Search This Blog

Sunday, May 24, 2009

நடக்க வேண்டிய நெடிய பாதையில்....

ம்... எங்கும் சோகம் அப்பிக்கிடக்கின்றது. நடக்கும் என்று எண்ணியவையெல்லாம் இனி நடக்காது என்றதாகிவிட்டது!!! என் தேசக் கடிகாரம் மூன்று நாட்களில் முப்பது வருடங்களை இடஞ்சுழியாக ஓடிக் களைத்துப் போய் தாகத்துக்கு நீர் கேட்கின்றது. உண்மைகளும் பொய்களும் போலிகளும் ஒன்றுடனொன்று நித்தமும் முட்டி மோதி பலம் பரீட்சிக்கின்றன.

ஆனாலும், எல்லாம் முடிந்ததென்று சும்மா கிடந்து மரணத்தை வரவேற்க முடியாது. நாங்கள் நடக்க வேண்டிய நெடிய பாதையில் வரலாறு சொல்லித் தந்த பாடங்கள் நிச்சயம் வழிகாட்டும்.

எழுப்பிய வெற்றிக் கோஷங்களும், வீர வசனங்களும் சாதித்தவைகளை பட்டியலிட மனது மறுக்கின்றது. ஏனெனில், அவற்றின் பின்னே துரோகங்களும், பழிவாங்கல்களும், குழிபறிப்புக்களும் தங்களின் வேலைகளை கனகச்சிதமாக செய்திருக்கின்றன. அதன் விளைவுகளை உணரும் பொழுதுகளில் எல்லாமே போய்விட்டன...

ஆராய்ச்சிகள் தேவையில்லை என்று சொல்லவில்லை; நிறுத்தி வைப்போம். ஒப்பாரிகளையும் நிறுத்துங்கள். எங்களுக்காக சிலுவை சுமந்த சமுதாயம் அடைபட்டுக் கிடக்கின்றது. நாங்கள் இணையத்தில் பட்டு வேட்டிக் கனவில் திளைத்திருந்த வேளைகளில் அந்த உறவுகள் தான் தீயினில் வெந்தார்கள். நாளை வரும்... நாளை வரும் எனக் காத்திருந்தது தூர விலகிப்போனாலும் அதற்காக சுமக்க முடியாத சுமைகளை சுமந்து, எங்களுக்காக பட்டினி கிடந்து, அவயங்கள் இழந்து, உயிரைக்கொடுத்து வாழ்ந்திருந்த வன்னி மக்களின் வாழ்வுக்காக குரல் கொடுங்கள்.

அதுவே, காலத்தின் கட்டாயம்.

பி.கு.: இப்பதிவை எழுத ஆரம்பிக்கும் போது இல்லாத செய்தியொன்று இதை இப்பொழுது வெளியிடும் தறுவாயில் வெளிவருகின்றது. ஆனாலும், என் பதிவில் எந்த திருத்தங்களுமின்றி வெளியிடுகின்றேன்.

2 comments:

  1. உண்மை... எமக்காக சிலுவை சுமந்தவர்களை, இப்போதும் சுமந்து கொண்டிருப்பவர்களை நாம் கவனிக்க மறந்து விட்டோம்... அவர்களுக்காக நாம் இதுவரை என்ன செய்துவிட்டோம்? (ஒரு சில பதிவுகளை இணையத்தில் இடுவதைத் தவிர)

    ReplyDelete
  2. // நாளை வரும் எனக் காத்திருந்தது தூர விலகிப்போனாலும் அதற்காக சுமக்க முடியாத சுமைகளை சுமந்து, எங்களுக்காக பட்டினி கிடந்து, அவயங்கள் இழந்து, உயிரைக்கொடுத்து வாழ்ந்திருந்த வன்னி மக்களின் வாழ்வுக்காக குரல் கொடுங்கள்..

    கொடுங்கள் அல்ல கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரதும் கடமை... !

    ReplyDelete

You might also like