Search This Blog

Sunday, May 31, 2009

மனதினில் நிறுத்தி...

ஒரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் பதிவிட சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்று சொல்வதை விட இன்று வெறுமையாகவேனும் ஏதாவது கிறுக்கித் தள்ள வேண்டும் போல் இருக்கின்றது. கடந்த நாட்கள் ஈழத் தமிழரின் வரலாற்றில் பல படிப்பினைகளைச் சொல்லித் தந்த நாட்கள். ரசிக்கும் படியாக - மகிழும் படியாக எந்தச் செய்திகளும் சம்பவங்களும் இருக்கவில்லை. மனிதங்கள் தொலைந்து போன உலகிலே, கேட்கக்கூடாத - காணக்கூடாத எல்லாவற்றையும் கேட்டுமாயிற்று; பார்த்துமாயிற்று.

நாளைய நாள்...??? என்பதற்குப் பின்னால் பெரியதொரு வினாக்குறி விழுந்து நிற்கின்றது. கடந்து போக முடியவில்லை... அதற்கு தடைகளாக இருப்பது முட்களாயின் அது எமக்கு பெரும் பொருட்டல்ல. ஆனால், எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடியிலும் மனித தலைகள் தட்டுப்படுகின்றன. சில மேல்வர்க்கங்கள் மொத்தக் கணக்கைப் பூட்டி பத்திரப்படுத்தி விட்டு இப்போது எண்ணத் தொடங்குகிறார்களாம். அவர்களின் எதிர்பார்ப்பு 20,000 தேறுமாம். எண்ணுங்கள்... எண்ணி முடியும் தறுவாயில் உங்களிடம் கணக்குக் கேட்க எவரும் இருக்கப் போறதில்லை. ஏனெனில், இந்நிலை தொடர்ந்தால் இப்போது மிஞ்சியுள்ள எல்லோரும் அந்தக் கணக்கினுள் அடங்கிவிடுவார்கள்.

கோயில் கட்டிக் கும்பிட தகுதியிருந்தும் மனதுக்குள் நிறுத்தி பலருக்கு வணக்கம் செலுத்துகின்றோம். ஈழத்தில் தமிழனாய் பிறக்கின்ற பாவம் கூட செய்யாமல், தமிழச்சியின் உதரம் சுமந்ததனால் எங்களுக்காக உயிர்துறந்த உறவுகள் தொடக்கம் அனைவருக்கும் காணிக்கையாக்க கண்ணீர்த்துளிகளை தவிர என்னிடம் வேறெதுவுமில்லை. நீங்கள் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும், இந்த உலகை ஆளும் எஜமான்களாக...

இப்போது கொழும்பின் ஆகாயப் பரப்பில் போர் விமானங்கள் அணிவகுப்பு செய்கின்றன. "கறள் பிடிக்காமல் இருக்க வேணுமே... அதுதான் எங்களுக்கு சாகசம் காட்டுறாங்கள்" எவருக்கும் கேட்கக் கூடாது என எழுகின்ற முணுமுணுப்பை கேட்க முடிகின்றது. சமாதான ஒப்பந்த காலங்களில் பறந்த விமானங்களுக்கும் இப்படித்தான் காரணம் கற்பித்து ஈற்றில் ஏமாந்து போனோம்.

திடீரென அயல்வீட்டுக் குழந்தை வீறிட்டுக் கத்தியது. வானத்தில் தாழப்பறந்து சாகசம் காட்டிய 'கிபிர்' விமானத்தின் சத்தத்தில் அதன் தூக்கம் குழம்பியிருக்க வேண்டும். அல்லது விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைக்கு அந்த மிகையொலி அச்சம் ஊட்டியிருக்க வேண்டும். (இந்த இரண்டும் தானா ஒரு பிள்ளை அழுவதற்கு காரணங்கள் என கேட்கும் ஜனநாயகத் தேசியவாதிகளுக்காக அந்தப்பிள்ளைக்கு தாயார் அடித்திருக்கலாம்; எறும்பு கடித்திருக்கலாம்; இன்ன பிற எல்லாக் காரணங்களும்...)

இப்படித்தான் சமாதான ஒப்பந்த காலத்தில் தாழப் பறந்த விமானத்தை என் சித்தியின் மகனுக்கு புதினம் காட்ட அவன் வீறிட்டு அழுததும் அது என்னுள் குற்ற உணர்ச்சிகளை விதைத்ததும் என் ஞாபகத்துக்கு வந்து போனது. இப்போது முகாமொன்றில் இருக்கின்ற அந்தக் குழந்தை இப்படிப் பயந்து அழுமென நான் நினைக்கவில்லை. வேண்டுமானால், என் அறிவுக்கு எட்டாத 'கிபிர்' பற்றிய புரிதல்களை அப்பிள்ளை போதிக்க கூடும்.

2 comments:

  1. //நீங்கள் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும், இந்த உலகை ஆளும் எஜமான்களாக...//
    அருமையான வரிகள்.. இயலாமையில் வேறு என்ன கேட்க முடியும்?

    ReplyDelete
  2. அற்புதமான பதிவு!

    ReplyDelete

You might also like