருக்கான மதிய உணவு சமைப்பதற்கு திட்டம் தீட்டியாகிவிட்டது.

எப்போதும் போலவே அவர்கள் இருவரும்தான் சமையல்காரர்கள். ஏனையோருக்கு மிகுதி வேலைகள் பங்கிடப்பட்டு அவர்களுக்குரிய நிலைகளை பலப்படுத்த ஆணை வழங்கப்பட்டாயிற்று.

எங்களுடைய மட்டத்தின் தலைமைப் பொறுப்பை நான்கு வருடமாக காவிய அந்தக் குட்டிப்பையத் தலைவனும் நானும் இணைந்து அன்றைய நாளின் கறியை வாங்கிவர வேண்டிய கட்டளை கிடைத்தது.

திட்டமோ எப்பாடுபட்டாவது கோழிக்கறி வாங்குதல் வேண்டும். அத்துடன் பொரிப்பதற்கு நெத்தோலியும் முட்டையும் வேண்டும்.

கொல்லப்பட்ட கோழிகள் வெசாக் தினத்தன்று குளிரூட்டிகளில் தான் உறங்கவேண்டுமாம்; விற்பனை செய்தலாகாது என
சட்டம் தடைபோட எல்லாக் கடைகளிலும் கையைவிரித்தார்கள்.
போ
ட்ட திட்டம் இடைநடுவில் புஸ்வாணமாகிவிடும் அபாயம்! அந்நிலை ஏற்பட்டால் ஏற்கெனவே நீரில் ஊறிக்கொண்டிருக்கும் அரிசியை எடுத்துக் கொட்டிவிட்டு, வெள்ளவத்தைக்கு பஸ் எடுக்கவேண்டும். அது ஒரு விபரீத விளைவை ஏற்படுத்தி விடும் என்றதாலும், எங்களுக்கென ஒப்படைக்கப்பட்ட வேலையை செய்யாதவிடத்து எப்போதும், எங்கேயும், எப்பக்கத்திலும் இருந்து வரும் அவமானக் கணைகளை தாங்கவும் முடியாது.

நிலைமையை எடுத்து விளக்கியதைத் தொடர்ந்து, இப்போது கோழிக்கறி எட்டுப்பேரினது சம்மதத்துடனும் மீன்கறியாக மாற்றம் எடுத்தது. மீனைத்தேடி நானும் நண்பனும் அலைந்த போது சொய்சாபுர தொடர்மாடி அருகில் ஒருத்தன் சிக்கினான். அவன் மீன் வியாபாரியல்ல. அப்படியாயின்....? அது சொல்லமுடியாது. அவனின் உதவியுடன் மீன் விற்கும் ஒருத்தனையும் கண்டு பிடித்தாச்சு.


உயர்தரம் பரீட்சை எடுத்து விட்டு வீட்டில் இருந்த நாட்களில் மீன் வாங்கிய அனுபவம் கை கொடுக்க, நல்லது கெட்டது தெரிந்து விலைக்கான பேரம் பேசலும் ஆரம்பமாயிற்று. விலையைக் குறைப்பதற்காக நாங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற உண்மை தொட்டு பல பொய்கள் வரை - அந்த வியாபாரி நம்பும் வண்ணம் சொன்னோம். அதன் பயனாக நானூறு ரூபாய் மீன் முன்னூறு ரூபாயாக குறைந்தது. மாணவர்கள் என்றதனால் அவனுக்கு பரிவு பிறந்திருக்க வேண்டும்... கூலியின்றி வெட்டித் தருவதாகவும் ஒப்புக் கொண்டான்.

இரண்டு கிலோ மீனை வாங்கியபடி வாய் நிறைய புன்னகையுடன் ஸ்துதி (நன்றி) என்றபடி அறுநூறு ரூபாயினை அவனிடம் நீட்டினேன். அப்போது தான் வில்லங்கம் வந்தது. "மல்லி... பன்சியாய் துன்சியாய் (தம்பி... ஐநூறு முன்னூறு)" என்று அப்பாவி போல் சொன்னான் அவன். முதன் முதலில் மீன் வியாபாரி ஒருத்தனின் சொல்லாடலில் தோற்றுப் போனோம்.

அப்போது தான் புரிந்தது... கொழும்பில் ஐநூறு கிராம் மீனின் விலையைத் தான் சொல்வார்களாம்.

இனி என்ன செய்ய...? அவன் பரிவுடன் வெட்டித் தந்த மீனை திருப்பிப் பொருத்திக் கொடுக்கவா முடியும்..? அருகில் கொமர்ஷல் வங்கி இருந்தது ஆபத்துக்கு உதவிய இறைவனின் செயல்... முகத்தில் கோபம் கொப்பளிக்குமாறு பொய்யாக காட்டிய வண்ணம் ஆயிரத்து இருநூறு ரூபாவை கொடுத்து விட்டு இருகிலோ மீனுடன் நடையைக் கட்டினோம்.

12 comments:

  1. //கொல்லப்பட்ட கோழிகள் வெசாக் தினத்தன்று குளிரூட்டிகளில் தான் உறங்கவேண்டுமாம்; விற்பனை செய்தலாகாது என சட்டம் தடைபோட எல்லாக் கடைகளிலும் கையைவிரித்தார்கள்.

    :) :)

    ReplyDelete
  2. பேசாமல் ஒரு கஞ்சியைக் காய்ச்சி குடிச்சிட்டு படுத்திருக்கலாம்.

    ReplyDelete
  3. //ஆனால், ஒரு சில நிகழ்வுகள் மறக்க வேண்டியவை எனினும், அவை கற்றுத் தந்த பாடங்கள் ஏராளம்...//

    I Like this.... Do u like this?
    What do u mean by this?
    :)

    ReplyDelete
  4. அட்டகாசம்... ?அருமையாக எழுதியுள்ளிீர்கள்... இப்படியே நடந்த பல விடயங்களை எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.. பின்னொருகாலத்தில மறுபடியும் வாசிக்க மிகவும் நல்லாயிருக்கும்...

    ReplyDelete
  5. //கட்டுப்பத்தை நுளம்புகளுக்கு இரத்ததானம் செய்த பயனின் பேறால் ஒரு வருடம் பிந்தினாலும் பின்னாளில் எங்களுடன் விடுதியில் இணைந்திருந்தவர்//
    இவனை எங்களுடன் மாட்டிவிட்டுவிட்டு நீங்கள் தப்பித்துவிட்டீர்கள்... :)

    ReplyDelete
  6. @புல்லட் பாண்டி
    //இப்படியே நடந்த பல விடயங்களை எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.. பின்னொருகாலத்தில மறுபடியும் வாசிக்க மிகவும் நல்லாயிருக்கும்...

    நன்றி புல்லட்பாண்டி. சோம்பலும், நேரமும் இடம் கொடுத்தால் நிச்சயம் பதிவிடுவேன்.

    ReplyDelete
  7. @பிறைதீசன் :: Praitheeshan
    // இவனை எங்களுடன் மாட்டிவிட்டுவிட்டு நீங்கள் தப்பித்துவிட்டீர்கள்... :)

    உன்னைச் சொல்லி குற்றமில்லை; என்னைச் சொல்லி குற்றமில்லை.
    எல்லாம் கட்டுப்பத்தை நுளம்புகள் செயல்.

    ReplyDelete
  8. தமிழ் மதுரம்March 12, 2009 at 4:58 AM

    நீங்கள் பிழைக்கத் தெரிந்த பையன் தான்..அப்ப வருங் காலத்திலை வாறவுக்கு சமையல் வேலையே இருக்காது போல...

    ஏன் கள்ளக் கோழியெண்டாலும் பிடிச்சிருக்கலாம் தானே??

    ReplyDelete
  9. //அப்போது தான் சிலருக்கு ஏ-9 என்றால் என்னவென்றும், யாழ்ப்பாணம் எங்கிருக்கின்றது என்றும் புரிய வைத்த பெருமை எங்களுக்குண்டு.//

    supera எழுதியுள்ளீர்கள்

    ReplyDelete
  10. @வந்தியத்தேவன்
    //என்ன மனிசனய்யா நீங்கள் போயாவுக்கு முதல் நாளே வைன் சொப்புகளிலும் இறைச்சிக் கடைகளிலும் நிற்க்கும் சனத்தைப் பார்த்தபின்னர் கொஞ்சமாவது அடுத்த நாள் இவை கிடைக்காது என நினைத்திருக்கவேண்டும்.
    வைன் சொப்புகளா? அப்படியென்றால்...??? :P

    //வெள்ளவத்தையில் நம்ம தமிழர்கள் பலர் வியாபாரிகளிடம் இப்படித்தான் பன்சியாய் துஞ்சியாய் என ஏமாறுகின்றார்கள்.
    ஆனால், துஞ்சியாயை பன்சியாய் ஆக மாற்றும் வல்லமையும் நம்ம தமிழர்கள் சிலருக்கு உண்டு.

    //கலக்கலாக எழுதியுள்ளீர்கள்.
    நன்றி வந்தியத்தேவன்.

    ReplyDelete
  11. @கமல்
    //அப்ப வருங் காலத்திலை வாறவுக்கு சமையல் வேலையே இருக்காது போல...
    அப்படி யாரும் நம்பினால், அது என் தப்பல்ல... :)

    //ஏன் கள்ளக் கோழியெண்டாலும் பிடிச்சிருக்கலாம் தானே??
    அவுஸ்திரேலியாவில் கோழிகள் காணாதவிடத்து காரணம் கடுக்கண் தான்.
    கள்ளக்கோழி பிடிக்க இங்க காலி வீதியெல்லாம் கோழிகள் தான் ஓடுகின்றனவோ...?

    ReplyDelete
  12. @tharsan
    நன்றி... :)

    @venkattan
    //ippadi nirayathamilar kasukala singala makkalidam emanthullanar. tamillarai eppadi ellam kollai adipathu endu avarkaluku nalla theriyum. naanum emaanthathu undu.
    மன்னிக்கவும் நண்பரே... உங்கள் கருத்துக்களுடன் என்னால் நூறுவீதம் உடன்பட முடியாது. அறிந்தோ அறியாமலோ நாங்கள் தான் சிலவற்றுக்கு உடந்தையாகின்றோம்.

    ReplyDelete

You might also like