Search This Blog

Thursday, March 12, 2009

திட்டித்தீர்த்த நட்பு

இணையத்தளத்தினூடாக என்னுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவனிடமிருந்து திடீரென தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது தான் பார்த்தேன் Gmail Chat இலிருந்து அவன் offline க்குப் போயிருந்தான். அவன் தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தேன். இடமொன்றைக் குறிப்பிட்டு என்னை அங்கே வருமாறு கட்டளையிட்டான். "என்ன விசயம்.... சொல்லு..." நான் வினவியதுக்கு அவன் பதில் தர விரும்பாமலே தொலைபேசி அழைப்பு அறுந்தது.

என்ன விடயமாக இருக்கலாம்...? என் மனதினில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். இதுவரை எந்த கவலையுமின்றி வழமையான சுக விசாரிப்புக்களுடன் ஆம்பித்து... இளமைப் பருவ குறும்புக் கதைகளைத் தானே அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். திடீரென இவனுக்கு என்ன நடந்தது? இணையத்தினூடு பகிர முடியாத - தொலைபேசியினூடு பேச முடியாத அந்த உணர்திறன் மிக்க செய்தி என்னவாக இருக்கும்? அந்தச் செய்தி இனிப்பாக இருக்கப்போவதில்லை என்பது அவன் பேசிய பேச்சின் தொனி சொல்லியது. அதில் கோபக்கனல் தெறித்ததை உணர முடிந்தது.

"டேய்... நீயும் ஒரு மனிசனா...? உனக்கு என்னடா நடந்தது...? இவ்வளவு படிப்பு படிச்சும் தலைக்குள் களிமண்ணா இருக்குது? நாட்டு நிலமையை உணர்ந்து கொள்ளடா... விருப்பமென்றால் நீ பொல்லைக் கொடுத்து அடியை வாங்கு. எதுக்கு என்னை வம்பில மாட்டிவிடுகிறாய்...?" - என் வாழ்நாளில் அப்பா கூட இப்படி பேசியிருக்க மாட்டார். என் வரவைக் காத்திருந்த நாய் போன்று சொற்களினால் கடித்துக் குதறினான். வெள்ளவத்தை வீதியால் போனோர் எல்லாரும் என்னை சூடு சொரணையற்ற மிருகம் போல் நோக்கினார்கள். அப்படி நான் செய்த குற்றமென்ன...? நிச்சயமாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆசை தீருமட்டும் அவன் கத்திக் குதறி ஓய்வு நிலையை அண்மித்த போது தான் நான் மெல்ல வாய் திறந்தேன். "இப்படிக் கத்துகிறாயே...அப்படி உனக்கு நான் என்னடா செய்தேன்...?" ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அதற்கு அவன் தந்த பதில் அதைக் கேட்காமல் பொத்திக் கொண்டு போயிருக்கலாம் போன்று இருந்தது. மழை தூறிக்கொண்டிருந்தது. அவன் சுடுதண்ணி குடித்தவன் போன்று திரும்ப தொடங்கினான்.

"என்ன செய்தனியோ? டேய்... Chat பண்ணும் போது தேவையில்லாத விசயங்கள் வேண்டாமென்று உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கிறேன்..? நாடு இருக்கிற நிலையிலே உதுகளை வைச்சுத்தான் எல்லாம் பிடிக்கிறாங்களாம். சில சொற்களை செலக்ட் பண்ணி, பிறகு அதுகளை filter பண்ணி IPஐ வைச்சு அமத்துறாங்களாம். அதுக்கு போய் இப்படி ஏன்டா செய்கிறாய்...? ஓடு... ஓடிப்போய் chat historyஐ அழியடா..."

சத்தியமாக நான் தப்பாக எதுவும் சொன்னதாக ஞாபகம் இல்லை; அப்படிப்பட்டவனுமல்ல. திரும்பவும் அவனிடம் வியாக்கியானம் கேட்டு வாங்கிக்கட்டவும் தயாரில்லை. அதற்கும்மேலாக, அவனும் அங்கு நிற்கவில்லை. அவனுடைய பெண் நண்பியை இணையத்தில் காத்திருக்க வைத்துவிட்டு வந்திருக்கவேண்டும். அவனுக்குள் இருந்த அத்தனை கோபங்களையும் சேர்த்து என்மீது வசைமாரி பொழிந்து விட்டு அவன் போய்விட்டான்.

அவன் என்னுடைய பள்ளிக்கால நண்பன். உயர்தரத்தில் இருவரும் வெவ்வேறு துறைகளில் பயின்றாலும், ஒன்றாகவே பள்ளி சென்று படித்து விளையாடி வாழ்ந்திருக்கின்றோம். இப்போதும் கூட மாறாத அதே நட்பு, தோழமை மீதான கரிசனை எவ்விதக் குறைச்சலுமின்றி தொடர்கின்றது.

திரும்பி வந்து அவனுடனான Chat history இனை வரி தவறாது ஒவ்வொரு வரிகளாக மேய்ந்து கொண்டிருக்கின்றேன். அவன் கோபப்படுமளவுக்கு அங்கு எதுவுமே தென்படவில்லை. அது இறுதியாக இப்படி முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

Friend: I'm going to get marry soon
Me: Good luck for your suicide operation. ha... ha...

அவன்: மிக விரைவில் நான் திருமணம் செய்ய உள்ளேன்.
நான்: உங்களுடைய தற்கொலைக்கு வாழ்த்துக்கள். ஹா... ஹா...

8 comments:

  1. தமிழ் மதுரம்March 13, 2009 at 12:42 AM

    இதுக்குத் தான் சொல்லுறது கொஞ்சமெண்டாலும் அடக்கி வாசிக்கச் சொல்லி...கொழும்பிலை தமிழர்கள் எதைக் கதைச்சாலும் ஒரு மாதிரியாகத் தான் எடுப்பார்களாம்.

    இப்படித் தான் எனக்குத் தெரிந்த ஒருவர் தமிழ்ச் சங்கத்தில் கவிதை பாடும் போது ‘’சில நேரம் நாளை கூட நல்ல சேதி வரும்’ என்று பாடி விட்டுச் சென்று விட்டாராம். அடுத்த நாள் விடி காலை ஏதோ ஒரு சம்பவம் நடைபெற்றதாம்.

    அதற்குப் பிறகு ஐயா காவல் நிலையத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டாராம்...ஒரு வேளை தற்கொலை கூட இப்படித் தப்பான அர்த்தத்தில் எடுபட்டாலும் என்று நண்பர் பயந்திருப்பார் போலும்.

    ReplyDelete
  2. குஞ்சியப்புMarch 13, 2009 at 2:41 AM

    நல்ல கற்பனை, நல்ல கற்பனை.... அவர்தான்...

    ReplyDelete
  3. முற்றிலும் உண்மை தான் தம்பி... அதல தான் நான் அடிக்கடி பாக்கிற தம்பி ஒருத்தரின் பதிவில இப்ப டுமீல் என்ற வார்த்தை தான் இருக்கு.

    ReplyDelete
  4. அவன்: மிக விரைவில் நான் திருமணம் செய்ய உள்ளேன்.
    நான்: உங்களுடைய தற்கொலைக்கு வாழ்த்துக்கள். ஹா... ஹா...

    பாவம் அந்த நண்பன்.வாழப்போற பிள்ளையை தற்கொலைக்கு வாழ்த்தினா பின்னை பேசாமல் என்ன செய்யிறது உங்களை ?

    சாந்தி

    ReplyDelete
  5. @கமல்
    //இதுக்குத் தான் சொல்லுறது கொஞ்சமெண்டாலும் அடக்கி வாசிக்கச் சொல்லி...
    அடங்கி வா(வ)சிக்கிறோம்.

    //கொழும்பிலை தமிழர்கள் எதைக் கதைச்சாலும் ஒரு மாதிரியாகத் தான் எடுப்பார்களாம்.
    இப்போதெல்லாம் காதலர்கள் கூட சங்கேத வார்த்தைப் பிரயோகங்களை தவிர்க்கிறார்களாம். :-)

    ReplyDelete
  6. @குஞ்சியப்பு
    // நல்ல கற்பனை, நல்ல கற்பனை.... அவர்தான்...

    கற்பனையா இது...
    அப்பு இது உண்மை.
    அந்த அவர் தான்... எவர் அது?

    ReplyDelete
  7. @பிளாட்டினம்
    //நான் அடிக்கடி பாக்கிற தம்பி ஒருத்தரின் பதிவில இப்ப டுமீல் என்ற வார்த்தை தான் இருக்கு.
    அண்ணா... அவரை 'டுமீல்' ஆக்கினதில் உங்களுக்கும் பங்குண்டல்லவா?

    அது சரி... உங்களையும் எகனமிக் கிறைசிஸ் தாக்கிட்டுச்சுதோ? ஏனென்றல், தங்கம் பிளாட்டினமாச்சுது அதுதான்.

    ReplyDelete
  8. @சாந்தி
    //வாழப்போற பிள்ளையை தற்கொலைக்கு வாழ்த்தினா பின்னை பேசாமல் என்ன செய்யிறது உங்களை?
    அப்படியா...? ஆனால், அந்த தற்கொலை நடக்காமல் வேறொரு சித்திரவதைக்கொலை நடக்கலாம் என்று அவன் பயந்திருக்க கூடும்.

    ReplyDelete

You might also like