Search This Blog

Friday, May 8, 2009

அரங்கு அழுத ஆற்றுகை

இன்று காலை இணையத்தில் நுழைகின்றேன். எங்கும் எதிலும் "பிரேம் கோபால்". யார் இவர்...? ஏனிந்த ஆர்ப்பாட்டம்...? அப்படி என்ன செய்தார்...??? இவை எல்லாவற்றுக்கும் விடையாக கிடைத்தது பதினைந்து நிமிடங்கள் ஓடுகின்ற அந்த காணொலி. கண்களிலிருந்து நீர் சொரிய உள்ளம் அழுதது. ஈழத்தமிழன் ஒருவன் இந்திய தொலைக்காட்சி ஒன்றில் அரங்கேற்றிய அந்த ஆற்றுகை பல கதைகள் பேசின.

எங்கள் ஒவ்வொருத்தரின் வாழ்க்கையும் அனுபவித்த சுகங்கள், சுமந்து வந்த சுமைகள், தொலைத்து விட்டு வந்த சொந்தங்கள்... பிரேம் கோபாலின் ஏழு நிமிட அரங்காற்றுகை பேசியதெல்லாம் எங்களின் வாழ்க்கையைப்பற்றியது.





நாங்கள் யாசிக்கின்ற சமாதானத்தின் குறியாக இறுதியில் ஒரு புறாவைப் பறக்க விட எண்ணினோம். மிருகவதைச் சட்டத்தின் கீழ் மறுத்து விட்டார்கள். இங்கே மிருகவதைச் சட்டம்...!!! ஆனால், அங்கே உறவுகள்......

நீர் நிரம்பி வழிகின்ற கண்களுடன் அவன் சகோதரி கேட்கின்ற அந்த வரிகள்... "நாங்கள் இப்ப அகதிகள்... இந்தியாவே உன்னால தான் முடியும்.... எங்களுக்காக இதைச் செய்... கைவிட்டு விடாதே...."

* * *

அது இப்போதைக்கு மீண்டும் மீண்டு வராத காலம். ஆம்... இறுதியாக வந்து போன சமாதான ஒப்பந்த காலத்தின் 2003 ஆம் ஆண்டில் ஓர் நாள்...

யாரும் இலகுவில் நுழைந்து விடாத எங்கள் கல்லூரியில் மேடையேற்றுவதற்காக வன்னியிலிருந்து நாடகக்குழு ஒன்று வந்திருந்தது. கல்லூரி சமூகத்துடன், பருத்தித்துறை பிரிகேட் ராணுவத்தளபதியும் கூட இருக்க அவர்கள் முன்னிலையில் அரங்கு திறந்தது. இலங்கை சுதந்திரம் பெற்றதாக கூறப்படும் 1948 தொடக்கம் வட்டுக்கோட்டை தீர்மானம் ஊடாக அன்றைய நாள் வரை நாங்கள் யாசித்த சமாதானமும், அதைத் தட்டிப்பறித்த கரங்களும் அரங்கில் வெளிச்சமிடப்பட்டன.

அதில் ஒரு காட்சி.... வெள்ளைச் சீருடையுடன் ஒன்றாக பள்ளி சென்று வந்த அண்ணனும் தங்கையும் பிறிதொரு நாளில் சந்திக்கின்றனர். பட்டினி வயிற்றுடன் தங்கை... அண்ணனின் இடுப்பில் கறுத்தத்துணி கட்டப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக அவன் அணிந்திருந்த தொப்பி குறிப்பில் அவன் யாரென உணர்த்தியது. அண்ணன் பெயர் சொல்லி எவருமில்லாத தங்கை அழைக்கின்றாள். அவன் கடமையோ வேறொரு பெயர் சூட்டி அவனை அழைக்கின்றது. அப்போது அங்கு வழிந்தோடிய பாசத்தை அரங்கில் எழுந்த விசும்பல்களும், மனம் அழுது விட்ட கண்ணீர்களும் தான் பேசின.


இன்று வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

8 comments:

  1. ராஜ நடராஜன்May 8, 2009 at 11:33 AM

    நட்சத்திரப் பதிவர் சிறி இடுகையில் காணொளி கண்டேன்.கண்ணீர் கணங்கள் அவை.உலகின் பலருடைய கண்ணிலும் காண வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. பிரேம் கோபால் தனக்குரிய சந்தர்ப்பத்தை தாய் நாட்டிலுள்ள உறவுகளுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார். சகோதரியின் மன்றாட்டம் மனதைப் பிழிகிறது. இனிமேலாவ்து ஈழத்தமிழர் வாழ்வில் வசந்தம் வீசுமா?
    கல்லூரியில் மேடையேற்றப்பட்ட அந்த ஆற்றுகையில் இடம்பெற்ற பாசப்போராட்டத்துக்கான உணர்வு வெளிப்பாட்டை உங்களைப் போலவே நானும் கண்ணீருடன் உணர்ந்து கொண்டேன்.

    ReplyDelete
  3. உண்மையில் பிரேம் கோபாலும் குழுவினரும் வாழ்ந்து காட்டினார்கள்.

    ////அப்போது அங்கு வழிந்தோடிய பாசத்தை அரங்கில் எழுந்த விசும்பல்களும், மனம் அழுது விட்ட கண்ணீர்களும் தான் பேசின.////


    இது இன்னும் எத்தனை காலத்துக்கு தொடரும் என்றுதான் புரியவில்லை.

    ReplyDelete
  4. நானும் அழுதேன்

    ReplyDelete
  5. நானும் ஆரம்பத்தில் ஏதோவென்று பார்க்காது விட்டேன். பின்னர் பார்த்தபோதுதான் புரிந்தது உணர்வின் வலிகள்.

    மதுவதனன் மௌ.

    ReplyDelete
  6. பார்த்து வியந்துவிட்டேன். மேடையில் பலநூறு வார்த்தைகளைக் கோர்த்து சொல்கிற விஷயத்தை 7நிமிட நடனத்தில் இன்னும் உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லமுடியும் என்று நடத்திக்காட்டியுள்ளார். இதைப் பார்த்து கண்ணீர் வடித்தவர்கள் அதிகம். பிரேம் கோபாலுக்கு வணக்கங்கள்.

    ReplyDelete
  7. உண்மையிலேயே அழுதுவிட்டேன். நான் என்ன, அதைப்பார்த்து அழாமல் இருந்தவர்கள் மிகமிகக் குறைவாகத்தான் இருந்திருப்பார்கள். ஒரு இலங்கையனாக என்னால் இன்று அதைத்தான் செய்ய முடியும்.

    ReplyDelete
  8. உண்மையில் அழுதுவிட்டேன்........
    உலகிலுள்ள அனைத்து தமிழரதும் கண்களிலிருந்து வழியும் கண்ணீர் கல்நெஞ்சம் கொண்ட இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டும் புரியாமல் இருப்பதுதான் கவலை. தேர்தலில் மக்கள் புரியவைப்பார்கள்.

    ReplyDelete

You might also like